Naming
- Bidyut Bhusan Jena
After waking up I saw it lying next to me –
A strange object, forked into five thin and
uneven ends separated by sculpted space.
And you told me it was hand.
Then I wondered if it knew it was called
a hand. And would it not be surprised
if it came to know that it was called so?
And I waited the whole day expecting a
first-hand explanation from it. But I didn’t know
its language, for it didn’t have a mouth for words.
And all day long I talked a lot and wrote this.
மேற்கண்ட கவிதையை இருண்மையின் அழகியல் கொண்டது என்று வகைப்படுத்த முடியும். இந்த கவிதையை இதன் கற்பனை சாத்தியத்தை அணுகும் பொருட்டு, இதில் உள்ள நோக்கு நிலையை 'அவள் அவனுக்கு சொல்வது ' என்று ஒரு வசதிக்காக வைத்துக் கொண்டால்
அவள் ஒரு வினோத பொருளை காண்கிறாள். அது என்ன என்று அவன் அவளுக்கு சொல்கிறான். அது குறித்து அவளுக்கு கேள்விகள் எழுகிறது. இந்த அடிப்படை மீது நிகழும் கவிதை இது.
ஆலிவர் சாக்ஸ் தான் ஆய்வு செய்த நபர்கள் வழியே மூளை அறியும் விதம் சார்ந்த பல புதிய கண்டடைதல்களை வெளிப்படுத்தினார். விபத்தில் கையோ காலோ இழந்த நோயாளி, அந்த உறுப்பு அகற்றப்பட்ட பின்னரும் அது அங்கே இருப்பதாக உணர்வார். அந்த இல்லாத உறுப்பில் அடிப்பது போல அடித்தால் வலியை கூட உணருவார். பெந்தம் இன் பிரைன் (Phanthoms in the Brain) என்ற தன்னுடைய நூலில் மூளை நரம்பியல் ஆய்வாளர் விளையனூர் ராமசந்திரன் இது குறித்து விரிவாக எழுதி இருக்கிறார். இந்த நிலை மீது ஜெயமோகன் எழுதிய அழகிய சிறுகதை ஒன்றும் உண்டு. இதே போல இதற்கு நேர் எதிரான நிலையம் உண்டு. நன்றாக இருக்கும் தனது உறுப்பு ஒன்றை, அது அங்கே இல்லாதது போல, அங்கே இருக்கும் அது தன்னுடையது அல்ல என்பதை போல மூளையில் சில புள்ளிகள் பாதிக்கப்பட்டவர் உணர்வது. இதையே ஆலிவர் சாக்ஸ் வெளி கொணர்ந்தார். அதே போல மற்றொரு மூளை சார்ந்த சிக்கலையும் வெளியே கொண்டு வந்தார். உதாரணமாக பாதிக்கப்பட்ட ஒருவருக்குள் ஒட்டகச் சிவிங்கி சார்ந்த அனைத்தும் அதன் பிம்பம் பெயர் உட்பட எல்லாமே மூளையில் இருந்து காணாமல் போய்விடும். அவர் ஒட்டகச் சிவிங்கியை பார்த்தால் எவ்விதம் அடையாளம் காண்பார்? கண்ணில் குருட்டு புள்ளியில் விழாத பிம்பங்களை மூளை வேறு பிம்பங்கள் இட்டு நிறவுவது போலவே இதையும் செய்யும். பாதிக்கப்பட்டவர் ஒட்டகச் சிவிங்கியை ஒரு நாற்காலி என்றே அறிவார். நான்கு கால்கள் இருக்கிறது. அமரும் பகுதி இருக்கிறது. சாயும் பகுதி இருக்கிறது. எனவே இது விநோதமாக வடிவமைக்கப்பட்ட தானாகவே விநோதமாக இயங்கும் ஒரு வினோத நாற்காலி. இப்படித்தான் பாதிக்கப்பட்டவர் உணர்வார். இந்த விஷயங்களே இந்த கவிதையிலும் நடக்கிறது.
