கவிதைக் கலை - ஒரு பின்னோக்கிய பார்வை - எஸ்ரா பவுண்ட்

 அறிமுகம்

நவீனத்துவ யுகத்தின் இலக்கிய முகமாக கருதப்படும் எஸ்ரா பவுண்ட் கவிஞர், விமர்சகர், மொழிபெயர்ப்பாளர் ஆகிய முகங்களைக் கொண்டவர். அமெரிக்காவின் இடாகோ மாகாணத்தில் 1885 இல் பிறந்தார். பென்சில்வேனியாவில் வளர்ந்த அவர் ஹாமில்டன் கல்லூரியிலும் அதன்பிறகு பென்சில்வேனியா பல்கலையிலும் பயின்றார். வில்லியம்ஸ் கார்லோஸ் வில்லியம்ஸ், ஹில்டா டூலிட்டில் (H.D.) ஆகியோரை அவர் அறிமுகம் செய்துகொண்டது அங்குதான். எம்.ஏ. பட்டம் பெற்றதும் ஒரு ஐரோப்பிய பயணம் மேற்கொண்டார். பின்னர் அமெரிக்க திரும்பி இண்டியானாவில் உள்ள வபாஷ் கல்லூரியில் சிறிது காலம் ஆசிரியாராக பணியாற்றினார். பின்பு லண்டனுக்கே குடிபெயர்ந்த பவுண்ட் அங்கு பனிரெண்டு ஆண்டுகள் வாழ்ந்து பல எழுத்தாளர்களுடன் தொடர்பிலிருந்தார். அங்கு அவருக்கு W.B. யீட்ஸ், ஃபோர்ட் மெடாக்ஸ் ஃபோர்ட் போன்ற எழுத்தாளர்களுடனும் ஓவியர்கள், இசைக்கலைஞர்கள், தத்துவவாதிகள் என பல்வேறு ஆளுமைகளுடன் தொடர்பு ஏற்பட்டது. 1912 ஆம் ஆண்டுவாக்கில் H.D., ரிச்சர்ட் அட்லிங்டன், F.S. ஃபிளிண்ட் ஆகியோருடன் இணைந்து பவுண்ட் படிமக் கவிதை இயக்கம் (imagist) என்ற தங்கள் குழுவை உருவாக்கிவிட்டிருந்தார். அவர்களின் கொள்கைகளே “A Retrospect” என்ற பின்வரும் கட்டுரையின் முதல் மூன்று புள்ளிகளில் சுருக்கமாக வரையறுக்கப்ப்டுள்ளது.

பவுண்ட் 1921 இல் பாரிஸுக்கும் அங்கிருந்து இத்தாலிக்கும் குடிபெயர்ந்தார். இத்தாலியில் அவர் வாழ்ந்த காலத்தில் முசோலினியால் பெரிதும் ஈரக்கப்பட்டு, 1941 முதல் 1943 வரை அவர் ஆற்றிய வானொலி உரைகளில் சர்வாதிகாரிக்கு ஆதரவாக பேசியிருக்கிறார். இதன் காரணமாக 1943ஆம் ஆண்டு தேசத்துரோக குற்றத்துக்காக அமெரிக்காவால் குற்றஞ்சாட்டப்பட்டார். விசாரணையின் போது அவர் போதிய மனநலத்துடன் இல்லாதது கண்டறியப்பட்டு வாஷிங்டன் D.C. இல் உள்ள புனித எலிசபெத் மருத்துவமனையிலேயே சுமார் பனிரெண்டு ஆண்டுகள் வரை சிறை வைக்கப்பட்டிருந்தார். 1958 இல் விடுதலை செய்யப்பட்ட அவர் தன் இறுதி ஆண்டுகளை இத்தாலியில் கழித்தார்.

ஓர் இலக்கிய விமர்சகராகவும் முன்னோடியாகவும் பவுண்ட் தன் சம்காலத்தவர்கள் மீது பெரும் செல்வாக்கை செலுத்தியுள்ளார். W.B.யீட்ஸ், ராபர்ட் ஃப்ராஸ்ட் இருவருமே அவரிடமிருந்து பதிப்பு ரீதியிலான அறிவுரைகளை ஏற்றுக்கொண்டுள்ளனர். T.S. எலியட்டின் பெரும் ரசிகரான அவர் Poetry இதழின் ஆசிரியர் ஹாரியட் மன்றோவை சமாதானப்படுத்தி எலியட்டின் “The Love Song of J. Alfred Prufrock.” கவிதையை வெளியிடச் செய்தார். எலியட்டின் பாழ்நிலம் (Waste Land) கவிதையின் வரைவு வடிவிலும் பவுண்ட் பல திருத்தங்கள் செய்துள்ளார். பவுண்டின் சொந்த கவிதைகள் அவர் அறிந்த சீன, ஜப்பானிய, இத்தாலிய மொழிகளின் தாக்கம் பெற்றிருந்தது.

கவிதைகள் மீதான எஸ்ரா பவுண்டின் கட்டுரைகள் “A Retrospect” என்ற பெயரில் ஒரு கட்டுரைத் தொகுப்பாக 1918இல் வெளியானது. 1913 இல் Poetry இதழில் வெளியான “A few Dont’s” என்ற பகுதி மட்டும் இங்கு மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. நவீன கவிதையின் செல்திசையை தீர்மானிப்பதில் பலவகையிலும் பெரும் பங்கு வகித்ததாகக் கருதப்படும் இக்கட்டுரை இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கவிதை எனும் கலை வடிவம் அடைந்த மாற்றங்களை கற்பதற்கும் அவற்றை புரிந்து கொள்ளவும் உதவக்கூடியது. வயல் செழித்து வளர களைகளை முதலில் கண்டறிந்து நீக்க தெரிந்திருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துபவராக பவுண்ட் இருக்கிறார். எக்கலையில் ஆனாலும் அதுவரை நிகழ்ந்துள்ளவற்றை கற்பதும் தொடர் ஈடுபாடுமே அதில் தேர்ச்சி அடைவதற்கான வழி என்பதை முன்வைக்கும் பவுண்ட்

தன் கட்டுரை ஒன்றில் இவ்வாறு குறிப்பிடுகிறார், “எந்தவொரு கலையிலும் தேர்ச்சி பெறுவதென்பது வாழ்நாள் உழைப்பைக் கோருவதாகும்.”

கவிதைக் கலை: ஒரு பின்னோக்கிய பார்வை

கவிதையில் தற்போது நிகழ்ந்து வரும் புதிய போக்கு குறித்து நிறையவே எழுதப்படுகிறது. நான் அவற்றின் மையக் கருத்துகளை சுருக்கமாக தொகுத்து விவாதத்தை முன்னெடுக்கவும், பின்னோக்கிப் பார்த்து மறுபரிசீலனை செய்யவும் இக்கட்டுரையின் வழி முயல்கிறேன்.

1912ஆம் ஆண்டின் கோடைகால துவக்கத்தில் ஹில்டா டூலிட்டில் (H.D.), ரிச்சர்ட் அட்லிங்கடன், நான் மூவரும் பின்வரும் மூன்று கொள்கைகளில் ஒத்துப்போவதாக முடிவு செய்தோம்:

1. அகவயம், புறவயம் எப்படியாக இருந்தாலும் ‘பேசுபொருளை’ நேரடியாக விவரிப்பது.

2. வெளிப்பாட்டில் பங்களிப்பாற்றாத எந்தவொரு சொல்லையும் பயன்படுத்தாமல் இருப்பது.

3. ஓசை நயம் குறித்து: தாளக்கருவியின் கணக்குகளுக்கு ஏற்றவாறு அல்லாமல் மொழியில் இயல்பாக பயின்றுவரும் இசைமைக்கேற்ப சொற்களை அமைப்பது.

எங்கள் ரசனைகளும் விருப்பங்களும் பல்வேறு விஷயங்களில் முரண்பட்டாலும் இந்த மூன்று நிலைப்பாடுகளில் ஒத்துப்போனது. எனவே இதுவரை உருவாகி வந்த நிறைய பிரெஞ்சு “பள்ளிகளை” போல எங்களுக்கும் ஒரு குழுப் பெயர் வைத்துக் கொள்வதற்கான உரிமை வந்துவிட்டதாக நினைத்தோம்.

பலரும், அவர்களின் தகுதி என்னவாக இருந்தாலும், மேற்சொன்ன இரண்டாவது விதியை அவர்கள் ஏற்றுக் கொள்வதற்கான எந்தத் தடயமும் தென்படாவிட்டாலும் தாங்கள் இப்பள்ளியில் “இணைவதாகவும்” அல்லது “பின்பற்றுவதாகவும்” அறிவித்துக் கொண்டனர். உண்மையில் சுதந்திர செய்யுள் வடிவமான புதுக்கவிதையும் தனக்கு முன்பிருந்த தளர்வான வடிவங்களைப் போல தேவையற்ற சொற்பெருக்குகளை உற்பத்தி செய்வதாக மாறிவிட்டது. மேலும் அது தனக்கே உரிய குறைகளையும் கொண்டுள்ளது. பல சமயங்களில் கவிதைகளின் மொழிநடையும் வாக்கிய அமைப்பும் நம் முன்னோர்கள் அளவுக்கே மோசமாக உள்ளது. அவர்களுக்காவது தாளக் கணக்குகளில் பொருந்திவரும் பொருட்டு அவ்வாறு சொற்களை இட்டு நிரப்ப வேண்டிய குறைந்தபட்ச காரணம் இருந்தது, நம்மிடம் அதுவுமில்லை. இப்புதிய முறையை பின்பற்றுபவர்கள் உருவாக்கும் கவிதைகள் ஓசை நயத்துடன் இருக்கிறதா இல்லையா என்பதை வாசகரின் தீர்மானத்திற்கே விட்டுவிட வேண்டும். சில நேரங்களில் புதுக் கவிதைகளிலும் ஸ்வின்பர்னை (Swinburne) போலி செய்பவர்களை போல சலிப்பூட்டும், தேய்வழக்கான யாப்பமைப்பை காண்கிறேன். இன்னும் சில சமயம் கவிஞர்கள் எந்தவொரு இசை வடிவத்தையும் பின்பற்றாதது போலவும் தோன்றுகிறது. இருப்பினும் இந்த வயல் உழப்படுவது ஒட்டுமொத்தமாக நன்மைக்கே என்று எடுத்துக்கொள்ள வேண்டும். ஒருவேளை, இப்புதிய வழிமுறையில் சில நல்ல கவிதைகள் பிறக்கக் கூடும், அவ்வாறு நிகழ்ந்தால் மட்டுமே இம்மாற்றம் நியாயப்படுத்தப் படுகிறது.

