தளும்புகிறது
கடல்
மடையில்லா பெருநதி
ஓடம்
பூத்த மலர் கேட்பது
இசை
எல்லாம் என்
குழல் விழுந்த துளை
வானின் நட்சத்ரங்கள் முடிவுறாத கோலத்தின் புள்ளிகள் என்கிறார் பிரதீப் கென்னடி.
புள்ளி இட்ட கோலம்
இரவில் என் நெஞ்சின்
முடிகளை கோதி பார்த்து
சிலவற்றை புடுங்கிப்பார்த்து
திரும்பி படுத்த மகள்
வானத்து நட்சத்திரங்களை
புள்ளிகளாக பாவித்து
கோலமிட்டு முடிக்க முயன்று
முடியுமுன்னே மீண்டும்
என் மாரின் மயிர்களுக்கு திரும்பினாள்
அவள் வரைந்த
அந்தரத்து கோலத்தை
நான் தொடர்ந்தேன்
அம்மாவைபோலவே
இறைவனின் புள்ளிகள் அழகானவை
அவளைபோலவே
இறைவனின் கோலநோட்டு முடிவதில்லை
அவனுடைய ஒரு வாசல்தான்
இங்கே ஒரு வெளி
ஒரு வாசலின் கோலமும்
இன்னொரு வாசலின் கோலமும்
ஒரு கோலத்தின் இரு புள்ளிகள்
மகாகோலம்
மகாபுள்ளிகள்
மகாஅரிசி
மகாஎரும்பு
மகாஅம்மா
மகாஇரவு
மகாமாரும் சிறியமகளும்
'அவனுடைய ஒரு வாசல் தான் இங்கே ஒரு வெளி' என்ற வரி கவிதைக்கு புதிய திறப்பை தருகிறது. இரண்டு வெளிகள் - வானம் ஒரு வெளி, பூமி ஒரு வெளி. வானவெளி முழுக்க விண்மீன் கோலங்கள். பூமியிலோ ஆங்காங்கே மட்டும். அதுவும் அன்னை மனது வைத்தால். ஒரு புது உரையாடலையும் கவிதைக்குள்ளேயே இந்த கவிதை திறக்கிறது. தந்தை - மகள், இறைவன் - தாய், விண்மீன் கோலம் - மாவு கோலம், வானம் - பூமி ஒவ்வொன்றும் ஒவ்வொன்றுடன் பேசிக் கொண்டிருக்கின்றன இந்தக் கவிதையில். தந்தை மகளின் உரையாடல் கவிதையில் நேரடியாக சொல்லப்படுகிறது. அதைத் தவிர்த்து மற்ற உரையாடல்களை வாசிப்பில் விரித்தெடுக்கும் சாத்தியம் இந்தக் கவிதையில் உள்ளது.
இடைவிட்டும் விடாத ஆடல்
காற்றின் நிலத்தில்
உந்தி தத்தி
ஒன்றென பறக்கும்
ஜோடி பட்டாம்பூச்சிகள்
ஒன்றின் நடனத்தை
மற்றொன்று தொடர்கிறது
சட்டென்று இரண்டாவதை
நடிக்கிறது முதலாவது
இனைய முயலும்
இரண்டு இசை
கருவிகள் அவை
இணைய முடியாததன்
சூட்சமம் இசை
ஆடிமுன் அமர்ந்து
முடியாது ஆடும்
ஆடல் அவை
கவிதைக்குள் ஏதாவது ஒரு உயிர் அல்லது பொருள் இரண்டாக வரும்போது, கவிதை அதைக் கொண்டே நிகழ்ந்து விடுகிறது. அதன் சாத்தியங்கள் பல. பிரதீப் கென்னடியின் இந்தக் கவிதையில் இரண்டு வண்ணத்துப்பூச்சிகளின் நிகழ்த்துக் கலை சொல்லப்படுகிறது. ஒன்றின் நடனத்தை மற்றொன்று தொடர்கிறது, சட்டென்று இரண்டாவதை நடிக்கிறது முதலாவது என்கிற வரிகள் அழகானவை. மேலும் அவை ஒரு பாடலின் இணைய முயலும் இரண்டு வெவ்வேறு இசைக்கருவிகளின் இசையாகின்றன. ஒரு நல்ல கவிதையில் இசையைக் கேட்கலாம் என்ற தேவதேவனின் கூற்று நினைவில் வருகிறது.
நொண்டி அடிக்க
அழைக்கிறாள் என் மகள்
இரண்டு கால்களை
தூக்கி செல்கிறேன் நான்
மேலே உள்ள வரிகள் பிரதீப் கென்னடியின் ஒரு கவிதையின் முடிவில் வருபவை. இரண்டு கால்களையும் விளையாட்டுச் சாமானாக தூக்கிக் கொண்டு ஓடும் ப்ரதீப் கென்னடியின் மகள் கவிதையாகத்தான் இருக்க முடியும்.
***
0 comments:
Post a Comment