உதிர்ந்த
ஒரு பழுப்பு இலை
மிதந்து தவிழ்ந்து
என்றேனும்
உங்கள் மடி வந்தமரக்
கூடும்.
எடுத்து தடவி
முத்தமிட்டு
மறுபடி காற்றில்
விடுங்கள்.
ஞானத்துடனான நம்
தரிசனங்கள்
அனேகமாக
அப்படித்தான்
நேர்ந்து கலைகின்றன
என்றோ எங்கோ காற்றில்
- குமரகுருபரன்
***
சம்யுக்தா மாயாவின் கவிதை ஒன்று கிட்டத்தட்ட அவர் கைரேகை அளவிற்கு அறியப்பட்டத்தாக இன்று இருக்கிறது.
இட்ட அடி நோக
எடுத்த அடி கொப்பளிக்க
நடக்கின்ற நிலம் யாவும்
பொசுங்கிக் கருக
அறுதியான பொருள் தேடித்
தட்டழியும் தடமெங்கும்
ஒரு கணமேனும் எங்கும்
எனை நிற்க விடாத
தீ நின்ற பாதம் எனக்கு
இந்த கவிதை தலைப்பின் பேரிலேயே அவரது இரண்டாவது கவிதைத் தொகுப்பு வெளிவந்துள்ளது. ‘தீ நின்ற பாதம்’, இந்த வரி, இவ்வார்த்தை முக்கியமான ஒன்று எனச் சொல்லலாம். நான் அதில் உள்ளது ‘Poetic Angst’ என்று சொல்வேன். Anxiety என்பதன் தத்துவார்த்தமான நிலை Angst. இது ஒரு மேலை கலைச்சொல்.
Poetic Angst – கவித்துவமான அகப்பதற்றம் என இதை மொழிபெயர்க்கலாம். நிலை அழிவு நிலை, பதற்ற நிலை, பதறும் நிலை. இதற்கு சரியான உவமை, சுடரின் நிரந்தரமான அசைவு. மனிதர்கள் அனைவரும் ஒரு நிரந்தரமான பதற்ற நிலையில் இருக்கிறார்கள் என தத்துவம் குறிப்பிடுகிறது.
எந்நேரமும் இருந்துக் கொண்டிருக்கும் பதற்றம் இல்லாத மனிதப் பிரக்ஞை இருக்க முடியாது. சுடர் அசையாமல் இருக்க முடியாதது போல. இப்பதற்றத்தின் வெவ்வேறு வகைகள் மரபிலும், பொதுவான தத்துவ சிந்தனையிலும் சொல்லப்பட்டிருக்கின்றன.
முதன்மைப் பதற்றம் பிரபஞ்சம் சார்ந்தது (Cosmic Angst). பிரபஞ்சத்தின் முன் தனிமனிதன் தன்னை உணரும் போது ஏற்படும் பதற்றம். இந்நிலை இல்லாத மனிதர்களே இருக்கமாட்டார்கள். எச்சிந்தனையும் இல்லாதவருக்குக் கூட இப்பதற்றம் இருக்கும். சிந்திப்பவருக்கு மேலும் கூரியதாக, தொட்டுணரக் கூடிய அளவிற்கு உருவம் கொண்டதாக இருக்கும்.
பிரபஞ்சப் பதற்றம் என நாம் மூன்றை சொல்கிறோம். ஒன்று, நிலையின்மை என்கின்ற பதற்றம். அது எதிர்பாராமை என்கிற இன்னொரு முகத்தை அடைந்துக் கொண்டேயிருக்கிறது. அடுத்தகணம் எது என தெரியாததால் ஏற்படும் பதற்றம். வள்ளுவர் இதை வெவ்வேறு வார்த்தைகளால் குறிப்பிடுகிறார்.
இரண்டு, அறிய முடியாமை ஏற்படுத்தும் பதற்றம். நாம் எவ்வளவு தூரம் முயல்கிறோமோ அத்தனை தூரம் ‘அறியமுடியாது’ என்ற விடை நமக்கு வந்து சேர்கிறது. பிரபஞ்சம் பற்றி நமக்கு கிடைக்கும் எல்லா விடையும் அறியமுடிவதில்லை என்பதே.
மூன்றாவதாக, வெறுமை – அர்த்தமின்மை கொள்ளும் பதற்றம். இந்த மூன்றாக நாம் பிரபஞ்சம் சார்ந்த பதற்றத்தை (Cosmic Angst) உணர்ந்துக் கொண்டிருக்கிறோம். அதாவது, நிலையின்மை, அறியமுடியாமை, வெறுமை.
