Showing posts with label மரபு கவிதை. Show all posts
Showing posts with label மரபு கவிதை. Show all posts

கவிதைக்கு காலமில்லை - கமலதேவி

நவீன கவிதை ஒன்றை வாசிக்கும் போது அல்லது இசைப் பாடலாக கேட்கும் போது சங்கக் கவிதைகள் மூளையில் வருவதை  கவிதானுபவம் என்று சொல்லலாம்.

உன்னை காணவே……

சங்கப்பாடல்களில் தலைவன் வருகை குறித்து தலைவி, தோழி கூற்றுகளாக வரும் பாடல்களின் எண்ணிக்கையைப் பார்த்தால் வியப்பாக இருக்கும். கார்காலம் வந்து விட்டது, முல்லை மலர்ந்துவிட்டது, காலையில் மேய்சலுக்கு சென்ற மந்தை திரும்பும் மணியோசை கேட்கிறது, அந்தியும் வந்ததுவே என்று எத்தனை பாடல்கள். இந்தக் கவிதைகள் ‘இன்னும் வரவில்லை’ என்பதை எத்தனை ஆடிகளில் பிரதிபலித்துக்காட்டுகிறது. கலேடாஸ்கோப்பை திருப்புவதைப்போல தலைவிகளின் மனம் இந்த உணர்வை விதவிதமாக உணர்கிறது.

பலர்புகு வாயில் அடைப்பக் கடவுநர்

வருவீர் உளீரோ எனவும் வாரார்

குறுந்தொகை: 118

உணவிற்காகவும் காரியங்களுக்காகவும் பலர் வந்து செல்லும் இல்லம் அது. இரவில் வாயிலை அடைக்கும் முன் ‘யாராவது வருபவர் உள்ளீர்களா?’ என்று கேட்பது வழக்கம். இரவு உணவு வேண்டியோ, இருப்பிடம் வேண்டியோ யாரேனும் வாயிலில் இருக்கிறீர்கள் என்று கேட்கும் நேரமும் வந்துவிட்டது இன்றும் தலைவன் வரவில்லை என்றாள் தலைவி.

உள்ளார் கொல்லோ தோழி கிள்ளை

வளைவாய்க் கொண்ட வேப்ப ஒண்பழம்

புதுநாண் நுழைப்பான் நுதிமாண் வள்உகிர்ப்

பொலங்கல ஒருகாசு ஏய்க்கும்

நிலங்கரி கள்ளியங் காடு இறந் தோரே

குறுந்தொகை: 67

நம் வாசலில் வேம்பு பழுத்திருக்கிறது. கள்ளிகாட்டு வழியில் செல்றான் தலைவன். அங்கும் வேம்பு பழுத்திருக்கும் தானே. மங்கல நாணில் உள்ள காசுகளை  போன்ற பழத்தை கண்டும் ஏன் இன்னும் வரவில்லை என்று தலைவி கேட்கிறாள்.

‘ஏழூர்ப் பொதுவினைக்கு ஓரூர் யாத்த

உலை வாங்கு மிதிதோல் போலத்

தலைவரம்பு அறியாது வருந்தும் என்நெஞ்சே

குறுந்தொகை: 172

தலைவன் குறித்த காலத்தில் வரவில்லை. இரும்பு உலை துருத்தியை உவமையாக்கி அந்த துயரை தலைவி உணர்த்துகிறாள். சங்ககாலம் போர்கள் நடைபெற்ற காலம். கொல்லர் பட்டறைக்கு ஓய்வு கிடையாது. அதுவும் ஏழு ஊர்களுக்கு பொதுவாக உள்ள பட்டறையின் துறுத்தி போல முடிவிலாது துயருற்றேன் என்கிறாள்.

பழமழை பொழிந்தெனப் பதனழிந் துருகிய

சிதட்டுக்கா யெண்ணின் சில்பெயர் கடைநாள் 

குறுந்தொகை: 2

வருவதாய் சொன்ன காலத்தில் வராது போன தலைவனால் காலம் தப்பிப்பெய்த மழையால் உள்ளீடு அற்று போன எள் செடி போல அனேன் என்று இந்தப்பாடலில் தலைவி சொல்கிறாள்.

என் கண்

துஞ்சா வாழி தோழி! காவலர்

கணக்குஆய் வகையின் வருந்தி,என்

நெஞ்சுபுண் உற்ற விழுமத் தானே 

குறுந்தொகை: 261

இந்தப்பாடலில் தலைவன் வராததால் ஒரு கணமும் கண்களை மூடாத நாழிகை கணக்கனை போல நானும் மாறினேன் என்கிறாள் தலைவி.

கோடீர் இளங்குவளை நெகிழ நாளும்

பாடில கலிழ்ந்து பனியா னாவே

துன்னரும் நெடுவரை ததும்பிய அருவி 

தன்ணென் முரசின் இமிழிசை காட்டும் 

மருங்கிற் கொண்ட பலவிற்

பெருங்கல் நாடநீ நயந்தோள் கண்ணே

இந்த அருவி ஆர்ப்பரித்து விழக்கூடிய அருவி இல்லை. முரசின் ஆழ்ந்த ஒலியை உடைய அருவி. தலைவன் வருகைக்காக ததும்பும் அருவி.

இனம் தீர் களிற்றின் பெயர்ந்தோன் இன்றும்

தோலாவாறு இல்லை தோழி நாம் சென்மோ

சாய் இறைப் பணைத் தோட் கிழமை தனக்கே

மாசு இன்றாதலும் அறியான் ஏசற்று

என் குறைப் புறனிலை முயலும்

அண்கணாளனை நகுகம் யாமே 

தலைவன் வரமாட்டானோ என்று அஞ்சும் தலைவியிடம் தோழி ‘தன் இனத்திலிருந்து விலக்கப்பட்ட களிறு போல நேற்று சென்றவன் இன்றும் வருவான். உன்னிடம் நேராக பேச பயந்து என்னிடம் தூதுவிடும் அவனை கேலி செய்வோம் வா…’ என்கிறாள். 

இன்னும் இன்னும் பல பாடல்களில் இந்த உணர்வு கையாளப்பட்டுள்ளது. தற்செயலாக வாசித்த அல்லது பாடலாக கேட்ட கவிஞர் இசையின் கவிதை ஒன்று இந்தக் கவிதைகளை நினைவுபடுத்தியது. சங்கபெண்கவிகளின் கவிதைகள் இவை. இந்தப்பாடல்களுக்கு பதிலாக இந்த நவீன கவிதை  ஒலிக்கிறது. தலைவன் கூற்றாக சில பாடல்கள் உண்டு. தன் பாங்கனிடம், தேரோட்டியிடம் விரைந்து செல்லுமாறு தலைவன் கூறும் பாடல்கள் அவை. ஆனாலும் என் வாசிப்பின் எல்லைக்குள் தலைவி கூற்றாக வரும் இத்தனை பாடல்களின் கவித்துவத்திற்கு ஈடாக அந்த பாடல்கள் இல்லை. தலைவி பேரருவியாக கலங்கும் போது தலைவனிடம் சொற்கள் இல்லையோ என்று தோன்றும். அல்லது தலைவி போல சொல்வதில் தலைவனுக்கு ஏதோ ஈகோ சிக்கல் இருக்க வேண்டும். இந்த நவீனகவிதைக்கு அந்த சிக்கல் இருந்த போதும் இறுதியில் கவிதை சென்று தொடும் இடத்தில் அந்த சிக்கலே கவித்துவமாகிருக்கிறது. வார்த்தைகளின் இணைப்பு, குறிப்புணர்த்துதல், உணர்வமைதி, சொல்லமைதி என்று பல விஷயங்கள் கவிதைக்கு உண்டு. இந்த நவீனக்கவிதையை மேற்சொன்ன சங்கக் கவிதைகளுடன் இணைக்கும் போது சொல்முறையும், கவிதையின் படிப்படியான விரிதலும்… எதற்காக வீட்டிற்கு வந்தேனில் தொடங்கி, எதற்காக இவ்வுலகிற்கு வந்தேன் என்று முடியும் இந்தக்கவிதை இனியவாசிப்பனுபவமாகிறது,

கச்சிப்பட்டு நன்னாகையோ, அள்ளூர் நன்முல்லையோ, நல்வெள்ளியோ  இருந்தால் புன்னகைத்திருக்கக்கூடும். இந்த நவீன கவிதையை மையப்படுத்தினால் மேற்சொன்ன சங்கக்கவிதைகள் நவீன கவிதைகளாக முகம் காட்டுகின்றன. கவிதை என்றும் புதியது.

ஆம்

உன்னையல்ல

நீ.வாழும் வீட்டைக் காணவே

உன் தெருவில் அலைந்தேன்.

உன்னையல்ல

நீ வசிக்கும் தெருவைக்

காணவே இந்த ஊரில்

திரிந்தேன்.

உன்னையல்ல

நீ திகழும் ஊரைக் காணவே இவ்வளவு தூரம்

வந்தேன்.

உன்னையல்ல

உன் ஊருக்கு செல்லும் வழியைக்காணவே காடு

மலை கடந்தேன்.

உன்னையல்ல

நீ வாழும் பூமியைக் காணவே இந்த பூமிக்கு

வந்தேன்.

 - கவிஞர் இசை

மேலும் உன்னையல்ல என்று சொல்லி எத்தனை உன்னைகளை காண்கிறது இந்த மனம். புறப்பாடலில் வரும் யாதும் ஊரே யாவரும் கேளீர் போல மனம் விரியும் கவிதை இது. ஒற்றை அன்பை கொண்டு இந்த பூமி முழுவைதயும், இந்த முழு வாழ்வையும் நேசிக்கும் அளவுக்கு.

***


***
Share:

வேழம்: மூன்று சங்கக் கவிதைகள் - கடலூர் சீனு

1

நான் யானைகள் குறித்து எழுதியவை அனைத்தையும் வாசித்திருந்த நண்பர் ஒருவர் எனக்கு யானைகள் மீதான ஈடுபாடு என்பது ஜெயமோகன் ஆக்கங்கள் வழியே உருவான ஒன்றா என வினவியிருந்தார்.

அன்றைய பெரும்பாலான இந்தியக் குழந்தைகள் போலவே எனக்கும் முதன் முதலாக யானைகள் மீதான பிரியம் என்பது பிள்ளையார் சிலை வழியே உருவானதுதான். அடுத்ததாக வலிமையாக வந்து விழுந்த விதை, புகை மூட்டமான பாலியத்தில் திருக்கடையூர் கோயில் வளாகத்தில் நான் கண்ட மிக மிக குட்டியான யானைக் கன்று. அம்மா யானையை விட்டுப் பிரித்த குட்டியாக இருக்க கூடும்  மொத்தமே மூன்றரை அடி உயரம்தான் இருந்தது. ஒயர் கூடை ஒன்றை எற்றி எறிவதும், ஓடிச் சென்று அதை தூக்கி வீசுவதும் என விளையாடிக்கொண்டு இருந்தது. நானும் அதனுடன் சென்று விளையாட ஓடினேன். அது விளையாட்டுத் தனமாக என்னை முட்டி எறிந்து விடும் என்று பாகனும அப்பாவும் என்னை அதன் அருகே விட வில்லை. கோயில் முடித்து திரும்பும் போது, சந்தன வண்ணப் பசு ஒன்றிடம் ப்ரும்மாண்ட கருப்பு மை உருண்டை போல அண்டி நின்று அதன் மடியில்  பால் குடித்துக்கொண்டு இருந்தது அந்தக் குட்டி யானை.

கொஞ்சம் வளர்ந்த பிறகு கண்ட  திருவாரூர் திருவிழா ஒன்றில்  நன்கு அலங்கரிக்கப்பட்டு, பொன் வண்ண அம்பாரியில் வைத்திருந்த கடவுள் சிலையை சுமந்த, தந்தங்கள் வளர்ந்து, முழுத்து, முனை சுருட்டிய துதிக்கை மெல்ல இடம் வலம் அசைய நடந்து வந்த வேழம். அதன் இணையற்ற கம்பீரம். 

மறக்க முடியாதவள் செங்கமலம். விளையாட்டுப் பிள்ளை. எங்கள் ஊர் பெருமாள் கோயிலில் சில வருடம் இருந்தவள். வீதி உலா போகும் போதெல்லாம் எங்கள் கடைக்கு பக்கத்தில் இருக்கும் ஸ்ரீ வெங்கடேஸ்வர பவன் ஓட்டலுக்கு வருவாள். அவள் வருவது என்பது ஓட்டல் முதலாளிக்கு மிகுந்த மகிழ்வு அளிக்கும் ஒன்று. அவர் கையால் சுட்டு அடுக்கி எடுத்து வந்து தோசைகளை மடித்து மடித்து அவளுக்கு ஊட்டி விடுவார். உணவு முடிந்து இறுதியாக ஓட்டல் பக்கத்திலேயே இருக்கும் பழனி பெட்டிக் கடையில், பழனி பாட்டிலை திறக்க, அவளே கடலை மிட்டாய் உருண்டைகளை துதிக்கை விட்டு எடுத்துக் கொள்வாள். இந்த தொடர் நிகழ்வில் ஒரு நாள், கடலை மிட்டாய் பாட்டிலை திறக்க சற்றே தாமதம். அவள் துதிக்கை கொண்டு விளையாட்டாக அடிக்க, கடையே ஆடி விட்டது. பழனினிக்கு அன்று ஏதோ எரிச்சல். துதிக்கையிலேயே சுளீர் என்று ஒரு அடி போட்டார். அவள் துதிக்கையை எடுத்துக்கொண்டு பின்னடி வைத்து விலகினாள். அவ்வளவுதான். அதன் பிறகு அவள் அந்த ஓட்டல் பக்கமே வருவதையே நிறுத்தி விட்டாள். முதலாளி உணவுகளுடன் அவள் இருக்கும் இடம் போய் சமாதானம் செய்து பார்த்தார். பழனி வெல்ல உருண்டைகளுடன் சென்று அவளைப் போய் பார்த்தார். அவள் துதிக்கையை வீசி பழனியை அருகே வராதே என்று சொல்லி விட்டாள். இறுதிவரை அவள் சமாதானம் அடையவே இல்லை.அப்படி ஒரு கோவம் வீம்பு அவளுக்கு.

வேறொரு கோயிலில் நான் கண்ட முதியவள். முற்ற முழுதான மூப்பு. கண் தெரியாது. பிரிந்த பிரம்புக் கூடை போல எலும்புகள் தெரியும் மண் வண்ண உடல். துவண்டு ஓய்ந்து கிடக்கும் காதுகள் கேட்காது. மரணம் வேண்டி காத்து நிற்கிறாள். அவள் சரிந்து விடாது அவளை இரும்பு கழிகள் கொண்ட சட்டகத்தில் தொட்டில் செய்து அதில் பொதிந்து நிறுத்தி வைத்திருந்தார்கள். அவள் வலது பக்கம் நாற்காலி போட்டு பாகன் அமர்ந்திருக்க, அவள் துதிக்கை நுனி அவனது இடது பாதத்தை சுழற்றிப் பிடித்திருந்தது. அந்தப் பிடியில் எழுந்த என்னை விட்டுப் போய்விடாதே எனும் இறைஞ்சல்.

அனைத்துக்கும் மேலாக திருச்சியில் என் பாட்டி வீட்டு மாடியில் நின்று நான் கண்ட கோயில் யானை ஒன்றின் இறுதி ஊர்வலம். க்ரேன் இணைந்த திறந்த நிலை ட்ரக்கில் முழுக்க முழுக்க பூ மலைக்குள் புதைந்திருந்தாள் துளசி. இரு பக்கமும் மக்கள் பெண்கள் குழந்தைகள் திரள். பெண்கள் எல்லோரும் கண்ணீர் விட்டழ அவள் இறுதி ஊர்வலம் போனாள். அவளது விழுந்து கிடந்த செயல் நின்ற துதிக்கை இப்போதும் என் காய்ச்சல் கனவுகளில் வருவது. இப்படி பல பத்து சித்திரங்களுக்குப் பிறகே எனக்கு ஜெயமோகன் உலகமும் அவரது யானைகளும் அறிமுகம் ஆனது.இதுவரை நான் கண்ட யானைகள் வழியே எனக்குள் இருந்த யானைக்கு அல்லது யானைமை க்கு முகம் தந்தவர் ஜெயமோகன்.

2

ஒரு அன்னை தனது மடியில் இருத்தி, தன் குழந்தைக்கு நிலா காட்டி அதோ நிலா என்றபடி சோறூட்டுகிறாள். உண்மையில் அந்த நிலா முற்ற முழுதாக புறத்தில்தான் இருக்கிறதா? நமது ஐம்புலன் வழியே அன்னை சொல்லிய நிலா எனும் (ஒலி) மொழி வழியேதான் அது நம்முள் அனுபவம் பெறுகிறதா? 

இந்திய மரபு, நாம் அறிவது அனைத்தும் நமது முன் அறிவின் துணை கொண்டே நிகழ்கிறது என்று சொல்கிறது. முற்ற முழுதான புறவயம் என்ற எதுவும் இங்கு இல்லை. இங்கு உள்ள புறம் அனைத்தும் நாணயத்தின் ஒரு பகுதி மட்டுமே, அதன் மற்றொரு பகுதி நமது அகம் பிணைந்தது. அகமும் புறமும் ஒரே நாணயத்தின் இரு பகுதியாக இங்கே இருக்கிறது.

நனவு, கனவு, ஆழ் நிலை இந்த மூன்றும் சித்தம் என்பதன் மேல் நிகழ்வது. இந்த ஆழ் நிலையில் உள்ள முன்னறிவாக பொதிந்த நிலவையே, இந்த ஆழ் நிலையில் உள்ள முன்னறிவில் எழும் நிலா எனும் (ஒலி) மொழி கொண்டு, புற வயமாக வெளியே இருக்கும் நிலா எனும் (ஒலி) மொழி வழியே, மேலே தூரத்தில் இருக்கும் நிலா வாக அறிகிறோம். 

சித்தம், ஆழ் நிலை, கனவு நிலை, நனவு நிலை, சுயம், ஞான இந்திரியங்கள்,  கர்ம இந்திரியங்கள், நான், அது, நாமம், ரூபம், பொருள், எண்ணிக்கை, இடம், வெளி என்று விரியும் தொடரில் ஒரே நேர்கோட்டில் பிரிவின்றி பொருந்தி அமைந்தவை அகமும் புறமும். 

