Showing posts with label போகன் சங்கர். Show all posts
Showing posts with label போகன் சங்கர். Show all posts

உலராத கண்ணீர் - கமலதேவி

கேட்பாரற்றுக்

கிடக்கும்

பழங் கோயிலின்

இடிபாடுகளில்

இள முலைகள் துள்ள

தனித்துத் திரிந்த

ஒரு சிறுபெண்ணை சந்தித்தேன்

தனக்குப் பயமில்லை

தான் தனித்தில்லை

என்றாள் அவள்

இங்கு பறவைகள் இருக்கின்றன

என்றாள்

நூற்றுக்கணக்கில்

பிறகு 

ஊழிவரும்வரை

 உறங்க முடியாத தெய்வங்கள்

ஆயிரக்கணக்கில்


காலத்தில் உறைந்த விழிகளை

மூட முடியாமல்

பார்த்துக்கொண்டே இருக்கின்றன

எப்போதும்

எல்லாவற்றையும்

என்று சிரித்தாள்.

அது வீசப்பட்டது போல

பெருகி வெளியங்கும் நிறைந்தது

அந்த சிரிப்பின்

முடிவில்

வைரம் போல் மின்னும்

இரண்டு கூர்க் கொடும்பற்களை

நான் ஒருகணம் பார்த்தேன்

அஞ்சி

ஓவென்று அலறினேன்

அவள்

வாய்மீது விரல் வைத்து

அஞ்சாதே

என்று புன்னகைத்த போழுது

யாரோ எய்தது போல

இளவெயில் நிறத்தில்

ஒரு பட்டாம்பூச்சி இறங்கி

அவள் உதடுகள் மேல் அமர்ந்தது.

நான் அது சிறகுகள் அசைய அசைய

மது உண்பதைப் பார்த்தேன்.

அப்போது

ஒரு புத்தனின் கண்கள்

அவளிடம் இருந்தது

அல்லது

முலை கொடுக்கும் தாயின் கண்கள்

ஆனால்

ஒரு ஓவியத்தின் கண்கள்

மாற்றபட்டாற் போல்

சட்டென்று

அவன் கண்கள் சாய்ந்து சோம்பிற்று

எனது வெறும் கைகளைக் கண்டு

எனக்கென

ஒரு பூ கூட பூக்கவில்லை அல்லவா

உன் தோட்டத்தில்

என்று வான் நோக்கி கூவினாள் அவள்

அது கேட்டு

கோபுரங்கள் நடுங்கின.

பின்

புனல் போல் இளகும்கண்களுடன்

புகை கலைவது போல

மெல்லிய மழைக்கம்பிகள்

ஊடே நுழைந்து நுழைந்து

அவள் என்னை விட்டு

விலகி கருவறைக்குள் போவதை

நான் பார்த்துக்கொண்டே இருந்தேன்

செய்வதற்று

ஒரே ஒரு பூவில்

இருந்தது

அவள் சாஸ்வதம்.


 - கவிஞர் போகன் சங்கர்

சொல் அர்த்தமாவதில் கற்பனை மற்றும் உணர்தலின் பங்கு முக்கியமானது. கற்பனையாலும் உணர்தலாலும் கவிதைக்கு ஒரு ‘கான்க்ரீட்’ தன்மை இல்லாமலாகிறது. கவிதை என்றில்லை இலக்கியமும் கலையும் எவ்வாறு உணரப்படுகிறது என்பது ஆதாரமானது. உடலுக்கு உயிர் போல..கவிதைக்கு உணர்தல் இருக்கிறது. இந்த உணர்தலால் தான் எல்லாக்கலைகளும் காலத்தால் புதியதாகிறது. 

கவிஞர் போகன் சங்கரின் இந்தக்கவிதை ஒரு சிறு தெய்வம் பற்றியது. இடிபாடுகளாகிப்போன கோவிலின் தெய்வத்தை கவிமனம் சந்திக்கும் தருணம் இந்தக்கவிதையில் உள்ளது. அந்த சந்திப்பு புறநிகழ்விலிருந்து சென்று தொட்ட அக நிகழ்வாக இருக்கலாம். ஒரு கனவாக இருக்கலாம். மனதிற்குள் உள்ள நினைவாகவும் இருக்கலாம். 

கவிமனதிலிருந்து இறங்கி சொல்லில் அமரும் அது தன்னை இத்தனை விதவிதமாக காட்டுகிறது.முதலில் சிறுபெண்,அங்கு திரியும் பறவைகளில் ஒரு பறவை, கோபம் கொண்ட யச்சி, புத்தன், அன்னை, மழை, ஒரு சிறு பூ என்று அந்த தெய்வம் இந்தக்கவிதையில் வரும் சூழலில் உள்ள ஒவ்வொன்றிலும் உள்ளது. இத்தனையாகவும் தன்னை காட்டும் அது மறுபடியும் சென்று மனதில் அமர்ந்து கொள்கிறது. மனதிலிருந்து எடுத்து பார்க்க தயங்கும் ஒன்று அது. ஆறாத கோபமும் கருணையும் என்று இரு முகங்கள் கொண்டது. சிறுபெண், யட்சி என்று நாம் உணரும் இரு நிலைகள். 

சிறுதெய்வங்கள் அனைத்துமே இந்த உணர்வுகளை அளிக்கக்கூடியவை.  கவிதையின் இறுதியில் பெய்யும் மழையும் அந்த சிறு பெண் கேட்கும் பூவும் என்ன? 

ஒரே ஒரு பூவில் உள்ளது அவள் சாஸ்வதம் என்று கவிதை முடிகிறது. அவளுக்கு தரப்படாத அந்த ஒரே ஒரு பூவால் தெய்வமானவள் அவள். அவள் இதழில் பட்டாம்பூச்சிக்கு தேனாய் இருப்பது அதுவே. 

மழைக்குள் காலகாலமாய் தன்னை மறைக்கும் அவள் புகுந்து கொள்ளும் இருள் கவிந்த கருவறையில் உள்ளது ஆயிரம் காலத்து காயாத கண்ணீரும் குருதியும். அவள் எண்ணப்பட முடியாதவள். 

***
Share:

தியானம்: ஐந்து கவிதைகள் - கடலூர் சீனு

மானுடம் கண்ட மகத்தான கவிதைகளில் ஒன்று, ரிக் வேதத்தின் ஸ்ருஷ்டி கீதம். நான்காயிரம் வருடம் கடந்தும் புதுமையும் தீவிரமும் குன்றாத அக்கவிதையை எழுதியது ஒரு ரிஷி, முனி, ஞானி. அங்கே துவங்கி பல உபநிஷத் கவிதைகள், கீதை தந்த கிருஷ்ணன், பாரதம் தந்த வியாசன், வால்மீகி, சங்கரர், தமிழ் நிலத்தின் சைவ வைணவ பக்தி இயக்க ஆளுமைகள் துவங்கி குணங்குடி மஸ்தான் சாகிபு, வள்ளலார் வரை மகத்தான கவிதைகள் தந்த பலர் அடிப்படையில் ஞானியரும் கூட. 

