பார்வையும் கவிதையும் வெவ்வேறல்ல. பொதுவாக விமர்சகர்கள் ஒரு கவிதையின் பார்வையையும் கவிதைத் திறனையும், வெளியீட்டு உத்தியையும், த்வனி, மற்றும் இலக்கண விஷயங்களையும் பாகுபடுத்தி; அவைகள் யாவும் ஒரு உடல் என்ற உண்மையை மறைத்து விட்டிருக்கின்றனர். கவிதை அனுபவத்தில் கிடைக்கின்ற அகண்டாகாரமும், ஆனந்தமும் பயமின்மையும் பார்வையின் விளைவுகளே அன்றி வேறு எதனுடையதும் அல்ல. பொதுவாக கவிதையில் விதவிதமான கற்பிதங்களை பார்வை என எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. இந்தப் பல்வேறு வகைப்பட்ட கற்பிதங்கள் பார்வையின் பிரதேசத்தைச் சார்ந்ததல்ல. கற்பிதங்களும் பார்வையும் முற்றிலும் வேறானவை. கற்பிதம் என்பது எப்பொழுதும் ஒரு எதிர்பார்ப்பு பயன் சார்ந்ததாகவே இருக்கிறது. ஒரு கிண்ணம் தனது வடிவதிற்கு நீரை வளைத்துக் கொள்வதைப்போல கற்பிதம் என்பது வாழ்வின் ஓட்டத்தை வளைக்க முயல்கிறது. இவ்வகையான கவிதைகள் நமக்குத் தருவது கற்பித ஓட்டங்களே, வாழ்க்கை அல்ல. கற்பிதங்கள் உண்மையின் முக்கிய எதிரிகள். கற்பிதங்களில் இருக்கும் மேலோட்டமான ருசிகள் வாசகனின் மனத்தை சிறைப் பிடித்து வைத்துக் கொள்கின்றன.
வாசகன் அல்லது மனிதமனம் தன்னைக் கடந்துவிட எத்தனிக்கும் போதெல்லாம் அதற்கு மாற்றாக ஒரு பொய் விசாலத்தைத் தருகின்றன? பார்வையின் முதல் வேலை பார்க்கப்படுவதின் தன்மையை அறிவிப்பதைவிட பார்வையாளனின் குணரூபத்தையே பரிமாறுகின்றது. பார்வை என்ற ஒரு சன்னதம் நிகழும்போது அதைப் பற்றிக்கொண்ட மனித மனம் புதிய ரூபச் சிதைவுகளுக்கு ஆட்படுகின்றது. அந்த ரூபச் சிதைவுகளின் வலியோடும் மகிழ்ச்சியோடும் கவிஞன் அல்லது மனித மனம் ஒரு புதிய பரிமாணத்தில் பிரவேசிக்கிறது. பார்வையின் கருப்பையில் இருந்த புதுப் புதுப் பரிமாணங்கள் கவிமனத்தில் பிரசவம் காண்கின்றன. கற்பிதங்களோ மனத்திலிருந்து பிரசவிக்க பார்வை மனத்திற்கு சற்றும் தொடர்பற்ற பாதையை ஒருவனுக்குச் சுட்டிகாட்டுகின்றன. ஒரு கவிதையை வாசிக்கும்போது ஏற்படுகின்ற முதல் அதிர்ச்சி பரிச்சயமற்ற இன்னொரு சாராம்சத்தின் தீண்டுதல்தான் பார்வையின் ஜனனம் கற்பிதத்தின் ஜனனத்தைப்போல் பழமையிலிருந்து வராமல் புதுமையின் முன் வாசலாக இருப்பதால் கவிதை அனுபவம் முதன்முதலாக ஒரு வகையான உவகையைத் தருகிறது. இந்த உவகையின் கிளையைப் பற்றிக் கொண்டே புதிய புதிய பரிமாணங்களுக்கு ஒருவனை அழைத்துச் செல்ல ஒரு கவிதை சுயத்திறம் உடையதாயிருக்க வேண்டும். ஒரு கவிதையின் சுயத்திறம், வலிமையற்றதும் எப்போதும் திகைத்து நிற்பதும் தனது அறிவு இந்த நிமிடத்திய வாழ்வின் அலைகளை சந்திக்கப் போதாது என்ற தன்னிரக்கமும் கொண்ட தினசரி மனத்திற்குள் ஒரு வீர்யமும் ஒரு தெளிவும் தரவல்லதாய் இருத்தல் அவசியம். கற்பிதம் மட்டும் இருக்கும் கவிதைகளில் மேலோட்டமான ரசனைகளுக்குத் தீனி கிடைக்குமேயன்றி ஒரு கவிதையின் உண்மையான நோக்கமான சுதந்திரத்தின் அறிவுறுத்தலும் அதன் பக்க விளைவுகளான எதிர்மறை உணர்வுகள் குறைவதும் நடப்பதே இல்லை. தேங்கிப் போய்க் கிடக்கின்ற சமூகச் சட்டங்களுக்கும் அந்தச் சட்டங்களின் குறைபாடுகளை எப்போதும் ஒருவனுக்கு அறிவுறுத்திக் கொண்டிருக்கும் வாழ்க்கை அலைகளுக்கும் இடையில் கவிஞன் ஒரு முக்கியமான பணியைச் செய்கிறான். எனவே தான் கவிதை அனுபவத்தின் வளாகத்தில் இருக்கும்போது, ஒருவனது தன்னுணர்வு வேறு புதிய குணங்களோடு ஒளிர்வதைக் காணுகிறோம்.
