1
வெறும் ஒற்றைத் துடுப்புடன் படகைச் செலுத்திக்கொண்டிருந்தவன் அதனையும் இழந்தேன்.
சுற்றிலும் பரந்து கிடக்கும் விரிந்த நீர்ப்பரப்பை
முதல்முறையாகப் பார்த்தேன். (கோ யுன்)
எளிய கவிதைதான் எனினும் இரண்டு நிலைகளில் இது எனக்களித்த உணர்வு அலாதியானது. இரண்டுமே என் சொந்த வாழ்வில் இருந்து எழுந்தது.
முதல் நிலை என் புற வாழ்வு சார்ந்தது. அப்போது என் பதின்வயதின் இறுதியில் இருந்தேன். மெல்ல சரியும் குடும்பம், தொழில், பொருளாதாரம், பெருகும் கடன், நோயுற்று நலிந்துகொண்டிருந்த அப்பா, அந்த நிலையிலும் சரிவு மட்டுமே கொண்டு வரும் எந்தக் கீழ்மையும் எங்களை தீண்டாமல் காவல் நின்றார் அப்பா. எதுவுமே புரியாத, எவருமே துணையற்ற அந்த வயதில் அந்த சூழலில் அதில் நிலைக்க கடக்க என் அப்பா மட்டுமே எங்கள் குடும்பத்தின் ஒரே பற்றுக் கோலாக இருந்தார். அவர் இறந்த மறு கணமே, நாங்கள் சரிந்து கொண்டிருக்கும் பாதாளத்தின் மௌன அழைப்பு எங்கள் குடும்பத்துக்கு முதன் முறையாக செவியில் விழுந்தது. எங்களை துரும்பாக்கி அலைக்கழிக்கப் போகும் கீழ்மையின் கடலை இதுவரை அவ்விதமே அங்கே இருந்து அதுவரை என் கண்ணில் படாத அந்தக் கடலை முதன் முறையாகக் கண்டேன்.
இரண்டாம் நிலை என் அக வாழ்வு சார்ந்தது. அனாதைத் தனத்துடன் அத்து அலைந்த நாட்களில் என் துயர்கள் சார்ந்து பகல் கனவுகள் பல கொண்டிருந்தேன். அதில் ஒன்று கடலூர் சீனு எனும் தேர்வு செய்யப்பட்ட ஆத்மா ஒன்று ஆத்மீக உயர் நிலை எய்தவே இத்தகு லௌகீக துயர்களில் விழுந்து புரள்கிறது என்பதும். ஜிட்டு ஓஷோ என தனி மனித ஆத்மீக தவிப்பை நிரந்தரமாக காயடிக்கும் ஆற்றல் கொண்ட எல்லா குப்பைகளையும் வாசித்து தள்ளினேன். தமிழ் நாட்டில் தேடி தேடி சரியாக ஆத்மீக வேடம் அணிந்து திரியும் எல்லா அய்யோக்கியர்களிடமும் முழு மடையானாக சென்று சிக்கினேன். ஒவ்வொருவரும் என்னை வைத்து தான் அதுவரை அறிந்திராத எது எதையோ பரிசோதித்து பார்த்தனர். உடலாலும் உள்ளத்தாலும் இனி சீர் செய்யவே இயலா கோணல் கொண்டவன் எனும் நிலைக்கு அவர்கள் என் மேல் பிரயோகித்து பார்த்த பரிசோதனைகள் தள்ளிச் சென்றது.