பாரதியில் துவங்கும் நவீன கவிதை மரபின் வரிசையில் மகத்தான கவிதை எழுதிய பலர், அத்தகு கவிதை எழுதும் அந்த உச்ச கணத்தில், அந்த ஒரே ஒரு கணம் படைப்பாளி என்ற நிலையிலிருந்தும் மேலெழுந்து ஞானிகள் கொண்ட அனுபூதி நிலையில்தான் இருந்திருக்கிறார்கள். பாரதி முதல் பிரமீள் தொடர்ந்து தேவதேவன் வரை அது அவ்விதம்தான்.

இந்த கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கும் கடலூர் சீனு ஆகிய நான் ஒரு ஞானி அல்ல. ஆனால் சில வருட யத்தனங்கள் வழியே வந்து சென்ற சிற்சில தியான அனுபவங்கள் அதன் சில நிலைகளை அறிந்தவன்.  அந்தப் பயணத்தில் நான் சந்திக்க நேர்ந்த சன்யாசிகளில் பெரும்பாலானோர் காவி கட்டி தாடி வளர்த்த ஞானியர் வார்த்தைகளை அந்த ஞானியர் போலவே பேசும் வெற்று ஆசாமிகள்.

அதே நிலைதான் நவீன  கவிதையிலும். இன்றுவரை தமிழில் எழுதப்படும்  நவீன கவிதைகளில்  கவிதைகளை நடிக்கும் போலி கவிதைகளே அதிகம். அதே பிரச்சனைதான் இத்தகு மெய்மை அனுபவம் தியான நிலைகளை சார்ந்து எழுதப்படும் கவிதைகளிலும் தொடர்கிறது. உதாரணத்துக்கு நகுலனின் கீழ்கண்ட கவிதை.


நான் ஒரு உடும்பு

நான் ஒரு கொக்கு

நான் ஒரு ஒன்றுமில்லை.


(நகுலன்)

யாருமில்லாத இடத்தில்

என்ன நடக்கிறது?

எல்லாமும்தான்.


எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம்.

போன்ற எந்த ஆழமும் அற்ற அவரது எளிய எண்ண தெறிப்புகள் எல்லாம் மிகுந்த பரவசத்துடன் கொண்டாடப்பட்ட சூழலில் அவரது இந்த கவிதையும் அதே பரவசத்துடன் அனைவராலும் தூக்கி சுமக்கப் பட்டது. நவீன இலக்கிய வாசிப்புக்குள் நுழைந்த புதிதில் நானும் இத்தகு கவிதைகளை   'ஐய்யோ மனுஷன் என்னமா சொல்லிப்புட்டாரு' என்று வியந்திருக்கிறேன்.

இந்த கவிதையில் முதல் வாசிப்பில் கிடைப்பது  'நான் 'ஒரு ஊர்வனவாக  இருந்து ஊர்ந்து, பறப்பனவாக எழுந்து பறந்து, ஒன்றுமில்லாமல் காணாமல் போவது. அடுத்த வாசிப்பில் உள்ள உடும்பு உறுதியை குறிக்கிறது. உறுதியான தவம். கொக்கு மிக மிக பொறுமையான காத்திருப்பை குறிக்கிறது. ஞானத்துக்கான காத்திருப்பு. ஞானம் தொடும் கணம் அந்த நான் ஒன்றுமில்லாமல் போகிறது. 

இந்த கவிதையில் உள்ள முதல் கோணல் இது எந்த நிலையிலும் அந்த கவிஞன் கொண்ட அனுபவத்தின் வெளிப்பாடு அல்ல என்பது. இரண்டாவது கோணல் இதில் உள்ள ஒளிஞ்சான் கண்டான் விளையாட்டு. அது முடிந்ததும் பிறகு என்ற கேள்விக்கு இந்த கவிதை வசம் எந்த பதிலும் இருக்காது. அது முன்னரே செத்து விட்டிருக்கும். மூன்றாவது இது கவிதை வடிவில் பூடகம் போல சொல்லப்பட்ட ஒரு மொழிக் குட்டிக்கரணம் மட்டுமே. இதை இன்று கூகிள் கூட எழுதும். 

தியானம் சார்ந்த, மெய்மை சார்ந்த தமிழின் நல்ல கவிதைகள் என்பது இத்தகு போலிகளை கடந்தே அடையவேண்டியது உள்ளது.


மெய்மை நிலை குறித்த கவிதைகளில் இரண்டு போக்குகள் உண்டு. ஒன்று மரபார்ந்த பின்புலத்தில் தொல் படிமங்களை கையாள்வதன் வழியே பயணிப்பது. உதாரணம் பிரமிளின் தெற்கு வாசல் போன்ற கவிதைகள். இரண்டாவது வகை இத்தகு விஷயங்களை உதறி நேரடியாக அன்றாடத்திலிருந்து துவங்கி பேரியற்கை எனும் மனம் கடந்த அப்பால் நிலையை சுட்ட முயலும் கவிதைகள். உதாரணம் தேவ தேவன் கவிதைகள். இரண்டாவதன் உதாரணமாக ஒரு கவிதை.

புத்தகத்தை மூடு

விளக்கை அணை


உன் அறிதுயிலில் உணரப்படட்டும்


உன் மேஜையோரத்து

கொசுபத்தி போலவோ

ஊதுபத்தி போலவோ


இந்தப் பிரபஞ்சமெங்கும்

நிறைந்துகொண்டிருக்கும்


உறக்கமென்பதிறியா

விழிப்பொன்றின்

மாண்புகள்.


(தேவதேவன்)

சிறு வயதில் எனக்கு பிடித்த விளையாட்டுகளில் ஒன்று, ஒரு ஊதுபத்தியை ஏற்றிவைத்து அதன் மேல் ஒரு சிறிய கண்ணாடி காலி மீன் தொட்டியை கவிழ்த்து வைத்து, காற்று அசையாத அதற்குள் இழை போலும் மெல்ல மெல்ல ஊதுபத்தி புகை வியாபித்து நிறையும் காட்சியை அசையாது அமர்ந்து ரசிப்பது. எனக்குள்ளும் அந்த ஊதுபத்தி புகை போலும் ஏதோ ஒரு பரவசம் நிறையும்.