சிந்திக்கக் கூடியவர் நாம் உணரும் நிலையின்மைக்கான காரணம் இது தான் என உணர்ந்திருப்பர்.
ஆதிசங்கரரின் புகழ்பெற்ற உவமை, ‘தனியறைக்குள் இருக்கும் சுடரை அசைப்பது பிரபஞ்சம்’. அந்த சுடர் ஏன் அசைகிறது என்ற வினாவிற்கு பதில் பிரபஞ்சத்தால், பெருவெளியால் நிகழ்கிறது. சரி, நடைமுறையில் எப்படி அசைகிறது. காற்றால் சுடர் அசைகிறது. காற்று தட்பவெப்பநிலை மாற்றத்தால் உண்டாகிறது. தட்பவெப்பநிலை மாற்றத்தை சூரியன் ஏற்படுத்துகிறது. சூரியன் பிரபஞ்சத்தில் உள்ளது. பிரபஞ்சத்தில் ஒரு நிகழ்வு ஏற்பட ஆயிரம் காரணம் இருக்கலாம். ஆனால், அந்த அறைக்குள் சுடர் அசைவதற்கு பிரபஞ்சம் தான் காரணம். இந்த பிரபஞ்சம் சார்ந்த பதற்றம் எல்லா மனித குலத்திலும் இருக்கிறது.
இரண்டாவதாக, மனித உறவுகளைப் பற்றிய பதற்றம் (Angst of Relation). நம் வாழ்க்கையில் ஒவ்வொரு கணமும் இருக்கும் பதற்றம் இது. நம் வாழ்க்கையில் திரும்பத் திரும்ப நிகழ்ந்துக் கொண்டிருக்கிறது. இலக்கியத்தின் பெரும்பகுதி இந்த பதற்றம் சார்ந்து எழுதப்பட்டுள்ளது.
ஒரு மனிதன் வெவ்வேறு வடிவங்களைத் தொடர்ந்து எடுக்க வேண்டியிருக்கிறது. ஒரு பெண் தாய், மகள், மனைவி, ஊழ்யி, அரசின் குடிமகள் என அவ்வளவு முகங்களை எடுக்க வேண்டியிருக்கிறது. இத்தனை முகங்களாக தொடர்ந்து உருமாறக் கூடிய ஆளுமையினுள் ஒரு பொதுச் சரடும் தேவைப்படுகிறது. இத்தனை முகங்களையும் தக்கவைத்துக் கொண்டு ஒரு ஆளுமையாக இருக்கும் பதற்றம்.
இது உறவுகளில் இருக்கக் கூடிய முக்கியமான சிக்கல். ஒரே உறவில் நாம் எத்தனை முகங்களைக் காட்ட வேண்டியிருக்கிறது. நம் குழந்தையிடமே பாதுகாப்பவனின் முகம், அரவணைக்கூடிய முகம் இரண்டையும் காட்ட வேண்டியிருக்கிறது.
ஆற்றூர் ரவிவர்மாவின் கவிதை ஒன்றில்,
பல்வேறு மொழி பேசும்,
பல்வேறு உணவுண்ணும்
ஒரு நாக்கு போல நான்
என்று அவருடைய ஆளுமையை, நான் குறிப்பிடும் உறவு சார்ந்த பதற்றத்தைப் பற்றிச் சொல்கிறார். ஒரே நாக்கு ஆனால் எல்லா ருசிகளையும் அது தான் அடைய வேண்டும்.
இன்னொரு வகையில் உறவுகளின் பதற்றம் உண்டு. கொடுக்கப்படுவதற்கும், பெற்றுக் கொள்வதற்கும் இருக்கும் நிரந்தரமான பதற்றம் அது. நாம் ஒரு முகத்தை ஒருவருக்கு அளிக்கிறோம். அதே முகத்தை தான் அவர் பெறுகிறாரா? நாம் காட்டும் முகம் தான் அங்கே போய் சேர்கிறதா? நம் சொல் அங்கே செல்கிறதா? நம் உணர்வுகள்? அதே போல் நமக்குள் வந்தடைவது என்ன?
