கவிதையின் தோற்றுவாய்கள் - அரவிந்தர் (தமிழில் சியாம்)

கிரேக்க தொன்மத்தின் விண்ணக குதிரையான பெகாசஸ் படிமத்தில், கலை உத்வேகத்தின் துரிதம் பொதிந்துள்ளது. பாறை மீதான அக்குதிரையின் குழம்படிகளிலிருந்தே ஹிப்போகிறீன் (Hippocrene) வழிந்தோடுகிறது. கவிதையின் நீர் ஓர் ஒழுக்கில் ஓடுகிறது. அதில் தடங்கலும் மறுப்பும் வருமாகையில், அது அவ்வொழுக்கிலுள்ள  தடங்கலின் குறியீடு. அல்லது, அந்நீர் தனது தடமாகத் தேர்வுசெய்த மனதின் குறைபாட்டின் குறியீடு. இந்தியாவில் நாம் அதே கருத்தை கொண்டுள்ளோம். சரஸ்வதி நமக்கு கவிதையின் இறைவி; அவளது பெயர் ‘ஒழுக்கு’ அல்லது ‘வழிபவள்’ என்ற பொருள் கொண்டது. ஆனால் அவளுக்கும் மேல் உள்ளவள் கங்கை. கங்கையே தூண்டுதலின்(inspiration) தாய். இமயத்தில் அமர்ந்திருக்கும் மகாதேவனின் தலையிலிருந்து பெருக்காக கீழே வழிபவள். எல்லா கவிதையும் தூண்டுதலே, மேலிருந்து சிந்தனை உறுப்பிற்குள் சுவாசிக்கப்பட்டது, மனதில் அது பதியப்பட்டது, ஆனால் அது, மனதை கடந்த உயர் தரிசனம் அல்லது நேரடி ஞானத்திலிருந்து பிறந்தது. அது உண்மையில் ஒரு பிரகடனம்2 (revelation). தீர்க்கதரிசன அல்லது பிரகடன ஆற்றல் கருவை(substance) காண்கிறது, தூண்டுதல் சரியான வெளிப்பாட்டை கண்டுணர்கிறது. அது உற்பத்தி செய்யப்படுவதல்ல. கவிதை இயற்றப்படுவதும் படைக்கப்படுவதும் கூட அல்ல. சாசுவதமாக இருக்கும் ஒன்றின் பிரகடனம். பண்டைய காலத்தவர் இவ்வுண்மையை அறிந்திருந்தனர், கவிஞனுக்கும் தீர்க்க தரிசிக்கும்(prophet), படைப்பாளிக்கும் ஞானிக்கும்(seer), தெய்வமெழுந்த பாடகனுக்கும் (vates) ஒரே சொல்லை பயன்படுத்தியுள்ளனர், கவி.