என்னை நானே சீரழித்துக்கொள்ளும் நிலை, ஒரு பௌர்ணமியின் போது விருபாஷா குகை அருகே அமர்ந்து வானையும் அடிவார அருணை பேராலயத்தையும் பார்த்துக் கொண்டிருக்கும்போது என்னை விட்டுப் போனது. இப்போதும் அதை வார்த்தைகளில் சொல்லிவிட முடியாது. அப்படி ஒரு நிலை. ஒரு கணம் அல்லது கோடானு கோடி யுகம் தன் உள்ளே பொதிந்த ஒரு கணம் அது. வாழ்நாள் முழுக்க தலைக்கு மேல் மேகங்கள் மட்டுமே அறிந்த ஒருவன், முதன் முறையாக வானம் கண்ட கணம். அணுவிலும் அணுவாக இயங்கும் ஒவ்வொரு துகளுக்கு இடையிலும் வியாபித்திருக்கும் அந்த வானத்தை உணர்ந்த கணம். எனக்கு மிகமிக அருகே என்றும் வாழும் ரமண நிலை எனும் இருப்பை முதன் முறையாக உணர்ந்த கணம். எப்படியோ மீண்டு வந்து இந்த துடுப்பைப் பற்றிக்கொண்டு விட்டேன். மீண்டும் அந்த வானை விரி கடலைக் காண கையில் உள்ள இந்த ஒற்றைத் துடுப்பை நான் வீசி எறிய வேண்டும். ஆம் ஒரே ஒரு கணம் எனினும் கடல் கண்டவன் நான். அது எனக்கு இயற்கை அளித்த ஆனந்தம். இந்த ஒற்றைத் துடுப்பை எப்போது விடுவேன் தெரியவில்லை . அதுவே எனக்கான துயர்.
2
சகோதரத்துவம் (ஆக்டேவியா பாஸ்)
நானொரு மனிதன்.
சிறிதே எனது வாழ்வு.
இவ்விரவோ மிகப் பெரியது.
ஆயினும் நான்
அண்ணாந்து பார்க்கிறேன்.
என்னவென்று புரியாமலே
நட்சத்திரங்கள் எழுதுவதை;
நானுமே கூட எழுதப்பட்டவன்தான்.
இதோ இக்கணத்தில்
எவரோ என்னை உச்சரிக்கிறார்கள்.
சிறு வயதில் விடுமுறைக்கு சென்ற சித்தி வீட்டில்தான் முதன் முதலாக அந்த தின்பண்டத்தின் பெயரை கேட்டேன். "தேன் குழல் சாப்டுரியா" சித்தி கேட்ட மறு கணமே, உள்ளே தேன் வண்ணம், தேன் வாசம், தேன் ருசி எல்லாம் எழ, அந்தக் தேன் எந்தக் குழலில் நிறைக்கப்பட்டிருக்கும் எனும் ஆவலும் உந்த உம் உம் என மண்டையாட்டினேன். வந்த பண்டத்தைக் கண்டு கடும் ஏமாற்றத்தில் கண்ணீர் மல்கினேன்.
சில வருடம் முன்னர் ஈரோடு கிருஷ்ணன் இதுவரை நான் கேள்விப்பட்டிராத பழம் ஒன்றின் பெயரை சொல்லி அதன் ஜூஸ் சாப்பிடலாமா என கேட்டார். நான் எப்போதும் போல ஈரோட்டாரை சந்தேகமே படாமல் அந்த வினோத பெயர் கொண்ட பழத்தின் ஜூஸ் நோக்கி ஏழு கடல் ஏழு மலை தாண்டி பயணித்தேன். இறுதியில் என் கைக்கு வந்தது அந்த பகுதியில் மட்டும் அந்த வினோத பெயரில் புழங்கும் தர்பூசணி பழத்தின் ஜூஸ்.
இப்படி சமீபத்தில் அஜி குடும்பத்துடன் ஹோட்டல் ஒன்றில் இரவு உணவு முடிக்க அமர்ந்திருக்கயில், புதுச்சேரி மணி மாறன் மெனு பார்த்து நான் அதுவரை கேள்விப்பட்டிராத வினோத பெயர் கொண்ட உணவு ஒன்றை எனக்கென ஆர்டர் செய்தார். நீண்ட காத்திருப்புக்கு பின் வந்தது. கொண்டைக் கடலை குருமா உடன் சோலா பூரி.
