குறுந்தொகைத் தொகுதியில் பெரும்பதுமனார் எழுதிய கவிதை ஒன்றில், அதில் அகம் சார்ந்த உணர்வுகள், புறம் சார்ந்த காட்சிகள் வழியே சமன்வயம் காண்பதன் வழியே கவிஞன் கொண்ட விவேகமான விலகலை உதாரணம் சுட்டி இருந்தார்.
அந்த உரையாடலை விடுத்து, இந்த சங்கப்பாடலை மட்டும் பார்ப்போம்.
வில்லோன் காலன கழலே;
தொடியோள்
மெல் அடி மேலவும் சிலம்பே;
நல்லோர்
யார்கொல்?
அளியர்தாமே-
ஆரியர்
கயிறு ஆடு பறையின், கால் பொரக் கலங்கி
வாகை வெண் நெற்று ஒலிக்கும்
வேய் பயில் அழுவம் முன்னியோரே.
( பெரும்பதுமனார்)
வாசித்த அக் கணமே, கவிஞன் தொட்டெடுத்து இக்கவிதையில் இட்டு வைத்த அதே உணர்வை எந்த நவீன கவிதையின் வாசகரும் கவி அனுபவமாக அடைந்து விட முடியும். எவ்விதம்?
பொதுவாக இங்கே ஒரு கேள்வி எழக்கூடும். சங்கச் செய்யுள்கள் தன் இயல்பியே நவீன கவிதையின் அம்சம் கொண்டதா? அல்லது சங்கச் செய்யுள்களை (அதன் இயல்பு அவ்வாறு அல்ல ஆனாலும்) அதை நவீன கவிதையாகவும் வாசிக்கலாம் எனும்படிக்கு 'புதிய' வாசிப்பு முறை ஏதேனும் அவற்றின் மேல் பிரயோகிக்கப் படுகிறதா?
பதில், நல்ல சங்கப்பாடல்களில் பல, நல்ல நவீன கவிதையும் கூடத்தான் என்பதே. அதை நவீன கவிதை என்றாகும் அடிப்படை அம்சம் அதில் இலங்கும் 'என்றுமுள்ள இன்று' எனும் தன்மை. இந்த என்றுமுள்ள இன்று எனும் தன்மையை நவீன வாசகன் சென்று தொட தடையாக இருப்பது இரண்டு. ஒன்று, பண்டைய உரை மரபு. இரண்டு, நவீன இலக்கிய விமர்சகர்கள் மரபு மீது கொண்ட அசிரத்தை கலந்த போதாமை.
மரபான உரை என்பது இவற்றைப் 'புரிந்து கொள்ள', அகத்திணை புறத்திணை தொல்காப்பியம் போன்றவை வழியே உருவாக்கிய 'பொருள் கொள்ளும்' வியாக்கியான மரபு. பாடலில் இயங்கும் ஒவ்வொன்றையும் தகவல் எனக் கண்டு, அவற்றை தொகுத்துக் புரிந்து கொள்ள ஒரு 'கதைப் பின்புலத்தை' உருவாக்கி அதன் மேல் அந்த பாடலை நிறுத்தி, இது இதையெல்லாம் இப்படி சொல்கிறது என்பதே அந்த மரபு. உதாரணத்துக்கு மேற்கண்ட பாடலுக்கு அதை பாலைத் திணையின் இலக்கண வரம்புக்குள் வைத்து, அதை புரிந்து கொள்ள ஒரு கதையை அதன் பின்புலமாக வைக்கும். இப்படி...
பாடலின் பின்னணி:
ஒரு ஆடவனும் ஒரு பெண்ணும் காதலிக்கிறார்கள். அவர்கள் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறார்கள். அவர்களின் பெற்றோர்கள் அவர்களுடைய திருமணத்திற்குச் சம்மதிக்கவில்லை. ஆகவே, அவர்கள் தங்கள் ஊரைவிட்டு, வறண்ட காட்டு வழியாக வேறு ஒரு ஊருக்குப் போய்க்கொண்டிருக்கிறார்கள். வில்லேந்திய அந்த ஆடவனும்,மெல்லிய பாதங்களை உடைய அந்தப் பெண்ணும், துன்பப்பட்டு அந்தக் காட்டைக் கடந்து செல்வதைக் கண்ட சிலர் அவர்களுக்காக இரக்கப்படுகிறார்கள்.
