இரண்டு
அல்லது மூன்று
நூற்றாண்டுகள் வசிக்க
எண்ணியிருந்தேன், இருந்தும்,
இதோ என்னிடம்
வருகிறது மரணம், வெறும்
எண்பத்தைந்து வயதே நிரம்பிய
குழந்தையிடம்.
- ஹனபுஸா இக்கீய்
இன்னொரு கவிதை மோரியா ஸென் ஆன் என்பவர் எழுதியது,
நான் இறந்த பின்
ஏதேனுமொரு விடுதியில்
ஒயின் பீப்பாய்க்கு அடியில்
புதையுங்கள் என்னை.
ஒருவேளை, அதிர்ஷ்டவசமாய்,
மதுப் பீப்பாய் லேசாகக்
கசியக் கூடும்.
முதல் கவிதை மரணம் வரும்போது அதை அந்தக் கவிஞன் எப்படி பார்க்கிறான் என்று எழுதப்பட்டுள்ளது. இரண்டாவது கவிதையில் மரணித்தபிறகு எனக்கு இதைச் செய்யுங்கள் என்று கவிஞன் கூறுகிறான். இரண்டு கவிஞர்களுமே மரணத்தை ஒரு புன்னகையுடன் கவிதையில் எதிர்கொள்கிறார்கள். முதலாமவர் மரணம் நெருங்கி வருகையில் அதனருகில் ஒரு குழந்தையாக, ஒரு சிறிய பூவாக மாறிவிடுகிறார். குழந்தைகள் இறந்தால் சொர்க்கத்துக்குத் தான் போவார்கள் என்று ஒரு கூற்று உண்டு. அதன்படி கவிதையின் வழி கவிஞர் தான் செய்த பாவங்கள் அனைத்தையும் அழித்து விடுகிறார். இரண்டாமவர் உண்மையில் இறக்கவே விரும்பவில்லை. அவர் இந்த உலகின் இன்பங்களில் .நிறைபவர். தனக்கு மரணம் வந்துவிடக் கூடாது என்பதைத்தான் அவர் அப்படிச் சொல்கிறாரோ என்னவோ. இந்த இரண்டு கவிதைகளையும் நண்பர் ஒருவருக்கு படித்துக் காட்டினேன். அவர் இருவரில் இரண்டாமவரே சிறந்தவர், அவர் மரணத்தைத் தாண்டியும் தன் கனவைக் கண்டுவிடுகிறார் என்றார். ஆனால் இருவரில் வயது முதிர்ந்த மரணத்தின் கையை பிடித்துப் போகும் அந்த குழந்தையையே எனக்கு பிடித்திருந்தது. இரண்டாமவர் ஒயின் பீப்பாய்க்கடியில் புதையுங்கள் என்றாலும் அவருக்கு மரணிப்பதில் சிறு சஞ்சலம் தெரிகிறது. ஆனால் இருவருமே புன்னகைக்கிறார்கள் கவிதையில்.
***
யுவன் சந்திரசேகர் தமிழ் விக்கி பக்கம்
***
0 comments:
Post a Comment