ஆனால் வெளிப்பாட்டில் வேறுபாடுகள் உள்ளன. மனம் நிச்சலனமாக இருக்கையில், உச்சமான ஒன்று மூளைக்கு அப்பாற்பட்டும் வெளியிலும், ஆயிர இதழ் தாமரைக்கு கூட அப்பாற்பட்டு தனக்குரிய எல்லைகளில் இயங்கும்போதே கவிதையின் மகத்தான இயக்கம் நிகழ்கிறது. அப்பொழுது வெளிப்படுவது வேதமாகிறது, முழுமையான கருவும் சாசுவத உண்மையின் வெளிப்பாடும். எப்படி மேதைமை சாதாரண அறிவுத்திறனையும் புலன் உணர்வையும் கடந்ததோ அது போல இந்த உயர் கருத்துருவாக்கமும்(ideation) மேதைமையை கடந்தது. ஆனால் இந்த மகத்தான இயல்பு, நமது வளர்ச்சி நிலைக்கு அப்பாற்பட்டது. பொதுவாக மனதின் இரண்டாம்நிலை, நீர்த்த, நிச்சயமற்ற செயல்முறையினால் வெளிப்பாடும் தூண்டுதலும் உருவாக்கப்படுவதை நாம் காண்கிறோம். ஆனால் இந்த இரண்டாம்நிலை, தாழ்ந்த செயல்முறையே ஷேக்ஸ்பியரையும் ஹோமரையும் வால்மீகியையும் நமக்கு அளிக்கும் அளவு மகத்தானது. நமது அறிவின் மூன்று உளக் கருவிகள்- இதயம் அல்லது உணர்வுரீதியான மனது(emotinoally realising mind), உற்றுநோக்கும் matrum தர்க்கசார்(observing and reasoning) அறிவுத்திறன் அதன் துணையான நினைவாற்றலுடன், மற்றும் கவிஞனை ஊடகமாகக் கொண்டு உயர்ந்த கவிதை தன்னை தானே எழுதிக்கொள்ளும்பொழுது உச்சமான ஒன்று தூண்டுதலை கொண்டு செல்லும் இறுதிகட்ட உள்ளுணர்வு அறிவுத்திறன்(intuitive intellect). உள்ளுணர்வு அறிவுத்திறன் இயல்பாக இயங்கும் அளவு வலிமை இல்லாத பொழுது, கவிதை உற்றுநோக்கும் அறிவுத்திறனுக்கு செல்வதை விட, உணர்வு மற்றும் ஊக்கம்(passion) நிறைந்த இதயத்துக்கு செல்வது நல்லது.

தர்க்கசார் அறிவுத்திறன் கொண்டு எழுத்தப்பட்ட கவிதை உயர்த்தப்பட்டதாக மேம்படுத்தப்பட்டதாக இல்லாமல் அறிவார்ந்த அகந்தை, தர்க்கம், விவாதம், உண்மைத்தன்மை அற்ற(rhetorical), பகட்டான, எதிரொலிகள் மற்றும் நகலெடுப்பு நிறைந்ததாக இருக்கும். சிலநேரங்களில் இதுவே செவ்வியல் கவிதை என்று அழைக்கப்படுவது. போப் (Alexander Pope) மற்றும் டிரைடன் (John Dryden) கவிதை போல ஆற்றல்மிக்க சிறப்பான ஆனால் உணர்ச்சியற்ற உயர்த்தப்படாத கவிதை. அது அதன் தூண்டுதல்களை, உண்மையை, மதிப்பை கொண்டுள்ளது. அதன் போக்கில் கவரக்கூடியது. ஆனால் அது உயர்த்தப்பட்டு உள்ளுணர்வுசார் அறிவுத்திறனுக்குள் நுழைகையில் அல்லது அதில் இதயம் உள் நுழைகையில் அது மகத்தானதாக மாறுகிறது. ஒளிக்கு பதில் கனலும், தெளிவிற்கு பதில் உந்து விசையும், கச்சிதத்திற்கு பதில் தீவிரமும் தேவைப்படும் எல்லாவற்றுக்கும் இதயமே சரியான கருவி. கவிதை மகத்தானதாக இருக்க தீவிரமோ பரவசமோ தேவை.

இருப்பினும், இதயத்திலிருந்து எழுந்துவரும் கவிதை தெளிவற்ற நீரொழுக்கு. நமது அவச கருத்துக்களும் கற்பனைகளும் மேலிருந்து வரும் தூய உட்பாய்வுடனும் கீழிலிருந்து வரும் கட்டற்ற எழுச்சியுடனும் கலக்கிறது, நமது எழுச்சிபெற்ற உணர்ச்சிகள் மிகையான வெளிப்பாட்டை கண்டடைகின்றன. நமது அழகியல் இயல்புகளும் முன்தீர்மானங்களும் வரம்பிற்கு மீறிய நிறையுணர்வை கோருவதில் முனைகின்றன. அவை தூண்டுதலால் எழுதப்பட்ட கவிதைகளாக இருக்கலாம், ஆனால் அவை இன்றியமையாதவை அல்ல தகுந்தவை அல்ல. பெரும்பாலும் இரட்டை தூண்டுதல் இருக்கின்றன, உயர்ந்த அல்லது பரவச தூண்டுதல் மற்றும் கீழான அல்லது உணர்ச்சிகர தூண்டுதல். கீழான தூண்டுதல் சலனம் ஏற்படுத்தி உயர்ந்த தூண்டுதலை கீழிழுகின்றது. இது தான் மிகையுணர்ச்சிகொண்ட அல்லது கற்பனாவாத கவிதையின் பிறப்பு. சரியான தளங்களிலிருந்து நேரடியாக வரும் சிறந்த கவிதை வெறுமையோடும்(bare) வலிமையோடும், பகட்டற்றும் மேன்மையோடும், வளமோடும் அழகோடும், தன் விருப்பப்படி கற்பனாவாதத் தன்மையோடும் செவ்வியல் தன்மையோடும் இருக்கலாம். ஆனால் அது தனது நோக்கத்தை பூர்த்தி செய்வதாக இருக்க வேண்டும்.                      