நான் வழக்கம் போல அசடு வழிவது வெளியே தெரியா வண்ணம் பூரிக்குள் குனிந்து கொண்டேன். அப்போதுதான் அஜி நீலம் குறித்து எழுப்பிய ஏதோ ஒரு கேள்வி என் காதில் விழ, நான் உத்வேகம் கொண்டு, "அஜி விஷ்ணுபுரத்தில் சாருகேசி நடனம் ஆடிக்கிட்டு இருக்கும்போது திருவடி அவளை கொல்ல போவான், அப்போ சாருகேசி அந்த அத்தியாயத்தில் என்னவா இருக்காளோ அதுதான் வெண்முரசு நீலத்தில் பல அத்யாயமா விரிஞ்சிருக்கு" என்றேன். அருணாக்கா இடை மறித்து அது சாருகேசி இல்லை லலிதாங்கி என்றார்கள். அஜி புன்னகையுடன் "இவ்ளோ இலக்கியத் தீவிரவாதியா இருக்கீங்களே ரெண்டு பேரும். நான் இப்போ பேசிக்கிட்டு இருக்குறது நீலம் நாவல் பத்தி இல்ல. நீலம் பதிப்பகம் பத்தி" என்று சொல்ல, நான் முகத்தில் குருமா வழிய மீண்டும் பூரிக்குள் தலைபுதைத்துக் கொண்டேன்.
ஒரு வாசகனின் வாழ்நாளெல்லாம் தொடரும் பண்பு ஒரு இலக்கியப் பிரதிக்கு உண்டு என்று நான் விஷ்ணுபுரம் வாசிப்பதற்கு முன்பாக எவரேனும் சொல்லி இருந்தால் அன்று நான் அதை நம்பி இருக்க மாட்டேன். இன்று சொல்வேன் ஒரு உயர் இலக்கியப் பிரதி எழுதப்படுவதே அதன் பொருட்டுதான். அப்படி தனதேயான ஒரு பெரும் இலக்கியப் பிரதியை அடைந்த வாசகனை ஒரு வகையில் ஈடேற்றம் கண்டவன் என்றே சொல்லிவிடலாம்.
சிறு வயதிலிருந்தே வாசிக்கும் பழக்கம் இருப்பினும், அகத்தாலும் புறத்தாலும் பெரிய (அப்படி நான் நெடுநாட்கள் நம்பிய) கொந்தளிப்புக்குப் பிறகே விஷ்ணுபுரத்துக்கு வந்து சேர்ந்தேன். இதுகாறும் என் சொந்த வாழ்வு வழியே நான் கொண்டிருந்த அகந்தையை ஒரே வீச்சில் துடைத்து எறிந்தது விஷ்ணுபுரம். முடிவிலி முன் என் இருப்பை ஒரு துரும்பாக்கி நிறுத்திக் காட்டி என்னை நோக்கி நகைத்தது. என் தவிப்புகள் அனைத்தையும் சிறு கூழாங்கல் என்றாக்கும் பெரு மலையை எனக்குக் சுட்டிக் காட்டியது. பிரதிக்குள் பிரதியாக வரும் நீலகேசி அடிகள் எழுதிய தச பிரச்ன மாலிகா நூலில் வரும் நூறு நூறு கேள்விகளில் ஒரே ஒரு கேள்வி என்னுள் அவ்வாறே எழுந்து என்னை அலைக்கழித்திருந்தால் நான் என்னவாகி இருப்பேன்? அனைத்து எல்லைகளிலும் என் அகந்தையின் எல்லையை சுட்டிக் காட்டியது விஷ்ணுபுரம். அகந்தைக்கு வெளியிலான என் துயர்களுக்கான முகத்தை எனக்கு அளித்தது விஷ்ணுபுரம்.
