இருள் தொட்டதெல்லாம் கண் காணாமல் ஆகிவிடுகிறது
தண்ணீர் தொட்டதெல்லாம் புரிந்து கொள்ள முடியாததாக
நான் இருக்க வேண்டும் கொஞ்ச நேரமாவது எதையும் தொடாமலும்
இயன்றால் எதனாலும் தொடப்படாமலும்
- ‘அந்தியில் திகழ்வது’ தொகுப்பிலிருந்து
இந்த அவசர வாழ்க்கையில், நிற்க நேரமில்லாத ஓட்டத்தில் கவிதை நின்று அமர்ந்து மெல்லிய மலரைத் தொடுவது போன்றது. அவ்வப்போது சில கவிதைகள் ஒரு உணர்வைத் தொடங்கி வைத்துத் தானே அமிழ்ந்து கொள்ளும். சில கவிதைகள் தருணத்தில் நிலைப்பவை; அவை சிற்சில நிமிடமேயானாலும் செறிவான உணர்வைக் கடத்திச் செல்லும் . அப்படி, சூர்யாவின் இந்தக் கவிதை ஒரு ஜென் மனநிலையைத் தரக்கூடியது. உலகின் நிலையாமையை, மனங்களின் வெற்றிடத்தை உணர்த்தும் வண்ணம் செயல்பட முயல்வது. இயற்கைக்கும் மனித மனதிற்கும் உள்ள ஒற்றுமையை ஏதுமற்றதன்மையை இந்த வரிகள் ஆழமாகப் பதிக்கின்றன. ஆகவே அந்த நேரத்து நியாயமாக ஒரு தருணத்தில் நிலைப்பது சௌகர்யம்.
சன்னல்-3
எந்த சன்னலிடமும் நேற்று இல்லை..
அவை வைத்திருப்பதெல்லாம் இன்றினை மாத்திரமே
நீங்கள் வேண்டுமானால்
’இதோ வைத்துக்கொள் வைத்துக்கொள் ‘
என நேற்றுகளைக் கொடுத்துப் பாருங்களேன்
குளிர் பொறுக்காமல் பனிக்கட்டிகளை நழுவவிடும் பாவனையோடு
அவை அவற்றை தவறவிட்டு விடும்
நேற்றுகளை ஏற்றுவிட்டால்
உலகம் மண்ணோடு மண்ணாய்ப் போய்விடும்
என்று சன்னல்களுக்குத் தெரியும்
சன்னல்களை உலகத்தைக் காணும் சிறிய கதவுகளாக அவ்வப்போது நினைக்கத் தோன்றும். சன்னல்கள் காண்பிக்கும் நிலவோ, சூரியனோ தனித்த அழகுடன் தான் தோன்றுகின்றன. கோடுகளுக்கு மத்தியில் தெரியும் அவ்வொளி ’நிசப்தம்’.
இந்தக் கவிதையில் சன்னல்கள் காலத்தின் வாயிலாகப் பயணம் செய்கின்றன. நாம் நிஜத்தில் வாழும்போது கடந்த காலத்தின் நினைவுகள் யாவும் சன்னல் கதவுகளாக அடைக்கப்படுகின்றன. அதில் சில மென்காற்றும் உண்டு ; பல புயல்களும் உண்டு. அதையே அவை உண்மை என ஏற்றுக்கொள்ளும் . சன்னல் கதவுகளில் தோன்றுவது அந்த அந்த நேரத்து இன்ப-துன்பங்கள் மட்டுமே .
நம் நினைவுகளை நாம் கொண்டு செல்லவும் முடியாது. அதை ஒட்டுமொத்தமாகத் தகர்த்தெறியவும் முடியாது. கடந்த காலத்தை எதன் முன் நோக்கினாலும் அதை அதே இடத்தில் விட்டுவரத்தான் நம் மனங்கள் முயன்று கொண்டிருக்கின்றன. அப்படி நாம் இந்தத் தருணத்தில் நிலைப்பது தான் சன்னல் வழிக் காணப் போகும் காட்சி.
…எனக்கு மனம் கிடைத்து விட்டது
இனி சொல்வேனே
கற்களுக்கு நினைவு உண்டென்றும்
சாமத்தில் விண்ணேகக்கூடிய
கலங்கரைவிளக்கங்கள் உண்டென்றும்…
வலைகளின் பின்னல்களாகத் தொடரும் வாழ்க்கையில் யாவும் புதிர் தான் அடுத்தது என்ன என்ற கேள்விக்கு பெரும்பாலான நேரம் நமக்கு பதில் கிடையாது. இப்படி இயற்கையோடு இயங்கும் மனங்கள் பல போராட்டங்களைச் சந்தித்து தான் கரையைச் சேர்கின்றன. துயரமற்ற மனம் எங்கேயும் காணக்கிடைப்பதில்லை. பெருமழை ஓய்ந்த பின் மரக்கிளை என்னவாகும் என்பது புரியாத ஒன்று தான்.
நினைவை நாம் உணர்ந்த நேரம் மனம் தோன்றியிருக்குமா என்ன? சந்தோஷங்களுக்கும் துக்கங்களுக்கும் இடையில் சிக்கி எப்போதாவது அமைதியான கடல்களும் சூர்யோதங்களும் கண்களில் தென்படும். அப்படி ஓய்ந்த மனதில் ஒரு சாயங்காலப் பொழுது நன்மையை கொண்டு வரும் . எதையோ அடைந்து விட்ட இன்பம் தோன்றும். மழை முடிந்த பின் வரும் மண்வாசனை போல் மனத்தைக் கண்டடைந்த தருணத்தை இந்தக் கவிதை விவரிக்கின்றது.
***
0 comments:
Post a Comment