டி.அனில்குமார் சமகால மலையாள கவிதைகளின் முக்கியமான முகம். நெய்தல் நிலத்தின் வாழ்வை, அதனுள்ளிருக்கும் ஒருவன் வந்து எழுதும்போது மட்டுமே கிடைக்கும் கவித்துவ தருணங்களை இவரது கவிதைகள் மிகச்சரியாக பதிவு செய்கின்றன. இவரது முதல் கவிதைத் தொகுப்பு ‘அவியங்கோரா’ வெளியாகி முக்கியமான கவனத்தைப் பெற்றுள்ளது.
இறப்பை அல்லது ஒரு பிரிவை குழந்தைகள் அந்த கணத்தில் உணர்வதில்லை. அது அவர்கள் மனதில் மெல்ல தேங்கி பின் ஒலிக்கும். கு.அழகிரிசாமியின் ‘இருவர் கண்ட ஒரே கனவு’ கதையில் அதனை அத்தனை அழகாக சித்தரித்திருப்பார்.
’இருவர் கண்ட ஒரே கனவு’ கதை போல் டி.அனில்குமாரின் இந்த அவியங்கோரா கவிதையிலும் அந்த குழந்தைகளின் குழந்தைமை வெளிப்படுவதுடன் நின்றுவிடவில்லை. அதன் மேலதிகமாக வாழ்வின் குரூரம் வந்து அமர்கிறது. அந்த குரூரத்தின் எடையை கவிதை மொழி தாங்கி கனக்கிறது.
- ஆனந்த் குமார்
***
அவியங்கோரா
இறுதிச்சடங்கு
முடிந்து
பூச்சியாக
ஆன்மா வீட்டிற்கு
வந்தது
‘அப்பா..
அப்பா’ என
நாங்கள் ஒன்பதுபேரும்
கூவினோம்
எண்ணைப்பூசி
அப்போதுதான்
படுத்திருந்த அம்மா
கொண்டையை
வாரிச்சுருட்டி
தெறிக்கும்
கடல்மொழியில்
நாலு கெட்டவார்த்தைச்
சொன்னாள்
‘அப்பா
அப்பா
ஓஞ்செறகு ஏன்
இப்படியிருக்கு
கல்லறையில் எப்படிக்
கெடந்துறங்குவ நீ’
நாங்கள் ஒன்பதுபேரும்
முழந்தாளிட்டு
கேட்டோம்
‘வலையை
எடுங்க மக்களே
ஏறி நடங்க
அவியங்கோரா அள்ளிட்டு
திரும்பலாம்’
பொழுது ஒளிகொள்ள
ஈரத்துணியுடன்
நாங்கள் பத்துபேரும்
திரும்பி வந்தோம்
அம்மா நன்றாக
உறங்கிக்கொண்டிருந்தாள்
‘சீ !
எழுந்திருடீ’
அப்பா கூச்சலிட்டார்
அவியங்கோரா வெந்த மணம்
மரவள்ளியுடன் உப்பும்
மிளகும்
ஏப்பம்விட்டு அப்பா
கிளம்பினார்
‘அப்பா
அப்பா
எங்கே போற
இங்கேயே இருந்துக்கோ
நாங்க பத்து பேரும்
போயி படுத்துக்கிறோம்
கல்லறையில்’
- டி.அனில்குமார்
* அவியங்கோரா – ஒரு
சிறிய மீன்
***
மலையாளத்தின் புதுமுக கவிஞரான டி. அனில் குமார் நெய்தல் நிலத்தில் வளர்ந்தவர். அவரது கவிதைகளை வெறும் அந்நிலத்தின் காட்சி படிமங்கள் என்றே சொல்லத் தோன்றுகிறது. அந்த காட்சியை விரித்து வாழ்வின் கவித்துவமான தருணத்தோடு முடிச்சிட்டு கவிதை புனைகிறார் டி.அனில் குமார்.
இந்த கவிதையில் பிள்ளைகள் விளையாடும் முற்றத்தில் படகில் வந்தமரும் அந்த ஆச்சி யார்? எங்கெங்கோ பயணித்து அந்த வீட்டின் முற்றத்தில் அமரும் மூக்குவத்தி எனச் சொல்லுமிடத்திலிருந்து கவிதை ஆரம்பமாகிறது.
- ஜி.எஸ்.எஸ்.வி.நவின்
***
படகு
பிள்ளைகள் விளையாடும் முற்றத்தில்
வலை விரித்திருந்தாள் ஒரு ஆச்சி
‘இப்பதான் வந்தேன்’
கரையேறியிருந்த படகைச் சுட்டி
அவள் சொன்னாள்
இதுபோன்ற படகு
850 வருடங்கள் பழமையானது
85 வயதுள்ள இந்த ஆச்சி
இதிலெப்போது போய்வந்தாள்
அப்போதுதான் தெரிந்தது
அவள் அந்தவீட்டை சேர்ந்தவளல்ல
அவள் ஒரு பயணி
அவள் புறப்பட்டு 850 வருடங்கள் ஆகிறது
அரபியாய்
பிரெஞ்சுக்காரியாய்
டச்சுக்காரியாய்
இப்போது இந்த குடிசைமுற்றத்தில்
ஒரு முக்குவத்தியாக
சிறிது நேரம் கழித்து
படகை தள்ளி போகிறாள்
85 வயதுள்ள
850 வருடங்கள் முன்பே புறப்பட்ட
ஒரு ஆச்சி
- டி. அனில் குமார்
- தமிழில் மொழிபெயர்ப்பு ஆனந்த் குமார்
***