இன்று வரை என்னைத் தொடும் வாழ்வுத் தருணமோ, இலக்கியத் தருணமோ அதை விரித்துப் பொருள் கொள்ளும் முதல் வகைமையை என் உடன் நின்று விஷ்ணுபுரம் நாவலே அளிக்கிறது. 7 ஆம் நூற்றாண்டு முதல் 13 ஆம் நூற்றாண்டு வரை தனிமனித யத்தனம் உள்ளிட்டு அரசு நடவடிக்கை வரை தென்னிந்தியப் பண்பாட்டை கட்டி எழுப்பிய அனைத்துக் கூறுகளையும் வேறொரு முறையில் கட்டி எழுப்பி பரிசீலித்த அந்த நாவல், (பாரத பண்பாட்டில் மகாபாரதம் போலவே) அந்த புனைவுப் பண்பாட்டின் விளைகனிக் காவியம் போலவே தன்னை பாவனையாக முன் வைத்தது. ஒரே நேரத்தில் அப்புனைவின் ஒவ்வொரு கதாபாத்திரமும் தனது இருப்பை எவரோ எழுதும் காவியத்தின் கதாபாத்திரம் ஒன்றாகவோ, எவரோ காணும் கனவு ஒன்றின் நிலையாகவோ உணரும். அந்த வகையில் விஷ்ணுபுரம் நாவல் குறித்து ஏதும் அறிந்திருக்க வாய்ப்பில்லாத இந்த அயல் கவி ஆக்டேவியா பாஸ் எழுதி இருப்பது விஷ்ணுபுரம் நாவலில் வரும் பாத்திரம் ஒன்றின் தன்னுரையைத்தான்.
3
அச்சம்: (கலீல் கிப்ரான்)
கடலுக்குள் புகுமுன்.
அச்சத்தால்
நதி நடுங்குமென
சொல்லப்படுகிறது.
தான் பயணித்து வந்த பாதையை
அது திரும்பிப் பார்க்கிறது.
மலை முகடுகளின்றும்
வனங்கள் ஊர்களை
கடந்துவந்த திருகலான
நெடிய தூரமது.
தன் எதிரில்
அந்நதி காண்கிறது
விரிந்த பெருங்கடலினை.
அதற்குள் நுழைவதென்பது
எப்போதைக்குமாக மறைந்து போவதன்றி வேறில்லை
ஆனால் அதைத் தவிர வழியேதுமில்லை.
அந்நதி திரும்பிப் போகவியலாது.
யாருமே திரும்பிச் செல்லமுடியாது.
அப்படித் திரும்பிச் செல்வதென்பது
வாழ்வில் சாத்தியமுமில்லை.
ஆழியுள் புகுவதிலுள்ள
ஆபத்தை அந்நதி ஏற்கத்தான் வேண்டும்.
ஏனெனில் அதன் பிறகுதான்
அச்சம் மறையும்.
ஏனெனில் அங்கேதான்
நதி அறியவியலும்
கடலுள் நுழைவதென்பது காணாமல் போவதல்ல
மாறாக
கடலாகவே ஆகிவிடுவது.
வாழ்வென இது வரை நாம் கொண்ட அத்தனைக்கும், இந்த நிலத்தின் இந்தப் பண்பாட்டின் பின்புலத்தில் நின்று, வரலாற்று ரீதியாக, பண்பாட்டு ரீதியாக, ஆத்மீக ரீதியாக அவற்றின் பெறுமதி என்ன என விசாரிக்கும் இந்த விஷ்ணுபுரம் நாவலை, பெரும் ஆத்மீக தவிப்புகளின் அலைக்கழிப்புகளின் கலைச் சித்தரிப்பு என்று சொல்லலாம். இசையால் ஆத்மீக இடரில் விழும் திருவடி தொட்டு, பிங்கலன் தொடர்ந்து, மிருகநயனி அருகே மதம் கொண்டு நிற்கும் அங்காரகன் யானை வரை பலப் பல தவிப்புகள். வென்றவர் சோலை பைத்தியம் நீலி போல வெகு சிலரே. வீழ்த்தவரே பலர். விஷ்ணுபுரம் நாவலை ஆத்மீக வீழ்ச்சிகளின் கலைச் சித்தரிப்பாகவும் வாசிக்க முடியும். எண்ணுகையில் இதோ இக்கணம் கூட அஜித மகா பாதரின் தோல்வித் தருணம் உள்ளே எழுந்து கனக்கிறது.அகத்தால் புறத்தால் அத்தனை நெடிய பயணம் செய்து அங்கு வந்து சேர்கிறான் அஜிதன். இன்னும் ஒரு எட்டு எடுத்து வைத்திருந்தால், அல்லது வலியப் பற்றி இருக்கும் தனது பிடியை விட்டிருந்தால் அவன் ஈடேற்றம் கொண்டிருப்பான். அத்தனை தியானத்துக்குப் பிறகும், தத்துவார்த்த அறிவுக்குப் பிறகும் அவனால் அந்தப் பிடியை விட இயலாமல் செய்வது எது? பயமா? என்னவிதமான பயம் அது? அஜிதனின் அந்த தருணத்துக்கான கவிதையே கலீல் கிப்ரான் எழுதிய இந்தக் கவிதை என்று எனக்குத் தோன்றியது. ஒருவேளை அன்று அஜிதனுக்கு அவனது குருவின் அருகாமை இருந்திருந்தால் அவர் கலீல் சொன்ன இதையே சொல்லி இருப்பார்.
