இருட்டு
நடந்தேன், நடக்கின்றேன்,
நடந்து நடந்தே குகின்றேன்.
நடந்தேன், நடக்கின்றேன்,
நடந்து நடந்தே குகின்றேன்.
செல்லும் வழி இருட்டு
செல்லும் மனம் இருட்டு,
சிந்தை அறிவினிலும்
தனி இருட்டு.
நடையால் வழிவளரும்
நடப்பதனால் நடைதொடரும்
அடியெடுத்து வைப்பதற்கு
ஆதிவழி ஏதுமில்லை.
சுமையகற்றிச் சுமையேற்றும்
சுமைதாங்கியாய் விளங்கும்
சுமைக்குள்ளே தானியங்கிச்
சுமையேற்றும் சும்மாடே!
“எங்கு, எதற்கு
ஏனென்று கேட்டாக்கால்
“எங்கு, எதற்கு
ஏனென்றே கேள்வி வரும்?
என்னை அணைத்தேகும்
இருட்டுக் குரல் தானோ?
என்னை அணைக்க வரும்
மருட்டுக் குரல்தானோ?
நடந்தேன், நடக்கின்றேன்,
நடந்து நடந்தே குகின்றேன்.
நடந்தேன், நடக்கின்றேன்.
நடந்து நடந்தே குகின்றேன்.
- புதுமைப்பித்தன்
('புதுமைப்பித்தன் கவிதைகள்', தொகுப்பு, பக்கம்: 77, 78)
நவீன இலக்கியத்தில் தவிர்க்கமுடியாத ஒருவரான புதுமைப்பித்தன், சிற்றிலக்கிய / தனிப்பாடல் கவிதை மரபில் பெரிதும் மனம் கொண்டவர். இதனாலேயே அவருடைய கவிதை முயற்சிகளிலும் அந்தத் தாக்கம் அதிகம் காணப்படும். இதைத் தாண்டி, புதுமைப்பித்தனுக்கே உரிய ஒரு வேகமும் துடியும் நிரம்பியிருக்கும். நவீன கவிதை முன்னோடிகளில் புதுமைப்பித்தனை வேறுபடுத்திக் காண்பிக்கும் இயல்பாகவும் இதைச் சுட்டலாம்.
புதுமைப்பித்தன் அடியொற்றிப் புதுக்கவிதை அமைந்திருந்தால், அது மேலான தமிழ்க்கவிதைப்பண்புகள் நிரம்பியதாக வாய்த்திருக்கும். எனில், சந்தர்ப்பங்களும் சாத்தியங்களும் இன்னொருவிதமாக ஏற்பட்டுவிட்டன. தொடக்ககாலத்திலிருந்தே மரபறியாதோ பொருட்படுத்தாதோ மேலைப்பண்புகளை வரித்துக்கொள்ள நேரிட்டுவிட்டது நவீன தமிழ்கவிதை. இந்த நிகழ்வு, நமது கவிதை லட்சணங்களையே வேறுமாதிரி மாற்றிப்போட்டு விட்டது மட்டுமல்லாமல், இன்றைய தினம் வரையிலும் தொடர்ந்து நீடித்து வருகிறது என்பதும் துரதிர்ஷ்டவசமானது தான்.
புதுமைப்பித்தனின் இந்தக் கவிதை, அவர் உள்ளத்தை, எண்ணத்தை அப்படியே எடுத்துக்காட்டுவதாக உள்ளது. 'நம்பிக்கை வறட்சி' என்றுதானே புதுமைப்பித்தன் கதைகளைச் சொல்வார்கள்; இதுவும் அதுபோலத்தான். ஆனால், எதார்த்தம் இப்படித்தான் இருக்கிறது.
அலங்காரப்படுத்துவது கலைக்கு ஆகாது. 'எதிர்கவிதை' எனச் சொல்கிற அளவுக்கான கவிதை இது.
'இருட்டு' கவிதையை, முதலில் 'பாதை' என எழுதிப் பார்த்திருக்கிறார் புதுமைப்பித்தன்; அது திருப்தி தராமல், மறுபடியும் எழுதியிருக்கிறார். திரும்ப எழுதும் போக்குக்கு ஆதாரபூர்வமாகக் கிடைத்த முதல் நவீனகவிதை இது. எழுத்துக்கலைஞனின் மனநிலைதான், திரும்ப எழுதுவது. புதுமைப்பித்தன், தேர்ந்த கலைஞன்; மேதாவிலாசம் கொண்ட படைப்பிலக்கியவாதி. இன்றைய தமிழிலக்கியச் சூழலில் இதை ஆயிரத்தோர் முறை சொல்ல வேண்டும்.
"இந்த பாடலின் கருத்தைவிட உருவம்தான் அதி அற்புதமாக விளங்குகிறது" என்பார் தொ.மு.சி. ரகுநாதன்.
எதுவும் கவிதை, தெள்ளத் தெளிவானது. விளக்கம் வேண்டியதில்லை. வாழ்க்கைப் பயணத்தைத்தான் புதுமைப்பித்தன் சொல்கிறார் என்பது வெளிப்படை. அது அவ்வளவு சுலபமாக இல்லையென வாக்குமூலம் தருகிறார் என்பதும் வெளியரங்கம்தான். புதுமைப்பித்தனின் கவித்துவத்தைக் காட்டும் கவிதை என்பதே முக்கியம். பாடுபொருளைவிடச் சொல்முறையே/உணர்வுச்செறிவே / துள்ளும் சுதியே இதைக் கவிதையாக்குகிறது.
உலகப் பொதுவான விஷயம், தனிமனிதன் பார்வையில் பேசப்படுகிறது உண்மையாக, உரக்க, உணர்வுபூர்வமாக; அது கவிதையாகி விடுகிறது.
“செல்லும் வழி இருட்டு / செல்லும் மனம் இருட்டு / சிந்தை அறிவினிலும் / தனி இருட்டு” வரிகளை நகுலன் தனது கவிதை ஒன்றில் மேற்கோள்காட்டி எழுதியிருப்பார்.
புதுமைப்பித்தனின் இந்தக் கவிதையும் இரண்டிரண்டு சீர்களில்தான் கட்டப்பட்டதாக இருக்கிறது. ந.பிச்சமூர்த்தி, புதுமைப்பித்தன் இருவருமே கவிதைக் கட்டமைப்பில் கருத்துக் கொண்டவர்களாக இருந்திருக்கிறார்கள் என்பதோடு, புதுக்கவிதைக்குச் சீர்கள் கூடுதலாக இல்லாமல் இருப்பதே ஏற்புடையதாக இருக்கும் என்பதையும் உணர்ந்திருக்கிறார்கள் என்பதையே காட்டுகிறது இது.
***







0 comments:
Post a Comment