சக்கரம் மாற்றுதல்
நான் மைல்கல் மேல் அமந்திருக்கிறேன்
ஓட்டுநர் சக்கரத்தை கழற்றி மாற்றிக்கொண்டிருக்கிறார்
நான் கிளம்பி வந்த இடத்தில் இருக்க விரும்பவில்லை
செல்லுமிடத்திற்கு போகவும் பிடிக்கவில்லை
ஆனாலும் சக்கரம் மாற்றுவதை
ஏன் அத்தனை பொறுமையிழந்து பார்த்துக்கொண்டிருக்கிறேன்?
-பெர்டோல்ட் பிரெக்ட்
இந்தக் கவிதை எழுப்பும் அதிர்வலைகள் பெரியது. சலிப்பில் ஓர் ஆர்வம் தோய்ந்துவிடாதா எனும் ஏக்கம். இந்தக் கவிதையை விளக்குவது கடினம்.
கல்யாண்ஜியின் "காற்றைக் கேட்கிறவன்" தொகுப்பில் ஒரு கவிதை :
வேறு எப்படியும் சொல்ல முடியாது.
பின் வீடு என்றுதான் குறிப்பிட முடியும்.
எங்கள் வீட்டிற்கும் அந்த வீட்டிற்கும் இடையில்
ஒரு தோப்பு இருக்கிறது.
அது அவர்களுடையதா?
அவர்களே யார் என்று தெரியாதே.
எப்போதாவது மாடி அறை ஒன்றில் விளக்கெரியும்.
தோப்புக்கு ஊடாக
ஒரு மங்கலான சன்னல் தென்படும்.
இன்று பின் வீட்டின் எல்லா அறைகளிலும்
விளக்கெரிகிறது.
தோப்பின் எல்லா இலை விளிம்புகளிலும்
வெளிச்சம் தடவப்பட்டு இருக்கிறது.
அங்கு என்ன நடக்கிறது என்பதை
யூகிக்க முடியவில்லை.
நான் சொல்லமுடியாத
சந்தோஷத்தில் இருக்கிறேன்.
சந்தோஷம் என்பது
எல்லா விளக்குகளும் எரிவது.
நான் சொல்ல முடியாத சந்தோஷத்தில் இருக்கிறேன் என்றதும் ஒரு பெரும் நிறைவை கவிதை நமக்கு கடத்திவிடுகிறது. மேலே சொன்ன பிரெக்டின் கவிதைக்கும் கல்யாண்ஜியின் இந்தக் கவிதைக்கும் சில ஒற்றுமையும், பல வேற்றுமையும் உள்ளது. கிட்டத்தட்ட துலக்கமில்லாத நிலைதான் இரு கவிதைகளிலும் அடிப்படையாக முதலில் மேலெழுகிறது. வந்த இடமும் பிடிக்கவில்லை செல்லுகிற இடமும் பிடிக்கவில்லை என்பது விளக்கப்படவில்லை. அது ஒரு துலங்காத தருணம். அதுவே கவிதையை மர்மப்படுத்துகிறது. அதே போல கல்யாண்ஜியின் கவிதையில் விளக்கப்படுவது கவிதையின் ஒளியாக அமைகிறது. எல்லாம் விளக்கியும் விளங்காத ஒன்றை கவிதையில் அப்படியே விட்டுவிடுவதே கல்யாண்ஜியின் கவிதையை சிறந்த கவிதையாக்குகிறது. கல்யாண்ஜியின் இந்தக் கவிதையை நாமும் விளக்குவது கடினம். வாசிக்கும்போது நாம் உணரும் ஒன்று பெரும் அனுபவத்தை நமக்கு எளிதாகக் கடத்துகிறது.
"காற்றைக் கேட்கிறவன்" கல்யாண்ஜியின் 19ஆவது கவிதைத் தொகுப்பு. கல்யாண்ஜியின் கவிதைகளில் மணப்பது அதே பழைய மணம். ஆனால் மணம் எப்போதும் பழையதாவதில்லை, அது வீசும் தருணத்தில் புதியதாகிறது என்பதே கல்யாண்ஜியின் கவிதைகளை புதுமையாக்குகிறது.
அது ஓர் எளிய காரியம்.
கருகருத்த நேரத்தில்
தெரு விளக்கு எரிவது.
விடிந்தும் விடியாத பொழுதில்
தெருவிளக்கு அணைவது.
சில நாட்களில் அபூர்வமாக
வெயில் வந்த பிறகும்
அணைக்கப் படாதிருப்பது.