நிகழும் இடம் ஒரு மூளை சிகிச்சை மையம் என்று கொள்ளலாம். அவள் கொடும் கனவில் இருந்தோ, அல்லது கொடும் கனவுக்கு நிகரான மின்சார தொடுகை போலும் சிகிச்சை முடிந்தோ, அதன் பாதிப்பு நீங்கி விழித்து எழுகிறாள்.
அவளது கையை அவளால் அடையாளம் காண முடியவில்லை. அது ஒரு பெயர் தெரியாத வினோத பொருளாக அவளுக்கு காட்சி அளிக்கிறது. ஒரு வினோதமான முள் கரண்டி போல அது அவளுக்கு தோற்றம் தருகிறது.
அவன் அதன் பெயர் சொல்லி அதை அவளுக்கு அறிமுகம் செய்கிறான். அப்போதும் அது அவளை சேராத தனித்த பொருளாகவே அதை உணர்ந்து, அதனுடன் தொடர்பு கொள்ள முயல்கிறாள். விளைவை சொல்கிறாள்.
சற்றே இந்த கவிதையின் கற்பனைக்குள் சென்று உணர்ந்து பார்த்தால் திடுக்கிட்டுப் போவோம். புலன்கள் வழியாக நாம் இந்த உலகை உணர்கிறோம். அப்படி உணர இந்த ஐம்புலன் வழியே நாம் அறிவதை தொகுத்துக் கொள்ள உள்ளே ஒரு மையம் செயல்படுகிறது. அந்த மையம் கொண்ட செயல்பாட்டில் சிறு பிசகு நேர்ந்தாலும் என்ன ஆகும்? கண்ணால் காணும் விழும் அருவியும், காதால் கேட்கும் அதன் ஓசையும், உடலால் ஸ்பர்சிக்கும் அதன் சாரல் குளிர் இவற்றை இணைத்து ஒற்றை அனுபவமாக மாற்றும் அந்த மையம் அதை நாம் இழந்து விட்டால் என்ன ஆகும்?
அப்படி ஒரு தருணம் வந்தால், அந்த தருணம் வந்து தொடும் முதல் கணம் எப்படி இருக்கும்? தொடர்ச்சி என்னவாக இருக்கும்? அந்த பீதி அளிக்கும் உணர்வு மீது நிகழும் அழகிய கவிதை இது. பைத்திய நிலைக்கும் படைப்பு நிலைக்கும் உள்ள உறவை பேசும் கவிதை இது.
பெயரிடுதல்
பித்யுத் பூஸன் ஜேனா
விழித்தெழுந்த பின்னர் நான் கண்டேன்.
என் அருகே கிடந்தது அது.
ஒரு வினோதப் பொருள்.
செதுக்கப்பட்ட இடைவெளியால்
பிரிக்கப்பட்ட,
சமச்சீரற்ற ஐந்து
மெல்லிய முனைகள்.
அது கை (என்று)
நீயோ என்னிடம் கூறினாய்.
நானோ பின்னர் வியப்புற்றேன்.
அது அறியுமா, அது கை என்று அழைக்கப்படுவதை?
மேலும், அது அவ்வாறு அழைக்கப்படுவது அதற்குத் தெரியவந்தால்,
அது திகைத்துவிடாதா?
அதன் (வசம்) நேரடி விளக்கத்தை எதிர்நோக்கி நானும் நாள்முழுவதும் காத்திருந்தேன்
ஆயினும்
எனக்கோ அதன் மொழி தெரியாது.
அதற்கோ சொற்களுக்கான
வாயென்ற ஒன்று கிடையாது.
பின்னர் நெடும்பகலெல்லாம் நான் நிறைய பேசினேன்.
அத்துடன்
இதையும் எழுதினேன்.
தமிழில்: கடலூர் சீனு







0 comments:
Post a Comment