இதில் பேரிலக்கியவாதிகளின் பணி என்பது வெளியில் உள்ளவற்றை மொழி வழியே வாசகனின் நனவு நிலை கனவு நிலை கடந்து அவனது ஆழ் நிலைக்குள் கடத்துவது. கூடவே அவனது ஆழ் நிலையின் சித்திரங்களை மொழி வழியே அவனது கனவு நிலை,  நனவு நிலை கடந்து அவனது பிரத்யேக கற்பனை 'வெளியில்' வைத்து அவனுக்கே துலக்கிக் காட்டுவது. 

அந்த வகையில் ஜெயமோகனின் யானைகள் வாசகனின் நனவு கடந்து கனவு கடந்து அவனது ஆழத்துக்குள் அடி எடுத்து வைத்து இறங்கி செல்வது. அதே போல வாசகனின் ஆழ் கனவில் இருந்து அவன் கனவுநிலை நனவு நிலையை கிழித்து அவனது பிரத்யேக கற்பனை வெளிக்குள் எழுந்து வருவது.

அந்த வகையில் ஜெயமோகனின் நனவு நிலை கனவு நிலை தாண்டி அவரது ஆழத்தில் உறைபவர் சங்க கால தமிழ் நிலத்தின் பெரும் கவிஞன்  கபிலர் என்று  ஒவ்வொரு முறையும் கபிலர் கவிதையை கடக்கும் போதும் எனக்குத் தோன்றும். அகம் புறம் எனும் தமிழ் நிலத்தின் முதல் தத்துவ போதத்தைக் கவிதைகளில் அள்ளி வந்த கவிஞன்.

3

சங்க இலக்கியங்கள் ஏட்டில் இருந்து அச்சுக்கு மாறிய காலம், பின்னர் எழுந்த உரை மரபுக் காலம், இவற்றை கழித்துவிட்டுப் பார்த்தால் சங்கக் கவிதைகளுக்கு நிகழ்ந்தது எல்லாம் அதன் போதாத காலம்தான். சங்க இலக்கியம் மொத்தத்தையும் ஈரல் குடல் குந்தாணி என கழற்றி போட்ட  எத்தனை எத்தனை ஆய்வுகள். முனைவர் சாரதாம்பாள் கிரேக்க செவ்வியல் மரபுடன் சங்க இலக்கியங்களை ஒப்பு நோக்கி நிகழ்த்திய ஆய்வு, தமிழ்நாட்டு பறவைகள் நூல், எட்கர் தர்ட்சன் எழுதிய தென்னிந்திய குலங்களும் குடிகளும் தொகுதிகளை மொழியாக்கம் செய்த க. ரத்னம் அவர்கள் யானைகளின் நடத்தையை சங்க இலக்கிய யானைகளின் நடத்தைகளுடன் ஒப்பு நோக்கி எழுதிய சங்க இலக்கியத்தில் யானைகள் எனும் சிறிய நூல், இப்படி பட்ட நல்ல நூல்கள் ஒரு இருபது சதவீதத்தை கழித்து விட்டால், எஞ்சிய எண்பது சதவீதமும் பிணக்கூராய்வு அறிக்கை எனும் வகைமைக்குள் மட்டுமே வரும். 

இவற்றையெல்லாம் கடந்து சங்கக் கவிதைகள் உயிருடன் இருக்கக் காரணம், அதில் இலங்கும் கபிலர் போன்ற பெரும் கவிகளின் ஆக்கம்தான். இணையம் இக்காலத்தில் அளிக்கும் வசதி மிகப் பெரிது. Tamilvu போன்ற தளங்களில் நுழைந்து, தேடு எனும் கட்டதுக்குள் வேழம் என தட்டினால் மட்டுமே போதும், சங்க இலக்கியத்தில் வேழம் என்ற சொல் பயின்று வரும் எல்லா பாடல்களையும் அது கொண்டு வந்து விடுகிறது. யானைகளில் ஆணுக்கு வேழம் என்றும் பெண்ணுக்கு பிடி என்றும் பெயரிட்டு குறைந்தது ஒரு 20 பெயர்கள் வரை யானைகளுக்கு சங்க இலக்கியங்களில் உண்டு. பெயரைத் தட்டி சங்க கால யானைகள் என்னென்ன செய்தன என்று வாசிப்பது சுவையான அனுபவம்.

அரசர்கள் யானைப்படை வைத்திருந்திருக்கிறார்கள். அவை கோட்டை கதவுகளை உடைகின்றன. எதிரிகளை துவம்சம் செய்கின்றன. வேலைக்கு தேவையான யானைகளை குழி தோண்டி பிடிக்கிறார்கள். தந்தம் வேண்டி புலி வசம் கடி பட்ட யானையைத் தேடித் துரத்தி வேட்டையாடுகிறார்கள். புலவர்களுக்கு பரிசாக யானைகள் கிடைக்கிறது. இத்யாதி இத்யாதி என நீளும் இவை எல்லாம் தகவல்கள். இவற்றை கடந்து கலை என உயரும் சித்திரங்கள் பற்பல உண்டு. 

வரனுறல் அறியாச் சோலையை ஊடறுத்து தனது பிடியைக் காணச் செல்கிறது ஓர் வேழம். அதன் வழியில் ஒரு புலி குறுக்கிடுகிறது. அதை கொம்பால் குத்திக் கிழித்து தூர எறிந்து விட்டு நடக்கிறது வேழம். இந்த குருதி வாடையுடன் தனது காதற்பிடியை காணச் செல்ல அது விரும்ப வில்லை. எனவே போகும் வழியில் வீழும் அருவியில் தனது கொம்புகளை அது கழுவிக் கொள்கிறது. எழுதியவர் வேறு யார் கபிலர்தான். இப்படி சங்க இலக்கியம் காட்டும் பல நூறு யானை குறித்த சித்திரங்களை அடிப்படையில் மூன்று வகைமையில் அடக்கலாம். முதலாவது யானையின் ஆளுமையை மனிதனில் ஏற்றிக் காட்டும் சித்திரம். இரண்டாவது தனது இயல்பில்  யானையும் மனிதனும் சந்தித்துக் கொள்ளும் சித்திரம். மூன்றாவது மனித அம்சத்தை யானைகளில் ஏற்றிக் காட்டும் சித்திரம்.

முதல் வகைமையில் மிகச்சிறந்த உதாரணம் கீழே, ஜெயமோகன் அவர்களுக்கு பிடித்த கவிதையும் கூட.


நிலவு மறைந்தன்று இருளும் பட்டன்று 

ஓவத் தன்ன இடனுடை வரைப்பின் 

பாவை யன்ன நப்புறங் காக்குஞ் 

சிறந்த செல்வத்து அன்னையுந் துஞ்சினள் 


கெடுத்துப்படு நன்கலம் எடுத்துக் கொண்டாங்கு 

நன்மார்பு அடைய முயங்கி மென்மெலக் 

கண்டனம் வருகஞ் சென்மோ தோழி 

    

கீழும் மேலும் காப்போர் நீத்த 

வறுந்தலைப் பெருங்களிறு போலத் 

தமியன் வந்தோன் பனியலை நிலையே.


(உரை)


இரவு. நிலவும் இல்லாது போன இருள். 

தோழி ! நிலவு மறைந்தன்று இருளும் பட்டன்று,  //தோழீ ! நிலாவும் மறைந்தொழிந்தது, இருளும் வந்து பொருந்தியது;//

ஓவத்து அன்ன இடன் உடை வரைப்பின், //ஓவியம் வரைந்தாற் போன்ற அழகிய அகன்ற இடங்கொண்ட வீட்டில்//

பாவை யன்ன நப்புறங் காக்குஞ் 

சிறந்த செல்வத்து அன்னையுந் துஞ்சினள், //அழகிய பெண்ணான உன்னை, சிறந்த செல்வம் போல் காக்கும் தாயும் உறங்கிவிட்டாள்.//

கீழும் மேலும் காப்போர் நீத்த 

வறுந்தலைப் பெருங்களிறு போலத் 

தமியன் வந்தோன் பனியலை நிலையே. //கீழிருந்து தன்னை நடத்துவோரும், மேலமர்ந்து தன்னைச் செலுத்துவோரும் இல்லாது தனித்து வந்த சிறிய தலையைக்கொண்ட பெரிய களிறினைப் போல் தனித்து வந்துள்ளான் தலைவன். நீ வருந்த வேண்டாம்.//

கெடுத்துப்படு நன்கலம் எடுத்துக் கொண்டாங்கு 

நன்மார்பு அடைய முயங்கி மென்மெலக் 

கண்டனம் வருகஞ் சென்மோ தோழி, //கீழே விழுந்து இழந்து போன நல்ல அணிகலன் கிடைத்ததைப் போன்று மகிழ்ச்சியைத் தரக்கூடிய அவனது மார்பை சேர்ந்து மெல்ல வருடுவோமா, ஆராய்ந்து கூறுவாயாக!//

இந்த கவிதையை அழகாக்கும் விஷயங்கள் மூன்று. ஓவியம் போல உறைந்த வீடு நோக்கி காதலன் யானை போல வருகிறான். எப்படிப்பட்ட யானை என்றால் சிறிய தலை கொண்ட யானை. பொதுவாக ஆங்கிலத்தில் பாடி பில்டர் எனப்படும் ஆணழகர் பலரை காணும் போது அவர்கள் உடலைவிட அவர்களின் தலை மிக சிறியதாக தெரியும். இந்த உடல் வழிப்பட்ட 'ஆல்ஃபா மேல்' தனம்தான் இங்கே யானையுடன் ஒப்பிடப் படுகிறது. இரண்டாவது அழகு இருளுக்குள் நடந்து வரும் யானை என்பது. அத்தனை பெரிய உருவம், அத்தனை ஆற்றல் கொண்ட, எடை கொண்ட உயிர், இருளுக்குள் இருளாக ஒரு சிறிய ஒலி கூட எழுப்பாமல் நகரும் வல்லமை கொண்டது. காதலன் அப்படித்தான் வருகிறான். மூன்றாவதும் இணையற்றதுமான அழகு, மேலும் கீழும் பாகன் அற்ற யானை என்பது. உண்மையில் இப்போது வந்துகொண்டிருக்கும் அந்த வேழம் பழக்கி எடுத்த வேழமா? அல்லது காட்டுயிர் வேழமா? தெரியாது. வந்துகொண்டிருக்கும் காதலனும் இப்போது இப்படிப்பட்டவன்தான்.

இரண்டாவது வகைமையில் எனக்குப் பிடித்த கவிதை கீழே,


முழந்தாள் இரும் பிடிக் கயந்தலைக் குழவி

நறவு மலி பாக்கத்துக் குறமகள் ஈன்ற

குறி இறைப் புதல்வரொடு மறுவந்து ஓடி,

முன் நாள் இனியது ஆகி, பின் நாள்

அவர் தினைப் புனம் மேய்ந்தாங்கு,

பகை ஆகின்று, அவர் நகை விளையாட்டே.


(உரை)

முழந்தாள் இரு பிடி - முழந்தாளையுடைய கரிய பிடியினது, கய தலை குழவி - மெல்லிய தலையையுடைய கன்று, நறவு மலி பாக்கத்து - கள் மிக்க மலைப்பக்கத்தூரில், குறமகள் ஈன்ற - குறத்தி பெற்ற, குறி இறைபுதல்வரொடு மறுவந்து ஓடி - குறிய கையுடைய பிள்ளைகளோடு சுற்றி ஓடி, முன் நாள் இனியதாகி - முற்காலத்தில் இனிமையைத் தருவதாகி, பின் நாள் - பிற்காலத்தில், அவர் தினை மேய்தந்தாங்கு - அவர்களுடைய தினையை மேய்ந்தாற் போல, அவர் நகை விளையாட்டு - தலைவர் நம்மோடு முன்பு நகைத்து விளையாடியது, பகையாகின்று - இப்போது பகைமையையுடையதாகின்றது.

முழந்தாள் எனில் முழவு போன்ற கால். சங்க இலக்கியத்தில் முழவு பல்வேறு சித்திரங்களுக்கு உபமானமாக பயின்று வரும். முழவு என்ன வடிவம் கொண்டதோ அந்த வடிவில் கால்களைக் கொண்ட பிடி. அதன் குட்டி, குறத்தி பிள்ளைகளுடன் சுற்றி ஆடி விளையாடுகிறது. குறி (குறில்) இறை எனில் பிஞ்சு கை (கொண்ட குழந்தை). யானை குட்டியின் குட்டி துதிக்கையும் அந்த பிஞ்சு கை போன்றதே. அவர்கள் கூடி விளையாடுகிறார்கள். இது முன்னர். பின்னர் அந்த குழந்தைகள் வளர்ந்து விடுகிறார்கள். பழைய படியே அந்த யானைகள் அவர்களுடன் விளையாட ஓடுகிறது. இப்போது அந்த யானைகள் அவர்களின் வயலை பாழ் படுத்துவதாக சொல்லி அவர்களால் விரட்டியடிக்கப்படுகிறது. நாம் என்ற நிலை நழுவி நாம் அவை எனும் பிரிவினை நிலை நிலவுடைமை வழியே உருவாகி வரும் சித்திரத்தை உணர்ச்சிகள் பொங்கும் வண்ணம் அளிக்கும் கவிதை. 

மூன்றாவது வகைமையில் பல கவிதைகள் உண்டு. இந்த வகைமையில் உச்சம் வேழத்தில் தந்தைமை எழும் கணங்களை எழுதிய கவிதைகள் என்று சொல்லலாம். சங்க இலக்கியம் நெடுக யானைக்கும் புலிக்கும் ஆகாத நிலையே காணக் கிடைக்கிறது. புலியுடன் பொருதி பலம் குன்றிய வேழத்தை அதன் தந்தம் வேண்டி வேட்டுவர் வேட்டையாடுகிறார்கள். புலியால் காயம்பட்ட வேழம் மூங்கிகள் உரசுவுது போலும் ஒலியில் தனது வலியை பிடிக்கு தெரிவிக்கிறது. செம்மலர் பூத்து செறிந்த கிளையை (புலியோ என மயங்கி) புலியை தாக்குவது போல தாக்கி உடைக்கிறது. இன்னும் பல ஆனால் அதே வேழம் தனது கன்றுக்கு புலியால் ஆபத்து எனில் எடுக்கும் ரௌத்ர உருவமே வேறு.  உதாரணம் கீழ்கண்ட அகநானூறு 347 ஆவது கவிதையின் பின்பாதி


மழை கரந்து ஒளித்த கழை திரங்கு அடுக்கத்து,  

ஒண் கேழ் வயப் புலி பாய்ந்தென குவவு அடி

வெண்கோட்டு யானை முழக்கிசை வெரீஇக்,

கன்று ஒழித்து ஓடிய புன்தலை மடப் பிடி

கை தலை வைத்த மையல் விதுப்பொடு,

கெடு மகப் பெண்டிரின் தேரும்  

நெடுமர மருங்கின் மலை இறந்தோரே.

மழை இல்லாது மூங்கிலும் காய்ந்து போன காடு. (நீர் வேண்டி யானைகள் கொள்ளும் தவிப்பு சங்க கவிதைகள் நெடுக காண கிடைக்கிறது.) அங்கே யானைக் குடும்பத்தை தாக்க வருகிறது புலி. யானைகள் நீரின்றி அது கொண்ட விடாய் அமையாது. புலிக்கு நீருக்கு பதில் குருதியே போதும், எனில் அந்தப் புலி எந்த அளவு குருதி தாகம் கொண்டிருக்கும் என்று யூகிக்க முடியும். அப்படிப்பட்ட புலி அந்த யானைக் குடும்பத்தின் வழியில் குறுக்கிடுகிறது. உச்ச ஆக்ரோஷத்தில் வேழம் எழுப்பும் பிளிறலில் அதன் பிடியே பயந்து போய் குட்டியை விட்டு விட்டு ஓடி விடுகிறது.

பின்னர் சூழல் அமைதி கொண்டதும், தொலைந்த தன் குழந்தையை தலையில் கை வைத்தபடி பதறியபடி தேடிக் கொண்டு ஓடும் தாய் போல, அந்தப் பிடி துதிக்கையை உயர்த்தி தலையில் வைத்தபடி, பதற்றத்துடன் தனது குட்டியைத் தேடி ஓடுகிறது.

(ஒண் கேழ் வயப் புலி = அடர் வண்ணமும் வலிமையும் கொண்ட புலி.

குவவு அடி = பனை மரத்தின் அடி போல உறுதியான கால். இங்கே மற்றொரு நுண் விவரணையும் சங்கக் கவிதைகளில் உண்டு. பெரும்பாலும் பிடி யானையின் யின் கால்கள் மட்டுமே முழவு உடன் ஒப்புவமை செய்யப் படுகிறது. வேழத்தின் கால்களுக்கு வேறு)

மற்றொரு கவிதையில் வரும் வேழம், தூரத்தில் எழும் புலியின் உறுமல் கேட்டு, உறங்கிக் கொண்டிருக்கும் தன் குட்டி பயந்து விழித்து விடலாகாது என, அது தனது நான்கு கால்களுக்கு இடையே பாதுகாப்பாக அமையும் வண்ணம் சென்று நின்று கொள்கிறது.

மானுட நாடகத் தருணம் அனைத்தையும் யானைகளுக்குள் வைத்து நிகழ்த்திப்பார்த்த பலப் பல சித்திரங்கள் சங்க இலக்கியப் பரப்பெங்கும் விரிந்து கிடக்கிறது. சற்றே ஆர்வம் இருந்தால் போதும் ஜெயமோகன் வாசகர்கள் எவரும் அந்த உலகின் தீவிரத்துக்குள் எளிதில் நுழைந்து விட முடியும். அங்கே கபிலர் போன்றோரில் ஜெயமோகனையும் கண்டுகொள்ள முடியும்.