இந்த எளிய காரியத்தைச்
செய்கிற மந்திரவாதியை
ஒரே ஒரு முறை பார்த்தேன்.
பழைய சைக்கிளில் போகிற
கடவுள் மாதிரி இருந்தார்.
பழைய சைக்கிளில் போகிற கடவுள்கள் அவருக்கு காட்சி தருகிறார்கள். காற்றைக் கேட்கிறவனில் எனக்குப் பிடித்த கவிதைகளில் இதுவும் ஒன்று.
ஜனநாதனின் "இயற்கை" என் விருப்பப் படம். அதில் ஒரு இடம் வரும். முன்னாள் காதலனை நினைத்து மருகும் காதலியிடம் ஒருதலைக் காதலன் சொல்லுவான் : "அவன் (முன்னாள் காதலன்) திரும்பி வந்தாலும் நான் உன்ன காதலிச்சது காதலிச்சது தான் அத யாராலயும் மாத்த முடியாது". என் நெஞ்சில் இன்னும் பதிந்திருக்கும் இந்தக் காட்சியைக் கல்யாண்ஜியின் கீழ்க்கண்ட கவிதை ஞாபகப்படுத்திப் போனது
கிணற்றில் நீங்கள் போட்ட கல்லையா
பார்க்க நினைக்கிறீர்கள்?
அதை இனி பார்க்க முடியாது.
அது அதன் இடத்தை அடைந்துவிட்டது.
நீங்கள் தண்ணீரைப் பார்ப்பதாக
நினைத்து
தண்ணீரை மட்டும்
பார்த்துக் கொண்டிருந்தால் என்ன?
அதுவும் சலனம் அடங்கிய வட்டத் தண்ணீரை.
தண்ணீருள் அதன் சலனம் என்றுமுள்ள கடந்தகாலம் என்பதே இதில் சலனம் அடங்கிய வட்டத் தண்ணீராகிறது. பெரும் விஷயத்தைக் கவிதை கடத்துகிறது. இதில் இன்னொரு கவிதை,
அதே சோப்புக் கரைசல்.
அதே ஊது குழல்.
அதே மூச்சுக் காற்று.
ஒரே ஒரு குமிழி மட்டும்
தன்னைப் பெரிதாக்கிக்கொண்டே போகிறது.
ததும்பித் தளும்புகிறது.
ஊது குழல் நுனியில் தேன்கூடாகத் தொங்குகிறது.
தன் சுழியத்தை நெளித்து நடனம் இடுகிறது.
முழுக்கொப்புளத்தின் மேல்
வானவில்லை வைக்கிறது.
அப்படியே இருந்து அவதானிக்கிறது.
தனிக்கோளமாகக் காற்றில் நகராமல்
குழல் நுனியில்
தன் கண்ணாடிப் பூவை
தானே பறித்து
தானே சூடிக்
காணாமல் போகிறது.
ஒரு தருணத்தை நிறுத்தி வைத்து அழகாக எடுக்கப்பட்ட புகைப்படம் தான் இந்தக் கவிதை. 'ஊது குழல் நுனியில் தேன்கூடாகத் தொங்குகிறது' என்ற வரி தரும் அனுபவம் மகத்தானது. இத்தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்த கவிதைகளில் இதுவும் ஒன்று.இந்தக் கவிதையில் 17 வரிகளில் கல்யாண்ஜி ஒரு குமிழியைச் சொல்கிறார். 17 வரிக்கும் அவரது குமிழி உடையாமல் நின்றது கவிதையின் பலம். 17 வரி தாண்டியும் அக்குமிழி நம் மனதில் உடைந்தும் உடையாமலும் வானவில்லை வைப்பது கவிதையை நித்தியமானதாக்குகிறது.
இதே போல் தொகுப்பில் இன்னொரு கவிதை. மேற்சொன்ன கவிதையில் குமிழி என்றால் கீழ்வரும் கவிதையில் கண்ணீரின் துளி.
இருட்டோடு இருட்டாக,
இரண்டாம் கதவுக்குப் பின்னால்,
பிசுபிசுத்துத் திரண்டு
எண்ணெய்ச் சொட்டுபோல்
கனத்துத் தொங்குகிறது அம்மாவின் கண்ணீர்.
எங்கிருந்தாவது ஒரு கீற்று
வெளிச்சம் விழுமெனில்
ஒரு கணம்
ஒரே ஒரு கணம்
சுடர்ந்துவிட்டு உதிர்ந்துவிடும்.
