கவிதைகளில் கொப்பளிக்கும் "நான்" வண்ணங்கள் மிக அடர்த்தியாகவே கைகோர்த்துக்கொண்டு வருகிறது. எப்போதும் தன்னையும், தன் முன்னே இருந்திருக்க வேண்டியவற்றைப் பற்றியும் பேசிக்கொண்டே இருக்கிறார். முன்னே இருப்பவை மட்டுமில்லாமல் தனக்குள் இருந்திருக்கும் அத்தனையயும் வெளியே வைத்துக்கொண்டே இருக்கிறார். அவை வெளியே வரும் போதெல்லாம் அதனுடன் ஒரு கேள்வியையும் இணைக்கிறார். இந்தக் கவிதை அதை மிகத்தெளிவாக சொல்கிறது,
நாம் இருக்கிறோம்
என்னவாய் இருக்கிறோம்
எனக்குத்
தெரியவில்லை
உனக்கு?
அனைவரிடமும் பல்கிப்பெருகும் எண்ணங்களில் ஒருமை இருப்பதையும், அதனுள் தானும் இருப்பதையும் உணர்கிறார். ஆனாலும் அதன் விசாரணையில் அவருக்கு இருக்கும் ஈர்ப்பு தான் இந்தக் கவிதை. விசாரணை முடியவேண்டும் என்ற உத்தேசம் இல்லை. எனக்கு தெரியவில்லை என்று முடித்திருக்கலாம். இன்னொருவரை அழைத்துக்கேட்க வேண்டிய அவசியம் இல்லை தான்.
ஆனால், நகுலன் கேட்கும் "உனக்கு" என்பது கவிதை படிக்கும் வாசகரை என நினைக்கலாம். அப்படி இருந்திருக்க வாய்ப்பில்லை. எழுதும் நேரத்தில் நகுலனிடம் தோன்றிய வெற்று தனிமை, இன்னொருவரை அனிச்சையாய் வர வைத்திருக்கலாம். இந்தக் கவிதையை ஒரு திருமண மண்டபத்தில், பெரும் கூச்சலில் எழுதி இருக்க வாய்ப்பில்லை. ஒரு மதிய நேரத்தில், வெம்மையின் தனிமை அதன் பெரும் தாண்டவத்தை நகுலனின் முகத்தில் ஆடிய நேரத்தில் எழுதி இருக்கலாம். தனிமைகளின் அடுக்குகளில் எப்பொழுதும் சிக்குண்ட ஒரு மனது அவரின் கவிதைகளில் எப்பொழுதும் தென்படுகிறது.
எனக்கு யாருமில்லை
நான் கூட
சந்தி பிரித்து எழுதப்பட்ட ஒரு அசாத்தியமான வாழ்க்கையில், எங்கோ ஒரு நொடியில் எப்படியோ இழந்து விட்ட தன்னை மீட்டு எடுக்க முனையும் ஒரு சிறு வார்த்தைக் கவிதை. இந்தக் கவிதையை சுற்றி சுற்றி ஓடிப்பார்த்தால், மிச்சமிருக்கும் மூச்சு கடந்து விட்ட பின்னரும், இதிலிருக்கும் அமைதி அடர்த்தியாக அமர்கிறது. சுற்றி சுற்றி ஓடும் திறன் தேவைப்படுகிறது. நான்கு சுவர்களால் சூழப்பட்ட அறையிலும், நான்கு திசைகளால் மூடப்பட்ட நம் இருப்பையும், எட்ட நின்று பார்க்கும் நான்கு சொல் கவிதை. கவிதைகளில் எழும் தற்சுழலில் எப்படியாவது இன்னொருவர் தலை காட்டுவதுண்டு.
அப்படி ஒன்றில் அவரின் அம்மா எழுந்து வருகிறார்.
அம்மாவுக்கு
எண்பது வயதாகி விட்டது
கண் சரியாகத் தெரிவதில்லை
ஆனால், அவன் சென்றால்
இன்னும் அருகில் வந்து
உட்காரக் கூப்பிடுகிறாள்
அருகில் சென்று உட்கார்கிறான்
அவன் முகத்தைக் கையை
கழுத்தைத் தடவித்
தடவி அவன் உருக் கண்டு
உவைகயுறுகிறாள்
மறுபடி அந்தக் குரல் ஒலிக்கிறது
'நண்பா, அவள்
எந்தச் சுவரில்
எந்தச் சித்திரத்தைத்
தேடுகிறாள்?'