இந்தக் கதையின் தொடர்ச்சியாக சொற்பொருள் விளக்கம் வரும். இப்படி...
வில்லோன் = வில்லை உடையவன்;
காலன = காலில்;
கழல் = வீரத்தின் சின்னமாக ஆண்கள் காலில் அணியும் அணிகலன் (வளையம்); தொடி = வளையல்;
அளியர் = இரங்கத் தக்கவர்கள்;
கால் = காற்று;
பொருதல் = தாக்குதல்; வாகை = ஒரு வகை மரம்; நெற்று = உலர்ந்த பழம்; வேய் = மூங்கில்;
பயில்தல் = நெருங்குதல்; அழுவம் = நிலப்பரப்பு; முன்னுதல் = நினைத்தல், எதிர்ப்படுதல்.
தொடர்ந்து வரும் உரை;
ஆரியக்கூத்தர்கள் கயிற்றின் மேல் நின்று ஆடும் பொழுது கொட்டப்படும் பறையின் ஒலியைப் போல, காற்று தாக்குவதால் நிலை கலங்கி, வாகை மரத்தின் வெண்மையான நெற்றுக்கள் ஒலிக்கும் இடமாகிய மூங்கில் செறிந்த இந்த பாலை நிலப்பரப்பை, காலில் கழல் அணிந்த இந்த ஆடவனும் தோளில் வளையலும் தன்னுடைய மெல்லிய பாதங்களில் சிலம்பும் அணிந்த இந்தப் பெண்ணும் கடந்து செல்ல நினைக்கிறார்கள். இந்த நல்லவர்கள் யாரோ? இவர்கள் இரங்கத்தக்கவர்கள்.
இப்படிதான் சங்க இலக்கிய உரை மரபு செயல்படும். அங்கே துவங்கி, இந்த உரை மரபு ஸ்பானர் கொண்ட பல்கலைக்ழகங்கள் வழியே, மொத்த சங்க இலக்கியமும் கழட்ட இனி அதில் ஒரே ஒரு போல்ட் கூட மிச்சம் இல்லை எனும் நிலைக்கு கழற்றி அடுக்கப்பட்டு விட்டது. (பின்னும் அதில் இலங்கும் கவிதை எவராலும் தொடப்படாமல் அப்படியே எஞ்சுகிறது). அன்றைய சங்கக் கவிஞன் இதைக் கண்டான் என்றால், தனது கவிதை காவு வாங்கப்படும் விதம் கண்டு கதறித் துடித்து விடுவான்.
மரபுக்கு கொஞ்சமும் சளைத்தது அல்ல நவீன உரை மரபு. உதாரணம் வாத்தியார் சுஜாதா அந்த கவிதைக்கு அளித்திருக்கும் இந்த உரை.
அவன் காலில் கழல்
அவள் காலில் சிலம்பு
இந்த நல்ல பிள்ளைகள் யாரோ?
கழைக் கூத்தாடியின்
பறைக் கொட்டு போல காற்றில் வாகைமர நெற்றுகள் ஒலிக்கும் மூங்கில் காட்டுக்குள்
செல்கிறார்கள்.
முடிந்தது கதை. கையில் இரண்டு அகப்பையாம் இரண்டும் காம்பு போன அகப்பையாம் என்றொரு பழமொழி உண்டு. அதே நிலை. இத்தகு மரபு, இத்தகு நவீனம் இரண்டில் எதைக்கொண்டும் அந்தப் பாடலின் கவிதை அனுபவத்தைத் தொட்டுவிட முடியாது.
வேறு வழி? இந்த இரண்டையும் விடுத்து, ஒரு கவிதை வாசகன் இன்றைய கவிதையை என்ன முறைமை வழியே காண்கிறானோ அதே முறைமை வழியே சங்கப் பாடல்களையும் பார்ப்பது.
உதாரணத்துக்கு நவீன கவிதை இயங்கும் களத்தின் மூன்று வரையறைகளை, நவீன கவிதை வாசகர் எவரும் இந்த சங்கப் பாடலில் காணலாம்.
