எல்லா கவிதைகளுமே ஏதோ ஒரு சந்தர்ப்பத்தை ஓட்டிதான் எழுதப்படுகின்றன. சில சமயம் அந்த சந்தர்ப்பம் புற சந்தர்ப்பமாக இருக்கிறது. சில சமயம் அது ஒரு அகநிகழ்வாக இருக்கலாம். அந்த சந்தர்ப்பத்தில் தொடங்குகிற கவிதை அந்த சந்தர்ப்பத்துக்கு உண்மையாக இருப்பதுடன் அதில் தொடங்கி உலகம் பூராவும் சுற்றிவரலாம். வேறு சந்தர்ப்பங்கள் அகநிலைகளை தொடலாம்.
கவிஞன் அந்த சந்தர்ப்பத்துக்கு முக்கியம் தரலாம்; அல்லது அந்த சந்தர்ப்பத்தை சாக்காக வைத்துக்கொண்டு தன் மனதுக்கு, தன் உணர்ச்சிகளுக்கு முக்கியம் தரலாம். எதற்கு முக்கியம் தந்து கவிதை சிருஷ்டித்தாலும் அவனும் அதில் சிக்கியிருக்கிறான் என்பது தெளிவு. சந்தர்ப்பங்களைவிட அவன் முக்கியமாகிவிடுகிற கவிதைகள் சிறப்பான கவிதைகளாக தோன்றுகின்றன.
இதற்கு விலக்குகள் இருக்கலாம். (எதற்குமே விலக்குகள் உண்டுதானே). தான் என்பதை தேடுவதைவிட உலகில் உள்ள விஷயங்களை, ஸ்தூலங்களைத் தேடி மீண்டும் அவற்றிற்கு நினைவு, காலம் என்பதில் மட்டுமின்றி, நிரந்தரமான முக்கியத்துவம் தருகிற கவிகளும் இருக்கின்றனர். சீனாவில் சில கவிகள், ஜப்பானில் சிலர் என்று இதை செய்திருக்கிறார்கள். அமெரிக்காவில் வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸ், ‘உலகில் உள்ள ஸ்தூலங்களே கவிதைகள்தான். ஒரு மண்வெட்டியை பற்றி சொல்வதைவிட ஒரு மண்வெட்டியை மீண்டும் வார்த்தைகளில் சிருஷ்டித்துவிடுவதுதான் கவி காரியம்’ என்கிறார். இது எப்படி நேரிடுகிறது என்று பார்ப்பது சிரமமாக இருக்கிறது என்றாலும் நேரும் என்பதே விஷயம்.
கவிதைகளை புரிந்துகொள்ள வேண்டுமா என்கிற கேள்விக்குப் பல கவிகள் அதைக் கவிதையாக உணர்ந்தால் போதும் என்று பதில் கூறுகிறார்கள். பூரணமாகப் புரிந்துகொண்ட கவிதையைவிட புரியாத கவிதைதான், புரிய முடியாது என்கிற கவிதைதான் மனதில் அதிக நேரம் நிற்கிறது. மனத்தை விட்டு அகல மறுக்கிறது. அதை நினைத்துக்கொண்டே அதன் வார்த்தைகளில் புதுப்புது அர்த்தங்களை காணும்போதுதான் கவிதையில் த்வனி என்று ஒன்று இருப்பதும், எல்லாக் கவிதைகளுமே எதையோ சொல்லாமல் சொல்லிவிடுகின்றன என்பதும் தெரிகிறது. த்வனி என்பதை கவிதையில் தேடவேண்டியதில்லை. அது தானாகவே தெரியவருகிற விஷயம். இந்தப் புதுமை அம்சம் மிக மிக முக்கியம். அதுதான் கவிதையை கவிதையாக்குகிறது என்று சொல்லலாம். இந்தப் புதுமையை தேடிக் கவி போவதாகச் சொல்ல முடியாது. கவிஞன் எழுதுகிற எந்தக் கவிதையிலும் இது தானாக அமைகிற ஒரு விஷயம். இதை வாசகன் கண்டுகொள்கிறான் என்பதும் நல்ல வாசகனின் அடையாளம் என்றுதான் சொல்லவேண்டும்.
புதுமை என்பது உரத்த குரலில் என்னைப் பார் என்று சொல்கிறபோது கவிதை சிறப்பாக அமையவில்லை என்று சொல்லவேண்டியதாக இருக்கிறது. புதுமையும் இருக்கவேண்டும்; அந்தப் புதுமை உரத்ததாகவோ, வாசகன் கன்னத்தில் அறைவதாகவோ இருக்கக்கூடாது. பாரதியாரின் கவிதைகளில் புதுமைகளை நெடுக காண்கிறோம். ஆனால் ‘காட்சி’ என்கிற பகுதிக்கு வரும்போது அது அவர் காலத்தில் வாசகன் கன்னத்தில் அறைவது போல ஒவ்வாத புதுமையாகத் தோன்றியிருக்க வேண்டும் அவருக்கே. அதனால்தான் அவர் உயிருடனிருக்கும் போதே அதைப் பிரசுரிக்க முயலவில்லையோ? இன்னும் எழுதிப் பழக வேண்டும் என்று எண்ணினாரோ?