இந்த பிரபஞ்சம் எங்கும் நிறைந்து கொண்டிருக்கும் உறக்கம் என்பதை அறியா அந்த மாண்பிற்கு நம்  மேஜையோர ஊதுபத்தி புகையில் இருந்தே பாதை சமைக்கிறது இக்கவிதை. (புத்தகத்தை மூடு,) அறிவால் அல்ல, (விளக்கை அணை) புறக் கண்களால் அல்ல, அரிதுயில் கொள்ளும் உள்விழி அதைக்கொண்டே காண முடிந்த மாண்பு அது. 

வாழும் கணங்கள்

மூளை நரம்பொன்று அறுந்து

ஒளிவெள்ளம் உள்ளே புகுந்தது


மனவெளியும் நிலவொளியில் குளிர

செவிப்பறை சுயமாய் அதிர

மண்ணில் ஒருபோதும் கேட்டிராத ஓசை உவகைகள் எழும்பின 

பாஷை உருகி ஓடிற்று


ஒரு

சொல் மிச்சமில்லை


என் பிரக்ஞை திரவமாகி

பிரபஞ்சத்தின் சருமமாய்

நெடுகிலும் படர்ந்தது


ஒரு கணம்தான்


மறு கணம்

லாரியின் இரைச்சல் 

எதிரே நாற்காலி.


(சுந்தர ராமசாமி.)



கண நேரம் அடையும் இந்த ஆத்மீக பரவசத்தை ஓஷோ சட்டோரி என குறிப்பிடுகிறார். அந்த ஒரே ஒரு கணத்துக்கு பிறகு அந்த மனிதன் வாழ்வில் பிறகு ஒருபோதும் இந்த அனுபவம் நிகழாமலேயே கூட போகலாம். இது காரண காரிய தொடர்பின் ஒரு பகுதி அல்ல என்பதே பிரதான காரணம்.

//என் பிரக்ஞை திரவமாகி

பிரபஞ்சத்தின் சருமமாய்

நெடுகிலும் படர்ந்தது//

கவிதையை அதன் உயர் தளத்துக்கு எடுத்து செல்லும் வரிகள் இவை.

இவையெல்லாம் கவிக்கு எல்லாம் சரியாக இருந்ததால் நிகழ்ந்த ஒன்றல்ல. மூளையில் ஒரு மெல்லிய நரம்பு அறுந்ததால் அதாவது ஒரு சிறிய பிழை ஏற்பட்டதால் நிகழ்ந்த ஒன்று. இதுதான் இத்தகு நிலைகள் மீது சுந்தர ராமசாமியின் பார்வை. 

இந்த காலம் இடம் இருப்பு கடந்த அனுபவ மண்டல பரவசம் எல்லாமே ஒரே ஒரு கணம்தான். மறுகணம் லாரி ஓசை வழியே நிகழ் காலம் வந்து விட்டது, எதிரே இடம் வந்து விட்டது, நாற்காலி வழியே இருப்பு வந்து விட்டது. 

இதற்கு முன்பான அந்த கணம். மூளையில் ஏதோ ஒரு சிறிய நரம்பு அறுந்த அந்த ஒரே ஒரு கணம், அதுதான் வாழும் கணம்.


தியானத்தில்

ஒரு கவலை மட்டும் பிரகாசமாக ஒளிர்ந்தது.


நாகம்

இறக்கி வைத்த விஷக்கல்.


நான் என் தியானத்தால்

அதை

உண்டு உண்டு

செரிக்க முயன்றேன்.


அது இன்னும் கடினமாகி

கடினமாகி

நெற்றி நடுவில்

நீலமாய்ப் பூரித்தது.


நான்

என் சிறிய கவலைகள் எல்லாம் தாய்ப் பாம்பை நோக்கிச் செல்லும் பாம்புக்குட்டிகள் போல்

அதை நோக்கி நெளிந்து செல்வதைப் பார்த்தேன்.


அம்மா

நான் என்ன செய்வேன்.


புவிமேல்

நானொரு மாபெரும் கவலைத் துளி.

(போகன்)



தியான அனுபவங்களில், உள்ளே நூறு பௌர்ணமிகளின் ஒளி வெள்ளம் நிறைவது, செவிக்குள் இனிய ஒலிகள் கேட்பது, நெற்றிக்குள் நீலம் ஒளிர்வது இப்படி பல இனிய தடயங்கள் கிடைக்கும். இவை பற்றி பதஞ்சலி யோக சூத்திரங்கள் நிறைய பேசுகிறது. கூடவே தியான அனுபவம் என்பது அகம் உள்முகமாக இருளுக்கும் ஒளிக்குமாக ஊசலாடும், ஆனந்தத்துக்கும் துயரத்துக்குமாக அல்லாடும் நிலையையும் கொண்டது. 

இதில் தவறான முறையில் சாதகனின் குண்டலினி எழ நேர்ந்தால் அவனை பீதி கிளர்த்தும் சித்திரங்கள் வேறு துரத்தும். தகுந்த குரு இல்லையேல் இத்தகு விஷயங்களில் இருந்து மீளாது, ஒளியில் இருந்து தவறி இருளில் விழவே வாய்ப்பு மிகுதி. 

தியான சாதகன் மட்டுமே அடைய நேரும் மற்றும் ஒரு துயர் உண்டு. இந்த உயிர் இந்த பிரக்ஞை இந்த உடலால் எல்லைகட்டபட்டமை கொண்டே தவிர்க்க இயலாது. அதன் உள்ளுரயாக அமையும் துயர் அது. அதில் விழுந்தவனுக்கும் மீட்சி அரிதே. இத்தகு விஷயங்கள் மீதான கவிதை என மேற்கண்ட கவிதையை வாசிக்க முடியும்.

வண்ணத்துப் பூச்சியும் கடலும்

சமுத்திரக் கரையின்

பூந்தோட்ட மலர்களிலே 

தேன்குடிக்க அலைந்தது ஒரு

வண்ணத்துப் பூச்சி


வேளை சரிய

சிறகின் திசைமீறி

காற்றும் புரண்டோட

கரையோர மலர்களை நீத்து

கடல் நோக்கிப் பறந்து


நாளிரவு பாராமல்

ஓயாது மலர்கின்ற

எல்லையற்ற பூ ஒன்றில்

ஓய்ந்து அமர்ந்தது


முதல் கணம்

உவர்த்த  சமுத்திரம்

தேனாய் இனிக்கிறது.

