உருகும் பனி - சக்திவேல்

கோப்பையினுள் மீளமீள இட்டு எடுக்கப்படும்

தேயிலை பையெனத் தொலைவில்

அமிழ்ந்துகொண்டிருக்கிறான் சூரியன்

(அலைகளை எண்ணுபவன் கவிதையில் இருந்து)

நீரில் கரைந்து அதனை தேநீராக்கும் தேயிலை பையை போல கடலில் கரையும் சூரியன் கவிதைச்சொல்லியின் தன்னிலையை கரைக்கும் உலகமே வே.நி.சூர்யாவின் அந்தியில் திகழ்வது கவிதை தொகுப்பு எனலாம். ஒவ்வொரு கவிஞனும் தன் கவிதைகளில் தன்னை எவ்விதமான தன்னிலையாக உணர்கிறார் என்பது முக்கியமானது. அதுவே அவரது கவியுலகின் செல்திசையை, கண்டடைதல்களை தீர்மானிக்கும் சாரம். 

சூர்யாவின் அந்தியில் திகழ்வது தொகுப்பில் திகழும் அந்த தன்னிலையை அந்தி சூரியன் முன் உருகும் பனிக்கட்டி என வரையறுக்கலாம். அது இயற்கையின் முன் தன்னிலையை இழந்து கரைந்து கொண்டிருக்கும் ஒரு தன்னுணர்வின் வெளிப்பாடாக அமைகிறது. உருகி நெகிழ்ந்து இன்னொன்றாவதின் மகிழ்வும் இதுநாள் வரையிலான அடையாளங்கள் ஏதுமற்று நிற்பதன் துயரமும் என துலாமுள்ளின் நிலைக்கோட்டில் நின்றதிரும் பனிக்கட்டியாக இருக்கிறது. முதற்புள்ளிக்கு தத்தளிப்பு போலவும் கவனித்தால் தன் அதிர்வில் மகிழ்ந்து துக்கித்து வெறும் சாட்சியாக விடுதலை கொள்ளும் பரிணாமத்தை பார்க்கலாம். அந்த பரிணாமத்தின் கவிதையாக இதை சொல்லலாம்.

ஒரு ஆனந்தம்... ஒரு துக்கம்... ஒரு வெறுமை

மணலைப் பொன்னெனக் காட்சிப்படுத்திக்கொண்டிருக்கிறது வெயில்

யார் தன்னை என்றே கிடக்கின்றன சிப்பிகள்

எனக்கோ இதே உடையில் இதே வியர்வைத் துளிகளோடு

ஏற்கெனவே இங்கு வந்ததுபோல இருக்கிறது

காலடிச்சுவடுகளை அலைகளுக்கு எட்டாதபடி

ஆழப் பதித்து பதித்து

நடப்பதில் ஒரு ஆனந்தம்... ஒரு துக்கம்... ஒரு வெறுமை

இனி திரும்பிச்செல்வேன்

என் காலடிச்சுவடுகளே இனி நீங்கள் நடக்கலாம்

உங்களுக்கு மேலே என்னை சிருஷ்டித்துக்கொண்டு.

கடலும் அலைகளும் மனித அகத்தையும் அகத்தூறும் எண்ணங்களையும் குறிக்கும் தொல்படிமங்களில் ஒன்று. அந்தியில் திகழ்வது தொகுப்பில் இருக்கும் கடல் காலவெளியாக அதன் அலைகள் நம்மை வந்தறையும்  மணித்துளிகளாக உள்ளது. அந்த மனமே காலத்திற்கப்பால் பதியும் கவியின் காலடிச்சுவடுகளை தொட்டெடுக்கிறது. 

காலவுணர்வு கடக்கப்படுகையில் நாமறிந்த அனைத்தும் அர்த்தங்களை இழந்து வேறொன்றாக அறியப்பட முடியாதவகையாக அமைவதை சொல்லும் அழகிய கவிதை ஒன்றுகளில் இது.

கண்களும் வெற்றிடமும்

அந்திக்கருக்கலில் எனக்குக் கண்ணாடியைக் கழற்றிவைக்கும்

ஆசை வந்துவிடுகிறது

கவசமற்ற வெறும் கண்களோடு நடை போடுகிறேன்

சும்மா சொல்லக்கூடாது

மங்கலாகத் தெரிவதிலும் 

சில நன்மைகள் இருக்கவே செய்கின்றன

ஒரு நொடிதான்

எதிர்ப்படும் முகங்கள் யாவும் ஓரே முகங்கள் ஆகிவிடுகின்றன

மங்கல் முகங்கள்

அவ்வளவு பேரும் புதியவர்கள்

இனிமேல்தான் அறிமுகம் செய்துகொள்ளவேண்டும் போல

ஒருவரைக் கூட எனக்குத் தெரியவில்லை

பெயர்பலகைகளில், சுவரொட்டிகளில், பேருந்துகளில் என

எந்த எழுத்தையும் படிக்க முடியவில்லை

வேறு ஏதோ ஒருமொழியில் இருக்கின்றன அவை:

அர்த்தம் தர மறுக்கும் ஓர் உலகம்

நிறங்கள் நிறங்கள் ஆக போராடுகின்றன இங்கு

இந்தத் தேவாலயச் சப்தம் மட்டுமில்லை எனில்

இத்தருணம் ஒரு கனவேதான்

வழியில் பிறகு பாரபட்சமின்றி

இருட்டிவிட்டதைப் பார்க்கிறேன்

இனி நான் எனது ஊருக்குத் திரும்ப வேண்டும்

நெருங்கிநெருங்கிப் பார்த்தும்

பின்பு கண்ணாடி அணிந்தும்

இக்கவிதையின் இன்னொரு அம்சம் புலன்களின் வழி தன்னிலை ரத்தாதல். வே.நி.சூர்யாவின் கவிதைகளில் காணப்படும் முக்கியமான அம்சங்களில் புலன்களால் உணரப்படும் உலகத்தின் வழியாக தூய தன்னுணர்வாக தன்னை உணரும் கணங்கள். அதற்கொரு சிறந்த உதாரணமாக பரிசு கவிதையை சொல்லலாம்.

இந்நாட்களில் காலையில் விழித்ததும்

முதலில் பார்ப்பது சன்னல்களினூடாக அறைக்குள்

ஊர்வலம் போகும் ஒளித்துகள்களைத்தான்

என்ன கோஷம் ?

என்ன காரணத்திற்காக ?

ஒருவேளை ஒன்றுமில்லையோ ?

அறிய முடிந்ததேயில்லை என்னால்.

ஆனாலும் வெறுமனே ஒவ்வொரு காலையிலும்

ஒரு தியானம்போல

மேலும் சில நிமிடங்கள் அவற்றைக் கண்ணூன்றிக் காண்கிறேன்

பின்பு ஒரு எறும்பை விடவும் சிறிய ஆளாக

ஏழெட்டு முறை படிக்கட்டில் ஏறியிறங்கிவிட்டு

அம்மாவின் எடை பார்க்கும் இயந்திரத்தில் ஏறிநிற்கிறேன்

பூஜ்ஜியத்தைத் தவிர வேறு எண் வரவே மாட்டேன் என்கிறது.

‘பூஜ்ஜியத்தை தவிர வேறு எண் வரவே மாட்டேன் என்கிறது’ எனும் இவ்வரி சூர்யாவின் கவிதையுலகில் வேறுவேறு வகையில் மீள மீள வருவதை பார்க்கிறது. அது நழுவி கொண்டிருக்கும் தன்னிலை எனும் ஆடையை இறுதி நேரத்தில் கவ்வி பிடித்து கொள்ளும் செயலாக தோன்றுகிறது. இதற்கு நேரெதிராக காற்றில் சுழன்று கழன்று போன மேலாடையே எதிர்காற்றில் என்னுடன் வந்து சேராதே என்ற தொனியில் சொல்லப்பட்ட கவிதையாக மாபெரும் அஸ்தமனம் இருக்கிறது.

அந்திவானில் மகத்தான ரத்தத்துளி

அதன் ஒளிப்பரிவாரங்களோடு

அஸ்தமனமாகிக்கொண்டிருக்கிறது

அனிச்சையாக என்னை நான் தொட்டுப்பார்க்கிறேன்

ஆ! காற்றைத் தீண்டுவதுபோல அல்லவா உள்ளது

தொடுகையுமில்லை தொடப்படுவதுமில்லை

வேறெதுவோ நான்...

ஒரு வீட்டில் வசிப்பவனை மாதிரி

எனக்குள் இருக்க வேண்டிய நான் எங்கே ?

ஒருவேளை வீட்டை இழுத்து சென்றுவிட்டதா என்னுடைய நான் ?

இல்லை அஸ்தமனத்தின் மறுபக்கத்தை 

வேறொரு கடற்கரையிலிருந்து பார்த்துக்கொண்டிருக்கிறதா ?

என்னுடைய நானே திரும்பி வராதே ...

நீ இப்போதே எங்கிருக்கிறாயோ அங்கேயே இரு.

அதுவே உன் சுவர்க்கம்.

அந்தியின் சூரியன் மகத்தான ரத்தத்துளி என்றாகும் போது வாழ்க்கையில் நம்மை விட்டு மறைந்து விடுதலை கொடுத்த பலவற்றுடன் தொடர்புறுத்தி கொள்ள முடிகிறது. இக்கவிதையில் வரும்

எனக்குள் இருக்க வேண்டிய நான் எங்கே ?

ஒருவேளை வீட்டை இழுத்து சென்றுவிட்டதா என்னுடைய நான் ?