விமர்சனம் என்பது அர்த்தங்களை சுருக்குவதோ அல்லது மீறப்படக்கூடாதவற்றின் தொகுப்போ அல்ல. அது வாசிப்பை தொடங்குவதற்கான நிலைப்புள்ளிகளை வழங்குகிறது. ஒரு மந்தமான வாசகரை விமர்சன செயல்பாடு என்பது விழிப்புநிலைக்கு கொண்டு வரக்கூடும். அத்தகைய நன்மையும் பெரும்பாலும் விமர்சனத்தின் சிதறிய சொற்றொடர்களிலிருந்து கிடைப்பதற்கே வாய்ப்பதிகம்; அல்லது மூத்த கலைஞர் ஒருவர் அனுபவத்தில் தான் பெற்ற எச்சரிக்கைகளை இளம் படைப்பாளியிடம் அவர் பின்பற்ற வேண்டிய நடைமுறை விதிகளாக பகிர்ந்து கொள்வாரெனில் அதை விமர்சனத்தின் பங்களிப்பாகக் கொள்ளலாம்.

படிமக் கவிதை இயக்கம் (imagisme) தொடர்பான முதல் கருத்துகள் வெளியான போதே அதன் நடைமுறை செயலாக்கம் குறித்த சில அபிப்பிராயங்களை நான் சொல்லியிருந்தேன். “Imagiste” என்ற சொல்லின் முதல் பயன்பாடு T.E. Hulme அவர்களின் ஐந்து கவிதைகளுக்கு நான் எழுதிய விமர்சனகுறிப்பில் இடம்பெற்றது.  1912 ஆம் ஆண்டின் இலையுதிர்காலத்தில் வெளியான என் “Ripostes” எனும் நூலின் இறுதியில் அக்குறிப்பு உள்ளது. மார்ச் 1913-இல் 'Poetry’ இதழில் வெளியான என் அறிவுறுத்தல் குறிப்புகளை இங்கு மீண்டும் அளிக்கிறேன்.

செய்யக்கூடாதவைகள்

“படிமம்” என்பது அறிவு மற்றும் உணர்வுசார்ந்த ஒரு உணர்வுத்திரளை (complex) அதன் அத்தனை சிக்கல்களுடன் கணநேரத்தில் காட்சிப்படுத்துவது. “உணர்வுத்திரள் (complex)” எனும் சொல்லை நான் ஹார்ட் போன்ற புதிய உளவியலாளர்கள் பயன்படுத்தும் அதே கலைச்சொல் ரீதியிலான நோக்கில்தான் பயன்படுத்துகிறேன், நாம் அதை பயன்படுத்தும் விதத்தில் சில மாறுபாடுகள் இருந்தாலும்.

அத்தகையதோர் சிக்கலான “உணர்வுத்திரள்” ஒரு படிமத்தின் வாயிலாக உடனடியாக நம்மை வந்து அடைவதாலேயே சட்டென நிகழும் ஒருவகை விடுதலையுணர்வை அடைகிறோம்; காலவெளியின் பிடியிலிருந்து விடுபட்ட விடுதலையுணர்வு, திடீரென நாம் நம்மைவிட பெரிதாக வளர்ந்துவிட்ட உணர்வு. மகத்தான கலைப்படைப்புகளுடன் மட்டுமே நாம் அத்தகைய உணர்வை அடைய முடியும்.

அதிகப்படியான படைப்புகளை உருவாக்குவதை விட தன் வாழ்நாளில் அத்தகைய ஒரேயொரு சிறந்த படிமத்தை சென்றடைவதே மேலானது.

இருப்பினும் இவையெல்லாம் விவாத்திற்குரியது என்று சிலர் கருதலாம். புதிதாக கவிதை எழுத வருபவர்களுக்கு அவர்கள் செய்யக் கூடாதவைகளை பட்டியலிடுவதே நாம் உடனடியாக செய்யவேண்டியது. அதேசமயம் இவை மீறப்படவேக் கூடாத தீர்க்கமான விதிகள் என்கிற அர்த்தத்தில் இவற்றை நான் பட்டியலிடவில்லை.

முதலில் இந்த மூன்று முன்மொழிவுகளையும் (பேசுபொருளை நேரடியாகக் கையாள்வது, சொற்சிக்கனம், சொற்களின் இசைமைத் தொடர்ச்சி) நிறுவப்பட்ட இறுதிக் கோட்பாடுகளாக கொள்ள வேண்டாம் - அந்தவகையில் எதையுமே மாறா கோட்பாடாகக் கொள்ள வேண்டாம் - இருப்பினும் நீண்ட சிந்தனையின் விளைவாக உருவான கோட்பாடுகள் என்ற வகையில், அது இன்னொருவரின் சிந்தனையாக இருந்தாலும், அதற்கு மதிப்பளித்து பரிசீலிக்க வேண்டுகிறேன்.

வாழ்நாளில் எந்தவொரு குறிப்பிடத்தக்க படைப்பையும் எழுதியிருக்காத நபரின் விமர்சனங்களை பொருட்படுத்த வேண்டாம். கிரேக்க - ரோமானிய இலக்கணவாதிகள் முன்வைத்த கொள்கைகளுக்கும் நிதர்சனத்தில் கிரேக்க கவிஞர்கள், நாடகாசிரியர்களின் எழுத்திற்கும் உள்ள வேறுபாட்டை நினைத்துப் பாருங்கள் - பாடல்களின் சந்தங்களை விளக்க அவர்கள் எந்தளவுக்கு இட்டுக்கட்டி எழுதியிருப்பார்கள்.

மொழி

தேவையற்ற சொற்களை பயன்படுத்த வேண்டாம். புதிய அர்த்தங்கள் அளிக்காத அடைமொழிகள் (adjectives) யாவற்றையும் தவிர்த்து விடவும்.

“மங்கலான அமைதியின் நிலங்கள்.” இதுபோன்ற வாக்கியங்களை எழுத வேண்டாம். இது படிமத்தை வலுவிழக்கச் செய்யும். இது அருவமான ஒன்றை திட்டவட்டமான ஒன்றுடன் இணைத்து குழப்புகிறது. அனைத்து சந்தர்ப்பங்களிலும் இயற்கையான ஒரு பொருளே குறியீடாக அமைய முடியும் என்பதை உணராத எழுத்தாளர்களிடமிருந்தே இதுபோன்ற வரிகள் பிறக்கின்றன.

அருவமாக்குவதை அஞ்சுங்கள். ஏற்கனவே நல்ல உரைநடையில் சொல்லப்பட்டதை சுமாரான கவிதை மொழியில் சொல்லிக்கொண்டு இருக்கத் தேவையில்லை. நல்ல உரைநடை என்ற சவாலான கலை வடிவத்தின் சிரமங்களை தவிர்ப்பதற்காக நீங்கள் வெறுமனே எழுதியதையெல்லாம் வெட்டிப் போட்டு கவிதை என்று சொல்ல வேண்டாம். புத்திசாலி வாசகர் எவரும் இதைக்கண்டு ஏமாறப் போவதில்லை.

இன்று ஒரு நிபுணர் எதைப் பார்த்து சலிப்படைகிறாரோ நாளை பொதுமக்களும் அதைப் பார்த்து சலிப்படைவார்கள்.

இசைக்கலையை விட கவிதையெனும் கலை வடிவம் எளிமையானது என்று கற்பனை செய்ய வேண்டாம். அல்லது குறைந்த அளவு உழைப்பைக் கொண்டே இந்தத் துறையின் நிபுணர்களை திருப்தியடைய செய்துவிடலாம் என்று நம்புவதும் மடைமை. அதற்கு நீங்கள் குறைந்தபட்சம் ஒரு சராசரி பியானோ ஆசிரியர் எந்தளவு முயற்சி எடுத்திருப்பாரோ அந்தளவு முயற்சியாவது எடுத்திருக்க வேண்டும்.

மேதைமை மிக்க கலைஞர்கள் எத்தனைபேர் முடியுமோ அத்தனைபேர் மீதும் ஈர்ப்பு கொள்ளுங்கள், அவர்களால் பாதிப்படையுங்கள். அதேசமயம் அந்த நன்றியை வெளிப்படையாக அறிவிக்கும் கண்ணியத்தைக் கொண்டிருங்கள், அல்லது நாகரிகத்துடன் மறைக்க முயலுங்கள்.

“பாதிப்படைவது” என்றால் நீங்கள் ஆராதிக்கும் ஒருசில கவிஞர்களின் குறிப்பிட்ட சொற்பிரயோகங்களை அப்படியே உங்கள் எழுத்தில் இட்டு நிரப்புவது அல்ல.

ஒன்று அலங்காரமே வேண்டாம் அல்லது நல்ல அலங்காரத்தை பயன்படுத்துங்கள்.

தாளமும் ஒத்திசையும் (Rhythm and Rhyme)

நீங்கள் அறிந்தவற்றிலேயே நல்ல ஏற்ற இறக்கங்களுடன் கூடிய இசைத்தன்மை வாய்ந்த கவிதை ஒன்றை மனதில் நிரப்பிக் கொள்ளுங்கள், அயல்மொழியாக இருந்துவிட்டால் நல்லது [இதைத் தாளத்துக்காகச் சொல்கிறேன், உங்கள் சொந்த எழுத்துக்கான சொற்களை நீங்கள் தாய்மொழியில்தான் கண்டடைய வேண்டும்], ஏனெனில் சொற்களின் பொருள் தெரியாததால் தாளத்தின் மீதான கவனம் சிதற வாய்ப்புகள் குறைவாக இருக்கும். உதாரணமாக ஹெப்ரிடியன் நாட்டுப்புறப் பாடல்கள், தாந்தேவின் கவிதைகள், ஷேக்ஸ்பியர்  வரிகள் (உங்களால் அச்சொற்கள் மீது கவனம் கொள்ளாமல் இருக்க முடிந்தால்) போன்றவை. உணர்ச்சிகளை நீக்கிவிட்டு வரிகளை தனித் தனி ஒலி அலகுகளாக மட்டும் துண்டுபடுத்திப் பாருங்கள் - நீண்ட குறுகிய அசைகள், அழுத்தம் மிக்கவை இல்லாதவை, உயிரெழுத்துக்கள் மெய்யெழுத்துக்கள் போன்று வகைப்படுத்துங்கள்.

கவிதை இசையை சார்ந்திருக்க வேண்டுமென்று கட்டாயம் எதுவுமில்லை. ஆனால் அவ்வாறு அது இசையை சார்ந்திருந்தால் அந்த இசை கவிதை நிபுணரை களிப்படைய செய்யும் வகையில் இருக்க வேண்டும்.

ஓர் இசைக்கலைஞர் சுருதி சேர்க்கையையும், பல்குரல் இசை நுட்பங்களையும் (counterpoint), தன் கலையின் பிற நுணுக்கங்களையும் எப்படி அக்குவேறு ஆணிவேறாக அறிந்திருக்க வேண்டுமோ, அதேபோல ஒரு தொடக்கநிலை கவிஞனும் உயிரொலி எதுகை, மோனை நயம், உடனடி மற்றும் தள்ளிவரும் ஒத்திசை (immediate and delayed rhyme), எளிய பன்முக ஓசை நயங்கள் (simple and polyphonic) ஆகியவற்றை முழுமையாக அறிந்திருக்க வேண்டும்.

