மதார்: நெல்லை இலக்கியத் திருவிழா அமர்வில் மொழிபெயர்ப்பாளர் குளச்சல் முகமது யூசுபிடம் நான் கேட்ட கேள்வி:
"கவிதை மொழிபெயர்ப்பை மட்டும் ஏன் நீங்கள் செய்யவேயில்லை?"
அதற்கு அவர் கூறிய பதில்: "கவிதையை எவராலும் மொழிபெயர்க்கவே இயலாது; அப்படி செய்தால் அந்தக் கவிதை இறந்துவிடும்"
குளச்சலின் இந்தப் பதிலை என்னால் முழுமையாக ஏற்க இயலவில்லை. நான் அவரது பதிலை ஒட்டியும், விலகியும் சிந்தித்தேன். பிறகு தோன்றியது. ஆம் சரிதான்! அவர் சொன்னதில் 50 சதவிகிதம் சரியே! கவிதையை எவராலும் நூறு சதவிகிதம் மொழிபெயர்த்து விட முடியாது. கவிதை மொழிபெயர்ப்பில் உள்ள சிக்கல் ஒன்று அந்தக் கவிஞருக்கேயுரிய மொழி நடை, வட்டார வழக்கு அதை அப்படியே மொழிபெயர்க்கும்போது அதிலுள்ள கவித்துவ அம்சம் வெளியேறிவிடும் வாய்ப்புண்டு. இன்னொன்று அந்தக் கவிதையை அதன் கவிதை உணர்வை சரியாகக் கடத்திவிடும்போது கவிஞரின் நடை, மொழி வழக்கு போன்றவற்றில் முழுமையாகக் கவனத்தைச் செலுத்த இயலாது. இதில் கவிஞர் க.மோகனரங்கனின் மொழிபெயர்ப்பில் வெளிவந்த "நீரின் திறவுகோல்" நூலானது இரண்டாவது வகையில் அமைகிறது. இந்தத் தொகுப்பின் அனைத்துக் கவிதைகளிலும் அந்தக் கவிதை உணர்வின் உயரத்தை ஒரு வாசகராக நாம் அடையலாம். அதுவே இத்தொகுப்பின் வெற்றி. அதே போல மொழிபெயர்ப்பின் பிரச்சினையில் கூறிய முதல் சிக்கல் இத்தொகுப்பில் உள்ளது. இதன் எல்லா கவிதைகளும் ஒரே நபர் எழுதியதைப் போன்ற தோற்றத்தை மொழிநடையில் தரக்கூடியதாக உள்ளது. ஆனால் வேறு வழியில்லை, கவிதையை அப்படித்தான் மொழிபெயர்த்தாக வேண்டியிருக்கிறது. பிரம்மராஜன் மொழிபெயர்த்த "உலகக் கவிதைகள்" தொகுப்பு முக்கியமானது. உலகளாவிய பல்வேறு கவிஞர்களை, கவிதைப் போக்குகளை தமிழுக்கு அறிமுகப்படுத்திய தொகுப்பு அது. மொழிச்சிக்கலும், கவிதையை மூலத்தின் அதே நடையோடு மொழிபெயர்க்கையில் விடுபட்டுச் செல்லும் கவித்துவ உணர்வும் அத்தொகுப்பின் பிரச்சினையாக இருந்தது. அதற்கு நேர் எதிர்த்தன்மையோடு கவிதை அம்சம் கெடாமல் "நீரின் திறவுகோல்" மொழிபெயர்க்கப்பட்டு தமிழ்க் கவிதைக்கு அறிமுகமாகிறது. இந்தத் தொகுப்பின் இன்னொரு தனித்த அம்சம் இதிலுள்ள எல்லாக் கவிதைகளும் மொழிபெயர்ப்பாளரின் தனிப்பட்ட விருப்பத்தின் அடிப்படையில் மொழிபெயர்க்கப்பட்டு தொகுப்பாகி தமிழுக்கு வருகிறது. அதனால் இந்தத் தொகுப்பின் எல்லாக் கவிதைகளும் உச்ச பட்ச கவிதை உணர்வை வாசகருக்குக் கடத்துகிறது. எனவே, இது மிகவும் முக்கியமான தொகுப்பாகிவிடுகிறது.
சில கவிதைகளை வாசிக்கிறேன்..
கே.சச்சிதானந்தன் எழுதிய கவிதை - காந்தியும் கவிதையும்
காந்தியும் கவிதையும்
ஒரு சமயம் காந்தியைக் காணவென
ஒரு மெலிந்துபோன கவிதை
அவருடைய ஆசிரமத்திற்கு வந்தது.
ராமனை எண்ணியபடி ராட்டையில் நூற்றுக்கொண்டிருந்த காந்தி
கதவோரம் காத்திருந்த கவிதையை கவனிக்கவில்லை.
பஜனப் பாடலாக இல்லாமைக்கு
வெட்கமுற்று ஒதுங்கி நின்ற கவிதை
தொண்டையைச் செரும,
நரகத்தையே உற்றுநோக்கிய அந்தக் கண்ணாடி வழியாக
ஓரக் கண்ணால் பார்த்த காந்தி வினவினார்
'எப்போதாவது நூல் நூற்றதுண்டா?
குப்பை வண்டி இழுத்திருக்கிறாயா?
விடியற்காலையில் சமையலறையின்
புகைக்குள் புழுங்கியிருக்கிறாயா?
என்றாவது பட்டினி கிடந்ததுண்டா?'
கவிதை பதிலளித்தது.
'கானகத்தில் ஒரு வேடனின் நாவில் பிறந்தேன்
மீனவனொருவனின் குடிலில் வளர்ந்தேன்
பாடுவதைத் தவிர பிறதொழிலெதுவும் பழகவில்லை.
முன்பு அரண்மனையில் இசைத்துக்கொண்டிருந்தேன்
செழுமையாகப் பொலிவுடனிருந்தேன்.
இப்போது தெருக்களில் அரைவயிற்றோடு அலைகிறேன்'.
