இந்த வருடம் மழைக் குறைவு
குறைந்த கூலிக்கு முந்திரிக்கொட்டை
உடைப்பவளை எனக்குத் தெரியும்
கடல்மீன்கள் விற்கும் சந்தைக்கு
வந்தால் புன்னகைப்பாள்
தூறல் நாட்களில் மரச்சாலை வழியே
குடை பிடித்துப் போகும் அவளை
ஓயாமல் காதலிக்கிறான் ஒரு குதிரைலாடம்
அடிக்கும் பட்டறைக்காரன்
லாடக்காரன் என்னுடன் மது குடிப்பான்
நீண்ட மழைக்காலத்தின் மத்தியில்
உடலுறவிற்கென ஒருமுறை அவளை அழைத்தோம்
அவள் ஆர்வத்துடன் ஒத்துக்கொண்டாள்
எருமைகளுக்கென வளர்ந்த பசும்புற் சரிவில்
பொதித்து ஈரம் பொங்க இருவரும் சுகித்தோம்
அந்தியில் கனத்த மலைத்தடத்தின் வழியே
குதிரையில் தானியப்பொதி ஏற்றிவந்த
அவள் கணவன் ஏதோ தனக்கு மகளைப்போல்
பொறுப்பற்றுத் திரிவதாய் அவளை ஏசினான்
அவளோ புன்னகை மிளிர
எங்களை சகோதரர்கள் என்று அறிமுகப்படுத்தினாள்
அவன் சில ஆரஞ்சுப்பழங்களை எங்களுக்கு
அன்பளிப்பாகக் கொடுத்தான்
இந்த வருடம் மழைக்குறைவு என்றவாறே
அவள் மயிர்க்கற்றைகளை நீவி முடிச்சிட்டான்
அவன் தோளில் சாய்ந்து அவள் விடைபெற்ற கணம்
எங்களை இருள் சூழ்ந்திருந்தது
கைகளில் பழங்கள் மிருதுவாய் இருந்தன.
இந்தக் கவிதையில் நான்கு மனிதர்கள் வருகிறார்கள். நால்வருமே கவிதைக்குள் நிலைபெற்றுவிடுகிறார்கள். மிக எளிய சொற்களின் வழியாகவே கற்பனைக்குள் அகல விரியும் ஒரு பரந்த நிலச் சித்திரம் கிடைத்து விடுகிறது. ஒரு புனைவெழுத்தாளன் இதை ஒரு விதையாகக் கொண்டு அவனது படைப்பைப் படைக்கலாம். சினிமா கூட எடுக்கலாம். ஒன்று இன்னொன்றாகிறது. விதை தான் இந்தக் கவிதை. முக்கியமாக இந்தக் கவிதையில் மனிதர்களை வைத்து கவிஞர் எதையும் கூற முயலவில்லை. அந்த மனிதர்கள் இயல்பில் எப்படியோ கவிதையிலும் அப்படியே இருக்கிறார்கள். உயிருள்ள பாத்திரங்களாக. விதைதான் இந்தக் கவிதை.
***
யவனிகா ஸ்ரீராம் தமிழ் விக்கி பக்கம்
***
0 comments:
Post a Comment