ஆடும் சிவன் எப்போதும் இங்கிருக்கும் பெரும்படிமம். கொடுகொட்டி நடம் புரியும் ஈசனை சிலம்பு பேசுகிறது. பிற்பாடு சோழர் காலத்தில் பொதுமைப்படுத்தப்பட்ட ஆனந்த தாண்டவ மூர்த்தி ஆடலின் ஒரு வடிவை மட்டும் நிலைப்படுத்தியது. இது சிதம்பரம் நடராஜரின் புகழால் நேர்ந்த கலை விபத்தாகவும் இருக்கலாம். பின் அந்த ஆனந்த நடனமிடும் வடிவம் வார்ப்புருக்களின் மூலமாக, தத்துவ இணைப்பின் மூலமாக உலகெங்கும் சிற்பக்கலைக்கு ஒரு அடையாளமாக மாறியது. உலகின் எந்த மியூசியத்திலும் ஒரு சோழர்கால நடராஜர் ஆடிக்கொண்டிருக்கிறார். பரதத்தின் நூற்றி எட்டு கரணங்களும் ஆடும் ஈசனுக்கு முன்னும் சிவன் வெவ்வேறு வடிவங்களில் ஆடிக்கொண்டிருந்திருக்கிறார். காஞ்சி கைலாசநாதர் கோவிலின் கிராத மூர்த்தியும் அர்ச்சுனனும் அம்பெடுப்பது நடனத்தின் ஒரு அசைவு போலத்தான் வடிக்கப்பட்டிருக்கிறது. ஈசனின் வீரச்செயல்களை காட்டும் பல சிலைகள், வார்ப்புருக்கள் ஒரு நடனத்தின் நிலையெனவே வைக்கப்பட்டிருக்கின்றன. கதைகள் வாய்வழியாக பாடலாக பரவியது போல கதையோடு கூடிய நடனமான கூத்து இந்த நாடு முழுவதும் பலகதைகளை ஏற்றிச்செல்லும் ஊர்தியாகவும் இருந்திருக்கிறது. இந்த நடனத்திலிருந்து ஓவியர்களும் சிற்பிகளும் தங்கள் கலைக்கான உருவங்களை எடுத்துக் கொண்டிருக்கக்கூடும். கூத்தர்களின் சிலைகளில்லாத பழங்கோவில்கள் இல்லை.
ஊர்த்துவ தாண்டவ வடிவம், ஆடலுக்கிறைவனின் மற்றோர் வடிவம். இடக்காலை தலைக்குமேல் உயர்த்தி நிற்கும் காலன் ஊழிக்கூத்திடுகிறான் புன்னகையோடு. தல புராணங்களில் திருவாலங்காட்டில் சிவன் காளியை வெல்ல இப்படி காலுயர்த்தி ஆடினார் என்று உள்ளது.தில்லையிலும் இதே கதையுண்டு. இதையொட்டி சிற்பமரபில் நடராஜருக்கு அருகிலேயே நடனமிடும் காளியின் சிலையும் வடிக்கப்படும். சோழர் கலைக்கோவில்களின் கோட்டத்தில் ஆனந்த நட்டம் செய்யும் நடராஜர் காலடியில் காரைக்காலம்மையும் காளியும் வடிக்கப்பட்ட சிலைகளுண்டு, அழகிய உதாரணம் கங்கைகொண்ட சோழீச்சுரம். நந்தியோடும் பூதகணங்களோடும் நடமிடும் ஊர்த்துவ தாண்டவர் கைலாசநாதர் கோவிலிலிருக்கிறார். மேலும் திருப்பட்டூரில் சிவனின் ஒரு ஊர்த்துவ நடன சிலையுண்டு என்று இரா கலைக்கோவன் தெரிவிக்கிறார். திருச்செங்காட்டங்குடியிலும் ஒரு ஊர்த்துவ தாண்டவர் இருக்கிறார். பிற ஊர்த்துவ தாண்டவ மூர்த்தி சிலைகள் தூண்சிற்பங்களாக சிற்பமண்டபங்களில் பெரும்பாலும் செதுக்கப்பட்டன, அவற்றிற்கெதிரே காளியும் தூண்சிற்பமாயினள். குறுஞ்சிற்பங்களாகவும் இவ்வடிவு கோவில்களில் உள்ளது. பிற்காலத்தில் இவர் கங்காள வடிவத்தோடிணைந்து, கங்காளம் என்னும் கருவியை இசைப்பது சிலைகளில் சேர்க்கப்பட்டது, அவிநாசியப்பர் கோவில் தூணில் உள்ள பதினாறுகை ஊர்த்துவ தாண்டவர் அவ்வாறே இருக்கிறார். ஊர்த்துவம் என்றால் கீழிருந்து மேலாக என்று பொருள், தலைக்கு மேலே காலுயர்த்தி ஆடும் இந்நிலைக்கு மேலதிக அர்த்தங்கள் இருக்கக்கூடும்.
வார்ப்புச்சிலையாக திருவாலங்காட்டில் நடராஜர் ஊர்த்துவ நடமிடுகிறார். அவரும் வேறிடங்களில் காணாத ஒற்றைக்கொரு அழகர், தூண் சிற்பங்களும் அவருக்கும் வேறுபாடுண்டு. இவர் வார்ப்புருக்களின் சாத்தியத்தை ஏற்று, வலப்புறம் சூலமூன்றி வட்டத்திருவாசியின் மையத்திலிருந்து மூலைக்குச்செல்லும் ஆரக்கோடுபோல இடக்காலுயர்த்தி அதன் நுனியை இடக்கையால் தொடுவதுபோன்ற பாவத்திலிருக்கிறார். இது பரதநாட்டிய கரண நிலையை விஞ்சிய கலைப்படைப்புமாகும்.காலை தலைக்கு மேலே உயர்த்தா விடினும், பக்கவாட்டில் வீசாமல், முழங்காலை மடித்த வாக்கில் நேராக உயர்த்தினாலே அதை ஊர்த்துவம், ஊர்த்துவஜானு என்கிறார்கள், சில வார்ப்புருக்களும், மகர தோரணங்களிலுள்ள நடராஜரும் அதையொத்தவர்கள்.