ஒரு கலைஞனுக்குத் தன் படைப்பில் இவற்றுக்கான தேவை எப்போதாவது ஏற்பட்டாலும் கூட, இந்த நுட்பங்களை அல்லது இதில் ஏதேனும் ஒன்றை ஆழமாகக் கற்றுக்கொள்ள எத்தனை அதிகமான காலம் செலவிட்டாலும் அது வீணல்ல.

ஒரு விஷயம் உரைநடையில் சொல்வதற்கு ரொம்ப சுமாராக இருக்கும் என்பதாலேயே அதை கவிதையில் எப்படியாவது வெற்றியடைய செய்துவிடலாம் என்று கற்பனை செய்ய வேண்டாம்.

விசித்திரமான கருத்துக்களை உதிர்ப்பவராக இருக்காதீர் - அந்த வேலையை சின்னச்சின்ன எளிய தத்துவார்த்த கட்டுரைகளை எழுதுபவர்களிடமே விட்டுவிடுவோம். அதிகமும் விவரணைகளை பொழிய வேண்டாம்; ஓர் ஓவியர் உங்களை விட ஒரு நிலக்காட்சியை நன்றாக சித்தரித்துவிட முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள், அவ்வாறு வரைவதற்கு அதுகுறித்து அவர் அதிகம் அறிந்திருக்கவும் வேண்டும்.

ஷேக்ஸ்பியர் “செம்மண்நிற ஆடையை போர்த்தியபடி எழும் விடியல்” என்று சொல்லும்போது, அவர் ஓவியர் கடத்த முடியாத ஏதோவொன்ற கடத்தி விடுகிறார். இந்த வரியில் ‘விவரணை’ என்று நாம் குறிப்பிடும்படியான எதுவும் இல்லை, அவர் அதை அப்படியே நிகழ்த்திக் காட்டுகிறார்.

நீங்கள் புதிய சோப்பு ஒன்றை விளம்பரப்படுத்தும் விற்பனை பிரதிநிதியைப் போன்று செயல்படுவதை விடவும், ஒரு விஞ்ஞானியின் வழியை கடைப்பிடிப்பது குறித்து யோசித்துப் பாருங்கள்.

விஞ்ஞானி தான் எதையாவது கண்டுபிடிக்கும் வரை தன்னை மகத்தான அறிவியலாளராக உலகமே கொண்டாட வேண்டும் என எதிர்பார்ப்பதில்லை. இதுவரை ஏற்கனவே என்னென்ன கண்டறியப்பட்டுள்ளதோ அவற்றைக் கற்பதிலிருந்தே அவர் தொடங்குகிறார், அந்தப் புள்ளிலிருந்தே அவர் முன்னகர்கிறார். மாறாக தன்னைக் குறித்த மிகை மதிப்பீடுகளை உருவாக்கிக் கொண்டு அங்கிருந்து வேலையைத் தொடங்குவதில்லை. வகுப்பில் புதிய மாணவரான அவர், தான் கண்டதையும் பள்ளிப் பரிசோதனை வகையிலான முடிவுகளுக்கெல்லாம் சக நண்பர்கள் கைத்தட்டி பாராட்ட வேண்டும் என எதிர்பார்ப்பதில்லை. துரதிர்ஷ்டவசமாக கவிதை உலகுக்குள் நுழையும் புதிய கவிஞர்களுக்கு அவ்வாறு திட்டவட்டமாக அடையாளம் காணக்கூடிய வகுப்பறை எதுவும் இருப்பதில்லை. அவர்கள் அடையாளம் காணமுடியாதபடி அங்கொன்றும் இங்கொன்றுமாய் சிதறிக் கிடக்கிறார்கள். பிறகு “பொதுமக்கள் கவிதையை கண்டுகொள்ளாமல் இருப்பது” குறித்து ஏதேனும் வியப்பிருக்கிறதா என்ன?

உங்கள் சரக்கை ஈரசைச் சீர்களாக வெட்டிக் கொண்டே இருக்காதீர். ஒவ்வொரு வரியையும் இறுதியில் மொத்தமாக முடித்துவைத்துவிட்டு அடுத்தடுத்த வரியில் புதிதாக ஒன்றை எழுச்சியுடன் தொடங்க வேண்டாம்.

நிச்சயமாக ஒரு நீண்ட இடைவெளி தேவைப்படாத பட்சத்தில் முந்தைய வரியின் தாள உச்சம் அடுத்த வரியின் தொடக்கத்தில் பற்றிக் கொள்ள அனுமதியுங்கள்.

சுருக்கமாக சொல்வதானால் ஒரு இசைக்கலைஞனாக நடந்துகொள்ளுங்கள், நல்ல இசைக்கலைஞனாக, அதுவும் குறிப்பாக உங்கள் கலையில் நீங்கள் இசைக்கு சமானமான ஒன்றை முயற்சி செய்யும் போது. இரண்டுக்கும் அடிப்படையாக இருப்பது ஒரேவிதிகள்தான், நீங்கள் கட்டுப்படவேண்டியது வேறு எதற்குமல்ல.

நீங்கள் உருவாக்கும் தாளக் கட்டமைப்பு இயல்பாகவே சொற்களின் வடிவத்தை, அதன் இயல்பான உச்சரிப்பை, அதன் அர்த்தத்தை சிதைக்காத வண்ணம் இருக்க வேண்டும். தொடக்கக் காலத்தில் இவற்றையெல்லாம் பாதிக்கும் அளவுக்கு உறுதியான தாளக் கட்டமைப்பை நீங்கள் அடைவதற்கான சாத்தியக்கூறே குறைவுதான். இருப்பினும் வரிகளுக்கு இடையே வரும் இடைநிறுத்தங்களின் போதும், வரி இறுதிகளிலும் தவறான இடத்தில் நிறுத்தி நீங்கள் பிழைசெய்துவிடக் கூடும்.

இசைக்குழுவின் சுருதி மற்றும் ஒலி அளவுகளை உள்வாங்கி அதற்கேற்றவாறு இசைக்கலைஞரால் செயல்பட முடியும். உங்களால் அப்படி செய்ய முடியாது. கவிதையில் ‘ஒத்திசைவு’ (harmony) என்ற பதம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது; இங்கு வெவ்வேறு சுருதியில் ஒரே நேரத்தில் எழும் ஒலிகளை அது குறிக்கிறது. இருப்பினும் மிகச்சிறந்த கவிதை வரிகளின் போது அதன் ஒலி கேட்பவரிடமிருந்து எளிதில் மறைந்து விடுவதில்லை; ஏறக்குறைய ஓர் இசைக்கருவியின் அடிநாதம் (Organ-base) போல அது கேட்பவர்களின் செவியில் எஞ்சிவிடுகிறது.

ஒரு கவிதைப்பாடல் (rhyme) கேட்பவரை மகிழ்வூட்ட வேண்டுமானால் அதில் கொஞ்சமேனும் புதுமை அம்சம் இருக்க வேண்டும். அதற்காக அது விசித்திரமானதாகவோ வெறுமனே ஆர்வத்தைத் தூண்டும் வகையிலோ இருக்க வேண்டுமென்பதில்லை. அவ்வடிவம் பயன்படுத்தப்படும் போது அது நேர்த்தியாக கையாளப்பட்டிருக்க வேண்டும்.  

உங்கள் கவிதையில் வாசகரின் கற்பனையைத் தூண்டும் விதத்தில் அமைந்த பகுதிகள் எதுவும் பிறமொழிக்கு மொழிபெயர்க்கப்படுகையில் இழப்படைவதில்லை; அதேசமயம் செவிக்கு இனிமையாக அமைந்த பகுதிகள் மூல மொழியில் வாசிப்பவரை மட்டுமே சென்றடைய முடியும்.

மில்டனின் சொற்பெருக்குடன் தாந்தேயின் வெளிப்பாட்டில் உள்ள துல்லியத்தன்மையை ஒப்பிட்டுப் பாருங்கள். சலிப்பு தட்டாத வேர்ட்ஸ்வொர்த் கவிதைகளை எவ்வளவு முடியுமோ அவ்வளவும் வாசியுங்கள்.

நீங்கள் விஷயத்தின் சாராம்சத்தை மட்டும் அறிய விரும்பினால் சாஃபோ (Sappho), காடுல்லஸ் (Catullus), வில்லான் (Villon) ஆகியோரை நாடுங்கள். ஹைன் (Heine) தனது சிறந்த மனநிலையில் இருக்கும்போதும், கௌட்டியரை (Gautier) அவர் ரொம்பவும் இறுக்கமாக இல்லாத போதும் வாசிப்பது நல்லது; அல்லது இது எதுவுமே ஒத்துவராவிட்டால் நிதானமான ஜெஃப்ரி சாசரைப் (Chaucer) படியுங்கள். நல்ல உரைநடை உங்களுக்கு எந்தத் தீங்கையும் செய்துவிடாது, மேலும் அதை எழுத முயற்சிப்பது சிறந்த பயிற்சியாகவும் அமையும்.

அதேபோல மொழிபெயர்ப்பும் நல்ல பயிற்சிதான். உங்கள் மூலப்பிரதி வெளிப்படையான அர்த்தங்கள் இன்றி ஒருவகை தள்ளாட்டத்துடன் இருப்பதாக வைத்துக் கொள்வோம். நீங்கள் மொழிபெயர்க்கவிருக்கும் கவிதையும் நீங்களே புரிந்துகொள்ளாத அந்த தெளிவின்மையுடன் இருக்க முடியாது.

நீங்கள் யாப்பில் எழுத விரும்பினால், அதற்காக சொல்லவரும் விஷயத்தை முதலில் எழுதிவிட்டு, பின்னர் மீதமுள்ள இடைவெளிகளில் எல்லாம் சகதியை இட்டுநிரப்ப வேண்டாம்.

ஒரு புலன்வழி அடையும் பார்வையை இன்னொன்றின் வாயிலாக விளக்க முற்பட்டு குழப்பி வைக்க வேண்டாம். பெரும்பாலும் சரியான சொல்லை கண்டறிய இயலாததன் சோம்பேறித்தனத்தாலேயே இது நடக்கிறது. இந்த விதிக்கு மட்டும் சில விதிவிலக்குகள் இருக்கலாம்.

ஆதாரமான முதல் மூன்று எளிய பரித்துரைகளை மனதில் கொண்டாலே இதுவரை தரமானது என்றும் உன்னதமானது என்றும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள பத்துக்கு ஒன்பது கவிதைகளை நீக்கிவிடும்; மேலும் அதுபோன்று தொடர்ந்து உற்பத்தி செய்யும் குற்றத்தை இழைப்பதிலிருந்து உங்களைத் தடுக்கும்.

". . . ஆனால் முதலில் ஒரு கவிஞராக இருக்க வேண்டும்," என்று MM. டுஹாமெலும் (Duhamel) வில்ட்ராக்கும் (Vildrac) தங்கள் சிறிய புத்தகமான “கவிதைத் நுட்பங்களைப் பற்றிய குறிப்புகள்” என்ற நூலின் முடிவில் கூறியுள்ளனர்.