'நல்லது' ஓசையெழாது சிரித்தவர்
'அவ்வப்போது சமஸ்கிருதத்தில் பேசும் வழக்கத்தை
நீ விட்டொழிக்க வேண்டும். தவிரவும்
வயல்வெளிக்கு சென்று விவசாயிகள் பேசுவதை கவனி'
ஒரு விதையாக மாறி நிலத்தை அடைந்த கவிதை,
புது மழைக்குப் பிறகு உழுபவர்கள் வந்து
ஈர மண்ணைக் கீழ்மேலாக மாற்றிடக்
காத்துக்கிடந்தது.
ஆனந்த் குமார்: இந்தக் கவிதையை முக்கியமானதாக நான் பார்க்கிறேன். இந்தக் கவிதையில் ஒரு இந்தியப் பின்புலம் உள்ளது. இலட்சியவாதத்தின் பிரதிநிதியாக காந்தி வருகிறார். கவிதையின் அழகியல் அதற்கு எதிர்நிலையில் உள்ளது. இரண்டும் உரையாடும் அழகிய முரண் கவிதையாகிறது.
அதியமான்: கவிதை எப்போதும் இலட்சியவாதத்திற்கு எதிரானது என நீங்கள் கருதுகிறீர்களா?
வே.நி.சூர்யா: இந்த இரண்டு போக்குகளும் எப்போதுமே இருந்து வருபவை.
ஆனந்த் குமார்: இலட்சியவாதிகள் எப்போதுமே அழகியலுக்கு எதிரானவர்களாகவே இருந்து வந்திருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது. உதாரணத்திற்கு இந்தக் கவிதையில் வரும் காந்தி. ஆனால் கவிஞர்கள் இலட்சியவாதத்தைப் புரிந்து கொள்பவர்களாக இருக்கிறார்கள். அதனால் தான் சச்சிதானந்தன் அவர்களால் இந்தக் கவிதையில் இந்த இரண்டு நிலைகளையும் எழுத முடிகிறது.
அதியமான்: கவிதை, இலட்சியவாதம் இரண்டும் வேறு வேறா?
வே.நி.சூர்யா: நாமனைவரும் இங்கே கூடி தலையாய கவிதையைப் பற்றி உரையாடுவதே ஒரு இலட்சியவாத செயல்பாடுதான்.
ஆனந்த் குமார்: ஆம்.நிச்சயமாக..
அதியமான்: கலை கலைக்காக, கலை மக்களுக்காக என்ற கோணத்திலும் இந்தக் கவிதையை பார்க்கலாம்தானே?
ஆகாசமுத்து: காந்தியின் அரசியல் ஆளுமையை உள்வாங்கி கவிஞர் சச்சிதானந்தன் இயற்கையோடு உறவாடும் எளிய உழவனோடு உரையாடும் வெளிப்பாடு இந்தக் கவிதை.
மதார்: உரையாடல் நகன்று நகன்று கவிதையில் அரசியலை நோக்கிச் செல்வது போல் தோன்றுகிறது. இன்றுள்ள அரசியல் கவிதைகளில், தலித் கவிதைகளில் பிரச்சினையாகத் தெரிவது அதில் அரசியல் கச்சிதமாகப் பேசப்படுகிறது. தலித் வாழ்வியல் நுண்மையாக எழுதப்படுகிறது. அதெல்லாம் சரிதான். ஆனால் அதையெல்லாம் தாண்டி நிகழவேண்டிய கவிதை, கவிதை அனுபவம் அதை அந்தக் கவிதைகள் ஏதோ ஒரு புள்ளியில் தவறவிடுகின்றனவோ என்றும் தோன்றுகிறது. அப்படி அதைத் தவறவிடாத ஒரு அரசியல் கவிதையாக இந்தத் தொகுப்பில் வரும் பெர்டோல்ட் பிரெக்டின் பின்வரும் கவிதையைச் சுட்டலாம் என நினைக்கிறேன்
ஜெனரல் உங்களுடைய கவசவாகனம் சக்தி வாய்ந்தது
ஜெனரல், உங்களுடைய கவசவாகனம் சக்தி வாய்ந்தது.
அது காடுகளை அழிக்கும்,
ஒரு நூறு பேரை நசுக்கிவிடும்.
ஆயினும் அதில் ஒரு குறை உள்ளது.
அதை இயக்குவதற்கு ஒரு ஓட்டுநர் தேவை.
ஜெனரல், உங்களுடைய குண்டுவீச்சு விமானம் சக்தி வாய்ந்தது.
அது புயலைக் காட்டிலும் வேகமாகப் பறக்கும்
யானையை விடவும் அதிகம் சுமக்கும்.
ஆனால் அதில் ஒரு குறை உண்டு
அதை பழுது நீக்க ஒரு பணியாள் தேவை.
ஜெனரல், மனிதன் மிகவும் பயனுள்ளவன்
அவனால் பறக்கவும் கொல்லவும் முடியும்.
ஆனால் அவனிடம் ஒரு குறை இருக்கிறது,
அவனால் யோசிக்க முடியும்.
மயன் ரமேஷ் ராஜா: இந்தத் தொகுப்பின் இன்னொரு சிறப்பாக நான் பார்ப்பது கவிதையைப் பற்றி பேசும் நிறைய கவிதைகள் இந்தத் தொகுப்பில் உள்ளன.
ஈஸ்வரன: உரையாடலின் துவக்கத்தில் பேசியதையே ஒரு சந்தேகத்துக்காகத் திரும்பக் கேட்கிறேன். கவிதையை முழுமையாக மூலம் போலவே மொழிபெயர்ப்பது துளியும் சாத்தியமில்லாத ஒன்றா?
வ.அதியமான்: ஒரு கவிதை எப்போதுமே இரண்டுவிதமான அம்சங்களால் ஆனது. ஒன்று உலகலாவிய மானுட ஆழ் மனத்தின் பொது அம்சம். இரண்டு கவிதை எழுதப்பட்ட மொழியின் நிலம் தேசம் பண்பாடு தட்பவெப்பநிலை வரலாறு ஆகியவற்றால் ஆன தனித்துவமான அம்சம்.இதில் ஒரு கவிதையின் பொது அம்சத்தை மட்டுமே ஒரு மொழியில் இன்னொரு மொழிக்கு கடத்துவது சாத்தியம்.கவிதையின் தனித்துவமான அம்சங்களை பெரும்பாலும் ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்கு கடத்துவது சாத்தியமில்லை.அதனால் கவிதை மொழிபெயர்ப்பில் கவிதையின் தனித்துவமான அம்சங்களை இழப்பது வழக்கமான ஒன்று தான் அதை ஏற்றுக் கொண்டால் மட்டுமே உலக கவிதைகளை இயல்பாக நாம் அணுக முடியும்.
