மரபுக்கவிதையில் ஆன்மிக மேன்மையும் யதார்த்தத்தை வார்த்தை சிறப்பாக வடித்தலும் முக்கியமான விஷயங்களாக இருந்தன. இதை ஓரளவு சுற்றி வளைத்தும் அணி அலங்காரங்களுடைய உதவியுடனும் ஓரளவுக்கு கட்டுப்பாடான செய்யுள் விதிகளுடனும் செய்து பார்த்தார்கள். திருமூலரில், காரைக்கால் அம்மையாரில், மாணிக்கவாசகரில், சில ஆழ்வார்களில், கம்பனில் இது உச்சகட்டத்தை தமிழ் பற்றிய வரையில் எட்டியது.
வேறு ஒரு மரபாக, ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்பதும் ‘யாயும், யாயும் யாராகியரோ’ என்பதும் சாத்தியமாக இருந்தது. இதில் ஆன்மிகம் என்று தொடராவிட்டாலும் மனித உறவுகள், நடப்பு என்று ஒரு உச்சத்தை எட்ட முடிந்தது. குறுந்தொகையில் ஒரு கவிதையில் ‘இந்தப் பெண் என்ன இப்படி என்னோடு இருக்கும்போது கூத்தடிக்கிறாள்! வீட்டுக்குத் திரும்பிவிட்டாலோ தாயார் முன் எதுவும் அறியாத சாதுவான பெண் மாதிரி இருக்கிறாளே’ என்று கேட்பதும் திருக்குறளில் ‘விவசாயம் செய்து பிழைப்பவர்களே, பிழைப்பவர்கள் - அவர்கள் முன்செல்ல மற்றவர்கள் பின்செல்கிறார்கள்', ‘பொருளீட்டுவது, சேர்ப்பது நியாயமான வழியில் செய்தால் இம்மைக்கும் மறுமைக்கும் பயன் தரும்’ என்று சொல்வதும் முடிகிறது.
இன்னொரு அளவில் பார்க்கும்போது, ‘நட்ட கல்லும் பேசுமோ நாதனுள்ளிருக்கையில்’ என்றும் ‘பணத்தி போகம் வேறதோ பரத்தி போகம் வேறதோ’ என்றும் கேட்க முடிகிறது. அல்லது ‘சிதம்பரம் போகாமலிருப்பேனோ’ என்று பாட முடிகிறது. அல்லது சிலப்பதிகார ஆசிரியர் சொல்லுகிற மாதிரி நேரடியாக ‘தெய்வந் தொழாதவர்களுடன் இணங்க வேண்டாம்’ என்று சொல்ல முடிகிறது, ‘கோவிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்’ என்றும் ஓரஞ்சொன்னார் வீட்டிலே ‘பாதாள மூலி படருமே’ என்றும் சொல்ல முடிந்தது.
இதெல்லாம் இன்றும் சாத்தியம்தான். ஆனால் ஒருதரம் சொல்லப்பட்டதை, செய்யப்பட்ட கவிதையை திருப்பி செய்வதில் சுவாரசியம் தட்டுவதில்லை. வாசகர்கள், கவி இருவருக்குமே சுவாரசியம் தட்டுவதில்லை. முதலில் வாசகர்களுக்கு அலுத்துவிடுகிறது. ‘வளைந்தது வில்லு, விளைந்தது பூசல் முப்புரமும் தீ பெற’ என்று மாணிக்கவாசகர் பாடினால் பாந்தமாக இருக்கும். நாம் இன்று பாடினால் வளைந்த வில்லிலோ, ஈசன் சக்தியிலோ, திரிபுரம் என்று ஒன்று இருந்ததிலோ நமக்குப் போதுமான நம்பிக்கையில்லாத காரணத்தினால் வார்த்தைகளில் வேகம் வருவதில்லை; வாசகர்களை எட்டுவதில்லை.
