பெரும்யானை ஒன்றின் முதுகென விரிந்துகிடந்தது அந்தக் கரும்பாறைத் திட்டு. வெய்யிலிலும், மழையிலும் உவறி மேற்பரப்பு பொரிந்து கிடந்தது. சிறிதும் பெரிதுமான செவ்வக வடிவக் கற்பலகைகள் ஒருவரிசையாய்க் குலைந்துகிடந்த வடகிழக்கு மூலைக்கு நடந்தோம், நாற்புறமும் நிற்கவைத்த பலகைகளுக்கு மேலே மற்றுமொரு செவ்வகப்பாளம் கிடத்தப்பட்டு, முடுக்குகளில் சிறுசிறு சில்லுகள் தாங்க அசையாது நின்றது. உடனிருந்த நண்பர்களுள் ஒருவர் சுவடியியல், கல்வெட்டு ஆராய்ச்சி போன்ற துறைகளில் நாட்டம் கொண்டு படிப்பவர், பார்த்துவிட்டுச் சொன்னார். “இவை யெல்லாம் பழைய கற்காலத்தைச் சேர்ந்தவையா இருக்கும். எப்படியும் ரெண்டு மூணாயிரம் வருஷத்துக்கு குறையாது. முதுமக்கள் தாழின்னு படிச்சிருப்பிங்களே! இதுவும் அதுபோலவொரு சவஅடக்கமுறைதான். செத்த உடலை நடுவில் வச்சு, மிருகங்கள், பறவைகள் கொத்தி குதறி விடாதபடிக்கு சுத்தியும் கல்பலகை வச்சு மூடிட்டு போய்டுவாங்க". மூன்று, நான்கு அடுக்குகள் மாத்திரம் முழுமையாக நின்றுகொண்டிருக்க, ஏராளமான பலகைகள் சரிந்தும், உடைந்தும் அங்காங்கே சிதறிக்கிடந்தன. நான் அதைக்குறித்து வருத்தப்படவும், அந்நண்பர் கசந்த புன்னகையோடு சொன்னார். “சரித்திரத்தைப் புறத்தே வச்சு பார்க்கற அளவுக்கு அதைவிட்டு வெளியே வந்துவாழ நாம் இன்னும் படிக்கலை. முக்கால பேதம் எதுவுமில்லாமதான் நாம் வாழறோம், நமக்கு இவ்வளவுதான் வரலாற்றுணர்வு இருக்கும்."
பாறையின் ஒருமூலையில் சிறிய அம்மன் கோயில் ஒன்றும், அதற்குச் சற்றுத் தொலைவில் ஆளுயரக் கான்கிரீட் சிலுவை ஒன்றும் நிறுவப் பட்டிருந்தது. எது முதலில் தோன்றியது எனத் தெரியவில்லை. ஆனால் ஒன்றின் பதிலியாகவே மற்றொன்று முளைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை, அந்தப் பழம்பெரும் கற்பாளங்கள் மெளனமாக விளம்பிநிற்கும் 'மரணம்' என்னும் முழுமுற்றான உண்மைக்குமுன் சிமெண்ட்டால் எழுப்பப்பட்ட இந்த சிலையும், சிறு கோயிலும், மனிதர்களான நமது எளிய நம்பிக்கைகளைப் பிரதிபலிக்கும் விதத்தில் அபத்தமாகக் காட்சியளித்துக் கொண்டிருந்தன. நாங்கள் தேடிவந்த பாறை ஓவியங்கள் எதுவும் அங்கில்லை. என்றாலும், எங்களுடைய பயண நிரலில் திட்டமிடப்படாததொரு முக்கிய நிகழ்வாக அத்தருணம் அமைந்தது. அதுகாறும் உற்சாகமாகத் தொடர்ந்து வந்த பேச்சு மெல்ல அடங்கி, ஒவ்வொரு வரும் தத்தமது சொந்த யோசனைகளுக்குள் மூழ்கிப் போனோம். அந்தப் பாறைத்திட்டிலிருந்து பார்க்கையில், சுற்றிவர மூன்றிலொரு பாகத்திற்கு மேல் வெட்டவெளியாய் விரித்துகிடக்க, பார்வை தொடுவானில் மங்கிக் கலந்தது. மனிதர்களின் இறுதி உறக்கத்திற்கென்று இவ்விடத்தைத் தெரிவு செய்த அம்மூதாதை கனிந்த விவேகியாய்த்தானிருக்க வேண்டும்.
