பொதுவாக, மனிதன் இயற்கையை அவதானிப்பது குறித்து ஜான் பர்ரோஸ் தனது “இயற்கையின் வழிகள்” என்ற நூலில் சொல்வதை கவிதைக் கலையோடு பொருத்திப் பார்ப்பது இனிய அனுபவமாகக்கூடும்.
கவிதை படைத்துக் காட்டும் உவமை, குறியீடு, படிமம், தற்குறிப்பேற்றம் இவற்றில் எல்லாம் இயற்கை காட்சிகளும் நிகழ்வுகளும் மண்டிக் கிடப்பது புதுமையானதோ அரிதானதோ அல்ல. ஆனால், காளிதாசனை படிக்கையில் அவரளவுக்கு இயற்கையோடு முழுமையாக ஒன்றிய வேறொருவர் இருக்க முடியுமா என்றே தோன்றுகிறது. பார்ப்பதற்கு இது அதைப் போல் இருந்தது, இதன் மணம் அதனுடையதைப் போல் இருக்கிறது, இந்த ஒலி அந்த ஒலியை நினைவுறுத்தியது, இந்தச் சுவை அந்தச் சுவையை ஒத்திருந்தது என புலன்கள் சார்ந்து உவமைகளை அடுக்கும் கவி மெய்ப்பாடுகளை, உணர்வு நிலைகளை சொல்லவும் கூட இயற்கையை துணைக்கழைக்கிறார். நிகழ்வுகளை, புராணச் செய்திகளைக் கூட இயற்கைக் காட்சி அல்லது நிகழ்வைக் கொண்டு கடத்திவிடுகிறார்.
ரகுவம்சத்தில் காளிதாசன் காட்டும் எல்லா இயற்கைக் காட்சிகளும்/நிகழ்வுகளும் ஆர்வமூட்டுபவை. எடுத்துக்காட்டாக அவற்றில் சில:
திலீபன் என்னும் அரசனின் பெருமைகளை கூறும்போது, மனுவின் குலத்தில் திலீபன் தோன்றியதை பாற்கடலில் நிலவெழுந்ததுடன் ஒப்பிடுகிறார்.
[ததன்வயே ஶுத்திமதி ப்ரஸூத: ஶுத்திமத்தர:
திலீப இதி ராஜேந்து: இந்து: க்ஷீரநிதாவிவ
பரிசுத்தமான அம்மனுவின் வம்சத்தில், மிகவும் பரிசுத்தனான திலீபன் என்ற, சந்திரன் போன்ற அரசன் பாற்கடலில் சந்திரன் பிறந்ததுபோல பிறந்தான்]
சுறாவும் முத்தும் ஒருங்கேயுள்ள ஆழிபோல், அஞ்சத்தக்கதும் விரும்பத்தக்கதுமான அரசர்க்குரிய பண்புகொண்டிருந்தான் திலீபன் என்கிறார்.
[பீமகாந்தைர்ந்ருபுணை: ஸ பபூவோபஜீவனாம்
அக்ருஷ்யஶ்சாபிகம்யஶ்ச யாதோரத்னைரிவார்ணவ:
அச்சம் உண்டாக்குவனவும் விரும்பத்தக்கனவுமான அரசர்க்குரிய குணங்களால், அவன் நீர்விலங்குகளும் ரத்தினங்களும் உள்ள கடல் போல, தன்னை அண்டிப்பிழைப்பவர்களுக்கு அவமதிக்க முடியாதவனாகவும் அணுக முடிந்தவனாகவும் இருந்தான்]
குடிகள் செழிக்கவே வரி விதித்த திலீபனை வாரி வழங்கவே ஆவி கொள்ளும் ஆதவனுடன் ஒப்பிடுகிறார்.
[ப்ரஜானாமேவ பூத்யர்த்தம் ஸ தாப்யோ பலிமக்ரஹீத்
ஸஹஸ்ரகுணமுத்ஸ்த்ரஷ்டும் ஆதத்தே ஹி ரஸம் ரவி:
அவ்வரசன் மக்களின் செல்வத்தின் பொருட்டே அவர்களிடமிருந்து வரியை வாங்கினான்; சூரியன் ஆயிரம் மடங்காக கொடுப்பதற்காகவே நீரை எடுத்துக்கொள்கிறான் அன்றோ!]
நாட்டில் அரசன் உலா செல்கையில் வழியில் இருபுறமும் தூண்களை நட்டு தோரண மாலைகளை கட்டுவது வழக்கம். திலீபனும் அவன் மனைவியான அரசி சுதக்ஷிணையும் காட்டு வழியே சென்றபோது வானில் வரிசையாகப் பறந்த கொக்குகள் தூண்களில்லா தோரணங்கள் போலத் தோன்றியது என மிக அழகிய ஓவியத்தை வரைந்து காட்டுகிறார் கவி.
[ஶ்ரேணீபந்தாத் விதன்வத்பி: அஸ்தம்பாம் தோரணஸ்த்ரஜம்
ஸாரஸை: கலநிர்ஹ்லாதை: க்வசிதுன்னமிதானனௌ
வரிசை அமைப்பினால் தூண்களற்ற தோரணமாலை போல் இருப்பவைகளும், இனிய ஒலி எழுப்புபவைகளுமான கொக்குகளை முகம் நிமிர்த்தி பார்த்தபடி சென்றனர்]
சிவப்பு நிறப் பசுவான நந்தினியின் மேல் பாய்ந்த சிங்கம், தாதுப்பொடிகள் நிறைந்த மலைமுகட்டில் பூத்த காயவிளை மரம்போல் இருந்தது என்று ஒரு நிகழ்வை காட்சிப்படுத்துகிறார். இயற்கையின் வண்ணங்களைப் பற்றிய அவரது நுட்பமான மனப்பதிவுக்கு இது சாட்சியாக இருக்கிறது.