இன்று வேறு விஷயங்களைப் பற்றி வேறு வார்த்தைகளில் கவிதை சொல்ல வேண்டியதாக இருக்கிறது. கவிதையில் உருப்பெறுகிற விஷயம் மட்டுமல்ல - கவிதை பற்றிய நமது நினைப்புகளும் வாழ்க்கை பற்றிய நமது நினைப்புகள், சிந்தனைகள், லட்சியங்கள், ஏக்கங்கள் எல்லாம் வேறு அளவில் அமைய வேண்டியதாக இருக்கிறது. அன்று உண்மை என்று ஒன்றில் நம்பிக்கை வைக்க முடிந்தது. இன்று உண்மை என்றால் எது என்பது பற்றியே குழப்பமாக இருக்கிறது. நான் உண்மை என்று என்னளவில் சொல்வதைப் பலரும் உண்மையென்று ஏற்க மறுக்கிறார்கள். உண்மைக்கே பல கால்கள், பல முகங்கள் முளைத்துவிட்ட மாதிரி இருக்கிறது.
அதேபோல தருமம், நீதி என்று சொன்னாலும் எது தருமம், எது நீதி என்பது நிச்சயமாக தெரியவில்லை. தெரியவில்லை என்பதுடன், அப்படித்தெரியாமல் இருப்பதுதான் சரி என்றும் ஒரு நினைப்பு தோன்றி வளர்ந்துகொண்டிருக்கிறது. அப்போதெல்லாம் இந்தியாவில் தருமம் என்றால் ஒவ்வொரு குலத்துக்கும் ஒரு தர்மம் இருப்பதாகக் கருதப்பட்டது. பார்ப்பனர்களுக்கு ஒன்று; க்ஷத்திரியர்களுக்கு ஒன்று என்று. இன்று வேறு வகையிலான தருமங்கள் ஆட்சி செலுத்துகின்றன. ஆட்சி செலுத்துபவன் கட்சியில் இருந்தால் உங்களுக்கு ஒரு தர்மம் - அது காங்கிரஸ்காரனானாலும், திராவிடக்காரனானாலும் சரி. எதிர்க்கட்சியிலிருப்பவனுக்கு வேறு ஒரு தர்மம் என்று ஆகிவிட்டது. நியாயமான வழிகளில் எத்தனை பாடுபட்டாலும் பொருளாதார முன்னேற்றம் ஏற்படாது என்பதைத் தனிமனிதர்கள் உணர்ந்து, அதற்கேற்ப அகப்பட்டுக்கொள்ளாத வகையில் குறுக்குவழி தேடுகிறார்கள்.
கல்வி என்பதன் லட்சியம் கல்வி பெறுபவனை மனிதனாக நடக்கச் செய்ய வேண்டுவதாக இருந்தது. இப்போது வாழ்க்கையில் எப்படி முன்னேறுவது என்று அடித்தளத்தில் உத்தியோக கல்வியில் தொடங்கி மேல்மட்டத்தில் எம். எஸ். உதயமூர்த்தி தரும் கல்வி வரையில் கல்வியின் லட்சியம் மாறிவிட்டது. தைரியம் வேண்டும், தன்னம்பிக்கை வேண்டும் என்கிற உத்தேசங்கள் தவறான மனிதர்களிடம் பலிப்பது போல இருக்கிற சில நல்லவர்களிடம் பலிப்பதில்லை. யாரும் ஆட்சி நடத்திவிட முடிகிறது. யார் யாருக்கெல்லாமோ நன்றாக தங்களால் ஆட்சி நடத்திவிட முடியும் என்கிற தன்னம்பிக்கை அபாரமாக இருக்கிறது. இது இன்றைய உலகம்.
