நான் ஒரு
உடும்பு
ஒரு
கொக்கு
ஒரு
ஒன்றுமே இல்லை.
சமீபத்தில் ஒரு நண்பர் நகுலனின் இந்த கவிதையை அனுப்பி, இதில் நான் என்பது முதலில் உடும்பு, கொக்கு என்று உருவகம் செய்யப்பட்டு பின்னர் ஒரு ஒன்றுமில்லை என்றாகும் நான் என்பதன் ஆர்க் இருக்கிறது. அது மட்டும் புரிகிறது. இந்த உடும்பு, கொக்கு இதெல்லாம் என்ன? இது எதன்பொருட்டு கவிதை ஆகிறது என்று வினவி இருந்தார்.
அவருக்கு நவீனத் தமிழ் இலக்கியத்தில் குறிப்பாக கவிதைகளில் இந்த 'நான்' என்பதன் இருப்பு, வெளிப்பாடு அதன் தன்மை குறித்து சற்றே விளக்கி அதன் பின்புலத்தில் அந்தக் கவிதையைப் பொருத்தி பதிலளித்தேன்.
நவீனத் தமிழ் இலக்கியத்தின், கவிதைகளின் முன்னோடியான பாரதியின் 'நான்' கவிதையில் வரும் நான் இந்திய மரபின் மாயாவாத, வேதாந்த, அத்வைத மரபின் சாரம் கொண்டது. பக்தி இயக்கம் போல, பாரதிக்கு பின்னர் எழுந்த நவீனத் கவிதை அலையின் கவிதைகளுக்கு புதுக்கவிதை என விமர்சகர் க.நா.சு பெயரிட்டார். அதில் இந்த 'நான்' 'எனது' எனும் நிலைகள் எல்லாம் அது கொண்டிருக்கும் தனித்துவம் வழியே புனைவாக்கத்துக்கு, விமர்சன உரையாடலுக்கு எத்தகு செழுமை சேர்க்கிறது என்று தனது பார்வையை இலக்கியத்துக்கு ஒரு இயக்கம் சிறு நூலில் க நா சு விவரித்திருப்பார்.
அந்த வகையில் பாரதிக்குப் பிறகு 'நவீனத்துவம்' முகிழ்ந்த நவீனத் தீவிர தமிழ்க் கவிதை பலவற்றில் தொழிற்பட்ட 'நான்', பாரதி கவிதைகளில் தொழிற்பட்ட 'நான்' அளவே, அதன் பிறகான நவீனத்துத்தின் அதன் தத்துவார்த்த நோக்கின் செறிவு கொண்டதா என்று அவதானித்தால், பதில் அந்த தொடர்பு மிகுந்த பலகீனமாது என்பதே.
(இதன் பொருள் ஒரு கவிஞனோ புனைவாளனோ தத்துவக் கல்வி கொண்டவனாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனை விதித்தல் அல்ல. ஒரு கலைஞனின் அகம், அவன் காலக்கட்டத்தின் வாழ்வு வரலாற்று ஓட்டம், பண்பாட்டு அசைவு இவற்றுடன் எந்த ஆழம் வரை வேர்கொண்டு நிற்கிறது என்பதன் மீதானது)
பெரும்பாலான நவீன கவிதை கையாளும் 'நான்' அதில் வெளிப்படும் தன்னிலை, ஆத்மீக நோக்கு, இருத்தலியல் வாதை போன்றவற்றுக்கு, புறவயமாக மேலை மரபில் ஒரு நெடிய வரலாறு உண்டு. இப்போது புதிய பதிப்பில் கிடைக்கும் ரஷ்யாவின் எம்.இலியீன்; யா.