கவிதை செய்யுள் வடிவத்தில்தான் இருக்க வேண்டுமா? வசனமாகவே கவிதை செய்ய முடியாதா என்கிற கேள்வி வோர்ட்ஸ்வொர்த் காலத்திலேயே ஆரம்பித்துவிட்டதாகத் தெரிகிறது. செய்யலாம் என்று சொல்வதுடன் நிறுத்திக்கொண்டார்கள். வோர்ட்ஸ்வொர்த்தின் கவிதைகள் பலவும் வசனம் போலவே அமைந்துள்ளது இதனால்தானோ? ஆனால், 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில்தான் விட்மன் என்கிற மேதையும், ஃபிரெஞ்சு இலக்கியத்தில் சிலரும் செய்யுளில் இல்லாத கவிதைகள் எழுதத் தொடங்கினார்கள். பிடித்துக்கொண்டது. கவிதைக்கு ஒரு புது மரபு ஸ்தாபிதம் ஆயிற்று. இந்த வசன முயற்சி உலகத்தின் எல்லா மொழிகளிலும் தொடர்ந்து நடந்துவருகிறது.
ஒருதரம், உலகில் எந்த மொழியிலேனும் ஒருதரம் செய்யப்பட்டுவிட்டதை மீண்டும் செய்யாமலிருக்க பாடுபட வேண்டியதாக இருக்கிறது. ஒருதரம் செய்யப்பட்டதை மறுபடி செய்யாதிருப்பதுதான் கவியின் பிரதம முயற்சி என்று எஸ்ரா பவுண்டு சொல்கிறார். உலகில் கவிகள் எழுதியிருப்பது எல்லாவற்றையும் தெரிந்துகொண்டு கவிதை எழுத ஆரம்பிப்பது என்பது முடியாத காரியம். ஒருதரம் செய்யப்பட்டுவிட்டதை திரும்பவும் செய்யாமலிருக்க முயலலாம் - தெரிந்துள்ள வரையில் அது எங்காவது செய்யப்பட்டிருக்குமோ என்று - புதுசாக தெரியவருகிற இன்று கவிஞன் சொல்ல முன்வருவதைப்பற்றி கவலைப்பட வேண்டியதில்லை என்றே தோன்றுகிறது. உலகத்தில் மிகவும் அபூர்வமாகவேதான் இரண்டு முகங்கள் ஒரே மாதிரி இருக்கின்றன. அதே மாதிரி ஒரே மாதிரியாக சிந்திப்பதாக சிலர் சொன்னாலும் அதிலும் சூஷ்மமான சில வித்தியாசங்கள் இருக்கத்தான் இருக்கும். தெரிந்து தழுவி எழுதக்கூடாது என்பதுதான் இதன் அர்த்தம் என்று எனக்குத் தோன்றுகிறது.
வார்த்தைகளே படிமங்கள்தாம். அதனால் படிமங்களே இல்லாத கவிதை எழுதுவது சாத்தியமில்லை என்று பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். படிமங்களே இல்லாமல் - எவ்வளவுக்கெவ்வளவு குறைவான படிமங்களை உபயோகிக்க முடியுமோ - அப்படி உபயோகித்துக் கவிதை எழுதுவது புதுக்கவிதைக்காரர்களின் முயற்சியாக இருக்க வேண்டும். வார்த்தைகள் இல்லாமலே கவிதைகள் எழுத முடியுமா? முடியலாம். செய்துபார்க்க வேண்டும். வார்த்தைகளை அடைமொழிகள் இல்லாமல் நீர்த்துப் போகாமல் உபயோகப்படுத்த வேண்டும் என்பது விஷயம், படிமங்கள் வரலாம் - தேடிக்கொண்டு போகக்கூடாது. உபமான உபமேயங்களை அதிகமாகக் கையாளாமல் இருப்பது சாத்தியமாக இருப்பது போலவே - நாம் அவற்றை இன்றைய அளவில் தேடிப்போவதில்லையே - படிமங்களையும் தேடிப்போகாமல் இருக்கமுடியும்.