***

Share:

சங்க இலக்கிய வாசிப்பு: மரபும் நவீனமும் - கடலூர் சீனு

பழைய ஜெயமோகன் கட்டுரை ஒன்றை வாசித்துக்கொண்டிருந்தேன். அதில் உரையாடலின் ஒரு பகுதியாக, செவ்விலக்கியம் என்பதன் பண்பினை வரையறை செய்கிறார். செவ்விலக்கியப் படைப்பாளி தன் புனைவின் உணர்வு தளத்துடன் 'தன்னை இழந்து' கரைந்துவிட மாட்டான். புனைவின் பெருகும் உணர்வு தளத்தினை அறிவுத்தளம் கொண்டு எல்லைகட்டி நிறுத்தி, அந்த சமன்வயம் வழியே விவேகம் கொண்டு தனது புனைவுலகின் 'சாட்சி' மாத்திரமாக அவன் விலகி நிற்பான் என்கிறார். (எனது மொழியில் எழுதி இருக்கிறேன்). 

குறுந்தொகைத் தொகுதியில் பெரும்பதுமனார் எழுதிய கவிதை ஒன்றில், அதில் அகம் சார்ந்த உணர்வுகள், புறம் சார்ந்த காட்சிகள் வழியே சமன்வயம் காண்பதன் வழியே கவிஞன் கொண்ட விவேகமான விலகலை உதாரணம் சுட்டி இருந்தார். 

அந்த உரையாடலை விடுத்து, இந்த சங்கப்பாடலை மட்டும் பார்ப்போம்.

வில்லோன் காலன கழலே; 


தொடியோள் 

மெல் அடி மேலவும் சிலம்பே; 


நல்லோர் 

யார்கொல்? 


அளியர்தாமே-

ஆரியர் 

கயிறு ஆடு பறையின், கால் பொரக் கலங்கி 

வாகை வெண் நெற்று ஒலிக்கும் 

வேய் பயில் அழுவம் முன்னியோரே. 


( பெரும்பதுமனார்)

வாசித்த அக் கணமே, கவிஞன் தொட்டெடுத்து இக்கவிதையில் இட்டு வைத்த அதே உணர்வை எந்த நவீன கவிதையின் வாசகரும் கவி அனுபவமாக அடைந்து விட முடியும். எவ்விதம்? 

பொதுவாக இங்கே ஒரு கேள்வி எழக்கூடும். சங்கச் செய்யுள்கள் தன் இயல்பியே நவீன கவிதையின் அம்சம் கொண்டதா? அல்லது சங்கச் செய்யுள்களை (அதன் இயல்பு அவ்வாறு அல்ல ஆனாலும்) அதை நவீன கவிதையாகவும் வாசிக்கலாம் எனும்படிக்கு 'புதிய' வாசிப்பு முறை ஏதேனும் அவற்றின் மேல் பிரயோகிக்கப் படுகிறதா? 

பதில், நல்ல சங்கப்பாடல்களில் பல, நல்ல நவீன கவிதையும் கூடத்தான் என்பதே. அதை நவீன கவிதை என்றாகும் அடிப்படை அம்சம் அதில் இலங்கும் 'என்றுமுள்ள இன்று' எனும் தன்மை. இந்த என்றுமுள்ள இன்று எனும் தன்மையை நவீன வாசகன் சென்று தொட தடையாக இருப்பது இரண்டு. ஒன்று, பண்டைய உரை மரபு. இரண்டு, நவீன இலக்கிய விமர்சகர்கள் மரபு மீது கொண்ட அசிரத்தை கலந்த போதாமை. 

மரபான உரை என்பது இவற்றைப் 'புரிந்து கொள்ள', அகத்திணை புறத்திணை தொல்காப்பியம் போன்றவை வழியே உருவாக்கிய 'பொருள் கொள்ளும்' வியாக்கியான மரபு. பாடலில் இயங்கும் ஒவ்வொன்றையும் தகவல் எனக் கண்டு, அவற்றை தொகுத்துக் புரிந்து கொள்ள ஒரு 'கதைப் பின்புலத்தை' உருவாக்கி அதன் மேல் அந்த பாடலை நிறுத்தி, இது இதையெல்லாம் இப்படி சொல்கிறது என்பதே அந்த மரபு. உதாரணத்துக்கு மேற்கண்ட பாடலுக்கு அதை பாலைத் திணையின் இலக்கண வரம்புக்குள் வைத்து, அதை புரிந்து கொள்ள ஒரு கதையை அதன் பின்புலமாக வைக்கும். இப்படி...

பாடலின் பின்னணி: 

ஒரு ஆடவனும் ஒரு பெண்ணும் காதலிக்கிறார்கள். அவர்கள் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறார்கள். அவர்களின் பெற்றோர்கள் அவர்களுடைய திருமணத்திற்குச் சம்மதிக்கவில்லை. ஆகவே, அவர்கள் தங்கள் ஊரைவிட்டு, வறண்ட காட்டு வழியாக வேறு ஒரு ஊருக்குப் போய்க்கொண்டிருக்கிறார்கள். வில்லேந்திய அந்த ஆடவனும்,மெல்லிய பாதங்களை உடைய அந்தப் பெண்ணும், துன்பப்பட்டு அந்தக் காட்டைக்  கடந்து செல்வதைக் கண்ட சிலர் அவர்களுக்காக இரக்கப்படுகிறார்கள்.

இந்தக் கதையின் தொடர்ச்சியாக சொற்பொருள் விளக்கம் வரும். இப்படி...

வில்லோன் = வில்லை உடையவன்; 

காலன = காலில்; 

கழல் = வீரத்தின் சின்னமாக ஆண்கள் காலில் அணியும் அணிகலன் (வளையம்); தொடி = வளையல்; 

அளியர் = இரங்கத் தக்கவர்கள்; 

கால் = காற்று; 

பொருதல் = தாக்குதல்; வாகை = ஒரு வகை மரம்; நெற்று = உலர்ந்த பழம்; வேய் = மூங்கில்; 

பயில்தல் = நெருங்குதல்; அழுவம் = நிலப்பரப்பு; முன்னுதல் = நினைத்தல், எதிர்ப்படுதல்.

தொடர்ந்து வரும் உரை;

ஆரியக்கூத்தர்கள் கயிற்றின் மேல் நின்று ஆடும் பொழுது கொட்டப்படும் பறையின் ஒலியைப் போல, காற்று தாக்குவதால் நிலை கலங்கி, வாகை மரத்தின் வெண்மையான நெற்றுக்கள் ஒலிக்கும் இடமாகிய மூங்கில் செறிந்த இந்த பாலை நிலப்பரப்பை, காலில் கழல் அணிந்த இந்த ஆடவனும் தோளில் வளையலும் தன்னுடைய மெல்லிய பாதங்களில் சிலம்பும் அணிந்த இந்தப் பெண்ணும் கடந்து செல்ல நினைக்கிறார்கள். இந்த நல்லவர்கள் யாரோ? இவர்கள் இரங்கத்தக்கவர்கள்.

இப்படிதான் சங்க இலக்கிய உரை மரபு செயல்படும். அங்கே துவங்கி, இந்த உரை மரபு ஸ்பானர் கொண்ட பல்கலைக்ழகங்கள் வழியே, மொத்த சங்க இலக்கியமும் கழட்ட இனி அதில் ஒரே ஒரு போல்ட் கூட மிச்சம் இல்லை எனும் நிலைக்கு கழற்றி அடுக்கப்பட்டு விட்டது. (பின்னும் அதில் இலங்கும் கவிதை எவராலும் தொடப்படாமல் அப்படியே எஞ்சுகிறது).  அன்றைய சங்கக் கவிஞன் இதைக் கண்டான் என்றால், தனது கவிதை காவு வாங்கப்படும் விதம் கண்டு கதறித் துடித்து விடுவான்.

மரபுக்கு கொஞ்சமும் சளைத்தது அல்ல நவீன உரை மரபு. உதாரணம் வாத்தியார் சுஜாதா அந்த கவிதைக்கு அளித்திருக்கும் இந்த உரை.


அவன் காலில் கழல்

அவள் காலில் சிலம்பு


இந்த நல்ல பிள்ளைகள் யாரோ? 


கழைக் கூத்தாடியின்

பறைக் கொட்டு போல காற்றில் வாகைமர நெற்றுகள் ஒலிக்கும் மூங்கில் காட்டுக்குள்

செல்கிறார்கள். 

முடிந்தது கதை. கையில் இரண்டு அகப்பையாம் இரண்டும் காம்பு போன அகப்பையாம் என்றொரு பழமொழி உண்டு. அதே நிலை. இத்தகு மரபு, இத்தகு நவீனம் இரண்டில் எதைக்கொண்டும் அந்தப் பாடலின் கவிதை அனுபவத்தைத் தொட்டுவிட முடியாது. 

வேறு வழி? இந்த இரண்டையும் விடுத்து, ஒரு கவிதை வாசகன் இன்றைய கவிதையை என்ன முறைமை வழியே காண்கிறானோ அதே முறைமை வழியே சங்கப் பாடல்களையும் பார்ப்பது.

உதாரணத்துக்கு நவீன கவிதை இயங்கும் களத்தின் மூன்று வரையறைகளை, நவீன கவிதை வாசகர் எவரும் இந்த சங்கப் பாடலில் காணலாம்.

முதல் வரையறை கவிதையில் தொழிற்படும் எதுவும் தகவல்கள் இல்லை. அவை நிலவை சுட்டும் விரல் போன்ற, கைகாட்டி பலகை போன்ற, தேடிச் செல்லும் நிலத்துக்கான வரைபடம் போன்ற வழிகாட்டிகள். 

மேலே கண்ட பாடலின் உரையில் மரபு நவீனம் இரண்டுமே, அவன் கால்களில் கழல் இருக்கிறது. அவள் கால்களில் சிலம்பு இருக்கிறது என்ற தகவலைச் சொல்லி நின்று விடுகிறது. தகவல்களில் இருந்து அதை நிலவை சுட்டும் விரல் என்று காணும் போதே,

காலன்ன கழலே, மெல்லடி மேவும் சிலம்பேஎன்று, கழலையும் சிலம்பையும்தான் கவி விசாரிக்கிறான் என்பதை அறிய முடியும்.

காலன்ன கழலே, மெல்லடி மேவும் சிலம்பே, இரக்கத்துக்குரிய இந்த நல்லவர்கள் யார்? 

இரண்டாவது வரையறை, கவிதையின் உணர்வு மையம் கொண்டுள்ள 'உடனடித் தன்மை'. இக்கணமே  வாசகன் அடையும் அனுபவத் தீண்டல் அது. மேற்கண்ட கவிதையில் உணர்வு மையம் எது? கவிஞன் அந்த இருவர் மீதும் பதற்றம் மீதூற கொள்ளும் இரக்கம்.

மூன்றாவது வரையறை, கவிதை தனக்குள் இயங்கும் எதையும் அந்த உடனடி உணர்வு மையத்தை வாசகர் சென்று தொடவே பயன்படுத்தும். மேற்கண்ட கவிதையின் உணர்வு நிலை எதைக்கொண்டு அடிக்கோடிடப்படுகிறது? நிலக்காட்சி மற்றும் கழைக்கூத்தாடி எனும் உதாரணம்.

இதில் இரண்டு sub text  (துணைப் பிரதி) உண்டு. ஒன்று கவிஞன் ஏன் சிலம்பையும் கழலையும் வினவுகிறான் என்பது.

சிலம்பு எனும் அணி ஒலிக்கக்கூடியது. (சிலம்புதல்= ஒலித்தல்). கண்ணகி கால் சிலம்பில் மாணிக்கப் பரல்கள் உள்ளீடாக இருந்ததை அறிவோம்.

ஆண்கள் காலில் அணியும் வீரக் கழல். அதிலும் மணி இருக்கும். 


//விசி பிணி முழவின் வேந்தர் சூடிய    

பசு மணி பொருத பரு ஏர் எறுழ்க் கழல் கால்,

பொன் தொடிப் புதல்வர் ஓடி ஆடவும்,//

உரை;

முரசு முழங்கும் பெருமை வாய்ந்த பகைவேந்தர் தம் முடியில் அணிந்திருந்த மணிகளைப் பறித்து வளவனின் புதல்வர் காலில் அணிந்திருந்த கழலுக்குள் ஒலிக்கும் மணியாக்கி மகிழ்ந்தனர்.

என்பது பட்டினப்பாலை வரிகள்.


//கழலும் அழல்விழிக் கொள்ளி வாய்ப்பேய்

சூழ்ந்து துணங்கையிட் டோடி, ஆடித்

தழலுள் எரியும் பிணத்தை வாங்கித்

தான் தடி தின்றணங் காடு காட்டில்

கழலொலி, ஓசைச் சிலம்பொ லிப்பக்

காலுயர் வட்டணை யிட்டு நட்டம்

அழலுமிழ்ந் தோரி கதிக்க ஆடும்

அப்ப னிடம்திரு ஆலங் காடே.//


சிலம்பும் கழலும் ஒலிக்கும் இந்த பாடல் வரிகள் மூத்த திருப்பதிகம் பாடல் எண் 7 இல் வருவது.

ஆக, யுவனும் யுவதியும் எட்டு வைக்க வைக்க ஒலிக்கும் கழல், சிலம்பு வசம்தான் கவிஞன் வினவுகிறான்.(இறையனார் பாடலில் கூந்தல் வாசம் குறித்து தும்பி வசம் விசாரிப்பது போல) அவன் ஏன் அவற்றிடம் பேசுகிறான். காரணம் இரண்டாவது sub text இல் இருக்கிறது. மூங்கில் செறிந்த நிலத்தை கயிறு மேல் நடக்கும் கலைஞன் அந்தக் கயிற்றின் இந்த முனையில் இருந்து அந்த முனைக்கு செல்ல, எவ்வளவு ஜாக்கிரதையாக நடந்து செல்வானோ அவ்வளவு ஜாக்கிரதையாக கவிஞன் கடந்து வருகிறார். அந்த கழைக் கூத்தாட்டதுக்கு, அந்த நிலத்தில் சுழலும் காற்றினால் பறை போல அடித்துக்கொண்டு ஒலிக்கும் வாகை மர நெற்றுக்கள் ஒலி துணை செய்கிறது. இதோ எதிர்ப்படும் இந்த நல்லவர்கள் இப்படித்தான் இந்த நிலத்தை கடந்து போக வேண்டி வரும். எப்படி சமாளிக்க போகிறார்களோ இந்த கருணைக்கு உரியவர்கள். என்று தான் கடந்து வந்த அந்த அனுபவத்தில் இருந்து இரக்கம் கொள்கிறான். அந்த பறை இசை அவனிடம் பேசிய நிலைப் படியே அவன் சிலம்பு கழல் இவற்றுடன் பேசுகிறான். 

பழைய உரை மரபு இந்தப் பாடலுக்கு உருவாக்கிய கதை பிழையானது. கவிஞன் துணையுடனும் வரவில்லை, இவற்றை அந்த துணையுடனும் பேசவில்லை. அவன் தனியே அந்த நிலத்தை கடந்து போகிறான். எதிர் வரும் யுவன் யுவதி கால் அணிகலன்களை நோக்கி பேசுகிறான் என்பது பாடலில் தெளிவாகவே வெளிப்படுகிறது. அந்த வகையில் இப்போது இந்த நவீனக் கவிதைகள் கோரும் அதே வாசிப்பில், sub text உடன் சேர,  இந்த கவிதை அளிப்பது இது...


ஒலிக்கும்

வில்லவன் கால் கழலே,


ஒலிக்கும்

தொடியோள் மெல்லடி மேவும் சிலம்பே,


யார் இந்த நல்லவர்கள்?


மூங்கில் காட்டிடை சுழலும் காற்றில், வாகை மர நெற்றுக்கள் அடித்துக்கொள்ளும். 


அந்தப் பறை இசைப் பின்னணியில், கயிற்றில் நடக்கும் கலைஞன் போல மிக கவனமாக இந்த நிலத்தை கடந்து வந்தேன்.


எதிர்ப்படும் இவர்களும் அவ்விதமே இந்த நிலத்தைக் கடக்க வேண்டுமே.

(பாவம்)

கருணைக்குரியவர்கள்.


பாடலை மீண்டும் ஒரு முறை வாசித்துவிட்டு அப்படியே கண்களை மூடி அந்த நிலத்தை கற்பனை செய்யுங்கள். கண்தொடும் தொலைவு கடந்தும் நீளும் பாலை நிலம். மூங்கில் காடு. தனிமை. சுழன்று வீசும் வெங்காற்று. அதில் அடித்துக்கொள்ளும் காய்ந்துபோன வாகை நெற்றுக்கள், இடையே தனியே நடந்து செல்லும் யுவன் யுவதி தெரிகிறார்களா? நெற்றுக்கள் மோதிக்கொள்ளும், கழைக் கூத்தாட்டப் பறை போன்ற ஒலி கேட்கிறதா, அந்த ஒலியைக் குறுக்கே கடந்து செல்லும் வீரக் கழல், சிலம்பு இணை ஒன்றின் மெல்லிய ஜோடி ஒலி கேட்கிறதா, மெல்ல அது தூரத்தில் சென்று மறைகிறதா? கவிஞன் அடைந்த அதே பதற்றத்தை நீங்களும் அடைகிறீர்களா? 

எனில் அவனது கவிதை வழியே, இன்றிலிருந்து பயணித்து, அன்றைய கவிஞனை தொட்டுவிட்டீர்கள் என்று பொருள். இப்போது நீங்களும் பெரும்பதுமனாரின் சஹ்ருதயரே.

***


Share:

செய்யுளிலிருந்து கவிதைக்கு - கடலூர் சீனு

கொண்டுகூட்டிக் கொள்ள முயலுந்தோறும்

குழம்பிப் பொருள்மாறும் அந்த சீரிளமைத் தேகம்

தளை தட்ட,


துறைவிட்டகலாது

மறுகி நிற்கிறது;


மல்லற்பேரியாற்றின்

நீர்வழிப்படூஉம்

எனது புணை. 

(மோகனரங்கன்)

பொதுவாக  எனக்கு உள்ளுக்குள் சொல்லிச் சொல்லி மகிழும் வண்ணம் எழுதப்பெறும் நவீன கவிதைகள் மிகவும் பிடிக்கும்.

பின் நவீன அலைக்குப் பிறகு கவிதை அழகியலில் சமகாலம், சிம்கார்டு, அதிகாரம், அரசியல், கட்டுடைப்பு என்றெல்லாம் பேசப்பட்டு,  திட்டமிட்டு ஒழுங்கு, சந்தம், மொழி அழகு, மற்றும் இவை போன்ற  இன்ன பிற எல்லாம் அற்ற எதிர் கவிதைகள் சைடு கவிதைகள் என்றெல்லாம் எழுதப்பட்டு அவற்றின் ஆட்டங்கள் யாவும் சலித்த பின்னர் நவீன தமிழ்க் கவிதை மீண்டும் தனது ஆதி அழகு நோக்கி மெல்ல மெல்ல திரும்பிக் கொண்டிருப்பதன் சாட்சியமாக மேற்கண்ட மோகனரங்கன் கவிதையை சொல்லலாம்.