உலகின் எப்பகுதியில் வாழும் இனக்குழுக்களாக இருப்பினும், அவர்களுடைய கலாச்சாரத்தில் எஞ்சியிருக்கும் தொன்மையான சடங்கு எதுவென ஆராயப் புகுவோமானால், அது பெரும்பாலும் மரணத்தோடு தொடர்புடைய ஒன்றாகவே இருப்பதைக் காணலாம். தவிர்க்கவோ, தப்பிக்கவோ முடியாத அந்த நிச்சயமான உண்மையை எதிர் கொள்வதற்காக மனிதர்கள் தம் வாழ்வினூடாகத் திரட்டிக்கொண்ட நம்பிக்கையும், ஆறுதலுமே அனைத்து வகையான வழிபாடுகளுக்கும், சடங்குகளுக்கும், கலை வெளிப்பாடுகளுக்குமான தோற்றுவாய். மரித்த உடலை எரிப்பது அல்லது புதைப்பது என்ற இருவேறு வழக்கம் உலகெங்கும் தொன்று தொட்டு இருந்துவருகிறது. மரணத்தை முற்றுப் புள்ளியாக ஏற்றுக்கொள்பவர்கள் உடலை எரிக்கவும், இறப்பிற்குப் பின்னும் வாழ்வில் நீட்சியை ஏதோஒரு வகையில் கற்பனை செய்ய விரும்புகிறவர்கள் புதைக்கவும் செய்கிறார்கள் என நம்பலாம். உலகின் தொன்மையான கல்லறைகளாகக் கருதப்படுகின்ற பிரமிடுகளில் புதைக்கப்பட்ட மன்னர்களின் அப்பாலை வாழ்விற்குத் துணையாகப் பெரும் செல்வமும், பணியாட்களும் உடன் புதைக்கப்பட்டிருந்ததாகக் கண்டறிந்திருக்கிறார்கள். உலகின் எல்லா மொழிகளிலும், உள்ள இலக்கியங்களிலும் ஈமக்கலன், இடுகாடு, ஈமத்தீ முதலியவற்றைச் சுட்டும் சொற்களும், குறிப்புகளும், தொல்பழங்காலம் தொட்டே இருந்துவருவதை மொழியியல் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். தமிழர் நாகரிகத்தின் செழுமைக்கும், தொன்மைக்கும் வலுவானதொரு இலக்கியச் சான்றாகக் கொள்ளப்படும் புறநானூற்றிலும் இத்தகைய செய்திகளைக் கொண்ட சில பாடல்கள் உள்ளன. பின்வரும் பாடல் (புறம் - 356) வாழ்வின் நிலையாமையை அறிவுறுத்தும் விதமாக எழுதப்பட்டது.
கனறி பரந்து. கன்னி போகிப்
பகலும் கூட்டம் கூகையொடு, பேழ் வாய்
ஈம விளக்கின், போஎய் மகளிரொடு
அஞ்சுவந் தன்று. இம்மஞ்சுபடு முதுகாடு
நெஞ்சமர் காதலர் அழுத கண்ணீர்
என்புபடு சுடலை வெண்ணறு அவிப்ப
எல்லார் புறனும் தான்கண்டு, உலகத்து
மன்பதைக் கெல்லாம் தானாய்த்
தன்புறம் காண்போர்க் காண்புஅறி யாதே.