ஆனால், உள்ளணர்வு அறிவுத்திறனின் உயர்ந்த தளங்களில் உள்ள தூண்டுதல்களில் கூட குறைபாடுகள் இருக்கலாம். கவிதையின் உண்மையான மொழியைத் தவறவிடக்கூடிய போலியான தடையின்மை உள்ளது. அது பார்வையின் மங்கலில் இருந்து வருவது. தான் உண்மையான தூண்டுதலுக்கு உட்பட்ட எழுத்து என்ற மனப்பதிவினால் நிலைகுலையா தட்டைத் தன்மையுடன் இருக்கிறது. சொல்லவேண்டியதை சொல்லுகிறது. ஆனால் விசையின்றியும் ஆனந்தமின்றியும், அதை சொல்லவேண்டிய விதத்தில் சொல்வதில்லை. இது தாமச அல்லது மூட்டமான உந்துதல். செயல் கூடியது, ஆனால் சுய-அறியாமையாலும்  அறிவொளியின்மையாலும் நிறைந்தது. பார்க்கக்கூடியது சரியாகவும் நல்லதாகவும் உள்ளது, அது சரியான வெளிப்பாட்டுடன் இணைந்தால் மிக உன்னதமான கவிதையை உருவாக்கலாம். ஆனால் அது செயற்கையாக சகித்துக்கொள்ள இயலாதவாறு வரிகளாக வெட்டப்பட்ட உரைநடையாக மாறிவிடுகிறது. வேர்ட்ஸ்வொர்த் (William Wordsworth) தாமச தூண்டுதலின் பண்புக்கூறுகள் கொண்டவர் அதற்கு பெரிதும் ஆளானவர். வேறொருவகையான தாமச உந்துதல் இருக்கிறது, குறையற்ற வெளிப்பாட்டை அளிக்கக்கூடியது, ஆனால் அதன் கரு மனிதனுக்கு ஆர்வமூட்டக்கூடியதாகவோ கடவுளுக்கு மகிழ்வளிப்பதாகவோ இல்லை. மில்டனில்(Milton) பெரும்பகுதி இந்த வகைமைக்கு கீழ் வரக்கூடியது. இரண்டு வகைமைகளிலும், தூண்டுதலோ பிரகடனமோ செயல்நிலையில்(active) இருக்கிறது, ஆனால் அதற்கு இணையாக செயல்படவேண்டிய இயக்கம் படைப்பில் இணைய மறுத்துள்ளது.

