கவிதை வாசகனாக ஒட்டுமொத்த கவிதைகளையும் இரு பிரிவுகளாக வகைப்படுத்துகிறேன். ஒன்று பெரும்பான்மையான எண்ணிக்கையில் எழுதிக் குவிக்கப்பட்டுள்ளவை. உரத்த சிந்தனையை வார்த்தைகளுக்குள் உறையச் செய்பவை, புகைமூட்டத்தின் நடுவே மந்தகாச சிரிப்பினை அளிப்பவை. சொற்களின் விளையாட்டாய் ஒன்றை ஒன்று வரவேற்றும் திரை மறைவில் பரஸ்பரம் நிராகரித்தும் பாவனை கொள்பவை. புதிர்வட்டப்பாதையில் எதிர்கொள்பவரை கணக்கில் கொள்ளாமல் பயணிப்பவை. ஆழமான உணர்ச்சிக் கொந்தளிப்பில் வானுக்கும் மண்ணுக்கும் சீறித் தணிபவை. ஏக தேசத்தில் அகச்சிடுக்குகள் என்கிற விஸ்தார சொற்வெளியில் நீந்திக் கிடப்பவை. இக்கவிதைகள் எளிதில் நம்மோடு நட்பு கொள்பவையாகவும் இருக்கின்றன. யாவற்றின் மீது ஒட்டுறவு கொள்ள விரும்பாத கடுமை காண்பிப்பவையாகவும் அதே சமயத்தில் அமைந்து விடுகின்றன. காதலனுக்கு ஒரு முகமும் தமையனுக்கு வேறு முகமும்அந்நியனுக்கு உணர்ச்சிகள் ஏதும் வழங்காத முகத்தையும் காட்டிச் செல்லும் கன்னியைப் போல.
இரண்டாம் வகையிலான கவிதைகள் அரூபத்தீண்டல்களை அளிப்பவை. அவை இருக்கின்றன. ஆனால் கட்புலனாவதில்லை. காட்சிப்படுத்துவதன் மூலம் அவற்றின் இருப்பை நிறுவ முடியாது. மனித வாழ்வின் பல்வேறு கோலங்களை மட்டும் அவை பொருட்படுத்துவதில்லை. ஒட்டுமொத்த பிரபஞ்சமும் அக்கவிதைகளில் தட்டுப்படும். இயற்கையின் ஒரு துமியே மனிதன். ஆனால் அவற்றின் கனத்தை அவை கொண்டிருப்பதில்லை. அதிகாலையிலோ பின்னிரவிலோ தனிமையில் இருக்கும் போது வந்து தீண்டும் தென்றலைப்போல , குழந்தையின் முகத்தை காணும் போது ஏற்படும் உளக்கிளர்ச்சி போல, இயற்கையின் முன் பூரித்து திகைத்து நிற்கும் மனத்தைப் போல. இவ்வகை கவிதைகளுக்கு வியாக்கியானங்களை துல்லியமாக வழங்கிட முடியாது. அவரவர் மனோதர்மத்திற்கு இயைந்த சில அர்த்தப்பாடுகளை உருவாக்கிக்கொள்ளலாம். அவற்றை அனைவரும் ஆமோதிிக்கும் வண்ணம் எழுப்பிக்காட்டிவிட முடியாத கையறுநிலையும் நிழலென உடன்வரும். சங்கக் கவிதைகளுக்கு இச்சாயல் உண்டு. நவீன கவிதைகளில் பிரமிள், சி.மணி, பசுவய்யா, தேவதேவன், தேவதச்சன்,எம்.யுவன் போன்றோரின் கவிதைகளில் சில இவ்வகையில் அமைந்துள்ளன. மொழியின் உச்சபட்ச பதம் கவிதையில் எனில் கவிதையின் உச்சக்கட்ட மௌனம் இவ்வகைக் கவிதைகளில்தான் என்பேன்.