வார்த்தைகள் மூலம் ஒரு கவி தான் உணர்ந்ததை உண்மையாக எடுத்து சொல்கிறான். வார்த்தைகள் மூலம் என்பது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் உண்மை என்பதும். வார்த்தைகள் நேரில் கண்ணில்படுகின்றன அச்சில்; காதில் விழுகின்றன ஒலியாக; உண்மை என்பது அப்படியல்ல. நழுவிவிடுகிற விஷயமாக இருக்கிறது. அவரவர் அளவில் உண்மையென்று இருப்பதையும் உணர முடிகிறது. நமது உண்மையை ஒட்டி கவி கவிதை செய்கிறபோதுதான் அவர் கவிதையை நம்மால் ஏற்றுக்கொள்ள முடிகிறது. நம்மையும் மீறி ஒரு உண்மையை சுட்டிக்காட்டி அதை நாம் ஏற்கும்படி செய்துவிடுகிற கவியை நாம் அதிகமாக மதிக்கிறோம். இது வார்த்தைகளால் சாத்தியமாகிறது என்பதனால்தான் வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் ஏற்படுகிறது. எல்லா வார்த்தைகளையும் தெரிந்திருப்பது போதாது. வார்த்தைகள் எல்லாமே அகராதியில் காணப்படுகின்றன. அந்த வார்த்தைகளை புதுப்புது சேர்க்கைகளாக உபயோகிக்க கவிக்கு தெரிந்திருக்க வேண்டும். குரலை உயர்த்தாமலே வார்த்தைகளை சேர்த்து சொல்லும் கவிகள் உண்டு. பாரதியார் உதாரணம். குரலை சற்று அதிகமாகவே உயர்த்தி உபயோகிக்கிற கவிகளும் உண்டு – பாரதிதாசன். புதுக்கவிதைக்காரர்களில் சொல்லப்போனால் நகுலனும் ஷண்முக சுப்பையாவும் ஞானக்கூத்தனும் மயனும் இப்படிக் குரலை உயர்த்தாமல் கவிதை செய்பவர்கள். சினிமாக்கவிகள் (வைரமுத்து, மேத்தா, காமராஜன் இவர்கள்) குரலை அளவுக்கு மீறியே உயர்த்திவிடுகிறார்கள். ஒலிக்கும் வார்த்தைகளை உபயோகிப்பவர்களை rhetorical கவிகள் என்று சொல்லலாம். ஒருவிதத்தில் பார்த்தால் அவர்கள் கவிகளே அல்ல. இந்த இரண்டு விதமான கவிகளும் நம்மிடையே இருக்கத்தான் இருப்பார்கள்.
கவி என்பவன் எவ்வளவு முரண்பாடான, ஒன்றுக்கொன்று கலவரம் செய்து குழப்பமான கருத்துகளை வெளியிட முயன்றாலும் தன்னளவில் முரண்களைக் கடந்தவன்; அவனுக்கு உள்ளத்தில் குழப்பமோ கலவரமோ கிடையாது. பிறரிடம் செயல்படுகிற கலவரத்தையும் குழப்பத்தையும் மனதில் வாங்கி சில சமயம் அவன் கவிதை செய்கின்றான். ஏனென்றால் உண்மையை சொல்வதும் பிரதிபலிப்பதும் அவன் கடமை.
தன்னளவில் அமைதி அடைந்தவனாக இருப்பதனால்தான் அவன் உபயோகப்படுத்துகிற வார்த்தைகளுக்கும் அர்த்தமும் ஆழமும் கூடுகிறது. இந்த உள் அமைதி இல்லாத கவிஞன் எத்தனை எழுதினாலும் அவன் கவிதை கவிதை போலவே இருந்தாலும் அவனைக் கவியாக மதிப்பதற்கில்லை. கண்ணதாசன் இதற்கு ஒரு உதாரணம். கவி எந்த அர்த்தத்திலும் எதற்கும் தாஸனாக இருக்க இயலாது. பாரதியார் சில காலம் ஷெல்லிதாஸன் என்று பெயர் வைத்துக்கொண்டிருந்தது அவருக்கு நீங்காத இழுக்குத்தான்.
கவிகர்வம் என்பது அலாதியான ஒரு விஷயம். இந்தக் கர்வம் இல்லாததனால் புதுசாக எதையும் கண்டு சொல்ல இயலாது. கவிதை எழுதுவதற்குத் தாஸத்வம் எதிரி என்பதை உணர்ந்தேயாக வேண்டும். சுதந்திரம் என்பது முக்கியம் என்று பத்திரிகையாசிரியர்கள் இன்று முழங்குகிறார்கள். பத்திரிகையாசிரியர்கள் பிழைப்புக்கு சுதந்திரம் முக்கியம். கவியாக இருப்பதற்கே சுதந்திரம் மிக மிக முக்கியம். தன் சுதந்திரத்தை உணர்ந்து செயல்படாதவன் கவியாக இருக்க முடியாது. அரசாங்கத்தால் அரசகவியாக அறிமுகம் செய்து வைக்கப்படுபவர்கள் கூலிக்கு மாரடிப்பவர்கள்தாம். அவர்கள் வேறுவிதமாக செயல்பட இயலாது என்பது வெளிப்படை.