மேலிருந்து பிரகடனமோ தூண்டுதலோ இல்லாமல், மனம் வடிவத்திலும் கருவிலும் செயல்படும்போது மதிக்கத்தக்க அல்லது முக்கியமற்ற கவிதை உருவாகிறது. மதிப்பீடு(judgement) நினைவு மற்றும் கற்பனை ஆகியவை செயல்படலாம், மொழியாளுமை கூட அதில் இருக்கலாம், ஆனால் அறிவுதிறனின் விசைக்கு மேலான ஒன்று இணையாக செயல்படவில்லை என்றால் அது ஆற்றல் விரயம். அந்த படைப்பு மதிப்பை அடையலாம் இறவாமையை அடையமுடியாது. டாக்ரல்(Doggerel) மற்றும் பாஸ்டர்ட்(Bastard) கவிதை உற்றுநோக்கும் அறிவுத்திறனிலிருந்து கூட எழுவதில்லை, மாறாக புலன் அறிவித்திறனிலிருந்து அல்லது செயலற்ற(passive) நினைவிலிருந்து எழுகின்றன. ஓசை மற்றும் உணர்ச்சிகளின் பௌதிக இன்பத்தால் வழிநடத்தப்படுகின்றன. அது துணிவானது, ஆர்பாட்டமிக்கது, நகலெடுப்பது, பண்பற்றது(vulgar); அடிப்படை தூண்டுதலையும் ஆனந்தத்தையும் கடந்து செல்லமுடியாத அறிவுத்திறன் மற்றும் கற்பனையின் தொகுதி அது. ஆனால், புலன் உணர்வு மனதில் கூட, உயர் சுயத்திலிருந்து வரக்கூடிய செயல்பாட்டிற்கான சாத்தியக்கூறு உள்ளது. புலன் உணர்வு சார்ந்து யோசிக்க கூடிய விலங்குகளுக்கு கூட கடவுள் வெளிப்பாடுகளையும் தூண்டுதல்களையும் அளித்துள்ளார். அதை உயிரியலாக உள்ள உணர்வு(instict) என்கிறோம். அது போன்ற சூழ்நிலைகளில் பாஸ்டர்ட் கவிதை கூட ஒருவித மதிப்பும் இன்றியமையாமையும் கொள்ளக்கூடியதுதான். புலன் உணர்வு மனிதனில் உள்ள கவிஞன் முழுதாக நிறைவடையலாம், மகிழ்வடையலாம் அல்லது மிகவும் மேம்பட்ட மனிதனில் உள்ள புலன் உணர்வுக்கூறு கவித்துவ நிறைவை அடையலாம். சிறந்த பாலட் கவிதையும் மெக்காலே (Macaulay)கவிதைகளும் இதற்கு உதாரணங்கள். ஸ்காட்(Scott) ஒரு விதத்தில் புலன் உணர்வுக்கும் அறிவுசார்கவிதைக்கும் இடையிலுள்ள இணைப்பு.