சமகாலத்தில் நையப் புடைக்கப்படும் ஒரு இலக்கிய வடிவம் என்றால் அது கவிதைதான். ஒருபுறம் கவிதை என்கிற வஸ்துவை தன் வாழ்நாளில் ஒரு முறையும் எதிர்கொண்டிராத கவிஞர்கள் எழுதிக் குவிப்பவை. எதிர்நிலையாக அரசியல் ஆதாயங்களை உத்தேசித்து லட்சிய வேகத்தில் கூக்குரலில் ரௌத்தரம் கொள்பவை. இரண்டாயிரத்திற்கு பிறகு மற்றுமொரு புதிய போக்கு உருவாகி வந்துள்ளது. அவை எளிய சொற்களின் வாயிலாக கவித்துவத்தை கட்டியெழுப்ப முயல்பவை. உரைநடையை தன்னியல்பில் கொண்டிருப்பவை. மேற்குறிப்பிட்ட மூன்று ரகங்களுமே தமிழ்க்கவிதையை மலினப்படுத்துகின்றன. ஆனால் அவைதான் அதிகமாக உற்பத்தியாகவும் செய்கின்றன. நான்கு சொற்களில் கவிதை என்கிற பிண்டத்தை முன்வைக்க எளிதாக சாத்தியப்படுகிறது. சங்கங்கள் அமைத்து தரப்படுத்தி தொகுத்த பெருமை கொண்டுள்ள தமிழ் மொழியில்தான் இன்று கவிதை என்கிற பெயரில் மொழி மாசுக்கள் கட்டற்று குவிந்துள்ளன. இக்கருதுகோளே கவிதை என்கிற உன்னதத்தை கழிசடையாக்கி சீந்துவாரற்ற நிலைக்கு தள்ளிவைத்துள்ளது.
இப்பகைப்புலத்தில் தான் பெயரற்ற யாத்ரீகன் தொகுப்பு மிகுந்த முக்கியத்துவம் உடையதாக இருக்கிறது. இந்திய மண்ணில் தோன்றிய பௌத்தம் இன்று நமக்கு அந்நியந்தான். அதன் அர்த்தப்பாடுகள் நம் பொதுப்புத்தியில் இன்னதென்று எளிதில் விளங்கிக்கொள்ள முடியாத மாயங்களாகிவிட்டன. மகாயான பௌத்தம் அளித்த கொடையே ஜென் என்கிறார் இக்கவிதைகளை மொழிபெயர்த்த யுவன் சந்திரசேகர். தமிழில் கவிதைகளில் மட்டுமின்றி ஜென் மனோ நிலையை புனைவு வெளிக்குள்ளும் கொண்டு வந்தவர் என்கிற பெருமையை யுவன் சந்திர சேகருக்கே அளிக்க முடியும். அவரின் படைப்பிலக்கிய வெளிப்பாட்டின் ஆதார லயம் ஜென் மனவெளிதான். ஏற்பும் நிராகரிப்பும் தாண்டிய மூன்றாவது ஒரு நிலை உண்டு என்கிற பார்வை யுவனின் உலகம். அது கிளியை கிளி என்றும் சொல்லலாம் என்றுதான் சொல்ல விழைகிறது.
ஜென் கவிதைகள் எளிய சொற்களைக் கொண்டிருக்கின்றன என்ற போதும் அந்த எளிய சொற்கள் அள்ள முயல்வது இப்பிரபஞ்சத்தை. அந்த விஸ்வ ரூபத் தரிசனந்தான் அவற்றை வாசிக்கும் போது நம்மை திகைப்பில் ஆழ்த்துகிறது. மட்டுப்படுத்தப்பட்ட பார்வைக் கோணங்களில் பழகிப்போன அகவிழிகள் மேலும் விரிவு கொள்கின்றன. சொற்களை சிலைத்து நிற்கவைக்கும் கவிதை மனத்தை சிதைத்து பறக்கும் எழுச்சித் தருணங்களை வந்தடைகிறோம்.
மலைச்சிகரத்தின் உச்சியில்
முடிவின்மை விரிந்திருக்கிறது
எல்லாத் திசைகளிலும் தனது
நள்ளிரவுப் பரணிலிருந்து எட்டிப்
பார்க்கும் தனிமை நிலா, பனியடர்ந்த
குளத்தில் தெரியும் தன்
பிம்பத்தை வியக்கிறது.