செஹால் இணைந்து எழுதிய பாலர்களுக்கான நூல் முன்னர் ராதுகா பதிப்பகம் வெளியிட்ட 'மனிதன் எங்ஙணம் பேராற்றல் மிக்கவன் ஆனான்' எனும் நூலில் அதன் இறுதி அத்தியாயம் 'நாம்' எனும் நிலையில் இருந்து 'நான்' எனும் நிலைக்குப் பிரிந்த வரலாற்று தருணத்தில் முடியும். அந்த தருணம் பண்டைய கிரேக்க பெண் கவியான சாபோ எழுதிய "காலத்தால் நான் மறக்கப்பட மாட்டேன் என்பது காவியத்தின் தெய்வங்கள் எனக்கு அளித்த வாக்குறுதி" எனும் வரிகளால் அடிக்கோடிடப்படும். அங்கே துவங்கிய, நாம் எனும் தொகுப்பில் இருந்து உதிரியாகி பல கோடி 'நான்' 'எனது' என்பதன் பரிணாம வளர்ச்சி 16 ஆம் நூற்றாண்டின் பிரெஞ்சு தத்துவவாதி ழேனே தெகாரத் வழியே வேகம் கொள்கிறது. அவரைத் தெரியாதோர் கூட அவர் சொல்லிச் சென்ற ' நான் சிந்திக்கிறேன். ஆகவே நான் இருக்கிறேன்' எனும் சொற்றொடரை அறிந்திருப்பார்கள் அதன் வழியாகவே அவரது தாக்கத்தை அறியலாம். அதன் பிறகு வரும் நியுட்டன் காண்ட், நீயேட்ஷே, ஹைடெகர், என்று ஒரு நிறையின் உரையாடலின் வழியே முழுத்ததே இருத்தலியல் தத்துவம்.
கவிதைகளோ கதைகளோ பெரும்பாலான நவீனத் தமிழ்ப் புனைவுகளில் நான் என வெளிப்பட்டது மேற்சொன்ன சிந்தனை மரபின் புறவய வீச்சோடு எந்த உரையாடலும் நிகழ்த்தாத, அக வயமான ஆழத்தின் இருந்து எழுந்த பாய்ச்சலின் விளைவான நான் மட்டுமே.
இதன் பகுதியே மேற்கண்ட நகுலனின் கவிதை. அது ஒரு எளிய கவிதை. குறும்புக்கார குரங்கு, தந்திரக்கார நரி என்பதை போல, இக்கவிதையில் வைப்பு முறைப்படி 'நான்' உடும்பு கொக்கு என்று வருகிறது. உடும்பு உறுதியான பிடிக்கும், கொக்கு காத்திருத்தலுக்கும் இணை சொல்லப்படுபவை. கொக்கு என்றதுமே மனதில் ஒற்றைக்காலில் நிற்கும் கொக்கு சித்திரமே எழும். அர்ஜுனன் தபசு சிலையில் அர்ஜுனன் அவ்வாறுதான் நிற்கிறான். உடும்பு போன்ற பிடி கொண்டு வைராக்கியத்துடன் தவம் செய்கிறான். வரம் வேண்டி காத்திருக்கிறான் கொக்கு போல. ஆக அந்த கவிதை அளிக்கும் கற்பனை சாத்தியம் என்பது இதுவே. தவம் செய்யும் நான் உடும்பு,தியானம் செய்யும் நான் கொக்கு, தவத்தின் தியானத்தின் முடிவில் இவற்றை செய்த அந்த நான் ஒரு ஒன்றுமில்லை.
இந்த கவிதையின் பலவீனம் நான் மேலே கூறிய பலவீனம்தான். விவேகானந்தர் எழுதிய ராஜ யோகம் நூலை வாசித்த ஒருவர் இந்த கவிதையை ஒரு புன்னகையுடன் புறக்கணித்து விடுவார். கொஞ்சம் உத்வேகம் கொண்டவர் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியின் நான்கு நூல்களை கருத்தூன்றி வாசித்தால் இதை போல நாற்பது கவிதைகளை எழுதி விடுவார். ஏற்கனவே வேறு ஒன்றால் சொல்லப்பட்டுவிட்ட ஒன்றை கவிதையாலும் சொல்லி வைப்போம் என்று கவிதை சொல்ல வந்தவன் அல்ல கவிஞன். ஒவ்வொன்றிலும் உள்ள, இதில் இந்த விஷயத்தை வேறு வகை இன்றி கவிதையால் மட்டுமே சொல்ல முடியும் என்ற திமிரும் நிலையைக் கவிதை கொண்டு பற்ற வந்தவனே கவிஞன்.