ஆகாசமுத்து: இன்னொன்று, ஒரு மொழிபெயர்ப்புக் கவிதையை முழுமையாய் உள்வாங்க நாம் பல விஷயங்களை ஏற்கனவே உள் வாங்கியிருக்க வேண்டும். குறிப்பாக நிலத்தை, காலநிலையை.. பீர்ச் மரங்கள், மேப்பிள் இலைகள் என்றெல்லாம் மொழிபெயர்ப்புக் கவிதைகளில் வரும். மேலும் ஓவியத்தை, சினிமாவை ஆழ்ந்து காணும்போது அதன் வழியாகக் கூட கவிதையின் விஷயங்கள் துலங்குவதற்கான சாத்தியங்கள் உண்டு.
ஆனந்த் குமார்: ஆம் நீங்கள் கூறுவது போல ரஷ்யாவின் பனியை உணரவே நாம் பல நாவல்களை வாசிக்க வேண்டியுள்ளது. அதன் வழியாகவே இன்னொரு மொழியின் கலாச்சார பிண்ணனியை நம்மால் விளங்கிக் கொள்ள முடிகிறது.
தானப்பன் கதிர்: நீங்கள் சொல்வது போலத்தான் சிங்கிஸ் ஐத்மாத்தவ்வின் படைப்புகளை நான் உணர்ந்தேன். நமக்கும் அந்நிய மொழிக்குமான அந்நியம், நமக்கும் அந்நிய நிலத்துக்குமான அந்நியம் ஏதோ ஒரு கணத்தில் அந்நியமற்றுப் போய்விடுகிறது. அதைச் செய்பவை சிறந்த கவிதைகளாக, சிறந்த மொழிபெயர்ப்புகளாக உள்ளன. நீரின் திறவுகோல் சிறந்த மொழிபெயர்ப்புக் கவிதை நூல்.
ஆகாசமுத்து: ஆம். அது போலவே ஒரு தனிக் கவிதை மட்டுமே நம்முள் பல விஷயங்களை கிளர்ந்தெழச் செய்யும் பேராற்றல் கொண்டது. உதாரணத்திற்கு இந்தத் தொகுப்பில் வரும் ஆடம் ஜகாஜெவ்ஸ்கியின் 'அமைதி' என்ற கவிதை,
அமைதி
அமைதி கூறியது
உண்மைக்கு விளக்கம் எதுவும் தேவையில்லை.
குதிரை வீரன் இறந்தபிறகு
வீடு நோக்கி விரைந்தோடி வரும் குதிரை
எல்லாவற்றையும் சொல்லிவிடுகிறது
எது ஒன்றையும் சொல்லாமலேயே.
இந்தக் கவிதை எனக்கு மஜீத் மஜீதியின் ஒரு காட்சிச் சட்டகத்தை நினைவூட்டியது. ஒரு வரி அது கவிதைக்குள் இருக்கும்போது அது செய்யும் மாயம் சொல்லி மாளாதது. கவிதையின் சிறப்பே அதுதான்.
மயன் ரமேஷ் ராஜா: கவிதையைச் சொல்லி கைதட்டல் பெறுவதென்பதும் இந்தக் காலத்தில் கிளிஷே வாகிவிட்டது. இந்தத் தொகுப்பின் கவிதைகள் கவிதை என்பது என்ன என்ற ஆழ்ந்த உண்மையை ஒரு அறிமுக வாசகருக்கும் மிக எளிமையாகக் கடத்திவிடும்.
ஆகாசமுத்து: ஒரு கவிதையை கோடி பேர் வாசித்தாலும் ஒவ்வொருவருக்கும் தனித்தனி அனுபவங்கள்.
மயன் ரமேஷ் ராஜா: இன்றைய கவிதைகளில் மொழிச் சிடுக்கு இல்லை. எளிமையும் ஆழமுமே இன்றைய கவிதைகளின் இலக்காக இருக்குமென நினைக்கிறேன்.
பாபு பிரித்விராஜ்: ஆமாம். இந்தத் தொகுப்பில் வரும் லெப்போல்டு ஸ்டாப்பின் அடித்தளங்கள் என்ற கவிதையை வாசிக்கிறேன்.
அடித்தளங்கள்
மணல் மீது கட்டினேன்
அது சரிந்து விழுந்தது.
பாறை மேல் எழுப்பினேன்
அது இடிந்து விழுந்தது.
இப்போது நான் கட்டவேண்டுமாயின்
புகை போக்கியிலிருந்து
வெளியேறும் புகையிலிருந்து
தொடங்குவேன்.
இந்தக் கவிதை நீங்கள் சொல்வது போல எளிமையானது அதே சமயம் ஆழமானதும் கூட.
சாம்: எனக்கு இந்தத் தொகுப்பில் பிடித்த கவிதைகள் நிறைய உள்ளன. அதில் ஒன்று சார்லஸ் புக்கோவ்ஸ்கியின் எல்லோருடனும் தனித்திருப்பது
எல்லோருடனும் தனித்திருப்பது
எலும்பைப் போர்த்தியிருக்கிறது சதை
அவர்கள் ஒரு மனதை
அங்கே பொதிந்து வைத்தனர்
சமயங்களில் ஓர் ஆன்மாவினையும்.
பெண்கள் பூச்சாடிகளை
சுவரில் வீசியெறிந்து உடைக்கிறார்கள்.
ஆண்கள் அளவுக்கதிகமாய் குடிக்கிறார்கள்.
யாரும் அந்த ஒருவனைக் கண்டறிவதில்லை
ஆயினும் தொடர்ந்து தேடுகிறார்கள்
படுக்கைகளில் உள்ளும் புறமுமாய்ப் புரண்டவாறே.
சதை மூடியிருக்கிறது எலும்பை.
சதையினூடாகத் தேடுகிறார்கள்
சதையை மீறிய ஒன்றை.
அதற்கு வாய்ப்பேதும் இல்லை.