தினசரி வாழ்க்கையில், நடைமுறைப் பயன்பாட்டில் இயங்குகின்ற தன்னுணர்வு நெரிசலுக்கு ஆட்பட்டதும் முரண்பாடான சட்டங்களுக்கு இடையில் சிக்கிக் கொண்டதும், எப்பொழுதும் ஒரு உபாதையில் அவஸ்தைப் படுவதுமாய் இருக்க கவிதை மைதானத்தில் அதே தன்னுணர்வு ஆனந்தம், சுதந்திரம் போன்ற உயர்நிலைகளில் இயங்குகிறது. பொதுவாக, கவிதையை தினசரி மனித வாழ்வின் தளத்திற்குக் கொண்டு வர வேண்டுமென்று முயற்சிக்கிறவர்கள் (உதாரணமாக மேலோட்டமான முற்போக்குக் கவிஞர்கள், அறிவியல் கவிஞர்கள்) தெரிந்தோ தெரியாமலோ நன்மையைவிட தீமையே செய்கின்றனர் தினசரி மனம்தான் கலைவீச்சின் தளத்தினால், தான் கிரகிக்கப்பட ஒப்புக்கொடுக்க வேண்டுமின்றி, கலை வீச்சை தன் தளத்திற்கு இறக்குவதினால் எந்தவிதமான பயனும் இல்லை.
பார்வை என்பது ஒரு தனி மனித மனத்தின் செயல் அல்ல. ஒட்டுமொத்தப் பிரக்ஞை. ஒன்றைப் பார்ப்பதையே தனிமனம் பார்வை எனக்கூறிக் கொள்கிறது. பார்வை என்றவுடன் ஒரு இடத்திலிருந்து வேறு ஒரு பொருளை பார்க்கின்ற அனுபவம்தான் நினைவுக்கு வரும். உண்மையில் கவிதையில் பார்க்கப்படும் பொருளே பார்வை என ஒரு புதிய நகர்வு கொள்ள பார்வையாளனான கவிஞனும், பார்க்கப்படுகின்ற பொருளும், பார்வை என்கிற மின்சாரத்தால் ஒரே இயக்கமென இணைக்கப்படுகிறார்கள். அந்த இணைப்பின் மின்சாரம், தானும் வாழ்க்கையும் வெவ்வேறு என உணர்ந்து கொண்டிருந்த தினசரி மனத்தில் பாய்ந்து, வாழ்க்கையை ஒரு குறிப்பிட்ட மனிதனாகவும், ஒரு குறிப்பிட்ட மனிதனை முழுப்புலன் வாழ்க்கையின் பிரதி நிதியாகவும், உணர்ச்சி வழியாக உணர்த்துகிறது.
நிகழ்காலத்தில் மின்சாரம் தடைபட்டதும், எந்தக் கவிதையிலும் பார்வை மரணமடைந்து கருத்தாகிறது. ஒரு காலத்தில் எழுச்சியும் திசையும் கொடுத்த மதக்கவிதைகள், அறிவியல் கவிதைகள் மற்றும் தேசவிடுதலைக் கவிதைகள் போன்றவை 'கவிதை' என்னும் ஸ்திதி இழந்து 'கருத்து' என்னும் கீழ் நிலையை அடைகின்றன. கவிதையும் பார்வையும் ஒன்றென குழப்பிக் கொள்ளுதல் நடக்கிறது.
