நவீன கவிதையில் தொழில்நுட்பத்தை எழுதுவது அரிது; கடினமும் கூட. வாட்ஸப், பேஸ்புக், அலைபேசி என்று பல நவீன விஷயங்களை கவிதையில் கவிஞர்கள் கையாண்டிருந்தாலும் குறிப்பிடத்தகுந்த கவிதைகள் என்பது மிகவும் குறைவே. இரா.பூபாலனின் இந்தக் கவிதை அந்த வகைமாதிரியில் குறிப்பிடத் தகுந்த ஒரு கவிதை. Zoom, camera vision, 3D image மூன்றும் இந்தக் கவிதையில் வருகின்றன. முப்பரிமாண கண்ணாடி போட்டுக் கொண்டு வாசித்தது போல் உணரச் செய்யும் கவிதை.
கவிதையில் ஒரு பொருள் வைக்கப்படும் இடம் முக்கியமானது. அதுவே அந்த கவிதையின் வழியை தீர்மானிக்கிறது. இந்தக் கவிதையில் வரும் மைனா ஒரு மரத்திலோ அல்லது வானிலோ வைக்கப்பட்டிருந்தால் கவிதையின் போக்கே மாறியிருக்கும். மைனா மொபைல் கேமராவுக்குள் வைக்கப்படுகிறது என்கிற புதுமையே முதலில் இந்தக் கவிதையின் மீதான ஆர்வத்தை கூட்டி விடுகிறது. கேமராவை சூம் செய்பவன் கவிஞனுக்கு கவிஞன்; வாசகனுக்கு வாசகன். இறுதியாக கவிதையில் நிகழும் அந்த முடிவு கவிதையை வேறொன்றாக்கி விடுகிறது.
- மதார்
எப்படியோ வழிதவறி
யாருமற்ற
வீட்டுக்குள் நுழைந்திருக்க வேண்டும்
சன்னல்களில்
சுவர்களில்
மோதி மோதித்
திரும்புகிற
ஒரு மைனாவை
வீட்டிலிருந்து வெகுதூரத்தில்
இருந்தபடி
தன் கை பேசிக் காணொளியில்
காண்பவன்
செய்வதறியாது திகைக்கிறான்
ஒளிர்திரையை
இரு விரல்களால்
பெரிதாக்கிப் பெரிதாக்கி
அங்கலாய்க்கிறான்
அது பயத்தில்
கண்ணாடி சன்னலில்
ஆக்ரோஷமாக மோதுகிறது
ஜீம் செய்கிறான்
இன்னும் அதிவேகமாகத்
தொடுதிரையை மோதுகிறது
இன்னொரு ஜீம்
அது இவன் விழித்திரையில்
மோதுகிறது
அடுத்த ஜீமில்
அலகால் இவனை இரண்டாகப் பிளந்து
வெளியேறிப் பறக்கிறது.
- இரா. பூபாலன்