சிந்தாமணி கோவிலில் உள்ள ஊர்த்துவ தாண்டவமூர்த்தி, எண்கரம் கொண்ட இறைவனின் இடக்கைகளில் இரண்டு நாகம், வஜ்ரம் கொண்டிருக்கிறது ஒருகை நடன முத்திரை ஒன்றை காட்ட, காதின் மகரக்குழைக்கு பின்செல்லும் இன்னொன்று தலைக்கு மேல் நின்று கனிந்து சடையின் உச்சிக்கொன்றையை நோக்குகிறது. இடக்கைகளில் ஒன்று உயரத்தூக்கிய காலின் தொடையை பற்றியிருக்க ஏனைய கரங்களில் மணியும், பாசமும், நீள்தடியொன்றும் உள்ளது. உற்றுநோக்கினால் அது தடியின் உச்சியில் மனித உருவம் போலுள்ளது, விஸ்வக்ஷேனரை உறித்து ஒருமூட்டையாக கட்டித்தொங்க விட்டிருக்கும் பிட்சாடனரை ஒத்திருக்கிறது, பிரேதம் எனக்கொள்ளலாமா தெரியவில்லை.
ஒரு காலை முயலகனின் முதுகில் ஊன்றி எழும்பியவாறே ஆடும் இறைவனின், மற்றோர் கால் விண்ணோக்கி உயர்ந்திருக்கிறது. உள்ளங்கால் தெரியும் வடிவு, யாளி வேலைப்பாடுகளுடன் இடையணி , இருபுறமும் தொங்கும் கச்சை, சிறுமணிகள் தொங்கும் அணிகள் செறிந்திருக்கிறது, ஆடைகளின் சிறுமடிப்பும்கூட தெளிவாகக்காணும்படி செதுக்கப்பட்டிருக்கிறது. கழுத்தில் அணிகள், உதரபந்தம், புரிநூல், ஒருகை உயர்ந்ததால் மார்பின் காம்புகளில் ஒன்று மேலேறிச்செல்கிறது. கழுத்தணியின் முடிகயிறு உயர்ந்த கையின் கக்கத்தில் படிந்திருக்கிறது. அழகிய சடாமகுடத்துடன் உள்ள முகத்தின் அருகே சென்றால் உணர்வெதும் இல்லை, சற்று தொலைவில் சென்றால் புன்னகை பூக்கிறது. மீண்டும் அருகில் சென்றால் அது மறைந்துபோகிறது.
பரதம் போன்ற செவ்வியல் நடனங்களை ஒரு ஆண் ஆடுவதே அவனது இயல்பை மாற்றி நளினமாகிவிடும் என்பது பொதுப்பார்வை, ஆடலை தாண்டவம் லாஸ்யம் என இரு பாலாக பிரித்து தாண்டவத்தை ஆண்களுக்கானதாக வைக்கிறது பரதநாட்டியம். இது இரண்டையும் தாண்டி எண்ணக்கூடுவது, ஆடும் இறைவனின் அசைவுகள் அனைத்தும் ஆடலுக்குட்பட்டு நளினமானவை, ஆனால் அதிலிருந்து மேலெழும் கம்பீரத்தைத்தான் இந்த நடராஜ மூர்த்தங்கள் காட்சிப்படுத்துகின்றன, இந்த ஊர்த்துவ மூர்த்தியின் திருவடி விண்ணோக்கி முறுவல் செய்து சொல்வதெல்லாம், கலையின் பால் பேதமற்ற உறுதிப்பாட்டை. அந்தக்கம்பீரத்தைத்தான் அருகிருக்கும் சிவகாமியும் நகைமொக்குடன் ஆமோதிக்கிறாள்.
ஊர்த்துவதாண்டவத்தை காரைக்காலம்மை போல வேறெவரும் பாடப்புகவில்லை, அவளை நினைக்காது இதை முடிக்க முடியாது. அம்மையின் மூத்த திருப்பதிகப்பாடல்கள் சில...
சுழலும் அழல்விழிக் கொள்ளிவாய்ப்பேய்
சூழ்ந்து துணங்கையிட் டோடிஆடித்
தழலுள் எரியும் பிணத்தைவாங்கித்
தான்தடி தின்றணங் காடுகாட்டிற்
கழல்ஒலி ஓசைச் சிலம்பொலிப்பக்
காலுயர் வட்டணை இட்டுநட்டம்
அழல்உமிழ்ந் தோரி கதிக்கஆடும்
அப்பன் இடந்திரு ஆலங்காடே
நாடும் நகரும் திரிந்துசென்று
நன்னெறி நாடி நயந்தவரை
மூடி முதுபிணத் திட்டமாடே
முன்னிய பேய்க்கணம் சூழச்சூழக்
காடுங் கடலும் மலையும் மண்ணும்
விண்ணுஞ் சுழல அனல்கையேந்தி
ஆடும் அரவப் புயங்கன்எங்கள்
அப்பன் இடந்திரு ஆலங்காடே
***
0 comments:
Post a Comment