1913 மார்ச் முதல், ஃபோர்ட் மாடக்ஸ் ஹியூஃபர் (Ford Madox Hueffer), வேர்ட்ஸ்வொர்த் (Wordsworth) எந்தளவு சாதாரண அல்லது எளிய வார்த்தைகளின் மீது தீவிரமாக இருந்தார் என்று குறிப்பிடுகிறார்; அவர் எப்போதும் 'மிகச்சரியான வார்த்தைக்காக' (le mot juste) தேடுவதையோ காத்திருப்பதையோ சிந்திக்கவே இல்லை என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜான் பட்லர் யீட்ஸ் (John Butler Yeats) வேர்ட்ஸ்வொர்த்தையும் விக்டோரியர்களையும் மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்; அவர் தன் மகனுக்கு எழுதிய கடிதங்களில் உள்ள அவரது விமர்சனங்கள் தற்போது அச்சாகி வெளிவந்துள்ளன.

கலைக் குறித்து எழுதுவதை நான் விரும்பியதில்லை, அந்தத் தலைப்பில் நான் எழுதிய முதல் கட்டுரையே (அல்லது குறைந்தபட்சம் என்னுடைய முதல்கட்டுரை என நான் நினைக்கிறேன்) அதற்கு எதிரான ஒரு மறுப்பாகவே ஆகிவிட்டது.

***

தமிழில்: டி.ஏ. பாரி

Share:

விரல் சன்னல் - சுனில் கிருஷ்ணன்

கவி என்பதொரு  நிலை என்றே நம்புகிறேன். அந்நிலையிலிருந்து வெளிப்படுபவையே கவிதைகள். எல்லோருக்கும் அவரவர் வாழ்வில் ஓருமுறையேனும் அந்த நிலை அருளப்பட்டிருக்கும். அந்நிலையை தொட்டுவிட வேண்டும் எனும் அவாவும் இருக்கும். கவிஞர் பிற எவரையும் விட அந்நிலையை தனது இல்லமாக இயல்பாக்கிக்கொண்டவர் என்பதாலேயே பிறரிலிருந்து வேறுபட்டவர்.  அப்படி வெளிப்படும் கவிதை வாசகரையும் ஒரு கணம் அந்த நிலைக்கு இட்டுச்செல்கிறது. உலகின் பாரபட்சங்கள் பொருளிழக்கும் ஒரு உயரத்திலிருந்து உலகை காட்டுகிறது. மேற்சொன்ன புரிதலை முற்றுண்மையாக ஏற்றுக்கொண்டால் நவீன கவிதையின் வெவ்வேறு சாத்தியங்களை மறுப்பதாகும். நவீன கவிதை ஒரு வகையில் வாழ்தளத்தின் நெருக்கடிகளுக்கு இடையே கவிநிலையை கொணர முயல்கிறது என்று தோன்றுகிறது. கவிநிலை என்பது ஒருவகை விழிப்பு. விழிப்பில் உள்ளது உள்ளபடி புலப்படுகிறது. தனித்து துண்டங்களாக உள்ளவற்றுக்கு இடையேயான தொடர்ச்சியும் உறவும் துலக்கமாகிறது. ஞானம் அறிவை துறக்கும்போது பிறப்பது என நம்புகிறேன். குழந்தைகளையும் பைத்தியங்களையும் ஞானிகளுக்கு இணை வைப்பதற்கு ஒரு நியாயம் உண்டு. குழந்தையையின் கண் கொண்டு உலகை நோக்கும்போது அங்கு எல்லாமே புதிதாக தோன்றுகிறது. பழக்கத்தால் கெட்டித்து போன பார்வைகள் நெகிழ்கிறது.

மதார் கவிதைகளில் இத்தகைய இடத்தை அடைகிறார். அதுவே அவரை எனக்கு நெருக்கமான கவியாக ஆக்குகிறது. 2026 ஆம் ஆண்டிற்கான தஞ்சை பிரகாஷ் இலக்கிய விருது பெரும் கவிஞர் மதாரை மனதார வாழ்த்துகிறேன். இந்த தருணத்தில் தவிர்க்க முடியாத காரணங்களால் என்னால் இந்த உரையை நேரில் ஆற்ற இயலவில்லை.

கவிதை பற்றிய உரை என்பது எனக்கு பிடித்த சில கவிதைகளை உங்களோடு பகிர்வதற்கான வாய்ப்பு என்று நம்புகிறேன். 

பொதுவாக மதாரின் கவிதைகளை பேசு பொருள் சார்ந்து இரண்டாக வகுக்கலாம். புலன் அனுபவங்களை நூதன கோணத்தில் பதிவு செய்யும் குழந்தைமையை தரிசனமாக கொண்டவை. மற்றொரு வகை கவிதைகளை  poetic utterances என்று சொல்லலாம்.

முதல் வகைக்கு சில கவிதைகளை வாசிக்கலாம். மாயப்பாறை தொகுப்பில் உள்ள இந்த கவிதை சட்டென உலகம் திறந்துகொள்ளும் ஒரு கணத்தை காட்டுகிறது.

காட்சி அதிசயம்

விரலை

ஒரு வளையம் போலாக்கி

உலகை

அதற்குள் பார்க்கிறேன்


என் உடற்பாகம் கொண்டு

செய்த சன்னல்


காணும் யாவும்

ரகசியங்கள்


இது நாள் வரை

கையிலேயே

வைத்துக்கொண்டு

தேடியிருக்கிறேனே

கண்ணை

குழந்தைமை என்பது ஏனோதானோவென்றிருக்கும் நிலை அல்ல. கற்றவற்றை கைவிடும் நோக்கு. வெயில் பறந்தது தொகுப்பில் இடம்பெற்றுள்ள இந்த கவிதையை பார்க்கலாம்.

இரண்டாவது பக்க விளிம்பிலிருந்தும் மூன்றாவது பக்க விளிம்பிலிருந்தும் நான்காவது பக்கம் நிறைவுற்றபோது

மரம் உறுதி செய்தது

தான் ஒரு கதவென

இந்த வேலை

மினுமினுப்பு

பயன்பாடு

எதுவுமே கதவுக்கு நிறைவில்லை

எதிரே இருக்கும் மரத்தை

பார்த்தபடி இருப்பதைத் தவிர


நான் கதவை திறந்து

மரத்தின் கீழ் விளையாடும்

சிறுவர்களை பார்த்தபடி இருப்பேன்


கதவு மரத்தையும்

நான் சிறுவர்களையும்

அப்படி பார்த்துக் கொண்டிருந்த ஒரு நாள் காற்றடித்து

கதவும் நானும் ஒருவரையொருவர்

பார்த்துக் கொண்டோம்

ஞாபகப்படுத்தி சொன்னேன்

‘மரம் தானே நீங்க'

கதவு சொன்னது

'ஏ குட்டி பயலே’

மரமும் மனிதர்களும் நிகழ்காலத்திலிருந்து தத்தமது கடந்த காலத்தை நோக்குகிறார்கள். உருமாறிய அவர்கள் தங்களது கடந்த காலத்தில் சந்தித்துக் கொள்கிறார்கள். 

பூனையின் விழிப்பந்துகளை

பார்த்திருக்கிறாயா

அதன் நிறம்

அது ஒரு கிரகம் என்று

தெரிந்த போது

எனக்கு தூக்கம் வரவில்லை

மேலும்

வட்ட வடிவ பாத்திரத்திலா

பூனைக்கு பால் வைக்கிறாய்

அப்படி எனில்

செண்டி மீட்டர் அளவுகோல் போதும்

பூமிக்கும் நிலவுக்கும்

இடைப்பட்ட தொலைவை அளக்க

மேலதிக விளக்கங்கள் ஏதும் தேவைப்படாத எளிமையும், விளையாட்டும், அவதானிப்பும் இக்கவிதைகளின் தனித்துவமாகிறது.

பலூன்

மந்திர சிலேட்

விசில் பந்து

தண்ணீர் துப்பாக்கி

பத்தடி காட்டும் பைனாக்குலர்

இவைகளோடு சேர்த்து

பலூன் விற்கிற போதிலும்

பலூன் தாத்தா என்று அறியப்படுகிறார்

அந்த பலூன் தாத்தா

நானும் பலூன் குழந்தையாகவே இருக்கிறேன்

மரணித்தல் குறித்த கவலையின்றி

விட்டதும் விடுதலையாக பறப்பதால்

பலூன் குழந்தையாகவே இருக்கிறது

பலூன் தாத்தா

குழந்தையான பலூன்

நான் பலூன் குழந்தை

மூவரும் சந்திக்கும் நிறைய ஞாயிறுகள்

குழந்தைமை என்பது முயன்று அடையக்கூடிய ஒரு நிலை அல்ல. எதுவாகவாவது ஆக வேண்டும் எனும் முயற்சியே அதற்கு எதிரானது தான். முயற்சிகளை கைவிட்ட பிறகு ஒரு நினைவுகூரலாக நம்மை ஆட்கொள்வது.  அவதானிப்பின் கூர்மையும் கற்பனையின் ஆற்றலும் இவற்றை முக்கியமாக்குகிறது.

காலை வாலை மிதிப்பது தவிர

வேறெதற்கும் உசும்பாமல்

படுத்திருக்கிறது கருப்பு வெள்ளை நாய்

தொடர்வண்டி பிடிக்க ஓடும்

எந்தச் செருப்பும்

எழுப்பவில்லை

ரயில் வருகிறதென

ஒலி எழுப்பும்

எந்திரக் குரல் காரியாலும் முடியவில்லை

ஒரு காதை பூமிக்கும்

இன்னொரு காதை வானுக்கும் கொடுத்து

ஒருக்களித்து துயிலும் இது

பூமியின் இதயம் வேகமாகத்

துடிப்பதைக் கேட்கிறது

தசக் தசக் தடக் தடக் தபக் தரக்

செப்பல் அணிந்து குழந்தையொன்று

நடந்து வந்தால் கேட்கிறது

தஙக் தஞக் தடக் தநக் தமக் தனக்

இந்த கவிதையில் ஒரு புலனனுபவம் உள்ளது. சொல்லாக்க இயலாத, ஓசையை கொண்டு மற்றும் நுண்மையாக  காண்கிறார்.

முழுதாக கரைந்த ரப்பர்

மரத்தைக் கடந்து ஒரு அழிரப்பர் போல பேருந்து செல்கிறது.

மரம் அழியவே இல்லை.

சாலையின் இருமருங்கும்

வாகனங்கள்

மாறி மாறி

அழித்துப் பார்க்கின்றன

அழிவதாய் இல்லை மரம்

இரட்டை பரிமாணத்தில் இவ்வுலகை காண்கிறார். ஒரு காட்சியை வினோதமாக சொல்லிச் செல்வதாக தோன்றும் இக்கவிதையின் தலைப்பு நமக்கு வேறொன்றை சுட்டுகிறது. அழிக்க முடியாததை அழிக்க முயன்று முழுதாக கரைந்து அழிந்து இல்லாமல் போகிறது ரப்பர். ரப்பர் எது மரம் எது என விளக்கத்தேவையில்லை. தன்னளவிலேயே பொருள் கொள்ள முடியும்.

