ஒளியில் தெரிவது - பாலா கருப்பசாமி

வழக்கமாக மேடைப் பேச்சில் திக்கித் திணறும் நான் சில ஆண்டுகளுக்கு முன் கவிஞர் தேவதேவனின் கவிதைத் தொகுப்பு வெளியீட்டின்போது என்னை மறந்து பேசிக் கொண்டிருந்தேன். ஒருங்கிணைப்பாளர் கூப்பிட்டு ‘சார் நேரமாகுது’ என்றபோது ரொம்ப சந்தோசமாக இருந்தது. அந்தப் பேச்சு எனக்கு முன்பு பேசிய தேவதேவனின் ‘ஆளுமை’ பற்றியது. யாராவது கவிதை எழுத என்ன செய்யவேண்டுமென்று தேவதேவனிடம் கேட்டால் அவரது பதில் ‘நீ கவிஞராக வேண்டும்’ என்பதாகத்தான் இருக்கும்.

இந்த பதில் எளிமையான ஒன்று போலத் தோன்றும். அப்படியல்ல. கவிஞன் என்றால் முழுநேரக் கவிஞன். சதா அவன் கவிதா மனோபாவத்தில் தோய்ந்து கிடப்பது. பார்க்கும் அனைத்தையும் கவிஞனாகப் பார்ப்பது. அப்படியான ஒருவர் எழுதுவது குறித்து சந்தேகமே படவேண்டியதில்லை. அவை கவிதையாகத்தான் இருக்கும். ஒரு சிலருக்கு அந்தக் கவிஞரின் கவிதைகளில் சிறந்தவை, இவை தேறாதவை என்று பிரிக்க இடமிருக்கலாம். அதனால் ஒன்றும் கவிஞருக்குப் பிரச்சினையில்லை. எல்லாப் பூக்களும் கூந்தல் ஏறுவதில்லை.

ஆக, ஆளுமை தான் கவிதையை உருவாக்க வேண்டும் என்பது அவரது நிலைப்பாடு. இது குறித்து நான் ஏற்கெனவே சில பதிவுகளில் குறிப்பிட்டிருக்கிறேன். என்னைப் பொறுத்தவரை படைப்பாளி வேறு, படைப்பு வேறு. மேலும் நான் பார்த்தவரை கவிஞர்கள் கவிதைக்கான தருணம் நிகழும்போதே (சிலருக்கு மனவொருங்கைப் பொறுத்து தன் முயற்சியாலும் அது அமையக்கூடும்) கவிதைகளைப் படைக்கிறார்கள். அதன்பின் அவர்கள் தங்கள் பழைய நிலைக்குத் திரும்பி விடுகிறார்கள். சாமானியர்களுக்கும் அவர்களுக்கும் எந்த வேறுபாடும் இருப்பதில்லை. வேண்டுமானால் தன்னுணர்வு-கூருணர்வு அதிகமுள்ள சாமானியர்கள் என்று சொல்லிக் கொள்ளலாம். இது எல்லா நேரங்களிலும் பொருந்துவதில்லை. இப்படிப் பிரித்துக் கொள்வது ஒரு வசதிக்காகத்தானே தவிர இது வரையறையல்ல. பாரதி, பிரமிள், தேவதேவன் இம்மூவரும் ஆளுமையும் எழுத்தும் பிளவுபடாதவர்கள். இவர்களுக்கு மேற்கண்ட விதி பொருந்தாது. நிற்க.

