அப்படியே நிற்கட்டும் அந்த மரம்
ஊரின் வடகோடியில் அந்த மரம்
ஐந்து வயதில் பார்த்தபோதும்
இப்படியே தானிருந்தது
ஐம்பதைத் தாண்டி இன்றும்
அப்படியேதான்
தாத்தாவின் தாத்தா காலத்தில்
நட்டு வளர்த்த மாமரம்
அப்பா சொல்லக் கேட்டிருக்கிறேன்
உச்சிக் கிளையில் பழங்கொத்தும் காக்கை
சிட்டுக்குருவியாய் கண்ணில் படும்
பச்சைக் காய்கள் நிறம் மாறிச்
செங்காய்த் தோற்றம் கொண்டதுமே
சிறுவர் மனங்களில் பரவசம் பொங்கும்
பளபளக்கும் பச்சை இலைகளூடே
கருநீலக் கோலிக்குண்டுகளாய்
நாவற்பழங்கள் கிளைகளில் தொங்கும்
பார்க்கும்போதே நாவில் நீருறும்
கல்லாலடித்துப் பழமுதிர்த்தால்
கண்டிப்பாகக் காது போய்விடும்
காக்கை குருவி மைனா கிளிகள்
இன்னும் பெயரறியாய் பறவைகளுடன்
அணில்களும் காற்றும் உதிர்த்திடும்
சுட்ட பழங்கள் பொறுக்க
சிறுவர் கூட்டம் அலைமோதும்
வயது வந்த அக்காக்களுக்காய்
கையில் பெட்டியுடன் ஓடி ஓடிப்
பழம் பொறுக்கும் தங்கச்சிகள்
இரவில் மெல்லிய நிலவொளியில்
படையெடுத்து வரும்
பழந்தின்னி வௌவால் கூட்டம்
துப்பாக்கியுடன் கவனமாய் நிற்பார்
வேட்டைக்கார மணியண்ணன்
வீழும் வௌவால் சேகரிக்க
பக்கத்தில் நிற்பார் கனகம் மாமா
தோப்பு முழுக்கப் பரவிக்கிடக்கும்
மரத்தின் குளிர்ந்த நிழலிலே
கிளியாந்தட்டின் சுவாரசியம்
புளியமிளாறுடன் அப்பா வரும்வரை
வீடும் சோறும் நினைவின்றிப்
பகல் முழுக்க ரம்மியாட்டம்
மரத்தடியில் சாய்ந்தமர்ந்து
சுவாரசியமாய்ச் சுருட்டுப் புகையூதி
வைத்தியர் தாத்தா சொன்ன
ராத்திரி ரகசியக் கதைகளையெல்லாம்
எங்களுடன் ரசித்துக் கேட்ட மரம்
பொரித்த கோழியுடன் சாராயம்
ஆதிலிங்கம் ஊற்றித் தரத்தரக்
குடித்துக் கும்மாளமிட்ட இரவுகளை
மௌனமாய்ப் பார்த்து நின்ற மரம்
நேற்று மதியம் நண்பர்களுடன்
என் மகன் கிரிக்கெட் ஆடியதும்
அந்த மரத்தின் நிழலில்தானே
பெருவாழ்வு வாழ்ந்த மரம்
நேற்றிரவு பேய்க்காற்றில்
வேரோடு சாய்ந்துவிட்டதாமே
விடிந்தும் விடியாததுமாய்
துஷ்டி கேட்கும் பதற்றத்தில்
விரைந்து செல்கிறார் ஊர்மக்கள்
குஞ்சு குளுவான்களோடு
எனக்குப் போக மனமில்லை
என்றும் என் மனவெளியில்
அப்படியே நிற்கட்டும் அந்த மரம்
குன்றுகளின் நடுவே மாமலைபோல
- ராஜமார்த்தாண்டன்
ஆரண்யம் இதழில் முதலில் வெளிவந்தது. நீண்ட கவிதை என்றபோதும் அவ்விதம் தோன்றாத ஈர்ப்பு. வாழ்வு சார்ந்த விவரிப்புகள் ஏற்படுத்திய ஈர்ப்பு.
முதல் பதினொரு பத்திகளும் விவரிப்புகள்தாம். எனில், வெறும் விவரிப்புகள் அல்ல. ஐந்து வயதுச் சிறுவனாய் இருத்ததில் தொடங்கி, இன்றைய நாள்வரையிலான வாழ்வியல் விவரிப்புகள். நிலைகளும் நினைவுகளும்; தன் வாழ்வு / ஊர் வாழ்வுப் பின்னணிகளில் சரம் சரமாக, கொத்துக்கொத்தாக; தலைமுறைதலைமுறையாக, ஓங்கி வளர்ந்த அந்த மரத்தின் பின்புலத்தில் அடுக்கிக்கொண்டே வந்து, நேற்றிரவு விழுந்து விட்டதையும், போய்ப் பார்க்க மனம் ஒப்பாததையும் இறுதி இரு பத்திகளில் சொல்லி நிறைவுறுகிறது கவிதை.
