மாறாக தீவிர கவிதைகளில் காதல் குறைந்த பட்சம் அதன் பிரிவாற்றாமை துயரேனும் வெவ்வேறு விதமாக கையாளப்பட்டு வருகிறது.
உண்மையில் காதல் எனும் நிலையில் என்னதான் இருக்கிறது? முதல்கட்டமாக அது சாமானியனின் ஆத்மீகம் என்று சொல்லலாம். அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் ஆனந்த பூர்த்தியாகி நிற்பது மெய்யடியவருக்கு மட்டும் அல்ல, ஒரு சாதாரணனுக்கும் சாத்தியம் என்பதை காதல் காட்டிவிடுகிறது.
எனில் அந்த மெய்யடியவருக்கும் காதல் வசப்பட்டவருக்கும் என்ன வேறுபாடு? முற்ற முழுதான வேறுபாடு என்பது மெய்யதியவர் தன்னில் தான் நிறைந்தவர். அங்கே பிறன் என்பதே இல்லை. ஆன்மாவின் இயல்பாம் ஆனந்தம் என்கிறார் ரமணர். தன்னில் தான் நிலைக்கும் உவகை அது. மாறாக காதல் துல்லியமான பிறனில் நிலை கொள்வது. அவன்/அவள் என்பதை அச்சாக்கி சுழலும் சக்கரம் அது. (பக்தி இலக்கியம் அவன் அல்லது அவள் என்று மாறி அந்த அச்சில் பரம்பொருளை நிறுத்தி சுழல்வதைக் காணலாம்). உங்கள் உணர்வு நிலை மொத்தமும் பிறன் எனும் ஒன்றால் மட்டுமே இயங்குவது எத்தகு உணர்ச்சிக் கொந்தளிப்புகளுக்கான நிலை. இந்த நிலைகளின் தொடர்ச்சியே ஒருவரை ஒருவர் கலந்து நிறைவுகொள்வதற்கான தவிப்பு.
எழுதித்தீராத அந்தக் தவிப்பை மீண்டும் எழுதிக் காட்டிய கவிதை இது.
***
நம் புலப்பெயல்
இறுதி வரைக்கும்
இணையவே போவதில்லை
எனத் தெரிந்த பின்னும்
விட்டு விலகாது
நெடுங் கோடுகளென
நீளக்கிடக்கும்
நம் உடல்களின் மீது
தடதடத்துக் கடக்கும்
இருப்பூர்திப் பெட்டிகளில்
தொலைதூரம் சென்று
மறையட்டுமென நாம்
நிறைத்து அனுப்பிய
ஏக்கப் பெருமூச்சுகள்தாம்
கண்ணே
உலர்ந்த இந்நிலம் முழுவதையும்
ஒருசேர நனைக்கவல்ல பெருமழையை அடிவானத்தில்
கருக் கொள்ளச் செய்கின்றன.
***
மோகனரங்கனின் இக்கவிதை ஒரே சமயத்தில் சங்க இலக்கியம் கைக்கொள்ளும் அகம் புறம் அழகியலில் நின்று நவீன காலம் கொண்டு வந்த தொடர்வண்டி வரை வந்து அன்று முதல் இன்றுவரை அறுபடாமல் தொடரும் ஆதாரமான தவிப்பு உணர்வு ஒன்றை பேசுகிறது.
இதே உணர்வு நிலையின் மற்றொரு நிலையான சமநிலையின்மை அதன் ஆற்றாமை குறித்தது கீழ்கண்ட கவிதை.
***
அணுக்கம்
நான்
ஆயுள் பரியந்தம்
நீந்தினாலும்
கடக்கமுடியாத
கடலுக்கு அப்பால்
அக்கரையில்
நிற்கிறாய்!
நீ
நினைத்தால்
நிமிடங்களில்
நீர்மேல் நடந்துவந்து காணும்படிக்கு
இதோ
இக்கரையில்தான் இருக்கிறேன்.
நான்.
***
அன்புடை நெஞ்சம் தாம்கலந்து நிகழ்ந்ததோர் மெய்தோய் இன்பம். ஒருவரில் ஒருவர் திளைத்து, ஒருவர் மற்றவரில் அங்கே தன்னைத் தான் கண்டு கொள்ள, பொலிகிறது பாலன்ன ஒளி.
ஒளியறிதல்
இருளில்
ஒன்றையொன்று
கண்டு கொண்ட இரண்டு நட்சத்திரங்கள்
பரவசத்தில்
நடுங்க,
பொலிகிறது
பாலன்ன ஒளி!