திணை: காஞ்சி
துறை: பெருங்காஞ்சி
பாடியவர் : தாயங்கண்ணனார்
காடு பரந்து, கள்ளிகள் மிகுதியாக முளைத்திருக்கும் இச்சுடுகாட்டில் பகல் பொழுதிலேயே கூகைகள் கூவுகின்றன. பிணத்தைச் சுடும் தீயின் வெளிச்சத்தில் கோரமான பற்களோடு அகன்று காணப்படும் வாயை உடைய பேய் மகளிர் உலவு கின்றனர், புகை தவழும் இவ்விடம் காண்பாருக்கு அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. இறந்தோர் மீது அன்புகொண்டோர் விடும் கண்ணீரில் பிணத்தை எரிக்கும் நெருப்பின் சாம்பல் அவிகிறது. எல்லோருடைய முடிவையும் தான் கண்டு, உலகத்து மாந்தருக்கெல்லாம் இறுதிப்புகலிடமாய் அமையும் இச்சுடுகாடு, தன்னைப் புறங்காண வல்லவர் எவரையும் இதுகாறும் கண்டதில்லை.
இக்கவிதை தீட்டிக்காட்டும் சித்திரமளவிற்கு, அச்சம் தருவதாக அல்லாது போனாலும், பாழடைந்து, எருக்கஞ் செடிகளும், முட்புதர்களும் நிறைந்து ஓணான்களும் கூகைகளும் கழுகுகளும் பயமின்றி அலைய, குழந்தைகளும் பெண்களும் நுழையக் கூடாத ஒரு கைவிடப்பட்ட ஸ்தலமாகவே பெரும்பாலான ஊர்களின் இடுகாடுகள் அமைந்துள்ளன. இறப்பது ஒரு கலை என்றால், இறந்தவர்களுக்கு உரிய மதிப்புடன் விடைதந்து அனுப்புவது என்பதுவும் அதற்குச் சற்றும் குறையாத கலைதான், அதில் நம்மைவிடவும் மேலைநாட்டினர் தேர்ந்தவர்களாக உள்ளனர். இறந்த உடலை அலங்கரிப்பதற்கும், சவப் பெட்டியை அழகுப்படுத்தவும் அங்குத் தனியே கலைஞர்கள் உள்ளனர். தவிரவும் சுற்றுச்சுவருடன் கூடிய தோட்டத்தில் நிழல் தரும் மரங்களுக்குக் கீழாக, பூச்செடிகளின் அருகில் துயிலும் அந்த ஆன்மாக்கள் கொடுத்து வைத்தவையே என்பதில் ஐயமில்லை.
மரணத்தைத் தட்டிப்பறிக்கும் கூற்றுவனாக, திகிலூட்டும் ஒரு இருண்ட அனுபவமாக, தப்ப முடியாத ஒரு தண்டனையாக உருவகிக்கும் ஒரு போக்கு நமது மரபில் உண்டு. இது உருவாக்கும் அச்சத்தினூடாக, இக வாழ்வில் மக்களிடையே தர்மத்தையும், அறவிழுமியங்களையும் தழைக்கச் செய்யமுடியும் என்றும் நம் முன்னோர் நம்பினர். பிறகு வந்த பௌத்த, சமண சமயங்கள் மரணத்தைக் சுடந்து செல்லவேண்டிய ஒரு வாயிலாக, இயல் பான ஒருமுடிவாக ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை வலியுறுத்தின.
மேற்காணும் புறநானூற்றுப் பாடல், மனித நாடகத்தின் இறுதிக்காட்சியை அழுத்தமான அவலச்சுவையுடன் தீட்டிக் காட்டுவதன் வாயிலாக, பிறிதொரு, கருத்தைக் குறிப்புணர்த்தி நிற்கிறது. எந்நிமிடமும் கலைந்துவிடக்கூடிய இந்நீர்க்கோல வாழ்வை நச்சி, நலிவுற்று அழியாமல் நமது நற்செயல்கள் மூலம் அதை அர்த்தப்படுத்திக் கொண்டாகவேண்டும் என்பதையே மறைமுகமாக வலியுறுத்துகிறது.
