உன்னை காணவே……
சங்கப்பாடல்களில் தலைவன் வருகை குறித்து தலைவி, தோழி கூற்றுகளாக வரும் பாடல்களின் எண்ணிக்கையைப் பார்த்தால் வியப்பாக இருக்கும். கார்காலம் வந்து விட்டது, முல்லை மலர்ந்துவிட்டது, காலையில் மேய்சலுக்கு சென்ற மந்தை திரும்பும் மணியோசை கேட்கிறது, அந்தியும் வந்ததுவே என்று எத்தனை பாடல்கள். இந்தக் கவிதைகள் ‘இன்னும் வரவில்லை’ என்பதை எத்தனை ஆடிகளில் பிரதிபலித்துக்காட்டுகிறது. கலேடாஸ்கோப்பை திருப்புவதைப்போல தலைவிகளின் மனம் இந்த உணர்வை விதவிதமாக உணர்கிறது.
பலர்புகு வாயில் அடைப்பக் கடவுநர்
வருவீர் உளீரோ எனவும் வாரார்
குறுந்தொகை: 118
உணவிற்காகவும் காரியங்களுக்காகவும் பலர் வந்து செல்லும் இல்லம் அது. இரவில் வாயிலை அடைக்கும் முன் ‘யாராவது வருபவர் உள்ளீர்களா?’ என்று கேட்பது வழக்கம். இரவு உணவு வேண்டியோ, இருப்பிடம் வேண்டியோ யாரேனும் வாயிலில் இருக்கிறீர்கள் என்று கேட்கும் நேரமும் வந்துவிட்டது இன்றும் தலைவன் வரவில்லை என்றாள் தலைவி.
உள்ளார் கொல்லோ தோழி கிள்ளை
வளைவாய்க் கொண்ட வேப்ப ஒண்பழம்
புதுநாண் நுழைப்பான் நுதிமாண் வள்உகிர்ப்
பொலங்கல ஒருகாசு ஏய்க்கும்
நிலங்கரி கள்ளியங் காடு இறந் தோரே
குறுந்தொகை: 67
நம் வாசலில் வேம்பு பழுத்திருக்கிறது. கள்ளிகாட்டு வழியில் செல்றான் தலைவன். அங்கும் வேம்பு பழுத்திருக்கும் தானே. மங்கல நாணில் உள்ள காசுகளை போன்ற பழத்தை கண்டும் ஏன் இன்னும் வரவில்லை என்று தலைவி கேட்கிறாள்.
‘ஏழூர்ப் பொதுவினைக்கு ஓரூர் யாத்த
உலை வாங்கு மிதிதோல் போலத்
தலைவரம்பு அறியாது வருந்தும் என்நெஞ்சே
குறுந்தொகை: 172
தலைவன் குறித்த காலத்தில் வரவில்லை. இரும்பு உலை துருத்தியை உவமையாக்கி அந்த துயரை தலைவி உணர்த்துகிறாள். சங்ககாலம் போர்கள் நடைபெற்ற காலம். கொல்லர் பட்டறைக்கு ஓய்வு கிடையாது. அதுவும் ஏழு ஊர்களுக்கு பொதுவாக உள்ள பட்டறையின் துறுத்தி போல முடிவிலாது துயருற்றேன் என்கிறாள்.
பழமழை பொழிந்தெனப் பதனழிந் துருகிய
சிதட்டுக்கா யெண்ணின் சில்பெயர் கடைநாள்
குறுந்தொகை: 2
வருவதாய் சொன்ன காலத்தில் வராது போன தலைவனால் காலம் தப்பிப்பெய்த மழையால் உள்ளீடு அற்று போன எள் செடி போல அனேன் என்று இந்தப்பாடலில் தலைவி சொல்கிறாள்.
என் கண்
துஞ்சா வாழி தோழி! காவலர்
கணக்குஆய் வகையின் வருந்தி,என்
நெஞ்சுபுண் உற்ற விழுமத் தானே
குறுந்தொகை: 261
இந்தப்பாடலில் தலைவன் வராததால் ஒரு கணமும் கண்களை மூடாத நாழிகை கணக்கனை போல நானும் மாறினேன் என்கிறாள் தலைவி.
கோடீர் இளங்குவளை நெகிழ நாளும்
பாடில கலிழ்ந்து பனியா னாவே
துன்னரும் நெடுவரை ததும்பிய அருவி
தன்ணென் முரசின் இமிழிசை காட்டும்
மருங்கிற் கொண்ட பலவிற்
பெருங்கல் நாடநீ நயந்தோள் கண்ணே
இந்த அருவி ஆர்ப்பரித்து விழக்கூடிய அருவி இல்லை. முரசின் ஆழ்ந்த ஒலியை உடைய அருவி. தலைவன் வருகைக்காக ததும்பும் அருவி.
