ஒன்று அந்த கவிதை உரைநடை தன்மை பெறும். (உரைநடை என்றால் உரைநடை கவிதை அல்ல.
- வெறும் statement ஆக மட்டும் மாறுவது)
- கவிதைக்கான தருணம் நீங்கும்
- கவிஞனின் குரல் கவிதையின் குரலை மிஞ்சும்
இதில் இந்த மூன்றாவது சிக்கலான கவிஞனின் குரல் கவிதையின் குரலை மிஞ்சுவதில் இரண்டு நிலைகள் உள்ளன.
- கவிதை உருவாதலின் ஒரு கட்டத்தில் கவிதை கவிஞனை இழுத்துச் செல்லும் (அல்லது)
- கவிஞன் கவிதையை இழுத்துச் செல்வான்
பெரும்பாலும் மேற்காணும் இரண்டு நிலைகளும் ஏற்படும் இடம் கவிதை முடிவடைகிற இடமாக இருக்கும். இதில் முதல் வகையான கவிதை கவிஞனை இழுத்துச் சென்று உருவாகும் வகை கவிதைகளில் உலகம் முழுக்க எழுதப்பட்ட பெரும்பாலான சிறந்த கவிதைகள் அடங்கிவிடும். இதில் எந்த சிக்கலும் இல்லை. இரண்டாவது வகையான கவிஞன் கவிதையை இழுத்துச் செல்வதில் ஒரு சிக்கல் உண்டு. கவிஞன் அந்த நேரத்தில் கவிதையின் ஒரு உறுப்பாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் அந்தக் கவிதை நல்ல கவிதை அனுபவத்தைத் தரும்.அப்படி அல்லாது கவிஞன் கவிதையின் ஒரு உறுப்பாக இருப்பதைத் தவறவிடும்போது அவன் கவிதை சரிவை சந்திக்கும் வாய்ப்புகள் அதிகம். இந்த ஒரே கருப்பொருளை வைத்து எழுதப்படும் கவிதைகளில் நிகழும் சிக்கல் இதுதானென நினைக்கிறேன்.
ச.துரையின் சங்காயம் தொகுப்பில் பெரும்பான்மை கவிதைகள் கடலும் கடல் சார்ந்தவைகளும். ஒரே கருப்பொருளின் கீழ் எழுதியே தீர வேண்டும் என்ற கட்டாயத்தில் அவர் எழுதவில்லை. மாறாக அவரது 'நான்' அமைந்திருக்கும் வெளியாக இயல்பாகவே கடல் அவரது கவிதைகளில் படிகிறது. இந்த தொகுப்பில் கடல் துரையின் கருவி அல்ல. கடல் துரையின் 'நான்'. இந்த அம்சம் ஒரே கருப்பொருளின் கீழ் எழுதப்பட்ட கவிதைகள் என்ற மாயத் தோற்றத்தை இந்த தொகுப்புக்கு அளிக்கிறது. இது இத்தொகுப்பில் இயல்பாக அமைகிறது. அபாயகர சொல்லல் முறைகளும், கவிதையின் குரலை விட மேலெழும்பும் கவிஞனின் குரலும் இல்லாமலாகிறது. ஒருவர் இத்தொகுப்பை ஒரே மூச்சில் வாசிப்பாரானால் அவருக்கு ஒரு குறுநாவல் அனுபவம் கிடைக்கக் கூட வாய்ப்புள்ளது. கடல்புரத்தில் நாவலில் அதன் மாந்தர்களை அழித்துவிட்டு கடலை மட்டும் மனதில் நிறுத்துவது மாதிரியான ஒரு அனுபவம். இந்த தொகுப்பு முன்வைக்கிற நிலத்தன்மையும், கவியின் இயல்பான குரலும் இந்த தொகுப்பை அழதாக்குகிறது.
***
தரவை
பனைகள் பரந்த தரவையில்
ஏராளமான காளான்கள்
நானும் இளையோனும் சேகரித்தோம்
பனைகள் பரந்த தரவையில்
ஏராளமான கால்தடங்கள்
நானும் இளையோனும்
தடங்களை அழிக்க சிரமமித்து
பாதங்களை மாற்றினோம்
பனைகள் பரந்த தரவையில்
ஏராளமான மேகங்கள்
மடிசாய்த்த காளான்களைச் சிதறவிட்டு
நானும் இளையோனும் ஓடுகிறோம்
பின்னேயொரு நீல மழை.
***
0 comments:
Post a Comment