இன்றைய உலகத்தில் அறிவுத்துறைகள் பல ஏற்பட்டிருக்கின்றன. புதுசு புதுசாக தோன்றிக்கொண்டிருக்கின்றன. மரம் நடுவது ஒரு கல்வித்துறை. மரங்கள் வெட்டாதிருப்பது ஒன்று. குடிசைகள் கட்டுவது ஒன்று. சிமெண்டில் கட்டிடங்கள் கட்டுவது வேறு ஒன்று. புலன்கள் மூலம் அறிகிற விஷயங்களை தவிர மனத்தால் அறிகிற விஷயங்கள் பற்றியும் துறைகள் பலப்பலவாகப் பெருகிவிட்டன. பௌராணிகர்கள் காலத்தில் மடமடவென்று புராணங்களை உற்பத்தி செய்தார்கள். அதுபற்றி இப்போது புதுத்துறை உருவாகிவிட்டது. மனித மனத்துக்கு ஏன் புராணங்கள், புராணக்கதைகள் தேவைப்படுகின்றன என்று சொல்வதுடன் இந்தியாவில் இந்த காலக்கட்டத்தில் இந்த மாதிரிதான் புராணங்கள் உற்பத்தியாகும் என்று சொல்ல ஆணித்தரமாக முன்வருகிறார்கள். அப்படி புராணங்கள் உற்பத்தியாகாமல் போகலாம். ஆனால் அப்படிப்பட்ட புராணங்கள் ஏன் உற்பத்தியாகவில்லை என்று கண்டுபிடிப்பதும் ஒரு கல்வித்துறையாகிவிடுகிறது.
பழமை பற்றிய நம் சிந்தனைகள் பலவிதமான உருமாற்றங்களை அடைந்திருக்கின்றன. கெளசிகர் என்கிற முன்னோனும் இடையில் தாத்தாவும்தான் தெரியும் நமது முன்னோர்களுக்கு. இப்போது யாருக்குப் பின் யார் என்று இரண்டாயிரம் ஆண்டுப் பட்டியல் போடுகிறார்கள். வானத்தை அண்ணாந்து பார்த்தால் நட்சத்திரங்கள், கிரஹங்கள் தெரிவது தெரிகிறது. ஓரளவுக்கு எதை எதை எங்கெங்கே குத்துமதிப்பாக எதிர்பார்க்கலாம் என்பது தெரிந்திருக்கலாம். இப்போது பூகோளப் படம் வரைவதுபோல டெலஸ்கோப் மூலம் பார்த்து வானத்தில் படம் வரைவதும் சாத்தியமாக இருக்கிறது. ஒரு காலத்தில் ஜாதகங்கள் மட்டும் கணிக்கப்பட்டன; இன்று வான சாஸ்திரப் பாடங்களும் நமது தினசரிகளில்கூட வரத் தொடங்கிவிட்டன.
மேலும் பல சாஸ்திரங்கள் - பட்சிகள் பற்றி, மிருகங்கள் பற்றி, நகரங்கள் பற்றி, தொழில்கள் பற்றி, மனிதர்கள் பற்றி, பௌதிகம், ரஸாயனம் என்று பொதுவாக சொன்னதுபோக ஒவ்வொன்றிலும் பெரும் பெரும் பகுதிகள் ஏற்பட்டு செயல்படுகின்றன. ஒவ்வொன்றையும் அறிந்தவர்கள் என்று பலர் இருக்கிறார்கள். எல்லாவற்றையும் சேர்ந்தாற்போல ஒட்டுமொத்தமாக அறிந்தவர்கள் யாரும் இல்லை என்று சொல்லுகிற மாதிரி இருக்கிறது. முன்னர் டாக்டர்களிடம் போவோம். இப்போது ஒவ்வொரு வியாதிக்கும் ஐந்தாறு ஸ்பெஷலிஸ்டுகளிடம் போக வேண்டியதாக இருக்கிறது.