எப்போதும் போல இக்கவிதையை பின் சென்று சரி பார்க்காமல், அது என் நினைவில் 'என்' கவிதையாக நிற்கும் வகையில் இருந்தே இதை எழுதுகிறேன். 

நேரடியான கவிதை. காமக் கடும்புனலில் தெப்பமாக அடித்துச்செல்லப் படுவதற்கு முந்தைய தயங்கி நிற்கும் கணம், அது எதனால் என்று சொல்லும் கவிஞனின் கவிக் கூற்றாக எழும் கவிதை. 

இக் கவிதை கொண்ட உணர்வு நிலை, சங்க காலம் முதல் இன்று வரை தொடரும் 'என்றுமுள்ள' ஒரு உணர்வு நிலை. அந்த உணர்வை வெளிப்படுத்தும் மொழியும் வடிவமும் செவ்வியல் தமிழின் மொழி அழகும், இலகுவான செய்யுள் ஒன்றின் வடிவ அழகை பாவனையாகவும் கொண்டது. மொழி அழகும் சந்த அழகும் கூடிட ஒரு வாசகன் சும்மா உள்ளே சொல்லி சொல்லி மட்டுமே இக் கவிதை அளிக்கும் உணர்வு நிலையை அதன் இனிமை குன்றாது மீட்டிக்கொண்டே இருக்க முடியும்.

சங்க காலத்தில் இருந்து ஒரு கவிஞர் கிளம்பி 'இன்று'ல் வந்து நின்று இக் கவிதையை வாசித்தார் என்றார், அவர் இன்றைய மோகனரங்கனை தனது சக கவியாகவே உணர்வார். அதே நிலை தான் வாசனுக்கும். அவன் இந்த  மோகனரங்கன் கவிதையின் உணர்வு தளம், மொழி அழகு இவற்றைப் பற்றிக்கொண்டு பின்னால் சென்றால் இன்றைய மோகனரங்கனுக்கும் அன்றைய கபிலனுக்கும் 'கவிதை வெளி'யின் காலத்தில் எந்த தூரமும் இல்லை என்பதை உணர்வான்.  காலத்தால் தொடர்பு அறாத கவிதை எனும்  உயிரியின் அதே உடலின் நடுக்கண்டத்தின் துவக்கம் கபிலன் என்றால் முடிவு மோகனரங்கன் என்று சொல்லலாம்.

2000 இல் நவீன கவிதை வாசிக்க வந்த பலரைப் போலவே, எனக்கும் சங்க இலக்கியக் கவிதைகள் குறித்த ஈடுபாடு ஜெயமோகன் எழுதிய சங்கச் சித்திரங்கள் நூலில் இருந்தே துவங்கியது. மெல்ல மெல்ல சங்கக் கவிதைகளை வாசிக்க நானே எனக்கொரு வழிமுறை உருவாக்கிக்கொண்டேன். அந்த வழிமுறையின் படி நான் ரசித்த வெள்ளிவீதியார் கவிதை குறித்து எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுடன் ‘திதலையும் பசலையும்’ எனும் தலைப்பில் நான் நிகழ்த்திய ரசனை உரையாடல் எனக்கு அக்கவிதைகள் வாசிப்பது சார்ந்து மேலும் பல வாசல்களை அளித்தது.  

உதாரணமாக கீழ்கண்ட வெள்ளி வீதியார் கவிதை இது வரை நமக்கு எவ்விதம் வாசிக்கக் கிடைத்தது?

கன்றும் உண்ணாது, கலத்தினும் படாது,

நல் ஆன் தீம் பால் நிலத்து உக்காஅங்கு,

எனக்கும் ஆகாது, என்னைக்கும் உதவாது,

பசலை உணீஇயர் வேண்டும்-

திதலை அல்குல் என் மாமைக் கவினே

நல்ல பசுவின் காம்பிலிருந்து சுரக்கும் பாலானது, அதன் கன்றுக்கும் அளிக்கப்படாமல், பால் கறக்கும் பாத்திரத்திலும் நிரப்பப்படாமல், வெற்று நிலத்தில் வீணாக வடிந்து செல்வதைப் போல் – என் அழகிய கருமேனியானது வனப்புக் குறைந்து, இடையும் நிறம் வெளிறி, மேனி முழுவதும் மெல்ல மெல்ல பசலைப் படர்ந்து நிற்கிறது. இத்தகு என் அழகு எனக்கும் ஆகாமல் என் காதலனுக்கும் பயன்படாமல்  அழிகிறது என்று வேதனையுடன் தன் பிரிவை எடுத்துரைக்கிறாள்.

மேற்கண்ட விதத்தில்தான் இல்லையா. ஒவ்வொரு சொல்லின் பொருள். பின்னர் ஒட்டு மொத்தமாக சொற்றொடர்கள் வழியே கிடைக்கும் ஒட்டு மொத்த பொருள். அந்த பொருளில் இருந்து அது அளிக்கும் செய்தி. மிக அழகாக சொல்லப்பட்ட செய்தி. 

மாறாக இந்த சொற் பொருள் அதன் படியிலான செய்தி விளையாட்டுக்கள் அனைத்தையும் உதறி, இதை செய்யுள் வடிவ 'கவிதை' என்று கண்டு வாசித்தால், 

கன்று ஈன்ற பசுவுக்கு அந்த கன்றின் ஆற்றலுக்கு வேண்டிய சத்துக்களுடன் முதலில் சுரக்கும் பால் தீம் பால் (சீம்பால், திரட்டுப்பால் என்று நம்மிடம் இப்போதும் புழங்குவதுதான் இந்த தீம்பால்) என்று உணர்வோம். அத்தகு பால் கன்றும் உண்ணாமல் கலத்திலும் சேராமல் மண்ணில் வீணாவது போல எனும் வரிகள் வழியே அவளது புலம்பலின் தீவிரத்தை உணர்வோம்.  ரத்தம் பாய்ந்து உன்மத்தம் கொண்டு மேனியில் சருமத்தில் நிகழும் மாறுபாடு திதலை என்றும், ரத்தம் இழந்து சோகை கொண்ட மேனியில் சருமத்தில் நிகழும் மாறுபாடு பசலை என்பதையும் உணர்ந்தால் மேற்கண்ட கவிதை கொண்டிருக்கும் எரோட்டிக் உச்சம் விளங்கும். 

ஆக சங்கக் கவிதைகளை வாசிக்க முதல் மற்றும் சரியான வழி, அவை 'அன்றைய' செய்யுள் வடிவத்தில் எழுதப்பட்ட, 'என்றுமுள்ள' உணர்வுகளைக் கொண்ட, அதை  'தனித்துவம்' கொண்ட காட்சி வழியே வெளிப்படுத்தும் 'இன்றைய' கவிதைகள் என்று அதை அணுகுவதே. 

துரதிஷ்ட வசமாக நான் சங்கக் கவிதைகளை அறிமுகம் செய்து கொள்ள தேர்வு செய்த தவறான நூல்களில் தலையாயது பொது அறிவு ஜீவி வாத்தியார், எழுத்தாளர் சுஜாதா உரை எழுதிய குறுந்தொகை 401 காதல் கவிதைகள் ஒர் எளிய அறிமுகம். 

பிழைகள் மலிந்த நூல். கன்றும் உண்ணாது என்று துவங்கும் வெள்ளி வீதியார் கவிதையை அந்த நூலில் கொல்லன் அழிசி எழுதியதாக கண்டிருந்தது.  (என்னிடம் உள்ளது முதல் பதிப்பு. அடுத்த பதிப்பில் அது திருவள்ளுவர் என திருத்தம் கண்டிருக்கலாம். தெரியவில்லை) . மேலும் சுஜாதா அவர்கள் அளித்த உரையில் ’உ’  மட்டுமே இருக்கிறது ’ரை’ யை காணவில்லை. இவற்றையெல்லாம்விட சங்கக் கவிதை ஒவ்வொன்றிலும் எந்த அம்சம் அதைக் கவிதை என்று ஆக்குகிறது என்பது சுஜாதாவுக்கு புரியவே இல்லை. உதாரணத்துக்கு சுஜாதா ’உ’ எழுதிய கீழ்கண்ட இந்த கவிதை

மாசு அறக் கழீஇய யானை போலப் 

பெரும் பெயல் உழந்த இரும் பிணர்த் துறுகல் 

பைதல் ஒரு தலைச் சேக்கும் நாடன் 

நோய் தந்தனனே- தோழி; 

பசலை ஆர்ந்தன, நம் குவளை அம் கண்ணே.

சுஜாதா உரை.

கண்ணின் நிறம் 

அழுக்குப்போக கழுவப்பட்ட யானையைப் போல பெருமழையினால் கழுவப்பட்டு பசுமைபெற்ற நாட்டைச் சேர்ந்தவன் எனக்குத் தந்த நோயால் என் கருப்பான கண் பச்சையாயிற்று.

முடிந்தது கதை. முதலில் மேற்கண்ட பாடலே சொற்பிழை கொண்டு பதிப்பிக்கப்பட்ட பாடல். அது ஒரு தலைச் சேக்கும் அல்ல, ஒரு கலைச் சேக்கும். கலை என்றால் இங்கே கலை மான்.

அது ஒரு பாறை. எப்படிப்பட்ட பாறை? 

இரும்பு போல கரிய வண்ணம் கொண்ட, கரடு முரடான சருமம் கொண்ட, மழை 'அடித்துக்' கழுவிய, மாசு அற நீராட்டப்பட்ட யானை போன்ற, பாறை. அதில் தனிமை ஏக்கம் கொண்டு அமைந்திருக்கிறது 'ஒற்றைத்' கலை மான். 

அந்த நிலத்தைச் சேர்ந்தவன் எனக்களித்த நோயால் என் குவளைக் கண்கள் பசலை வண்ணம் கொண்டதே தோழி.

இதில் காதலியின் கண்கள் கருங்குவளை என்றோ செங்குவளை என்றோ கொண்டால் அந்த வண்ணம் போய் வெளுத்து விட்ட மலராக இந்த நோயால் இப்போது அவள் கண்கள் மாறி விட்டது. 

எத்தனை வண்ணங்கள் செறிந்த  கவிதை. மழை நின்ற பசுமை வெளியில் கரும்பாறையில் நின்றிருக்கும் பொன்னிற மான் பின்னணியாக கார்வண்ண வானம். இது எதுவுமே சுஜாதாவுக்கு உள்ளே சென்று சேராவிட்டாலும் பரவாயில்லை, கண்கள் பச்சை ஆனதே என்று அவர் விளக்கியது அதி கொடூரம். பசலையில் இருந்து அவர் மனம் பசலைக் கீரைக்கு சென்று அதிருந்து பச்சைக்கு சென்று விட்டது போலும்.

ஆக சங்கக் கவிதைகளை அறிய செய்யக் கூடாத முதல் விஷயம், பிழையான, பாப்புலர் பல்துறை அறிவு ஜீவி எழுத்தாளர்கள் எழுதிய உரை நூல்களை துணை கொள்ளாதிருப்பது.

காட்சிப் பூர்வமான சங்கக் கவிதைகளைப் பொருள் கொள்ள புதிய வாசகன் அடையும் முதல் இடர் என்பது, பண்டைய உரை மரபில் உள்ள காட்சி சார் வறுமை. பசலை திதலை போன்ற அனைத்துக்கும் ஒரு வகை தேமல் என்று மட்டுமே இருக்கும். பெரும் தேமல் பிரச்சனையில்  பண்டய தமிழ் இளம் பெண்கள் சிக்கி சீரழிந்திருக்கிறார்கள் என்றே உரைகள் வழி ஒருவர் உணரக் கூடும். அதே போல ஒரு வகை மரம், ஒரு வகை பறவை, இப்படியே நீளும். கொஞ்சம் முயன்றால் இன்றைய இணைய வசதி வழியே அந்தக் குறையை தாண்டி விட முடியும். உதாரணமாக ஒரு கவிதையில் கர்ப்பமான பச்சை பாம்பு போல, இதழ் விரிக்க துவங்கும் கரும்பு என்று கவிஞர் சொல்கிறார். இரண்டு படங்களையுமே நான் இணையத்தில் கண்டெடுத்து விட்டேன். அதே போல இக் கவிதைகளில் வரும் பறவைகள் குறித்தும் சொல்லலாம். எழுத்தாளர் ஜெயமோகன் ‘குருகு’ என்றொரு கட்டுரையே எழுதி இருக்கிறார்.

காட்சி இன்பம் அளவே செவிக்கின்பம் அளிக்கும் வரிகளும் சங்க கவிதைகளில் உண்டு, ஓய் என்று அழைக்கிறது குயில், நள் என்று ஒலிக்கிறது யாமம். பசு மாட்டின் கழுத்து மணி ஓசை என இத்தகு ஒலி சார்ந்த அழகுகள் நிறைய உண்டு.

நாசி நுகர்வு சார்ந்த அழகுகளையும் நிறைய கவிதைகள் கொண்டிருக்கிறது. தேன் வாசம், மலர் வாசம் கொண்டு மழை பொழிகிறது. என்றோ பிரிந்து சென்ற காதலன் சூடி இருந்த மலரின் மணம் இப்போதும் தன் தோளில் இருப்பது போல நினைவில் எஞ்சி இருப்பதாக காதலி ஒருவள் சொல்கிறாள்.  அதிலும் நுட்பங்கள் பல உண்டு உதாரணமாக இந்த கவிதை

பெயல்கண் மறைத்தலின் விசும்புகா ணலையே

நீர்பரந் தொழுகலின் நிலங்கா ணலையே

எல்லை சேறலின் இருள்பெரிது பட்டன்று

பல்லோர் துஞ்சும் பானாட் கங்குல்

யாங்குவந் தனையோ ஓங்கல் வெற்ப

வேங்கை கமழுமெஞ் சிறுகுடி

யாங்கறிந் தனையோ நோகோ யானே.

இக்கவிதையில் பல்லோர் துஞ்சும் பானாட் கங்குலில், ஓங்கிய மலைப் பாதையில் காதலன் காதலியைத் தேடிப் போகிறான். அவனைக் கண்ட சந்தோஷம், ஆச்சர்யம் தாங்காமல் காதலி கேட்கிறாள்,  இரவில் இந்தக் கடும் மழையில் விண் நோக்கி வழி தேற வழி இல்லை. புரண்டோடும் வெள்ளத்தில் மண் நோக்கி வழி தேரவும் வழி இல்லை. எவ்விதம் எங்கள் சிறு குடிக்கு வந்தாய்? இங்கு வீசும் மெல்லிய வேங்கை மர வாசம் கொண்டா? 

செய்யுளின்படி நேரடி சொல்லுக்கு சொல் வழியே கொள்ளும் பொருளில் இல்லை இக் கவிதை. இந்த செய்யுளை கொண்டு  கூட்டிப் பொருள் கொள்ளுதல் போலவே அது அளிக்கும் காட்சி வழியே கொண்டு கூட்டி ஒரு கவிதை வாசகன் சென்றடையக் கூடிய இடம் இது. 

தொட்டு உணரும் அனுபவம் சார்ந்த அழகிய கவிதைகள் பலவற்றில் எனக்குப் பிடித்த ஒன்று கீழே 

மன் உயிர் அறியாத் துன்அரும் பொதியில்

சூருடை அடுக்கத்து ஆரம் கடுப்ப,

வேனிலானே தண்ணியள்; பனியே,

வாங்குகதிர் தொகுப்பக் கூம்பி, ஐயென,

அலங்கு வெயில் பொதிந்த தாமரை

உள்ளகத்தன்ன சிறு வெம்மையளே.

இது காதலி எப்படிப்பட்டவள் என்று காதலன் கூறுவது.

கோடையில் அவள் குளிர்ச்சி தரும் சந்தனம். எப்படிப்பட்ட சந்தனம் என்றால் எவ்வுயிரும் அணுக இயலா உயர்ந்த  மலை உச்சியில் அங்கே உறையும் தெய்வத்தின் பின்னே வளர்ந்த மரத்தின் சந்தனம். பனிக் காலத்தில் அவள் வெம்மை. எப்படிப்பட்ட வெம்மை கொண்டவள் என்றால், சூரியனின் வெம்மையை வாங்கிக் (ஐ -அழகு)  குவிந்த தாமரையின் உள்ளே பொதிந்திருக்கும் வெம்மை கொண்டவள். இயல்பாகவே தாமரை குளிர்ச்சியின் பகுதி. ஐ எனக் குவிந்த தாமரை தனக்குள்ளே பொத்தி வைத்திருக்கும் வெம்மையைக் கொண்டவள்.

ஐம்புலன் கடந்து உள்ளுணர்ந்து கொள்வதன் வழியே உவகை அளிக்கும் கவிதைகளும் உண்டு. உதாரணத்துக்கு ஒன்று

நசை பெரிது உடையர்; நல்கலும் நல்குவர்;

பிடி பசி களைஇய பெருங்கை வேழம்

மென் சினை யாஅம் பொளிக்கும்

அன்பின-தோழி!-அவர் சென்ற ஆறே

தோழி, உன் காதலன் சென்ற வெம் பாதையில், தன் பிடியின் தாகம் தணிக்க மரப் பட்டையை உரித்து உண்ணக் கொடுக்கும் வேழத்தைக் காண்பார். பெரும் காதலன்  (திரும்ப வருவார்) பெருங் கருணை மழை உன் மீது பொழிவார்.

எல்லா உணர்வுமே குறிப்பால் உணர்த்தப்பட்டுவிடும் கவிதை. காதலன் தன்னைக் களிறு என்றெண்ணும் ஒரு ஆல்பா மேல். வெம்மையில் நீருக்கான யானையின் தவிப்பு என்ன விதமாக இருக்கும்? அப்படி தனது காதலனுக்குகாக தவித்திருக்கிறாள் காதலி. அவளுக்கு  அத்தகைய்ய காதலிக்கு, இத்தகு காதலன் நல்குவது அன்பின் பெரு மழையாகத் தானே இருக்கும்.