ஒருவரின் உணர்ச்சியை மற்றவர் பெறுவதற்கு இடையில் பெரிய பேரம் இருக்கிறாது. எத்தனை சந்ரர்ப்பங்கள் சார்ந்து அது புரிந்துக் கொள்ளப்படுகிறது. ஒருவர் உணர்ச்சி பிறிதொருவருக்கு கடத்தப்படவே முடியாது எனச் சொல்பவர்கள் உண்டு. இருத்தலியல் அறிஞர்கள் ஒருபோதும் அது முழுவதாக கடத்தமுடியாது என்பார்கள். பெற்றுக்கொள்ளும் நிலையில் இருப்பவன் வேறொன்றை தான் அடைகிறான். நமக்கு அவன் அடைவதற்கு சம்பந்தம் கிடையாது.
பல கவிஞர்களின் உலகம் இந்த உறவு பதற்றம் சார்ந்தது. என்னுடைய பிரியத்திற்குரிய கவிஞர் மனுஷ்யபுத்திரனின் மொத்த உலகமும் இந்த பதற்றம் சார்ந்தது தான். எடுத்துக் கொள்வதற்கும், கொடுப்பதற்கும் இடையே இருக்கும் நிரந்தரமான நழுவுதல். ஒருபோதும் இதை சொல்ல முடியாது. சிறு ஊசி முனையில் இருக்கும் வெளி அளவுக்கே சொல்வதற்கு இடம் உள்ளது. ஆனால் அதற்குள் உலகளாவிய வெளியை கவிஞன் கற்பனை செய்கிறான்.
பதற்றத்தின் மூன்றாவது வகை, அறம் சார்ந்த பதற்றம் (Ethical Angst). தமிழ் கவிஞர்கள் மிகக் குறைவாகவே இதை கையாண்டுள்ளனர். இந்த பிரபஞ்சம் செயல்படும் நெறி என்ன? உண்மையில் பிர்பஞ்சத்திற்கு இருக்கும் ஒழுங்கு என்ன? இல்லை இவையெல்லாம் வெறும் தற்செயல்கள் தானா? தர்மம் என ஒன்று உண்டா?
நம் உறவுகள் உட்பட அனைத்தும் ஒரு ஒழுங்கில் உள்ளதா? அப்படியெல்லாம் இல்லை எனத் தோன்றும். இல்லை என நம்பும் உலகில் வாழவும் முடியாது. ஆகவே ஒரு ஒழுங்கை உருவாக்கத் தோன்றும். உருவாக்குவதன் மேல் நம்பிக்கை வராது. ஆகவே, அவை இல்லை என மறுக்கவும் செய்வோம். ‘நான் அறம், தர்மம் என ஒன்றுப் இல்லையென உன்னிடம் சொல்வேன். நீ என்னிடம் அவை எல்லாம் உண்டு எனச் சொல்ல வேண்டும். அதை நான் எதிர் பார்ப்பேன்’ இது தான் நம் அறச்சங்கடமே.
மேற்சொன்ன மூன்று வகை பதற்றங்களும் சிந்திக்கும் ஒருவனை ஆட்கொள்கின்றன என நமக்கு தொடர்ந்து சொல்லப்படுகிறது. இவை மூன்றையும் மலையாள விமர்சகர் குட்டிக் கிருஷ்ணமாரர் தன் நீண்ட விமர்சன கட்டுரையில் வகுத்துரைக்கிறார்.
நான்காவது, மேலை சிந்தனை சொல்லும் இருத்தலியல் பதற்றம் (Existential Angst). இது தான் தமிழில் கவிஞர்களால் அதிகம் கையாளப்படுகிறது. முதல் மூன்று வகையும் இயல்பில் அனைவரிடமும் காணப்படுகிறது. கவிஞன் ஒருவன் எழுத வரும் போது தனக்கு முன்னர் கவிஞர்கள் எழுதியிருக்கும் இருத்தலியல் பதற்றத்தை பார்க்கிறான். அதை அறியாமலேயே பிரதி எடுக்கிறான்.
சுவரில் இருக்கும் கறை முதலை எனத் தெரிந்தால் அதன் பின் நம்மால் முதலையை மட்டுமே பார்க்க முடியும். கவிஞனுக்கு உண்மையில் ஒரு பதற்றம் இருக்கிறது. அது பிரபஞ்சம், உறவு, அறம் என எதுவாகவும் இருக்கலாம். அவன் எழுதும் போது அதை இருத்தலியல் சிக்கலாகவே பார்க்கிறான். தமிழில் ஒரு கவிஞன் எழுதத் தொடங்கும் போது மூத்த கவிஞர்கள் எல்லோருமாக சேர்ந்து ஞானஸ்தானம் கொடுத்து இருத்தலியல் குழுவுக்குள் இணைத்து விடுகின்றனர். அவன் அதற்கு பின் அதிலிருந்து வெளிவரவே முடியாது.
