காகங்கள்
1
என் குழந்தைப் பருவத்தில் காகங்களுக்கு
பித்ருக்களின் முகச்சாயல் இருந்தது.
பலிச்சோறு பரிமாறிய பிறகு அம்மா கைதட்டப் போவதை எதிர்பார்த்து
மரணத்தால் களைத்த முகத்துடன்,
அவை முற்றத்து புளியமரக் கொம்பில் அமர்ந்திருக்கும்.
சொர்க்கம் வெகுதூரம்.
கடவுளோ மௌனி,
பலிச்சோறு தின்று திரும்பும்போது
பாட்டி தாத்தாவிடம் சொன்னாளாம்;
‘செத்த பிறகும் பிறரைச் சார்ந்திருப்பது
எத்தனை பயங்கரமான விஷயம்!’
***
2
நான் வளர்ந்தபோது காகங்களுக்கு
தத்துவ ஞானிகளின் முகபாவம் வந்து விட்டிருந்தது.
பகல் முழுக்க அவை
விடுதலை பற்றி விவாதம் செய்தன.
இரவுகளில் அவை மானுட சாத்தியங்களின் எல்லைகளையும்
மரணத்தையும் எனக்கு நினைவூட்டின.
என் தலைமுறையின் பாலியம் இவ்வாறாக
தூக்கமில்லாமல் போயிற்று.
சூனியத்தின் விரல் ரேகைகள் கூட எங்களுக்கு
கிராமப்பாதைகள் போல தெரிந்திருந்தன.
மரணத்தை நாங்கள்
எங்கள் கிராமத்துக் காவல் தேவதையான ஏரியைத்
தொடுவது போல அறிந்தோம்
சிலர் தங்கள் மெலிந்த கரங்களில் இருந்து
கைக்கடிகாரங்களை கழட்டி வீசி
அதன் இரண்டு ஆழங்களுக்குள் இறங்கிச் சென்றனர்
கொப்பளித்த சுரக்குமிழிகள்
முணுமுணுத்தது இதுதான்,
பித்ருகளின் சேற்றுப் படுக்கையில்
எந்த தாமரையும் விரிவதில்லை.
தெய்வத்தின் மண்டை ஓட்டுக்குள்
குடியேறியது ஒரு தவளை.
குரோம் குரோம்
ஒன்றுமில்லை ஒன்றுமில்லை!
***
3
தாமரைகள் மலர்ந்ததோ பள்ளத்தாக்கில்
கால்களில் நடனமும்
காடுகளில் அன்பும்
கனவு முழங்கும் இதயங்களை பறையாக மாற்றி
வீட்டுக் கூரைகளில் தொங்க விட்டோம்
பித்ருக்களின் மூடுபனி விலகியது.
விடுதலையின் சிகரநுனியை
முதல் முறையாக கண்டோம்.
விவசாயிக்கான கிரீடம்
மேங்களில் மினுங்கியது.
திடீரென்று காகங்கள்
இரவுகளாய் மாறி வந்திறங்கின.
எங்களில் சிறந்தவர்களை
அவை கவ்விச் சென்றன.
அவர்கள் இருந்த இடத்தில்
ஒரு ரத்த வட்டம் மட்டுமே எஞ்சியது.
ரத்த சாட்சிகளில் விதியை ஏளனம் செய்து
காகங்கள் சென்று மறைந்த இருண்டவானம் கண்டு
நாங்கள் வழியறியாமல் திகைத்து நின்றோம்.
***
4
தூய சிந்தனையில் வழியில்லை,
சுத்த சாவேரியில் மோட்சமில்லை
கரிய சிறகோசையின் கீழ் அமர்ந்து
எஞ்சியவர்கள் பரஸ்பரம் அறிய முயன்றோம்.
அம்முயற்சியில் எங்களுக்கு பைத்தியம் பிடித்தது
வெறுப்பு எங்களை வென்றது.
ஏகாந்தமான இந்த முற்றம் முன்பு
ஜனக்கூட்டம் ஓடும் நதியாக இருந்தது
பித்து தெளியச் செய்யும் ஜலம்
அதன் எலும்புக் கூடுகளுக்கு இடையே இன்னமும் மீதியுண்டு
சற்று தோண்ட வேண்டும்
அதை தெளித்து அனைவரையும் நான் திரும்ப அழைப்பேன்
ராஜனை, ரமேசனை, ராமகிருஷ்ணனை
சலீமை, சினலை, சுப்ரமணியத்தை...
வாழ்விற்கும், அன்பிற்கும்.
அவர்கள் சேர்ந்து கை தட்டும்போது
நான் புளியமரக் கிளையிலிருந்து பறந்து வருவேன்.
கரிய சிறகுகளில் பதியும்
பூமியின் ஒளிக் கூறும்
‘இறந்த பின்பும்
மனிதரில்லா உலகில்
வாழ நேர்வது எத்தனை பயங்கரம்!’
***
5
கைதட்டுங்கள்! கைதட்டுங்கள்!
ஜனங்களின் திருவிழா இத்தனை சீக்கிரத்தில்
கிழவர்களின் கடந்தகால ஏக்கமாய் மாறிவிடலாகாது!
***
குறிப்பு:
பலிச்சோறு: இறந்தவர்களின் முதல் வாரிசுகள் ஆண்டுதோறும் திதியன்று காய்கறிகளுடன் சேர்த்து சோறு சமைத்து ஒரு பகுதியை ஆற்றில் அல்லது குளத்தில் விட்டு விட்டு மீதியை காகங்களுக்கு பரிமாறுவார்கள். இதை உண்ண வரும் காகங்கள் பலிக் காகங்கள் எனப்படுகின்றன. சாதம் பரிமாறப்பட்ட பிறகு ஈரக் கைகளுடன் கை தட்டுவார்கள். இந்த விசேஷமான ஒலிக்கு பழகிப் போன காகங்கள் சாதம் உண்ண வரும். அவை பலி ஏற்க வரும் பித்ருக்கள் (மூதாதையர்கள்) என்று ஐதீகம்.
பெயர்கள் - போலீஸ் நடவடிக்கையில் கொல்லப்பட்ட கம்யூனிஸ்டு தீவிரவாத இளைஞர்கள்
***
தமிழில்: ஜெயமோகன்
(தற்கால மலையாள கவிதைகள் தொகுப்பிலிருந்து)
கே. சச்சிதானந்தன் தமிழ் விக்கி பக்கம்
***
0 comments:
Post a Comment