வாழ்க்கை சதா தனது நிகழ்காலத்திலிருக்கிறது. ஒவ்வொருவனும் தன்னுடைய நிகழ்காலத்தை, வாழ்வின் 'காலமாக கிரகிக்கும் போது, 'கருத்து' என்னும் கீழ்மையும், வாழ்வின் காலத்தை தன்னுடைய நிகழ்காலமாக கிரகிக்கும்போது 'பார்வை என்னும் உயிர்ப்பையும் பெறுகிறான். இவ்வகை புத்துயிர்ப்பை, சகமனிதனுக்கு பரிமாறுகையில், கடிகாரம் காலண்டர்களினால் பங்கப்படாமல், கவிதை புதுசாகவே இருக்கிறது.
இந்தப் புத்துணர்ச்சியும் பார்வையும் ஒன்றென முடியாதவை. புத்துணர்ச்சி அனுபவமாகவும், பார்வை அறிவாகவும் பரவுகிறது. பார்வையும் கவிதையும் ஒன்றே. எனவே பிரிக்க முடியாதவை. பார்வை அறிவாகவும், கவிதை மனவெளி அனுபவமாகவும் பரவுகிறது. கவிதையும், அனுபவமும் பிரிக்க முடியாதவை. கவிதை யாவருக்குமான ஒன்றாகவும், அனுபவம் ஒவ்வொருக்கென ஆகவும் இருக்கிறது. அனுபவமும் உலகமும் பிரிக்க முடியாதவை. உலகை பற்றிய 'அணுகல் முறை' - கருத்தாகவும், உலகின் 'அணுகல் முறை பார்வையாகவும் ஜனி கிறது. உலகின் அணுகல்முறை, அதன் கரைகளில் வந்துமோதும், மேவி தாண்டி நிரம்பும் வாழ்வின் அலைகளை எதிர்கொள்கிறது. பார்வை என்பது உலகின் அணுகுமுறையாக மட்டும் இருப்பதால்தான், பல்வேறு காலங்களில், பல்வேறு வகைப்பட்ட, இன, மத கலாச்சாரங்களில் வாழ்ந்த கவிஞர்களின் கவிதைகள் ஒரே குண முடையவனாக உள்ளன.
ஒரு கலையும், இலக்கியமும் உலகை மேம்படுத்தாமல் தவறு செய்யும் போது, அது கண்டிக்கப்பட வேண்டிய ஒன்றாக பரவலாகப் பேசப்படுகிறது. ஒவ்வொருத்தனும் ஒரு 'ஒற்றையாக தொடர்ந்து கொண்டிருக்கும்வரை, உலக மேம்பாடு வெறும் கனவு தான். தனிமனிதனை மனிதனாக குணாம்சப்படுத்தும் பார்வையும், அவனை ஒற்றையனாகவே தொடரச் செய்யும் 'கருத்தும்' வித்தியாசப்படுத்தி அவதானிக்க வேண்டியவை.
பார்வையின் வரவும், அதன் தொடர் விளைவுகளுமே கவிஞனின் அக்கறையே அன்றி அதன் மூலம் அவனுக்கு முக்கியத்துவம் இல்லாமல் போகிறது. இந்த இடத்தில் ஒரு தரிசியும், ஒரு கவிஞனும் கிளை பிரிகிறார்கள். எந்த ஒரு கவிதையும், எந்த ஒரு சிறு பார்வையும் இல்லாமல் ஜனிக்க முடியாது. மோசமான கவிதைகளில் இருக்கின்ற பார்வை என்ற அம்சம் வெற்றுப் பிரதி பலிப்புதானே அன்றி சுய அர்த்தம் உடையதாக இருப்பதில்லை. கற்பிதங்கள் வாசகனை மற்ற சமுதாயத்திலிருந்து துண்டிக்கப்பட்ட ஒரு ஒற்றையனாக வளர்கின்றன. பார்வையோ ஒற்றையனாக இருப்பவனை மனித சாராம்சத்தோடு நேரிடையாகவே எந்தவித அறிவின், விவாதத்தின், தத்துவத்தின், உதவியற்றுக் கரைத்து விடுகின்றன. ஒரு கவிதையில் இருக்கும் பார்வையினால் தீண்டப் பட்டு ஒருவன் அப்பொழுதிலிருந்து ஒற்றையனாக இல்லாமல் மனிதனாகச் செயல்படத் துவங்குகிறான்.
***
தேவதச்சன் தமிழ் விக்கி பக்கம்
***
0 comments:
Post a Comment