ரேடியோ நம் வீட்டில் அலறுகிறது. டெலிவிஷன் நாட்டுப் பெரிய மனிதர்களையும் நாட்டு நடப்புகளையும் நம் வீட்டிலேயே கொண்டுவந்து காட்டுகிறது. காய்கறிகள் வாங்கி வந்தால் குளிர்சாதனப்பெட்டியில் ஒரு வாரம் வைத்திருக்க முடிகிறது. ஒரு ஸ்விச்சை தட்டினால் என்னவெல்லாமோ விளைகிறது. கம்ப்யூட்டர்களை வைத்துக்கொண்டு குழந்தைகள் விளையாடுகிறார்கள். இதை, விஞ்ஞான யுகம் பல பழக்கவழக்கங்களை மாற்றியிருக்கிறது என்று சொல்கிறார்கள். இந்தியாவில், முக்கியமாகத் தமிழர்களிடையே விஞ்ஞான அறிவு என்பது ஆழமாகப் பரவவில்லை என்று சொன்னாலும் பல புது சாதனங்கள் உபயோகத்துக்கு வந்துவிட்டன. அவற்றினால் எல்லாம் வாழ்க்கைப் போக்குகள் பெரும் அளவுக்கு மாறியிருக்கின்றன என்றுதான் சொல்ல வேண்டியதாக இருக்கிறது.
பலவிதமான கட்டுப்பாடுகள் தளர்ந்திருக்கின்றன இன்றைய நம் வாழ்க்கையில். ஜாதிக் கட்டுப்பாடு முன்னெல்லாம் போல கெடுபிடியாக இல்லை. மதக் கட்டுப்பாடுகள் அடியோடு தளர்ந்துவிட்டன. மதப்பிடிப்பு என்பது நல்லதோ, கெடுதியோ அது முற்றும் தளர்ந்துவிட்டது. குடும்ப உறவுமுறைகள் மாறிக்கொண்டு வருகின்றன. மிகவும் அடிப்படையான தாயன்பு. சகோதர வாஞ்சை என்பதெல்லாம்கூடப் பழைய கதைகளில் காண்கிற விஷயங்களாகப் போகின்றன. சொத்துக்காக தாயார் மேல் கேஸ் போடுபவர்கள் இருக்கிறார்கள். எண்பது வயது தகப்பனை முப்பது வயதுப் பையன், “நீ நூறு வயது வரையில் உயிருடன் இருந்தால் நான் என் சொத்துக்களை எப்போது அனுபவிப்பது” என்று கேட்கிறான். கணவன் அதட்டினான் என்றும், கொடுமைப்படுத்தினான் என்றும் கேஸ் போட்டு விவாகரத்துக் கோர முடிகிறது. அதேசமயம் வரதட்சணைகூடக் கேட்டு பெண்களை கிரஸின் ஆயில் கொட்டி எரிக்கிற வகை ஜென்மங்களும் இருக்கின்றன. படித்துவிட்டு பெண்கள் உரிமை பேசி வேலைக்குப்போகும் காலம் இது. நான் திருமணம் செய்துகொண்டு ஒருவனுக்கு அடிமைப்பட விரும்பவில்லை என்று சில பெண்கள் கல்யாணமே செய்துகொள்ளாமல் இருக்கத் துணிகிற காலம் இது. வாழ்க்கை பலவிதங்களில் புதுப்புது விதமான சிக்கல்களை தோற்றுவிக்கிறது.