இந்த ஐம்புலன் உள்ளுணர்வு இவற்றுக்கு வெளியே நிற்கும் அழகிய கவிதைகளும் உண்டு. உதாரணம்

காமம் ஒழிவது ஆயினும் யாமத்துக்

கருவி மா மழை வீழ்ந்தென, அருவி

விடரகத்து இயம்பும் நாட! எம்

தொடர்பும் தேயுமோ, நின்வயினானே?

விடரகம் எனில் மலைச் சாரலில் பாறை மேல் பாறை நின்று, கூரையும் முற்றமுமாக  இயல்பாக அமைந்த ஒரு பகுதி. பெரும்பாலும் சமண துறவிகள் மலை மேலே இத்தகு நிலைகளை தேர்வு செய்து தங்கிக் கொள்வார்கள். சிறந்த உதாரணம் குடுமியான் மலை சமண படுக்கைகள் உள்ள இடம். வெயில் படாது. கொட்டும் மழையில் ஒரு சொட்டு கூட உள்ளே வராது. 

விரைந்து ஓடும் அருவி, அந்த விடரகத்து சொல்கிறது, மேலே மேகங்கள் திரண்டு இடி மின்னலுடன் மழை பொழிந்து கொண்டிருக்கிறது என்று.

அந்த நாட்டை சேர்ந்தவனே 

(மழை இல்லாமல் ஆகி விட்டால்  அருவி தேய்ந்து  வரைமுற்றமும் அருவியும் கொண்ட உறவு   இல்லாமல் ஆகி  விடுவதைப்  போல)  காமம் இல்லா விட்டால் நமது உறவும்  தேய்ந்து இல்லாமல் ஆகி விடுமா?  என்று கேட்கிறாள். 

இங்கே விடரகமும் அருவியும் காதலன் காதலி போலவே பேசிக்கொள்கின்றன. அவை வெறும் இயற்கையின் அசைவு மட்டுமே அல்ல. இப்போது அவை ஆன்மாவும் உணர்வும் கொண்ட உயிர்ப் பொருட்கள் .

சங்க இலக்கியத்தை ஆக்கிய அடிப்படைக் கூறுகளில் ஒன்று இது. பாறைக்கும் அருவிக்கும் உணர்வு உண்டு என்று அறிந்திருப்பது அது. அது ஒரு ஆதிப் பழங்குடி மனம். கை வளை கழலுவது போல திரும்ப திரும்ப அதில் நிகழ்வது ஒரு செவ்வியல் மனம். இந்தக் கலவையே சங்க இலக்கிய செய்யுள்களின் அடிப்படை. இதற்குள் வெள்ளி வீதியார் கபிலர் போன்ற கவி ஆளுமைகள் அவர்களின் தனித் தன்மையுடன் அழுத்தமாகவே வெளிப்படுகிரார்கள்.

அந்த வகையில் சங்க இலக்கியப் பாடல்களை அணுகி ரசிக்க விரும்பும் துவக்க நிலை வாசகன் செய்ய வேண்டியது, சுஜாதா போன்ற பிழைகளை முதல் தேர்வாக கொள்ளாதிருப்பது. ஜெயமோகனின் சங்ககச் சித்திரங்கள் போன்ற நூல்கள் வழியே அடிப்படைக் கவிதை ரசனைப் புரிதலை அடைவது. அகம் புறம் எனும் தத்துவ நோக்கை மட்டுமே எடுத்துக்கொண்டு, துணைக்கு உதவும் சொற் பொருட்களை மட்டும் எடுத்துக்கொண்டு, திணை துறை பகுப்புகள், தலைவன் தலைவி கூற்று போன்ற வியாக்யானங்களை உதறிவிட்டு, நேரடியாகவே செய்யுள் வடிவம் கொண்ட நவீன கவிதைகள் இவை எனும் போதத்துடன் இந்த உலகில் நுழைவது. இயன்றவரை  இக் கவிதைகள் அளிக்கும் காட்சி சித்திர நுட்பங்களை தேடி காட்சியாக காண்பது. குறிப்பாக வெள்ளி வீதியார், கபிலர் போன்ற ஒரே ஆளுமையின் கவிதைகளை மட்டும் தேர்வு செய்து தொடர்ந்து வாசிப்பது.

அனைத்துக்கும் மேல் கவிதை வாசகனை இயக்கும் இக் கலை வடிவம் மீதான தொடர் ஈடுபாடும் கற்பனை வீச்சும்  அவனுக்கு சங்கப் பாடல்கள் சார்ந்த  அனைத்து வாசல்களையும் திறந்து கொடுக்கும்.

***

க. மோகனரங்கன் தமிழ் விக்கி பக்கம்

சுஜாதா தமிழ் விக்கி பக்கம்

சங்க சித்திரங்கள் வாங்க...

***

Share:

மினல் மணிக் குலம் - ஸ்ரீநிவாஸ்

காதலின் வண்ண வேறுபாடுகளைச் சொல்ல அகத்துறை இலக்கியம் பலவகை நிரந்தரப் படிமங்களை கொண்டுள்ளது. குறிப்பாக உள்ளத்து விளையாட்டுகளைச் சொல்ல பளிக்கறை, சந்தன குங்குமக் குழம்புகள், அகிற்புகை, யானையைக் கொன்ற சிம்ம பாதத்தடம், வண்டின் மயக்கம், மாணிக்க மரகதகக் கற்கள் போன்றவை. 

இவற்றுக்கிணையான ஒரு படிமம் கம்பனில் நாட்டு வளம், ஆற்று வளம் சொல்லப்படுகையில் ‘ஆற்றில் எஞ்சிய மணிகள்’ அல்லது ‘ஆற்றின் கரையோர நவமணிகள்’ என்பவை. பொதுவாக அருமணிகள் என்பவை மிகையை அழகாகக் கொண்ட நம் காவியங்களில் பரவலாக பயன்படுத்தப்படுபவை என்பது அறிந்ததுதான் என்றாலும் அதன் விந்தையான படிம வகைகளில் ஒன்று இந்த ஆற்றில் கிடக்கும் மணிகள் என்பது. நவீன இலக்கியம் எடுத்தாளாமலும் மரபிலக்கியர் பெரிதும் வாசிக்காமலும் இருப்பவற்றில் ஒன்று.

உழவர்கள் மண்ணை உழுகையில் சங்கு, மீன், பொன் ஆகியவற்றுடன் அருமணிகள் எழுந்து ஒளிவிடுவது சொல்லப்பட்டுக்கொண்டே இருக்கிறது. மாஇருஞ்சடையோனின் கற்றையில் இவை ஒளிவிடும் கணங்களென இமைத்திருக்க, கங்கை அவற்றை அள்ளி ஆர்ப்பரித்து புவியிறங்குகிறாள். சரயு முதன்முதலில் காட்டின் சந்தனமும் அகிலும் யானை மதநீரும் கொண்டு காட்டாறாக இறங்கி நகர் நுழைகையில் நகரத்தின் முகங்களென இம்மணிகள் கரைகளில் அமைகின்றன. இராமன் நுழையும் மிதிலை நகரின் சாதாரண வீதிகள் அகத்தியன் கடல் குடித்தபின் நீரற்ற மணற்பரப்பு அவற்றிலிருந்த அருமணிகளுடன் ஒளிவிட்டதுபோல வெளித்திருக்கின்றன.

ஆற்றில் கவி சொல்வது போல ஒளிர்மணிகளை காண அவற்றை அங்கே கொண்டுவந்து நாமே கொட்டி பார்த்தால்தான் உண்டு. இயல்பு அணி அல்ல இது. எண்ணிக்கையிலும் அவ்வளவு அள்ளி வைப்பதுதான் அவர் வழக்கம். ஆக, ஆற்றில் மணிகள் என்ற கற்பனைக்கு வேர் எங்கிருக்கிறது?

ஆற்றுப் பேரொழுக்கால் பல இடங்களில் இருந்து கொண்டு வந்து போடப்பட்ட என்ன ஏதென்று தெரியாமல் பலநிறங்களில் மின்னும் துண்டுகள் அன்று வேடிக்கைப் பார்த்தவனுக்கு பித்துபிடிக்க வைத்திருக்க வேண்டும். இன்னொரு வகையில் இது கிரானைட் போன்ற பலவண்ண ஒளிமாறுபாடுகளாலான ஒரே நிலப்பரப்பை குறிக்கும் அணியாகவும் இருந்திருக்கலாம். மேரு மலையை அப்படித்தான் பல வண்ணங்களை, பொன்னை பிரதிபலிக்ககூடியதாக  காளிதாசனிலிருந்தே பார்க்கிறோம். அதுவே பின்னர் ஆற்றங்கரைகளுக்கும் ஏற்றப்பட்டிருக்கலாம். 

ஈர்ந்த நுண் பளிங்கு எனத் தெளிந்த ஈரம் புனல்

பேர்ந்து ஒளிர் நவ மணி படர்ந்த பித்திகைச்

சேர்ந்துழிச் சேர்ந்துழி நிறத்தைச் சேர்தலால்

ஓர்ந்து உணர்வு இல்லவர் உள்ளம் ஒப்பது.

அறுத்து செம்மை செய்யப்பட்ட பளிங்கு போல தெளிந்த நீர், அதன் படித்துறைகளில் இழைக்கப்பெற்றுள்ள நவமணிகளுடன் படியுந்தோறும் படியுந்தோறும் அதன் நிறத்தை பெறுவதால், பல நூல்களை ஆராய்ந்தும் உண்மைப் பொருளை பெற இயலாதவரின் உள்ளம் போல் விளங்குகின்றது அந்த வாவி. 

பம்பை வாவிப் படலம். சீதையைப் பிரிந்த ராமன் உளம் கலங்கி இருக்கையில் கிஷ்கிந்தைக்கு செல்லும் வழியில் பம்பை எனும் வாவியைக் கடக்கிறான். உச்ச செவ்வியலின் அழகியலில் ஒரு பாடுபொருளை அறிமுகப்படுத்துகையில் நேரடியாகத் தொடர்பற்ற கோணங்களில் பலவகைகளிலும் இணைத்து இணைத்து பொருளேற்றி, பிரக்ஞை முழுதாக தொகுத்துக்கொள்ள இயலாத அளவிற்கு கொண்டு சென்று அங்கிருந்து நாடகத்தை தொடங்குவது இயல்பு. 

வாவியின் இயல்பாக தோற்றமாக கூறப்படும் பலவற்றில் ஒன்று இது. பலவகையான நிறங்கள் வழியாக அடித்து விலகும் இராமனின் மனம் எனக் கொள்ளலாம். அது புறச்சூழல்கள் மேல் சென்று படிகிறது. மீண்டும் விலகி உள்ளொடுங்கிய துயருக்குச் சென்று விடுகிறது. புறவுலகம் என்பது ஒரு பெரிய படித்துறை தான் என்பதே சற்று மனம் உறையச் செய்யும் கற்பனை.  ஒளிமணி வண்ணங்கள் நீரில் சுழிக்கையில் அதில் படிந்து படிந்து எதையும் பெற்றுக்கொள்ளாது ஒரு மனம் அங்கிருக்கிறது என்பதும், அது தூயதும் கூட என்பதும் இப்பாடலை ஒரு பொருளில் அமையச் செய்யாது  அலையடிக்கிறது.

அடுத்த படலத்தில் சொற்களால் தன் பேருருவம் காட்டி இராமனை தன்னை ஏற்கச் செய்யும் அனுமனின் அறிமுகத்தையும் இணைத்துப் பார்த்தால், ஆசிரியனின் வரவை எதிர்நோக்கிய மாணவனொருவனின் உள்ளக்கலக்கத்தின் இறுகிய சொற்களாக, அதன் பருவடிவாக அந்த நவமணி பித்திகை அந்நீரில் தோய்ந்திருக்கிறது. 

குவால் மணித் தடம் தொறும் பவளக் கோல் இவர்

கவான் அரச அன்னமும் பெடையும் காண்டலில்

தவா நெடும் வானகம் தயங்கும் மீனொடும்

உவாமதி உலப்பு இல உதித்தது ஒத்தது.

பொய்கையில் குவியல்களாக மணிகள் கிடக்கும் இடம்தோறும், பவளக்கோல் போன்ற சிவந்து நீண்ட கால்களையுடைய அரச அன்னங்கள் அவற்றின் பெடைகளோடு காணப்படுவது, அழியா வானகம் விண்மீன்களோடு எண்ணற்ற முழுமதிகளுடன் தோற்றம் கொண்டிருப்பது போன்றது. 

அதே பம்பை வாவி வர்ணனையில் அடுத்தப் பாடல். அன்னப்பறவை இணைகள் மகிழ்ந்திருக்கும் காட்சி. இதில் அன்னங்கள் நிலவாகவும் விண்மீன்களாகவும் தோன்றுகிறது. இதைச் சொல்கையில் மணிகளின் குவியல்களும், பவளக் கால்களும் ஏன் சேர்த்துச் சொல்கிறார்?

அன்றாட மனநிலையில், பொதுவாக மணிகள் கொண்ட பாடல்களோடு எளிதில் இணைய முடிவதில்லை. ஏனென்றால் முதலில் அவற்றை பலவகையான மின்னும் ஜிகினாப் பொருட்கள் என்றே கற்பனை செய்கிறது மனம். அவை இன்று கூச்சலிடும் அடையாளங்களாக தோன்றுவதால் நமக்கு ஒரு சிறு விலக்கத்தையும் அளிக்கலாம். 

ஆனால் கம்பன் காலத்தில் இத்தனை வகையான ஒளி என்பது மணிகளில் இருந்தே பெறப்பட்டிருக்கும் என்பதால் இவை மீதான பித்து இன்று எளிதில் உய்த்துணரக்கூடியது அல்ல. வடிவம், வண்ணம், வாசம் எனப் புலன்களை கவரும் அனைத்தின் சிறுசிறு வகைபேதங்களிலும் மனிதர்கள் பித்துக்கொண்டிருந்த காலமாக இருந்திருக்கலாம்.  

மணிகளைத் தண்வடிவ எரி எனலாம். ஒளியையே பருப்பொருளென கொண்டுள்ளவை. இந்த நுண்மைநிலையிலிருந்து தான் கவிமனம் சிதறிப் பரவியிருக்க வேண்டும். 

ஒளியைச் சொல்ல எத்தனை சொற்கள் வேண்டியிருக்கிறது. அது மின்னுகிறது. வீசுகிறது. நம்மைப் பார்க்கிறது. இல்லை இமைக்கிறது. அது கோபமா, கனல்கிறது. கான்றுகிறது, காந்துகிறது. அது தன்னைத்தான் எரிக்கிறது. எரித்து சுடர்கிறது; சுடாத சுடர் மலராகிறது. விரிக்கிறது. நாறுகிறது. வெளியை வெளித்து நிறைத்து நகைக்கிறது. தன்னில், பிறவற்றில் தோய்கிறது; மணி ஒளியை ஈனுகிறது. ஈன்று உமிழ்கிறது. உமிழ்தல் எனும் அதே பொருளில் காலுகிறது. மின்னலென வெட்டுகிறது. தங்களுக்குள் துவன்றி மிடைகிறது. அகன் வெளியில் விரிந்து பரவி பாய்ந்து செல்கிறது. 

வெவ்வேறு வகையான ஒளிவீசக்கூடிய இந்த மணிகள் இடையே இந்த சந்திரன் விண்மீன் போன்ற உறவு நிகழ்கிறது. இன்னும் விரிவான ஒரு பிரபஞ்ச கற்பனை. இன்னொரு வகைபேதம். அல்லது சொர்க்கமா? சூழ இருக்கும் அந்த மணிகள் அவர்கள் உறவில் வெளிப்படும் உணர்வுநிலைகளின், சூழல்களின் வண்ணங்களா. இவற்றைப் பார்த்து இமைத்திருக்கும் வேறு பல கண்களைச் சொல்கிறாரா? 

பவளக்கோல் போன்ற கால்கள் கொண்ட அன்னம் என்கிறார். பவளக்கோல் என்ற ஒரு பொருள் இருந்திருக்குமா? பவளக்கோல் என்ற செங்கோல் கொண்ட அரச அன்னங்களைச் சொல்கிறார். இவர்கள் அரசர் அரசியர் என்றால், அந்த நவமணிகளை குடிமக்களின் கண்களாகவும் எடுத்துக்கொள்ளலாம். தெளிவற்று சீதையின் பொருட்டு பின்னால் புலம்பிவிருக்கும் இராமன் தன் நினைவுகளின் அடுக்கில் காணும் இணைந்திருந்த தருணங்களின் தொகுப்பாக கொண்டால் இப்பாடல் மேலும் பொருளுள்ளதாகிறது. 

தவா நெடு வானகம் என்ற சொல்லாட்சியில் தவா என்பது அழியாத, இறுதியில் எஞ்சுகிற என்ற பொருள் கொண்டது. வெறும் வானமெனும் கச்சாவில் தொடங்கி அழியாத வானத்தில் தயங்கும் மீன்களும் எண்ணற்ற நிறைமதிகளும் என்ற உருவகம் வரையிலான தொலைவை யோசிப்பது இக்கலையின் மிகை எனும் முகத்தையும் அறியும் பயணமாகவும் அமையும். சில நவமணிகள் நம் கொழுமுகத்திலும் இமைக்ககூடும்.

***
Share:

ஆடவல்லானின் ஊர்த்துவம் - தாமரைக்கண்ணன் பாண்டிச்சேரி

சில நாட்களாக நண்பர்களுடன் இணைந்து கம்பராமாயணம் வாசித்து வருகிறேன். சங்கப்பாடல்களிலும் பக்தி இலக்கியத்திலும், நவீனக்கவிதைகளிலும் இல்லாத ஓரழகு காவியத்தில் இருக்கிறது. அது பத்தாயிரம் பாடல்கள் எழுதுபவனின் கரங்களில் மட்டும் குடியேறக்கூடியது. அணிகளும், கற்பனையும், அழகியலும்  விண்முட்டும் உச்சத்தை அடையும் பாடல்கள் காவியங்களில் மட்டுமே காணக்கிடைக்கும். அதுபோலவே சிற்ப அழகியலின் உச்சம் ஊர்த்துவ தாண்டவர். 

