வழக்கங்களைத் தின்று சலித்து புதியவைகளைத் தேடி வேட்டைக்குச் செல்லும் கவிஞன் முதலில் தன் கவசத்தைக் களைகிறான். நிறங்களும் வடிவங்களும் கலைந்த பெருவனமொன்றைத் தன் அறிதலின் சாயலற்ற காலடிகளால் நோட்டம் விடுகிறான். நெருங்கிப் பார்ப்பதால் விளங்கும் அர்த்தங்களால் மாசுபடாத உலகமொன்றைத் தனக்கெனப் படைத்து அங்கே தொலைந்து போவதாகக் கனவு காண்கிறான். இன்னும் சிறிது நேரத்தில் ஒரு விரல் அவனது குட்டிக் கைப்பிடிக்குள் நுழைந்துகொண்டு அவனை வீட்டிற்குத் திரும்ப அழைத்துச் சென்று கவசத்தை அணிவித்துவிடும். அதற்குள்ளாக, மங்கலான முகங்கள் நிரம்பிய அந்த உலகத்தை குழந்தையைப்போல வேடிக்கை பார்த்துச் சேர்த்துக்கொள்கிறான். பின், நம்மை ஆற்றுப்படுத்துவதாக இப்படிக் கவிதைகள் எழுதுகிறான்.
***
கண்களும் வெற்றிடமும்
அந்திக்கருக்கலில் எனக்குக் கண்ணாடியைக் கழற்றி வைக்கும்
ஆசை வந்துவிடுகிறது
கவசமற்ற வெறும் கண்களோடு நடை போகிறேன்
சும்மா சொல்லக்கூடாது
மங்கலாகத் தெரிவதிலும்
சில நன்மைகள் இருக்கவே செய்கின்றன
ஒரு நொடிதான்
எதிர்ப்படும் முகங்கள் யாவும் ஒரே முகங்கள் ஆகிவிடுகின்றன:
மங்கல் முகங்கள்
அவ்வளவு பேரும் புதியவர்கள்
இனிமேல்தான் அறிமுகம் செய்துகொள்ளவேண்டும் போல
ஒருவரைக் கூட எனக்குத் தெரியவில்லை
பெயர்ப்பலகைகளில், சுவரொட்டிகளில், பேருந்துகளில் என
எந்த எழுத்தையும் படிக்க முடியவில்லை
வேறு ஏதோ மொழியில் இருக்கின்றன அவை:
அர்த்தம் தர மறுக்கும் ஓர் உலகம்
நிறங்கள் நிறங்கள் ஆகப் போராடுகின்றன இங்கு
இந்தத் தேவாலயச் சப்தம் மட்டுமில்லை எனில்
இத்தருணம் ஒரு கனவேதான்
வழியில் பிறகு பாரபட்சமின்றி இருட்டிவிட்டதைப் பார்க்கிறேன்
இனி நான் எனது ஊருக்குத் திரும்பவேண்டும்
நெருங்கி நெருங்கிப் பார்த்தும்
பின்பு கண்ணாடி அணிந்தும்
***
***
மூக்குக் கண்ணாடி அணியாமல்
தூரக்காட்சிகளின் மங்கல்
எனக்கொரு தைரியத்தைக் கொடுத்துக்கொண்டிருந்தது
மேடை பயம் விலக
பள்ளி நாடகமொன்றில்
மூக்குக் கண்ணாடி அணியாமல்
நடித்த நாள்
நினைவிற்கு வந்தது
எதிர்வரும் மனிதர்கள்
கலங்கலாகிவிட்டனர்
இப்போது பயம் நீங்கிவிட்டது
பார்வைத் தெளிவெனும் அச்சம்
என் வீட்டுப் பரணில் கிடக்கிறது
எத்தனை நாள்
அதை
தூசி போகத்
துடைத்திருப்பேன்
அறியாமை
அறியாமை
அந்த பைனாக்குலர்
இனி எனக்கு வேண்டாம்
இனி தூரத்துப் பறவை
என் கண்களில் பறக்காது
அது வானத்தில் பறக்கிற செய்தியை ஏந்தி வரும்
தபால்காரர் போதுமெனக்கு
***
0 comments:
Post a Comment