தமிழில் நவீன கவிதை ஒட்டுமொத்தமாக இருத்தலியல் சிக்கலைத்தான் எழுதியிருக்கிறது. குமரகுருபரன் விருது மேடையில் ஒருமுறை நான் சொன்னேன், “கவிஞர்கள் முன்வைக்கும் 'நான்' என ஒன்றிருக்கிறது, அந்த நான் யார்? ஏதோ ஒரு வகையில் தமிழ் நவீனக் கவிதையில் அக்கவிஞனுக்கு முன்பே இருக்கும் 'நான்' தான் அது” என்று.
இந்த நான் நவீனக் கவிதைக்குள் கட்டமைக்கப்பட்ட ஒன்று. கவிஞன் ஒருவன் தனிப்பட்ட முறையில் என்னென்னவாகவோ இருக்கிறான். ஆனால் எழுதும் போது இந்த இருத்தலியல் நான் முன்வந்துவிடுகிறது. நிறைய தமிழ் வாசகர்களால் இந்த கட்டமைக்கப்பட்ட நான் என்னும் தன்னிலையோடு தங்களைத் தொடர்புப்படுத்திக் கொள்ள முடிவதில்லை.
குமரகுருபரன் விருது விழா 2026ல் நிகழ்வில் கவிதை அமர்வில் சூரஜ் என்னும் நண்பர் இது சார்ந்த கேள்வி எழுப்பினார். கவிஞன் எழுதக்கூடிய ‘நான்’ எனக்கு தொடர்பாகவில்லை என வாசகன் சொல்ல காரணம் கவிஞன் உருவாக்கும் நான் ஒரு இலக்கியக் கட்டமைப்பு மட்டுமே என்பதால் தான். அது வாழ்க்கையிலிருந்து பெறப்படுவதல்ல. இங்கே ஒரு முன்முடிவாக இருப்பது இருத்தலியல் சார்ந்து உருவாகும் பதற்றம்.
பதற்றத்தை தன்னியல்பில், ஏற்கனவே வகுக்கப்பட்ட இருத்தலியல் சார்ந்த அடையாளங்கள் எதுவும் இல்லாமல், எதிர்கொள்ளக் கூடிய கவிஞர் ஈட்டிக் கொள்வது ஒருவகையான சுதந்திரம். இன்று கவிஞனுக்கு தேவையானது இந்த சுதந்திரம். சுவரில் இருக்கும் கறையை பிறர் காட்டும் முதலையாகவோ, நாயாகவோ, கரடியாகவோ பார்க்காமல் தனக்கு என்ன தோன்றுகிறதோ அதுவாக பார்க்கும் சுதந்திரம்.
சம்யுக்தா மாயா கவிதைகளில் முக்கியமாக இருக்கும் அம்சம், ஒரு ஆரம்பநிலைக் கவிஞர் தமிழில் முன்னர் எழுதப்பட்ட கவிதைகளைப் படித்து ஒரு வடிவத்திற்குள் சென்று அதிலிருந்து மீளும் முயற்சி கொண்டிருப்பது. சம்யுக்தா தன் தனித்தன்மையால், ஒரு வகையில் தன்னுடைய பாலியல் அடையாளத்தால் அதிலிருந்து வெளிவருகிறார்.
மேற்சொன்ன தமிழ் கவிதை மரபில் உள்ள பொதுத்தன்மை அக்கவிதைகள் ஆண் உலகம் சார்ந்த அடையாளம் கொண்டவை என்பதே. அந்த அடையாளத்திலிருந்து வெளிவர சம்யுக்தா மாயாவால் முடிந்திருக்கிறது. இந்த அம்சம் குமரகுருபரன் விருது பெற சம்யுக்தா மாயாவை தகுதியுடையவராக்குகிறது.
பதற்றம் கவிதையில் வெளிப்படும் போது படிமங்களை உருவாக்குகின்றன. ஏனென்றால் கவிதையின் மொழியே படிமம் தான். படிமமற்ற கவிதை என்று சொல்லும் போதுகூட அதில் ஒட்டுமொத்த கவிதையும் படிமமாக ஆகிறது. கலை என்பதே படிம வெளிப்பாடு தான். அது காட்சிப் படிமம், ஒலிப் படிமம், உருவகம் சார்ந்த படிமம் என இருக்கலாம். Art is a mission of creating Images.