4
இரண்டு தலைக்கன்று : (லாரா கில்பின்)
நாளை பண்ணைச் சிறுவர்கள் இயற்கையின் இந்தப் பிறழ்வைக்
கண்ணுறும்போது
காகிதத்தில் சுற்றி
இதன் உடலை
அருங்காட்சியகத்திற்கு எடுத்துச்செல்வார்கள்.
ஆனால் இன்றிரவு
அது உயிருடனிருக்கிறது
தனது தாயுடன்.
இது கச்சிதமான கோடைகால
மாலைப் பொழுது.
வடபுலத்தில்
பழத்தோட்டத்தின் மேலாக நிலவு எழ
புல்வெளியில் காற்று அலைகிறது.
அக்கன்று வானத்தை ஏறிட்டுப்பார்க்கிறது
அங்கே ஒளிர்கிறது வழக்கத்தைக் காட்டிலும் இரட்டிப்பு எண்ணிக்கையிலான
நட்சத்திரங்கள்.
உலகமெங்கும் எல்லா பண்பாட்டிலும் முன்னர் எப்போதோ நிகழ்ந்த, அதே போல இனி வரப்போகின்ற பிரளய அழிவு குறித்த கதைகள் உண்டு. இந்தத் தன்மையை தனது மூன்றாம் பகுதியில் மிக வலிமையான சித்திரங்கள் வழியே நிகர் வாழ்வு அனுபவமாக்கி வாசக ஆழுள்ளதை தீண்டுகிறது விஷ்ணுபுரம். மெல்ல மெல்லத் துவங்கி பெரு மழை வெள்ளத்தில் அந்த விண் தொடும் ஆலய நகரின் அழிவுடன் முடியும் இந்த மூன்றாம் பகுதியில் அவ்வழிவுகள் குறித்த சித்தரிப்பு கடும் குளிர் நிலவும் சூழலுடன் துவங்கும். அப்டிக் கடும் குளிர் நாளொன்றில் லட்சுமி வளர்க்கும் பசு ஒன்று விசித்திரக் கன்று ஒன்று ஈனும். அந்தப் பிறப்பில் இருந்தே விஷ்ணுபுரத்தின் பிரளயம் துவங்கும். பிறந்த அந்த கன்று ஏழு கால்கள் கொண்டு எழ முயன்று நான்கு கால்களால் நிற்கும். முன்னால் இரண்டு கால்கள் இடையே மூன்றாம் கால் ஒன்று அந்தரத்தில் ஊசல் ஆடும். பின்னால் இரண்டு கால்களுக்கு இரு புறமும் வேறு வளர்ச்சி குன்றிய இரண்டு கால்கள் தொங்கும். அனைத்துக்கும் மேல் அந்த கன்றுக்கு இரண்டு தலைகள் இருக்கும். ஒரு தலை கொண்டு தனது தாயையும் மற்றொரு தலை கொண்டு லட்சுமியையும் அந்தக் கன்று பார்க்கும்.
விஷ்ணுபுரம் நாவல் லட்சுமியின் நோக்கு நிலையில் நின்று இந்த அமானுஷ்யத்தை சித்தரித்துக் காட்டுகிறது என்றால், மேற்கண்ட லாரா வின் கவிதை அதே அமானுஷ்யத்தை அந்தக் கன்றின் நோக்கு நிலையில் நின்று சித்தரித்துக் காட்டுகிறது எனலாம்.
5
துளியும் கடலும்: (கபீர்.)
