கவிதையின் சாரம் - அரவிந்தர் (தமிழில் சியாம்)

கவிதையின் இயல்பென்பது என்ன? அதன் இன்றியமையா விதி என்ன? அதிலிருந்து நாம் அடையக்கூடிய உச்ச பட்ச ஆற்றல் என்ன? மனிதன் தனது உச்சங்களையும், ஆழங்களையும், விரிவுகளையும் துழாவி இந்த இசைக்கருவியிலிருந்து அவனடையும் இசையென்பதென்ன? அது மந்திரமென மாற எப்படி சாத்தியப்படுகிறது? கவிதைப்படைத்தலை போன்ற ஆழமான, அறிவிற்கு சிக்காத, ஒன்றை விளக்கி நமது ஆற்றலை வீணடிக்க வேண்டியதில்லை. எண்ணிலா நரம்புகள் கொண்ட சரஸ்வதியின் யாழை பகுத்தாய்வது குறுகிய, பொருளற்ற ஒரு களியாடல் மட்டுமே. ஆனால் நமக்கு உள்ளுணர்வின் தேவை உள்ளது. நமது தேடலைத் தெளிவுபடுத்த சில விவரிப்புகள் தேவை. வரையறைகளால் அல்ல விவரிப்புகளால் நாம் அந்தத் தேடலைத் தொடர வேண்டும். கவிதையின் இன்றியமையாதவற்றைக் குறித்த தேடல் இயலாததல்ல. அதே நேரத்தில் அது பொருளற்றதும் அல்ல.

இங்கு இரண்டு பிழைகள் உள்ளன. ஒன்று சாமானிய கல்லா மனம்(ordinary uninstructed mind) செய்வது. மற்றொன்று அதிகம் கற்ற விமர்சகர் அல்லது மிகுந்த அறிவு விழிப்பு கொண்ட கலைஞர் செய்வது. சாமானிய மனதிற்கு கவிதை என்பது கற்பனை இன்பம், செவி இன்பம், மற்றும் ஒரு வித பொழுது போக்கு மட்டுமே. கவிதையென்பது அது தான் என்றால் அதன் இலக்கையும், ஆன்மாவையும், தன்னறத்தையும்(deeper law) ஆராய்ந்து நேரத்தை வீணடிக்க வேண்டியதில்லை. அழகான, இனிமையான, இன்னொலி கொண்ட ஒன்று இதற்கு போதும். அனக்ரியான்(Anacreon) அல்லது மிம்னேர்மஸ் (Mimnermus) பாடல்கள் ஈடிபஸின்(Oedipus) கவித்தன்மை அளவிற்கு நிறைவளிக்கக்கூடியவையே. நிச்சியமாக நாம் இன்பம் என்பதை கவிதையிலிருந்து ஏதிர்பார்க்கலாம், மற்ற கலைகளிலிருந்து எதிர்பார்பது போலவே. ஆனால் புறவய இன்பமும், ஏன் அகவய கற்பனை இனபமும் கூட அடிப்படையானவை தான். அறிவாற்றலுக்கு இணையாக கற்பனையும் செவியும் பண்படவேண்டியவை தான். ஆனால ஒரு கட்டத்தில் அவை தங்களது உச்ச நிலையையும் கடந்து செல்ல வேண்டும். அந்நிலையில் அவை அவற்றைக் கடந்த ஒன்றிற்கு துணைநிற்கும். அவ்வாறு இல்லையெனில் அவை மந்திரங்களின் உயர் நிலையை நோக்கி செல்ல முடியாது. 