இனி எனக்கு

வேண்டாமென

பந்தைக் கீழே

குத்துகிறது

குழந்தை


துள்ளியெழும் அதன் செய்கை கண்டு

கத்துகிறது


துள்ளித்துள்ளி

உயரம் குறையும் பந்தின் அன்பில்

குழந்தைக்கு

அழுகையே வந்துவிடும் போல் தெரிகிறது


குழந்தை தந்தை தூக்கி முத்துகிறது

கொழகொழக்கும் எச்சிலோடு


பந்து கீழே விழுந்து துள்ளி ஓடுகிறது

குழந்தை சிரித்துக்கொண்டே

பின்னால் ஓடுகிறது

சமாதானப்படுத்த

இது எனக்கு மிக பிடித்த கவிதைகளில் ஒன்று.

பூமியில்

நான் ஒரு குழந்தை


எனக்குக்

கல்யாணம்

செய்தார்கள்


மணமுடித்த மனைவி

எனக்கு மேல் குழந்தை


குழந்தையைப்

பார்த்துக் கொள்ள

நான் கொஞ்சம்

முதிர்ந்தேன்

வயதுயர்த்தி


மனைவிக்குழந்தை

அவளுக்கொரு குழந்தை

அது அவளுக்கு மேல் குழந்தை


குழந்தையைப்

பார்த்துக் கொள்ள

அவளும் முதிர்ந்தால்


இதுதான்

சாக்கென்று

நானென்

வயதுதிர்த்தேன்

இந்த கவிதையில் ஒரு விளையாட்டு உள்ளது. குழந்தைமைக்கு திரும்புதல் அல்லது குழந்தைமையை தக்கவைத்தல் பல கவிதைகளில் பேசப்படுகிறது.

அழுகையை முழுங்கு

என்றாள் அம்மா


அதன் ருசி என்ன

என்று அறிவதற்குள்

அவசரமாய்

விழுங்கிவிட்டேன்

 

சிரி என்றாள்


தொண்டைக்குள் இனித்தது

அது

இந்த கவிதையில் எழும் கேள்வி, இயல்பாக குழந்தைமையின் வெளிப்பாடு தான். ஆனால் சட்டென ஒரு உயரத்தை அடைகிறது.

தூக்கத்திலேயே

உயிர் பிரிந்துவிட்டது என்றார்கள்

விழிக்கும்போது

கனவில் இருப்பாரில்லையா?

மதாரின் சில கவிதைகள் ஜென் தருணங்களுக்கு அருகே செல்பவை.

கண்ணை மூடிக்கொண்டே

இருந்த பொழுது

குருடனானேன்


எங்கும் ஒரே நிறம்


வானை பார்த்துக் கொண்டே

இருந்த பொழுது

குருடனானேன்


எங்கும் ஒரே நிறம்


போகிற போக்கில்

பார்வை தந்து போனது

ஒரு பறவை


ஒளியும் இருட்டும் குருட்டு தான்.

2

மதாரின் சில கவிதை வரிகள் ஒரு வாக்கை போல் வெளிப்படுகிற்றன.

//எந்தக் காரணமும் இல்லாமல்

ஒரு தீக்குச்சியைக் கொளுத்து

அதன் பெயர்தான் ‘ஒளி’//


//சன்னலைத் திறந்ததும்

ஒரு பெரும் ஆச்சரியம்-

ஆகாசத்தின் கதவா

என் எளிய சன்னல்! //


//உயரம் குறையக் குறைய

உயரம் கூடுவதைக்

காண்கிறது

கிணறு//

இது போன்ற சில வரிகள் சட்டென நினைவுக்கு வருகின்றன.

பெரும்பாலும் நேர்மறை நோக்கும் விளையாட்டும் வெளிப்பட்டாலும் சில கவிதைகள் என்னை ஆழமாக தொந்தரவு செய்தன.

காலம் கையில்

ஓர் அம்பைத் தந்தது

சீவிச்சீவிச்சீவிக்

கூர்மையாக்கினேன்

கூரேறியேறி

கரைந்தது

இந்த வரிகள் என்னுள் துக்கத்தை கிளர்த்தியது. எத்தனையோ வாழ்க்கைகள், பிரகாசமான எதிர்காலம் உண்டு என சொல்லப்பட்ட ஆரூடங்கள், என்னென்னவோ கனவுகள் - கூரேறியேறி கரைந்து போனவை மனத்திரையில் தோன்றி நிழலாடின.

ஈயை கொல்ல முடியாது

ஈயை எளிமையாக அடித்துக் கொல்ல முடியாது

இன்று என் புத்தகத்தில் ஒரு ஈ 

விளையாட்டாகப் புத்தகத்தை மூடினேன் 

திறந்து பார்த்தேன்

ஈ செத்திருந்தது

பறக்கும் என்று நினைத்துதான் அப்படிச் செய்தேன்

இறக்கும் என நினைக்கவில்லை

இந்த கவிதை விளைவுகளை எதிர் நோக்காது நிகழ்த்திய வன்முறையின் அதிர்ச்சியை கடத்துகிறது. இந்த கவிதையிலும் ஒரு மெல்லிய சோகம் கவிகிறது.

எனது ஊசலில்

இரு திசைகளிலும் இருப்பதெது

அது தெரியாததால் தான்

எனது ஊசல் நிகழ்கிறது

இது ஒரு கவிதைக்குள் வரும் ஒரு வரி. அலைக்கழிப்பை சொல்கிறது.

அதிகாலையின் இசை

அதிகாலையின் இசையை

நான் கேட்கத் துவங்கி விட்டேன்

அது ஆற்றுக்குள்

இசைக்கப்படுகிறது

பூமிக்குள் கேட்கப்படுகிறது

துல்லியமான இசையை கேட்க

நான் ஆற்றுக்கு போகிறேன்

ஆற்றில் ஒரு நாயின் உடல்

மிதந்துவரக் கண்டேன்

நாளை அது வீணையாகலாம்

ஆறு அதை இசைக்கலாம்

தற்கொலை செய்து கொள்பவர்கள்

கொலை செய்யப்படுபவர்கள்

விபத்துக்கு உள்ளாகிறவர்கள்

ஆற்றின் இசைக்கருவிகள் ஆகிறார்கள்

அவர்களின் நினைவை

மீட்டிக் கொண்டிருப்பது தான்

நதியின் இசையா

அதிகாலையின் இசை

என் நெஞ்சை அடைக்கிறது

நான் மூழ்குகிறேன்

ஒரு இசை கருவி ஆவதற்குரிய

அத்தனை தகுதிகளோடும்

ஆற்று நீரில் மிதக்கும் சடலங்கள் ஆற்றால் மீட்டப்படும் இசைக்கருவிகள் ஆகின்றன. இந்த கவிதையின் உணர்வு துல்லியமாக வரையறை செய்யப்பட முடியாதது என்பதாலேயே நம்மை அச்சுறுத்துகிறது.

மூக்குக்கண்ணாடி அணியாமல்

தூரக் காட்சிகளின் மங்கல்

எனக்கொரு தைரியத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தது

 

மேடை பயம் விலக

பள்ளி நாடகமொன்றில்

மூக்குக் கண்ணாடி அணியாமல்

நடித்த நாள்

நினைவிற்கு வந்தது


எதிர்வரும் மனிதர்கள்

கலங்கலாகிவிட்டனர்

இப்போது பயம் நீங்கிவிட்டது


பார்வைத் தெளிவெனும் அச்சம்

என் வீட்டுப் பரணில் கிடக்கிறது


எத்தனை நாள்

அதை

தூசி போகத்

துடைத்திருப்பேன்


அறியாமை

அறியாமை


அந்த பைனாக்குலர்

இனி எனக்கு வேண்டாம்

 

இனி தூரத்துப் பறவை

என் கண்களில் பறக்காது


அது வானத்தில் பறக்கிற செய்தியை ஏந்தி வரும்

தபால்காரர் போதுமெனக்கு

அனுபவம் தரிசனமாக ஆகும் ரசவாதம் இக்கவிதையில் நிகழ்கிறது. வேண்டிய பார்வை தெளிவை அறியாமை என கைவிடுகிறார் கவி. மதாரின் பல கவிதைகளில் இத்தகைய தலைக்கீழாக்கம் நிகழ்கிறது.

இரு கவிதைகளை வாசித்து இந்த உரையை நிறைவு செய்கிறேன்.

பிரார்த்திக்கும் அம்மாவின்

முந்தானையைப் பிடித்து இழுக்குது குழந்தை

கண்ணாமூச்சி விளையாட்டின்

மூன்றாம் நபர் போல்

கடவுள் உதட்டில் கை வைத்து புன்னகைக்கிறார்

குழந்தை புன்னகைத்தபடியே கடவுளை பார்க்கிறது


அம்மா கண் திறக்கவும்

கடவுள் விளையாட்டில் இருந்து

காணாமல் போகிறார்

பிரார்த்தனை

கூப்பிய கைகளில் மன்றாட எதுவும் இல்லை

போகும் சாலையில் மரங்களும் காற்றும்

ஒரு நிமிடம்

கை கூப்பி

பிரார்த்தனை ஏதுமற்றிருந்தேன்

கைகளில்

ஜில் காற்று

வீசிக்கொண்டே இருந்தது

கைகளை அப்படியே வைத்திருந்தேன்

பிரார்த்தனை செய்வதை விடவும்

அது நன்றாக இருந்தது

***

மதார் தமிழ் விக்கி பக்கம்

சுனில் கிருஷ்ணன் தமிழ் விக்கி பக்கம்

***

Share:

சார்லஸ் சிமிக் கவிதைகள் - கடலூர் சீனு

மத்திய பதின்பருவம் வரை செர்பியாவில் வளர்ந்து, இரண்டாம் உலகப்போர் சூழலில் புலம் பெயர்ந்து, அமெரிக்கா வந்து கவிஞராக அமைந்தவர் சார்லஸ் சிமிக். பால்யத்தில் அவர் அனுபவித்த போர் சூழல் இருத்தலியல் நோக்கு கொண்ட அவரது கவிதை உலகை வடிவமைத்தது.  புலிட்சர் விருது பெற்றவர். அவரது தேர்வு செய்யப்பட்ட கவிதைகள் சில, தமிழில் மொழியாக்கம் கண்டு நூலாக்கம் பெற்றிருக்கிறது. 