நாமனைவரும் ஒரே விதியால்
பீடிக்கப்பட்டிருக்கிறோம்.
எவரொருவரும் எந்நாளும்
அறியவியலாது அவ்வொருவரை.
நகரில் குப்பைகள் நிறைகின்றன
வேண்டாத பொருட்கள் கிடங்குகளில் நிறைகின்றன.
மனநலவிடுதிகள் நிறைகின்றன
மருத்துவ மனைகள் நிறைகின்றன
கல்லறைத் தோட்டங்கள் நிறைகின்றன
வேறெதுவும் நிறையவில்லை.
இந்தக் கவிதை இருத்தலியல் சிக்கல், கன்சியூமரிசம், மெட்டீரியலிசம் என பல்வேறு அம்சங்களைக் கொண்டுள்ளது. இதன் இறுதி வரி மொத்த ஒன்றையும் வேறொன்றாக்கிவிடுகிறது. இனி வரும் காலம் குறித்த அச்சத்தை இந்தக் கவிதை எழுப்புகிறது. கடவுளை எங்கு தேடுகிறார்கள் என்ற கேள்வியும் இந்தக் கவிதையின் வழி எழுகிறது.
ராஜா முகம்மது: நீரின் திறவுகோல் எனக்கு முக்கியமான புத்தகம். 112 கவிஞர்களை இந்நூல் அறிமுகம் செய்கிறது. எனக்கு நிறையவும் வேலை வைத்தது. ஒரு மாதத்திற்குள் இந்த புத்தகத்தை படித்து முடிப்பது சிரமமானதாக இருந்தது. நான் இந்நூலின் ஒவ்வொரு கவிதைகளையும் தமிழில் படித்தபிறகு ஆங்கிலத்திலும் தேடித் தேடிப் படித்தேன். ஆசிரியர்களின் பின்புலத்தை, வாழ்வை தேடிப் படித்தேன்.அதனால் ஒரு மாத காலத்திற்குள் இந்நூலை படித்து முடிப்பது சிரமமானதாக இருந்தது. நூலின் முதல் கவிதையே எனக்கு அதிக வேலை வைத்தது. ஆடம் ஜகாஜெவ்ஸ்கியின் வெர்மீரின் சிறுமி என்கிற அந்தக் கவிதை முதலில் எனக்கு விளங்கவில்லை. பிறகு அதிலுள்ள வெர்மீர் என்ற சொல்லை கூகுளில் தேடினேன். ஜோஹனஸ் வெர்மீர் என்கிற டச்சு ஓவியரைச் சுட்டியது. அவர் வரைந்த Girl with a pearl earring என்ற ஓவியத்தைத்தான் அந்தக் கவிதை பேசுகிறதென புரிந்தது. அதன் பிறகு அந்த ஓவியத்தைப் பார்த்தபிறகு அந்தக் கவிதை மேலும் எனக்குத் திறந்தது. அந்த ஓவியத்தில் வரும் சிறுமியின் டர்பன், சிவந்த ஈரமான உதடுகள், முத்து போன்றவற்றை கவிதையில் அவர் வர்ணிப்பார். இப்படி ஒவ்வொரு கவிதையிலும் தேடுவதற்கென ஒன்று ஒளிந்திருந்தது.
வெர்மீரின் சிறுமி
வெர்மீரின் சிறுமி, தற்போது பலராலும் அறியப்பட்டவள்
நோக்குகிறாள் என்னை, ஒரு முத்தும் நோக்குகிறது.
வெர்மீரின் சிறுமிக்கு
சிவந்த ஈரமான
மிளிரும் உதடுகள்
வெர்மீரின் சிறுமியே, முத்தே
நீலத் தலைச்சுருணையே
நீவிர் அனைவரும் ஒளிர்கிறீர்,
நானோ நிழலால் ஆனவன்.
ஒளி குனிந்து
பொறுமையோடு நிழலைப் பார்க்கிறது
ஒருவேளை இரக்கமாகவும் இருக்கலாம்.
ஆகாசமுத்து: இந்த உணர்வைக் கடத்தியதுதான் மொழிபெயர்ப்பாளரின் வெற்றி அல்லவா. ஓவியத்திலிருந்து ஒரு கவிதை எழுவது அழகானது. அந்த ஓவியமே ஒரு கணம் அசையும் உணர்வைக் கவிதை நமக்குத் தந்துவிடுகிறது. கவிதையில் வரும் "ஒளி குனிந்து பொறுமையோடு நிழலைப் பார்க்கிறது" என்ற வரி அற்புதமானது.
ராஜா முகம்மது: ஆமாம். முதல் கவிதையே எனக்கு ஆர்வத்தைத் தூண்டும்படியாக இருந்ததால் தொடர்ந்து நான் ஒவ்வொரு கவிதையாக ஆர்வத்துடன் படித்தேன். அப்படிப் படித்ததில் நான் செய்த தவறு என்னவென்றால் கவிதையை ChatGPT செயலியில் பதிவிட்டு analyse poem option கொடுப்பேன். அப்படி செய்தது கவிதையை ஒரு இயந்திரகதியில் படிக்கும் அந்நிய உணர்வைத் தந்தது. அப்படி இல்லாமல் தன்னியல்பாக நானாகவே படித்தது இத்தொகுப்பில் வரும் கமலாதாஸின் மழை என்கிற கவிதையை. அந்தக் கவிதை தந்த பேருணர்வை வார்த்தைகளில் விவரிக்க இயலவில்லை.
மழை
களையிழந்து போன
அப்பழைய வீட்டை நீங்கி
நாங்கள் வந்துவிட்டோம்.
என்னுடைய நாய் அங்கு இறந்துபோனது.
அதைப் புதைத்த இடத்தில்
நட்டிருந்த ரோஜாச் செடி
இரண்டாவது முறை பூத்ததும்
அதை வேரோடு பிடுங்கி எடுத்துக்கொண்டு
எங்களுடைய புத்தகங்கள், துணிமணிகள்,
நாற்காலிகளோடு
நாங்கள் அவசரமாகக் கிளம்பிவிட்டோம்.
ஒழுகாத கூரையுடைய புதிய வீட்டில்
இப்போது வசிக்கிறோம்.