அப்புறம் அவள் சேலை நுனியில்
துடைத்துக் கொள்வாள்.
17 வரி குமிழி போல இதில் பன்னிரண்டு வரிக் கண்ணீர். பன்னிரண்டு வரிச் சித்திரம். நெஞ்சில் நிலைத்திடும் எளிய வலுவான காட்சி. வெறும் காட்சி மட்டுமல்ல. பின் கதை, கதாபாத்திரம், சூழல் எல்லாமும் பொதிந்த ஒரு பன்னிரண்டு வரி. இறுதியில் அவள் சேலை நுனியில் எதை துடைக்கிறாள் என்ற கேள்வி கவிதையை வேறொரு இடத்துக்கு எடுத்துச் செல்கிறது. அபாரமான கவிதை. தொகுப்பில் இன்னொரு கவிதை
அந்தக் காட்சியை
ரொம்ப நாட்களுக்குப் பின் பார்க்கிறேன்.
ஒரு சரசரக்கும் சிறிய தண்ணீர் பாட்டிலை
பேருந்து நிறுத்தத்தில் இருந்து எத்திக் கொண்டே
ரேஷன் கடைப் பக்கத்துப் பூவரச மரம் வரை
போகிற பெண்ணிடம்
துக்கம், சந்தோஷம், கோபம் எதுவுமில்லை.
உதைத்துக்கொண்டே போகிற
மிஞ்சி அணிந்த
ஒரே ஒரு வலது கால் பாதம் மட்டும்தான் அவள்.
கல்யாண்ஜியின் தனித்துவங்களில் ஒன்று - ஒன்றில் அனைத்தையும் குவிப்பது. சமீபத்தில் கவிஞர் தேவதச்சனுடன் பேசிக்கொண்டிருந்தபோது அவர், இன்றைய 'சிதறல்களின் காலத்தில்' கல்யாண்ஜி கவிதைகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாகின்றன என்றார். வாசகனை வில்லாளனாக்கும் தகுதி கொண்டவை கல்யாண்ஜியின் கவிதைகள். இந்தக் கவிதையில் வெறும் வலது கால் பாதமாகும் ஒருத்தி வருகிறாள். அதே போல் இன்னொரு கவிதையில் தன் இடது கையை முதன்முதலாகப் பார்க்கும் ஒருவன் வருகிறான். அனைத்தையும் ஒன்றில் குவிக்கும் கல்யாண்ஜியின் கவிதைகள் இந்தத் தலைமுறை வாசகர்களுக்கு அவசியம் தேவையான ஒன்று.
நீண்ட காம்புகள் உடைய பூந்தோட்டம் அது.
பறித்துக்கொண்டே போனேன்.
எல்லாவற்றையும்விட உயரமாக,
தோரணையாக நிமிர்ந்த ஒன்று.
அதற்குச் செலுத்தும் மரியாதையாக
அதே மட்டும் செடியில் விட்டேன்.
தோட்டத்தை விட்டு வெளியேறுகையில்
திரும்பிப் பார்த்தேன்.
அது குனிந்திருந்தது.
இலைகளுக்குள் தன்னை ஒளித்துவைக்க முயன்றது.
தண்டிக்கப்பட்டது போல
பறிக்கப்படாமல் அவமதிக்கப்பட்டது போல.
மிக நல்ல கவிதை. நுண்மையான இடம் இந்தக் கவிதையில் விளக்கப்படவில்லை. நுண்மையாகவே வைக்கப்படுகிறது.
நம் மனதில் வைக்கப்படும் புள்ளிகள் - கோலத்தை நமக்குப் பிடித்தபடி போட்டுக் கொள்ளலாம்.
என்னுடைய காலணிகள்தான்.
வலது இடது மாறிவிட்டது.
பத்தடி தூரம் இராது.
வேறொரு உலகத்துள் போய் ஆயிற்று.
இவ்வளவு நாள்
தெரியாமல் போனது
இவ்வளவு பக்கத்து
வேறொரு உலகை.
கல்யாண்ஜியின் கவிதைகளும் கல்யாண்ஜியின் இந்தக் கவிதை போலவே இவ்வளவு பக்கத்து வேறொரு உலகை நமக்குக் காட்டுவன. ஒன்றில் குவியும் அம்புகள் அவை; ஓவியங்கள்...
***
வண்ணதாசன் தமிழ் விக்கி பக்கம்]
***
***
0 comments:
Post a Comment