அடுத்ததாக இன்னொன்றையும் விவாதிக்க வேண்டியுள்ளது. ஒரு கவிஞரின் ஒரேயொரு கவிதையை மட்டும் வாசித்து விமர்சிப்பது முறையான, முழுமையான விமர்சனமாகாது. விமர்சிப்பவருக்கும் வாசகருக்கும் எழுத்தாளரின் `தொனி` பிடிபட வேண்டும். அதாவது படைப்பாளியின் படைப்பு மனோபாவம். ஒரு தொகுப்பை அல்லது கவிஞரின் அனைத்து கவிதைகளையும் தொடர்ந்து வாசிக்கும்போது அவரது மனம் இயங்கும் தளம் நமக்குப் பிடிபடும். சொல்லப்போனால் அதைக் கண்டடைவதுதான் விமர்சகரின் முதன்மையான பணி. அப்போது மிகச் சாதாரணமாகத் தோன்றிய அல்லது கவிதையே இல்லை என்று நினைத்த ஒன்றுகூட அழகுடன் மிளிரத் தொடங்கும். இது மிகவும் சிக்கலானது. இப்படி சாதாரண பார்வைக்கு புலப்படாத கவிதைகளை எடுத்து அதைச் சிறப்பித்து எழுதத் தொடங்கினால், அதையே சாக்காக வைத்து குப்பன் சுப்பன் கவிதைகளுக்கும் இதையே சகட்டுமேனிக்கு மதிப்புரை எழுதத் தொடங்கிவிடுவார்கள்.

சிலநேரம் ஒரு தனிக் கவிதை மெச்சத்தக்கதாக நிச்சயம் இருக்கத்தான் செய்யும். அதைக் கொண்டாடவும் செய்யலாம். ஆனால் அது அந்தக் கவிஞரின் மொத்தத் தொகுப்புக்கான விமர்சனமல்ல. கொண்டுகூட்டுப் பொருள்கொள்ளலைப் போல இதைக் கோர்த்து எடுத்துக் கொள்ள வேண்டும். இவற்றைக் கருத்தில் கொண்டுதான் தேவதேவன் கவிதைகளை நாம் அணுக வேண்டும். 

கவிஞர் தேவதேவனை பலமுறை சந்தித்திருக்கிறேன். பௌதீகமாய் அவர் இங்கே இருந்தாலும், அவர் மனம் வேறோர் இடத்தில் உலவிக் கொண்டிருப்பதை ஒருசில நிமிடங்களில் ஒருவர் உணர்ந்துகொள்ளலாம். இதனாலேயே அவரால் எல்லாவற்றையும் மன்னித்துவிட முடிகிறது.

படைப்பு மனநிலை பிடிகிடைத்தாலும், முன்பு சொன்னதுபோல சாதாரணமாகத் தோன்றக்கூடிய ஒரு கவிதை அந்தப் படைப்பு மனநிலையின் பிரகாசத்தில் ஒளிர்ந்தாலும், அங்கும் அந்தப் படைப்பாளியின் படைப்புகளை வகைப்படுத்தவும், வெளிப்பாட்டுச் சிறப்புகளைப் பற்றி பேசவும் வேண்டியுள்ளது. உதாரணமாக,

எப்போதும் பொழிந்துகொண்டிருக்க முடியுமா?

எப்போதும் பொங்கிவர முடியுமா?

ஆட்கள் வரவில்லையெனில்

குளக்கரைப் படிக்கட்டுகளுக்கும்கூட

நனையும் பேறில்லை

***

உச்சிவானிற் திளைக்கும் முழுநிலவாய்

மத்தியான நதியில் ஒரு நீராடல்

கூடத்தின் வழுவழுப்பான தரையில்

பாய் தலையணையற்ற ஒரு துயில்

***

முகவரி எழுதிக் கொள்கிறீர்களா?

எறும்புகள் குவித்த துளிமணல் குவியலோரம்

அவனது வீடு.

***

முதல் கவிதை காய்ந்து போய்க்கிடக்கும் குளத்தங்கரைப் படிக்கட்டுக்குக் கிடைக்கும் தாகசாந்தி பற்றிச் சொல்கிறது. எப்போதும் மழை பொழிந்து கொண்டிருக்க முடியாது; குளமும் பொங்கிக் கொண்டிருக்க முடியாது. ஆட்கள் குளித்துக் கரையேற படிக்கட்டுகள் அந்தப் பாதங்களை முத்தங்களால் மொத்தியிருக்கும், மீன் குஞ்சுகளைப் போல. அந்தப் படிக்கட்டுகளின் தகிப்பை, வெக்கையை உணர்ந்து அந்த உணர்வுகதியை கவிதைக்குள் கொண்டுவருவதால் இங்கே கவியுள்ளத்தைக் காண்கிறோம். தேவதேவன் பேசும் காதல்களும் கூட முதிர்ந்த அன்பிலிருந்து விளைந்தவை.