இன்று கவிதை செய்கிற கவிஞன் இந்தச் சிக்கல்களையும் வாழ்க்கைப் போக்குகளின் முரண்களையும் விடுவிக்க வேண்டியதில்லை என்றாலும் பிரதிபலிக்க வேண்டியதாகவே இருக்கிறது. சீர், தளை, மாங்கா, புளியங்கா, தேமா, சீமா என்று விரல் விட்டு எண்ணிக்கொண்டு பழைய மாதிரியில் கவிதை செய்வது அவசியம் என்று தோன்றவில்லை. தானாக வந்து விழுகிற உருவத்தில், தினசரி வார்த்தைகளை கொண்டு கவிதை செய்ய முடியும். இன்றைய சிக்கல்களை பிரதிபலிக்க, இந்த மாதிரி ஒரு கட்டற்ற, வாழ்க்கை போன்ற ஒரு கட்டற்ற, இலக்கணம் அறியாத கவிதையினால்தான் முடியும் என்கிற நினைப்பு கவிஞர்களுக்கு ஏற்படுகிறது. மனிதனின் கட்டுகளை அவிழ்த்துவிட்டாகிவிட்டது இப்போது. மனிதன் இன்னமும் சுதந்திரமாக ஆகவில்லை என்றால் அது அவன் குற்றம். மதக்கட்டு, குடும்பக்கட்டு, மரபுக்கட்டு, தருமநியாயக்கட்டு என்று ஒரு கட்டும் இல்லாமல் மனிதன் ஜனநாயக யுகத்தில் வாழுகிறான். தனிமனிதனாக தன் ஆன்ம வளர்ச்சிக்கு இதுதான் வழி என்று அவனுக்குத் தெரிந்துவிட்டது. அதேபோல, இலக்கியம் செய்யும்போது, இலக்கணக்கட்டுகள் எல்லாவற்றையும் மீறி எழுதுவதுதான் செய்யக்கூடிய காரியம் - அதில்தான் பலன் இருக்கும் என்று அவன் நினைக்கிறான். எல்லாவற்றிலும் புரட்சி என்று ஏற்படுத்திக்கொண்டு எழுதுவதில் மட்டும் புரட்சி இல்லாது போனால் என்ன லாபம்? எல்லாவற்றிலும் சுதந்திரமடைந்துவிட்டவன் இலக்கணத்திலிருந்தும் விடுதலை பெற முயற்சிப்பதில் என்ன தவறு? மரபையே தழுவிக்கொண்டு செயல்பட்டு அவசியமான புரட்சி தவிர்க்கிற கவிகள் இன்று எடுபடமாட்டார்கள் என்பது நன்றாகவே தெரிகிறது.
இன்றைய சமுதாயத்தின் அடிப்படைக் கொள்கை தனிமனித சுதந்திரம். எந்தவிதமான தளைகளும் அவனைக் கட்டுப்படுத்த மாட்டா. செய்யுள் தளைகள் மட்டும் ஏன் இப்படி இருக்க, அவனைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று கேட்பது நியாயமான கேள்வி.
சுதந்திரமும் சமுதாயம் என்று ஒரு கட்டுக்கு அடங்கியதுதான் என்று சொன்னால் புதுக்கவிதைக்கும் பழைய கட்டுகள் தவிர்த்த ஒரு புதுக்கட்டுமானம் இருக்கிறது என்றே புதுக்கவிதைக்காரன் கூறமுடியும். அது மொழி என்பது ஏற்படுத்துகிற ஒரு கட்டுமானம். அதற்குட்பட்டு சகலவிதங்களிலும் சுதந்திரமான கவிதை செய்ய புதுக்கவிதைக்காரன் முயலுகிறான். சுப்பிரமணிய பாரதியாரின் ‘காட்சி’யில் தொடங்கி இன்று விக்கிரமாதித்யன், சுகுமாரன் வரையில் மொழிக்கட்டுப்பாடு என்பது ஏற்கப்பட்டு, மற்றபடி அவரவர் இஷ்டப்படி சுதந்திரமாக கவிதை செய்வது மிகவும் சிறப்பாக உருவாகியிருப்பதை காணலாம்.
சில புதுக்கவிதைக்காரர்களின் சிறப்புகளை மட்டும் இங்கு எடுத்துச் சொல்கிறேன்.
