கலீல் கிப்ரான் கவிதைகள்

குழந்தைகள் பற்றி


உங்கள் குழந்தைகள் 

உங்கள் குழந்தைகள் அல்ல. 

அவர்கள் 

உயிர் தன்னை நேர்ந்து உயிர்ப்பிக்கும் மகனும் மகள்களும். 


அவர்கள் 

உங்கள் வழியாக வருகிறார்கள் 

உங்களுக்காக அல்ல. 

உங்களோடு இருப்பினும் 

உங்களுக்குரியவர்கள் அல்லர். 


அவர்கள் மீது 

அன்பை செலுத்தலாம் 

உங்கள் எண்ணங்களை அல்ல. 

ஏனெனில் 

அவர்களே அவர்தம் 

எண்ணங்கள் கொண்டவர்கள். 


உடல்களுக்கு இருப்பிடமாக இருக்கலாம் 

உயிர்களுக்கல்ல. 

ஏனெனில் 

அவர்களின் உயிர் 

வருங்காலத்தில் வசிக்கின்றன. 

அங்கு நீங்கள் செல்ல முடியாது, உங்கள் கனவிலும் கூட. 


அவர்களை போலாக 

நீங்கள் முயற்சிக்கலாம் 

ஆனால் 

அவர்களை 

உங்களைப் போலாக்க முயற்சிக்காதீர்கள். 

ஏனெனில் 

வாழ்வு பின்னோக்கி  செல்வதல்ல, நேற்றோடு தேங்கிநிற்பதுமல்ல. 


உங்களின் வில் நாணேற்றி எய்தும் உயிர் அம்புகள் உங்கள் குழந்தைகள். முடிவிலியின் பாதையில் குறிவைத்து, 

வில்லாளன் தன் வல்லமையால் வளைக்கிறான் வில்லை, 

அவன் அம்புகள் விசையுடன் வெகுதூரம் செல்ல. 


வில்லாளனின் கரங்களில் 

களிப்புடன் வளைந்திருங்கள். 

ஏனெனில் 

விரைந்து விண்ணேகும் அம்பை நேசிக்கும் அவன், 

கரத்தில் நிலைத்து நிற்கும் வில்லையும் நேசிக்கிறான். 

(தமிழில்: வேணு வேட்ராயன்)

***

அச்சம்

கடலுக்குள் நுழைவதற்கு முன்பு

ஒரு நதி பயத்தில் நடுங்குகிறது என்று கூறப்படுகிறது

தான் பயணித்த பாதையை அது திரும்பிப் பார்க்கிறது


மலையின் சிகரங்களிலிருந்து காடுகளை

கிராமங்களை கடந்து வந்த நீண்ட நெடிய பாதை

எதிரில் அது பார்க்கிறது மிகப் பெரிய சமுத்திரத்தை


அதற்குள் நுழைவதென்றால் என்றென்றைக்கும்

காணாமல் போவதென்று அர்த்தம்


அனால் வேறு வழி இல்லை

அந்த நதி திரும்பி செல்ல முடியாது

எவரும் திரும்பி செல்ல முடியாது


திரும்பி செல்வது வாழ்வில் சாத்தியமில்லை

சமுத்திரத்தில் நுழைவதெனும் முடிவைத் துணிந்து

எடுத்துத்தான் ஆகவேண்டும்


ஏனெனில் அப்போது தான் அச்சம் அகலும்

ஏனெனில் அங்கு தான் நதிக்குப்  புரியும்

சமுத்திரத்தில் நுழைவதென்பது...

மறைந்து போவதல்ல

அது சமுத்திரமாய் ஆவது!

(தமிழில்: ரவிகுமார்)

***

பயணம் செய்

பயணம் செய்

யாரிடமும் சொல்லாதே!

உண்மை காதல் கதையாய் வாழ்

ஒருவருக்கும் சொல்லிவிடாதே!

மகிழ்ச்சியாக வாழ்

ஒருவருக்கும் சொல்லிவிடாதே!

மக்கள் அழகான பொருட்களை

அழித்துவிடுவார்கள்...

***

Comments

தொடர்புக்கு

உங்கள் கவிதைகள், கருத்துகள், கேள்விகள்

உங்கள் கவிதைகளை Word கோப்பாக இணைத்து அனுப்புங்கள். இதழ் குறித்த கருத்துகளையும் கேள்விகளையும் இங்கே எழுதலாம். விரைவில் பதிலளிக்கிறோம்.