***
உன் எறும்புகள் இறந்துகொண்டிருக்கின்றன
தனிமையும் காமமும் புற்றென
வளர்ந்துகிடந்தது
புற்றிலுள்ள
காத்திருப்பின் சர்ப்பங்கள் உண்ண
உன்னையே புற்றுக்குள் திணித்தாய்
பாதி உள் நுழைந்தும்
பாதி பிதுங்கியும்
விபரீதமாய் இருந்தது அந்தக் காட்சி
மூச்சுத்திணறி இறந்தும் போனாய்
சாக்லேட்டை உண்பதுபோல
உன்னை உண்டன எறும்புகள்
பிறகு வெகுகாலம் நீ பிறக்கவில்லை
இந்தப் பிறவியில்தான்
நீ எறும்புகளாய் பிறந்திருக்கிறாய்
ஓடி ஓடி அலைந்து களைத்திருந்த
உன் எறும்புகள்
நிச்சயமின்மையின் மழையில்
இப்போதும் அனாதியாய் இறந்துகொண்டிருக்கின்றன
சின்னஞ்சிறிய சீனிப்பரல்களை
புற்றில் சேர்க்க முடியாத துயரத்துடன்
***
மோசமான நியாபகம் பனியென இறங்குகையில் இலையெனத் துடிக்கும் உடல்கள் நம்முடையவை. அவற்றிற்கான இனிய இந்த நொடியின் கதகதப்பை தீயிட்டுக் கொளுத்தி குளிர் காய்கிறது உலகம். இந்த நொடியின் விடுதலையை அடைந்துவிட போராடும் அவ்வுடல்களை தீர்வுகளின் எதிர்காலமும் மீண்டும் நிகழும் கடந்த காலமும் சிறை வைக்கின்றன. எது விடுதலை என்று தேடிக் கண்டடைந்து பிரிக்க முடியாத அதன் சிக்கலான முடிச்சுகளை அவிழ்க்க முயன்று தோற்றுக் கொண்டிருக்கையில் அந்த பணியோ கருணையின்றி வதைக்கிறது. அந்த விடுபடலை அடைவது அத்தனை சுலபம் இல்லையே. அனைத்திற்கும் தீர்வுண்டு என்று போதிக்கும் ஞானிகளிடம், எதற்கும் தீர்வு தேவையில்லை, என் விடுதலையின் முடிச்சுகளுக்கும், என்று எப்படிச் சொல்வது. எல்லாம் திரும்ப நிகழ்வது என்று கூறும் ஞானிகளிடம் எல்லாம் திரும்ப நிகழ்வதென்றால் அவற்றுக்கான தீர்வுகள் ஞானிகளிடம் ஏற்கனவே இருக்கிறதே பின்பு இந்த நொடிக்கு என்ன பொருள்? என்று எப்படிக் கூறுவது. நிகழ்காலம் மட்டுமல்ல கடந்த காலமும் காலாதீதமானதுதான். கூடவே இரக்கமற்றது.
***
இலை நடுங்கும் பனி
மோசமான ஞாபகம் மாதிரி
பனி இறங்குகிறது
இலைகளும் வீடற்ற உடல்களும்
குளிரால் துடித்தன
சகலத்திற்கும் தீர்வுண்டு என
அறிவித்தார்கள்
ஞானிகள்
அறிவுஜீவிகள்
கூடவே
எல்லாம் திரும்ப நிகழ்பவை
என்பதும் வாதத்தில் சேர்க்கப்பட்டது
முன்னர் நிகழ்ந்தவற்றிற்கே
ஒரு நியாயமும் இதுவரை இல்லை
என்றது இன்னொரு தரப்பு
புலப்படா சுழலில்
யாருக்கும் புரியாத மொழியில்
நாங்கள் விடுதலையின்
முடிச்சுகளை அவிழ்த்து அவிழ்த்து தோற்றோம்
இலைகளும் உடல்களும்
பனியில் நடுங்கியடி இருந்தன
***
0 comments:
Post a Comment