அறிவாற்றலும் கற்பனையும் செவியும், கவி இன்பத்தின் உண்மையான அல்லது குறைந்த பட்சம் உயர்ந்த பெறுநர்கள் அல்ல. அவை கவிதையின் தடங்களும் கருவிகளும் மட்டுமே. கவிதையை படைப்பவை அல்ல. கவிதையை உண்மையாக படைப்பதும் பெற்றுக்கொள்வதும் ஆன்மா தான். மற்றவை (அறிவாற்றல், கற்பனை, செவி) எவ்வளவு விரைவாகவும் வெளிப்படையாகவும் கவிதையை கடத்துகின்றனவோ அவ்வளவு குறைவாக அவை தங்களின் நிறைவிற்காக கவிதையை கோருபவை. சொல் எவ்வளவு நேரடியாக ஆன்மாவை அடைந்து கரைகிறதோ அந்த அளவிற்கு கவிதை சிறந்தது. எப்போது கருவிகளுக்கு இன்பமளித்து அது ஆன்மாவின் ஆழ்ந்த இன்பமாக மாறவில்லையோ அப்போது கவிதை தனது பணியை அல்லது உயர் பணியை ஆற்றவில்லை என்றே பொருள். ஒரு தெய்வீக ஆனந்தம்1-ஆக்கப்பூர்வமான, வெளிப்படுத்திக்கிற, கட்டமைக்கக்கூடிய, இப்படி சொல்லலாம் பிரபஞ்ச ஆன்மா இப்பிரபஞ்சத்தின் ஒத்திசைந்த வடிவங்களாக மாறும்பொழுது தன் பெரும் ஆற்றல் வெளிப்படுகையில் உணர்ந்த ஆனந்தத்தின் ஒரு தலைகீழ் பிரதிபலிப்பு. ஆன்மீக மெய்மை, உயிர், ஆற்றல், உணர்வுகள் எல்லாம் ஒரு மூலமுதல் படைப்பாற்றல்கொண்ட பார்வையாக மாறுகையில் உள்ள ஆன்மீக ஆனந்தத்தையே கவிஞனின் ஆன்மா உணர்கிறது. அவன் கவிதையில் மானுட எல்லைகளை கடக்கையில், அவன் அதை பெறத் தயாரானவர்களுள் அதை நிரப்புகையில் அவ்வானந்தத்தை உணர்கிறான். இது ஒரு உயர் கடவுள் போன்ற(god like)  பொழுதுபோக்கு அல்ல. இது ஒரு படைப்பாற்றல் கொண்ட, ஒளிமிக்க ஆற்றல். 

மற்றொரு பக்கம் விமர்சகரோ, அறிவு விழிப்பு கொண்ட கலைஞனோ கவிதையை குறையற்ற அல்லது நேர்த்தியான ஒரு உக்தி என்றே பார்க்கிறான். நிச்சியமாக எல்லா கலைகளிலும் நல்ல உக்தியே கட்சித்தின் முதல் படி. ஆனால் அதில் இன்னும் பல படிகள் உள்ளன. நீங்கள் தேடுவதை நெருங்குவதற்கு முன்னால், ஒரு உலகமே அதற்கிடையில் இருக்கிறது. தீவிர திறன்பெற்ற ஆன்மாவை குறையுற்ற செயல்படுத்துதல் கூட நூற்றாண்டுகள் கடந்தும் நிற்கும் கவிதையை படைப்பதிலிருந்து தடுக்க முடியாது. உக்தி இன்றியமையாதது எனினும் வேறு கலைவடிவங்களை ஒப்பிடுகையில் கவிதையில் உக்தியின் பங்கு சிறியதே. அதற்கு முதல் காரணம் கவிதையின் கருவியான இசைந்த சொல்(rhythmic word). அது முழுக்கவே நுட்பமான பருவடிவற்ற கூறுகளால் ஆனது. இசைந்த சொல் நுட்பமான கூறு கொண்டது, அதன் சந்தம்-பருவடிவற்ற ஒன்று. பிறகு அதன் பொருள் அல்லது எண்ணம். அதன் சந்தம் மற்றும் பொருள் இணைந்தும், தனித்தனியாகவும் ஆன்மா கொண்டது, அது ஆன்மீக ஆற்றல். அதுவே மிக முக்கியமானது. இதன் சிறுபகுதி உக்திக்கு கட்டுப்பட்டு பிறந்தாலும், அக்கணமே பறத்தலின் முதற்கணமே இதன் ஆற்றல் இயந்திரதத்தனமான கட்டுமானங்களை மீறி பறக்கிறது. இந்த மொழி வடிவம் சொல்லிலடங்காமைக்கு  அண்மையிலுள்ள ஒன்றை தன் உச்சியில் சுமக்கிறது.

