பெரும்பாலான காதல்கவிதைகளில் நான் உன்னை எவ்வளவு நேசிக்கிறேன் என்றும் எப்படி எல்லாம் விரும்புகிறேன் என்றும் நீ மறுத்தால் என்னவாகுவேன் தெரியுமா என்றே இருக்கும். ஆனால் அரிதாக பொன்முகலியின் கவிதை வேறு ஒரு ஒன்றை சொல்கிறது எது எப்படி ஆனாலும் நீ என்னை தொடர்ந்து நேசித்து இருக்க வேண்டும் என்கிறது நான் உன்னை மட்டுமல்ல எல்லோரையும் குருதி வழிய கிழிக்கும் முள்ளாக இருந்தாலும் காதலிக்க வேண்டும் என்கிறது அத்தனை கனிவும் பரிவும் உனக்கு வேண்டும் என்று கோரவில்லை ஆணையிடுகிறது. இந்த குரல் புதிதாக நேசிப்பிற்குரியதாக இருக்கிறது.
நீ என்னை காதலித்திருக்க வேண்டும்.
நீருக்குள் மூழ்கிக் கொண்டிருக்கிற ஒருவனை
கரைக்கு இழுப்பவனின் தீவிரத்துடன்.
கழுத்தெலும்பு உடைபட்ட குதிரையை
கருணைக்கொலை செய்பவனின்
அனுதாபத்துடன்.
முற்றிலும் இலைகள் உதிர்ந்த
ஒரு கருவேலமரத்தைப்போல,
எவரையும் கிழித்துவிடும்
கூரிய வன்மத்தின் முட்களோடு
நான் இருந்திருந்தாலும்,
கனிந்த முகத்தோடு
தனது மேடிட்ட வயிற்றை
பரிவோடு வருடுகிற
ஒரு கர்ப்பிணியைப் போல
நீ என்னைத் தொடர்ந்து நேசித்திருக்க வேண்டும்.
காதலர்களுக்கிடையில் "விழி நோக்குதல்" என்பது காவியங்கள் தோறும் சொல்லப்பட்ட ஒன்று. ஆண்டு கணக்கில் ஒரு சொல்லும் பேசிக் கொள்ளாமல் அத்தனை உறுதியாக ஒருவரையொருவர் நேசிப்பதாக நம்பிய நண்பர்களை அறிவேன். எப்படி சொல்லிட்டீயா? என்றால் சொல்லனுமா பார்த்தாலே தெரியுதே என்று பதில் வரும். அவர்கள் வாழ்வில் இணையும் போது இனிய ஆச்சரியமாக இருந்தது. ஒரு பார்வை அணைக்கும் முத்தமிடும் குளிர்விக்கும் ஒருபோதும் தீரா தழலில் எரியவும் செய்திடும். அமீர் குஸ்ராவின் இந்த வரிகள் மிக பொருத்தமானவை "The only cure for the patient of Love is the sight of the Beloved".
அத்தகைய விழிகள் இங்கு எங்கும் நிறைந்து இருக்கும் ஆகாயத்தின் பகுதியாக நட்சத்திரங்களாக மாறி நோக்கினால் அமைதி உண்டாகுமா? ஆனால் பாடலாக மாறிவிட்டால்.
விண்மீன்கள் உன் கண்களாய் மாறி
என்னைப் பார்த்துக் கொண்டிருக்கிற
இவ்விரவில்,
நான் எப்படி அமைதியுறுவேன் சொல்?
அந்தியின் வழி நடந்து
ஆதவன் அடைகிறான்.
நிலவு ஒரு தும்பை பூவைப் போல
வானத்தில் மலர்கிறது.
நீயும் நானும்
காலத்தின் ஓயாத பாடலில்
ஒலிக்கத் துவங்குகிறோம்
செய்வதற்கு ஒன்றும் இல்லாத அல்லது ஆயிரம் இருப்பதாக நம்பினாலும் எதுவும் தோன்றாமல் இயலாமல் இருக்கும்
மதியப்பொழுதுகள் மிக நீளமானவை. இரவின் அமைதியைவிட நண்பகலின் அமைதி கூரியது அலைக்கழிப்பது. வெளியே சற்று தூரத்தில் உலகமே அதிவேகமாக ஓடிக் கொண்டுயிருக்கும் வேளையில் ஒரு அறையில் இருக்க நேரும் பொழுதில் சிதறி பரந்துவிடும் என்னை அங்கே இயங்கிக் கொண்டு இருக்கும் ஏதேனும் ஒன்றுடன் பொருத்திவிடுவேன் அநேக நேரங்களில் மிக மனமுவந்து அந்த பொறுப்பை ஏற்றுக்கொள்ளுவது தலைக்கு மேல் சுற்றிக்கொண்டு இருக்கும் மின்விசிறி தான். என்னை இழுத்து அதனுடன் சுழலவிடுவேன். முதலில் மிக வேகமாக பின் சற்று குறைத்து பின்பு மெல்ல மிக மெல்ல அது கடக்…கடக்..என்று இழுத்து ஒரு கட்டத்தில் நிறுத்தும் வரை இந்த ஆடல் நிகழும். பொன்முகலியின் இந்த கவிதையை வாசித்து முடிக்கும் போது கவிதையை அணைத்துக் கொண்டும் அவரின் கைகளை இறுகப் பற்றியும் கொண்டேன். அத்தனை அணுக்கமான ஒன்று.
மின்விசிறி காற்றை வெட்டி வெட்டி வெளியை உண்டுபண்ணுகிறது.
காற்று மின்விசிறியை
வெட்டி வெட்டி
வெளியை உண்டுபண்ணுகிறது.
***
தீபு ஹரி பொன்முகலி தமிழ் விக்கி பக்கம்
***
0 comments:
Post a Comment