(பிரமிள்)

உலகின் உயிர்ராசிகள் ஒவ்வொன்றும் அதற்கென வகுத்துவைத்த சூழல் வெளியில்தான் வாழ்கிறது. மனிதனை தவிர வேறு எவற்றாலும் இதை மீற முடியாது. அந்த வகையில் பட்டாம்பூச்சி கடலுக்கான உயிர்ராசி அல்ல. அது அங்கே போனதற்கு அதன் இயங்கு தளத்துக்கு மீறிய ஆற்றலே காரணம். சைவம் உள்ளிட்ட பல மரபுகளில் இதை இவ்விதம் செய்தால் ஞானம் எய்தி விட முடியும் எனும் நிலை என்பது கிடையாது. செய்ய வேண்டியதை செய்து விட்டு ' அவன் ' அருள் வேண்டி காத்திருக்க வேண்டியதுதான். நமது முயற்சி அல்ல, அவனது அருளே நாம் எய்தும் ஞானத்துக்கு மூலம். 

மேற்கண்ட கவிதையை, லெளகீகம் விட்டு தன் செயலாக அன்றி புற ஆற்றலால் ஆத்மீகத்துக்குள் சென்று விழும் ஒரு தன்னுணர்வு அடையும் அனுபவம் குறித்த கவிதையாகவும் வாசிக்கலாம்.

( எல்லா நல்ல கவிதைகளும் வாசிப்பவர் வாழ்வுப் பின்புலம், கலாச்சார வேர், ரசனைக் கோணம் சார்ந்து, பல்வேறு அர்த்த சாத்தியங்களை, கற்பனை சாத்தியங்களை அளிக்க வல்லவயே. எனவே என்னுடைய வாசிப்பு என்பது அந்த வரிசையில் ஒரு கோணம் மட்டுமே அன்றி இக் கவிதைகள் மீதான இறுதி வியாக்யானம் அல்ல)


***

நகுலன் தமிழ் விக்கி பக்கம்

தேவதேவன் தமிழ் விக்கி பக்கம்

சுந்தர ராமசாமி தமிழ் விக்கி பக்கம்

போகன் சங்கர் தமிழ் விக்கி பக்கம்

பிரமிள் தமிழ் விக்கி பக்கம்

***

Share:

வெறுங்கால் பாதை - பாலாஜி ராஜூ

கவிஞர் போகன் சங்கரின் 'தடித்த கண்ணாடி போட்ட பூனை' தொகுப்பை சில வருடங்களுக்கு முன் வாசித்திருந்தேன். அந்த தொகுப்பிலிருந்து சில கவிதைகளை மனம் அவ்வப்போது மீட்டெடுத்து அசைபோடும். சில வருட இடைவெளிக்குப் பிறகு அவருடைய 'வெறுங்கால் பாதை' (தமிழினி வெளியீடு) தொகுப்பை வாசித்தேன். ஐந்தாவது பக்கத்தில் தொடங்குகிற கவிதைகள், நூற்றி நாலாவது பக்கம் வரை நம்மை பல்வேறு உணர்வுநிலைகளுக்கு ஆட்படுத்துகின்றன.

ஒரு கவிதைத் தொகுப்பு வாசித்தவுடன் கவர்ந்துவிடும் கவிதைகளையும், நம் ரசனை வெளிக்கு, வாசிப்பின் எல்லைகளுக்கு அப்பால் நின்றிருக்கும் கவிதைகளையும் உள்ளடக்கிய கலவையாகவே திரண்டிருக்கும். 'வெறுங்கால் பாதை' தொகுப்பு, பெரும் எண்ணிக்கையில் மிகச் சிறந்த வாசிப்பனுபவங்களை அளிக்கும் கவிதைகளையும், பல முறை வாசிக்கத் தூண்டும் கவிதைகளையும் தன்னுள் கொண்டுள்ளது.

கவிஞர் போகன் சங்கருடைய ஐந்தாவது கவிதைத் தொகுப்பு இது. 'மொழியின் மீது இன்னும் கட்டுப்பாடு உடையவனாக மாறியிருக்கிறேன் எனத் தெரிகிறது. மொழியை இன்னும் சுருக்கிப் பயன்படுத்துகிறவனாக மாறியிருக்கிறேன். சில நேரங்களில் அது ஒரு சூத்திரம் அளவுக்குச் சுருங்கி இருப்பதும் உண்மைதான்', என முன்னுரையில் அவர் குறிப்பிடும் வரிகளை ஒட்டி இந்தக் கட்டுரையை விரித்துக்கொள்ள முனைகிறேன்.

குறுங்கவிதைகள் -

இந்த தொகுப்பு நூற்றி எழுபத்தி நான்கு கவிதைகளால் ஆனது. ஐந்தாவது பக்கத்திலிருந்து நூற்றி நான்கு பக்கங்களுக்குள் சாத்தியமாகியுள்ள இந்த எண்ணிக்கை, பெருமளவு 'குறுங்கவிதைகள்' என்று வரையறுக்கத்தக்க கவிதைகளால் அமைந்துள்ளது. ஒரு புரிதலுக்காக இங்கு குறுங்கவிதைகள் என்று நான் குறிப்பிடுவதை மூன்றிலிருந்து ஐந்து வரிகளுக்குள் எழுதப்பட்டவை என்று வகைப்படுத்துகிறேன்.

குறுங்கவிதைகள் என்றவுடன் கல்யாண்ஜியின் "தேக்கும் பூக்கும்" (ஒற்றை வரி) கவிதையும், பிரமிளின் 'பல்லி' (1963) – (கவிதைஇறக்கத் துடிக்கும் வாலா? – உயிரோடு மீண்ட உடலா?) கவிதையும் நினைவில் தோன்றுகிறது. கவிதை வரிகளின் எண்ணிக்கையை முன்னிட்டே இவற்றை குறுங்கவிதைகள் என்று வகைப்படுத்துகிறேன். அர்த்தசாத்தியங்கள், படிமங்களின் வீச்சு, வாசகனின் கற்பனையைத் தீண்டும் பண்புகள் என அளவில் நீண்ட கவிதைகள் ஏற்படுத்தும் அதே தாக்கத்தை இவையும் அளிக்கத் தவறுவதில்லை.

குறுங்கவிதைகளை எதிர்கொள்வதில் ஒரு வாசகனுக்கு சில சாதக அம்சங்கள் உள்ளன. அளவில் குறுங்கவிதைகள் எனும் இந்த வரையறைக்கு வெளியே அமையும் எந்தக் கவிதையிலும், ஒரு வாசகன் தன்னுடைய வாசிப்பை குறிப்பிட்ட சில வரிகளில் குவித்தும், சிலவற்றைத் தவிர்த்தும் பயணிக்கும் அவசியம் உள்ளது. கவிதை வாசிப்பின் இன்றியமையாத அம்சமான இத்தகைய தேர்வுகளின், தவிர்ப்புகளின் தேவைகளைக் கோராமல், நேரடியாக ஒரு கவிஞன் அடையும் உள எழுச்சியை, வாழ்வின் சில உச்ச தருணங்களை மற்றும் படிமங்களை குறைந்த சொற்களால் சுட்டும் வகையில் குறுங்கவிதைகள் அமைகின்றன.

