![]() |
குன்வர் நாராயண் |
இந்தி கவிஞர் குன்வர் நாராயணின் கவிதை ஒன்றின் தலைப்பு "காலி பீச்சா" வெறுமென பின்தொடர்வது. பின் தொடர்வதற்காக ஓடும் பாவனை, துரத்தப்படுகிறோமா என்ற நோட்டம், துரத்துவதற்கான எத்தனிப்பு அனைத்தும் தீரா ஓடி விளையாட்டாக, ஒத்திசைவாக, பெரும் ஆடலாக, லீலையாக பேருரு கொண்டு ப்ரபஞ்சத்தை இயக்கிக்கொண்டிருப்பது இவரின் இக்கவிதையில் திதிலியின் ஆடலில் பிரதிபலிக்கிறது.
பட்டாம்பூச்சிகளின் பூமியில்
முன்னொருமுறை எனக்கொரு கற்பனை
பட்டாம்பூச்சிகளின் பூமியை சென்றடைந்த என்னை
பட்டாம்பூச்சியொன்று துரத்துவதாக.
நான் நின்றேன்
ஆகவே அதுவும் நின்றுவிட்டது
பின்னல் திரும்பி பார்த்தேன்
ஆகவே அதுவும் தனக்குப் பின்னால் திரும்பிப் பார்த்தது
அதைத் துரத்திக்கொண்டு நான் போகத் துடங்கியதும்
அதுவும் தன்னைத் தானே துரத்தத் துடங்கிற்று
உண்மையில் என்னைப்போன்றே
அதுவும் ஒரு கற்பனையில் ஆழ்ந்திருந்தது
பட்டாம்பூச்சிகளின் உலகத்தில் இருப்பதாகவும்
யாரோ ஒருவர் அதைத் துரத்துவதாகவும்.
கவிதைகளில் நான் எப்போதும் வியக்கும் விஷயம் ஒன்றுண்டு. அதற்குள் ஒளிந்திருக்கும் தரிசனம் வாசகருக்கு திறந்துகொள்ளும் தருணம். தர்க்கப்பூர்வமாக எத்தனை முட்டினாலும் பிடி கிடைக்காத கவிதை, மனதை லேசாக்கி கவிதையின் வடிவில், சொல்லில் தியானித்தால் அந்த தரிசனம் வாசகரின் அக கண்ணில் நிகழ்வதை உணரமுடியும். அப்படிப்பட்ட தருணங்கள் அற்புதமானவை, கவிதை நேரடியாக ஏதோ நம் ஆழத்தில் இருக்கும் ஜோதியை பற்றவைத்தது போல் தோன்றும். எப்படி அது நிகழ்ந்தது என்று யோசித்தால், அந்த சொற்களின் மூலமாகவா என்று பார்த்தால், வெறும் சொற்களிலிருந்து இல்லை, அதை தாண்டி கவிதைகளில் வாழும் அருளால் என்றே தோன்றும். குன்வர் நாராயணனின் இந்த கவிதை அத்தகைய அனுபவத்தை எனக்களித்தது.
சொல்
இது அதே சொல்தான்
இந்த ஜென்மத்துக்கு முன்பு
எங்கே நான் ஜென்மமெடுத்திருக்க கூடுமோ
இது அதே இடம்தான்
இந்த காதலுக்கு முன்பு
எந்தப் பருவத்தில் நான் காதலித்திருக்கக்கூடுமோ
இது அதே பருவம்தான்.
இந்த காலத்துக்கு முன்பு
எந்த சமயத்தை நான் கழித்திருக்கக்கூடுமோ
இது அதே காலம்தான்
மீண்டும் சந்திப்போம் என
எங்கே நான் வாக்களித்திருந்தேனோ
அங்கேயே ஏதேனுமொரு இடத்தில
தங்கிப்போய்விட்டது
ஒரு கவிதை.
இந்த வாழ்விற்கு முன்பு
முடியாத வாழ்வை எப்போதோ வாழ்ந்திருக்கக்கூடுமோ
இது அதே சொல்தான்.
மீண்டும் சந்திப்போம் என
எங்கே நான் வாக்களித்திருந்தேனோ
அங்கேயே ஏதேனுமொரு இடத்தில
தங்கிப்போய்விட்டது
ஒரு கவிதை.
கனவில் ஒரு நொடியில் இந்த கவிதை முழுமையாக விரிய துவங்கியது. கூகிள் மேப்ஸில் சாட்டிலைட், ட்ராபிக், டெர்ரன், ஸ்ட்ரீட் என பல விதங்களில் நாம் வழியை காண முடியும். அப்படி 3D ஆக 6D ஆக இடம், காலம், நேரம், மனிதர்கள், தருணங்கள் எல்லாம் விரிந்து கொண்டே சென்றது. ஹாரிஸாண்டிலாக (கிடைமட்டமாக) பல ஜென்மங்களுக்கு நீண்டு, இவை அனைத்தையும் ஒன்றாக கோர்த்திருந்த நூல் அந்த சொல்லென உணர்ந்தேன். இக்கவிதையில் மற்றும் ஒரு தரிசனம் கடைசி வரிகளில் நிகழ்கிறது. அந்த சொல்லை அந்த இடத்தில் நிலைநாட்டும் சக்தி கவிதை வடிவில் சொற்களை வெளி அனுப்பி அனைத்தையும் இணைந்திருக்கிறது. பறந்து விரிந்த வெளியிலும், ஆழத்தின் ஆழத்திலும் சொல் நிறைந்திருக்கிறது, சொல் இணைக்கிறது, சொல் சாட்சியாய் நிற்கிறது.
***
0 comments:
Post a Comment