இதன் கடைசியில் சில்லு சில்லாக உடைகின்ற அம்மா இருக்கிறார். உடைந்து போகும் அதே நேரத்தில் மகனும் உடைந்து போகிறார். குரல் வழியே வெளிவரும் நண்பரும், இப்படி நிகழும் விபத்தை ஒரு சொட்டு கண்ணீர் விடாமல், வாசலில் வந்து போகும் பால்காரைரப் போல பேசிவிட்டு போகிறார். சித்திரம் என சொல்லப்படும் பகுதி எழுதப்படாத ஒரு கவிதையாகத்தான் விரிகிறது. சொல்லப்படாத ஒன்றும், எழுதப்படாத ஒன்றும் தான், தன்னைத் தாேன விரித்துக்கொண்டும் அகழ்ந்து கொண்டும் போகும். சில நேரங்களில் மிகத்தெளிவாக சொல்லியும் விடுகிறார். பெயர்களும் வருகிறது. துரைசாமியிடம் தேடினால் பல படிமங்களில் சுசீலா தோன்றுவார். சுசீலா என்ற பெயரின் உச்சரிப்பின் இடையே வெளிவரும் ஊதல் ஒலி தான் நகுலனின் கவிைதகள். எப்பொழுது தேடினாலும், நகுலனின் கவிதைகளில் சுசீலா இருப்பதற்கு வாய்ப்புண்டு. சில நேரங்களில் அவரே எழுதி இருப்பார், பல நேரங்களில் நாம் உணர்ந்து கொள்ளலாம்.
நான்
வழக்கம் போல்
என் அறையில்
நான் என்னுடன்
இருந்தேன்
கதவு தட்டுகிற மாதிரி கேட்டது
"யார்?"
என்று கேட்டேன்.
"நான்தான்
சுசீலா
கதைவத் திற" என்றாள்
எந்தச் சமயத்தில்
எந்தக் கதவு
திறக்கும் என்று
யார்தான் சொல்ல முடியும்?
நான் என்னுடன் இருந்தேன் என்பதில் இருக்கும் நகுலனை வெளியே கொண்டு வரும் உத்தி தான் இந்தக்கவிதை. சுசீலா திறக்கிறார். நகுலனும் திறந்திருப்பார். பேசி இருந்திருப்பார். மகிழ்வோ, கண்ணீரோ, அதன் முடிவு முக்கியமில்லை.
கேள்வியுடன் முடியும் கவிைதகளில் இன்னொரு கவிதையின் ஆரம்பம் இருக்கும். அது எந்தக்கவிதை என்பதில் பல குழப்பம் இருக்கலாம். ஆனால் ஒரு கவிதையாகத்தான் இருக்கும் என நகுலன் நினைத்திருக்கலாம்.
இப்பொழுதும்
அங்குதான் இருக்கிறீர்களா
என்று
கேட்டார்
எப்பொழுதும்
அங்குதான் இருப்பேன்
என்கிறார்
முன்பிருந்த கவிதையும், இந்தக் கவிதையும் இணைகிறதா? ஆம் எனவும் கூறலாம், இல்லை எனவும் நிறுவலாம். ஆனாலும் நகுலனின் பல கவிதைகளில் ஒன்றின் பின் ஒன்றும் ஒன்றுடன் ஒன்றும் பிணைந்திருக்கிறது.
நினைவு ஊர்ந்து செல்கிறது
பார்க்க பயமாக இருக்கிறது
பார்க்காமல் இருக்கவும் முடியவில்லை
பார்க்காமல் இருக்க முடியவில்லை என்றவரின் குரல்களாகத் தான் நகுலனின் கவிதைகள் நிற்கின்றன. தொடர்ந்து கொண்டே இருக்கிறார். இன்றும் எங்கோ ஒலித்துக்கொண்டே இருக்கும் தனிமையின் குரல் தான் நகுலன்.
***
***
0 comments:
Post a Comment