ஒரு குறுங்கவிதை வாசகனின் மனதில் நீடித்து இயங்குவதற்கு தேர்ந்த சொற்களால் நினைவில் மீட்டெடுத்துக்கொள்ளும் வகையில் அமைந்த அதன் வடிவம், உரையாடல்களில் இயல்பாக வரிகளைத் தொட்டுச் செல்ல ஏதுவான எளிமை, சக வாசகனிடம் கவிதையின் சொற்களை இழக்காமல் முழுமையாகப் பகிர ஏதுவான தன்மை என சில கூறுகளைக் கொண்டுள்ளது. தமிழின் பிரபலமான கவிதைகளே கூட குறிப்பிட்ட சில வரிகளின் மூலமே நினைவுகூரப்படுவதை உணரலாம். (தேவதேவன் 'அசையும் போது தோணி -  அசையாத போதே தீவு', தேவதச்சன் 'காற்றில் - அலைக்கழியும் வண்ணத்துப் பூச்சிகள், காலில் - காட்டைத் தூக்கிக்கொண்டு அலைகின்றன').

குறுங்கவிதைகள் மொழியில் முகிழ்ந்து திளைத்த ஒரு மனதின் கூர்மையை நாடுபவை. சரியாக வெளிப்படாத குறுங்கவிதைகள் வெறும் கூற்றுகளாக, எண்ணத் தெறிப்புகளாக நின்றுவிட வாய்ப்புகளுண்டு. இந்த தொகுப்பின் சில கவிதைகள் தனி வாசிப்பில் அப்படித் தோற்றமளிக்கலாம். ஆனால் தொகுப்பாக வாசிக்கும்போது, இதே கவிதைகள் ஒரு கவிஞனின் கவியுலகில் நுழைந்து குறுக்கும் நெடுக்குமாக அலையும் வாசகனுக்கு, பிற கவிதைகளின் நீட்சியாக அமைந்து, முழு வாசிப்பு சாத்தியங்களை அளிக்கின்றன.

குறுங்கவிதைகளில் சொல் மயக்கமும் பொருள் மயக்கமும் அளிக்கும் கவிதைகளுக்கும் இடமுண்டு. (மதார், உயரம் குறையக் குறையஉயரம் கூடுவதைக்காண்கிறதுகிணறு). மாறாக இந்த தொகுப்பில் போகன் சங்கர் குறுங்கவிதைகளை கூர்மையான சொற்களால், நேரடியான முறையிலேயே அமைத்திருக்கிறார். பல கவிதைகளில் வினைச்சொற்களை நீக்கிவிட்டால் முழுமையான ஹைக்கூக்களாக மாறுகின்றன. தொகுப்பின் கவிதைகள், சதையில் உணரப்படும் கத்தியின் கீறலாய்த் தொடங்கி, பின் குருதி வழியும்போது புலன்களால் முழுமையாக உணரப்படும் நிலைக்கு நிகராக, முதல் வாசிப்பில் நம்மைக் கீறி, மெல்ல நம் பிரக்ஞையில் பெருகி வளர்கிறது.

தொகுப்பிலிருந்து சில குறுங்கவிதைகள்

தொகுப்பிற்கு மிகச் சிறந்த ஒரு தொடக்கத்தை அளிக்கிறது ஹைக்கூத் தன்மைகொண்ட இந்தக் கவிதை. விடுமுறை நாளில் இயக்கம் குறைந்த ஒரு பாலமும், அதில் பிரதிபலிக்கும் வெயில் மற்றும் நகரும் ஒரு ஆட்டோ என முதலில் காட்சிகளாக விரியும் கவிதை, பிரபஞ்சத்தின் தனிமையை உணரும் ஒரு மனதின் வெளிப்பாடாக பரிணமித்துவிடுகிறது.

'விடுமுறை நாளின் வெயில்

ஒரு மஞ்சள் ஆட்டோவாக

பாலத்தின் மீது செல்கிறது'.

…..

'பிரியத்தின் சர்ப்பம்' எனும் வரியில் இணைந்துகொள்ளும் இந்த சொற்களில் உள்ள முரண்பாடு அழிந்து கவிதைக்கு ஒரு முழு விச்சை அளிக்கிறது. உறங்கும் மழைத்துளிகளும், பிரியத்தின் சர்ப்பமும் அழகிய படிமங்களாக மாறுகின்றன.

'உறங்கும் மழைத்துளிகளை

எழுப்பாமல்

புல்வெளியைக் கடந்துசெல்கிறது

பிரியத்தின் சர்ப்பம்'.

…..

சில குறிப்பிட்ட படிமங்கள் எத்தனை முறை எழுதப்பட்டாலும் அதன் அர்த்த வரையறைகள் நெகிழ்ந்துகொண்டே இருக்கும் தன்மை கொண்டவை. நாம் வழக்கமாகக் கடந்து செல்லும் ஒரு காட்சி இங்கு வேறொன்றாக மாற்றம்கொண்டு குறியீட்டு அர்த்தம் பெற்றுவிடுகிறது. சிக்கனமான சொற்களால் அமையப்பெற்ற இந்தக் கவிதை, குழந்தை கைகளை விரித்து விவரிக்கும் யானையின் அளவைப்போல வாசகக் கற்பனையை வேண்டுகிறது.

'மொட்டைக் கோபுரம்

நிழலில்

தன்னைப் பூர்த்தி செய்துகொள்கிறது'.

…..

இந்தக் கவிதையின் முதல் வரியைத் தாண்டி என்னால் வாசிக்க இயலவில்லை. தொடக்கத்திலேயே கவிதையின் உச்சம் நிகழ்ந்து முடிவடைந்துவிடுகிறது. திங்கட்கிழமை எனும் படிமம் நகரத்தின் மீது ஏற்றப்படுகையில் மனதில் ஏற்படும் சலனங்கள் மிக ஆழமானவை.

'நகரம் என்பது மாபெரும் திங்கட்கிழமை.

வேலையற்றவனின் காலை பத்து மணி.

அறையில் இருப்பவன் உயிரை

எட்டிப்பார்த்து உறுதிப்படுத்திக்கொள்கிறான்

விடுதிக் காப்பாளன்'.

…..