ஆடும் சிவன் எப்போதும் இங்கிருக்கும் பெரும்படிமம். கொடுகொட்டி நடம் புரியும் ஈசனை சிலம்பு பேசுகிறது. பிற்பாடு சோழர் காலத்தில் பொதுமைப்படுத்தப்பட்ட ஆனந்த தாண்டவ மூர்த்தி ஆடலின் ஒரு வடிவை மட்டும் நிலைப்படுத்தியது. இது சிதம்பரம் நடராஜரின் புகழால் நேர்ந்த கலை விபத்தாகவும் இருக்கலாம். பின் அந்த ஆனந்த நடனமிடும் வடிவம் வார்ப்புருக்களின் மூலமாக, தத்துவ இணைப்பின் மூலமாக உலகெங்கும் சிற்பக்கலைக்கு ஒரு அடையாளமாக மாறியது. உலகின் எந்த மியூசியத்திலும் ஒரு சோழர்கால நடராஜர் ஆடிக்கொண்டிருக்கிறார். பரதத்தின் நூற்றி எட்டு கரணங்களும் ஆடும் ஈசனுக்கு முன்னும் சிவன் வெவ்வேறு வடிவங்களில் ஆடிக்கொண்டிருந்திருக்கிறார். காஞ்சி கைலாசநாதர் கோவிலின் கிராத மூர்த்தியும் அர்ச்சுனனும் அம்பெடுப்பது நடனத்தின் ஒரு அசைவு போலத்தான் வடிக்கப்பட்டிருக்கிறது. ஈசனின் வீரச்செயல்களை காட்டும் பல சிலைகள், வார்ப்புருக்கள் ஒரு நடனத்தின் நிலையெனவே வைக்கப்பட்டிருக்கின்றன. கதைகள் வாய்வழியாக பாடலாக பரவியது போல கதையோடு கூடிய நடனமான கூத்து இந்த நாடு முழுவதும் பலகதைகளை ஏற்றிச்செல்லும் ஊர்தியாகவும் இருந்திருக்கிறது. இந்த நடனத்திலிருந்து ஓவியர்களும் சிற்பிகளும் தங்கள் கலைக்கான உருவங்களை எடுத்துக் கொண்டிருக்கக்கூடும். கூத்தர்களின் சிலைகளில்லாத பழங்கோவில்கள் இல்லை. 

ஊர்த்துவ தாண்டவ வடிவம், ஆடலுக்கிறைவனின் மற்றோர் வடிவம். இடக்காலை தலைக்குமேல் உயர்த்தி நிற்கும் காலன் ஊழிக்கூத்திடுகிறான் புன்னகையோடு. தல புராணங்களில்  திருவாலங்காட்டில் சிவன்  காளியை வெல்ல  இப்படி காலுயர்த்தி ஆடினார் என்று உள்ளது.தில்லையிலும் இதே கதையுண்டு.  இதையொட்டி சிற்பமரபில் நடராஜருக்கு அருகிலேயே நடனமிடும் காளியின் சிலையும் வடிக்கப்படும். சோழர் கலைக்கோவில்களின் கோட்டத்தில் ஆனந்த நட்டம் செய்யும் நடராஜர் காலடியில் காரைக்காலம்மையும் காளியும் வடிக்கப்பட்ட சிலைகளுண்டு, அழகிய உதாரணம் கங்கைகொண்ட சோழீச்சுரம். நந்தியோடும் பூதகணங்களோடும் நடமிடும் ஊர்த்துவ தாண்டவர் கைலாசநாதர் கோவிலிலிருக்கிறார். மேலும் திருப்பட்டூரில் சிவனின் ஒரு  ஊர்த்துவ நடன சிலையுண்டு என்று இரா கலைக்கோவன் தெரிவிக்கிறார். திருச்செங்காட்டங்குடியிலும் ஒரு ஊர்த்துவ தாண்டவர் இருக்கிறார். பிற ஊர்த்துவ தாண்டவ மூர்த்தி சிலைகள் தூண்சிற்பங்களாக சிற்பமண்டபங்களில் பெரும்பாலும் செதுக்கப்பட்டன, அவற்றிற்கெதிரே காளியும் தூண்சிற்பமாயினள். குறுஞ்சிற்பங்களாகவும் இவ்வடிவு கோவில்களில் உள்ளது. பிற்காலத்தில் இவர் கங்காள வடிவத்தோடிணைந்து, கங்காளம் என்னும் கருவியை இசைப்பது சிலைகளில் சேர்க்கப்பட்டது, அவிநாசியப்பர்  கோவில் தூணில் உள்ள பதினாறுகை ஊர்த்துவ தாண்டவர் அவ்வாறே இருக்கிறார். ஊர்த்துவம் என்றால் கீழிருந்து மேலாக என்று பொருள், தலைக்கு மேலே காலுயர்த்தி ஆடும் இந்நிலைக்கு மேலதிக அர்த்தங்கள் இருக்கக்கூடும். 

வார்ப்புச்சிலையாக திருவாலங்காட்டில் நடராஜர் ஊர்த்துவ நடமிடுகிறார். அவரும் வேறிடங்களில் காணாத ஒற்றைக்கொரு அழகர், தூண் சிற்பங்களும் அவருக்கும் வேறுபாடுண்டு. இவர் வார்ப்புருக்களின் சாத்தியத்தை ஏற்று, வலப்புறம் சூலமூன்றி வட்டத்திருவாசியின் மையத்திலிருந்து  மூலைக்குச்செல்லும் ஆரக்கோடுபோல இடக்காலுயர்த்தி அதன் நுனியை இடக்கையால் தொடுவதுபோன்ற பாவத்திலிருக்கிறார். இது பரதநாட்டிய கரண நிலையை விஞ்சிய கலைப்படைப்புமாகும்.காலை தலைக்கு மேலே உயர்த்தா விடினும், பக்கவாட்டில் வீசாமல், முழங்காலை மடித்த வாக்கில்  நேராக உயர்த்தினாலே அதை ஊர்த்துவம், ஊர்த்துவஜானு என்கிறார்கள், சில வார்ப்புருக்களும், மகர தோரணங்களிலுள்ள நடராஜரும் அதையொத்தவர்கள்.   

சிந்தாமணி கோவிலில் உள்ள ஊர்த்துவ தாண்டவமூர்த்தி,    எண்கரம் கொண்ட இறைவனின் இடக்கைகளில் இரண்டு நாகம், வஜ்ரம் கொண்டிருக்கிறது ஒருகை நடன முத்திரை ஒன்றை காட்ட, காதின் மகரக்குழைக்கு பின்செல்லும் இன்னொன்று தலைக்கு மேல் நின்று கனிந்து சடையின் உச்சிக்கொன்றையை நோக்குகிறது. இடக்கைகளில் ஒன்று உயரத்தூக்கிய காலின் தொடையை பற்றியிருக்க ஏனைய கரங்களில் மணியும், பாசமும், நீள்தடியொன்றும் உள்ளது.  உற்றுநோக்கினால் அது தடியின் உச்சியில் மனித உருவம் போலுள்ளது, விஸ்வக்ஷேனரை உறித்து ஒருமூட்டையாக கட்டித்தொங்க விட்டிருக்கும் பிட்சாடனரை ஒத்திருக்கிறது, பிரேதம் எனக்கொள்ளலாமா தெரியவில்லை. 

ஒரு காலை முயலகனின் முதுகில் ஊன்றி எழும்பியவாறே ஆடும் இறைவனின், மற்றோர் கால் விண்ணோக்கி உயர்ந்திருக்கிறது. உள்ளங்கால் தெரியும் வடிவு, யாளி வேலைப்பாடுகளுடன் இடையணி , இருபுறமும் தொங்கும் கச்சை, சிறுமணிகள் தொங்கும் அணிகள் செறிந்திருக்கிறது, ஆடைகளின் சிறுமடிப்பும்கூட தெளிவாகக்காணும்படி செதுக்கப்பட்டிருக்கிறது. கழுத்தில் அணிகள், உதரபந்தம், புரிநூல், ஒருகை உயர்ந்ததால் மார்பின் காம்புகளில் ஒன்று மேலேறிச்செல்கிறது. கழுத்தணியின் முடிகயிறு உயர்ந்த கையின் கக்கத்தில் படிந்திருக்கிறது. அழகிய சடாமகுடத்துடன் உள்ள முகத்தின் அருகே சென்றால் உணர்வெதும் இல்லை, சற்று தொலைவில் சென்றால் புன்னகை பூக்கிறது. மீண்டும் அருகில் சென்றால் அது மறைந்துபோகிறது. 

பரதம் போன்ற செவ்வியல் நடனங்களை ஒரு ஆண் ஆடுவதே  அவனது இயல்பை மாற்றி நளினமாகிவிடும் என்பது பொதுப்பார்வை, ஆடலை தாண்டவம் லாஸ்யம் என இரு பாலாக பிரித்து தாண்டவத்தை ஆண்களுக்கானதாக வைக்கிறது பரதநாட்டியம். இது இரண்டையும் தாண்டி எண்ணக்கூடுவது, ஆடும் இறைவனின் அசைவுகள் அனைத்தும் ஆடலுக்குட்பட்டு நளினமானவை, ஆனால் அதிலிருந்து மேலெழும் கம்பீரத்தைத்தான் இந்த நடராஜ மூர்த்தங்கள் காட்சிப்படுத்துகின்றன, இந்த ஊர்த்துவ மூர்த்தியின் திருவடி விண்ணோக்கி முறுவல் செய்து சொல்வதெல்லாம், கலையின் பால் பேதமற்ற உறுதிப்பாட்டை. அந்தக்கம்பீரத்தைத்தான் அருகிருக்கும் சிவகாமியும் நகைமொக்குடன் ஆமோதிக்கிறாள். 

ஊர்த்துவதாண்டவத்தை காரைக்காலம்மை போல வேறெவரும் பாடப்புகவில்லை, அவளை நினைக்காது இதை முடிக்க முடியாது. அம்மையின் மூத்த திருப்பதிகப்பாடல்கள் சில...


சுழலும் அழல்விழிக் கொள்ளிவாய்ப்பேய் 

  சூழ்ந்து துணங்கையிட் டோடிஆடித்

தழலுள் எரியும் பிணத்தைவாங்கித் 

  தான்தடி தின்றணங் காடுகாட்டிற்

கழல்ஒலி ஓசைச் சிலம்பொலிப்பக் 

  காலுயர் வட்டணை இட்டுநட்டம்

அழல்உமிழ்ந் தோரி கதிக்கஆடும் 

  அப்பன் இடந்திரு ஆலங்காடே


நாடும் நகரும் திரிந்துசென்று 

  நன்னெறி நாடி நயந்தவரை

மூடி முதுபிணத் திட்டமாடே 

  முன்னிய பேய்க்கணம் சூழச்சூழக்

காடுங் கடலும் மலையும் மண்ணும் 

  விண்ணுஞ் சுழல அனல்கையேந்தி

ஆடும் அரவப் புயங்கன்எங்கள் 

  அப்பன் இடந்திரு ஆலங்காடே

***


Share:

புதுப் பார்வையில் பழைய தமிழ்க் கவிதை - சி. கனகசபாபதி

ஒரே ஒரு சொல்லில், ஒரே ஒரு தொடரில் படிமம் தோன்றக்கூடும். தற்கால ஆங்கிலப்பாட்டுக்களில் இத்தகைய எத்தனைப் படிமங்கள் காணக்கிடைக்கின்றன! படிமவியலின் ஆதிகர்த்தாக்களில் ஒருவரான டி. இ. ஹுயூம்மைத் தமிழ் இலக்கியர்கள் மறந்துவிடக்கூடாது. அவர் நட்சத்திரங்கள் தோன்றும் வானத்தை ஓர் அழகுப்படிமமாக ஒரு சிறு பாட்டில் காட்டுகிறார். ‘பழசான நட்சத்திரங்கள் தின்றுபோட்ட வானத்தின் போர்வை’ (The old star-eaten blanket of the sky) என்ற இவ்வரியில் அமைந்துள்ள படிமத்தை டி.எஸ்.இலியெட்டும் பாராட்டியிருக்கிறார், நிலாவையும் வெள்ளிகளையும் மற்றொரு பாட்டில் டி.இ.ஹூயூம் பாடும்போது, சிவப்புநிற முகமுடைய குடியானவனைப்போன்ற முகம் மிகச்சிவந்த நிலா என்றும் (The ruddy moon like a red-faced farmer), நகரக் குழந்தைகள் போல வெள்ளை நிற முகங்களுடைய கவலை கொண்ட வெள்ளிகள் என்றும் (The wisiful stars with white faces like town children) உவமைகள் தோன்றப் படிமங்களை உருவாக்கியுள்ளார். இப்படியே படிமவியல் ஓர் இயக்கமாகத் தோன்றிய நாள் தொட்டுப் பல உதாரணங்கள் எடுத்துச்சொல்லலாம். தமிழில் சங்ககாலத்தில் செவ்வியல் பாங்கு படிந்த படிமங்கள் ஒரே சொல்லிலும் ஒரே தொடரிலும் எப்படி வந்துள்ளன என்று பார்க்க ஆசையுற்றேன். பல பூக்களையும் இதழ் இதழாகப் பிரித்து, எனக்கு இதமாகப்பட்ட இதழ்களை இங்கே கொஞ்சம் தர விரும்புகிறேன்.

சங்ககாலத்தில் தொழில் முன்னேற்றம் குறைவாகத்தான் இருந்திருக்கும். அக்காலச் சிறு இயந்திரத் தொழில் சார்பான சில படிமங்களை முதலில் காணலாம். பன்றிகள் ஓடிவந்ததால் அலரிப்பூக்களின் மகரந்தத் தூள்கள் தரையில் கொட்டிக்கிடந்ததை, பொன்னை உரைத்துப் பார்க்கும் உரைகல் போல இருந்தது என்று ஒரு கவிஞர் பாடியிருக்கிறார்.

‘பன்றி

அலங்குகுலை அலரி தீண்டித் தாதுகப்

பொன்னுரை கட்டளை கடுப்பக் காண்வர.’

(அகம்.178)

வெண்மையான மேகம், மண்பானையைச் சுடுகிற புகையைப்போலத் தோன்றுகிறது என்றார் மற்றொரு கவிஞர். ‘வெண்மழை கவைஇக் கலஞ்சுடு புகையின் தோன்றும்’ (அகம்.308). பாறையொன்று உலைக்களத்தின் கல்லைப்போல இருக்கிறது (‘உலைக்கல் அன்ன பாறை’ குறு. 12) என்று உவமையாகவே ஒரு படிமம் காணப்படுகிறது. எருமையின் வலிமையான கொம்புகள் இரும்பால் செய்யப்பட்டது போல இருக்கின்றன (‘இரும்பியன் றன்ன கருங்கோட்டு எருமை’ அகம். 56) என்று உவமையின் வடிவத்தில் இன்னொரு படிமம் கண்ணில் படுகிறது.

வசந்த காலத்தில் மரங்களும் கொடிகளும் எப்படி இருக்கும் என்று ஒரு பழைய கவிஞர் கற்பனை செய்திருக்கிறார். வீரர்களைப் போன்ற மரங்களைத் தழுவிக்கொண்டு பெண்களைப் போன்ற ஆடுகிற கொடிகள் அசையும் என்பது அவர் கற்பனை.

‘மள்ளர் அன்ன மரவம் தழீஇ

மகளிர் அன்ன ஆடுகொடி நுடங்கும்’

(ஐங்குறு. 400)

என அக்கவிஞர் பாடியதில் அழகான படிமம் இருக்கிறது. ஒரு சங்ககாலக் கவிஞருக்கு இளங்கீரனார் என்று சொந்தப் பெயர். அந்தி என்னும் சொல் சேர்ந்து அந்தி இளங்கீரனார் என்பது அவருக்கு முழுப்பெயர். இச்சொல் கூடச் சேர்ந்ததற்குக் காரணம் அவர் அந்திப் பொழுதைப் பாடியதுதான். தீயில் வெந்து ஆறின பொன்னைப்போல அந்தி பூத்திருந்தது என்று அவர் யாரும் பாடாத வகையில், ‘வெந்தாறு பொன்னின் அந்தி பூப்ப’ (அகம்.71) எனப் பாடியிருக்கிறார். இதுவரை பார்த்துவரும் சங்கப்பாட்டு வரிகளில் வெறும் உவமைகளே தோன்றுகின்றன என்று பேசுவதற்கில்லை. உவமையின் உயர்வு கைதூக்கிக் கொடுக்கப் படிமம் எழுந்து தோன்றுவதைக் காணமுடிகிறது. கடைசியாகப் பார்த்த அந்தியின் வர்ணனையிலும் வார்த்தைக்குள்ளே உவமைக்குள்ளே அடங்காத வகையில் படிமம் மீறி உருக்காட்டுகிறது.

ஐங்குறுநூற்றில் ‘நிலவுக்குவித் தன்ன வெண் மணல்’ என்று ஒரு வரி; அகநானூற்றில், ‘நிலவு மணல்’ என்று ஒரு தொடர். கடற்கரை மணல் நிலா ஒளியைக் குவித்துவைத்தது போல இருக்கிறதாம்.

மின்னல் மின்னுவதை, ‘மலை இமைப்பதுபோல் மின்னி’ என்று நற்றிணையில் (நற். 112) ஒரு கவிஞர் வரைந்து காட்டுகிறார். மலை தன் கண்களால் இமைப்பதுபோல மின்னல் தோன்றுகிறது என்பதில் தூய்மையான படிமம் உள்ளது. சிறியதும் பெரியதுமான பல குன்றுகள் கிடக்கும் பாலை வழி என்று பாடும்போது சங்ககாலக் கவிஞர் ஒருவர்,

‘கூளிச் சுற்றம் குழீஇயிருந் தாங்குக்

குறியவும் நெடியவும் குன்றுதலை மணந்த

சுரன்’

என்று குறிப்பிடுகிறார். அங்குங்குக் கிடந்த குன்றுகள் பேயின் உறவினர் கூடியிருந்தது போலவாம்.

மங்கிய பெரிய மேகம் தெற்குத் திசையில் செல்லுகிறது. அது அகன்ற இடத்தில் அசைந்தபடி போகிறது. வானம் மேலே இருந்து உரிந்துவிழுவதுபோல் இருக்கிறதாம் அக்காட்சி.

‘விசும்புரி வதுபோல் வியலிடத் தொழுகி

மங்குல் மாமழை தென்புலம் படரும்.’

