குறைந்த கூலிக்கு முந்திரிக்கொட்டை
உடைப்பவளை எனக்குத் தெரியும்
கடல்மீன்கள் விற்கும் சந்தைக்கு
வந்தால் புன்னகைப்பாள்
தூறல் நாட்களில் மரச்சாலை வழியே
குடை பிடித்துப் போகும் அவளை
ஓயாமல் காதலிக்கிறான் ஒரு குதிரைலாடம்
அடிக்கும் பட்டறைக்காரன்
லாடக்காரன் என்னுடன் மது குடிப்பான்
நீண்ட மழைக்காலத்தின் மத்தியில்
உடலுறவிற்கென ஒருமுறை அவளை அழைத்தோம்
அவள் ஆர்வத்துடன் ஒத்துக்கொண்டாள்
எருமைகளுக்கென வளர்ந்த பசும்புற் சரிவில்
பொதித்து ஈரம் பொங்க இருவரும் சுகித்தோம்
அந்தியில் கனத்த மலைத்தடத்தின் வழியே
குதிரையில் தானியப்பொதி ஏற்றிவந்த
அவள் கணவன் ஏதோ தனக்கு மகளைப்போல்
பொறுப்பற்றுத் திரிவதாய் அவளை ஏசினான்
அவளோ புன்னகை மிளிர
எங்களை சகோதரர்கள் என்று அறிமுகப்படுத்தினாள்
அவன் சில ஆரஞ்சுப்பழங்களை எங்களுக்கு
அன்பளிப்பாகக் கொடுத்தான்
இந்த வருடம் மழைக்குறைவு என்றவாறே
அவள் மயிர்க்கற்றைகளை நீவி முடிச்சிட்டான்
அவன் தோளில் சாய்ந்து அவள் விடைபெற்ற கணம்
எங்களை இருள் சூழ்ந்திருந்தது
கைகளில் பழங்கள் மிருதுவாய் இருந்தன.
- யவனிகா ஸ்ரீராம்
(சிற்றகல் தொகைநூல், பக்கம் 271)
“இலக்கியம் நுட்பமானது கவித்துவம் நுட்பத்திலும் நுட்பமானது. இலக்கியம் ஒரு மொழிவழிக்கலை. கவித்துவமோ மொழிசார்ந்து வாழ்வின் நுட்பத்திலும் நுட்பங்களைத் தொட்டு உணர்த்துவது.”
- பூமா ஈஸ்வரமூர்த்தி
(அதே நூலின் தொகுப்பாசிரியர் உரையில்)
நுண்ணிதும் நுண்ணிதான விஷயம். அறியப்படாத உலகம், அறியப்படாத வாழ்க்கை, அறியப்படாத மனிதர்கள் – நமது தமிழ்க்கவிதையிலேயே.
மனத்தடையின்றி சொல்லப்பட்டிருக்கிறது என்பது மட்டுமல்ல விகற்பமில்லாமலும் விளங்குகிறது.
நாடகம் போலக் காட்சிகள் மாறுகின்றன.
அவன்,
இவர்கள்
அவன்
அவளது சகஜபாவம்.
இவர்களது ஸ்திதி
அவனது வெள்ளந்தி மனசு.
அவன் பொறுப்பற்றுத் திரிவதாய் ஏசும் அவன்
புன்னகை மிளிர அறிமுகப்படுத்தும் அவள்
அவர்களின் அந்நியோன்யம்
அவ்வளவும் காட்சிகளாக.
“எங்களை இருள் சூழ்ந்திருந்தது
கைகளில் பழங்கள் மிருதுவாய் இருந்தன”
இதுதான் கவிமனம்.
உண்மையான நவீனகவிதை.
நவீனமாகவும் இருக்கிறது; கவிதையாகவும் இருக்கிறது.
யவனிகா
விஷயமுள்ள கவிஞன் தான்;
வித்தகமான கவிஞனும் கூட
இப்படி ஒரு ஏழெட்டு பேர் இருக்கிறார்கள்
என்பது தான் இன்றைய கவிதைச் சூழலில் ஆறுதலே.
(கூடு தமிழ் ஸ்டுடியோ இணையதளம்)
***
யவனிகா ஸ்ரீராம் தமிழ் விக்கி பக்கம்
விக்ரமாதித்யன் தமிழ் விக்கி பக்கம்
***
0 comments:
Post a Comment