படிம உருவாக்கத்தில் இரண்டு வகையான சாத்தியக்கூறுகள் கவிஞனிடம் உள்ளன. முதல் வகை தனிப்பட்ட (Personal) படிமங்களை உருவாக்குதல். அந்தரங்கமான தனக்கு மட்டுமே உரிய படிமங்களை உருவாக்குதல். மற்றொன்று, மரபார்ந்த, கவிதை தொடர்ந்து கையாண்டு வரும் படிமங்களைப் பயன்படுத்துவது. அவை நம் சிற்ப கலையில், மதத்தில், வெவ்வேறு இலக்கிய நூல்களில் இருக்கக் கூடியவையாக இருக்கலாம்.
நவீனக் கவிஞர்களுக்கு மரபு படிமங்கள் மேல் பெரும் ஒவ்வாமை இருக்கிறது. நவீனக் கவிதை உருவாகும் போதே அது மரபுக் கவிதைக்கு எதிராக எழுதப்பட்டது. அன்று மரபுக் கவிஞர்கள் மரபான படிமங்களை மரபான விதத்தில் தொடர்ந்து பயன்படுத்திக் கொண்டிருந்தார்கள். அது உருவாக்கிய ஒவ்வாமை காரணமாக தமிழில் புதுக்கவிதை எழுதப்பட்டது.
புதுக்கவிதை தொடங்கும் போது அதனுடன் இருந்தவரான சுந்தர ராமசாமிக்கு நான் நெருக்கமானவன். புதுக்கவிதை பற்றிய விவாதம் தமிழில் எழுத்து இதழில் தொடங்குகிறது. புதுக்கவிதைக்கு ‘Neo Poem’ என எஸ்ரா பவுண்ட் போட்ட பெயரை க.நா.சு மொழிபெயர்த்தார். எழுத்து இதழில் புதுக்கவிதை என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதினார். அதனுடன் ‘பெட்டிக்கடை நாராயணன்’ என்ற கவிதையும் வெளியாகியது. க.நா.சு அதுவே புதுக்கவிதை எனக் குறிப்பிட்டார்.
அதற்கு அடுத்த இதழில் நான்கு கவிதைகள் எழுத்து இதழில் வெளியாகின. அதில் ஒன்று சுந்தர ராமசாமி ‘பசுவைய்யா’ என்ற பெயரில் எழுதிய ‘உன் கை நகம்’ கவிதை. அதற்கான தூண்டுதல் என்ன என சு.ரா.விடம் நான் கேட்ட போது அவர், “எதெல்லாம் மரபு கவிஞர்கள் எழுத மாட்டார்களோ, அதையெல்லாம் எழுத வேண்டும்” என்றார். ‘நகத்தை வெட்டு’ என்ற கவிதையை மரபு கவிஞன் ஒருபோதும் எழுத மாட்டான். அந்த ஒவ்வாமையே புதுக்கவிதையின் தொடக்கம். ஆகவே மரபு சார்ந்த படிமங்களை நிராகரித்தார்கள்.
மரபிலிருக்கும் எல்லா படிமத்தையும் நிராகரித்த பின் எஞ்சியிருப்பவை தனிப்பட்ட படிமங்கள். எனவே தனிப்பட்ட படிமங்கள் (Personal Image) நவீனக் கவிதை தொடங்கும் போது ஏராளமாக பயன்படுத்தப்பட்டன. ஆனால் இன்று கிட்டதட்ட நூறாண்டுகள் ஆகும் போது அந்த தனிப்படிமங்கள் அனைத்துமே பழகியதாகிவிட்டன.
அதற்கு பல காரணங்கள் சொல்லலாம். முக்கியமானது, அவை நாம் வாழும் Mundane அன்றாட வாழ்விலிருந்து எடுக்கப்படுபவை. முற்றிலும் உலகியல் சார்ந்ததாக இருக்கும் ஒன்றுக்கு கவித்துவமான ஆழத்தை, அதற்கு அடுத்தக்கட்டத்தைக் கொடுக்க முடியாது.
தேவதேவனிடம் அன்றாட விஷயங்கள் கவிதையில் அதிகம் இடம் பெறாததைப் பற்றி பேசிக் கொண்டிருந்தேன். ரயில் வந்துள்ளது, ஆனால் பேருந்து ரொம்ப கொஞ்சம் தான் இடம்பெற்றுள்ளது. பேனா வந்துள்ளது, ஆனால் செல்போன் மிகக் குறைவு. ஏனென்றால் அவற்றின் அன்றாடத் தன்மை அவை படிமமாவதை தடுக்கிறது. வார்த்தையாக வருவதைப் பற்றி நான் சொல்லவில்லை. படிமமாக இடம்பெறுவதைப் பற்றி சொல்கிறேன்.