(அகம் 24)

‘விசும்பு உரிவதுபோல்’ என்னும் சிறுதொடர் காட்டும் படிமக்காட்சி தெளிவுடைமையும் செவ்வியல் பாங்கும் கொண்டிருக்கிறது. ஒரே ஒரு உயர்ந்த படிமத்தை எழுதினால் போதும் என்று எஸ்ரா பவுண்டு கூறவில்லையா? அப்படி ஒன்றை வரைந்த அளவில் இலக்கியப் பெருமை அடைந்துவிட்ட கவிஞர்கள் சங்ககாலத்தில் உண்டு என்று சொல்வது உண்மையாகும். ஒரு பழைய கவிஞருக்குக் கங்குல் வெள்ளத்தார் என்று பெயர். அவர் ‘கங்குல் வெள்ளம் கடலினும் பெரிதே’ என்று பாடினார் இரவாகிய வெள்ளம் என்று உருவகம் ஆக்கி, அது கடலைக்காட்டிலும் பெரியது என்று சிந்தனை விரிந்து பறக்கக் கூறியுள்ளார். நினைக்கும்போதெல்லாம் புதுமை மாறாத படிமம் இரவு வெள்ளம் பற்றிய இப்படிமம்.

2

பாடும் முன்பே தெளிவு செய்யப்பட்ட ஒரு எண்ணத்தை நோக்கிச்சென்று விளங்கவைக்கும் படிமம் எதுவோ அதுவே செவ்வியல் பாங்கானது என்று சொல்லப்படுவது. ‘மலை இமைப்பதுபோல் மின்னி’, ‘விசும்பு உரிவதுபோல் வியலிடத்து ஒழுகி’ என்று வருபவை செவ்வியல் படிமவகை.

‘தீயின் குழம்புகள்! - செழும்பொன் காய்ச்சி

விட்ட ஓடைகள்!- வெம்மை தோன்றாமே

எரிந்திடுந் தங்கத் தீவுகள் - பாரடி!’

என்று பாரதி பாடிய வரிகளில் இருப்பது புனைவியல் படிமவகை. பாடும் முன்பே தெளிந்த எண்ணம் வேறாக, கவிஞன் தரும் சித்திரங்கள் வேறாக இங்கு இருப்பதே வேற்றுமைக்குக் காரணம்.

‘அருவிகள் வயிரத் தொங்கல் 

அடர்கொடி பச்சைப் பட்டே 

குருவிகள் தங்கக் கட்டி

குளிர்மலர் மணியின் குப்பை’

என்று பாரதி போலவே பாரதிதாசன் பாடியதில் புனைவியலே இருக்கிறது. இவர் இருவரையும் குறிப்பிட இங்கு நேர்ந்துவிட்டதால் பிச்சமூர்த்தியைப் பற்றியும் நினைக்கத் தோன்றுகிறது. ‘இருளும் ஒளியும்’ என்னும் நீண்ட பாட்டில்,

‘ரவியான பொன்பருந்து

விடுதலையாய் வட்டமிட்டான்;

ஒளியான பொன்பசுக்கள்

குதித்துவந்து மூச்சுவிட்ட’

என்று பிச்சமூர்த்தி இன்று பாடுகிற வரிகளில் பழைய சங்ககாலப் பாட்டுக்களில் நாம் காணத்தகுந்த செவ்வியல் பாங்கு மரபு கொழிக்கிறது.

பாடும் முன்பே தெளிவுசெய்யப்பட்ட ஒரு எண்ணத்தை வைத்து, புறநானூற்றில் பழந்தமிழ்க் கவிஞர் ஒருவர் பாடிய படிமவியல் பாட்டை இங்குக் காணவேண்டும் என்பது என் ஆர்வம்.

அப்பாட்டைப் பாடியவர் சாத்தந்தையார். அவர் பாட்டின் கதைக்கரு இரண்டு மல்யுத்த வீரர்களின் மல்யுத்தம் பற்றியது. அவர்களில் ஒருவன் போர்வைக் கோப்பெருநற்கிள்ளி. இன்னொருவன் ஆமூர்மல்லன். இருவரும் நிகழ்த்திய மற்போரின் விரைவைக் கண்ட சாத்தந்தையார் அவ்விரைவை மட்டும் பாட எடுத்துக்கொண்டு சிறுபாட்டாகப் பாடியிருக்கிறார். மிகவும் ஆச்சரியமான உவமை ஒன்றால் அந்த மற்போரின் விரைவை அவர் பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.

கட்டில் கட்டுகிற ஒரு கீழ்மகன் (அவன் பிறந்த குலம் தாழ்ந்தது என்று கருதப்பட்டதாகத் தெரிகிறது) அடுத்த ஓர் ஊருக்கு வந்திருக்கிறான். அவனுக்கு ஒரு வீட்டில் வேலை கிடைத்தது. அங்கே கட்டில் கட்டிக்கொண்டிருக்கும்போது, தனது ஊரில் திருவிழா தொடங்கிற்று என்றும், வீட்டில் தன் மனைவி பிள்ளை பெற இருக்கும் மாதம் என்றும், பெய்கிற மழை நிற்காத சூரியன் சாய்ந்த மாலைப்பொழுது என்றும் அவன் நினைத்த வண்ணமே இருக்கிறான். வெளியே போகமுடியாது அவனால், மழையோ பெய்கிறது. மழை நிற்கும் என்ற அறிகுறியே இல்லை. மாலை கழிந்து இரவு வந்துவிட்டால் என்ன செய்வது? ஊரிலோ இன்பமான திருவிழாவில் தான் உதவி செய்யவேண்டாமா? அவன் மனைவிக்கு அவனேதான் துணை. மனைவியின் மெய் நோவுக்கு உதவிசெய்யவேண்டியதும் அவன் கடமை. அவளுக்கு இப்போது என்ன துன்பமோ? இப்படியெல்லாம் நினைக்கும் கட்டில் கட்டும் அத்தொழிலாளியின் கையில் தைக்கும் ஊசி இருக்கிறது: ஊசியில் வார் கோத்திருக்கிறது. அவன் கையிலுள்ள ஊசி அச்சமயம் மன ஆத்திரம் காரணமாக எவ்வளவு விரைவாக ஆடும்? ஆமூர் மல்லனுடன் கோப்பெருநற்கிள்ளி செய்த மற்போர் அந்த ஊசியைக் காட்டிலும் விரைந்தது.

இப்படிக் கூறித் தம் பாட்டை சாத்தந்தையார் முடித்திருக்கிறார். பாட்டையே பார்ப்போம்.

‘சாறுதலைக் கொண்டெனப் பெண்ணீற் றுற்றெனப்

பட்ட மாரி ஞா ன்ற ஞாயிற்றுக்

கட்டில் நிணக்கும் இழிசினன் கையது

போழ்தூண்டு ஊசியின் விரைந்தன்று மாதோ

ஊர்கொள வந்த பொருநனொடு

ஆர்புனை தெரியல் நெடுந்தகை போரே.’

(புறம்.82)

(சாறு - திருவிழா. பெண்ஈற்று - மனைவி பிள்ளை பெறுவது. ஞான்ற - சாய்ந்த. இழிசினன் - கீழ்மகன். போழ் - வார்)

முதலில் இப்பாட்டில் வெளியீடுபெறும் மற்போரின் விரைவு கவிஞரால் நேரில் காணப்பட்டது என்றும், அந்த விரைவைப் பாடவேண்டும் என்பதே அவர் மனத்தில் தெளிந்த எண்ணம் என்றும் நாம் கண்டு அறிகிறோம். தம் எண்ணத்தை நோக்கியே மற்ற சித்திரங்கள் எல்லாம் விளக்கி நிற்க, அவர் பாட்டைப் படைத்திருக்கிறார். எனவே சாத்தந்தையாரின் இப்பாட்டு செவ்வியல் பாங்கானது என்பது சொல்லாமல் விளங்கக்கூடியது.

இதில் ஒரு சின்னஞ்சிறிய கதைக்கரு மிகவும் சாதாரணமானது. இரண்டு மல்லர்களின் மல்யுத்த விரைவு மட்டுமே இங்கு வரும் கதைக்கரு. இதனால் எந்த நீதிக்கும் எந்தத் தத்துவ தரிசனத்துக்கும் ஒருவழியும் தோன்றவில்லை. கண்ணால் கண்ட ஒரு காட்சியின் வர்ணனை ஒன்றையே இப்பாட்டில் கவிஞர் பாடியிருக்க நாம் காண்கிறோம். இது வர்ணனைப் படிமம் (Descriptive image) அமைந்த பாட்டு என்று சொல்லலாம். காட்சியொளிப் படிமத்தினும் வர்ணனைப் படிமம் வகையில் வேறானது. இதிலுள்ள வர்ணனை மற்போரின் விரைவு என்னும் கதைக் கருவை அழுத்திக் கெடுத்துவிடவில்லை கதைக்கருவுக்கு வர்ணனை நிறம் ஊட்டிப் பொலிவாக்குகிறது.

அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு பொருள்களையும் பற்றிப் பாடினால்தான் பாட்டா? நான்கில் ஒன்று பற்றிய நீதியைக் கூறுவதுதான் பாட்டா? ஒரே ஒரு படிமத்துக்காக நீதியின் பக்கமே திரும்பாமல் ஒரு வர்ணனை பொருந்திவரப் பாடுவதும் பாட்டு என்று புறநானூற்றில் சாத்தந்தையார் தெரிவிக்கிறார் நமக்கு. அவர் பாட்டின் நடுவே வரும் ‘விரைந்தன்று’ என்னும் ஒரு சொல் படிமத்திலுள்ள உணர்ச்சிப் பாங்கானது என்று காணலாம்.

ஆமூர்மல்லனுடன் மற்போர் நடத்திய பெருநற்கிள்ளியின் கைகளும் கால்களும் எவ்வளவு விரைந்து ஆடியிருக்கும்? கட்டில் கட்டும் தொழிலாளியின் கையிலுள்ள ஊசியின் விரைவை உவமையாக்குகிறார் கவிஞர் என்று கண்டோம். வெறுமனே ஒரு வர்ணனை மட்டும் இல்லை இங்கு. உணர்ச்சிப் பாங்கான படிமத்தையே காண்கிறோம்.

இதன் உருவம் ஆசிரியப்பாவிலேயே இலகுந்தன்மை கொண்டு நிற்கிறது. அதாவது எதுகை மோனையின் கனம் பெற்றில்லை. சிறு சொற்றொடர்கள் பின்னி வருவது புதுக்காலப் பாணிக்கு ஒக்கும் என்னலாம்.

3

இதேபோல வர்ணனைப் படிமம் கொண்ட மற்றும் சில பாட்டுகள் சங்ககால இலக்கியத் தொகுதியிலிருந்து எடுக்கலாம். வேறொரு புறநானூற்றுப் பாட்டு இதே வகையில் இருந்தாலும் இதற்குத் தன் வழியில் வேறுபட்டும் விளங்குவதைத் தொடர்ந்து பார்க்கலாம்.

மார்க்கண்டேயனார் என்னும் கவிஞர் பூமாதேவி அழுத அழுகையை ஒரு பாட்டாகப் பாடியிருக்கிறார். அவர் பூமியை ஒரு மகள் என்று உருவகம் செய்து, விசும்பு முகமாக ஞாயிறு திங்கள் என்னும் இருசுடர்கள் கண்களாக உடையவள் என்றும் உருவகத்தை மேலும் அழகுபடுத்தி முழுமையாக்கிக் கூறியுள்ளார். காற்றும் செல்லாத வான மண்டலத்தில் தமது ஆணைச் சக்கரங்களைப் போரின் முன்னே செலுத்தி வென்று, மறுபடியும் பகைவர் வரவில்லை என்பதால் செருக்குக் கொண்ட அரசர்கள் எத்தனை பேர்? அவ்வரசர்கள் எல்லாம் செல்லவும், நான் மட்டும் இன்னும் செல்லாது, விலை மகளிரைப்போலப் பலர் என் அழகைப் புகழ்ந்துகூற இப்பொழுது இருக்கிறேன் என்று நிலமகள் அழுவதாகக் கவிஞர் கற்பனையுடன் பாடியுள்ளார்.

இவர் பாட்டில் நிலமகளின் வர்ணனையுடன் வான மண்டலம் பற்றிய வர்ணனையும் அரசர்களின் ஆணைச் சக்கர வர்ணனையும் அவற்றைக்கொண்டு புரிந்த போரின் வர்ணனையும் ஒன்றி இணைந்து வருகின்றன.

‘மயங்கிருங் கருவிய விசும்பு முகனாக

இயங்கிய இருசுடர் கண்ணெனப் பெயரிய

வளியிடை வழங்கா வழக்கரு நீத்தம்

வயிரக் குறட்டின் வயங்குமணி ஆரத்துப்

பொன்னந் திகிரிமுன் சமத்து உருட்டிப்

பொருநர்க் காணாச் செருமிகு முன்பின்

முன்னோர் செல்லவும் செல்லாது இன்னும்

விலைநலப் பெண்டிரின் பலர்மீக் கூற

உள்ளேன் வாழியர் யான்எனப் பன்மாண்

நிலமகள் அழுத காஞ்சியும்

உண்டென உரைப்பரால் உணர்ந்திசி னோரே’

(புறம்.365)

(வளி - காற்று. வழக்கரு நீத்தம் - உயிர்கள் செல்ல முடியாத விசும்பு. திகிரி - ஆணைச்கக்கரம். காஞ்சி - நிலையாமை. உணர்ந்திசினோர் - உணர்ந்தவர்)

இப்பாட்டில் நிலமகளைப் பற்றிய உருவகம் வந்துள்ள படிமம் சிறப்பானது. அரசர்களின் செருக்கைப் பலவாறு அழகுறக் குறிப்பிட்டு, அவ்வரசர்கள் விண்ணுலகு செல்லவும் என அவர்களின் முடிவைக்கூறிக் கடைசியில் தானும் அரசர்களுடன் செல்லாது இன்னும் இருப்பதற்கு வருந்தி நிலமகள் கூறுவதை உணர்த்துகிறார் கவிஞர். அங்கதம் வரும் குறிப்புடன் மார்க்கண்டேயனாரின் இப்பாட்டு நம் காலத்திற்கும் புதுமையுணர்வு தருவதாக உள்ளது.

இதன் உருவம் பார்த்தால், முதலில் ஒளிவீசும் வர்ணனைப் பகுதி. அதற்கேற்ப வார்த்தைகளில் ஒரு ஜொலிப்பு. வரவர ஒளியின் வீழ்ச்சி, இவ்வாறு ஒலிநயம் சிறந்திருக்கிறது காணலாம்.

இது வர்ணனைப் படிமம் அமைந்த பாட்டானாலும் தத்துவ தரிசனமும் தருகிறது. ஆனால் கடைசியில்.

‘நிலமகள் அழுத காஞ்சியும்’

உண்டென உரைப்பரால் உணர்ந்திசி னோரே’

என்று நீதிப்படுத்தும் நோக்கம் புலப்படக் கவிஞர் பாடிவிட்டார். நிலமகளின் அழுகையை அப்படியே சொல்லி நிறுத்திவிட்டிருந்தால் நிலமகள் படிமத்தின் உயர்ச்சி முதலில் தொடங்கிய தொடக்கத்திற்குச் சரிக்கட்டி மிகவும் பொலிவு பெற்றிருக்கும் என்று கருதலாம். பாட்டு பழையதாக இருக்கலாம். இருந்தும் ஒரு உவமை, ஒரு வர்ணனை, ஒரு உருவகம் என்பவற்றின் இடையே படிமக்கோலம் போடும் வகையில் அப்பழைய பாட்டு நமது பார்வையில் பதிவாகக்கூடியது என்பது உண்மை என்றே தெரிகிறது.

***
இக்கட்டுரை டிசம்பர், 1963 மாத எழுத்து இதழில் வெளி வந்தது.

நன்றி: எழுத்து இதழ்; 


***
Share:

தூண்கள் இல்லா தோரணங்கள் - ஆனந்த் ஸ்ரீனிவாசன்

நம்மைச் சுற்றியுள்ள இயற்கையில் நாம் நம்மை காண விழைகிறோம். புற இயற்கை நிகழ்வுகளையும் அதன் விதிகளையும் ஏதோ ஒரு வகையில் நம்முடையதேயான அனுபவங்களாக்கிக் கொள்ள விரும்புகிறோம். பறவை பற்றிய, விலங்கு பற்றிய நமது அவதானிப்புகளை நமது வாழ்வோடு தொடர்புறுத்திக் கொள்கிறோம். அவை என் அழகியல் உணர்வையும் உன்னத விழைவையும் தூண்டவில்லை என்றால், … வயல்களிலும், வனங்களிலும் நான் கற்றவை என் சகமனிதர்களைப் பற்றி நான் அறிந்தவற்றோடு ஒத்துப்போகவில்லை என்றால் அதில் எனக்கு ஆழ்ந்த ஈடுபாடு இருக்க வாய்ப்பில்லை.

பொதுவாக, மனிதன் இயற்கையை அவதானிப்பது குறித்து ஜான் பர்ரோஸ் தனது “இயற்கையின் வழிகள்” என்ற நூலில் சொல்வதை கவிதைக் கலையோடு பொருத்திப் பார்ப்பது இனிய அனுபவமாகக்கூடும்.

கவிதை படைத்துக் காட்டும் உவமை, குறியீடு, படிமம், தற்குறிப்பேற்றம் இவற்றில் எல்லாம் இயற்கை காட்சிகளும் நிகழ்வுகளும் மண்டிக் கிடப்பது புதுமையானதோ அரிதானதோ அல்ல.  ஆனால், காளிதாசனை படிக்கையில் அவரளவுக்கு இயற்கையோடு முழுமையாக ஒன்றிய வேறொருவர் இருக்க முடியுமா என்றே தோன்றுகிறது. பார்ப்பதற்கு இது அதைப் போல் இருந்தது, இதன் மணம் அதனுடையதைப் போல் இருக்கிறது, இந்த ஒலி அந்த ஒலியை நினைவுறுத்தியது, இந்தச் சுவை அந்தச் சுவையை ஒத்திருந்தது என புலன்கள் சார்ந்து உவமைகளை அடுக்கும் கவி மெய்ப்பாடுகளை, உணர்வு நிலைகளை சொல்லவும் கூட இயற்கையை துணைக்கழைக்கிறார். நிகழ்வுகளை, புராணச் செய்திகளைக் கூட இயற்கைக் காட்சி அல்லது நிகழ்வைக் கொண்டு கடத்திவிடுகிறார். 