இங்கு மழை பொழிகையில்
அங்கே அந்தக் காலிவீட்டை
நனைத்துக்கொண்டிருக்கும் மழையை
நான் பார்க்கிறேன்.
எனது நாய்க்குட்டி
தனித்துத் துயிலும் இடத்தில் பொழியும்
அதன் ஓசையை
நான் கேட்கிறேன்.
அதே போல் இந்தத் தொகுப்பில் வரும் அடையாளச் சோதனை என்கிற கவிதையை ஆங்கிலத்தில் படித்தபோது changeling என்ற வார்த்தை வந்தது. அதே வார்த்தை தமிழில் சவால் என்று மொழிபெயர்க்கப்பட்டிருந்தது. அது எனக்கு விளங்கவில்லை.
இதில் Changeling என்கிற ஆங்கில வார்த்தைக்கு அர்த்தம் தேடும் போது, அதற்கு அர்த்தம் ஒன்றிற்கு பதிலாக இன்னொன்றை வைத்தல் என்று வந்தது. குறிப்பாக குழந்தைகளை தேவதைகள் வந்து மாற்றி வைக்கும் என்பது போன்ற தொன்மக் கதைகளுக்கு இட்டுச் சென்றது அந்த ஆங்கில வார்த்தை.ஆனால், மொழிபெயர்ப்பில் சவால் என்று மட்டும் இருந்தது கொஞ்சம் நெருடலாக இருந்தது.
மேலும் தாமஸ் டிரான்ஸ்டோமரின் இரு நகரங்கள் கவிதையை சபரிநாதன் மொழிபெயர்க்கையில் தூபா (Tuba) என்பதை அப்படியே போட்டு கீழே அடிக்குறிப்பில் டிரம்பட் போன்ற ஒரு காற்றிசைக் கருவி என்று குறிப்பிட்டிருப்பார். ஆனால் இந்தத் தொகுப்பில் அது நேரடியாக காற்றிசைக் கருவி என்றே கவிதையில் எழுதப்பட்டுள்ளது. இது உண்மைத் தன்மையைக் குறைப்பதாக எனக்குப் பட்டது. மேலும் கவிதையைப் பொறுத்தவரை நான் ஒரு ஆரம்பக்கட்ட வாசகனே. இந்தத் தொகுப்பில் ஒரு கவிஞரின் ஒரு கவிதையைப் படித்துவிட்டு அவரின் மற்ற கவிதைகளையும் புத்தகத்துக்கு வெளியே தேடிப் படித்தபோது ஒரு பரந்துபட்ட கவிதை உலகம் எனக்கு அறிமுகமாகியது. அப்படித் தேட வைத்ததில் இந்தத் தொகுப்பின் பங்கு முக்கியமானது.
வ.அதியமான்: நீங்கள் பேசியதிலிருந்து ஒரு கேள்வி. கவிதை மொழிபெயர்ப்பின் எளிய நோக்கம் என்ன? நமக்குத் தெரியாத மொழியை விட்டுவிட்டு தெரிந்த மொழியில் எளிதாகப் படிப்பது. அப்படி இருக்கையில் நீங்கள் மூல மொழியிலும் தேடித் தேடிப் படித்ததாகச் சொல்கிறீர்கள். கவிஞர்களைப் பற்றியும் தேடி அறிந்துகொண்டதாகச் சொல்கிறீர்கள். ஏன் கவிதை உங்களுக்குப் போதுமானதாக இல்லையா? மொழிபெயர்ப்பு உங்களுக்குப் போதுமானதாக இல்லையா?
மதார்: அது அவரவர் விருப்பம் சார்ந்து கூடுதலாகச் செய்வது.
ராஜா முகம்மது: எனக்கு அதன் பின்புலத்தை அறிவது கவிதையை இன்னும் நெருங்குவதற்கு உதவுகிறது.
வே.நி.சூர்யா: இதை இன்னும் தெளிவாகக் கூறலாம் என நினைக்கிறேன். ஒரு கவிஞனை முழுமையாக அறியும்போது அவன் கவிதையை முழுமையாக அறிய முடியும்.
பொன்னையா: இத்தொகுப்பில் போவாயிஸ் தேவாலயம் பற்றி ஒரு கவிதை வருகிறது. ஆடம் ஜகாஜெவ்ஸ்கி எழுதியது.
வாகனக் கண்ணாடி
பின்னோக்கு ஆடியில் திடுமென,
'போவாயிஸ்' தேவாலயத்தின்
பெரும்பகுதியைக் கண்டேன்.
பெரிய விஷயங்கள்
ஒரு கணம்
தங்குகின்றன
சிறியவற்றுள்.
போவாயிஸ் தேவாலயம் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் இணையத்தில் அதைப் பார்த்துவிட்டு இந்தக் கவிதையைப் படிக்கும்போது ஒரு பிரம்மாண்டத்துடன் என்னால் கவிதையை அணுக முடிந்தது.
வ.அதியமான்: சரி, ஆங்கிலமே தெரியாதவர்கள் இணையமே பயன்படுத்தத் தெரியாதவர்கள் இந்தக் கவிதையை எப்படிப் படிப்பார்கள்? ஒரு கவிதைக்குள் அந்தக் கவிதையின் வழியாகவே செல்லவேண்டும். மொழிபெயர்ப்பு என்ற சலுகையை வழங்குவது சரியா?
மதார்: மேற்சொன்ன போவாயிஸ் தேவாலயம் கவிதையில் அந்தத் தேவாலயம் பற்றித் தெரியாமல் வாசித்தாலும் அந்தக் கவிதை முழுமையான ஒன்றாகவே இருக்கிறது. நிறைவான கவிதை அனுபவத்தைத் தந்துவிடுகிறது. இருந்தாலும் கூடுதலாக தெரிந்துகொள்வதற்காக அவர் அந்தத் தேவாலயம் பற்றி படிக்கிறார். ஆனால் வெர்மீரின் சிறுமி கவிதை அப்படி அல்லவென நினைக்கிறேன். அந்த ஓவியத்தைப் பார்த்தபிறகே அந்தக் கவிதையை முழுதாகத் திறக்க முடிக்கிறது.