இனம் தீர் களிற்றின் பெயர்ந்தோன் இன்றும்
தோலாவாறு இல்லை தோழி நாம் சென்மோ
சாய் இறைப் பணைத் தோட் கிழமை தனக்கே
மாசு இன்றாதலும் அறியான் ஏசற்று
என் குறைப் புறனிலை முயலும்
அண்கணாளனை நகுகம் யாமே
தலைவன் வரமாட்டானோ என்று அஞ்சும் தலைவியிடம் தோழி ‘தன் இனத்திலிருந்து விலக்கப்பட்ட களிறு போல நேற்று சென்றவன் இன்றும் வருவான். உன்னிடம் நேராக பேச பயந்து என்னிடம் தூதுவிடும் அவனை கேலி செய்வோம் வா…’ என்கிறாள்.
இன்னும் இன்னும் பல பாடல்களில் இந்த உணர்வு கையாளப்பட்டுள்ளது. தற்செயலாக வாசித்த அல்லது பாடலாக கேட்ட கவிஞர் இசையின் கவிதை ஒன்று இந்தக் கவிதைகளை நினைவுபடுத்தியது. சங்கபெண்கவிகளின் கவிதைகள் இவை. இந்தப்பாடல்களுக்கு பதிலாக இந்த நவீன கவிதை ஒலிக்கிறது. தலைவன் கூற்றாக சில பாடல்கள் உண்டு. தன் பாங்கனிடம், தேரோட்டியிடம் விரைந்து செல்லுமாறு தலைவன் கூறும் பாடல்கள் அவை. ஆனாலும் என் வாசிப்பின் எல்லைக்குள் தலைவி கூற்றாக வரும் இத்தனை பாடல்களின் கவித்துவத்திற்கு ஈடாக அந்த பாடல்கள் இல்லை. தலைவி பேரருவியாக கலங்கும் போது தலைவனிடம் சொற்கள் இல்லையோ என்று தோன்றும். அல்லது தலைவி போல சொல்வதில் தலைவனுக்கு ஏதோ ஈகோ சிக்கல் இருக்க வேண்டும். இந்த நவீனகவிதைக்கு அந்த சிக்கல் இருந்த போதும் இறுதியில் கவிதை சென்று தொடும் இடத்தில் அந்த சிக்கலே கவித்துவமாகிருக்கிறது. வார்த்தைகளின் இணைப்பு, குறிப்புணர்த்துதல், உணர்வமைதி, சொல்லமைதி என்று பல விஷயங்கள் கவிதைக்கு உண்டு. இந்த நவீனக்கவிதையை மேற்சொன்ன சங்கக் கவிதைகளுடன் இணைக்கும் போது சொல்முறையும், கவிதையின் படிப்படியான விரிதலும்… எதற்காக வீட்டிற்கு வந்தேனில் தொடங்கி, எதற்காக இவ்வுலகிற்கு வந்தேன் என்று முடியும் இந்தக்கவிதை இனியவாசிப்பனுபவமாகிறது,
கச்சிப்பட்டு நன்னாகையோ, அள்ளூர் நன்முல்லையோ, நல்வெள்ளியோ இருந்தால் புன்னகைத்திருக்கக்கூடும். இந்த நவீன கவிதையை மையப்படுத்தினால் மேற்சொன்ன சங்கக்கவிதைகள் நவீன கவிதைகளாக முகம் காட்டுகின்றன. கவிதை என்றும் புதியது.
ஆம்
உன்னையல்ல
நீ.வாழும் வீட்டைக் காணவே
உன் தெருவில் அலைந்தேன்.
உன்னையல்ல
நீ வசிக்கும் தெருவைக்
காணவே இந்த ஊரில்
திரிந்தேன்.
உன்னையல்ல
நீ திகழும் ஊரைக் காணவே இவ்வளவு தூரம்
வந்தேன்.
உன்னையல்ல
உன் ஊருக்கு செல்லும் வழியைக்காணவே காடு
மலை கடந்தேன்.
உன்னையல்ல
நீ வாழும் பூமியைக் காணவே இந்த பூமிக்கு
வந்தேன்.
- கவிஞர் இசை
மேலும் உன்னையல்ல என்று சொல்லி எத்தனை உன்னைகளை காண்கிறது இந்த மனம். புறப்பாடலில் வரும் யாதும் ஊரே யாவரும் கேளீர் போல மனம் விரியும் கவிதை இது. ஒற்றை அன்பை கொண்டு இந்த பூமி முழுவைதயும், இந்த முழு வாழ்வையும் நேசிக்கும் அளவுக்கு.
***
0 comments:
Post a Comment