ரகுவம்சத்தில் காளிதாசன் காட்டும் எல்லா இயற்கைக் காட்சிகளும்/நிகழ்வுகளும் ஆர்வமூட்டுபவை. எடுத்துக்காட்டாக அவற்றில் சில:

திலீபன் என்னும் அரசனின் பெருமைகளை கூறும்போது, மனுவின் குலத்தில் திலீபன் தோன்றியதை பாற்கடலில் நிலவெழுந்ததுடன் ஒப்பிடுகிறார்.

[ததன்வயே ஶுத்திமதி ப்ரஸூத: ஶுத்திமத்தர:

திலீப இதி ராஜேந்து: இந்து: க்ஷீரநிதாவிவ

பரிசுத்தமான அம்மனுவின் வம்சத்தில், மிகவும் பரிசுத்தனான திலீபன் என்ற, சந்திரன் போன்ற அரசன் பாற்கடலில் சந்திரன் பிறந்ததுபோல பிறந்தான்]

சுறாவும் முத்தும் ஒருங்கேயுள்ள ஆழிபோல், அஞ்சத்தக்கதும் விரும்பத்தக்கதுமான அரசர்க்குரிய பண்புகொண்டிருந்தான் திலீபன் என்கிறார்.

[பீமகாந்தைர்ந்ருபுணை: ஸ பபூவோபஜீவனாம்

அக்ருஷ்யஶ்சாபிகம்யஶ்ச யாதோரத்னைரிவார்ணவ:

அச்சம் உண்டாக்குவனவும் விரும்பத்தக்கனவுமான அரசர்க்குரிய குணங்களால், அவன் நீர்விலங்குகளும் ரத்தினங்களும் உள்ள கடல் போல, தன்னை அண்டிப்பிழைப்பவர்களுக்கு அவமதிக்க முடியாதவனாகவும் அணுக முடிந்தவனாகவும் இருந்தான்]

குடிகள் செழிக்கவே வரி விதித்த திலீபனை வாரி வழங்கவே ஆவி கொள்ளும் ஆதவனுடன் ஒப்பிடுகிறார். 

[ப்ரஜானாமேவ பூத்யர்த்தம் ஸ தாப்யோ பலிமக்ரஹீத்

ஸஹஸ்ரகுணமுத்ஸ்த்ரஷ்டும் ஆதத்தே ஹி ரஸம் ரவி:

அவ்வரசன் மக்களின் செல்வத்தின் பொருட்டே அவர்களிடமிருந்து வரியை வாங்கினான்; சூரியன் ஆயிரம் மடங்காக கொடுப்பதற்காகவே நீரை எடுத்துக்கொள்கிறான் அன்றோ!]

நாட்டில் அரசன் உலா செல்கையில் வழியில் இருபுறமும் தூண்களை நட்டு தோரண மாலைகளை கட்டுவது வழக்கம். திலீபனும் அவன் மனைவியான அரசி சுதக்ஷிணையும்  காட்டு வழியே சென்றபோது வானில் வரிசையாகப் பறந்த கொக்குகள் தூண்களில்லா தோரணங்கள் போலத் தோன்றியது என மிக அழகிய ஓவியத்தை வரைந்து காட்டுகிறார் கவி. 

[ஶ்ரேணீபந்தாத் விதன்வத்பி: அஸ்தம்பாம் தோரணஸ்த்ரஜம்

ஸாரஸை: கலநிர்ஹ்லாதை: க்வசிதுன்னமிதானனௌ

வரிசை அமைப்பினால் தூண்களற்ற தோரணமாலை போல் இருப்பவைகளும், இனிய ஒலி எழுப்புபவைகளுமான கொக்குகளை முகம் நிமிர்த்தி பார்த்தபடி சென்றனர்]

சிவப்பு நிறப் பசுவான நந்தினியின் மேல் பாய்ந்த சிங்கம், தாதுப்பொடிகள் நிறைந்த மலைமுகட்டில் பூத்த காயவிளை மரம்போல் இருந்தது என்று ஒரு நிகழ்வை காட்சிப்படுத்துகிறார். இயற்கையின் வண்ணங்களைப் பற்றிய அவரது நுட்பமான மனப்பதிவுக்கு இது சாட்சியாக இருக்கிறது.

[ஸ படிலாயாம் கவி தஸ்திவாம்ஸம் தனுர்தர: கேஸரிணம் ததர்ஶ

அதித்யகாயாமிவ தாதுமய்யாம் லோத்ரத்ருமம் ஸானுமத: ப்ரஃபுல்லம்

வில்லேந்திய அவ்வரசன், தாதுப்பொடிகள் நிறைந்த மலையின் மேல்பகுதியில் உள்ள காயவிளை மரமென சிவந்த நிறமுடைய பசுவின்மேல் இருந்த சிங்கத்தை கண்டான்]

மலையிலிருந்த பிலத்தில் இருந்தபடி சிங்கம் தனது பற்கள் தெரியும்படி திலீபனைப் பார்த்து சிரிக்கிறது. இதை, பில இருளை பல்லொளியால் துண்டாடிய சிரிப்பு என்கிறார் கவி. இருண்ட பின்புலத்தில் பளீரெனத் தெரியும் பற்களைச் சொல்லி அந்த நிகழ்வை காட்சிப் படுத்துகிறார்.

[அதாந்தகாரம் கிரிகஹ்வராணாம் தம்ஷ்ட்ராமயூகை: ஶகலானி குர்வன்

பூய: ஸ பூதேஶ்வரபார்ஶ்வவர்தீ கிஞ்சித்விஹஸ்யார்தபதிம் பபாஷே

சிவபிரானுடைய சேவகனாகிய அச்சிங்கம் சிறிது சிரித்து பற்களின் ஒளியால் மலை குகைகளுடைய இருளை சிறுதுண்டுகளாக செய்துகொண்டு அரசனை நோக்கி மீண்டும் பேசிற்று]

மழைக்காலம் முடிந்து கூதிர்காலத்தில் ரகு என்பவன் (திலீபனின் மைந்தன்) போர்ப்பயணத்தை தொடங்கினான் என்பதை இந்திரனும் ரகுவும் வில்லை எடுத்துக்கொண்டார்கள் என்று சொல்கிறார் கவி.

[வார்ஷிகம் ஸஞ்ஜஹாரேந்த்ரோ தனுர்ஜைத்ரம் ரகுர்ததௌ

ப்ரஜார்தஸாதனே தௌ ஹி பர்யாயோத்ருத்கார்முகௌ

இந்திரன் மழைக்கு அறிகுறியான (வான) வில்லை (வானிலிருந்து) எடுத்துக்கொண்டான். ரகு வெற்றியையே அளிக்கின்ற வில்லை எடுத்துக்கொண்டான். மக்களைக் காக்க இருவரும் மாறி மாறி வில்லை எடுத்தனர்]

ரகு வங்க மன்னர்களை வென்று அவர்களை மீண்டும் அரச பதவியில் இருத்தி அவர்கள் அளித்த பொருள்களால் மேலும் செல்வந்தனான நிகழ்வை அரிய உவமை ஒன்றின் வழியே சொல்கிறார்.

[ஆபாதபத்மப்ரணதா: கலமா இவ தே ரகும்

ஃபலை: ஸம்வர்தயாமாஸுருத்காதப்ரதிரோபிதா:

தாமரை போன்ற அவன் அடிகளை வணங்கியவர்களும், மீண்டும் அரச பதவியில் நியமிக்கப்பட்டவர்களுமான வங்க மன்னர்கள் (நாற்றங்காலிலிருந்து) பெயர்த்து நடப்பட்டவையும் (தங்கள்) வேருக்கு அருகிலுள்ள தாமரை வரையில் வணங்கி இருப்பவையுமான நெற்பயிர்களைப் போல (பலவகை) பொருள்களால் ரகுவை செல்வமுடையவனாகச் செய்தனர்]

தென் திசைப் பாண்டியர்கள் ரகுவிடம் பணிந்ததை கூறும் வரிகள்:

[திஶி மந்தாயதே தேஜோ தக்ஷிணஸ்யாம் ரவேரபி

தஸ்யாமேவ ரகோ: பாண்ட்யா: ப்ரதாபம் ந விஷேஹிரே

தெற்கு திசையில் சூரியனுடைய ஒளிகூட குன்றிவிடுகிறது. அதே திசையில் ரகுவின் பெருமையை பாண்டிய மன்னர்கள் தாங்கவில்லை]

தக்ஷிணாயனத்தில் சூரியன் தென் திசையில் வரும்போது அவனது ஒளி குறைவது இயற்கை. இதற்குக் காரணம் பாண்டியர்களிடம் அவன் அஞ்சுகிறான் என்பது கவியின் கற்பனை. அவ்வளவு வீரமுடையவர்களான பாண்டியர்களாலேயே ரகு தம்மிடம் வருகையில் அவனது வீரப் பெருமையை தாங்கமுடியவில்லையாம்.

காவியத்தில் முக்கிய பேசுபொருளாக இருப்பதே இயற்கைதான்; கவி தீட்டும் பேரோவியத்தில் தூரிகையாகவும், வண்ணங்களாகவும், சீலையாகவும் இருப்பதே இயற்கைதான் என்று எண்ணுமளவுக்கு இயற்கை ஒன்றிக் கலந்திருக்கிறது. திசையெங்கும் அழகு செய்யும் தூண்களில்லா தோரணங்கள் காவியத்தை ஒளிரச் செய்கின்றன.

***


Share:
Powered by Blogger.

இசுமி சிகிபு கவிதைகள் - கடலூர் சீனு

இசுமி சிகிபு, 10 ஆம் நூற்றாண்டு ஜப்பானின் முக்கிய கவிஞர். ஹெயான் அரசவையை சேர்ந்த அரசவை  கவிஞர். அரசவைக்  காதல் பாடல்கள் எனும் வகைமையில், தங்...

தேடு

முந்தைய இதழ்கள்

Labels

அபி (14) அரவிந்தர் (1) அருண் கோல்ஹட்கர் (1) அறிமுகம் (1) அஜிதன் (1) ஆ. அமிர்தராஜ் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆதித்ய ஸ்ரீநிவாஸ் (1) ஆதிமந்திய (1) ஆத்மாநாம் (3) ஆவுடையக்காள் (1) ஆனந்த் (1) ஆனந்த் குமார் (9) இசுமி சிகிபு (1) இசை (11) இந்தி (7) இரா. கவியரசு (1) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (3) உன்னத சங்கீத (1) எதிர்வின (2) எம். கோபாலகிருஷ்ணன் (2) எம்.எஸ். கல்யாணசுந்தரம் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஸ்ரா பவுண்ட் (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (5) க.நா. சுப்பிரமணியம் (3) க.நா. சுப்ரமணியம் (18) கட்டுரை (11) கண்டராதித்தன் (1) கண்டனம் (1) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கருத்தரங்கு (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (2) கல்பற்றா நாராயணன் (5) கல்பனா ஜெயகாந்த் (2) கவிதை (286) கவிதையின் மத (1) கவிதையின் மதம் (2) காரைக்கால் அம்மைய (1) காரைக்கால் அம்மையார் (2) கார்த்திக் பாலசுப்ரமணியன் (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) கிரிராஜ் கிராது (3) குமரகுருபரன் விருது (8) குன்வர் நாராயண் (1) கே. சச்சிதானந்தன் (1) கேரி ஸ்னிடர் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (4) சங்க இலக்கியம் (4) சங்கர் கணேஷ் (1) சசி இனியன் (1) சஞ்சய் சௌத்ரி (1) சதீஷ்குமார் சீனிவாசன் (7) சந்தப்பாடல்கள் (1) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (5) சம்யுக்தா மாயா (6) சாரு நிவேதிதா (1) சார்லஸ் சிமிக் (1) சீர்மை பதிப்பகம் (1) சுகந்தி சுப்ரமணிய (1) சுகுமாரன் (6) சுந்தர ராமசாமி (2) சுனில் கிருஷ்ணன் (1) செல்வசங்கரன் (2) சோ. விஜயகுமார் (4) சோலைக்கிளி (1) ஞானக்கூத்தன் (1) டி.எஸ். எலியட் (1) டி.ஏ. பாரி (1) தாகூர் (1) தாஸ் வைத்ய் (1) தி.சோ. வேணுகோபாலன் (1) திரிகூட ராசப்ப கவிராயர் (1) தூயன் (1) தேவதச்சன் (8) தேவதேவன் (31) தேவேந்திர பூபதி (1) ந. பிச்சமூர்த்தி (1) ந. ஜயபாஸ்கரன் (1) நகுலன் (3) நித்ய சைதன்ய யதி (1) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (4) பாபு பிரித்விராஜ் (2) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (4) பிரான்சிஸ் (1) புதுமைப்பித்தன் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (2) பெருந்தேவி (1) பைபிள் (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (4) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (10) மரபு கவிதை (8) மராட்டி (3) மலையாள (1) மலையாளம் (1) மனுஷ்யபுத்திரன் (2) மா. அரங்கநாதன் (1) மு. சுயம்புலிங்கம் (1) முகாம் (2) மொழிபெயர்ப்பு (17) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யாக்கூப் (1) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ரமேஷ் பிரேதன் (1) ராமாயணம் (1) ராஜமார்த்தாண்டன் (1) ரியோகான் (1) ரூமி (1) ரெயினர் மரியா ரீல்க (1) லட்சுமி மணிவண்ணன் (3) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (3) வாசகர் (1) வாசிப்பு (1) வாலஸ் ஸ்டீபன் (1) வி. சங்கர் (2) விக்ரமாதித்யன் (15) விவாத (1) வீரான்குட்டி (3) வெய்யில் (1) வே. நி. சூர்யா (5) வே.நி. சூர்யா (7) வேணு தயாநிதி (1) வேணு வேட்ராய (1) வேணு வேட்ராயன் (2) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (3) ஜெயமோகன் தேர்வு (1) ஜென் (1) ஶ்ரீநேசன் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷங்கர்ராமசுப்ரமணியன் (1) ஷாஅ (1) ஷாந்தா ஷேலகே (2) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Most Popular

Labels

அபி (14) அரவிந்தர் (1) அருண் கோல்ஹட்கர் (1) அறிமுகம் (1) அஜிதன் (1) ஆ. அமிர்தராஜ் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆதித்ய ஸ்ரீநிவாஸ் (1) ஆதிமந்திய (1) ஆத்மாநாம் (3) ஆவுடையக்காள் (1) ஆனந்த் (1) ஆனந்த் குமார் (9) இசுமி சிகிபு (1) இசை (11) இந்தி (7) இரா. கவியரசு (1) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (3) உன்னத சங்கீத (1) எதிர்வின (2) எம். கோபாலகிருஷ்ணன் (2) எம்.எஸ். கல்யாணசுந்தரம் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஸ்ரா பவுண்ட் (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (5) க.நா. சுப்பிரமணியம் (3) க.நா. சுப்ரமணியம் (18) கட்டுரை (11) கண்டராதித்தன் (1) கண்டனம் (1) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கருத்தரங்கு (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (2) கல்பற்றா நாராயணன் (5) கல்பனா ஜெயகாந்த் (2) கவிதை (286) கவிதையின் மத (1) கவிதையின் மதம் (2) காரைக்கால் அம்மைய (1) காரைக்கால் அம்மையார் (2) கார்த்திக் பாலசுப்ரமணியன் (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) கிரிராஜ் கிராது (3) குமரகுருபரன் விருது (8) குன்வர் நாராயண் (1) கே. சச்சிதானந்தன் (1) கேரி ஸ்னிடர் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (4) சங்க இலக்கியம் (4) சங்கர் கணேஷ் (1) சசி இனியன் (1) சஞ்சய் சௌத்ரி (1) சதீஷ்குமார் சீனிவாசன் (7) சந்தப்பாடல்கள் (1) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (5) சம்யுக்தா மாயா (6) சாரு நிவேதிதா (1) சார்லஸ் சிமிக் (1) சீர்மை பதிப்பகம் (1) சுகந்தி சுப்ரமணிய (1) சுகுமாரன் (6) சுந்தர ராமசாமி (2) சுனில் கிருஷ்ணன் (1) செல்வசங்கரன் (2) சோ. விஜயகுமார் (4) சோலைக்கிளி (1) ஞானக்கூத்தன் (1) டி.எஸ். எலியட் (1) டி.ஏ. பாரி (1) தாகூர் (1) தாஸ் வைத்ய் (1) தி.சோ. வேணுகோபாலன் (1) திரிகூட ராசப்ப கவிராயர் (1) தூயன் (1) தேவதச்சன் (8) தேவதேவன் (31) தேவேந்திர பூபதி (1) ந. பிச்சமூர்த்தி (1) ந. ஜயபாஸ்கரன் (1) நகுலன் (3) நித்ய சைதன்ய யதி (1) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (4) பாபு பிரித்விராஜ் (2) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (4) பிரான்சிஸ் (1) புதுமைப்பித்தன் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (2) பெருந்தேவி (1) பைபிள் (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (4) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (10) மரபு கவிதை (8) மராட்டி (3) மலையாள (1) மலையாளம் (1) மனுஷ்யபுத்திரன் (2) மா. அரங்கநாதன் (1) மு. சுயம்புலிங்கம் (1) முகாம் (2) மொழிபெயர்ப்பு (17) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யாக்கூப் (1) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ரமேஷ் பிரேதன் (1) ராமாயணம் (1) ராஜமார்த்தாண்டன் (1) ரியோகான் (1) ரூமி (1) ரெயினர் மரியா ரீல்க (1) லட்சுமி மணிவண்ணன் (3) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (3) வாசகர் (1) வாசிப்பு (1) வாலஸ் ஸ்டீபன் (1) வி. சங்கர் (2) விக்ரமாதித்யன் (15) விவாத (1) வீரான்குட்டி (3) வெய்யில் (1) வே. நி. சூர்யா (5) வே.நி. சூர்யா (7) வேணு தயாநிதி (1) வேணு வேட்ராய (1) வேணு வேட்ராயன் (2) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (3) ஜெயமோகன் தேர்வு (1) ஜென் (1) ஶ்ரீநேசன் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷங்கர்ராமசுப்ரமணியன் (1) ஷாஅ (1) ஷாந்தா ஷேலகே (2) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Blog Archive