கவிதை அதன் வடிவை அதுவே நிர்ணயிக்கிறது. அதன் வடிவு வெளியிலிருந்து, அதன் மேல் திணிக்கப்படுவதில்லை. உக்தி மீது பெரும் கவலை  கொண்டுள்ள பிற கலைஞர்களை போல் அல்லாமல் கவிஞன் கவிதையைப் படைக்கிறான். சந்தேகமின்றி அவன் உக்தியை கைகொள்ள வேண்டும். ஆனால் படைப்புத் தருணத்தின் உச்சத்தில் அறிவாற்றல் ஒரு படி கீழானது அல்லது வெளிப்படாத ஒன்றாக உள்ளது. அவனது சிறந்த  படைப்புத் தருணங்களில் அவன் உத்திகளை மறக்க அனுமதிக்கப்படுகிறான். சந்தத்தின், மொழி நடையின் கட்சிதம் அவனது ஆன்மாவின் தன்னியல்பான வடிவாக வெளிப்படுகிறது. பிரபஞ்ச ஆன்மா கூட இந்தப் பிரபஞ்ச ஒழுங்கை தனக்குள்ளிருக்கும் நித்திய சொல்லின் ஆற்றல் கொண்டே படைத்தான். அதன் ஆழ்மன இயல்பிலிருக்கும் ஆன்மீக தூண்டுதலின் சலனம் பிற படைப்புக்களை மேற்கொள்ள அனுமதித்தான்.  இதுவே உயர் மொழி, உச்ச கவித்துவ வெளிப்பாடு (Supreme Poetic Utterance). அது அவனது கவிதையில் நித்தியமானது. அதில் கொஞ்சம் போதும், அவனது மற்ற படைப்புக்களை தெளிவின்மையிலிருந்து மீட்க. ஸவல்பம் அப்யஷ்ய தர்மஸ்ய!

இதுவே கவிஞனின் இசைந்த சொல்லை சுய தரிசனம் அல்லது உலக தரிசனத்தின் வெளிப்பாட்டிற்கான மனிதருக்கு சாத்தியப்பட்ட உயர் மொழியென ஆக்குகிறது. ஒன்றை கவனிக்க வேண்டும், ஆழ்ந்த அனுபவங்களை, முழுதும் விளக்கிவிட முடியாத ஆன்மீக கருத்துக்களை வெறும் அறிவு சார்ந்த விளக்கமாக மட்டுமின்றி, வெளிப்படுத்த முயலும்போது தன்னிச்சையாகவே இசைந்த வடிவங்களை அது பயன்படுத்துகிறது. அம்முறை கவிதையின் பண்பு. ஆனால் கவிதை இப்பார்வையையும், வெளிபாட்டையும் எல்லா அனுபவங்களுக்கும், மிக புறவயமான அனுபவம் என்றால் கூட பயன்படுத்துகிறது. ஆகையால் இயல்பிலேயே கவிதை ஒரு பொருளை அதன் புறத் தோற்றங்கள் கடந்து வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