இதே பார்வையில் மூன்றாவது கவிதை வாசிக்க மனதை நெகிழச் செய்யும். எத்தனை எறும்புகளின் கடும் உழைப்பு அது. அளவில் பெரிதென்பதால் எறும்புப் புற்றைவிட தன் வீடு பெரிதாகிவிடுமா. காணாததைக் கண்டு கவிஞனால் மட்டுமே நெகிழவும், கூத்த்டாடவும், கண்ணீர் உகுக்கவும் முடியும். இரண்டாவது கவிதையை விளக்கிச் சொல்வது சற்று அபத்தமாய் இருக்கும். மத்தியான வெயில்களில் ஏன் வான்கோ வேகு வேகுவென்று கேன்வாஸைத் தூக்கிக் கொண்டு அலைந்தான்?

தேவதேவன் கூட சமூக/அரசியல் கவிதை எழுதியிருக்கிறார். ஆனால் அது மிகச் சன்னமாக ஒலிக்கிறது.

அது என்னவாகவும் இருக்கட்டும்

அனைத்திற்கும் டிமிக்கி கொடுத்துவிட்டு

என்னை எத்தனையோ மனிதர்களிடமிருந்து

பிரிப்பது தவிர வேறொன்றும் செய்யவில்லை

எனது பூணூல்.

கொங்குதேர் வாழ்க்கையில் ஏற்கெனவே பலராலும் பேசப்பட்ட தேவதேவனது பிரபலமான கவிதைகள் உள்ளன. அவை குறித்து திரும்பவும் இங்கே குறிப்பிட வேண்டிய அவசியமில்லை என்று நினைக்கிறேன். 

காலவெளி

என் கண்ணுக்கெட்டிய தூரத்தில்

சுமார் பதினான்கு வயதுப்

பேரழகியாய்த் தோன்றியவள்

ஒவ்வோரடியிலும்

ஓரோர் வயது முதிர்ந்தவளாய்

கிட்ட வந்தடைகையில்

சுமார் அறுபது வயதுப் பேரழகு.

சுமார் மூன்று நிமிடத்தில்

நான் கண்டது: அவளுடைய

நாற்பத்தாறு வருடங்கள்

அல்ல; நாற்பத்தாறு ஆண்டுகள்தான்

மூன்று நிமிடமாய் மயங்குகிறதோ?

நிச்சயிக்க முடியவில்லை; ஆனால்

என் கண்முன்னால் அந்தப் பேரழகு

எதுவும் பேசாமல்

என்னைக் கடந்து மறைந்தது மட்டும்

நிச்சயமான உண்மை.

எதை வேண்டுமானாலும், எங்கிருந்து வேண்டுமானாலும் கவிதையை உருவாக்கலாம், கவியுள்ளம் மட்டுமிருந்தால்.

***

தேவதேவன் தமிழ் விக்கி பக்கம்

Share:

0 comments:

Post a Comment

Powered by Blogger.

ஆகாய மிட்டாய் - கல்பற்றா நாராயணன் கவிதை

ஆகாய மிட்டாய் ந ண்பனின் மகளின் பெயர் மழை என்று தெரிந்தபோது மனம் தெளிந்தது சாறாம்மாவுக்கும் கேசவன்நாயர்க்கும் இருந்த துயரம் சற்று பிந்தியானால...

தேடு

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (4) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) கட்டுரை (6) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (4) கல்பனா ஜெயகாந்த் (1) கவிதை (156) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குமரகுருபரன் விருது (5) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (18) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (2) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (1) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (3) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (12) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) வீரான்குட்டி (1) வே. நி. சூர்யா (5) வே.நி. சூர்யா (6) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (2) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Most Popular

Blog Archive