SPB
கிராமிய மக்களின் எழுச்சிப் பாடலாக ஒலிக்கவிருந்த ஒன்றுகுறும்புக்கார வாலிபர்களின் துடுக்குப் பாடலானது
பிரிவுத்துயரொலிக்க வேண்டிய ஒன்றோ ஆக்ரோஷமானது
காதல் கவிதையோ ஒப்பாரியானது
சோகப் பாடலோ சமூக அவலம் சொல்லும் உபதேச கீதமானது
தமிழென்று நினைத்தது மலையாளமானது
மலையாளமோ தெலுங்கானது
போபர்ஸ், ரதயாத்திரையின் நிழலில் கழிந்த
1990ஆம் ஆண்டின் அந்த வசந்த காலத்தின்போது
பழைய ஒரு படத்தில்
நீயென்று எண்ணிய உருவம் இளையராஜாவின் உருவமானது.
மனோவோ, ராஜேஷ் கிருஷ்ணனோ
உன்னுடைய குரலில் பாடிய எத்தனையோ பேரையும் நீ என்றே நினைத்திருந்தேன்
உன் குரலிலிருந்து அவர்கள் தங்கள் குரலைக் கண்டடைந்திருக்க வேண்டும்
எனக்கென்று குரல் இல்லை, உன் குரலின் நகல்தான் அது.
ஏதேனும் ஒரு நாள் நான் உன்னுடைய ‘மன்றம் வந்த’ அல்லது ‘இது ஓர் பொன்
மாலை’
அல்லது ‘நகுவா நயனா’ அல்லது ‘நா நிச்சலி’ யை பாடுவேன்
ஏன் இத்தனை பக்திப் பாடல்களை பாடினாய் நீ
ஏன் இத்தனை நல்லவனாக இருந்தாய் நீ
உன்னுடைய உடல் நலம் குறித்த செய்திகளை
சக்தி வாய்ந்த தலைவர்கள் ஏன் மூடி மறைத்தார்கள்
அவர்கள் செய்த கெடுதல்களையெல்லாம் மன்னிப்பதற்கு
நீ பாடிய அனைத்து கானங்களும் சேர்ந்து முயன்றால்கூட முடியாது.
இரண்டு முறை நாம் சந்தித்திருக்க முடியும், முயலவில்லை நான்
ஆனால் ஏழாம் வகுப்பில் படிக்கும் ஒரு சிறுவனின் வாழ்வில்
மரியா அல்லது ஜானியின் பாடல்களை பாடியபடி வந்திராமல் போயிருந்தால்,
பெருமைமிக்க பிரதேசப் பேச்சு வழக்கை
இந்தியல்லாத உச்சரிப்புடன் மாற்றியும் தேற்றியும் நீ பாடாமல் இருந்திருந்தால்
கலைகளின் வர்ணாசிரமம் புரிந்திருக்காது
முன்பின் அறியாத மொழி எழுத்துகளின் நடுவே மூன்று ஆங்கில எழுத்துகளைக்
கொண்ட
அந்த மேக்னா சவுண்ட் கேசட்டை எடுக்காமல் போயிருந்தால்
சுத்த சங்கீதக் காவலர்களின் நடவடிக்கைகளைப் புரிந்துகொண்டிருக்க முடியாது
உன்னுடைய பிரிவுப் பாடல் என்னிடம் கிடையாது
அது தமிழோ தெலுங்கோ இந்தியோ தெரியாது
அது உங்களது ‘நீ கூடு செதிரிந்தி’யாக இருக்கலாம் வேறு ஏதேனும் இருக்கலாம்
ராஜேஷ் மனோ ரகுமான் ராஜா அனைவரும் உனக்கு விடை தந்துவிட்டார்கள்
என்னால் எப்போது சொல்ல முடியும் என்று எனக்குத் தெரியவில்லை
‘ரம்பம்பம் ஆரம்பம்’ பாடல் சோகப் பாடலுக்கு சரியாக வராது
இருந்திருந்தால் அது எப்படிப்பட்ட வழியனுப்புதலாக இருந்திருக்கும்
தேசத்தின் புதிய பாராளுமன்றக் கட்டடத்தின் முன்னால் நின்று
உன்னை அழைத்துப் பாடத் தொடங்குவோம்
‘ரம்பம்பம் ஆரம்பம் ரம்பம்பம் ஆரம்பம்’.
- கிரிராஜ் கிராது (மூலம்: இந்தி)
தமிழில் - எம். கோபாலகிருஷ்ணன்
***
0 comments:
Post a Comment