கவிகள் ஒரு சமுதாயத்தில் சுதந்திரமாக செயல்பட வேண்டும். ஒரு சித்தாந்தத்துக்கு அடிமையாக செயல்படுவது சரியல்ல. ஒரு கட்சிக்கு அடிமையாக செயல்படுவது அதைவிட மட்டம். கவிக்கு சொந்த வாழ்க்கையில் ஒரு கட்சிக்கு ஓட்டுப் போடவும் ஒரு கட்சி சித்தாந்தங்களைப் பின்பற்றவும் சுதந்திரம் உண்டு. ஆனால் அந்தக் கட்சியை ஒட்டியோ, அந்த சித்தாந்தத்தை ஒட்டியோ கவிதை செய்யும்போது இது என் விஷயம் என்று சொல்லி கவிதை செய்யலாம். பிறருக்கும் அது ஏற்பு என்று கவிதை செய்ய முடியாது. கட்சி உண்மையும், சித்தாந்த உண்மையும் பாரபட்சமான உண்மைகள்தாம். உண்மை என்பதில் அவையும் அடங்கியிருக்கலாம். கவியும் மற்றவர்களும் உலகில்தான் வசிக்கிறார்கள். ஆனால் உண்மை என்பது எல்லா அம்சங்களையும் அடக்கியது. சந்தர்ப்பவசத்தினால் தாற்காலிகமாக ஆட்சி செலுத்துகிற உண்மைகளுக்கு அப்பாற்பட்டது. வானம்பாடிகளும் திராவிட கட்சிக்காரர்களும் நல்ல கவிதை எழுத முடியாமல் திணறுவதற்கு இந்த உண்மை மறைப்பு ஒரு காரணமாக இருக்கலாம்.
கவிதை செய்வதில் கவியினுடைய உத்தேசத்தில் உலகில் உள்ளது எதுவும் உபயோகப்படுத்தப்பட வேண்டும். தாழம்பூவும் சரி, கழுதையும் சரி; முள்வேலியும் சரி, கோயில் நந்தவனமும் சரி; பூத்தொடுப்பவளும் சரி, கவிதை எழுதுபவனும் சரி. எல்லாமும் அவன் கவிதையில் இடம்பெற வேண்டும் என்பது அவன் லட்சிய வேகம், உத்தேசம். ஹைக்கூவில் ஒரு உலகம் பூராவையும் உள்ளடக்கி ஜப்பானியக் கவிகள் காட்டுகிறார்கள். அதேபோல ஒரு குறளில் திருவள்ளுவர் உலகம் பூராவையும் அடக்கி காட்டுகிறார். குறள் ஒன்றில், ஹைக்கூ ஒன்றில் குறிப்பிடப்பட்ட விஷயங்களுக்கு அப்பாலும் உலகம் இருக்கத்தான் இருக்கிறது. ஆனால், அந்தக் ஹைக்கூவை அந்தக் குறளை மனத்தில் வாங்கும்போது வாசகனுக்கு வேறு ஒன்றும் இதற்கப்பால் இல்லை என்று தோன்றச் செய்கிறது - பிரமை ஏற்படுத்துகிறது. இதைத்தான் கவிதையின் சிறப்பான லட்சியமாகக் கொள்ள வேண்டும். சிறந்த கவிகள் என்று சொல்லப்படுபவர்கள் எல்லோரிடையேயும் இந்த அம்சம் துல்லியமாகத் தெரிகிறது. தமிழ், ஹிந்தி ஆங்கிலம், சீனம், கிரேக்கம் என்று எந்த மொழியில் எழுதிய கவிகளாயினும் அவர்கள் தங்கள் சிறுசிறு கவிதைகளிலும்கூட உலகம் முழுமையும் படைத்துத் தந்துவிடுகிறார்கள் - அதுபோல ஒரு தோற்றத்தை ஏற்படுத்திவிடுகிறார்கள்.