நூலின் இறுதி கவிதையாக அமைந்த _கசாப்பு கடை_ எனும் தலைப்பிலான கவிதை நேரம் கடந்த இரவு ஒன்றில் காலை முதல் பரபரப்பாக இயங்கி இப்போது மூடிக் கிடக்கும் கசாப்பு கடை ஒன்றின் சித்திரத்தை விவரிக்கிறது.  இரவு, கைதி தப்பிக்கவேண்டி தோண்டும் சுரங்க பாதை கொண்ட ( வெளியே தெரிந்துவிட கூடாது எனும் படி ஒரு ஒளி) மெல்லிய வெளிச்சம் போல ஒரு வெளிச்சம் தரும் இரவு விளக்கு எரியும் மூடிய கடை, 

கொக்கியில் தொங்கும் ரத்தக்கரை படிந்த அங்கி, ரத்தம் கொண்டு வரையப்பட்ட ஒரு உலக வரைபடம் போல அது இருக்கிறது. இருள் சூழ்ந்த தேவாலயத்தின் உள்ளே (முடவர்களை நடக்கவைக்கும் ரோகிகளை குணப்படுத்தும்) மின்னும் ரூபங்கள் போல வரிசையாக தொங்கும் இருளுக்குள் மின்னும் கத்திகள், அந்த கவிதை இப்படி முடிகிறது, கறியை வைத்து வெட்டும் மரமேடை

// படுகைவரை உலர்ந்துவிட்ட நதியென சுத்தமாய் சுரண்டப்பட்ட மேற்புறம். அங்குதான் நான் பசியாற்றப்பட்டேன். அங்கே இரவின் ஆழத்திலிருந்து வரும் ஒரு குரல் எனக்கு கேட்கிறது.//

சிமிக் தனது கவிதை வழியே உருவாக்கும் உலகவரலாறு, இந்த வாழ்வு, தன்னிலை இவைகள் குறித்த அவரது நோக்கு எல்லாமே ஒரே வீச்சில் துலங்கி வரும் கவிதை.

இருத்தலியல் தத்துவ நோக்கு இந்த கவிதைக்குள் இருந்தாலும் இக்கவிதை அந்த தத்துவத்தின் பொருட்டு சமைக்கப்பட்ட ஒன்றல்ல. தத்துவம் எந்த எல்லை வரை ஓடி வந்து நிற்குமோ, அந்த எல்லையில் இருந்து எழுந்து பறக்கும் கவிதை இது. தத்துவம் என்பது அறிவுக் கண். அறிவுக் கண்களை உதறி குருட்டு இதயத்தால் மட்டுமே உணரப்படக் கூடிய சில உண்டு அதை கவிதைகள் மட்டுமே சென்று தொட முடியும். அதனால்தான் உலகின் முக்கிய தத்துவவாதிகள் பலரும் புனைவுகளை குறிப்பாக கவிதைகளை பின் தொடர்கிறார்கள் போலும். 

சாத்தியப்பட்ட துல்லியமான புற உலகு, சாத்தியமற்ற அக உலகு இந்த இரண்டின் சித்திரங்களையும் ஒன்றுக்குள் ஒன்றாக அமைத்து, இரண்டையுமே துல்லிய புற உலகின் சித்திரம் போல புனைந்து அது அளிக்கும் உணர்வுநிலையை மையமாக்கி தனது கவிதை உலகை வடிவமைக்கிறார் சிமிக்  _இன்னும் விழித்திருக்கும் சலவைக்கடை_ என்ற தலைப்பில் அமைந்த இந்த கவிதை

//விளக்குகள் அணைக்கப்பட்ட கடைகள் இருக்கும் வீதியில்

ஒரு சிறுநகர சலவைக்கடை

பளீர் விளக்குகளுடன் ஒளிர்கிறது.

முகப்பில் 

வயோதிக

எல்விஸ் பிரஸ்லி

கசங்கிப்போன பிரபலமான பெண்கள் பத்திரிக்கை பக்கத்தை படித்துக்கொண்டிருக்கிறார்.

சில தனி மேகங்கள்

இரவு வானில்.

அவனது நைய்ந்த ஜீன்ஸ் 

சலவை எந்திரத்தில் சுழலும்போது

எல்லாவற்றையும் விழுங்கும்

கண்புழைகளைக் கொண்ட

சாவு முகமூடியப்போல

சுழலும் ஒரு மேகம். //

இருத்தலியல் புனைவுவெளிக்கே உரிய காத்திக்கான சர்ரியல் சித்திரங்களை சிமிக்கும் தனது கவிதைகளுக்குள் புனைகிறார். ஆனால் அந்த சித்திரங்கள் டாலி உருவாக்குவது போல உருகும் கடிகாரங்கள், வினோத உயிரினங்கள் போன்றவை அல்ல. அன்றாடம் நாம் அறிந்து பயன்படுத்தும் பொருட்களை பீதி அளிக்கும் சர்ரியால் படிமங்களாக மாற்றுகிறார் சிமிக். உதாரணமாக _எமது குளிர்காலப் பிற்பகல்கள்_ எனும் வசன கவிதையில் வரும் படிமங்கள். அதில் அவள் அவனை மென் தசையில் பதியும் கொதிக்கும் இஸ்திரி பெட்டி போல ஸ்பரிசிக்கிறாள். தலைகீழாக மாறிய காலுறைக்குள் அதை நேர் செய்ய அது முழுவதுமாக உள்ளே நுழையும் கை போல அவள் அவனுக்குள் நிறைகிறாள். (குருதி இழையினை நூலாக கொண்ட) இணைக்கும் ஊசி துளைத்து செல்வது போல அவனை துளைத்து இணைகிறாள். 

அவரது மினிமலிஸ்டிக் நடை இத்தகு சர்ரியல் சித்திரங்களுக்கு மேலும் தீவிரம் அளிக்கிறது. அப்படி அமைந்த ஒரு கவிதை கீழ்கண்டது.

// ஒரு கத்தியால்

கண்களை தோண்டியெடுத்த

பசுவொன்று அங்கே இருந்தது.


அதன் வாலுக்குக் கீழே வைக்கோலைப் பற்றவைத்தனர்.


அப்போதுதான் தாறுமாறாக

கண்ணிவெடி புதைக்கப்பட்ட நிலத்தின்மேல் ஓடும்.


பின்னர் என் தலைக்குள்ளும்

அவ்வப்போது. //

இந்த வரிசையில் முக்கியமானது தர்பூசணி என்ற தலைப்பிலான கவிதை.

அறைக்குள் அமர்ந்து தர்பூசணி சாப்பிட்டுக்கொண்டு வேடிக்கை பார்த்துக்கொண்டு விளையாடிக்கொண்டு இருக்கும் குழந்தைகள். உள்ளே குண்டு வந்து விழுகிறது. மொத்த அவலமும் குழந்தையின் பார்வையில் ஒரு குழந்தை விளையாட்டு போல சொல்லப்பட்ட கவிதை. இந்த கவிதையில் நிகழும் வெடிகுண்டு, உடன் விளையாட வரும் வண்டாக மாறும் அந்த ரசவாதம், அது சிமிக் உள்ளும் எங்கோ நிகழ்ந்திருக்கிறது போலும். இந்த தொகுப்பில் பல கவிதைகளில் அந்த குழந்தைகள் பார்க்கும், பின்னர் சிரிக்கும் அந்த அழிவு போலதான் இதில் உள்ள இருண்ட சித்திரங்கள் அமைகிறது.

உலக அளவில் பழங்குடி மரபில் ஆன்மா இல்லாத புறப்பொருள் என்ற ஒன்றே இல்லை என்பதை பண்பாட்டு மானுடவியலாளர்கள் குறிப்பிட்டு சொல்கிறார்கள். தமிழில் சங்க இலக்கிய மரபிலும் அதுதான், கம்பன் காவியத்திலும் அதுதான். சீதை இல்லாத துயரில் ராமன் தனித்து இருக்கும் வனத்தில், ஒவ்வொரு இலையும் சோகம் கொள்கிறது. அப்படித்தான் சேதன அசேதன பிரிவினை கோடு மங்கிய நிலையில் சார்லஸ் சிமிக் உருவாக்கும் கவிதை உலகும் இருக்கிறது. 


குட்டி ஆந்தையே அலறு

நீ அங்கேதான் இருக்கிறாயா?


அங்கு என்ற ஒன்று

நிஜமாகவே அங்குள்ளதா என்ன?


உன் விருப்பப்படி அலறு.

அல்லது அமைதியாய் இரு.


இருள் சூழ்ந்துள்ளது இரவு.


இங்கே

நாம் இருப்பதைப் பார்த்து பெரும் ஆச்சர்யம் கொள்ள


தாமதமாக

நட்சத்திரங்கள் வரலாம்

அங்கே.

மேற்கண்ட கவிதையில் ஆச்சர்யம் கொள்ளும் நட்சத்திரத்தை எப்போது மனிதனால் உணர முடியும்? இரவோடு, ஆந்தையோடு எப்போது அவனால் பேச முடியும்? இங்கு அங்கு என்று பேதம் இல்லாது எப்போது அவனால் தரிக்க முடியும்? போர் வந்து, அல்லது ஊழி வந்து எல்லாம் அழிந்த பிறகு எஞ்சி இருக்கும் மிச்சப்பட்ட மனிதனாலா?

இந்த தொகுப்பில் உள்ள கவிதைகள் கொண்ட முக்கியமான அம்சம் கவிதைகளுடன் கவிஞர் கொண்டுள்ள எமோஷனல் டிட்டாச்மெண்ட். இது எல்லாம் சிமிக்ன் கவிதைகள்தான், சிமிக்கே ஒரு கவிதைக்குள் கவிப்பாத்திரமாக வருகிறார். ஆனாலும் மினிமலிச நடை கொண்டு துல்லியமாக அனைத்தையும் புறவயமான சித்தறிப்புக்குள் நிறுத்துவதன் வழியே இந்த எமோஷனல் டிட்டாச்மெண்ட்ஐ நிகழ்தி, கவிஞரின் சார்பு நிலை கொண்ட உணர்வு உணர்சி படிந்து அதனால் கலைக் குறைபாடு கொண்ட கவிதையாக இவை நின்றுவிடாது தனது கலை வெற்றியை சாதிக்கிறார் சிமிக். அதன் உச்சம் உஷ்ணமான கோடை இரவு எனும் தலைப்பிலான கவிதை. கிட்டதட்ட ஒரு சென் கவிதை போல அமைந்துவிட்ட கவிதை.

// தூரத்து நட்சத்திரங்களின் சோம்பல் ஒளி.


கீழே இங்கே பூமியிலோ


எக்காளமிடும் ஓடைத்தண்ணீர்

குண்டு தர்பூசணியை

குளிரவைத்துக் கொண்டிருக்கிறது.//

வாசித்த அக்கணமே அகம் ஓடையில் கிடந்து குளிரும் குண்டு தர்பூசணியாகிவிடுகிறது.

ஒட்டுமொத்தமாக இந்த தொகுப்பு கொண்ட அழகு என்பது, இரவு வருவதற்கு முன்னர் சில கணம் ஒளிரும் அந்தியின் அழகு போன்றது. ( சிமிக் சொற்களில்) ஒவ்வொன்றும் தன் எழிலில் தானே விதிர்த்து நிற்கும் அந்தி. 