ஆனந்த் குமார்: வேறு கலாச்சாரத்தை அறிந்துகொள்வதற்கும் அந்தக் கவிதை ஊடகமாக இருக்கிறது.
வே.நி.சூர்யா: அத்தகைய வாசிப்புகளும் தேவை என்றே நினைக்கிறேன். உள்ளூர் மனிதனாக இருக்கும் நம்மை உலக மனிதனாக மாற்ற, இன்னும் திறக்க அது உதவுகிறது.
வ.அதியமான்: நல்லது. நமது இன்றைய உரையாடலை முன்னிறுத்தி சில கேள்விகளைக் கேட்கிறேன். உலகக் கவிதை என்றால் என்ன? உலகக் கவிதை என்று சொல்வதனால் உள்ளூர் கவிதை என்று ஒன்று தனியாக உண்டா? அல்லது எழுதப்படும் அத்தனையும் உலகக் கவிதை தானா? பொதுவாக உலகக் கவிதை என்பதன் எளிய வரையறை என்பது நம் மொழிக்கு நம் நாட்டிற்கு வெளியே இருக்கும் கவிதை என்பதே. இது மட்டும் போதுமா, அல்லது வேறேதேனும் வரையறை அதற்கு உண்டா? அவை அனைத்தும் உலகக் கவிதைகளா? நம் மொழியில் எழுதப்படுபவை அவர்களுக்கு உலகக் கவிதைகளாகுமா? இது முதல் கேள்வி. இரண்டாவது உலகக் கவிதை வாசிப்பின் இன்றைய தேவை என்ன? நம் மொழியின் கவிதைகள் போதாமையாக உள்ளனவா? மூன்றாவது கேள்வி ஒரு கவிஞன் ஏன் உலகக் கவிதைகளை வாசிக்க வேண்டும்? அவ்வாறு வாசிப்பதனால் அவன் கவிதைகள் மேம்பாடு அடையுமா?
வே.நி.சூர்யா: முதலில் 'உலகக் கவிதை' என்ற பதத்தைப் பற்றிப் பேசலாம். ஜெயமோகன் ஒரு கட்டுரையில் அது எவ்வாறு உருவானது எனக் குறிப்பிடுகிறார். முதலில் 'கவிதை' என்றே இருந்ததை 'உலகக் கவிதை' எனக் குறிப்பிட்டவர் கதே. கவிதை சந்திக்கும் பொதுத்தளத்தால் அது உலகக் கவிதை அந்தஸ்தை அடைகிறது என்று அவர் குறிப்பிடுகிறார். அதன்படியே நாமும் குறிப்பிடலாம் என நினைக்கிறேன். உதாரணத்திற்கு ஜெர்மன் மொழியில் ஒரு கவிதை எழுதப்படுகிறது, ஆங்கிலத்தில் எழுதப்படுகிறது, தமிழில் எழுதப்படுகிறது, இந்தியில், உருதில் இப்படி வேறு வேறு மொழிகளில் எழுதப்படுகிறது. அந்தக் கவிதைகள் அனைத்தும் சந்திக்கும் பொதுப்புள்ளி என்று ஒன்று இருக்குமேயானால், அப்படி அவை சந்திக்குமேயானால் அதை உலகக் கவிதை என்கிறோம். இரண்டாவது கேள்விக்கு என்னையே உதாரணமாக்கிக் கூறுகிறேன். நான் கவிதைகளை மொழிபெயர்க்கிறேன், மொழிபெயர்ப்பாளனாக உள்ளேன். வாசிக்கிறேன் வாசகனாக உள்ளேன்.எழுதுகிறேன் கவிஞனாக உள்ளேன். இன்னொருவரின் கவிதையை நான் மொழிபெயர்க்கையில் நான் அவரது உலகத்திற்குள் செல்கிறேன். என்னை இன்னும் திறக்கும் ஒரு வாய்ப்பு உண்டாகிறது. அது எனது ஈகோவை இல்லாமலாக்குகிறது. இன்னொன்று நான் இன்னொருவர் எழுதிய உலகக் கவிதையை வாசிக்கையில் அந்தக் கவிதையை அவர் எழுதிய காலத்திலேயே தான் சந்திக்கிறேன். இதிலேயே உங்களது இரண்டு கேள்விகளுக்குமான பதில் உள்ளதென நினைக்கிறேன்.
ஆகாசமுத்து: மூன்றாவதாக அவர் கேட்ட கேள்வி மொழிபெயர்ப்புக் கவிதையை வாசிப்பது கவிஞனின் மொழியை, கவிதையை கூர்மை செய்யுமா..ஆம் நிச்சயமாகச் செய்யும். ஆனால் தமிழிலும் மிகச் சிறந்த கவிஞர்கள் நிறைய பேர் உள்ளனர். யவனிகா ஸ்ரீராம், வெய்யில்,பிரமிள் என்று நீண்ட பட்டியிலிட்டுக் கொண்டே செல்லலாம். ஒரு இடதுசாரி மார்க்சியக் குரல் வட்டாரத் தன்மையிலிருந்து உலகளாவிய அரசியல் வரைக்கும் பேசக்கூடியதாக இவர்களது கவிதைகள் அமைந்திருக்கின்றன. அதேபோல கோட்பாடுகளை படித்துதான் ஒருவன் கவிஞன் ஆக முடியும் என்றெல்லாம் இல்லை. இன்றைய நவீன வாழ்வையும், அதன் நெருக்கடிகளையும் மேலும் ஒரு கவிஞனுக்குள் நிகழும் மாற்றங்களையும் அவன் ஆழ்ந்துணரும்போது அவனால் கவிதை எழுதிட முடியும். அதே போல நிறைய படிப்பதனால் மட்டும் ஒரு கவிஞன் உருவாகிவிட முடியாது. வயல்வெளியில் விவசாயி பாடும் நாட்டுப்புறப்பாடலும் ஒரு கவிதைதான். அது தன்னிச்சையாகத் திரண்டு வருவது. ஒவ்வொரு காலகட்டத்திலும், சூழலிலும், தருணத்திலும் கவிதை உள்ளது. வகுப்பறை என்ற வட்டத்திற்குள் கவிதையை அடைக்க முடியாது. தேவதச்சன் அடிக்கடி சொல்வார். நான் ஒழியும் இடத்தில்தான் கவிதை உருவாகிறது என்று. வண்ணதாசனும் அதையே சொல்வார். எழுதும்போது நீங்கள் அந்த இடத்திலிருந்து மறைந்து விடவேண்டுமென்று.