இல்லை அஸ்தமனத்தின் மறுபக்கத்தை

வேறொரு கடற்கரையிலிருந்து பார்த்துக்கொண்டிருக்கிறதா ?

என்ற வரிகள் இருப்பிலிருந்து இன்மையாகும் கணத்தில் நிகழும் பரிணாமத்தின் நெளிவை சுட்டி கூர்மை கொள்ள வைக்கிறது. திரும்பி வராதே... என்ற நான் திரும்பி வந்தால், உடன் ஒரு திருப்தியையும் எடுத்து வந்தால் அது எனக்கு மனம் கிடைத்துவிட்டதே! என பிதற்ற வைக்கிறது.

எவ்வளவு பெய்தால் யாவும் 

சாந்தப்படுமோ அவ்வளவு மழை

நடந்துகொண்டிருக்கிறேன் நான்

தவளைகள் நில்லாமல் சமிக்ஞை

அனுப்புகின்றன கார்மேகக் கும்பலுக்கு

இலைமறைவில் கனவு காண்கிறது வண்டு

முதலில் ஒரு துளி

பின் அடுத்தது

பின்னர் விடாப்பிடியாய் இன்னொன்று

சிவப்பு மலர் நசுங்கிவிட்டது

இப்போது அது நூறு காளைகள்

தாறுமாறாய் ஓடிய தோட்டம் அல்லது

ஊருக்குள் புகுந்த ஆயிரக்கணக்கான மந்திகளின் கதை

சொந்த புதிர்ப்பாதையைக் கடந்து

சாலை வந்திறங்கினேன்

எனக்கு மனம் கிடைத்துவிட்டது

இனி சொல்வேனே

கற்களுக்கு நினைவு உண்டென்றும் 

சாமத்தில் விண்ணேக்ககூடிய 

கலங்கரைவிளக்கங்கள் உண்டென்றும்

துயரங்களில், இழப்புகளில், வலிகளில் நம் கண்ணுக்குள்ளே மலரும் சிவப்பு மலரை விட்டு உலகத்து சாலைகளில் இறங்கி நடப்பது எத்தனை ஆசுவாசமானது என அப்போது மட்டுமே உணர்கிறோம். ஆனால் சலிப்புற்ற ஒரு வெற்று நாளில் அவ்வுணர்வு நேரெதிராக திரும்ப கூடும். இப்படியாக,

உன் பாதை

ஒவ்வொரு இலையும்

ஓர் உலகமன்றி வேறென்ன ?

நீ சஞ்சலப்படுவதும்

பின் சஞ்சாரம் செய்வதும் எதற்காக ?

சூரியப்பிரபையில்

தலையாட்டி பொம்மை போலாடும்

மரகதப்பச்சையைப் பார்

எகிறிக்குதி அதனுள்

நீண்டுசெல்லும் நரம்புகளே உன் பாதை

தொடர்ந்து போ அதனூடே

கிளைகள் மலைகள்...

ஏறு உன் காற்றுப்பைக்கு முகில் காட்டியவாறு

அழற்கதிரெனும் மஞ்சள் குதிரையேறி

சூரியனைக் கடந்து சென்றுவிடு

என்ன ஆயினும் 

நூறாயிரம் இருள் உன் சித்த அம்பரத்தில் கவிந்தாலும்

இலைகளிருக்கின்றன உனக்கு

இன்னும் ஏன் நின்றுக்கொண்டிருக்கிறாய்

அதோ பச்சை வண்ணம் உன்னை அழைக்கிறது பார்

போ

எப்போதும் இருக்கும் விடுதலை வெளியாக இயற்கை திகழ்வதை, அதன் உருவகமாக அந்தி அமைவதை சூர்யாவின் கவிதைகளில் காண்கிறோம்.

***

வே.நி. சூர்யா தமிழ் விக்கி பக்கம்

அந்தியில் திகழ்வது தொகுப்பு வாங்க

***

Share:

0 comments:

Post a Comment

Powered by Blogger.

புதுக் கவிதை இரண்டு குறிப்புகள் - க.நா. சுப்ரமணியம்

[‘இலக்கிய வட்டம்’ இதழில் ‘புதுக்கவிதை’ என்கிற தலைப்பில் வெளியான இருவேறு குறிப்புகள் இந்த இதழில் இடம்பெறுகின்றன. முதலில் உள்ளது ‘மயன் கவிதைகள...

தேடு

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (5) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எதிர்வின (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) க.நா. சுப்பிரமணியம் (3) க.நா. சுப்ரமணியம் (1) கட்டுரை (7) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (4) கல்பனா ஜெயகாந்த் (2) கவிதை (171) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குமரகுருபரன் விருது (5) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (22) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (3) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (2) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (4) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (12) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) விவாத (1) வீரான்குட்டி (3) வே. நி. சூர்யா (5) வே.நி. சூர்யா (6) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (2) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷாஅ (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Most Popular

Blog Archive