அகதிச்சிறுவனின் இருள் மாசானம்
அந்திவேளை கருக்கல்
சிறுவன் கையில் ஊதுகுழல்
வாயில் வைத்துக் கொண்டு பேசினான்
தொடந்து பேசினான்
ஓர் புதிய ஒளியின் காலை,மதியவெயில்,கருக்கல்
இரவின் நட்சத்திரங்கள் ,குளிர்,முழு நிலவின் அமைதி
ஓர் அமாவாசையில் நதி ஒளித்துக் கொண்டதை
மிகத் தெளிவாகப் பேசினான்
ஒரு பயங்கரம் இரவில் குண்டுகள் வீழும் சப்தம்
அதிர்ச்சி பிரமைகள்,குழந்தைகளின் கதறல் ,மற்றும்
பெண்களின் ஓலம்,புகைக்காற்று,தீ
ஊதுகுழலின் துவாரத்தில் சுருங்கும் காற்று ஓர் தீவு
குழலை கையில் பிடித்துக் கொண்டான்
தாழ்ந்த குரலில் - அண்ணே
நான் சுவாசித்த பூமி ,வானம்,மழை,
நதி,நிலவு,காற்று
இந்த மலை, இன்னும் இன்னும்
எல்லாவற்றையும் நன்றாக ஊதினேனா !
இந்நேரம் சூரியன் தாழ்ந்தே போய்விட்டான்
தம்பி நீ யார் ?
தென்கிழக்குத் திசையை காட்டி - அங்கிருந்து
எனக்கு ஒன்பது வயதிருக்கும் போது இங்கு
வந்து விட்டோம்
வருஷம் 12 ஓடிவிட்டது
அதோ அந்த வேலியிடப்பட்ட கூடாரத்திற்குள்
தங்கியிருக்கிறோம்
உன் அம்மா அப்பா?
; எனக்குத் தெரியாது
என் பெயர் : இந்திரஜித்
[ சூனியப்பிளவு கவிதை தொகுப்பிலிருந்து...]
இந்தக் கவிதையின் தலைப்பு என் பெயர் இந்திரஜித் என்றே என் நினைவில் தவறாக பதிவாகியுள்ளது. ஆனால் அதுவே சரியானதாகவும் தோன்றுகிறது. இந்தக் கவிதையில் போலி பாவனை இல்லை. தட்டையான உணர்ச்சி இல்லை. குழலில் எல்லாவற்றையும் சொல்லிவிடும் இடம் கவிதையை உயர்த்துகிறது. தமிழில் எழுதப்பட்ட ஈழக் கவிதைகளில் இந்தக் கவிதை தனித்துவமானது. நிலைத்து நிற்பது.
***
0 comments:
Post a Comment