ஷண்முகசுப்பையாவின் கவிதைகளில் ஒரு எளிமையும் இன்றைய வாழ்க்கைப்போக்கின் நெளிவுசுளிவுகளைப் புரிந்துகொண்ட மனப்பக்குவமும் மிகச் சிறப்பாக செயல்பட்டன. இரண்டு காட்சிகளை ஒன்றோடொன்று மோதவிட்டு, விஷயத்தைத் தெளிவாக்குவதில் அவர் சமர்த்தர். இப்போது அவர் கவிதைகள் எழுதுவதில்லை என்பது ஒரு குறைதான் என்றாலும், எழுதிய வரையில் சிறப்பான பல புதுக்கவிதைகள் - மறக்க முடியாதவை - எழுதியிருக்கிறார் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
அறுபதுகளில் தொடங்கி இன்னமும் புதுக்கவிதை சிறப்பாக எழுதிக்கொண்டிருப்பவர்களில் நகுலன் என்கிற டி. கே. துரைசாமி முக்கியமானவர். மரபு வழி வந்த ஒரு ஞானமும் அத்தோடு தமிழ் படித்ததனால் ஏற்பட்ட ஒரு லாகவமும் அவருக்கு கைகொடுக்கின்றன. ஓரளவுக்கு ஷண்முகசுப்பையாவைவிட அதிக இலக்கியப்பிரக்ஞையுள்ளவர் இவர் என்று சொன்னாலும் சாதாரணமாக நாம் உபயோகப்படுத்தும் வார்த்தைகளை உபயோகித்து ஒரு முழுமையான வாழ்க்கைப் பார்வையை நமக்கு தருகிறார். நகுலனின் கவிதைகள் பல தளங்களில் சிறப்பெய்தியவையாக இருக்கின்றன. அவருடைய கவிதைகள் எல்லாம் ஒரே நூலாக வெளிவரவேண்டிய அவசியம் இருக்கிறது. நிறையவும் எழுதியிருக்கிறார்; மிகச் சிறப்பான அளவிலும் எழுதியிருக்கிறார்.
மயன் என்பவர் 1938 முதல் புதுக்கவிதை எழுதிக்கொண்டிருக்கிறார். முப்பது ஆண்டுகள் சோதனைகளாக செய்து பார்த்துவிட்டு, ஒரு சித்தாந்த அடிப்படையில் புதுக்கவிதை செய்து பார்க்க முனைந்தவர். இப்போது இவர் கவிதைகள் சோதனை என்கிற கட்டத்தை மீறிக் கவிதைகளாக உருவாகின்றன என்பது தெரிகிறது. அதிகம் இவரைப் பற்றி சொல்ல நான் விரும்பவில்லை. மயன் என்பது என் புனைபெயர்.
அறுபதுகளில் எழுதத் தொடங்கி மிகவும் குறைவாக எழுதி, ஒரு நவீன அறிவியல் சிக்கல் தளத்தில் கவிதை செய்தவர் பசுவய்யா என்கிற சுந்தர ராமசாமி. இவருடைய தனித்துவம் மிகவும் சிறப்பாகத் தெரிகிறது - இவர் ஆரம்பகாலக் கவிதைகளில். ஆனால் இப்போது, முக்கியமாக ‘ஜே. ஜே. சில குறிப்புக’ளில் தொடங்கி கவிதைகளிலும் இவர் ஒரு போலி அறிவுத்தளத்தில் நின்றுகொண்டிருக்கிறார் என்று தோன்றுகிறது.
எழுபதுகளில் எழுதத் தொடங்கி ஓரளவுக்கு பொதுவாக நன்கு அறியப்பட்டவர் என்று ஞானக்கூத்தன் என்பவரைச் சொல்ல வேண்டும். இவருடைய கவிதைகளில் தெளிவான அளவில் ஒரு சமுதாயப் பார்வை இருப்பது இவர் கவிதைகளில் பரவலாகத் தெரிவதற்கு உபயோகப்பட்டிருக்கிறது. ஒரு சுய நிச்சயமும் பார்வையும் சொல்லும் முறையில் ஒரு தனித்துவமும் இவர் சிறப்புகள்.
இந்த ஐவரையும் புதுக்கவிதையில் கிட்டத்தட்ட மேஜர் குரல்களாக (பெருங்குரல்களாக) ஏற்றுக்கொள்ளலாம். வேறு சிலர் வேறு வகைகளில் புதுக்கவிதைக்கு உரம் சேர்த்திருக்கிறார்கள். ந. பிச்சமூர்த்தி முப்பதுகளின் ஆரம்பத்திலேயே கவிதை எழுத ஆரம்பித்தவர். பழங்கவிதை போக்கும் புதுக்கவிதை உருவமும் இவர் கவிதைகளின் சிறப்பு. புதுக்கவிதைக்கு வேண்டிய புது காலத்துக்கேற்ற பார்வை இவருக்கு இல்லாதது இவர் கவிதையை முழுவதும் புதுக்கவிதையாக ஏற்றுக்கொள்ள இயலாமல் தடுக்கிறது. டி. எஸ். வேணுகோபாலன், வைதீஸ்வரன், சி. மணி போன்றவர்கள் தனிப்பட்ட அளவில் சில நல்ல புதுக்கவிதைகள் எழுதியிருக்கிறார்கள். சி. மணி முக்கியமாக ஆங்கிலக் கவி டி. எஸ். எலியட்டின் தாக்கம் மிக்கவர். அவர் கவிதைகளில் சில தேறும் என்றாலும் நகுலனிலோ, ஷண்முகசுப்பையாவிலோ, மயனிலோ, ஞானக்கூத்தனிலோ தொடர்ந்து சொல்லப்பட்ட ஒரு பூரணமான பார்வை தொனிக்கவில்லை. இவரும் எழுதுவதை நிறுத்திவிட்டதாகத் தெரிகிறது.
