உன்னத சங்கீதம்
பாடல் 1: தலைவி கூற்று
தம் வாயின் முத்தங்களால்
அவர் என்னை முத்தமிடுக!
ஆம், உனது காதல்
திராட்சை ரசத்தினும் இனிது!
உனது தேகத்தின் நறுமணம்
இனிமையானது;
உனது பெயரோ உன் வாசனையைவிட
மிகுதியாய்ப் பரவியுள்ளது;
எனவே இளம் பெண்கள் உன்மேல்
காதல் கொள்கின்றனர்.
உன்னோடு என்னைக்
கூட்டிச் செல்,
நாம் ஓடிவிடுவோம்;
அரசே என்னை உன் அறைக்குள்
அழைத்துச் செல்!
நாம் களிகூர்வோம்,
நான் உன்னில் களியாட்டமிடுகிறேன்;
திராட்சை ரசத்தினும் மேலானது
உன் காதல்,
திராட்சை ரசத்தினும் தூயது
உன்னுடைய அன்பு !
***
பாடல் 4: தலைவன் தலைவி உரையாடல்
தலைவன்:
என் அன்பே, பார்வோன்
தேர்ப்படை நடுவே உலவும்
பெண்புரவிக்கு உன்னை ஒப்பிடுவேன்.
உன் கன்னங்கள் குழையணிகளால்
அழகு கொள்கின்றன,
கழுத்து மணிச்சரங்களால்
எழில் பெறுகின்றன.
பொன் வளையல்கள்
உனக்காய் செய்திடுவேன்
வெள்ளி வளையங்களை
அதில் கோர்த்திடுவேன்
தலைவி:
என் அரசர் தன் மஞ்சத்தில்
இருக்கையில்
என் உடலின்
நறுமணம் நிறைத்திடுக;
என் அன்பர்
வெள்ளைப்போளத்தின் 1
செண்டு போல்
என் மார்பிடையே தங்கிடுவார்.
என் காதலர் எனக்கு
மருதாணி மலர்க்கொத்து
எங்கேதி தோட்டங்களில் உள்ள
மருதாணி மலர்!
***
உன்னத சங்கீதம் (சாலமோன் பாடல்கள், இனிமைமிகு பாடல்கள், Song of Songs) என பழைய ஏற்பாட்டில் உள்ள 28 பாடல்கள் ஒரு தொகை நூல் எனக் கருதப்படுகிறது. காதல் கவிதைகளின் தொகுப்பு. யூத மதத்தின் நம்பிக்கை படி இந்நூலின் ஆசிரியர் சாலமோன். ஆனால் சாலமோன் காலத்திற்கு முற்பட்ட/பிற்பட்ட பாடல்களும் இதில் இடம்பெற்றுள்ளன என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
இப்பாடல்கள் கடவுளுக்கும் இஸ்ரேல் மக்களுக்கும் இடையேயுள்ள அன்பை வர்ணிப்பவை என்றும், பாலஸ்தீன் நாட்டு மக்களின் திருமணத்தின் போது பாடப்பட்டது என்றும் கருதுகின்றனர். ஆனால் ஆண், பெண் இருவருக்கும் இடையே தோன்று காதலின் வெளிப்பாடே இக்காதல் கவிதைகள் என்பதே பொதுவான ஏற்பு.
விவிலியத்தின் பண்பாட்டு பின்னணியை விளக்கும் நூலான NIV Cultural Backgrounds Study Bible இதன் இலக்கிய தன்மையை கூறுமிடத்தில் இவை தலைவன், தலைவி, தலைவியின் தோழிகள் எனப் பலக்குரலில் பாடப்பெற்ற காதல் கவிதைகள். குறிப்பாக ஆண், பெண் அன்பை சொல்லும் காதல் கவிதைகள். இப்பாடல்கள் வெவ்வேறு குரலில் தொடர்பற்ற கவிதைகளாக இருந்தாலும் இவை ஒன்றிணைந்து வாழ்வை, காதல், திருமணத்தை பாடுபவை. ஒட்டுமொத்தமாக இவை காதலை, காமத்தை அவற்றின் மகத்துவத்தை பாடும் தொகுப்பு என்கின்றனர்.
மேலும் இவற்றின் காலத்தைப் பற்றி குறிப்பிடும் போது இவை சாலமோன் பாடல்கள் எனத் தொகுக்கப்பட்டிருந்தாலும் இவை அவற்றுக்கும் காலத்தால் முற்பட்டது. Postexilic (பாபிலோனியாவிலிருந்து வெளியேற்றப்பட்ட பின் எழுந்த யூத வரலாற்றுக் காலம் (பொ.யு.மு - 536)) காலத்தை சேர்ந்தது எனக் கணிக்கின்றனர். இப்பாடல்களிலுள்ள சில வார்த்தைகள் விவிலிய காலத்தை சேர்ந்தது என்பதால் இவற்றை சாலமோன் பாடல்கள் எனப் பொதுமைப்படுத்துகின்றனர். ஆனால் இவை வாய்மொழி மரபில் முன்னரே பாடப்பட்ட பாடல்களாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
***
இப்பதிவில் உன்னத சங்கீதம் பற்றிய சிறு வரலாற்று குறிப்பும், இரண்டு உதாரணப் பாடல்களும் இடம்பெற்றுள்ளன. உன்னத சங்கீதம் பற்றிய ரசனை குறிப்பு, அவற்றுக்கு இணையாக உள்ள எகிப்திய காதல் பாடல்கள், மெசபட்டோமிய காதல் பாடல்கள் பற்றிய குறிப்பு அடுத்த இதழில் இடம்பெறும்.
***
0 comments:
Post a Comment