ஒரு கட்டத்தில் இருவரில் ஒருவரே பணியில் மேலெழுந்து செல்லவேண்டிய கட்டாயம். அந்தப்பெண் எளிதாக அடுத்த நிலைக்கு சென்றுவிட்டாள். பதவி, ஊதியம், மதிப்பு எல்லாம் கூடியது. ஏதோ ஒருகணத்தில் அவன் சரிய ஆரம்பித்தான் நிலைகொள்ள முடியவில்லை. அவள் காதலனைப் பற்றிக்கொள்ள நினைத்து கைதுழாவினாள். அவளுக்கு அவன் தென்படவே இல்லை. அவளது கனவுகள் எல்லாம் சிதறிவிடும் என்ற அச்சம், கூவிக்கரைகிறாள் கண்ணீர் பெருகுகிறது. பதற்றம் அதிகரிக்கின்றது அவளுக்கு அவன் காணாமலே போய்விட்டான். அவள் காலடியில் கிடைக்கும் அவனது உடலை அவள் கவனிக்கவே இல்லை, பலமுறை தழுவிய கரங்கள். இன்னும் அவள் அவனுக்காக தினமும் அழுகிறாள்.
சங்க இலக்கியம் பிரிவை பிரிவாற்றாமையை வெவ்வேறு குரல்களில் பேசிக்கொண்டே இருக்கிறது. பொருள் தேடிச்செல்லும் பிரிவு, போருக்கு செல்பவனின் பிரிவு, பிறபெண்களிடம் சென்றவனால் ஏற்படும் பிரிவு, தொலைநிலத்திலிருந்து காதல் கொள்ள வந்தவன் மீண்டும் வருவானா என்ற ஏக்கமும் பயமும் இவ்வாறெல்லாம்.
சங்க இலக்கணப்படி தலைவன் தலைவி என்ற வழக்கு மட்டுமே இருக்கும் தனிப்பட்ட பெயர்கள் தெரியாது. காப்பியத்தில் கண்ணகி என்றும் மாதவி என்றும் பெயர்கள் தெரியும். மாதவியின் பிரிவை இன்னும் மேற்சென்று இளங்கோவால் சொல்ல முடிகின்றது, ஏனெனில் கோவலனுடனான அவளது காதல்வாழ்வே சிலம்பில் பெரிதும் பேசப்படுகிறது. கண்ணகி மதுரையில் கற்புடைய ஏழு பெண்களை முன்வைத்து வஞ்சினம் உரைக்கிறாள் அவர்களுள் ஆதிமந்தியும் ஒருத்தி.
ஆதிமந்தி சோழ இளவரசியாக கருதப்படுபவள். பொன்னி நதி கொண்டுசென்ற தனது காதலன் ஆட்டனத்தியை மீட்டவள். அவள் பாடியதாக ஒரு செய்யுள் குறுந்தொகையில் உள்ளது.
மள்ளர் குழீஇய விழவி னானும்
மகளிர் தழீஇய துணங்கை யானும்
யாண்டுங் காணேன் மாண்தக் கோனை
யானுமோர் ஆடுகள மகளே என்கைக்
கோடீ ரிலங்குவளை நெகிழ்த்த
பீடுகெழு குரிசிலுமோர் ஆடுகள மகனே
உழவர் நிரம்பிய விழாவிலும்
பெண்களுடன் கைகோர்த்து ஆடும் கூத்திலும்
எங்கும் காணவில்லை தலைவனை
நானும் ஒரு ஆடுகள மகள்தான்
என்கைவளை நெகிழக்காரணமான பெருமைக்குரிய
அவனும் ஆடுகள மகன்தான்
ஆதிமந்தி காதலனை விழாவிலும் கூத்திலும் தேடுகிறாள், அவளும் ஆடுகள மகள்தான் ஆனால் அவனைக்கான முடியவில்லை. பிரிவுக்குக்காரணம் தொலைவென்பது மட்டுமல்ல, அருகாமையுமாக இருக்கலாம்.
காஹா சத்த சஈ என்னும் பிராகிருத தொகை நூலொன்றின் பாடல் பின்வருவது ( சுந்தர் காளி, பரிமளம் சுந்தர் மொழிபெயர்ப்பு )
தன் காதலனின் அஸ்திச்சாம்பலை
உடலெல்லாம் ஓயாது பூசுகிறாள் இளம் காபாலிகை
வியர்த்து ஒழுகிறது அவளுக்கு
அஸ்தியின் இன்பம்
முதலிரு வரிகளே மனதை மோதி அறைகின்றன. காபாலிகையும் காதலனை பிரிய விரும்பவில்லை, தன்மேலேயே பூசிக்கொள்கிறாள்.
***
ஆதிமந்தியார் தமிழ் விக்கி பக்கம்
***
0 comments:
Post a Comment