ஒருமுறை நண்பர்களுடனான உரையாடலின்போது கனவுகளைப்பற்றிய பேச்சு எழுந்தது ஆழ்மன வெளிப்பாடு என்பதால் கனவுகள் நமது புறமனதின் தர்க்க ஒழுங்கிற்கு அப்பாற்பட்ட சுயேச்சை யான இயக்கவிதிகளைக் கொண்டிருக்கின்றன எனவே, காணப்படும்போது மிகத் துல்லியாக தெரியும் கனவு, விழித்தபிறகு நினைவுபடுத்திப் பார்க்கையில் பல இடங்களில் தெளிவின்றிக் கலங்கிப் போய் மங்கலாகத் தென்படும் . பல கனவுகள் விழித்தெழுந்தவுடன் நினைவுகொள்ள முடியாதஅளவிற்குத் தடமின்றி மறைந்துபோய் விடுவதுமுண்டு. அபூர்வமாக சில கனவுகள் மாத்திரம் வரையப்பட்ட சுவரோவியம் போல் நினைவில் துல்லியமாக நிலைத்துவிடுவதுண்டு் அவ்வாறான அழியாத சில கனவுகளைப் பற்றிய தமது அனுபவங்களை அப்போது நண்பர்கள் பகிர்ந்துகொண்டனர். அதில் ஒரு நண்பர் விவரித்த கனவு அதன் வினோதத்தால் என் நினைவில் தன் விட்டது.
அக்கனவில் நண்பர் இறந்துபோய் சடலமாகக் கிடக்கிறார். வீட்டுக் கூடத்தில் உற்றார் குழுமியிருக்க, மனைவியும், பெற்றோரும் கதறி அழு கின்றனர். தலைமாட்டில் எரியும் விளக்கில் ஒருபெண் திரியைத் தூண்டிவிட்டு எண்ணெய் நிரப்புகிறாள். நண்பருக்குப் பிடிக்காத நெடியில் ஊது பத்தி புகைகிறது. எல்லாவற்றையும் விலகியிருந்து அறிகிறது நண்பரின் உடலற்ற பிரக்ஞை . அப்போது தண்ணீருக்குள் மூழ்கிவிட்டதைப் போல புலன்களனைத்தும் குளிர்ந்துபோயிருந்ததாக ஒரு உணர்வு மாத்திரம் மீந்திருந்தது என்று சொன்ன நண்பர், தலைமாட்டிற்கு நேரே கூடத்தைத்தாண்டி வீதியைப்பார்க்க திறந்துகிடந்த தலைவாசலில் தனது பதின்மவயது நண்பனைக் கண்டார். பித்தான்கள் போடப்படாத சட்டை திறந்து வயிற்றைக் காண்பித்துக் கொண்டு, இடுப்பிலிருந்து இறங்க முயலும் கால்சட்டையை ஒருகையால் இழுத்துப் பிடித்தபடி மற்றொரு கையால் சீக்கிரம் வாவென சைகை காட்டுகிறான். நண்பருக்குப் புரிகிறது.
சாமித்தோப்பின் மூலைக்கிணற்றில் நீந்த எல்லோரும் போய்விட்டனர். இவர்தான் கடைசி. நண்பன் பொறுமையிழந்து கால்மாற்றி வைக்கிறான். எவ்வளவு முயன்றும் படுத்துக்கிடப்பவரால் எழ முடியவில்லை. சட்டென்று விளங்கியது. இந்தஎழவு அழுகையை இவர்கள் நிறுத்தினால்தான் அவர் எழுந்து நீச்சலுக்குப் போகமுடியும். அவர் பேச்சு மட்டுமல்ல கத்தி கூப்பாடு போட்டும் யாருக்கும் கேட்கவில்லை. வார்த்தைகள் ஒலிவடிவம் கொள்ளாமல் நீரின் மேற்பரப்பிற்கு வந்தவுடன் உடைந்துபோகும் காற்றுக்குமிழிகள் போலக் குரல்வளைக்குள்ளாகவே கலைந்து போனது. வெளியே நிற்கும் நண்பன் ஏமாற்றத்துடன் திரும்பிப் பார்த்தபடி நகர, இவர் 'விட்டுப்போகாதே!' என எழமுயல, அர்த்தமற்ற கேவலுடன் படுக்கையினின்றும் விழித்தெழுகிறார். பக்கத்தில் உறங்கிக் கொண்டிருந்த மனைவியும் குழந்தையும் யாரோ போலத் தோன்ற, தலையை உதறி உடலைநிமிர்த்தி சமநிலைக்கு வந்தவர் மீத இரவுமுழுவதும் தூங்காமல் இக்கனவைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்திருக்கிறார். கனவில் வந்த அந்த பால்ய நண்பன் தனது பதினான்காவது வயதிலேயே விஷக்காய்ச்சலில் மாண்டு போனவன் இத்தனைவருடங்கள் கழித்து எதற்கு இந்நண்பரைக் காணவந்தான்? அதுவும் பிழைப்புதேடி சொந்த ஊரைவிட்டுப் பலநூறு மைல்கள் தாண்டிவந்து சேர்ந்த இந்நகரிலுள்ள வீட்டிற்கு எப்படி வழி கண்டுபிடித்து வந்திருப்பான்? அவனது அந்த அழைப்பின் பின்னால் ஒளிந்திருக்கும் மறைபொருள் என்ன? உண்மையில் மரணம் குறித்த முன்னுணர்த்தல் ஏதேனுமிருக்குமோ? என அரண்டுபோன நண்பர் சோதிடரொரு வரை கலந்தாலோசித்த பிறகு சனிபகவானுக்கு எழுவாரங்கள் எள்ளும் நெய்யுமிட்டு பரிகாரம் செய்திருக்கிறார். நான் சிரித்தபடியே நண்பரை வினவினேன். "நீங்க மத்த எல்லாவற்றையும் விட உங்கமனைவி, குழந்தை மேல் அதிக ஆசை வச்சிருக்கிங்க இல்லையா?" நண்பர் தயக்கத்துடன் 'ஆம்' என்றார். இவ்வாழ்க்கையின் மீது அவர் கொண்டிருக்கும் மாளாத காதலே அவருடைய ஆழ்மன விருப்பமாகத் தலைகீழாக்கப்பட்ட நிலையில் மரணம் குறித்த நிகழ்வாக மாறிக் கனவில் வெளிப்பட்டிருக்கிறது என்றேன். எனது அரைகுறை படிப்பையும், சொந்தக் கற்பனையையும், கலந்து நான் சொன்னக் காரணத்தை நம்பியவராக நண்பர் மலர்ந்து சிரித்தார்.
'தன் மரணக் கோலத்தைத் தானே பார்ப்பது' என்பது பலரும் பலவாறு கற்பனைகளிலும், சில சமயம் கனவுகளிலும் காண்பதுவே. அவ்வப் போது, ஏதேனுமொரு பிரபலத்தைப் பற்றிய மரணச்செய்தி புரளியாகப் பரவி ஓயக்காண்போம். 'கண்ணேறு கழித்தல்' என்னும் பரிகாரநிமித்தம் அவர்களே கிளப்பிவிடும் வதந்தி அது எனக் கூறுவோரும் உண்டு. கல்யாணத்தின்போது ஒப்புக்கொண்ட சீர்வரிசைகளைக் குழந்தை பிறந்த பின்னும் தரவில்லை என்பதற்காக, உயிரோடிருக்கும் போதே தன் மாமனாருக்கு உத்தரகிரியைப் பத்திரிகை அடித்து விநியோகித்த மருமகன் ஒருவரையும் நான் அறிவேன். தன் மரணத்தைத் தானே காண்பது அல்லது கேள்விப்படுவது என்பது முதல்கணத்தில் வலிதருவதாக இருப்பினும், அதைக்குறித்து ஆழ யோசிப்பவர்களுக்கு அதுவொரு அகவயப் பயணமாகவே அமையும் என்பது திண்ணம்.
நடைப்பயிற்சியை முன்னிட்டு நம்மில் சிலர் காலையிலோ, மாலையிலோ உலாவச் செல்வதுண்டு அபியின் பின்வரும் கவிதையும் அப்படிப்பட்ட ஒரு உலாவைப் பற்றிதான் விவரிக்கிறது, ஆனால் இது பௌதீகமான தளத்தில் நிகழும் ஒன்றுஅல்ல. இக்கவிதை உத்தேசிக்கும் வழி அகவயமானது. நமக்கு அவ்வளவாக பரிச்சயமற்றது என்பதால் முதலில் தடுமாறவைக்கக்கூடியது. ஆயினும் சற்று நிதானமாக எட்டு வைத்தால் இக்கவிதையுடன் சேர்ந்து அது சுட்டும் இடத்தில் நாமும் சென்றடையலாம்.