வே.நி.சூர்யா: நீரின் திறவுகோல் பற்றி சில விஷயங்கள் சொல்ல ஆசைப்படுகிறேன். முதல் விஷயம் இதிலுள்ள கவிதைகளின் தேர்வு. கபீர், அக்கமாதேவி என்று ஒரு பக்கம் பக்திக் கவிதைகளாக வருகிறது. இன்னொரு பக்கம் திடீரென ஆலன், சார்லஸ் என்று வேறு தரப்புக் கவிஞர்களும் வருகிறார்கள். வேறு வேறு காலத்தைச் சேர்ந்த கவிஞர்கள் வேறு வேறு கலாச்சாரப் பிண்ணனிகளுடன் ஒரே நேரத்தில் ஒரே தொகுதியில் சந்தித்துக் கொள்ளும் தொகுப்பாக இது உள்ளது. அது இந்த நூலின் முக்கிய அம்சம். இன்னொன்று இந்நூலில் தேர்வு செய்யப்பட்டிருக்கும் கவிதை பாடுபொருட்கள். அதில் ஒரு தேர்வு உள்ளது. பெரும்பாலும் spiritual தன்மை கொண்ட அல்லது மனித விசாரம் தொடர்பான கவிதைகளே இந்தத் தொகுப்பில் அதிகம் உள்ளன. உதாரணத்திற்கு பிரக்ட்,ஆடம் ஜகாவெஸ்கி என்று பலரது கவிதைகள் இத்தொகுப்பில் உள்ளன. பிரக்ட் நிறைய அரசியல் கவிதைகள் எழுதியுள்ளார். ஆடம் ஜகாவெஸ்கியும் கூட. ஆனால் அவர்களது வேறு வகைப்பட்ட கவிதைகளே இந்நூல் நெடுக உள்ளது. அவர்களது வழக்கமான முகமல்லாத வேறு முகம் இத்தொகுப்பில் காட்டப்படுகிறது. உதாரணத்திற்கு டி.எஸ்.எலியட் என்றாலே 'பாழ் நிலம்' கவிதைதான் என்றாகிவிட்டது. ஆனால் அவரது கவிதைகளிலும் நகைச்சுவையான சில இடங்கள் உண்டு. வேறு வேறு இடங்களை முயன்றிருப்பார். இதே போல எல்லா கவிஞர்களுக்கும் ஒரு குறிப்பிட்ட முகத்தைத்தான் நாம் வழங்குவோம். ஆனால் இந்நூலின் மொழிபெயர்ப்பாளர் க.மோகனரங்கன் கவிஞர்களின் வேறு வேறு முகங்களை வேறு வேறு கவிதைகள் மூலம் நமக்கு அறிமுகப்படுத்துகிறார். இந்த நூலின் சிக்கலாக நான் பார்ப்பது மொழிபெயர்ப்பில் எல்லா கவிஞர்களுமே ஒரே மாதிரி தோற்றம் தரும் தன்மை. ரூமியை மொழிபெயர்ப்பதில் சிக்கல்கள் இல்லை, அவருக்கென்று ஒரு மொழி உள்ளது. அவருக்கான விஷயங்கள் தனி. ஆலன் கின்ஸ்பெர்க், சார்லஸ் புக்கோஸ்கி போன்ற நவீன கவிஞர்களை மொழிபெயர்ப்பதில் சிக்கல்கள் உண்டு. அவர்களது மூல மொழிநடை பல்வேறு அம்சங்களால் ஆனது. ஒரு வட்டார வழக்குத்தன்மை, பாடல், கெட்டவார்த்தை இப்படி கவிதைக்குள் எதுவெல்லாம் அனுமதி இல்லை என்று சொன்னார்களோ அதையெல்லாம் எழுதும் ஒரு புரட்சிகர எழுத்தாக அவர்களது எழுத்து உள்ளது. ஆனால் அவர்கள் ஒரு செவ்வியல் கவிஞர் தோரணையில் இந்த நூலில் வருகிறார்கள். அந்தத் தன்மை இந்தத் தொகுப்பில் அதிகமாக உள்ளது. இன்னொரு சிக்கல் அந்த மொழிக்கு நாம் சரியாக இருந்து மொழிபெயர்த்தோமேயானால் வரிக்கு வரி மொழிபெயர்க்க வேண்டி வரும். அது கவிதையின் கவித்துவ அம்சத்தை வெளியேற்றியும் விடலாம். சரி கவித்துவ அம்சத்தை கவனத்தில் கொண்டு செய்தால் அதன் மொழியை நாம் சரியாக செய்ய முடியாததாகிவிடும். அதனால் மொழிபெயர்ப்பவரின் ஆளுமை அந்தக் கவிதைக்குள் புகுந்துவிடலாம். ஒன்று கவிதையை இழப்போம் அல்லது மொழியை இழப்போம். ஆகவே இரண்டுக்கும் இடையில் ஒரு புள்ளியைக் கண்டறிந்து செய்வதே சரியான கவிதை மொழிபெயர்ப்பாக இருக்குமென கருதுகிறேன். இந்தத் தொகுப்பின் கவிதைகள் அதன் அருகில் சென்றுள்ளன.
வ.அதியமான்: நீங்கள் குறிப்பிட்டது போல இழப்புகள் இருக்கத்தான் செய்யும். ஆனால் இந்த நூலை ஒரு ஆரம்பக்கட்ட கவிதை வாசகனும் ஒன்றி வாசிக்க முடிகிறது. ஒரு தேர்ச்சி பெற்ற கவிதை வாசகனும் ஒன்றி வாசிக்க முடிகிறது. இலகுவாக , வாசிப்பு சரளத்துடன் ஒருவரால் இந்நூலைப் படிக்க முடிகிறது. அதில் மொழிபெயர்ப்பாளர் கவனம் செலுத்தியிருக்கலாம். அது இந்த நூலில் சிறப்பாக வந்துள்ளது. அப்படி இல்லாது நீங்கள் சொன்ன விஷயத்திலும் கவனம் செலுத்தியிருந்தால் ஒருவேளை தேர்ச்சி பெற்ற வாசகனுக்கு மட்டும் என்றாகிவிடும், பிரம்மராஜனின் உலகக் கவிதைகள் தொகுப்பு போல.. அப்படி அல்லாது இருவருக்கும் கதவைத் திறந்து வைத்ததே இந்நூலின் தனிச்சிறப்பு என நான் கருதுகிறேன்.