முதல் வரையறை கவிதையில் தொழிற்படும் எதுவும் தகவல்கள் இல்லை. அவை நிலவை சுட்டும் விரல் போன்ற, கைகாட்டி பலகை போன்ற, தேடிச் செல்லும் நிலத்துக்கான வரைபடம் போன்ற வழிகாட்டிகள்.
மேலே கண்ட பாடலின் உரையில் மரபு நவீனம் இரண்டுமே, அவன் கால்களில் கழல் இருக்கிறது. அவள் கால்களில் சிலம்பு இருக்கிறது என்ற தகவலைச் சொல்லி நின்று விடுகிறது. தகவல்களில் இருந்து அதை நிலவை சுட்டும் விரல் என்று காணும் போதே,
காலன்ன கழலே, மெல்லடி மேவும் சிலம்பேஎன்று, கழலையும் சிலம்பையும்தான் கவி விசாரிக்கிறான் என்பதை அறிய முடியும்.
காலன்ன கழலே, மெல்லடி மேவும் சிலம்பே, இரக்கத்துக்குரிய இந்த நல்லவர்கள் யார்?
இரண்டாவது வரையறை, கவிதையின் உணர்வு மையம் கொண்டுள்ள 'உடனடித் தன்மை'. இக்கணமே வாசகன் அடையும் அனுபவத் தீண்டல் அது. மேற்கண்ட கவிதையில் உணர்வு மையம் எது? கவிஞன் அந்த இருவர் மீதும் பதற்றம் மீதூற கொள்ளும் இரக்கம்.
மூன்றாவது வரையறை, கவிதை தனக்குள் இயங்கும் எதையும் அந்த உடனடி உணர்வு மையத்தை வாசகர் சென்று தொடவே பயன்படுத்தும். மேற்கண்ட கவிதையின் உணர்வு நிலை எதைக்கொண்டு அடிக்கோடிடப்படுகிறது? நிலக்காட்சி மற்றும் கழைக்கூத்தாடி எனும் உதாரணம்.
இதில் இரண்டு sub text (துணைப் பிரதி) உண்டு. ஒன்று கவிஞன் ஏன் சிலம்பையும் கழலையும் வினவுகிறான் என்பது.
சிலம்பு எனும் அணி ஒலிக்கக்கூடியது. (சிலம்புதல்= ஒலித்தல்). கண்ணகி கால் சிலம்பில் மாணிக்கப் பரல்கள் உள்ளீடாக இருந்ததை அறிவோம்.
ஆண்கள் காலில் அணியும் வீரக் கழல். அதிலும் மணி இருக்கும்.
//விசி பிணி முழவின் வேந்தர் சூடிய
பசு மணி பொருத பரு ஏர் எறுழ்க் கழல் கால்,
பொன் தொடிப் புதல்வர் ஓடி ஆடவும்,//
உரை;
முரசு முழங்கும் பெருமை வாய்ந்த பகைவேந்தர் தம் முடியில் அணிந்திருந்த மணிகளைப் பறித்து வளவனின் புதல்வர் காலில் அணிந்திருந்த கழலுக்குள் ஒலிக்கும் மணியாக்கி மகிழ்ந்தனர்.
என்பது பட்டினப்பாலை வரிகள்.
//கழலும் அழல்விழிக் கொள்ளி வாய்ப்பேய்
சூழ்ந்து துணங்கையிட் டோடி, ஆடித்
தழலுள் எரியும் பிணத்தை வாங்கித்
தான் தடி தின்றணங் காடு காட்டில்
கழலொலி, ஓசைச் சிலம்பொ லிப்பக்
காலுயர் வட்டணை யிட்டு நட்டம்
அழலுமிழ்ந் தோரி கதிக்க ஆடும்
அப்ப னிடம்திரு ஆலங் காடே.//
சிலம்பும் கழலும் ஒலிக்கும் இந்த பாடல் வரிகள் மூத்த திருப்பதிகம் பாடல் எண் 7 இல் வருவது.