'பின் தொடரும் நிழலின் குரல்' நாவலில் அருணாசலம் பிறழ்வின் பிடியில், தனிமை இரவில் கேட்கும் பனை ஓசை ஏற்படுத்திய அதே தாக்கத்தை மீண்டும் உணரவைத்த கவிதை இது.

அலைபாயும், கொந்தளிக்கும் மனதுக்கு இந்த மூங்கில்களின் ஓசை என்பது வெறும் ஓசையல்ல

'எதிர்பாராத மூங்கில்களிலிருந்து

எழும் இசை

அசவுகர்யமாக இருக்கிறது'.

…..

தனிமையை இந்த வரிகளை விடக் கூர்மையாகவும், பரிசுத்தமாகவும் சொல்லிவிட இயலுமா? இந்த ஒரு கவிதையை அடைய நூற்றுக்கணக்கான கவிதைகளை ஒரு வாசகன் கடக்கலாம் - ஒரு வாசகன் நூற்றுக்கணக்கான கவிதைகளை வாசிப்பதே இது போன்ற ஒர் கவிதையை அடையத்தான் என்றும் சொல்லத் துணிவேன். இந்தக் கவிதை அளிக்கும் உணர்வுகளை விளக்க முயல்வது, எரிந்துகொண்டிருக்கும் கானகத் தீயை உள்ளங்கைத் தண்ணீரால் அணைக்க இயலும் செயலைப் போன்றது.

கவிதை அல்லது கவிதைக்கான கரு என்பது கவிஞனில் வெளிப்படும் ஒரு தற்செயல் நிகழ்வு. தற்செயல்கள் பிரபஞ்ச விதிகளால் ஆனது, கவிஞன் அதன் ஊடகம் மட்டும்தான். அது கவிஞனில் நுழைந்து வெளிப்பட்டு முழுமை அடைகிறது. இருண்மையே உச்சமாக அமைந்த ஒரு நிலை, இதன் முழுமையில் உள்ள துயரம், அதே சமயம் வாசகனாக மனதில் எழும் இரகசியமான ஒரு பரவச உணர்வு (ஆம், பரவச உணர்வுதான்) என மூச்சு முட்டவைக்கிறது இந்தக் கவிதை.

'திருடப்பட்ட குழந்தை

நகரத்தில்

தன் மடியில்

தானே தலை புதைத்து

தூங்குகிறது'.

…..

தொகுப்பில் கவிதைகளின் போக்கு

குறுங்கவிதைகள் எனும் வரையறையை அழித்துவிட்டு 'வெறுங்கால் பாதை' தொகுப்பின் கவிதைகளை ஒட்டுமொத்தமாக அணுகினால் தனிமை, மரணம், கடவுள், காமம், வீடு, உடலிலின் ரணம் (என் உடல் காற்றாய் தீயாய் புகையாய் – என்னைத் தாண்டிச் சென்றது), கிறுத்துவம், இருண்மை, வாழ்வின் அபத்தம், காதல், ஆன்மீகம் (யாருமற்ற தெருவில் – ஒரு யானையைக் கூட்டிச் செல்லும் – நபராய் – ஞானி இருக்கிறான்), எதிர்பாராத இடங்களில் வெளிப்படும் அன்பு, படைப்பு மனதின் ஊசலாட்டங்கள், தாய்மைக்கான ஏக்கம், மெல்லிய பகடி (கையில்லைகாலில்லைஅட்டகோணல்அவலட்சணம் - கடவுளின் தலத்தில் - அவர்தான் நட்சத்திரப் பிச்சைக்கார்) என பல தளங்களாக விரிந்துகிடப்பதைக் காணலாம்.

போகன் சங்கர் இத்தகைய உணர்வுகளை, மனதின் அலைவுகளை கவிதைகளில் புறச்சூழலின் வர்ணனைகளாக, கூர்மையான உருவகங்களாக மாற்றி நம்மிடம் கடத்துகிறார் (ரயில்இரவைதீப்பொறிகள் கொண்டு தீட்டுகிறது), (தூரப்பேருந்திலிருந்து – வயல்வெளிகள் மீது மிதக்கும் – கோபுரங்கள்), (யாரோ கைதட்டிக் கலைத்தாற்போல் – சிதறிச்செல்லும் கிளிகள்), (பாலத்தை மெதுவாகக் கடக்கும் – கடைசிப் – பேருந்து).

மேலும் சில கவிதைகள்

கவிதையின் கடைசி வரியை வாசித்து முடித்ததும், முதல் நான்கு வரிகள் அழுத்தம்பெறுகின்றன. சலனங்களால் ஆட்கொள்ளப்பட்டுள்ள மனதில் தொடர்பற்ற உவமைகளாய் இருப்பின் வலி, இல்லாமல் போவதன் நிதர்சனம், இழந்துவிட்ட ஏதோ ஒன்றின் ஏக்கம் என உணர்வுகளின் கூட்டாய் இந்தக் கவிதை.

தொகுப்பின் 'நீச்சல் தெரியாதவன்நீண்ட நடனத்துக்குப் பிறகுநதியின் ஆழத்தில் அடையும் அமைதி' என்ற கவிதையை இதன் குறுகிய பிரதியாக தொடர்புபடுத்தி வாசிக்கலாம்.

'பாத்திரத்திலிருந்து

திரும்பி வர மறந்த

நடிகனை

ரசாயனம் மூலம் உறங்கப்பண்ணிவிட்டு

அவர் வீடு திரும்பினார்.

சாலையில் ஒரு தடவை

ஒரு கதிர் அரிவாள் போலத்

துள்ளிக் கடக்கும் மானுக்காக

காரை நிறுத்தினார்.

அதன் கண்கள் பச்சையாக ஒளிர்ந்து

மீண்டன.

சிறிய மழை ஒன்று

காற்றையும் வானையும் கழுவியிருந்தது.

காட்டு முல்லையின் நறுமணம்

ஒரு ரகசிய காதல் போல் எழுந்துவந்தது.

முற்றிலும் பூக்களால் ஆன ஒரு மரம் என்று

நினைத்துக்கொண்டார்.

தொடர்பற்ற ஒரு உவமை

கூடத்தில் கணப்புப் பாத்திரத்துக்குள் பழைய உணவு

கொஞ்சம் மது

உயர்ரத்தஅழுத்த மாத்திரைகள்

மனைவி உடலின் பழகிய வளைவுகள்

ஜன்னல் வழியே தெரிந்த வானம்

மிகத் தெளிவாக இருந்தது.

கடுவன் பூனையின் கண் கொண்ட நட்சத்திரங்கள்.

உறக்க மாத்திரை ஆட்கொள்ளும் முன்பு

ஒரே ஒரு துளிக் கண்ணீர்'.

…..