காவியங்கள் எழுதிய கவிகள் விஷயத்தில் இது அவர்கள் காவியங்களின் பரப்பினாலும், ஆழத்தினாலும், கனத்தினாலும் சாத்தியமாவது தெரிகிறது. சிறு கவிதைகளில் இது எப்படி சாத்தியமாகிறது என்று ஆச்சரியப்பட வேண்டியதாக இருக்கிறது. சாத்தியமாகிறது. அவ்வளவுதான். ஒரு ஸுஃபி கதை நினைவுக்கு வருகிறது. ஒரு சிறு விஷயம் ஒரு பெரிய விஷயத்தை விழுங்கிவிட்டு உருமாறாது எப்படி எந்த விஷயத்தில் காணப்படுகிறது என்று ஒரு ஸுஃபி சுல்தான் கேட்டதாகவும், அதற்கு அவருடைய ஐந்து வயது மகள் ஒரு இருட்டறையில் ஒரு சிறு விளக்கைக் கொணர்ந்தால் இருட்டுப் பூராவையும் விழுங்கிவிட்டு உருமாறாமல் இருப்பது உதாரணம் என்று சொன்னதாகவும் ஒரு கதை. மிகவும் சிறப்பான விஷயம் இது என்று தோன்றுகிறது. இன்னொரு உதாரணமாக ஒரு துளி பனிநீரில் உலகம் பூராவையும் காண்பதாகக் கற்பனை செய்ய முடிகிறது. அதே போலத்தான் சிறு கவிதை - உலக முழுமை விஷயமும் என்று சொல்லலாம்.
பழமையை பெரிசுபடுத்திக்கொண்டு புதுமையை சிறுமைப்படுத்துகிற காரியத்தைக் கவிகள் நிச்சயமாக செய்வதில்லை. பழசைப் பாராட்டும் போதும்கூட அவர்கள் இன்றைய இங்கே நின்று அதே பார்வையுடன்தான் பாராட்டுகிறார்கள். மக்கள் பொற்காலம் போய்விட்டது என்று நம்பலாம். கவிக்கு பொற்காலம் அவன் இருக்கும் காலம்தான். சொர்க்கம் என்பது எங்கேயோ இல்லை. அவன் இருக்கும் இங்குதான் சொர்க்கம். கவியின் வார்த்தைகளுக்கு முழு அர்த்தமும் ‘இன்று’, ‘இங்கே’ என்பதில்தான் ஏற்படுகிறது என்று சொல்லுவது மிகையாகாது. பாலைவனத்திலுள்ள பசுமையையும் கெடுதியில் உள்ள நல்லதையும் மௌனத்தில் உள்ள ஒலியையும் நேற்றிலுள்ள இன்றையும் காணமுடிகிறவன்தான் கவி. ஆணில் பெண்ணையும் பெண்ணில் ஆணையும் அவனால் காண இயலும். மனிதனில் கடவுளையும் கடவுளில் மனிதனையும் அவன் கண்டு சொல்கிறான். அதோடு மனிதனில் மனிதனில்லாமையையும் மனிதன் இருப்பதையும் கண்டு சொல்கிறான். கவி காரியங்களில் இது ஒரு முக்கியமான அம்சம் என்று எனக்கு தோன்றுகிறது. நம்பிக்கை வறட்சி, ஏமாற்றம், விரக்தி என்று எது சொன்னாலும் அதில் வாழ்க்கையைத் தொடர ஒரு பொறி இருப்பதை கவியால் காணமுடிகிறது. கவிஞன் மனிதகுலத்தின் போக்கு மோசமாக இருந்தாலும், ஏமாற்றம் அளிப்பதாக இருந்தாலும், நம்பிக்கை தருவதாக இருக்கிறது என்று கண்டு சொல்வதனால்தான் நமக்கு வாழ்க்கையை தொடருவது சாத்தியமாக இருக்கிறது.
எல்லா மனிதர்களுமே பலவிதமான ஆளுமைகளால் ஆனவர்கள். ஒரே ஒரு ஆளுமை (Personality) தான் ஒருவனிடம் காணக் கிடக்கிறது என்று சொல்வது தவறு என்று சொல்லுகிறார்கள் மனோதத்துவ நிபுணர்கள். காலப்போக்கில் ஆளுமை மாறலாம் என்பது சுலபமாக ஏற்றுக்கொள்ளப்படும். ஆனால் ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு மனிதனுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட ஆளுமைகள் எப்படி இருக்கக்கூடும் என்று சந்தேகம் எழலாம். இதற்குப் பல விடைகள் கிடைக்கலாம். அதில் ஒன்று - ஒரு குறிப்பிட்ட காலத்தில் பல ஆளுமைகளின் போட்டியில் ஒரு ஆளுமை தூக்கி நிற்கிறது என்று ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் ஒரு கவியின் எந்தக் கணமும் பல ஆளுமைகளின் போராட்டத்தினால் ஏற்படுகிற மாதிரி தோன்றுகிறது. ஒரு ஆளுமை போராட்டத்தில் வென்றுவிடுவதாகவும் தெரியவில்லை. கவிதையில் சில சமயம் இந்த ஆளுமைகள் வெளிப்படும்போது ஒரு சிக்கல், விடுவிக்கமுடியாத சிடுக்கு விழுகிறது. இதுவே கவிதைக்கு சிறப்புத் தருவதாகவும் அமையலாம். ஆனால் இது தானாக, சுயபிரக்ஞையுடன் செய்கிற காரியம் அல்ல என்றுதான் தோன்றுகிறது.
கவிகள், கவிதைகள் பற்றி சொல்லப்படுபவை எல்லாவற்றையும் எல்லா இலக்கியத்துறைகளுக்கும் பொதுவானதாகக் கருத முடியாது. சில விஷயங்கள் பொதுவாக அமையலாம். ஆனால் சில விஷயங்கள் கவிதையில் மட்டும் செயல்படுவனவாகும். உதாரணமாக ஆளுமைப் பன்மை. இது நாவலுக்குப் பொருந்தாது என்று தோன்றுகிறது. நாவலில் நாவலாசிரியன் ஆளுமைப்போராட்டங்களைவிட ஆளுமைத்தன்மையைத்தான் காட்டுகிறான் என்று சொல்ல வேண்டும். இதுபற்றி மேலும் சிந்தித்துக்காண வேண்டும்.
கவிதைகள் எப்படி உருவாகின்றன, கவிகள் எப்படித் தங்கள் கவிதைகளுக்கு உருத்தருகிறார்கள் என்று விசாரித்துப் பார்த்தால் அதில் ரஸம் இருக்குமே தவிர, அது சுவாரசியமாகப் படலாமே தவிர, உபயோகப்படாது எந்த விதத்திலும் என்று தோன்றுகிறது. இரண்டு கவிகள் ஒரே மாதிரி கவிதை சிருஷ்டிக்க முன்வருவதில்லை. பல கவிகள் பொதுவான விஷயங்களிலிருந்து தனிப்பட்ட விஷயங்களை எட்டுவதாக சொல்லுவார்கள். சிலர் தனிப்பட்ட விஷயங்களில் தொடங்கிப் பொதுமையை எட்டுவதாக சொல்வார்கள். சிலர் கவிதை பூராவையும் மனத்தில் உருவாக்கிக்கொண்டு பின்னர் எழுத்தில் வடிப்பார்கள். ஒருசிலர் முதல் வார்த்தைக்கு அப்பால் சிந்தனையேயில்லாமல் தொடங்கி வார்த்தைக்குப்பின் வார்த்தை சேர்த்து கவிதை செய்வார்கள். இதுபற்றி போதுமான அளவில் தங்கள் கவிதைமுறைகளை பற்றி கவிகளே குறிப்பிட்டு வைத்திருக்கிறார்கள். ஆனாலும் கவிதை எப்படி உருவாகிறது என்பது பற்றி போதுமான அளவுக்கு நமக்கு விஷயம் கிடைக்கவில்லை. ஒரு புறசம்பவத்தை அகநிகழ்ச்சியை வார்த்தையில் போட்டோ பிடித்து வைப்பதாக தங்கள் கவிதைகளைப் பற்றி சில கவிகள் கூறுகிறார்கள் - ஒரு சம்பவத்தை, உள்ளத்தில் ஏற்பட்ட வடுவை மறைப்பதற்காக எழுதுவதாக சில கவிகள் சொல்லுகிறார்கள்.
நான் எப்படி என் கவிதைகளை எழுதுகிறேன் - எப்படி அவை கவிதைகளாக (எனக்கு மட்டும்தானா?) தோற்றம் அளிக்கின்றன என்று நான் என்னையே கேட்டுக்கொள்கிறேன். சில சமயம் ஏதோ ஒரு வரி வானத்திலிருந்தோ எங்கிருந்தோ (சிவன் சேக்கிழாருக்கு அடியெடுத்து கொடுத்த மாதிரி) என் அகத்தில் உதிக்கிறது. ‘தெரிந்தது பாதி’ என்று சொல்லிவிட்ட உடனே அதில் ‘தெளிந்தது காலே அரைக்கால்’ என்று தொடருவது சாத்தியமாக இருக்கிறது. பாதி, காலே அரைக்கால் என்று வந்தவுடன் கவிதை தானே எழுதி உருவாகிவிடுகிறது. கால், அரைக்கால், வீசம் என்று பின்னங்கள் ஏற்பட்டுவிடுகின்றன. கவிமரபின் முழுமையும் முழுமை இல்லாமையும் உடனே தெரிகிறது. கவிதை முழுமை பெற்றுவிட்டது.
வேப்பமரத்தடி வீட்டை பார்க்கலாம் என்று போனேன். அந்த வீட்டில் தாயார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் இருந்தாள். கதவு சாத்தியிருந்தது. கதவைத் தட்டினால் அம்மா வந்து கதவைத் திறப்பாளோ? வேப்பமரம் இருந்தது. என் நினைவுகள் இருந்தன; எதிர் வீட்டு நாகஸ்வர கத்துக்குட்டி இன்னமும் அபஸ்வரமாக வாசித்துக்கொண்டிருந்தான், ஐம்பது ஆண்டுகளாக அபஸ்வரத்தை அகற்ற. இப்படி உருவானது ‘அபஸ்வரம்’ என்கிற கட்டுரை.