[ஸ படிலாயாம் கவி தஸ்திவாம்ஸம் தனுர்தர: கேஸரிணம் ததர்ஶ
அதித்யகாயாமிவ தாதுமய்யாம் லோத்ரத்ருமம் ஸானுமத: ப்ரஃபுல்லம்
வில்லேந்திய அவ்வரசன், தாதுப்பொடிகள் நிறைந்த மலையின் மேல்பகுதியில் உள்ள காயவிளை மரமென சிவந்த நிறமுடைய பசுவின்மேல் இருந்த சிங்கத்தை கண்டான்]
மலையிலிருந்த பிலத்தில் இருந்தபடி சிங்கம் தனது பற்கள் தெரியும்படி திலீபனைப் பார்த்து சிரிக்கிறது. இதை, பில இருளை பல்லொளியால் துண்டாடிய சிரிப்பு என்கிறார் கவி. இருண்ட பின்புலத்தில் பளீரெனத் தெரியும் பற்களைச் சொல்லி அந்த நிகழ்வை காட்சிப் படுத்துகிறார்.
[அதாந்தகாரம் கிரிகஹ்வராணாம் தம்ஷ்ட்ராமயூகை: ஶகலானி குர்வன்
பூய: ஸ பூதேஶ்வரபார்ஶ்வவர்தீ கிஞ்சித்விஹஸ்யார்தபதிம் பபாஷே
சிவபிரானுடைய சேவகனாகிய அச்சிங்கம் சிறிது சிரித்து பற்களின் ஒளியால் மலை குகைகளுடைய இருளை சிறுதுண்டுகளாக செய்துகொண்டு அரசனை நோக்கி மீண்டும் பேசிற்று]
மழைக்காலம் முடிந்து கூதிர்காலத்தில் ரகு என்பவன் (திலீபனின் மைந்தன்) போர்ப்பயணத்தை தொடங்கினான் என்பதை இந்திரனும் ரகுவும் வில்லை எடுத்துக்கொண்டார்கள் என்று சொல்கிறார் கவி.
[வார்ஷிகம் ஸஞ்ஜஹாரேந்த்ரோ தனுர்ஜைத்ரம் ரகுர்ததௌ
ப்ரஜார்தஸாதனே தௌ ஹி பர்யாயோத்ருத்கார்முகௌ
இந்திரன் மழைக்கு அறிகுறியான (வான) வில்லை (வானிலிருந்து) எடுத்துக்கொண்டான். ரகு வெற்றியையே அளிக்கின்ற வில்லை எடுத்துக்கொண்டான். மக்களைக் காக்க இருவரும் மாறி மாறி வில்லை எடுத்தனர்]
ரகு வங்க மன்னர்களை வென்று அவர்களை மீண்டும் அரச பதவியில் இருத்தி அவர்கள் அளித்த பொருள்களால் மேலும் செல்வந்தனான நிகழ்வை அரிய உவமை ஒன்றின் வழியே சொல்கிறார்.
[ஆபாதபத்மப்ரணதா: கலமா இவ தே ரகும்
ஃபலை: ஸம்வர்தயாமாஸுருத்காதப்ரதிரோபிதா:
தாமரை போன்ற அவன் அடிகளை வணங்கியவர்களும், மீண்டும் அரச பதவியில் நியமிக்கப்பட்டவர்களுமான வங்க மன்னர்கள் (நாற்றங்காலிலிருந்து) பெயர்த்து நடப்பட்டவையும் (தங்கள்) வேருக்கு அருகிலுள்ள தாமரை வரையில் வணங்கி இருப்பவையுமான நெற்பயிர்களைப் போல (பலவகை) பொருள்களால் ரகுவை செல்வமுடையவனாகச் செய்தனர்]
தென் திசைப் பாண்டியர்கள் ரகுவிடம் பணிந்ததை கூறும் வரிகள்:
[திஶி மந்தாயதே தேஜோ தக்ஷிணஸ்யாம் ரவேரபி
தஸ்யாமேவ ரகோ: பாண்ட்யா: ப்ரதாபம் ந விஷேஹிரே
தெற்கு திசையில் சூரியனுடைய ஒளிகூட குன்றிவிடுகிறது. அதே திசையில் ரகுவின் பெருமையை பாண்டிய மன்னர்கள் தாங்கவில்லை]
தக்ஷிணாயனத்தில் சூரியன் தென் திசையில் வரும்போது அவனது ஒளி குறைவது இயற்கை. இதற்குக் காரணம் பாண்டியர்களிடம் அவன் அஞ்சுகிறான் என்பது கவியின் கற்பனை. அவ்வளவு வீரமுடையவர்களான பாண்டியர்களாலேயே ரகு தம்மிடம் வருகையில் அவனது வீரப் பெருமையை தாங்கமுடியவில்லையாம்.
காவியத்தில் முக்கிய பேசுபொருளாக இருப்பதே இயற்கைதான்; கவி தீட்டும் பேரோவியத்தில் தூரிகையாகவும், வண்ணங்களாகவும், சீலையாகவும் இருப்பதே இயற்கைதான் என்று எண்ணுமளவுக்கு இயற்கை ஒன்றிக் கலந்திருக்கிறது. திசையெங்கும் அழகு செய்யும் தூண்களில்லா தோரணங்கள் காவியத்தை ஒளிரச் செய்கின்றன.
***
0 comments:
Post a Comment