தொகுப்பின் பல கவிதைகளில் கவித்துவமும், சிறுகதைத்தன்மையும் பிணைந்திருப்பதை உணரலாம். கிறுத்துவத்தின் மீதான அவருடைய ஈடுபாட்டைக் காட்டும் ஒரு கவிதையாகவும் இதை வாசிக்கலாம்.

"முந்தின நாள் இரவில் கூட

அவன் வழக்கம்போல்

பேரம் பேசித்தான் மீன் வாங்கிப் போனான்"

என்றாள் 'எல்லீ….ய்ய்ய்…'

என்று எல்லோரும் அழைக்கும் எலிசபெத்.

"அவனது சிறுமகளுக்கு மீன் உலாத்தாத

குழம்பு இறங்காது"

மிகக் குறைந்த நேரத்தில்தான் எதுவோ நிகழ்ந்துவிட்டது.

 

அவளுக்குப் பேரம் பேசுகிறவர்களைப் பிடிக்கும்

அவ்வப்போது அவள் அதனால் கோபமுற்றுவிட்டால் கூட.

அது வாழ்வின் பாசை.

 

பேரம் பேசாதவர் பையிலிருப்பது

சாபப் பணம் என்பது அவள் எண்ணம்

அது நோயிலும் மருந்திலும் சென்று வீழும்.

 

எலிசபெத் கச்சோடம் முடிந்து வீடு திரும்புகையில்

வழியில்

அவன் தூக்கிட்டுச் செத்த மரத்தைப் பார்த்தாள்

 

சற்று நேரம் அங்கேயே நின்றாள்.

 

"வாழ்வோடு இன்னும் கொஞ்சம்

நீ பேரம் பேசியிருக்கலாம் சோசப்பே".

…..

போகன் சங்கர் கவிதைகளில் பூனைகள் பரவலாகத் தோன்றுகின்றன. எல்லாவற்றுக்குமான பிரதிநிதியாய், சாட்சியாய், கவிஞனின் வேற்று உருவமாய் அவை கவிதைகளில் உலவுகின்றன (நான் போகன்நான் போகனின் பூனைநான் போகனின் பூனையின் போகன்).

ஒரு இழப்பை செயலின் மூலம் கடக்கும் மேதையும், ஆறுதல் தவிர ஏதுமற்ற வெற்றுப்பையைச் சுமந்து கற்பனை உணவைக் கைகாட்டிவிட்டு சிரிக்க முயலும் கவிஞனும் என வாழ்வின் அபத்தத்தைச் சித்தரிக்கிறது இந்தக் கவிதை.

'ஒரு மேதையைக் காண

அவர் வீட்டுக்குச் செல்கிறீர்கள்.

சமீபத்தில் அவரது மனைவி இறந்துவிட்டார்.

உள்ளறையில் கலைந்த சிகையுடன்

மேதை எதையோ எழுதிக்கொண்டிருக்கிறார்.

முற்றத்தில் அவரது மகள்

கோழிகளுடன் விளையாடிக்கொண்டிருக்கிறாள்.

சமையலறையில் பூனை எதையோ

தேடிக்கொண்டிருக்கிறது.

மேதையின் மகள் உள்ளே வந்து

"அப்பா காலைல இருந்து சாப்பிடாம

எழுதிட்டிருக்கிறார்" என்கிறாள்.

அவளும் சாப்பிடவில்லை எனத் தெரிகிறது.

"உண்மையில் இங்கே சாப்பிட எதுவுமில்லை" என்கிறது பூனை.

உங்கள் பையிலும் மேதைக்கு

ஒரு ஆறுதல் விசாரிப்புச் செய்தியைத் தவிர எதுவுமில்லை.

உங்களுக்கு என்ன செய்வதெனப் புரியவில்லை.

சன்னலில் தூரத்தில் பனி புகையும் ஒரு மலை தெரிகிறது.

நீங்கள் மேதையின் மகளிடம் அது ஒரு

பெரிய ஐஸ்கிரீம் என்கிறீர்கள்

"நாம் அதைத் தின்னலாம்."

 

பூனை "சரிதான் இவனும் கிறுக்கு" என்கிறது.

சொல்லிவிட்டு எரிச்சலுடன்

புகைக்கூண்டு வழியாகத் தாவி மறைகிறது.

 

உங்களுக்கு சிரிப்பு வருகிறது.

மேதையின் மகளுக்கும்தான்.

இருவரும் உரக்கச் சிரிக்கத் துவங்குகிறீர்கள்

 

அப்போது ஒன்றைக் கண்டுபிடிக்கிறீர்கள்.

சிரிக்கையில் நமக்குப் பசி தெரிவதேயில்லை.

***


வெறுங்கால் பாதை, தமிழினி வெளியீடு தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்ட கவிதைகள்.


***
Share:
Powered by Blogger.

Poetic Angst - ஜெயமோகன்

உதிர்ந்த ஒரு பழுப்பு இலை மிதந்து தவிழ்ந்து என்றேனும் உங்கள் மடி வந்தமரக் கூடும். எடுத்து தடவி முத்தமிட்டு மறுபடி காற்றில் விடுங்கள். ஞானத்து...