எப்போதும் கவிதைக்கும் இப்படித் தனியாக ஒரு கதை சொல்லலாம். ஒவ்வொரு கவியினுடைய ஒவ்வொரு கவிதைக்குமே இப்படித்தானே. கவிதைகள் தனித்தனி சந்தர்ப்பங்களால் தனித்தனி அளவில் உருவங்கள் பெறுகின்றன. இரு கவிகள் ஒரு சந்தர்ப்பத்தில் சம்பந்தப்பட்டிருக்கலாம். ஆனால் அதை கவிதையாக்கும்போது இருவரும் வெகுவாக மாறுபட்ட கவிதைகளையே எழுதுகிறார்கள். பேசிக்கொண்டு அதே சம்பவத்தை எழுத முயன்றாலும் ஒரே மாதிரியாக வருவதில்லை. கவிகாரியத்தில் இதை ஒரு விசேஷமாகவே கருதவேண்டும். கவியின் ஆளுமை முழுமை அவன் சாதனமாகிய கடினமான வார்த்தைகளை இளக்கி கவிதை செய்து வார்த்தைகளை பொறுக்கிவிடுகிறது. எத்தனை கவிகள், எத்தனை நன்றாக கவிதை எழுதியிருக்கிறார்கள் என்று சொல்ல முடிகிறது. இன்னமும் கவிதை தொடர்ந்து சாத்தியமாகிக்கொண்டிருப்பது இதனால்தான் என்று சொல்லலாமா?
ஒரு கவிஞனின் அனுபவமும் அப்படியே கவிதையாக உருப்பெறுகிறதா என்ற கேள்விக்கு அநேகமாக இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அனுபவம் அகல, நீள சந்தர்ப்பங்களில் ஒன்றேயாக இருக்கலாம். அது எழுப்புகிற அகஅலைகள் வேறு வேறு மனிதர்களுக்கு வேறு வேறாகத்தான் இருக்கும். கவிஞன் விஷயத்தில் இந்த அக அலைகள் அவன் அகத்தில் ஏற்கெனவே ஒரு கம்ப்யூட்டரில் உள்ளது போலப் பதுங்கிக்கிடக்கும் வேறு அகஅலைகளைத் தொடுகின்றன. இரண்டினுடைய மோதலாலும் கவிதை பிறக்கிறது. சாதாரண மனிதனுக்கு கவிதை சிருஷ்டிக்கும் சக்தியுமில்லை! அக அலைகள் என்ற வேறு கம்ப்யூட்டர் ஸ்டோரேஜூம் இல்லை.
எந்த கவிஞனும் எழுதிய கவிதைகளைவிட எழுத வேண்டும் என்று எழுதாமல், உருவாக்க முடியாமல் விட்ட கவிதைகள்தாம் அதிகமாக இருக்கமுடியும். எந்த அனுபவமும் ஏற்பட்டவுடனே கவிதையாக்கப்பட்டுவிடுவதில்லை. அந்த அனுபவம் அக அலையாக உருவாகி மற்ற அக அலைகளுடன் மோதி கவிதையாக வேண்டியதாக இருக்கிறது. அந்த அனுபவத்தில் அசைபோடுவதற்கு காலம் பொழுது வேண்டும். சில அனுபவங்கள் லேசான வடுக்களை ஏற்படுத்திவிட்டு புதுக்கவிதைக்கு இடம் தராமல் மறந்துபோய்விடக்கூடும். அல்லது அது கம்ப்யூட்டர் ஸ்டோரேஜில் அவசியமானபோது நினைவுக்கு இழுத்துவரக்கூடியதாக பின்னால் போய் ஒளிந்துகொள்ளக்கூடும். இதுதான் காரணம் என்று தோன்றுகிறது கவிஞனின் எல்லா அனுபவங்களும் கவிதைகளாகிவிடாமல் போய்விடுவதற்கு. சிலவே கவிதையாகின்றன.