எதிர் வெளியீடாக _காதல் உண்ணி_ எனும் தலைப்பில் சார்லஸ் சிமிக் கவிதைகளின் தேர்வு செய்யப்பட்ட சில கவிதைகளை தமிழுக்கு கொண்டுவந்திருப்பவர் கவிஞர் ஷங்கர் ராமசுப்ரமணியன். முன்னுரையில் சார்லஸ் சிமிக் புனைவுலகை வாசகன் அணுகி ரசிக்க தேவையான அனைத்து குறிப்புகளையும், தான் இக்கவிதைகளால் ஈர்க்கப்பட்ட விதத்தையும் விவரித்திருக்கிறார் ஷங்கர். இந்த கவிதைகளை மொழியாக்கம் செய்யும்போது, இந்த கவிதைகளை தானே எழுதிக்கொண்டு இருப்பதாக கவிஞர் ஷங்கர் ராமசுப்ரமணியன் மயங்கியிருக்கக் கூடும். சிமிக் கவிதைகள் வழியே உருவாக்கும் உலகை, உணர்வு நிலையை, வாழ்க்கை நோக்கை அவ்விதமாகவே தமிழுக்கு கொண்டு வந்த அழகிய மொழியாக்கம். 

சார்லஸ் சிமிக் மிக அழகிய முறையில் தமிழுக்கு வந்திருக்கிறார். கொண்டுவந்த கவிஞர் ஷங்கர் ராமசுப்ரமணியன் அவர்களுக்கு வாசகனாக என்றும் என் அன்பு.

***


Share:

நள்ளிரவில் இயேசு இளம்பெண்ணை அழைத்துச் செல்கிறார் - விக்ராமதித்யன்

நள்ளிரவில் இயேசு 

இளம்பெண்ணை

அழைத்துச் செல்கிறார்


வெளியூரிலிருந்து

ஏதோ காரணம்

வந்த பேருந்து வழியில் பழுதடைந்திருக்கலாம்

அல்லது தன் மகனை அவ்வளவு

லேசில் பிரிய மனமில்லாமல்

தூங்கிய பின் கிளம்பியிருக்கலாம்

அல்லது கணவனுடன் சண்டையிட்டு 

வைராக்கியத்தில் நேரம் பாராமல் 

புறப்பட்டிருக்கலாம்


ஆட்கள் அடங்கிய நடமாட்டமில்லாத

நிலைய நள்ளிரவில்

பேருந்தை விட்டு இறங்குகிறாள்

நகரத்திலிருந்து

கிராமத்துக்குச் செல்பவளாக

அதன் பாதையில்

பயந்தும் துணிந்தும் நடந்தவள் தன்னைத்

திரும்பிப் பார்த்தவாறு

கடக்கும் சைக்கிள்காரனிடம் தன்னை

அமர்த்திச் செல்லுமாறு மன்றாடுகிறாள்


ஏற்றிக்கொண்டவுடன்

பெருமூச்சு விட்டு

இயேசு வந்தீர்கள் என்கிறாள்


நீங்கள்

கூட

பார்த்திருக்கலாம் 

நள்ளிரவில்

கிராமத்துச் சாலையில் 

தன் சைக்கிளின் பின்புறத்தில் 

இயேசு 

ஓர் இளம் பெண்ணை 

அமர்த்திச் செல்வதை.

('காலத்தின் முன் ஒரு செடி' தொகுப்பு, பக்கம்: 58, 59)

ஸ்ரீ நேசன்

புதிய தலைமுறைக் கவிஞர்களுள் முக்கியமான ஒருவர், ஸ்ரீநேசன். அவருடைய நல்ல கவிதைகளுள் ஒன்று இது. இதற்கும் எந்த விளக்கமும் வேண்டியதில்லை. கவிதை, நேரடியாகவும் எளிமையாகவும்தான் இருக்கிறது. எனில், வாழ்வின் நுணுக்கமான ஓர் அம்சம் இதில் அருமையாகப் பதிவாகியிருப்பதுதான் சிறப்பே.

காட்சிகளின் வழியே விவரிக்கப்பட்டு, ஒரு சிறுகதைபோல வடிவமைக்கப்பெற்று, ஒரு தன்மையான கவிதையாக நிறைவு கொள்ளும்படியாக உள்ளது.

கவிஞரே சொல்வதுபோல, நாம்கூட இதுமாதிரி பார்த்திருப்போம்தாம். நள்ளிரவில், பேருந்துநிலையத்தில் வந்து இறங்கும் பெண் ஒருத்தி; இது ஒரு காட்சிச் சித்தரிப்பு. அப்படிப் பிந்தி வர நேர்ந்ததற்கு மூன்று காரணங்கள் யூகமாகச் சொல்லப்படுகின்றன. “இருக்கலாம், இருக்கலாம்” என்று மூன்று அடுக்குகள்.

"பயந்தும் துணிந்தும்” எனும் வார்த்தைகளைக் கவனியுங்கள். இந்தச் சொற்கள், அந்தப் பெண்ணின் மனநிலையை எவ்வளவு துல்லி யமாகக் காட்டி நிற்கின்றன. அது அவ்விதம்தான் இருக்கும். தன்ன ந்தனியே, நடு இரவில், இளம்பெண்ணாக இருப்பவள் எப்படி வழி நடந்து கிராமத்துக்குச் செல்ல என்பதில் பயம். ஆனால், எப்படியும் சேருமிடத்துக்குச் சென்றடைந்தாக வேண்டும் என்று துணிச்சல்.

ஆணுக்கேகூட இப்படி ஆகலாம். பெண்ணுக்கு அப்படியானது சகஜம்தான்.

முதல் வரி, “வெளியூரிலிருந்து எனத் தொடங்குகிறது. டுப

அடுத்த அடி, “ஏதோ காரணம்!" என்றிருக்கிறது. ஆரம்ப வரியின் தொடர்ச்சியாக ஒன்றைச் சொல்ல வருகிறது அடுத்தடுத்த வரிகள் யூகங்களாக, பிறகுதான் விஷயமே முன்வைக்கப்படுகிறது. சிறப்பான உத்தி இதுபோல ஒன்றை இப்படிச் சொல்வதே சரி.

தொடர் வரிகளில் அவள் நிலைமையும் செயல்பாடும் பிறகு, உதவிகேட்டு நிற்பது. பின்னே நிம்மதிப்பெருமூச்சும் அவள் கூற்றும் கடைசியாக, கவிவாக்கு கவிதை வடிவுகொண்டு விடுகிறது.

பேருந்துநிலையத்தில் வந்து இறங்குவது ஒரு காட்சி; நகரத்திலிருந்து கிராமத்துப் பாதையில் நடத்து செல்வது இன்னொரு காட்சி; திரும்பிப் பார்த்தபடி கடக்கும் சைக்கிள்காரனிடம் அமர்த்திச் செல்லுமாறு மன்றாடுவது மூன்றாவது காட்சி; சைக்கிளில் ஏற்றிக்கொண்டவுடன் ஆசுவாசம் கொள்வது நான்காவது காட்சி. இளம்பெண் ஒருத்தியின் ஒரு வாழ்வுநிலையே நான்கு காட்சிகளால் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதுவே கவிதை உருவாக்கமாகவும் தோற்றுகிறது.

“இயேசு வந்தீர்கள்" என்று அந்தப் பெண் சொல்லியிருப்பதைப் பார்த்தால், கிறித்துவசமயம் சார்ந்தவளாக இருக்கலாம் என்று கருத வேண்டியிருக்கிறது. இந்த ஆறுதல் வார்த்தைகளிலிருந்தே - இன்னும் சரியாகச் சொல்வதானால், 'இயேசு' என்ற ஒற்றைச் சொல்லிலிருந்தே ஓர் அற்புதமான புனைவு உண்டாக்கப்பட்டிருப்பதைக் குறிப்பிட்டுச் சொல்லிவேண்டும் சைக்கிளில் அமர்த்திச் செல்லும் அந்த சாதாரண மனுஷனையே இயேசுவாக்கி விடுகிறார் கவிஞர். உண்மைதான் ஓர் உயிரிடம் பரிவு காட்டுகிற யாருமே இயேசுதான்; நிராதவராய் நிற்பவர்களுக்கு ஆதரவளிப்பவர் எவராக இருந்தாலும் இயேசுதானே.

இத்தக் கவிதை குறித்து இன்னும்கூட எவ்வளவோ சொல்ல வேண்டியிருக்கிறது. முதன்முதலில், இதன் செய்திறன். குறிப்பாக, தொடக்க அடிகள் ஒன்பதும், தேரடியாக அல்லாமல், ஏதோ ஒன்றைச் சொல்வதுபோல அமைத்திருக்கும். பிறகுதான் கவிதையின் மையம் அல்லது பாடுபொருளின் மையம்.

அதற்கடுத்தாற்போல, அந்தப் பெண்ணின் அடுத்த காரியம் முதல் காரியம், நேரங்கெட்ட நேரத்தில் பேருந்துநிலையத்தில் வந்து இறங்குவது என்றால், இரண்டாவதாக அவள் போய்ச்சேரும் இடத்துக்குத் தயக்கத்துடன் நடந்து செல்வது. மூன்றாவதாக, வழியில் எதிர்படும் சைக்கிள்காரனிடம் தன்னை(யும்) ஏற்றிக்கொண்டு போகும்படிக் கேட்டு மன்றாடுவது. நான்காவதாக, சைக்கிளில் அவன் அமர்த்திக்கொண்டவுடன் கொள்ளும் நிம்மதி. நான்கு காட்சிகள்; ஒரு முழுச் சித்திரம். கவிதை உருக்கொண்டு விடுகிறது, சரியாக, எளிமையாகவும் நேரடித்தன்மையிலும்கூட ஒரு நல்ல கவிதை அமையலாம் என்பதற்கும் ஓர் எடுத்துக்காட்டாக உள்ளது இந்தக் கவிதை. இஃது ஒரு சிறப்பம்சம். எல்லாவற்றையும் இணைத்துத் தெரிவிக்கும் விதத்தில் ஒரு தலைப்பு. ஆக மொத்தத்தில் ஓர் அருமையான கவிதை.

கவிதை, சீரிய கட்டமைப்புக் கொண்டிருப்பதைச் சொல்லாமல்விட முடியாது. அநேக வரிகள் மடக்கிப் போடப்பட்டிருப்பது, கவிதைக்கு, கவிதை விஷயத்துக்கு அனுகூலமாகவே இருப்பதையும் சுட்ட வேண்டும்.

முதல் பார்வையிலேயே உள்ளம் கவர்ந்து விடும் இக்கவிதை, திரும்ப ஊன்றிப் பார்க்கையிலும் மனசில் தங்கிவிடுவதாகவே உள்ளது. ஸ்ரீநேசன் சிறந்த கவிஞர்தான் என்பதற்கு இந்த ஒரு கவிதையே போதுமான சான்று. வாழ்வை அவதானித்துக் கவிதைக்குள் கொண்டு வருபவன் நல்ல கவிஞனாகத்தானே இருக்க முடியும்.