அப்படி இதன்பொருட்டு 'நான்' 'எனது' 'எனக்கு' ஆகியவை கையாளப்பட்ட நல்ல கவிதைகளும் தமிழில் சில உண்டு. உதாரணத்துக்கு ஆனந்தின் கீழ்கண்ட கவிதை.
ஒரு இலை உதிர்வதால்
மரத்துக்கு ஒன்றுமில்லை
ஒரு மரம் படுவதால்
பூமிக்கு ஒன்றுமில்லை
ஒரு பூமி அழிவதால்
பிரபஞ்சத்துக்கு ஒன்றுமில்லை
ஒரு பிரபஞ்சம்
போவதால்
எனக்கு ஒன்றுமில்லை.
***
இந்தக் கவிதையில் உள்ளதும் ஒரு இருத்தலியல் சித்தரிப்புதான். இலை துவங்கி பிரபஞ்சம் வரை எல்லாமே போய்க்கொண்டு இருக்கிறது. சென்று மறைந்துகொண்டிருக்கிறது. இதில் 'எனக்கு' ஒன்றுமில்லை என்று சொல்லும் 'எனக்கு' எவருடையது?
பிரபஞ்ச காரணத்துடையது அந்த 'எனக்கு'. இன்னும் வசதி தேவை எனில் கடவுளின் 'எனக்கு' அது. இந்த பாவனை இந்த தலைகீழாக்கம் வாசகனுக்கு அளிக்கும் மன விகாசம் அலாதியானது. அனைத்தையும் ஆக்கி, இயக்கி, அழிக்கும், பெருநியதியன் என்றாகி அதன் தன்னிலை பாவத்தை ஒரு கணம் அனுபவிக்கத் தருகிறது இக்கவிதை.
இதே போல் இருத்தலியல் தத்துவம் சுட்டும் இந்த வாழ்வு இன்ன விதமாக இருக்கிறது எனும் நிலையை, கலாப்பூர்வமாக சித்தரித்துக் காட்டிய சில அழகிய கவிதைகளும் உண்டு. உதாரணத்திற்கு கீழ்கண்ட யுவன் சத்திரசேகர் கவிதை ஒன்று.
வார்த்தைகளின் சிதையில்
ஞானிகளும் விஞ்ஞானிகளும் எரிந்த
சாம்பல் மேட்டில்
எருக்கலஞ் செடியாய் எழுகிறது
இந்த விநாடி.
பேதமின்றிப் பரவும் இருளை ஊடுருவி
தற்செயலாய்
மிகத் தற்செயலாய் அமைந்த பிறவிப் பயனால் மினுக்குகின்றன
மின்மினிப் பூச்சிகள்.
முன்னெப்போதும் பார்த்திராத பூமியின் பரப்பை நோக்கி
காற்றுக் கூரையைப் பொத்தலிட்டு
விரைந்திறங்கும் விண்கல் பாதிவழியில் அவிகிறது ஓலைக் குடிசைக்குச் சற்று மேலே.
***
நேற்று வரை இந்த நான், இந்த வாழ்க்கை, இந்த புறம் இத்தகையது என்று வகுத்துச் சொன்ன கோடி கோடி வார்த்தைகள் இங்கே உண்டு. அதைச் சொன்னவர் இரண்டு சாரர். ஒரு சாரர் அக வய நோக்கில் 'கண்டு சொன்ன' ஞானியர். மற்றொரு சாரர் புற வய நோக்கில் 'ஆய்ந்து சொன்ன' விங்ஞானிகள். இருவரின் வார்த்தைகளின் சிதை மேட்டில் எழுகிறது அந்த எருக்கலஞ் செடி.