நாம் கவிதையின் விளக்கமுடியா ரகசியத்தை அல்ல அதன் அடிப்படைக் கூறுகளை காணலாம். சாதாரண பேச்சில், மொழி எல்லைகளுக்கு உட்பட்ட நடைமுறை தொடர்புக்காகவே பயன்படுத்தப்படுகிறது. நாம் அன்றாடம் பயன்படுத்தும் இயந்திரங்கள் வாழ்வுக்கு பயனளிப்பவை. ஆனால் அவற்றுக்கு உயிரென ஒன்றில்லை. நாம் சொற்களையும் அவ்வாறே பார்க்கிறோம், கருத்துக்களைப் பரிமாறும் சின்னங்களாக. நாம் சொற்களை உயிர்ப்பியுள்ளதாக மாற்ற நினைக்கையில்,  நமது குரலின் ஒலி வேறுபாடுகளின் மூலம், நாம் நம்மிடமிருந்து அதற்கு ஆற்றலை அளிக்க வேண்டியுள்ளது. நமது உணர்ச்சிகளின் மூலம் சொற்களுக்கு அவற்றின் தன்னியல்பில் இல்லாத ஒன்றை சேர்க்கிறோம். ஆனால், நான் நினைக்கிறன், மொழியின் வரலாற்றில் பின்னோக்கி பார்த்தால் அல்லது அதன் தோற்றுவாயையே பார்த்தால் மனித பேச்சின் நிலை இவ்வாறல்ல என்பதை உணர முடியும். சொற்கள் துடிப்புள்ள உயிர் கொண்டவையாக இருந்தது மட்டுமின்றி, அவற்றின் மேல் அவற்றை பேசுபவனின் கவனம், இன்று அதிநவீன அறிவாற்றல் கொண்ட நம்மைவிட கூடுதல். இது ஆதி மொழியின் இயல்பிலிருந்து வந்தது. அது உணர்வுகள், விரிந்த வரையறையற்ற மனப் பதிவுகளை வெளிப்படுத்துவதில் நுட்பம் கொண்டதாக இருக்கிறது. நாம் இன்று அதை பெரிதும் பொருட்படுத்துவதில்லை. அறிவுசார் துல்லியம் என்பது அதன் இரண்டாம் பட்ச கவனமாகவே இருந்தது. அறிவு பரிணாம வளர்ச்சி அடைகையில் அத்துடன் இணைந்து இதுவும் முதன்மையானதாக மாறியுள்ளது. ஒரு ஒலி எப்படி ஒரு நிலையான கருத்தின் வெளிப்பாடாக மாறியது என்பதன் காரணம், அவ்வொலிக்கும் அறிவுக்கும் இருக்கும் தன்னியல்பான தொடர்பில் இல்லை. மனிதர்கள் ஒரு ஒலிக்கும் ஒரு கருத்துக்கும் உள்ள தொடர்பை அவர்களே ஏற்றுக்கொண்டால் அவ்வொலி அக்கருத்தை வெளிப்படுத்தத்தான் செய்யும். ஆனால் உண்மையான காரணம் என்பது ஒரு ஒலி மனித ஆன்மாவில், உயிரில் அதிர்வுகளை ஏற்படுத்தும் தன்மையில் உள்ளது. ஒரு உதாரணம் நான் சொல்வதை நன்கு விளக்கும். ஓநாய் என்ற ஒரு சொல், அதன் தோற்றுவாய் நமது மனதில் இல்லை. அச்சொல் நமது அறிவாற்றலில் ஒரு குறிப்பிட்ட பொருளை உணர்த்துகிறது, அதன் பிறகு மற்றவற்றை நாம் செய்து கொள்ள வேண்டும்.  “கிழிப்பவன்” என்ற பொருள் கொண்ட 'वृक' (vrk) என்ற சமஸ்கிருத சொல். இச்சொல்லும் அப்படியே, அறிவாற்றலுக்கு ஒரு பொருளை உணர்த்துகிறது. ஆனால் உண்மையில் அது ஓநாய்க்கும், மனிதனுக்கும் இடையில் உள்ள தொடர்பை வெளிப்படுத்துகிறது. அது மட்டுமின்றி அவ்வெளிப்பாடு கிழித்தலுடன் தொடர்பு கொண்ட ஒரு ஒலியுடனேயே நிகழ்ந்துள்ளது. இத்தன்மை ஆதி மொழிக்கு உயிர்த்துடிப்பு அளித்துள்ளது. ஒரு நோக்கில் மொழி தனது இயல்பான கவி விசையை இழந்துள்ளது. மற்றொரு நோக்கில் துல்லியத்தையும், தெளிவையும், பயன்பாட்டுத் தன்மையையும் அடைந்துள்ளது.     

தற்போது கவிதை திரும்பி செல்கிறது, அதன் மூலமுதலை மீட்கிறது, ஆனால் வேறொரு வழியில். படிமங்களின் மீது கவனம் செலுத்துவது மூலமும் ஒலிக்குண்டான உயிரின்மீதும், ஆற்றல்மீதும், உளப் பதிவுகள் மீதும் கவனம் செலுத்துவதின் மூலமும் கவிதை இம்மீட்பை செய்கிறது. கவிதை இதனுடன் அறிவாற்றல் அளிக்கும் சிந்தனையையும் இணைத்துக்கொள்கிறது. கவிதை, சொல்லின் அறிவார்ந்த மதிப்பை மட்டுமின்றி, அதன் உணர்வாற்றலை மட்டுமின்றி இவற்றின் மூலம் இவற்றைக் கடந்த ஆன்மாவையும் கொண்டு வருகிறது. ஆதலால் கவிதை என்பது சொல்லின் எல்லைக்குட்பட்ட அறிவார்ந்த பொருட்களுக்கு அப்பால் உள்ள எண்ணற்ற பொருட்களின் ஒரு குறிப்பு. ஆதிமொழி போல  மனிதனின் உயிர்-ஆன்மாவை(life-soul) வெளிப்படுத்துவதாக மட்டுமின்றி, தற்போதைய பேச்சு போல அறிவாற்றலின் கருத்துக்களை வெளிப்படுத்துவதாக மட்டுமின்றி, அவனது உயர்ந்த பரந்தபட்ட ஆன்மாவின் அனுபவங்களை, தரிசனங்களை, கருத்துக்களை வெளிப்படுத்தும் ஒன்றாக கவிதை உள்ளது. அவற்றை நமது மனம்-ஆன்மா(life-soul) மற்றும் அறிவாற்றலுக்கு உண்மையாக்குகிறது. அத்துடன் சொல்லின் மூலம் ஆன்மாவின் கதவுகளை திறக்கிறது. 