உலா
நிழல்
தொட்டு எழுப்பிவிட்டுப்
போனது
ஒருநாளும்
படுக்கையில்
பின்னம் விடாமல்
வாரிச் சுருட்டி
முழுமையாய் எழுந்ததில்லை
இன்றும் தான்.
வாடைக் காற்று
வழித்துப் போகும்
தேய்மானம்
பொருட்படுத்தாமல்
நடைபாதை நெருப்புத்
தொற்றித் தொடர
ஊர்க் கோடி வரை
உலாவப் போக வேண்டும்
ஊர்க்கோடி
ஒருநாள் இருந்த இடத்தில்
இன்னொரு நாள்
இருப்பதில்லை
போய்ச் சேரும் போது
பெரும்பாலும்
இருட்டி விடும்
இருளின் பேச்சு மட்டும்
மயக்கமாய்
கனத்துக் கேட்கும்
அதில் மின்மினிகளின்
பாதையன்றி
வேறொன்றும் தெரியாது
திரும்பிப்பார்த்தால்
ஊர்
புகைவிட்டுக்கொண்டு
சின்னதாய்த்தெரியும்
பிணங்கள் அங்கே
பொறுமையிழந்து
கூக்குரலிடுவது கேட்கும்.....
திரும்பத்தான் வேண்டும்
மனமில்லாவிடினும்,
திரும்பி
கடைவாயில்
மரணம் அதக்கி
மழுப்பிச் சிரித்து
உறங்கித் திரியவேண்டும்
மறுபடி நிழல்வந்து
தொட்டு எழுப்பும் வரை,
'நாம் பேசும் வார்த்தைகள், நாம் பேசியிராத முறைகளில் இதற்கு முன்பு நாம் சந்தித்திராத சந்திப்புகளில், இதுவரை நம்மைத் தொட்டிராத த்வனிகளுடன் நம்மை எதிர்கொள்கின்றன கவிதையில்' என்று கூறும் அபியின் குரல் தமிழ்க் கவிதையின் அபூர்வங்களில் ஒன்று. இலக்கியச் சூழலின் சந்தடியிலிருந்து எப்போதும் ஒதுங்கியே காணப்படும் அவரது சுபாவத்தினால் மட்டுமல்லாது, அவருடைய கவிதைகளின் அசாதாரணமான உள்ளடக்கம் மற்றும் அதன் முன்பரிச்சயமற்ற தன்மை காரணமாகவும், தனது சாதனைகளுக் குரிய அங்கீகாரத்தையும், கவனத்தையும் போதிய அளவு பெறாதவர் அவர்.
மொழியை மிகுந்த விழிப்போடும், வீச்சோடும் பயன்படுத்துகிற அபியின் கவி உலகம் பலவிதங்களிலும் தனித்துவமான ஒன்று. அது அருவமான சித்தனைகளையும் ஆழ்மனப் படிமங்களையும் உள்ளடக்கியது. புற உலகின் தோற்றங்களுக்கும், நிகழ்வுகளுக்கும் அகவயமான காரணிகளைக் காணும் பொருண்மைத்தன்மை உடையது. சொல்லுக்கும், பொருளுக்கும் இடையிலான பிளவை, அதில் நிரம்பியுள்ள நிழல்வெளியைக் குறித்த கவனத்துடன் எழுதப்படும் இவரது கவிதையின் வரிகள் ஆழமான வாசிப்பைக் கோருபவை. மேற்சுட்டப்பட்டிருக்கும் கவிதையும் இத்தன்மையதே. இக்கவிதையினுள் தொழிற்படும் காலம் நாம் வழக்கமாக உபயோகிக்கும் கடிகாரச் சுற்றிற்கு உட்பட்ட ஒன்றல்ல. மட்டுமின்றி இதில் சுட்டப்பெறும் இடங்களான படுக்கை, ஊர், நடைபாதை, ஊர்க்கோடி என்பவையும் திட்டவட்டமான பௌதீக இருப்பாக இல்லாமல் அசையும் படிமங்களாகவே காணப்படுகின்றன.