வானம்பாடிகள், சினிமாக்காரர்கள் என்று புதுக்கவிதை வளம் பெற்ற, பெறாத போக்கு பொதுவாக எல்லோருக்கும் தெரியும். அதனால் அதையெல்லாம் பற்றி நான் எதுவும் இங்கு கூறவில்லை. கோஷ்டிகள், குழுக்கள், பத்திரிகை சாதனங்கள் என்கிற உதவியில்லாமலே இலக்கியம் வளர சக்தி பெற்றிருக்கிறது. அதனால் குழுக்கள், கோஷ்டிகள், சாதனங்கள் முக்கியமல்ல. யார் எந்தக் கோஷ்டியைச் சேர்ந்தவர் என்பதும் முக்கியமில்லை.
புதுக்கவிதை செய்தவர்களில் அறுபதுகளிலிருந்தே செயல்பட்டு வருபவர் தருமு சிவராமு. இவர் கவிதைகளில் ஒரு சிறப்பான அறிவுத்தளமும் இவர் சொற்களில் தனித்துவமும் இருக்கிறது. இரண்டு கவிதைத் தொகுப்புகள் வந்துள்ளன. இவரையும் தமிழ்ப் புதுக்கவிதை மரபை ஏற்படுத்தித் தந்தவர் என்று ஏற்றுக்கொண்டு அறுவர் அமைத்து உற்சாகம் தந்ததாக புதுக்கவிதையை கணிக்கலாம். ஷண்முகசுப்பையா, நகுலன், பசுவய்யா, மயன், தருமு சிவராமு, ஞானக்கூத்தன் என்று இந்த அறுவருடைய கவிதைகள் பற்றியும் விரிவான விமர்சனங்கள் தேவை. அதற்கு வேண்டிய அளவில் அவர்கள் கவிதைகள் அமைந்திருக்கின்றன.
இவர்களைத் தொடர்ந்து – காலத்தால்தான் இவர்களில் யாரும் குருபீடம் வகிப்பவர்களாகவோ, அப்படி வகிக்க வேண்டும் என்று விரும்புபவர்களாகவோ எனக்குத் தோன்றவில்லை - இருபது, முப்பது கவிகள் இன்று புதுக்கவிதை எழுதிக்கொண்டிருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. காலஞ்சென்ற ஆத்மாநாம் தவிர கலாப்ரியா, ராஜகோபாலன், ஆனந்த், தேவதேவன், தேவதச்சன். சுகுமாரன், சமயவேல், விக்ரமாதித்யன் போன்றவர்களின் கவிதைகளும் பெயர்களும் உடனடியாக எனக்கு நினைவுக்கு வருகின்றன. இன்னும் பத்திருபது பேர் அவரவர் உசிதப்படி சொல்லலாம் என்றே தோன்றுகிறது.