உரைநடை, மொழியை அதன் நடைமுறை பேச்சு பயன்பாட்டிலிருந்து மேலே உயர்த்துகிறது. ஆனால் அது பெரும் முயற்சியை செய்யாததால் கவிதையிலிருந்து வேறுபடுகிறது. உரைநடை சொல்லின் அறிவுசார் மதிப்பின் மீது தனது உறுதியான நிலைப்பாட்டை எடுக்கிறது. அது நடைமுறை பேச்சு பயன்படுத்தாத இசைவில்(rhythms) கவனம் செலுத்துகிறது அதன் நோக்கம் நடையில் ஒத்திசைவு. அறிவாற்றலை நிறைவிப்பதற்காக சொற்களை இணக்கமாகவும் ஒளிமிக்கதாகவும் இணைக்கிறது. அது நுட்பமற்ற நடைமுறையைவிட்டு துல்லியமான, நுட்பமான, நெகிழ்வான வெளிப்பாட்டை முயற்சிக்கிறது. இதன் முதல் நோக்கமே மொழியின் நிறைவு. உரைநடை இந்நிறைவைக் கடந்து, மொழியின் பல்வேறு கூறுகளின் மூலமும் சொல்லாட்சிகளின் மூலமும் தனது அறிவார்ந்த முறையீட்டின் மீது கூடுதல் கவனம் செலுத்தலாம். இந்த முதல் தடையை மீறி, அது உறுதியான ஒத்திசைவை(rhythm) அனுமதிக்கலாம், நேரடியாக உணர்வுகளைத் தூண்டலாம், தெளிவான அழகியல் நோக்கை வலியுறுத்தலாம். மேலோட்டமாக பார்க்கையில் கவிதைக்கு மிக நெருக்கமாக இருக்கும் அளவுக்கு படிமங்களை பயன்படுத்தலாம். ஆனால் அது அவற்றை அலங்காரத்திற்காக பயன்படுத்துகிறது. அல்லது தான் விளக்கும் சிந்தனைக்கு வலுவான அறிவுசார் பார்வையை சேர்க்கவே அதை பயன்படுத்துகிறது. அதே போல், உரைநடை எப்போதும் அதன் முக்கிய, நேயரும் மதிப்பிடுபவருமான அறிவாற்றல் மீதே கவனம் செலுத்துகிறது. தர்க்கமும் ரசனையும் அறிவாற்றலின் இரு ஆற்றல்கள். அவை உரைநடையாளனுக்கு முழுமுதற் கடவுள்கள். ஆனால் கவிஞனுக்கு அவை வெறும் சிறு தெய்வங்களே.