ஆகாசமுத்து: ஆமாம். மொழிபெயர்ப்பில் கவிதை நமக்கு வாசிக்கக் கிடைப்பதே கிடைத்தவரைக்கும் லாபமான ஒன்றுதான்.
வ.அதியமான்: இன்னொரு கேள்வி - ஒரு கவிதையை கவிஞன் மொழிபெயர்ப்பதற்கும் கவிஞன் அல்லாதவன் மொழிபெயர்ப்பதற்கும் வேறுபாடுகள் உண்டா?
வே.நி.சூர்யா: எனது அனுபவத்திலிருந்தே சொல்கிறேன். பரிசோதனை என்ற இதழ் முன்பு வந்தது. அதில் சில கவிதைகளை மொழிபெயர்க்க வேண்டி கவிஞர்களிடமும், புனைவெழுத்தாளர்களிடமும் அளித்திருந்தேன். கவிஞர்கள் மொழிபெயர்த்தவை மொழியின் அழகுடன் திகழ்ந்தன. ஆனால் புனைவெழுத்தாளர்களின் மொழி தட்டையாக இருந்தது. ஏனென்றால் மொழியில் கவிஞர்களின் புழங்குதளமும், புனைவெழுத்தாளர்களின் புழங்குதளமும் வெவ்வேறானவை.
பாபு பிரித்விராஜ்: கவிதையின் வழக்கமான வடிவமல்லாது புதிய வடிவம் எதுவும் இந்தத் தொகுப்பில் முயலப்பட்டுள்ளதா? இப்போதுள்ள கவிதை வடிவம் ஒரு அயற்சியைத் தரவில்லையா? பாரதியின் வசன கவிதை மாதிரி புதிய கவிதை வடிவம் என்று ஒன்று தோன்றும் வாய்ப்புள்ளதா?
வே.நி.சூர்யா: அப்படி எதுவும் இல்லை. எல்லாமே இங்கு எழுதப்பட்டுவிட்டது...
பாபு பிரித்விராஜ்: இல்லை நான் சொல்ல வருவது என்னவென்றால் நமது இப்போதைய கவிதை வடிவமே மேற்கிலிருந்து வந்ததுதான்..
வே.நி.சூர்யா: இல்லை அப்படி முழுமையாகச் சொல்லிவிட முடியாது. விக்கிரமாதித்தன் - வேதாளம் கவிதையில் படிக்கடி பேசுகிறது. அது ஒரு சர்ரியலிசம் இல்லையா?
பாபு பிரித்விராஜ்: நாம் நமது வசதிக்காக வேண்டி அப்படி அடையாளப்படுத்திக் கொள்ளலாம்.
வே.நி.சூர்யா: இல்லை. எல்லா கலாச்சாரங்களிலும் எல்லா அம்சங்களும் உள்ளன.
பாபு பிரித்விராஜ்: நவீன கவிதை வடிவம் உங்களுக்கு அயற்சியைத் தரவில்லையா? மொழிபெயர்ப்பாளராக உங்கள் பார்வை என்ன?
வே.நி.சூர்யா: ஆண்ட்ராய்ட் அப்டேட் போல எதுவும் உடனே நிகழ்ந்துவிடாது என்று நினைக்கிறேன். அது காலத்தைப் பொறுத்தது.
பாபு பிரித்விராஜ்: மரபுக்கவிதையிலிருந்து புதுக்கவிதை வந்த ஒரு காலகட்டம் இருக்கிறதல்லவா..
வே.நி.சூர்யா: அதேதான் மரபிலிருந்து புதுக்கவிதைக்கு வந்து சேர்ந்த பாதை பெரியது. பல்வேறு பரிசோதனைகள், சோதனைகளுக்குப் பிறகே அது நிகழ்ந்தது.
பாபு பிரித்விராஜ்: ஆம் அதே போல நவீன காலகட்டத்தில் கவிதைக்கென மாற்று வடிவம் தோன்றுமா எனக் கேட்கிறேன்.
வே.நி.சூர்யா: மரபுக் கவிதை உடைய நிறைய அழுத்தம் அன்று இருந்தது. இன்று அப்படி இல்லை. சுதந்திரமாகவே உள்ளோம். மரபுக் கவிதையில் வடிவ சுதந்திரம் இல்லை.
பாபு பிரித்விராஜ்: இன்றுமே நவீன வடிவிலும் திரும்பத் திரும்ப எழுதி ஒரு சூத்திரம் போன்ற ஒன்றுக்கு நாம் வந்துவிடவில்லையா. படிமங்கள் போன்றவை திரும்பத் திரும்ப ஒரே வட்டத்துக்குள் சுற்றும் உணர்வைத் தரவில்லையா? இது மாறுமா?
வே.நி.சூர்யா: நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
பாபுபிரித்விராஜ்: மொழிபெயர்ப்பாளராக உங்களிடமே நான் இந்தக் கேள்வியைக் கேட்க விரும்புகிறேன்.
வே.நி.சூர்யா: வார்த்தை விளையாட்டுகளை நிறைய புதிதாகச் செய்கிறார்கள்.ஆனால் அவை கவிதையல்ல. கவிதை எப்போதுமே வாழ்வனுபவங்களைச் சொல்லும். சொல்லும் முறையால் அது கவிதையாகும்.
பாபு பிரித்விராஜ்: மொழிபெயர்ப்பாளர்களால் அத்தகைய புதிய வடிவ மாற்றம் தற்போதைய கவிதை மொழியில் நிகழுமா?
வ.அதியமான்: அதைத்தான் அவர் காலத்தைப் பொறுத்து நிகழும் என்கிறார். அது தன்னிச்சையாக மட்டுமே நிகழக்கூடியது.
***
க. மோகனரங்கன் தமிழ் விக்கி பக்கம்
***
0 comments:
Post a Comment