காரைக்காலம்மையின் இந்தப்பாடலில் கொன்றையும், அந்தி வானமும், ஓங்கி உயர்ந்த மலையும்,ஆற்று வெள்ளமும் இறைவனின் வடிவமாகி இறுதியில் அந்த கார்காலமே ஈசனாகிறது. என் ஆசிரியர் ராதாவும் ஏதோ ஒரு வகையில் ஒரு அந்தியில் அந்த உணர்வினை அடைந்ததை கண்முன்னே கண்டேன். அவர் விளையாட்டாக போலியோவால் வளைந்த தன் பாதத்தை பிறை என்று சொல்வார். ஈசனுக்கு நெற்றியில் எனக்கு பாதத்தில் என்பார். வகுப்பில் பாடம் எடுக்கும் போது மேசையின் கீழ் தண்டில் அவர் தன் வலதுபாதத்தை தூக்கி வைத்து நிற்பது என் மனதில் ஆழமாக பதிந்து கனவில் இன்றும் வந்து கொண்டிருப்பது. அது மனிதரில் வெளிப்படும் கம்பீரத்தின் அழகு. அதே கம்பீரம் இயற்கையில் வெளிப்படும் இடங்களை இந்தப்பாடல்களில் காணலாம்.
விரிந்த செக்கர் வானம், பொழியும் கொன்றை, தொலைவில் மலை உயரத்தில் பெருக்கெடுத்தோடும் பேரியாறு , அதில் உலவும் மேகங்கள் அனைத்தும் ஈசனின் தோற்றங்களாகின்றன. இத்தனை ஆவேசங்களின் ஆழத்தில் உறையும் தண்மையும் அவனே. அந்தியின் தண்மை, நீரின் தண்மை, மலரின் தண்மை என்று வெம்மைக்குள் உறையும் தண்மையான ஈசனை காரைக்காலம்மை கார்காலமாக உணர்ந்திருக்கிறார்.
சீரார்ந்த கொன்றை மலர் தழைப்பச் சேணுலவி
நீரார்ந்த பேரியாறு நீத்தமாய்ப் _ பேரார்த்த
நாண்பாம்பு கொண்டதைத் தம்மீசன் பொன்முடிதான்
காண்பார்க்குச் செவ்வேயோர் கார்
அற்புத திருவந்தாதி 53
மிக்க முழங்கெரியும் வீங்கிணய பொங்கியருளும்
ஒக்க உடனிருந்தால் ஒவ்வாதே _ செக்கர்போல்
ஆகத்தான் செஞ்சடையும் ஆங்கவன்றன் பொன்னுருவில்
பாகத்தான் பூங்குழலும் பண்பு
அற்புத திருவந்தாதி 58
இந்தபாடலில் காரைக்காலம்மை மாதொருபாகனை காட்டுகிறார். சிவந்த அந்தியும், அந்திக்கும்பின் தொடங்கும் இருளையும் சேர்த்து உமை ஒரு பாகமாக சொல்கிறார்.
கோடைகாலத்தில் மே மாத்தில் ஒரு சில நாட்களில் கொல்லிமலையின் பிளவின் ஒரு குறிப்பிட்ட இடத்தில் சூரியன் மறையும் போது அந்தி இருநிறம் காட்டும். தென்மேற்கில் நீலமும், வடமேற்கில் பொன் வெளிச்சமுமாக நிறம் காட்டும் வானத்தை கல்லூரி முடித்த ஆண்டுகளில் இருந்து காண்கிறேன். முதல் முறை அதைக்கண்ட போது புன்னகைத்துக்கொண்டேன். ஆசிரியர்களின் சொல் கிண்டலோ எரிச்சலோ அல்ல ஆசி என்று. அது ‘பெறுக’ என்பதன் மாற்று.
இந்த இரு பாடல்களிலும் காலங்களை கடந்து காரைக்காலம்மையின் ஈசன் உறைந்திருக்கிறார்.
0 comments:
Post a Comment