மிக வலுவான இசைவின் சமநிலையை அடைந்தால்(rhythmic balance), படிமங்களை தரிசனங்களுக்காக மட்டுமே பயன்படுத்தினால், தன்னை மொழியின் இன்னும் வன்மையான மூச்சுக்காற்றுக்கு ஒப்பளித்தால், உரைநடை தனது எல்லைகளை கடந்து கவிதையின் எல்லைக்குள் செல்லும். அது கவித்துவ உரைநடையாகும், அல்லது கவிதையே உரைநடையின் வடிவங்களை மாறுவேடமாக பயன்படுத்துவதாக தோன்றும். நிறைவு, ஊக்கம், அறிவார்ந்த ஒளி மற்றும் மிக்க கவனத்துடன் தூண்டப்பட்ட அழகியல் நிறைவு அதன் இயல்பான, சரியான ஆற்றலாக இருக்கும். ஆனால் ஒரு கவிஞனின் தனிச் சுதந்திரம் என்பது இதைக் கடந்து சென்று இன்னும் தீவிரமான ஒளியூட்டக்கூடிய மொழியை கண்டடைவதே. அந்த உத்வேகம் கொண்டச்  சொல், உச்ச தவிர்க்க இயலா வெளிப்பாடு(supreme inevitable utterance). அங்கு உன்னத ஒத்திசைந்த இயக்கமும்(divine rhythmic movement) நமது ஆன்மாவிலிருந்து ஊற்றெடுக்கும் முடிவின்மையும், அறிவின் ஆழமும் சந்திக்கிறது. அவன் ஒவ்வொரு முறையும் அதை கண்டடைய முடியாமல் போகலாம், ஆனால் அதற்கான அவனுடைய தேடல் என்பது விதிக்கப்பட்டது. அல்லது குறைந்தபட்சம் அது, அவனது வெளிப்பாட்டின் உயர்நிலை. அவன் அதை கண்டடைந்தது மட்டுமல்லாமல் அதில் ஆன்மாவின் புலப்பட்ட ஆழ்ந்த உண்மையை சேர்ப்பான் எனில், அவன் உரைப்பது மந்திரமாகிறது. 

தேடலிலோ கண்டடைதலிலோ எவ்வாறெனினும், கவிதையின் ஒத்திசைவும் நடையும் நம்மிலிருந்து ஆன்மா தன்னை வெளிப்படுத்த துடிக்கும் தரிசனத்தால் உண்டான ஆன்மீக பரவசத்தின் வெளிப்பாடு. அந்த தரிசனம் இயற்கையில் உள்ள எதைக்குறித்தும், கடவுள், மனிதன், பிற உயிர்கள், என்று எதைக் குறித்தும் இருக்கலாம். அது விசையும் வினையும், உணர்வுசார் அழகு, சிந்தனையின் உண்மைநிலை, உணர்ச்சி, வலி மற்றும் இன்பம், இம்மை மறுமை என்று எவற்றின் தரிசனமாகவும் இருக்கலாம். காண்பது ஆன்மா என்பது மட்டும் போதும். கண்ணும், புலனும், மனமும், அறிவும், அதன் கருவிகள் என்று இருத்தல் வேண்டும். அப்போது நாம் உண்மையான உயர் கவிதையை பெறுகிறோம். மாறாக நாம் அடைவது, அறிவார்ந்த, கற்பனை சார்ந்த, உணர்வு சார்ந்த பரவசம் என்றாலோ அவற்றுடன் உயர் ஆன்மீக பரவசம் இணையவில்லை என்றாலோ அல்லது அவை போதிய அளவு ஆன்மாவில் கரையவில்லை என்றாலோ நாம் கீழ்நிலை கவிதையையே பெறுகிறோம். கவிதையே நம்மில் உள்ள உயர்வற்றவைக்கு தான் என்றால், வெறும் அறிவுக்குத்தான் என்றால் நாம் கவிதையின் உண்மையான எல்லைக்கு வெளியில் செல்வோம், உரைநடையின் எல்லைக்குள் செல்கிறோம் அல்லது உரைநடை கவிதையின் வெளிப்புற ஆடைகளின் மூலம் மாறுவேடமிடுகிறது. நல்ல வாக்கிய வடிவம், கட்சிதமான  கவர்ச்சியான உத்வேகமான வெளிப்பாடு போன்ற உரைநடையின் மேலோட்டமான கூறுகளினால் தான் அந்த படைப்பு உரைநடையிலிருந்து வேறுபடுகிறது. அது கொஞ்சம் கூட அல்லது போதிய அளவு கவிதையின் சாரத்தை கொண்டிருக்கவில்லை.                                                     