பெண் ஒருத்தியின் இக்கட்டான நிலையையும். அந்நிலையில் உதவிபுரியும் ஆண் ஒருவனின் பெருந்தன்மையையும், காட்டுகிற இந்தக் கவிதை முற்ற முழுக்க வாழ்வியல் கவிதையே ஆகும். இதனாலேயே இஃது அழியாத கவிதையாகிவிடுவதை கவிதை ஆர்வலர்கள் அவசியம் கண்டுகொள்ள வேண்டும். மேலும், பெண் கவிஞர்கள் இதுபோலக் கவிதைகளைப் போற்றிப் புகழவும் படித்துக்கொள்ள வேண்டும்.

***

ஶ்ரீநேசன் தமிழ் விக்கி பக்கம்

விக்ரமாதித்யன் தமிழ் விக்கி பக்கம்

***

Share:

சில தமிழ்க் கவிதைகள் - சங்கர் கணேஷ்

 ஆறாவது நாள்

மகத்தான 

தன் குட்டிக் கை கால்கைள 

ஆட்டிக் கொண்டு 

உற்று நோக்குகிறது ஒரு  

பிரபஞ்ச நிகழ்வு பேரின்மையில் 

இசைக்கப் படுகிற வீணையின் 

நாதத்துக்கு 

தன் விரல்கைள ஒப்புக் கொடுத்தபடி 

எங்கெங்கோ நிலைத்திருந்த  

அவ்விழிகள் 

கருணையோடு பார்கின்றன 


தனக்குள் தான்  

சிக்கிய மடிப்பெல்லாம் பிரிய 

மீண்டும் ஒளிர்கிறது  

சிறு பொறி 

நான் என 

***

சமத்துக் கொடம்!  

குட்டியாக எதைப் பார்த்தாலும்  

பிடிக்கிறது பாட்டிக்கு 

தன் கொள்ளுப் பேரனைப் பார்க்கும் 

அதே சிரிப்புதான்  

சிறுவிரல் போன்ற குட்டி கேரட்டுக்கும் ஏலக்கிப் 

பழத்துக்கும் 

கொட்டைப் பூசணிய பலாப்பிஞ்சை 

பிறந்த குழந்தையின் தலைபோல என்பாள் 

இன்று அவள் கண்ணில்பட்டது 

ஒரு பித்தளைத் தோண்டி 

வாடீயென் குஞ்சலமே

என்று கையில் எடுத்துக் கொண்டாள் 

அதுவும் கண் விழித்து 

சற்றே சிணுங்கிவிட்டுத்தான் 

அவளிடம் போனது 

- சங்கர் கணேஷ்

***

Share:
Powered by Blogger.

Poetic Angst - ஜெயமோகன்

உதிர்ந்த ஒரு பழுப்பு இலை மிதந்து தவிழ்ந்து என்றேனும் உங்கள் மடி வந்தமரக் கூடும். எடுத்து தடவி முத்தமிட்டு மறுபடி காற்றில் விடுங்கள். ஞானத்து...

தேடு

முந்தைய இதழ்கள்

Labels

அபி (13) அரவிந்தர் (1) அருண் கோல்ஹட்கர் (1) அறிமுகம் (1) அஜிதன் (1) ஆ. அமிர்தராஜ் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆதித்ய ஸ்ரீநிவாஸ் (1) ஆதிமந்திய (1) ஆத்மாநாம் (3) ஆவுடையக்காள் (1) ஆனந்த் குமார் (9) இசை (11) இந்தி (7) இரா. கவியரசு (1) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (3) உன்னத சங்கீத (1) எதிர்வின (2) எம். கோபாலகிருஷ்ணன் (2) எம்.எஸ். கல்யாணசுந்தரம் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஸ்ரா பவுண்ட் (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (5) க.நா. சுப்பிரமணியம் (3) க.நா. சுப்ரமணியம் (18) கட்டுரை (11) கண்டராதித்தன் (1) கண்டனம் (1) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கருத்தரங்கு (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (2) கல்பற்றா நாராயணன் (5) கல்பனா ஜெயகாந்த் (2) கவிதை (276) கவிதையின் மத (1) கவிதையின் மதம் (1) காரைக்கால் அம்மைய (1) காரைக்கால் அம்மையார் (2) கார்த்திக் பாலசுப்ரமணியன் (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) கிரிராஜ் கிராது (3) குமரகுருபரன் விருது (8) குன்வர் நாராயண் (1) கே. சச்சிதானந்தன் (1) கேரி ஸ்னிடர் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (4) சங்க இலக்கியம் (4) சங்கர் கணேஷ் (1) சசி இனியன் (1) சஞ்சய் சௌத்ரி (1) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்தப்பாடல்கள் (1) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (5) சம்யுக்தா மாயா (6) சாரு நிவேதிதா (1) சார்லஸ் சிமிக் (1) சீர்மை பதிப்பகம் (1) சுகந்தி சுப்ரமணிய (1) சுகுமாரன் (6) சுந்தர ராமசாமி (2) சுனில் கிருஷ்ணன் (1) செல்வசங்கரன் (2) சோ. விஜயகுமார் (4) சோலைக்கிளி (1) ஞானக்கூத்தன் (1) டி.எஸ். எலியட் (1) டி.ஏ. பாரி (1) தாகூர் (1) தாஸ் வைத்ய் (1) தி.சோ. வேணுகோபாலன் (1) திரிகூட ராசப்ப கவிராயர் (1) தூயன் (1) தேவதச்சன் (8) தேவதேவன் (29) தேவேந்திர பூபதி (1) ந. பிச்சமூர்த்தி (1) ந. ஜயபாஸ்கரன் (1) நகுலன் (3) நித்ய சைதன்ய யதி (1) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (3) பாபு பிரித்விராஜ் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (4) பிரான்சிஸ் (1) புதுமைப்பித்தன் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (2) பெருந்தேவி (1) பைபிள் (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (3) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (10) மரபு கவிதை (8) மராட்டி (3) மலையாள (1) மலையாளம் (1) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மு. சுயம்புலிங்கம் (1) முகாம் (2) மொழிபெயர்ப்பு (17) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யாக்கூப் (1) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ரமேஷ் பிரேதன் (1) ராமாயணம் (1) ராஜமார்த்தாண்டன் (1) ரியோகான் (1) ரூமி (1) ரெயினர் மரியா ரீல்க (1) லட்சுமி மணிவண்ணன் (3) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (3) வாசகர் (1) வாசிப்பு (1) வாலஸ் ஸ்டீபன் (1) வி. சங்கர் (2) விக்ரமாதித்யன் (14) விவாத (1) வீரான்குட்டி (3) வெய்யில் (1) வே. நி. சூர்யா (5) வே.நி. சூர்யா (7) வேணு தயாநிதி (1) வேணு வேட்ராய (1) வேணு வேட்ராயன் (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (3) ஜெயமோகன் தேர்வு (1) ஜென் (1) ஶ்ரீநேசன் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷங்கர்ராமசுப்ரமணியன் (1) ஷாஅ (1) ஷாந்தா ஷேலகே (2) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Most Popular

Labels

அபி (13) அரவிந்தர் (1) அருண் கோல்ஹட்கர் (1) அறிமுகம் (1) அஜிதன் (1) ஆ. அமிர்தராஜ் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆதித்ய ஸ்ரீநிவாஸ் (1) ஆதிமந்திய (1) ஆத்மாநாம் (3) ஆவுடையக்காள் (1) ஆனந்த் குமார் (9) இசை (11) இந்தி (7) இரா. கவியரசு (1) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (3) உன்னத சங்கீத (1) எதிர்வின (2) எம். கோபாலகிருஷ்ணன் (2) எம்.எஸ். கல்யாணசுந்தரம் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஸ்ரா பவுண்ட் (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (5) க.நா. சுப்பிரமணியம் (3) க.நா. சுப்ரமணியம் (18) கட்டுரை (11) கண்டராதித்தன் (1) கண்டனம் (1) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கருத்தரங்கு (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (2) கல்பற்றா நாராயணன் (5) கல்பனா ஜெயகாந்த் (2) கவிதை (276) கவிதையின் மத (1) கவிதையின் மதம் (1) காரைக்கால் அம்மைய (1) காரைக்கால் அம்மையார் (2) கார்த்திக் பாலசுப்ரமணியன் (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) கிரிராஜ் கிராது (3) குமரகுருபரன் விருது (8) குன்வர் நாராயண் (1) கே. சச்சிதானந்தன் (1) கேரி ஸ்னிடர் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (4) சங்க இலக்கியம் (4) சங்கர் கணேஷ் (1) சசி இனியன் (1) சஞ்சய் சௌத்ரி (1) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்தப்பாடல்கள் (1) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (5) சம்யுக்தா மாயா (6) சாரு நிவேதிதா (1) சார்லஸ் சிமிக் (1) சீர்மை பதிப்பகம் (1) சுகந்தி சுப்ரமணிய (1) சுகுமாரன் (6) சுந்தர ராமசாமி (2) சுனில் கிருஷ்ணன் (1) செல்வசங்கரன் (2) சோ. விஜயகுமார் (4) சோலைக்கிளி (1) ஞானக்கூத்தன் (1) டி.எஸ். எலியட் (1) டி.ஏ. பாரி (1) தாகூர் (1) தாஸ் வைத்ய் (1) தி.சோ. வேணுகோபாலன் (1) திரிகூட ராசப்ப கவிராயர் (1) தூயன் (1) தேவதச்சன் (8) தேவதேவன் (29) தேவேந்திர பூபதி (1) ந. பிச்சமூர்த்தி (1) ந. ஜயபாஸ்கரன் (1) நகுலன் (3) நித்ய சைதன்ய யதி (1) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (3) பாபு பிரித்விராஜ் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (4) பிரான்சிஸ் (1) புதுமைப்பித்தன் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (2) பெருந்தேவி (1) பைபிள் (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (3) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (10) மரபு கவிதை (8) மராட்டி (3) மலையாள (1) மலையாளம் (1) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மு. சுயம்புலிங்கம் (1) முகாம் (2) மொழிபெயர்ப்பு (17) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யாக்கூப் (1) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ரமேஷ் பிரேதன் (1) ராமாயணம் (1) ராஜமார்த்தாண்டன் (1) ரியோகான் (1) ரூமி (1) ரெயினர் மரியா ரீல்க (1) லட்சுமி மணிவண்ணன் (3) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (3) வாசகர் (1) வாசிப்பு (1) வாலஸ் ஸ்டீபன் (1) வி. சங்கர் (2) விக்ரமாதித்யன் (14) விவாத (1) வீரான்குட்டி (3) வெய்யில் (1) வே. நி. சூர்யா (5) வே.நி. சூர்யா (7) வேணு தயாநிதி (1) வேணு வேட்ராய (1) வேணு வேட்ராயன் (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (3) ஜெயமோகன் தேர்வு (1) ஜென் (1) ஶ்ரீநேசன் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷங்கர்ராமசுப்ரமணியன் (1) ஷாஅ (1) ஷாந்தா ஷேலகே (2) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Blog Archive