அமைதி என்பது...
பொழுதுகளோடு நான் புரிந்த
யுத்தங்களையெல்லாம் முடித்துவிட்டு
நான் உன்னருகே வருகிறேன்.
அமைதி என்பது மரண்த்தறுவாயோ?
வந்தமர்ந்த பறவையினால்
அசையும் கிளையோ?
வாழ்வின் பொருள் புரியும்போது
உலக ஒழுங்குமுறையின் லட்சணமும்
புரிந்துவிடுகிறது.
அமைதி என்பது வாழ்வின் தலைவாயிலோ?
எழுந்துசென்ற பறவையினால்
அசையும் கிளையோ?
***
சொற்களால் முடியாததை யெல்லாம்
சொல்லிக்கொண்டிருக்கிறது
இயற்கை
***
பொன் இருள் தீபம்
அறியாமையின் பொன் இருள் உன் கண்களில்;
உன் மடியில் பால் கறந்துகொண்டிருக்கும்
அந்த மனிதனின் கண்களிலோ
அனுபவத்தின் ரணம் படிந்த இயலாமைகள்;
வறண்ட தாவரம் போல் நிற்கும்
அவன் மனைவியின் கண்களிலோ
துயரங்களின் ஆறாத காயங்கள்;
கைக்குழந்தையின் வட்டமுகம் முழுக்க
அச்சத்தின் திக்பிரமைக் கறை;
முற்றத்தில் துள்ளி பாண்டி ஆடிக்கொண்டிருக்கும்
சிறுமியிடம் சற்றே எட்டிப் பார்க்கிறது
வாழ்வின் துளி இன்பம்,
பொன் இருளில் ஒளிரும் தீபம்.
***
***







0 comments:
Post a Comment