எனவே நவீன கவிஞர்கள் இந்த நூறாண்டுக்குள் சில படிமங்களை உருவாக்கிக் கொண்டு அதற்குள்ளே திரும்ப திரும்ப எழுதிக் கொண்டிருக்கின்றனர். இதை எப்படி உடைத்து வெளிவருவது என்பது இன்றைய கவிஞனுடைய மிகப்பெரிய சவால். இன்றைய கவிதைகளை வாசிக்கும் போது இதுவரை நவீன கவிஞர்கள் எழுதாத எந்த வரியை ஒருவன் எழுதியிருக்கிறான் என்பதே எனக்கு முக்கியமாக இருக்கிறது.
நான் புதுக்கவிதைகளை ஒருநாள் விடாமல் தொடர்ந்து படிப்பவன். தொடர்ந்து வாசிப்பவனுக்கு புதிய கவிதைகளை வாசிக்கும் போது இது பழைய படிமம் என்ற எண்ணம் வருகிறது. “முகம் நிலவு போல” என ஒரு மரபு கவிஞன் கூறினால் பழசு எனக் கூறுவது போல் “தனிமையின் பெருங்கடல்” எனப் புதுக்கவிஞன் எழுதினாலும் பழசு தான்.
சம்யுக்தா மாயா கவிதைகள் எழுதும் போது தனிப்படிமம், மரபார்ந்த படிமம் என இரண்டு வாய்ப்புகள் அவருக்கு இருக்கிறது. அதில் அவர் தனிப் படிமம் வழியாக தான் கவிதை எழுதத் தொடங்குகிறார்.
“உன் உலகைப் புரட்டிப் போடும்பேரதிர்ச்சியான செய்தி ஒன்றை
நீ அறிந்துக் கொள்கையில்
உன் புழக்கடையில்
ஆர்ப்பரிக்கும் அலைகளுடன்
கரை மோதிக் கொண்டிருந்த
கடல் ஒன்று
திடீரென பலகாலம் தூரம்
உள்வாங்கிக் கொண்டது.”
இதே போன்ற வரிகள் முன்னோடி நவீன கவிஞர்களால் எழுதிப்பட்டுவிட்டன. கவிஞர் மனுஷ்யபுத்திரன் கடல் உள்வாங்குவது, அறைக்குள் வந்த கடல் பற்றி எத்தனை படிமங்கள் எழுதியுள்ளார். எனக்கு பிடித்தமான வரியே மனுஷ்யபுத்திரன் எழுதிய, “இன்று அறையை நிறைப்பது, கரையை புணரும், காற்றுணரும் தடையின் மேல்”. இதே போல் ஒரு இருபது, முப்பது வரிகளை ஞாபகப்படுத்தக் கூடிய வரியாக இது உள்ளது.
சம்யுக்தா மாயாவின் மேற்சொன்ன கவிதை நல்ல படிமத்தை உருவாக்கும் போதே புதுக்கவிதை கையாண்ட படிமமாகவும் உள்ளது. நமக்கு பழைய காலத்தில் வழிதவறி போன தபால் அட்டை வந்து சேரும். அதில் காக்கிநாடா, விஜயவாடா, தாம்பரம் என எல்லா முத்திரையும் இருக்கும். அதே போல் இந்த கவிதையில் ஏற்கனவே விக்ரமாதித்யன், மனுஷ்யபுத்திரன் முத்திரை குத்தியாகிவிட்டது. பல கவிஞர்களின் கைரேகை உள்ளது.
“கூர்மையான பற்கள் கொண்ட
பசித்த முதலையென
வாய்பிளந்திருக்கும் இவ்விரவுக்கு
என் உறக்கத்தை உருட்டி
இரையாக எறிகிறேன்.”
இந்த கவிதையுடன் நாம் சுகுமாரனை நினைவுக் கூரலாம். நான் குறிப்பிடுவது சம்யுக்தா மாயா கவிதைகளில் உள்ள நல்ல வரிகளை. இதில் விநோத மிருகம் எனக் குறிப்பிடும் போதே சுகுமாரன் வந்தாயிற்று.
வலுவான கவிதைகள் எழுதப்பட்ட மொழியில் வரக்கூடிய தீவிரமான கவிஞர்களுக்கு இருக்கும் சவால் இது தான். முன்னோடிகளின் கைரேகை எல்லா இடத்திலும் காணப்படுகிறது.