நேர்கவிதைதான். இன்னும் சொல்லப்போனால், வெள்ளைக்கவிதை. ஆனால், வாழ்பவனுபவங்களும் அவதானிப்புகளும் உயிர்ப்புக் கொண்டிருப்பதாலேயே உயர் கவிதையாக மாறிவிடுகிறது.
அப்பா, பழம் பொறுக்கும் சிறுவர் - சிறுமிகள், பறவையினங்கள், வேட்டைக்கார மணியண்ணன், கனகம் மாமா, ஆதிலிங்கம், மகன் மற்றும் ஊர்மக்கள் எல்லோரும் கோட்டோவியங்களாக. எந்தப் பூச்சுமின்றி, சாதாரணமாகவே சொல்லிச் செல்கிறார் கவிஞர்.
விழுந்து கிடக்கும் மரமாக அல்ல, என்றும் நின்று நிலைத்திருக்கும் மரமாகவே காண விருப்பம் கொண்டிருக்கிறார் ராஜமார்த்தாண்டன்.
மரத்தின் வாழ்வோடு மனிதர்களின் வாழ்வும் சேர்த்தே சொல்லப்பட்டிருப்பதாலும், மனத்தின் இயல்பான நுணுக்கம் வெளிப்படுத்தப்பட்டிருப்பதாலும் ஃது ஓர் முக்கியமான கவிதையேயாகும்.
மனித உள்ளம் நுணுக்கமானது. அது கொள்ளும் கோலங்கள் யாருக்கும் பிடிபடாதவை. 'உள்' என்ற வேர்ச்சொல்லிலிருந்து வந்ததுதான், ‘உள்ளம்' எனும் சொல். உள் + அம் = உள்ளம். அம்: விகுதி. ‘உள்ளுதல்' என்ற வினைச்சொல், நினைத்தலைக் குறிக்கும். நினைப்பு எப்படியும் இருக்கலாம். இங்கே இப்படி இருக்கிறது.
பெருவாழ்வு வாழ்ந்து, எந்த நோக்காடும் இல்லாமல், முடிந்த மரத்தைப் போய்ப் பார்க்க விரும்புவார் மனுஷ்யபுத்திரன். அவருக்கான காரணங்கள் வேறானவை; அவரளவில் சரியானவையும்தாம். மார்த்தாண்டனுக்கான காரணங்கள் தனியானவை; இவரளவில் இவையும் சரியானவைதாம்.
விழுந்த மரத்தைப் பார்க்க ஒப்பாத மனசு. இறந்து போனவர்களைப் போய்ப் பார்க்க மனமொப்பாத மனிதர்கள் இருக்கிறார்கள் தாமே, அதைப்போல. அன்று கண்ட மேனிக்கு அழியாமல் இருப்பது யதார்த்தத்தில் இல்லாதது. தோன்றுவன அனைத்தும் மறையும் தாம். ஆனால், நெஞ்சிலும் நினைவிலும் அப்படியே வைத்துக் கொள்ளலாம். அந்த மாதிரி மனம்தான், அந்த மனவிழைவு தான் இந்தக் கவிதை.
மனநுட்பத்தைச் சொல்லியிருப்பதாலேயே கூடுதல் மதிப்பு மிக்கதாகிறது, இக்கவிதை. ஊர் கூட்டிப் போய்ப் பார்க்கிறது. ஒரு மனசு இப்படி எண்ணுகிறது. கவிதையில், அந்த நாவல்மரத்தை ஆவணப்படுத்துகிறது. மரம் அழியவில்லை. மாறாக மொழியில் சாஸ்வதம் பெற்றுவிடுகிறது.
"அப்படியே நிற்கட்டும் அந்த மரம்"
எளிமையாகவும் சாதாரணமாகவும் கூட ஒரு பெரிய விஷயத்தைச் சொல்லமுடியும் என்பதற்கும் இந்தக் கவிதையையே உதாரணம் காட்டலாம். கவிதையைக் கட்டமைப்பதில் விவரணங்களும் தகவல்களும் பெரும் பங்கு பற்றியிருப்பதையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.
***
ராஜமார்த்தாண்டன் தமிழ் விக்கி பக்கம்
விக்ரமாதித்யன் தமிழ் விக்கி பக்கம்
***







0 comments:
Post a Comment