இருத்தலியலின் சூத்திரங்களில் ஒன்று 'இருத்தல் என்பது மரணத்தை நோக்கிய இருப்பே' என்பது.
(மீண்டும் இங்கே, ஏற்கனவே சொல்லப்பட்டுவிட்ட ஒன்றை கவிதையிலும் சொல்லிப்பார்த்த நகுலனின் பலவீனமான கவிதை ஒன்று இங்கே நினைவில் எழுகிறது.
இருப்பதற்கென்றே வருகிறோம்
இல்லாமல் போகிறோம்.
எனும் கவிதை அது)
அப்படிப்பட்டவர்களின் வார்த்தைகளையே சிதை மேடாக்கி, அதில் எருக்கலஞ் செடி எழுவதோ 'இந்த வினாடியில்'.
எதிர்காலம் என்பது முடிவற்ற சாத்தியங்கள் கொண்ட திறந்த வாசல்.
இறந்தகாலம் என்பது அதில் ஒரே ஒரு சாத்தியம் மட்டுமே நிகழ்ந்து முடிந்த மூடப்பட்ட வாசல்.
எனில் நிகழ்காலம் என்பதன் பண்பு என்பது எதிர்காலத்தின் முடிவற்ற சாத்தியங்களை கொண்ட திறந்த கதவை, இறந்த காலத்தின் ஒற்றை சாத்தியத்தை மட்டுமே அது எதுவோ அதை தேர்வு செய்து அந்த கதவை மூடுவதே. நிச்சயமான அத ஒரே சாத்தியம் என்பது மரணம் மட்டுமே. இந்த நிகழ் கணத்தில் எழுந்த எருக்கு அது.
பாரபட்சமின்றி கவியும் இருள் எனும் ஆசிரியரின் பிரகடனம் இருத்தலியல் துயர் ஒன்றின் கவித்துவ வெளிப்பாடு. இந்த இருளில் மின்னும் மின்மினிகளுக்கு சுயம்ப்ரகாசம் வந்தது எங்ஙனம்? இங்கே நிகழும் பெருந்திட்டத்தின் அதன் நியதிகளின் ஒரு பகுதியாக அல்ல, இங்கே நிகழும் தற்செயல் பெருக்கின் கோடானு கோடி தற்செயல்களில் முற்பிறவி பயன் போன்ற தற்செயல்களில் ஒன்றாக கிடைத்த ஒளி அது.
இரவின் இந்த மின் மினிக்கும் எரிந்தபடி வீழ்ந்திறங்கும் விண் கல்லுக்கும் உள்ள எதிரிடை, அந்த விண் கல் நாம் தலைக்கு மேலாக கட்டி வைத்து, அதை நம்பி உண்டு புணர்ந்து உறங்கி வாழும் எளிய வீட்டின் கூரைக்கு மேல் அதில் விழுவதற்கு முன் சற்றே முன்பாக அவித்து போகிறது.
டினோசர்களுக்கு இந்த அதிர்ஷ்டம் இல்லாமல் போனதால் அவை இப்போது இல்லை. நமக்கும் இந்த அதிர்ஷ்டம் இல்லாமல் போகும் போது நாமும் இருக்கப் போவதில்லை.
தத்துவத்துக்குக் கால் வலிக்கும்போது அது கவிதையில் அமர்ந்து ஓய்வெடுக்கும் என்றொரு முற்சொல் இங்கே உண்டு. அப்படி ஒரு நிலையின் கலைச் சான்று மேற்கண்ட கவிதை.
***
யுவன் சந்திரசேகர் தமிழ் விக்கி பக்கம்
***
0 comments:
Post a Comment