எனவே இக்கவிதை குறிப்புணர்த்தும் உலா என்பது உள்முகமான ஒன்று என்பதை அறிகிறோம் கொண்டாட்டமான வாழ்வின் வெளிச்சத்திற்கடியில் ஒளிந்திருக்கும் மரணத்தின் நிழலை ஒரு எக்ஸ் கதிர் படம்போல் பிடித்துக்காட்டுகிறது இந்தக் கவிதை. இருப்பிற்கும் இறப்பிற்குமிடையில் இருப்பதாக நாம் கருதும் இடைவெளியைத் தனது சொற்களால் அழிப்பதன் மூலம் இக்கவிதைவின் அனுபவத்தை உருவாக்குகிறார் அபி. 'ஒரு நாளும் படுக்கையினின்றும் பின்னம் விடாமல் எழுந்ததில்லை', 'ஒரு நாளிருந்த இடத்தில் இருப்பதில்லை ஊர்க்கோடி' 'ஊர் புகைவிட்டுக்கொண்டு தெரியும், 'என்பிணங்கள் பொறுமையிழந்து கூக்குரலிடும்’ போன்ற தொடர்கள் முதலில் தரும் திடுக்கிடலைக் கடந்து உள்நுழையும் ஒருவருக்கே இக்கவிதை தனது அனுபவத்தின் வாசலைத் திறக்கிறது எனலாம்
எங்களூர்ப் பகுதியில் இறந்த உடலைப் பாடையில் வைத்து ஆற்றின் அக்கரையிலுள்ள இடுகாட்டிற்குக் கொண்டு செல்லும்போது, ஒரு குறிப்பிட்ட தூரம்வரையிலும் இறந்தவரின் முகம் ஊளரைப் பார்க்கத் திரும்பியிருக்குமாறு எடுத்துச் செல்வார்கள். குறிப்பிட்ட ஒரு இடம் வந்தவுடன் உடலைத் திசைமாற்றி முகம் இடுகாட்டைப் பார்த்தவாறு இருக்க சுமந்து செல்வார்கள். அந்த இடத்திற்கு 'பாடை மாற்றி' என்று பெயர். அவ் விடம் வரும்வரை உடலுக்குரியவருக்கு ஊருடன் இருந்த பிணைப்பு அத்தோடுஅறுந்து இனியெப்போதும் திரும்பமுடியாத வழியில் இடுகாட்டை நோக்கிச் செல்வதாக ஒருநம்பிக்கை, இதே மாதிரியான ஒரு தலைகீழாக்கல் மூலமாகவே இக்கவிதையில், வாழ்வு X மரணம் என்ற வழக்கமான எதிரீடுகளைக் கலைத்து அவற்றின் அர்த்தங்களை ஒன்றின் பரப்பிற்குள் மற்றொன்றை ஊடாடச் செய்வதன் வழியாக ஒரு அனுபவத்தை உருவாக்கித் தருகிறார் அபி.
இங்கு எடுத்தாளப்பட்ட கவிதைகள் இரண்டினுள் முதலாவதாக அமைந்த புறநானூற்றுப் பாடல் மரணத்தைப் புறவயமாக ஆராய்கிறது. திட்டவட்டமான நோக்குடன் இழப்பு குறித்து ஒரு துல்லியமான சித்திரத்தை வரைந்து காட்டுவதன் வாயிலாக அப்பாடல் வாழ்வின் நிலையாமை குறித்து நமக்கு போதிக்கிறது. அப்பாடலின் உட்கிடையாக அமைந்திருக்கும் செய்தி அநித்திய மான இந்த வாழ்வை அர்த்தமுள்ள ஒன்றாக நாம் ஆக்கிக்கொள்ளவேண்டும் என்பதே.
***
0 comments:
Post a Comment