தந்தை கொலை என்பது உலக இலக்கியத்திலேயே
குறியீட்டு ரீதியாக முக்கியமானது. தஸ்தோவ்ஸ்கியின் ’கரம்சோவ் சகோதரர்கள்’ நாவல் இதனையே கேள்வி எழுப்புகிறது. ஒரு இளைஞன் முதலில் தன் கட்டை உடைத்து வெளி வருவது தந்தை கொலை வழியாக தான்.
ஆனால் அந்த மூர்க்கம் தளர்ந்து தளர்ந்து சாய தொடங்கும். தந்தைக்கு எதிரான நிமிர் ஒரு கட்டத்தில் பணிய தொடங்கும். உலக இலக்கியத்தில்
இத்தனை பேசப்பட்ட பின்பும் இந்த மறுபாதி பேசப்படாமல் இருக்கிறது என்றே தோன்றுகிறது.
அது ஒரு கனிந்த மனநிலையில் ஏற்படும் தரிசனம். உலகத்தை மாற்றியமைக்க ஓடிக் கொண்டிருக்கும்
இளைஞனின் கண்களுக்கு அவை ஒரு பொருட்டல்ல. அந்த ஓட்டம் ஓய்ந்து அடங்கும் போது நிமிர்ந்த விட்டம் கொஞ்சம் கொஞ்சமாக சாய தொடங்கும்.
அப்படி ஒரு தரிசனத்தை கண்டடைந்தது லட்சுமி மணிவண்ணனின் கீழுள்ள கவிதை. அவர் கவிதையில் வெளிப்படும் இரண்டாம் கட்ட பாய்ச்சலின் ஒரு குறியீடு எனச் சொல்லலாம். அந்த மூர்க்கமாக வெட்டி சாய்ந்து வந்து இளைஞன் மெல்ல மறைந்து ஒரு தந்தையின் கனிவு புலப்படும் இடத்தில் நின்றுகொண்டு நிகழும் கவிதை இது.
- ஜி.எஸ்.எஸ்.வி.நவீன்
***
அப்பா
உன்னுடைய தோல் சுருங்கிய உருவம்
சதை வற்றிய வடிவம்
ஆற்றல் குறைந்த நீ
ஓங்கிக் கத்தாதே
சத்தமிடாமல் உற்றுப் பார்க்க வேண்டிய
ஒன்றிருக்கிறது
அதன்
இப்போதைய
தோற்றத்தில்
உன்னை தாங்கி நின்ற தூண்
சற்றே சாய்ந்து வருகிறது
எவ்வளவு சாய்கிறதோ
அவ்வளவுக்கு
உன்னையும் சேர்த்து இழுத்துக் கொண்டு
சாய்ந்து வருகிறது
எவ்வளவுக்கு சாய்கிறதோ
அவ்வளவுக்கு
உன் குழந்தை
நிமிர்ந்து
வருகிறது
தவழ்தலில் தொடங்கி
மாயக் கயிற்றின் விட்டம்
நிமிர நிமிர
சாய சாய
- லட்சுமி மணிவண்ணன்
***
லட்சுமி மணிவண்ணன் விக்கி பக்கம்
0 comments:
Post a Comment