ஆக, யுவனும் யுவதியும் எட்டு வைக்க வைக்க ஒலிக்கும் கழல், சிலம்பு வசம்தான் கவிஞன் வினவுகிறான்.(இறையனார் பாடலில் கூந்தல் வாசம் குறித்து தும்பி வசம் விசாரிப்பது போல) அவன் ஏன் அவற்றிடம் பேசுகிறான். காரணம் இரண்டாவது sub text இல் இருக்கிறது. மூங்கில் செறிந்த நிலத்தை கயிறு மேல் நடக்கும் கலைஞன் அந்தக் கயிற்றின் இந்த முனையில் இருந்து அந்த முனைக்கு செல்ல, எவ்வளவு ஜாக்கிரதையாக நடந்து செல்வானோ அவ்வளவு ஜாக்கிரதையாக கவிஞன் கடந்து வருகிறார். அந்த கழைக் கூத்தாட்டதுக்கு, அந்த நிலத்தில் சுழலும் காற்றினால் பறை போல அடித்துக்கொண்டு ஒலிக்கும் வாகை மர நெற்றுக்கள் ஒலி துணை செய்கிறது. இதோ எதிர்ப்படும் இந்த நல்லவர்கள் இப்படித்தான் இந்த நிலத்தை கடந்து போக வேண்டி வரும். எப்படி சமாளிக்க போகிறார்களோ இந்த கருணைக்கு உரியவர்கள். என்று தான் கடந்து வந்த அந்த அனுபவத்தில் இருந்து இரக்கம் கொள்கிறான். அந்த பறை இசை அவனிடம் பேசிய நிலைப் படியே அவன் சிலம்பு கழல் இவற்றுடன் பேசுகிறான்.
பழைய உரை மரபு இந்தப் பாடலுக்கு உருவாக்கிய கதை பிழையானது. கவிஞன் துணையுடனும் வரவில்லை, இவற்றை அந்த துணையுடனும் பேசவில்லை. அவன் தனியே அந்த நிலத்தை கடந்து போகிறான். எதிர் வரும் யுவன் யுவதி கால் அணிகலன்களை நோக்கி பேசுகிறான் என்பது பாடலில் தெளிவாகவே வெளிப்படுகிறது. அந்த வகையில் இப்போது இந்த நவீனக் கவிதைகள் கோரும் அதே வாசிப்பில், sub text உடன் சேர, இந்த கவிதை அளிப்பது இது...
ஒலிக்கும்
வில்லவன் கால் கழலே,
ஒலிக்கும்
தொடியோள் மெல்லடி மேவும் சிலம்பே,
யார் இந்த நல்லவர்கள்?
மூங்கில் காட்டிடை சுழலும் காற்றில், வாகை மர நெற்றுக்கள் அடித்துக்கொள்ளும்.
அந்தப் பறை இசைப் பின்னணியில், கயிற்றில் நடக்கும் கலைஞன் போல மிக கவனமாக இந்த நிலத்தை கடந்து வந்தேன்.
எதிர்ப்படும் இவர்களும் அவ்விதமே இந்த நிலத்தைக் கடக்க வேண்டுமே.
(பாவம்)
கருணைக்குரியவர்கள்.
பாடலை மீண்டும் ஒரு முறை வாசித்துவிட்டு அப்படியே கண்களை மூடி அந்த நிலத்தை கற்பனை செய்யுங்கள். கண்தொடும் தொலைவு கடந்தும் நீளும் பாலை நிலம். மூங்கில் காடு. தனிமை. சுழன்று வீசும் வெங்காற்று. அதில் அடித்துக்கொள்ளும் காய்ந்துபோன வாகை நெற்றுக்கள், இடையே தனியே நடந்து செல்லும் யுவன் யுவதி தெரிகிறார்களா? நெற்றுக்கள் மோதிக்கொள்ளும், கழைக் கூத்தாட்டப் பறை போன்ற ஒலி கேட்கிறதா, அந்த ஒலியைக் குறுக்கே கடந்து செல்லும் வீரக் கழல், சிலம்பு இணை ஒன்றின் மெல்லிய ஜோடி ஒலி கேட்கிறதா, மெல்ல அது தூரத்தில் சென்று மறைகிறதா? கவிஞன் அடைந்த அதே பதற்றத்தை நீங்களும் அடைகிறீர்களா?
எனில் அவனது கவிதை வழியே, இன்றிலிருந்து பயணித்து, அன்றைய கவிஞனை தொட்டுவிட்டீர்கள் என்று பொருள். இப்போது நீங்களும் பெரும்பதுமனாரின் சஹ்ருதயரே.
***
0 comments:
Post a Comment