“ஒரு சொல்லுக்குள் கடல் ததும்பி நிற்பதை இன்று பார்த்தேன் பின் ஒரு கடலின் மேல் ஒரு சொல் எழுதப்பட்டதை நின்று பார்த்தேன்.” ஒரு சொல்லுக்குள் கடல், அணுவுக்குள் கடல், புன்னகைக்குள் கடல் எனத் திரும்பத் திரும்ப இந்த படிமம் கையாளப்பட்டுள்ளது.
இன்று தனிப்படிமங்களை உருவாக்கும் கவிஞனுக்கு எப்படி புதிதாக இருப்பது, எப்படி உண்மையிலேயே தனிப்பட்டு, தனித்தன்மையாக இருப்பது என்பது பெரிய சவாலாக உள்ளது. அதை எப்படி வெல்வது என வாசகனாகிய ஒருவன் சொல்ல முடியாது, கவிஞன் அதை எதிர்கொண்டால் அதை கவனிப்பது மட்டுமே என் பணி.
சம்யுக்தா மாயா கவிதைகளில் அத்தகைய தருணங்கள் இருக்கிறதா? அதற்கு அவர் கண்டடைந்த ஒரு வழி என்பது இதுவரை கவிதை உருவாக்காத விசித்திரத் தன்மையை தன் கவிதைக்குள் உருவாக்கி அந்த சவாலைக் கடப்பது. அல்லது மீயதார்த்தமாக (Surreal) மாற்றும் போதும் நிகழ்கிறது.
சம்யுக்தா மாயாவின் முதல் தொகுப்பிலேயே சில கவிதைகள் அப்படி உள்ளன,
“குளியல் தொட்டி நீரை கிழித்து
முகிழ்த்து மேலெழுகின்றன
உன் நிறைவேறாத வேட்கையின்
நீண்ட தண்டுகள் கொண்ட
கறுப்பு நிறத் தாமரைகள்”
டாலியன் இமேஜ் இது. இந்த மாதிரியான படிமங்கள் வழியாக பழகிய மொழியிலிருந்து வெளியேறலாம். அப்போது கூட, உன் நிறைவேறாத வேட்கை என்ற சொல் அக்கவிதையை உருவகமாக மாற்றிவிடுகிறது. கவிதைக்கு எப்போதும் படிமம் கொடுக்கும் அழகு வேட்கை எனக் குறிப்பிட்டதால் உருவாகும் உருவகத் தன்மையில் குறையத் தான் செய்கிறது.
“எருக்க மொட்டுகள் மீது இதழ் பதிக்கிறது வெயில்
பூ வெடிக்கிறது அவன் இடும் முத்தத்தின் சத்தத்தோடு”
எருக்கம் பூ வெடிக்கும் சத்தம். அதை ஒரு முத்தத்தின் சத்தம் எனச் சொல்லும்போதுள்ள விசித்திரம், பார்வை. அதன் வழியாக கடக்கிறார். இதே போல் எவ்வளவு முடியுமோ அவ்வளவு தனித்தன்மையுடன் தனிப்படிமங்களுக்குள் செல்ல வேண்டும்.
மறுபக்கம், இன்றைக்கு கவிஞன் அவன் நான்கு பதற்றங்களை வெளிப்படுத்துவதற்கு இருக்கும் பெரிய ஊடகம் மரபார்ந்த படிமங்களைப் பயன்படுத்துவது. சம்யுக்தா மாயா வெளியேறும் ஒரு முயற்சியாக அந்த மரபார்ந்த படிமங்களை உபயோகிக்கிறார்கள் என நினைக்கிறேன். இது ஒரு வகையில் சுதந்திரத்திற்கான, மீறலுக்கான, இன்னொன்றை கண்டடைவதற்கான, தரப்படா வசதியிலிருந்து வெளிவருவதற்கான பயணம்.
கவிஞருக்கு தனிப்பட்ட முறையில் பிரபஞ்ச, உறவு, அறம் சார்ந்த பதற்றத்தை வெளிப்படுத்துவதற்கு இந்த மரபுப் படிமம் ஓர் ஊடகமாக இருக்கலாம். அதில் பெரிய அகநகர்வு அவருக்கு நிகழ்ந்திருக்கலாம். ஆனால் கவிதையில் அவர்களுக்கு மரபார்ந்த படிமங்கள் நோக்கி ஒரு வளர்ச்சி இருக்கிறது. காசி கவிதைகள் அனைத்தும் அந்த வகையானவை.
சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் சம்யுக்தாவின் கவிதைகளில் வாசகனை நோக்கி தீவிரமாக தன்னை முன்வைக்கக் கூடியவையும், உடனடியாக தொடர்புறுத்தக் கூடியவையும் ஆன அம்சம் கொண்ட கவிதைகள் எல்லாமே மரபார்ந்த படிமங்களை பயன்படுத்திய கவிதைகள் தான். தனிப்படிமங்கள் எல்லாம் தீவிரமாக கவிதைகளைப் படித்துக் கொண்டிருப்பவர்களை தவிர வேறு வாசகர்களுக்கு உணர்வு ரீதியான நகர்வை ஏற்படுத்தவில்லை. நன்றாக எழுதப்பட்டிருக்கிறது என்பதற்கு மேல் அதில் அவர்களுக்குச் சொல்ல ஏதும் இல்லை.
ஆனால் மரபார்ந்த கவிதைகளைப் பயன்படுத்தும் போது சம்யுக்தாவிற்கு பெரிய வாசகத் தொடர்பு உண்டாகிறது. இந்தவகைக் கவிதை என்பது ஏற்கனவே இங்கே திரண்டு இருக்கும் மரபு வழியாகவே தொடர்புறுகிறது. ஒவ்வொரு வார்த்தைக்கும் இங்கிருக்கும் மூவாயிரம் ஆண்டு வரலாறு வண்ணமிட்டிருக்கிறது.
அதில் வரும் பிரச்சனை என்பது மரபு தரும் அர்த்தத்தை அப்படியே பயன்படுத்தி எழுதினால் அது புதுக்கவிதையாக இருக்காது என்பதே. மரபுக் கவிதையை புதுக்கவிதை நடையில் எழுதியதாக இருக்கும்.
“ஒன்பது வாசல்களையும்
மூடி வெளித்தாழிட்டு
அடைத்து சாவியுமில்லை”
என ஒரு வரி உள்ளது. இது மரபார்ந்த படிமம். கண்ணதாசனே பயன்படுத்தியது. ‘ஓட்டை வீடு ஒன்பது வாசல்’. இது ஒரு கவிதையில் வரும் போது மரபார்ந்த மனதிற்கு தனக்கு தெரிந்ததை கண்டுபிடித்த சந்தோஷம் வருகிறதே ஒழிய கவிதையாவதில்லை. வரக்கூடாது என்பதில்லை. கவிதையில் அதன் உடலை நிரப்பும் வரிகளில் வரலாம். தனிக்கவிதையாக வர இடமில்லை.
கங்கையில் படகுகள் வழியாக தாவிச்செல்வதைப் பற்றி, ஒரு படகிலிருந்து இன்னொன்றுக்கு, அதில் இருந்து இன்னொன்றுக்குச் சென்று கரைக்கு செல்லவதைப் பற்றி ஒரு படிமம் உள்ளது. அது பிறவிகள் தோறும் செல்லக்கூடிய பயணம் எனப்படுகிறது. இது புதுமையானது.
வாசகனாக எனக்கு பட்டது ஒரு படகிற்கும் இன்னொன்றிற்கும் இருக்கும் உறவின்மை தான். தொட்டும் இருக்கும், தொடாமலும் இருக்கும், சதா தத்தளித்துக் கொண்டிருக்கின்றன அவை. ஒரு பிறவியிலிருந்து இன்னொரு பிறவிக்கு போகும் பயணமென்பது ஆடும் படகுகள் வழியான பயணமாக இருக்கிறது. தத்தளிப்பு, தாவல் என ஒரு வரி வழியாக பெரிய சித்திரம் உருவாகிறது. இதுவே மரபில் புதுக்கவிஞனின் உள்ளம் செயலபடும் முறை.
அன்றாடம் நிகழ்ந்துக் கொண்டிருக்கும் லௌகீகமான வாழ்க்கையிலிருந்து தனிப் படிமங்களை கவிஞன் உருவாக்க வேண்டும். ஆனால் அதில் அலுக்கும் வாழ்க்கை இருக்கக் கூடாது. அதற்கு மேல் ஏதாவது அதிலிருக்க வேண்டும். வேறொன்றாக மாறி என்றுமுள்ளதாக இருக்க வேண்டும். அந்த மாற்றம் ஒரு சவால்.






.jpg)

0 comments:
Post a Comment