மற்றொரு வகையான பொய்யான தூண்டுதல் ராஜஸ அல்லது கிளர்ந்து எழுகிற உந்துதல். அது தாமசம் போன்று தட்டையானதும் பயனற்றதும் இல்லை. ஆனால் அவசமிக்கது, பொறுமையற்றது, கர்வமிக்கது(vain). இரண்டாம்பட்ச சிறந்த வெளிப்பாட்டை அடையும் ஆர்வத்தில் முயற்சியை ஒதுக்குகிறது. ராஜஸ கவிஞர்கள், தாங்கள் எழுதியதில் குறைபாட்டை உணர்ந்தாலும், அதை துறக்கத் தயங்குகிறார்கள். ஏனெனில், அதில் உள்ள மதிப்புமிக்கவற்றில் அல்லது அது முதலில் எழுதப்பட்டபோது அவர்கள் அடைந்த ஆனந்தத்தின் நினைவில் பிணைந்துள்ளார்கள். இன்னும் மேம்பட்ட ஒரு வெளிப்பாட்டை அல்லது முழுமையான நோக்கை அடைந்தால் கூட, அவர்கள் காதல் கொண்டுள்ள கீழான விஷயத்தை முழுதாக அழிக்காமல், மீட்டுக் கூறவே விரும்புகிறார்கள். சிலநேரங்களில், உதவியின்றி அந்த ஆழமற்ற ஆவேசமான பிரவாகத்தில் தத்தளித்தாலும் போராடினாலும், இன்றியமையாமையுடன் அதை வெளிப்படுத்துவத்தில் இறுதி வெற்றியடையாமல், அவர்கள் ஒரு கருத்தை மட்டும் மாற்றிக்கொள்கிறார்கள் அல்லது அதே கற்பனையில் தொடர்கிறார்கள். ஷெல்லியும்(Shelley) ஸ்பென்ஸரும்(Spenser) ராஜஸ உந்துதலின் உதாரணங்கள். ஆனால் சில ஆங்கில கவிஞர்கள் இதிலிருந்து வெளிவந்தவர்கள். கிளர்ந்து எழக்கூடிய உந்துதல் கருவை திசை கெடுத்து, தடை உண்டாக்குவது. சிந்தனையை, கற்பனையை கட்டுப்படுத்த வரம்பிற்குள் இருத்த விருப்பமின்மையும் சுய-கட்டுப்பாடின்மையும் ராஜஸ குணத்தின் குறியீடுகள். அதில், கருவின் எல்லா சாத்தியக்கூறுகளையும் தீர்த்துவிட, சிந்தனையையும் கற்பனா பார்வைகளையும் தகுந்த எல்லையைக் கடந்து விஸ்தரிக்க ஒரு முயற்சி உள்ளது. அப்படியில்லை எனில் உண்மையான கருத்துரு மறுக்கப்படுகிறது, அல்லது அதற்கு பதிலாக கவர்ச்சியான மற்றும் வெளிப்படையாக பயன் நிறைவுடைய ஒன்று எதிர்பார்க்கப்படுகிறது. முதலில் சொன்ன பண்புகொண்டவர் கீட்ஸ்(Keats) எலிஸபெத்திய கவிஞர்கள் (Elizabethans) இரண்டாவது பண்புகொண்டவர்கள். ஷேக்ஸ்பியரின் ஆரம்பகால படைப்புகள் செவ்வியலின் உதாரணமாக உள்ளன. கிரேக்க இலக்கியம் போல் இல்லாமல் ஆங்கில இலக்கியம் ராஜசமானது. கிரேக்கர்கள் உருவாக்கியதை விட அழகானவை ஆங்கிலத்தில் இருந்தாலும், அதில் பெரிதாக போற்றப்படுகிற பகுதிகள்கூட வளமானைவ மற்றும் மெச்சத்தகுந்தவையே தவிர மகத்தானவையோ உண்மையானவையோ அல்ல.

உள்ளுணர்வு அறிவுத்திறனில் முழுமையான தூண்டுதல் என்பது சாத்வீக அல்லது ஒளிமிக்க தூண்டுதல். பாரபட்சமற்றது, தன்னிறைவு கொண்டது, உறுதியில்(will) உன்னதமானது, வளமையானது அல்லது ஆற்றல்மிக்கது. தனது பார்வையை சொல்லவேண்டியவற்றின் மேல் மட்டும் செலுத்துவது, அதை சொல்லவேண்டிய விதத்தில் சொல்வது. அது உணர்ச்சிகள் அல்லது ஆர்வம் தனது முழுமையை குறுக்கிட அனுமதிப்பதில்லை. ஆனால் இத்தன்மை அதை பரவசத்திலிருந்து பேரானந்தத்திலிருந்து விலக்கிவைப்பதில்லை. மாறாக, அதன் சுய-ஆனந்தம் பிற தூண்டுதல்களைவிட தூய்மையானது அழகானது. அது உணர்ச்சிகளுக்கு அடிமையாகாமல், ஆணையிட்டு அதை பயன்படுத்திக்கொள்கிறது. தன்னுடைய ஒளியுடன் நிதானத்துடன் தெளிவுடன் இணைந்த சாத்வீக உந்துதல் கண்டிப்பாக வளமையை விசையை அல்லது தூண்டுகிற உணர்ச்சியை அவை தேவையென்றபோதும் விலக்கலாம். அனைத்து கவிதைகளும் இல்லையென்றாலும் பெரும்பாலும் மேத்யு அர்னால்டின் (Mathew Arnold) கவிதை இந்த வகையானதே. ஆனால் இது எல்லைக்குட்பட்ட ஒரு தூண்டுதல். தூண்டுதலற்ற அறிவுத்திறனிலிருந்து சாத்வீக மற்றும் ராஜஸ கவிதை எழுதப்படலாம். ஆனால் புலன் உணர்வுசார் மனம் எப்பொழுதும் சாத்வீக கவிதையை பிறப்பிக்க முடியாது.