நடுநடுங்கியவாறு,
நிலவை நோக்கிக்
காதற்பாடல் இசைக்கிறேன்.
-ஹான் ஷான்.
மலைச்சிகரத்தின் உச்சியில் முடிவின்மை விரிந்திருக்கிறது எல்லாத் திசைகளிலும் என்கிற முதல் மூன்றுவரிகளே இக்கவிதையின் விதை. ஒட்டுமொத்தத்ததையும் அள்ள விழையும் பார்வைக்கோணம். சமதளத்தில் புதையுண்டு சிறைப்படும் வாழ்க்கை விதிக்கப்பட்டவனுக்கு ஏற்படும் உயரப்பறத்தல் அனுபவம். மொழி உந்தித்தள்ள எடைமிகுந்த பிரக்ஞை மேலெழும்புகிறது. சிகரத்தை அடைந்து இயற்கையின் விநோதத்தை கண்டறிகிறது.எந்த ஒன்றின் சிகரத்திலும் நாம் அடையக் கூடியது அடைய முடியாமை என்னும் அசாத்தியப்பாடுகளைத்தான். வெல்லவே முடியாத இயற்கையைத்தான். திகைத்து அரற்றி மண்டியிட வைக்கும் வல்லமைதான் சிகரங்கள் கொண்டிருக்கின்றன என்கிற போதம்.
கவிதை எழுதும் மனத்தையும் கவிதை வாசிக்கும் மனத்தையும் மின்னலென கணநேர ஒளிரிடலில் சந்திக்கச் செய்யும் சாகசம் ஜென் கவிதைகளின் அதிரூபம்.
அவன்
வனத்தில் நுழையும்போது
புற்கள் நசுங்குவதில்லை.
நீரில் இறங்குகையில்
சிற்றலையும் எழுவதில்லை
என்கிற கவிதையில் அவன் என்கிற ஆகிருதி நாம் வாசித்து முடித்ததும் சூரிய ரச்மி பட்டதும் கரைந்தோடும் பனிமூட்டத்தைப் போல காற்றில் மறைகிறது. ஆனாலும் அக்கவிதை நம் மனதில் வலுவான தீண்டலை எழுப்பிவிடத்தான் செய்கிறது.
இயற்கையின் மடியில் மனித மனம் கொள்ளும் பித்துநிலையை ஜென் கவிதைகள் ஓவியத்தீற்றல் கொண்டு உறைய வைக்கின்றன. அவற்றில் பித்தேறியதன் மன அலைவு துருத்தித் தெரிவதில்லை. ஆயினும் காணுந்தோறும் அவ்வோவியத்தின் பித்தேறிய கரங்கள் நம்மைத் தழுவி மயக்கமூட்டுகின்றன.
இலையுதிர் காலத்தில்
மீண்டும் நிலவைப் பார்ப்பேன் என
நம்புகிறேன்தான், என்றாலும்
இந்த முன்னிரவில்
அது இருக்கும்போது
எப்படித் துாங்குவேன்?
- எய்ஹெய் டோகென்.
கவிதையை நெருங்கி அறிய ஆர்வம் கொள்ளும் ஆரம்ப நிலை வாசகர்களுக்கு இத்தொகுப்பே சரியான திறப்பாக இருக்கும். கவிதையின் அதிக பட்ச சாத்தியங்களை அறியக் கிடைக்கும் தொகை நுாலாக அமைய வாய்ப்புக்கள் இத்தொகுப்பில் அதிகம். உண்மையில் கவிதை எழுத விரும்புகிறவர்களை கட்டாயம் இத்தொகுப்பினை வாசிக்கப் பணிக்கலாம். கவிதை என்னும் மாயம் மிக எளிதாக கைக்குள் சிக்கும் அபூர்வம் இக்கவிதைகளின் ஊடாக கிடைக்கும் என்கிற உத்தரவாதத்தை வழங்கலாம்.
***
யுவன் சந்திரசேகர் தமிழ் விக்கி பக்கம்
பெயரற்ற யாத்ரிகன் நூல் வாங்க...
***
0 comments:
Post a Comment