ஐந்து பேர் அமரும் பெஞ்சில் முதலாவது ஆளுக்கு வழங்கப்படும் டீ ஆள் மாறி ஆள் மாறி ஐந்தாவது நபரிடம் வந்த காட்சியை ஒரு அதிசயமாக நான் பார்த்துக் கொண்டிருந்தேன். கவினின் இந்தக் கவிதையில் ஒளியை உள்வாங்கும் மலர், அதை பூமிக்குத் தருகிறது. தாதிப் பெண்ணிடமிருந்து குழந்தை தாய்க்கு கைமாற்றப்படுவது போல. மலர் குப்புற கிடக்கிறது என்கிற வார்த்தை அற்புதமானது. ஒரு இனிய அசதி.
உதிர்தல் நிமித்தம் போல் பல கவிதைகள் தமிழில் வந்திருப்பினும் இது புத்தம் புது கவிதையாகிறது. 'அப்பா கீழ குனியேன்' என்று அப்பாவின் காதில் முணுமுணுக்கும் குட்டி மகளைப் போல் இம்மாம்பெரிய பூமிக்கு சொல்வதற்கு இத்தணூண்டு மலரிடம் என்னவோ இருக்கத்தான் செய்கிறது.
- மதார்
***
அன்றாடத்தின் ஒளியை
மிக எளிமையாக உள்வாங்கி
ஈரம் சொட்டிக்
குப்புறக் கிடக்கும்
வெண்ணிற மலர்கள்
பூமிக்குச் சொல்வதென்ன?
இவ்வளவு பெரிய பூமிக்கு
சின்னஞ்சிறிய
பூவொன்றுக்குச்
சொல்ல இவ்வளவு இருக்கிறது
- கவின்
(‘கீறல் பிரதிகளின் தனிமை’ தொகுப்பிலிருந்து)
***