மொழி வெளிப்படுத்துக்கூடிய எல்லாவற்றிலும் இரண்டு கூறுகள் உள்ளன. ஒன்று, புறவயமானது அல்லது துணைபுரிவது. மற்றொன்று, உண்மையானது அல்லது ஆன்மிகமானது. உதாரணமாக, சிந்தனையில் அறிவார்ந்த கருத்து மற்றும் ஆன்மக் கருத்து உள்ளன. அறிவு, அறிவார்ந்த கருத்தை தெளிவுபடுத்தவும் துல்லியமாக்கவும் செய்கிறது. அறிவைக் கடந்த ஆன்மக் கருத்து நம்மை, வெளிப்படுத்தப்பட்ட விஷயத்தின் உண்மைக்கு அணுக்கமாக அல்லது இணையாக கொண்டுசெல்கிறது. அதற்கிணையாக, உணர்வுகளில்(emotions) கவிஞன் தேடுவது வெறும் உணர்வுகளை அல்ல, உணர்வுகளின் ஆன்மாவை. அதில் உள்ள ஆனந்தத்திற்காக நம்மிலும் உலகிலும் உள்ள ஆன்மா உணர்வுப்பூர்வமான அனுபவங்களை விரும்புகிறது அல்லது ஏற்கிறது. கவிஞன் வாழ்க்கையின் உண்மையை அல்லது இயற்கையின் உண்மையை தனது மொழியில் உருவகிக்கிறான். இந்த பெரும் உண்மைக்காகவே, ஆனந்தத்திற்காகவே, அழகிற்காகவே அவன் தேடுகிறான், உண்மை ஆகிய அழகு, உண்மையின் அழகு, ஆதலால் அது நித்தியானந்தம். ஏனெனில் இத்தேடல் ஆன்மாவின் ஆழ்ந்த உண்மைகளை கண்டடைதலின் மூலம் நமக்கு ஆன்மாவின் ஆனந்தத்தை அளிக்கிறது. அடங்கிய, மிதமான உரைநடையின் மொழி இதை எப்பொழுதாவது மட்டும் குறிப்புணர்த்துகிறது. ஆனால் கவிதையின் மேலெழுந்த, துணிந்த பாணி அதை அணுக்கமாக, உயிர்புள்ளதாக்குகிறது. பாணியால் முடியாதவற்றை, கவிதை உயர்ந்த சந்தத்தால் [ஒத்திசைவால்](cadences) தனது சிறகுகளில் கொண்டு வருகிறது. இதுவே, கவித்துவ இயக்கத்தின், கவித்துவ மொழியின் அடையாளமான தீவிரத்தின் காரணம். இது சொல்லின் பின்னாலுள்ள ஆன்மிக தரிசனத்தின் உந்துதலால் வருகிறது. இது, புற மற்றும் அக உலகங்களில் உள்ள வடிவம் மற்றும் பெயர் மாயத் தீவுகளுக்கு மத்தியில் நிகழும் சுய கண்டடைதல் பயணத்தின் ஒரு ஆன்மிக பரவசம்.

ஆசிரியர் குறிப்பு:

ஆனந்தம் என்பது இந்திய ஆன்மிக அனுபவ மொழியின் படி, முடிவின்மை(infinite) தன்னிலும் தன் படைப்பிலும் உணரும் இன்றியமையா ஆனந்தம். முடிவின்மை சுயத்தின் ஆனந்தத்தால் எல்லாம் இருக்கின்றன. சுயத்தின் ஆனந்தத்திற்காகவே எல்லாம் உருவாக்கப்பட்டன.

***

மூலம் ஸ்ரீ அரவிந்தர் - ‘The Future Poetry’ தொகுப்பிலிருந்து

அரவிந்தர் தமிழ் விக்கி பக்கம்

***


Share:

0 comments:

Post a Comment

Powered by Blogger.

தமிழில் புதுக் கவிதை - க.நா.சு

க.நா.சு வின் கவிதைக் கலை - ஸ்ரீநிவாச கோபாலன் ‘எளிய பதங்கள்‌, எளிய சந்தம்‌’ என்றும்‌, ‘தெளிவுறவே அறிந்திடுதல்‌, தெளிவு தர மொழிந்திடுதல்‌’ என்...

தேடு

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (4) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) க.நா. சுப்பிரமணியம் (2) கட்டுரை (6) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (4) கல்பனா ஜெயகாந்த் (2) கவிதை (161) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குமரகுருபரன் விருது (5) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (18) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (2) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (1) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (3) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (12) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) வீரான்குட்டி (3) வே. நி. சூர்யா (5) வே.நி. சூர்யா (6) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (2) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Most Popular

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (4) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) க.நா. சுப்பிரமணியம் (2) கட்டுரை (6) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (4) கல்பனா ஜெயகாந்த் (2) கவிதை (161) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குமரகுருபரன் விருது (5) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (18) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (2) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (1) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (3) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (12) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) வீரான்குட்டி (3) வே. நி. சூர்யா (5) வே.நி. சூர்யா (6) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (2) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Blog Archive