அவனைத் தேடப் போய்
என்னைத் தொலைத்தேன்.
துளி கடலுள் கலந்தது.
அதனை இப்போது யார் காணவியலும்?
அவனைத் தேடித் தேடி
நான் காணாது போனேன்.
கடல் துளியுள் நிறைந்தது.
அதனை
இப்போது யார் காணவியலும்?
விஷ்ணுபுரம் நாவல் வெளியாகி 25 ஆண்டுகள் நிறைகிறது. அதைக் கொண்டாடும் முகமாக விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட நண்பர்கள் விஷ்ணுபுரம் நாவலை புதிய தலைமுறை வாசகர்களுக்கு அறிமுகம் செய்ய என்னை கேட்டுக் கொண்டார்கள். ஸூம் செயலியில் தினம் மூன்று மணி நேரம் என நாவலின் மூன்று பகுதிகளையும் மூன்று நாட்கள் அறிமுகம் செய்து பேசினேன்.
கேள்வி பதில் நேரத்தில் திருவண்ணாமலை சுவாமிஜி "விஷ்ணுபுரம் வந்து நீண்ட காலம் ஆகி விட்டது. பிறகு வெண்முரசு எனும் பெரும் நாவல் சாதனையும் நிகழ்ந்து விட்டது. இன்னும் உங்களுக்கு உள்ளே விஷ்ணுபுரம் அதே தாக்கத்தைத்தான் தருகிறதா? விஷ்ணுபுரம் வெண்முரசு இந்த இரண்டு நாவலில் ஒன்று என்றால் இப்போது நீங்கள் எதை சொல்வீர்கள்?" என்று வினவினார்.
நான் சொன்னேன் ''இரண்டும் வெவ்வேறு தனிதன்மைகள் கொண்டது. ஆகவே அந்த தனித்தன்மை அடிப்படையில் இப்போதும் நான் விஷ்ணுபுரம் நாவலையே சொல்வேன்" என்றேன்.
சுவாமிஜி எதிர்பார்த்த வாத பிரதிவாத கதியை என் பதில் இல்லாமல் செய்து விட்டதால் " நழுவலா பதில் சொல்லிட்டீங்க" என்றார். அப்படி இல்லை என்று சொல்லி நான் விளக்கினேன். விஷ்ணுபுரம் உருவாக்கிக்காட்டும் இன்ஃபினிட்டி முடிவிலி என்பதன் தனித்தன்மை முற்றிலும் வேறு. உதாரணமாக வெண்முரசு நிகழும் காலம் வேறு விஷ்ணுபுரம் நிகழும் காலம் வேறு. விஷ்ணுபுரம் கைகொண்ட வடிவ ஒழுங்கில் அதன் ஸ்ரீ பாத திருவிழாவுக்குள் பாணர்கள் பல்வேறு இடங்களில் பாடுவதாக அந்த விழாவின் வெவ்வேறு நாட்களின் இரவுகளுக்குள் மொத்த வெண்முரசையும் பொறுத்திவிட முடியும். விஷ்ணுபுரம் பாவித்துக் காட்டும் முடிவிலி அத்தகையது என்றேன்.
இன்று மேற்கண்ட கவிதை துணை கொண்டு மேற்கண்ட கேள்விக்கு பதில் சொல்வேன் என்றால் அந்த பதில் இப்படி இருக்கும்.
வாசகனை துளி என்றாகி அந்த துளி கடலில் கரையும் அனுபவத்தை அளிப்பது வெண்முரசு.
வாசகனை துளி என்றாகி, அந்தக் துளிக்குள் கடல் வந்து நிறையும் அனுபவத்தை அளிப்பது விஷ்ணுபுரம்.
***
கட்டுரைக்கான கவிதைகள், தமிழினி வெளியீடாக ”நீரின் திறவுகோல்” எனும் தலைப்பில், கவிஞர் க.மோகனரங்கன் மொழியாக்கம் செய்த பிற மொழிக் கவிதைகள் தொகுப்பில் இருந்து எடுத்தாளப்பட்டிருக்கிறது.
க. மோகனரங்கன் தமிழ் விக்கி பக்கம்
***