தேடு

முந்தைய இதழ்கள்

Labels

அபி (13) அரவிந்தர் (1) அருண் கோல்ஹட்கர் (1) அறிமுகம் (1) அஜிதன் (1) ஆ. அமிர்தராஜ் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆதித்ய ஸ்ரீநிவாஸ் (1) ஆதிமந்திய (1) ஆத்மாநாம் (3) ஆவுடையக்காள் (1) ஆனந்த் குமார் (9) இசை (11) இந்தி (7) இரா. கவியரசு (1) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (3) உன்னத சங்கீத (1) எதிர்வின (2) எம். கோபாலகிருஷ்ணன் (2) எம்.எஸ். கல்யாணசுந்தரம் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஸ்ரா பவுண்ட் (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (5) க.நா. சுப்பிரமணியம் (3) க.நா. சுப்ரமணியம் (18) கட்டுரை (11) கண்டராதித்தன் (1) கண்டனம் (1) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கருத்தரங்கு (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (2) கல்பற்றா நாராயணன் (5) கல்பனா ஜெயகாந்த் (2) கவிதை (276) கவிதையின் மத (1) கவிதையின் மதம் (1) காரைக்கால் அம்மைய (1) காரைக்கால் அம்மையார் (2) கார்த்திக் பாலசுப்ரமணியன் (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) கிரிராஜ் கிராது (3) குமரகுருபரன் விருது (8) குன்வர் நாராயண் (1) கே. சச்சிதானந்தன் (1) கேரி ஸ்னிடர் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (4) சங்க இலக்கியம் (4) சங்கர் கணேஷ் (1) சசி இனியன் (1) சஞ்சய் சௌத்ரி (1) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்தப்பாடல்கள் (1) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (5) சம்யுக்தா மாயா (6) சாரு நிவேதிதா (1) சார்லஸ் சிமிக் (1) சீர்மை பதிப்பகம் (1) சுகந்தி சுப்ரமணிய (1) சுகுமாரன் (6) சுந்தர ராமசாமி (2) சுனில் கிருஷ்ணன் (1) செல்வசங்கரன் (2) சோ. விஜயகுமார் (4) சோலைக்கிளி (1) ஞானக்கூத்தன் (1) டி.எஸ். எலியட் (1) டி.ஏ. பாரி (1) தாகூர் (1) தாஸ் வைத்ய் (1) தி.சோ. வேணுகோபாலன் (1) திரிகூட ராசப்ப கவிராயர் (1) தூயன் (1) தேவதச்சன் (8) தேவதேவன் (29) தேவேந்திர பூபதி (1) ந. பிச்சமூர்த்தி (1) ந. ஜயபாஸ்கரன் (1) நகுலன் (3) நித்ய சைதன்ய யதி (1) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (3) பாபு பிரித்விராஜ் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (4) பிரான்சிஸ் (1) புதுமைப்பித்தன் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (2) பெருந்தேவி (1) பைபிள் (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (3) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (10) மரபு கவிதை (8) மராட்டி (3) மலையாள (1) மலையாளம் (1) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மு. சுயம்புலிங்கம் (1) முகாம் (2) மொழிபெயர்ப்பு (17) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யாக்கூப் (1) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ரமேஷ் பிரேதன் (1) ராமாயணம் (1) ராஜமார்த்தாண்டன் (1) ரியோகான் (1) ரூமி (1) ரெயினர் மரியா ரீல்க (1) லட்சுமி மணிவண்ணன் (3) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (3) வாசகர் (1) வாசிப்பு (1) வாலஸ் ஸ்டீபன் (1) வி. சங்கர் (2) விக்ரமாதித்யன் (14) விவாத (1) வீரான்குட்டி (3) வெய்யில் (1) வே. நி. சூர்யா (5) வே.நி. சூர்யா (7) வேணு தயாநிதி (1) வேணு வேட்ராய (1) வேணு வேட்ராயன் (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (3) ஜெயமோகன் தேர்வு (1) ஜென் (1) ஶ்ரீநேசன் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷங்கர்ராமசுப்ரமணியன் (1) ஷாஅ (1) ஷாந்தா ஷேலகே (2) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Most Popular

Labels

அபி (13) அரவிந்தர் (1) அருண் கோல்ஹட்கர் (1) அறிமுகம் (1) அஜிதன் (1) ஆ. அமிர்தராஜ் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆதித்ய ஸ்ரீநிவாஸ் (1) ஆதிமந்திய (1) ஆத்மாநாம் (3) ஆவுடையக்காள் (1) ஆனந்த் குமார் (9) இசை (11) இந்தி (7) இரா. கவியரசு (1) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (3) உன்னத சங்கீத (1) எதிர்வின (2) எம். கோபாலகிருஷ்ணன் (2) எம்.எஸ். கல்யாணசுந்தரம் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஸ்ரா பவுண்ட் (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (5) க.நா. சுப்பிரமணியம் (3) க.நா. சுப்ரமணியம் (18) கட்டுரை (11) கண்டராதித்தன் (1) கண்டனம் (1) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கருத்தரங்கு (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (2) கல்பற்றா நாராயணன் (5) கல்பனா ஜெயகாந்த் (2) கவிதை (276) கவிதையின் மத (1) கவிதையின் மதம் (1) காரைக்கால் அம்மைய (1) காரைக்கால் அம்மையார் (2) கார்த்திக் பாலசுப்ரமணியன் (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) கிரிராஜ் கிராது (3) குமரகுருபரன் விருது (8) குன்வர் நாராயண் (1) கே. சச்சிதானந்தன் (1) கேரி ஸ்னிடர் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (4) சங்க இலக்கியம் (4) சங்கர் கணேஷ் (1) சசி இனியன் (1) சஞ்சய் சௌத்ரி (1) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்தப்பாடல்கள் (1) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (5) சம்யுக்தா மாயா (6) சாரு நிவேதிதா (1) சார்லஸ் சிமிக் (1) சீர்மை பதிப்பகம் (1) சுகந்தி சுப்ரமணிய (1) சுகுமாரன் (6) சுந்தர ராமசாமி (2) சுனில் கிருஷ்ணன் (1) செல்வசங்கரன் (2) சோ. விஜயகுமார் (4) சோலைக்கிளி (1) ஞானக்கூத்தன் (1) டி.எஸ். எலியட் (1) டி.ஏ. பாரி (1) தாகூர் (1) தாஸ் வைத்ய் (1) தி.சோ. வேணுகோபாலன் (1) திரிகூட ராசப்ப கவிராயர் (1) தூயன் (1) தேவதச்சன் (8) தேவதேவன் (29) தேவேந்திர பூபதி (1) ந. பிச்சமூர்த்தி (1) ந. ஜயபாஸ்கரன் (1) நகுலன் (3) நித்ய சைதன்ய யதி (1) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (3) பாபு பிரித்விராஜ் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (4) பிரான்சிஸ் (1) புதுமைப்பித்தன் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (2) பெருந்தேவி (1) பைபிள் (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (3) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (10) மரபு கவிதை (8) மராட்டி (3) மலையாள (1) மலையாளம் (1) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மு. சுயம்புலிங்கம் (1) முகாம் (2) மொழிபெயர்ப்பு (17) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யாக்கூப் (1) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ரமேஷ் பிரேதன் (1) ராமாயணம் (1) ராஜமார்த்தாண்டன் (1) ரியோகான் (1) ரூமி (1) ரெயினர் மரியா ரீல்க (1) லட்சுமி மணிவண்ணன் (3) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (3) வாசகர் (1) வாசிப்பு (1) வாலஸ் ஸ்டீபன் (1) வி. சங்கர் (2) விக்ரமாதித்யன் (14) விவாத (1) வீரான்குட்டி (3) வெய்யில் (1) வே. நி. சூர்யா (5) வே.நி. சூர்யா (7) வேணு தயாநிதி (1) வேணு வேட்ராய (1) வேணு வேட்ராயன் (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (3) ஜெயமோகன் தேர்வு (1) ஜென் (1) ஶ்ரீநேசன் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷங்கர்ராமசுப்ரமணியன் (1) ஷாஅ (1) ஷாந்தா ஷேலகே (2) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Blog Archive