இப்படியாகப் புதுக்கவிதை என்பது பொது ஜனரஞ்சக பத்திரிகை, சினிமா, இயக்கங்கள், கோஷங்கள் இவற்றின் உதவியில்லாமல் ஒரு சக்திவாய்ந்த இயக்கமாக உருப்பெற்று செயல்பட்டு வருகிறது. புதுக் கவிதை என்று இதை தனித்து சொல்லவேண்டிய காலம் கடந்துவிட்டது என்றே எனக்குத் தோன்றுகிறது. இதுவும் கவிதையாக இரண்டாயிரம் ஆண்டு தமிழ்க்கவிதையுடன் இடம்பெற வேண்டிய காலம் வந்துவிட்டது என்றே கருதுகிறேன். இந்த புதுக்கவிதையின் சிறப்பான அம்சங்கள் எல்லாம் பழங்கவிதைக்கும் உள்ளவைதான். கவிதையாக இவை சிறப்புப் பெறுகின்றன என்பதுதான் இவற்றின் பலம்.
ஆர்ப்பாட்டங்கள், தடாலடி, சினிமா விளம்பரம், பத்திரிகை சாதன பலம் என்று பலவற்றை உபயோகித்து கவியல்லாதவர்களும் கவிகளாக இன்று வேஷம் போடுகிறார்கள் என்பதும் அப்படிப்பட்டவர்களுக்கு ததிங்கிணத்தோம், ஆமாம் சாமி பாடுபவர்கள் பேராசிரியர்கள், விமரிசகர்கள் பலர் இருக்கிறார்கள் என்பதும் தெரிகிறது. இலக்கியத்தில் ஒரு நியதி என்னவென்றால் எத்தனைதான் சப்பைக்கட்டுக் கட்டித் தூக்கி நிறுத்தி வைத்தாலும் இடுப்பொடிந்தது, தெம்பில்லாதது ஒடிந்து விழுந்துவிடும். நான் சொல்வதற்காகவோ, பிறர் சொல்வதற்காகவோ மட்டும் ஒரு நூல் நிலைத்துவிடாது. விமரிசனபூர்வமாக எத்தனையோ அழகுகளைக் காண்பதாக சொன்னாலும் அழகில்லாதவை அழகில்லாதவையாகவேதான் இருக்கும் - தொடரும். சினிமா, பத்திரிகை சாதனங்கள் மூலம் தங்களைப் பெரும் புள்ளிகளாக பாவித்துகொள்கிற புதுக்கவிதைக்காரர்களுக்கும் இது பொருந்தும். அதனால் போலிக்கவிகளை விட்டுவிட்டு நிஜமான கவிகளப் பார்க்கத் தெரிந்துகொள்வது அவசியம். இன்று அதை இருநூறு, முன்னூறு வாசகர்களே செய்துகொள்கிறார்கள் என்றாலும் போதும் என்றுதான் சொல்ல வேண்டும்.
கவிதையில் படிமங்கள்கூட செயல்படாத காலம் வரவேண்டும். வார்த்தைகளே படிமங்களாகச் செயல்படுகின்றபோது, அதற்கப்பால் படிமங்கள், அணி அலங்காரங்கள், அடைமொழிகள் என்பதன் உதவியில்லாமல் தினசரி பேசுகிற வார்த்தைகளைக்கொண்டு இன்றையப் பேச்சு சந்தத்தில் வாழ்க்கைச் சிக்கல்களை பிரதிபலிக்கிற அளவில் கவிதை சிருஷ்டியாவது முக்கியம்.
இதைத்தொடர்ந்து புதுக்கவிதைக்காரர்கள் சிறு சிறு கவிதைகள் எழுதுவதுடன் திருப்தியடைந்து நின்றுவிடாமல் நீளக் கவிதைகளும் எழுதிப்பழக வேண்டும். இதைச் சிலபேர் செய்து பார்த்திருக்கிறார்கள்.
இதையும் தொடர்ந்து புதுக்கவிதை முறைகளை இன்று நாடகங்கள் படைக்கவும் உபயோகித்துப் பார்க்கலாம். புதுக்கவிதை பேச்சு சந்தத்தை உபயோகிப்பதால் இது நாடகங்களின் பேச்சுப்போக்குக்கு மிகவும் சிறப்பாக உதவும் என்றே எனக்குத் தோன்றுகிறது.
- ‘கலை நுட்பங்கள்’, 1988
0 comments:
Post a Comment