ஒரு விஷயத்தை சொல்ல வேண்டும். ஒரு கவிஞன் ஆழ்ந்து சிந்திக்கும் விமர்சகனாக இருக்க வேண்டியதில்லை. அவனது கவிதையை அவனே பகுப்பாய்வு மற்றும் பிரித்தாய்வு செய்யும் அறிவுத்திறனை கொண்டிருக்க வேண்டுமென்பதில்லை. ஆனால் முழுமையாக இருக்க ஓரளவேனும் அவன் இரண்டு விஷயங்களை கொண்டிருக்க வேண்டும். ஒன்று, ஒரே பார்வையில் தான் அடைந்திருக்கும் கருத்துரு சிறந்ததா அல்லது  இரண்டாம்பட்சமானதா என்பது பற்றி, வெளிப்பாட்டின் முழுமை பற்றி, கவிதையின் இசைவு பற்றி, சொல்லும் உள்ளுணர்வு மதிப்பீடு. இரண்டு, பகுப்பாய்வு இன்றியே எதனால் சிறந்தது இரண்டாம்பட்சமானது, முழுமையானது முழுமையற்றது என்று சொல்லும் உள்ளுணர்வு அறிவு. பிரகடனம் அல்லது தீர்க்கதரிசனம், தூண்டுதல், உள்ளுணர்வு மதிப்பீடு மற்றும் உள்ளுணர்வு அறிவு என்ற நான்கு இயல்புகளே, படைப்பூக்க ஞானம் மற்றும் புரிதல் கொண்டு படைப்புகளை உருவாக்கும் மேதையின் முழுமையான கருவிகள்.                                                   

குறிப்புகள்:

  • Hippocrene- கிரேக்க புராணங்களில், ஹிப்போக்ரீன் என்பது ஹெலிகான் மலையில் உள்ள ஒரு நீரூற்று. இலக்கிய அல்லது கவிதை தூண்டுதலை ககுறிப்பது.
  • ‘Revelation’ என்ற சொல் கட்டுரையில் ஆன்மீக தளத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ‘வெளிப்பாடு’ என்ற பொருள் கொண்ட பிற சொற்கள் கட்டுரையில் உள்ளதால் ‘Revelation’ என்பதற்கு அழுத்தம் தர, தனித்துக் காட்ட ‘பிரகடனம்’ என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
***


ஸ்ரீ அரவிந்தர் 1910-1913ல் எழுதிய ‘Essays Divine and Human’ என்ற தொகுப்பிலுள்ள ‘The sources of poetry’ என்ற கட்டுரையின் மொழிபெயர்ப்பு.

***

Share:

0 comments:

Post a Comment

Powered by Blogger.

ஆகாய மிட்டாய் - கல்பற்றா நாராயணன் கவிதை

ஆகாய மிட்டாய் ந ண்பனின் மகளின் பெயர் மழை என்று தெரிந்தபோது மனம் தெளிந்தது சாறாம்மாவுக்கும் கேசவன்நாயர்க்கும் இருந்த துயரம் சற்று பிந்தியானால...

தேடு

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (4) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) கட்டுரை (6) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (3) கல்பனா ஜெயகாந்த் (1) கவிதை (151) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குமரகுருபரன் விருது (5) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (18) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (2) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (1) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (3) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (10) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) வே. நி. சூர்யா (3) வே.நி. சூர்யா (5) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Most Popular

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (4) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) கட்டுரை (6) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (3) கல்பனா ஜெயகாந்த் (1) கவிதை (151) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குமரகுருபரன் விருது (5) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (18) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (2) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (1) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (3) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (10) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) வே. நி. சூர்யா (3) வே.நி. சூர்யா (5) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Blog Archive