கவிஞன் எழுதுவதைத் தனித்தனி கவிதைகளாக எழுதினாலும் எல்லாமாக சேர்ந்து ஒரு பெரிய காவியத்தின் பாகங்கள், தூண்கள் என்றுதான் சொல்ல வேண்டும். விஷயம் வேறுவேறாக இருப்பினும் எல்லா சிறு கவிதைகளுமே அவற்றை எழுதிய கவியின் மனப்போக்கை ஒருமைப்படுத்தும் விசேஷ அம்சத்தினால் எழுதப்பட்டவைதான். அதனால்தான் இந்தகாலத்து கவிகள் காவியங்கள் எழுத முன்வரவில்லை என்று எனக்கு தோன்றுகிறது. கவியின் வாழ்க்கை ஒரு தொடராக அமைவது போல சிறு கவிதைகளின் தொகுப்பும், ஒரு தொடர் காவியத்தின் சில பகுதிகளாக அமைகின்றன. சில சமயங்களில் தொடர்புகள் விட்டுப்போயிருக்கலாம். அதனால் பாதகமில்லை. ஹோமர்கூட யுலிஸிஸ் செய்த எல்லா காரியங்களையும் சொல்லியிருக்க முடியாது - ஏதோ விட்டுத்தான் போகும். ஹோமரைவிட என்ன செய்கிறோம் என்று அதிகப் பிரக்ஞையுடன் எழுதிய ஜேம்ஸ் ஜாய்ஸ் குறிப்பிட்ட நாளில் நடந்த எல்லா விஷயங்களையும் தன் நாவலில் கொண்டுவந்திருக்க முடியாது. விரும்பி இன்னோரன்ன பல விஷயங்களும் இருந்தன என்று சுட்டிக்காட்டுவதே முழுமையாகிவிடுகிறது.
காவியம் என்கிற வார்த்தையை கவிதைக்கு மட்டுமல்லாமல் படைப்பிலக்கியத்துறைகள் - நாவல், நாடகம், சிறுகதை, ஜீவிய சரித்திரம், சரித்திரம் எல்லாவற்றிற்கும்கூட உபயோகிப்பதுதான் சரி என்று சிலர் சொல்லக்கேட்டிருக்கிறேன். இது நியாயம் என்றுதான் தோன்றுகிறது. தன் ஆளுமையை, Personality ஐ வெளிக்கொணர முயலுகிற கவி ஆயுள் பூராவும் தன் காவியத்தை, தன்னை வெளியிட முயற்சித்துக்கொண்டிருக்கிறான். ஆளுமை ஓரளவுக்கு மாறும். ஆனால் முளையில் கட்டிய மாடு போல ஓரளவுக்கு அதிகமாக நகர்ந்துவிட முடியாது. அந்த முளையும் கயிறும் மாடும் முக்கியமாகிவிடுகின்றன - பதி, பசு, பாசம் என்கிற அளவில். அது வேறு சந்தர்ப்பத்தில். இது வேறு சந்தர்ப்பத்தில். மத சந்தர்ப்பத்தைவிட கவிதை சந்தர்ப்பம் முக்கியமானதாகவே எனக்கு தோன்றுகிறது.
கவிதை கவிதையாக இருப்பது அழகாகவே இருக்கிறது என்றாலும் அதில் சில சோதனைகள் செய்து பார்க்கலாம் என்று தோன்றுகிறது. கிரேக்கர்களும், ஆங்கிலேயர்களும் கவிதையை நாடகங்கள் படைக்க உபயோகித்தார்கள். கிரேக்க சோக நாடகாசிரியர்களும், ஷேக்ஸ்பியரும் உலக இலக்கியத்தின் பொக்கிஷங்களாக கருதப்படுகின்றனர். தமிழில், செய்யுளில் நாடகம் செய்து பார்த்தார் ‘மனோன்மணீயம்’ ஆசிரியர் சுந்தரம்பிள்ளை. ஆனால் நிஜமாகவே கவிதையில் நாடகம் செய்து பார்ப்பது கவிதைக்கும் புத்துயிர் ஊட்ட வழி செய்யும் என்று எனக்கு தோன்றுகிறது.
வசனத்தில் நாடகம் எழுதுவது சரி, தப்பு என்பதல்ல விஷயம். கவிதையில் எழுதுவதனால் நாடகத்துறைக்கு லாபம் இருக்கலாம். கவிதைத்துறைக்கும் ஒரு புதுமை சேரலாம் என்று தோன்றுகிறது. புதுக்கவிதை எழுதுகிற தமிழ் கவிகள், நாடகங்கள் எழுதிப் பார்க்கலாம் என்று எனக்குத் தோன்றுகிறது. புதுக்கவிதையாக நாடகம் செய்து பார்க்க வேண்டும் என்கிற ஆசை எனக்கு வெகுநாளாகவே உண்டு. என் ‘பேரன்பு’ கவிதை ஒரு நாடகத்தின் பகுதியாகத்தான் கற்பனை செய்து எழுதப்பட்டது. அப்போது 1939-ல் ‘பேரன்பு’ என்கிற நாடகத்தின் வேறு பகுதிகளையும், புதுக் கவிதையாக எழுதிப்பார்த்த நினைவிருக்கிறது. அது எங்கேயாவது நோட்புக்கில் இருக்கும். தேடிப் பார்க்க வேண்டும். இப்போது புதுசாக புதுக்கவிதை மூலமாக ஒரு நாடகம் எழுதுவதில் முனைந்திருக்கின்றேன். எப்படி அமைகிறது - பார்க்கவேண்டும்.
***
0 comments:
Post a Comment