ஒரு நூறு வருடங்கள்
கடந்து
எதேச்சையாய் வானத்தை ஏறிட்டு நோக்குகிற இரு ஜோடிக் கண்கள்
அந்த இரகசியத்தைத் தமக்குள் பகிர்ந்துகொள்கின்றன.
***
நீந்திக் கரை காண இயலாக் கடும் புனல் என காமத்தை அறிய நேர்வது போல, பாறை மேல் விழுந்த நீர்த்துளி மேல் காயும் வெயிலாகத் தன் மேல் பொழியும் காதலை உணர நேரும் தருணமும் உண்டு.
இம்மை
என்பிலதனைக் காயும் நண்பகல் வெய்யில்
உனதன்பு.
பிறகும்
பிழைத்திருக்க வேண்டிப்
பிடி நிழல் தேடி,
நெடுக அலையும் உடலின் தவிப்பு
இவ் வாழ்வு.
***
இத்தகு காதலின் பிரிவுத் துயரை இத்தனை பரிதவிப்புடன் சொன்ன கவிதைகள் குறைவே.
கடாகாசம்
கண்ணீரின் ஈரம் இன்னும் காயாத நினைவைப்
பிசைந்து பிசைந்து
பிரிவின் கரங்கள் பெரிதாக வனைகிறது எனக்கான ஈமக் கலனை.
பொழுதின் அச்சில் நழுவாமல் சுழலும் திகிரியின்
விரைவிற்குத் தக விளிம்பு கூடி விரிய
நடுவில் திரள்கிறது பாழ்
அதில்
அளவாய் நிறையும் ஆகாயத்தோடு
அறிதாகச் சில
நட்சத்திரங்களும் புகுகின்றன.
என் அந்திம இருட்டிற்கு
விழித்துணையாக.
***
மேற்கண்ட கவிதைகளை அதன் ஆதார உணர்வு என்ற அளவில் மட்டுமே அவற்றை காதல் கவிதை எனும் வகைமைக்குள் அடக்கினேனே அன்றி அதன் கற்பனை சாத்தியங்கள் பல.
உதாரணமாக ஒளியறிதல் கவிதையை ஆத்மீகமாக ஒரு குரு சீடன் ஒருவரை ஒருவர் கண்டு கொள்ளும் தருணமாக, நூற்றாண்டுகள் கடந்தும் அவ்வண்ணமே தொடரும் மற்றொரு குரு சீடனாக அதன் உணர்வு நிலையாக ஒரு வாசிப்பை அக்கவிதைக்கு அளிக்க இயலும். இப்படி மேற்கண்ட ஒவ்வொரு கவிதைக்குமே அவை வாசக தனி அனுபவம் சார்ந்து கிளர்த்தும் கற்பனை சாத்தியங்கள் உண்டு.
எனக்கு தனிப்பட்ட முறையில் அணுக்கம் கவிதை அத்தகையது.
சித்தம் பேதலித்த என் அம்மாவைக் காணும் தோறும் நான் அடைந்த உணர்வுக்கு நேர் நிற்கும் கவிதை வரிகள் இவை. அன்று அவள் இருந்த உலகில் எனக்கு இடம் இல்லை. என்னை ஒரு மனிதனாக கூட அவள் கண்கள் அறிந்து கொண்ட அடையாளம் அதில் இல்லை. அவள் அப்போது இருந்த உலகை சென்று சேர ஆயுள் முழுதும் பயணித்தாலும்என்னால் ஆகவே ஆகாது. ஆனால் அவள் நினைத்தால் (அப்படி ஒரு மாயம் அவள் அறிவாள் என்று அன்று நான் மனதார நம்பினேன்) காலாதீதத்தின் மொக்கவிழ்த்து ஒரே கணத்தில் என்னை வந்து சேர்ந்துவிட முடியும்.
மேலும் இந்த கவிதைகளின் தனித்துவம் என்பது இந்த அகக் கவிதைகள் இயற்கையுடன் கொள்ளும் உறவு. தண்டவாளக் கம்பியாக நம்மை உணர்ந்து, அதில் நாம் உணர்வது தடதடக்கும் ரயிலின் பேரெடை. அதை நீராவி ரயில் என்று கற்பிதம் செய்து கொண்டால், கவிதை உருவாக்கும் காட்சி இன்பம் இன்னும் உயர்கிறது. அந்த ரயில் வெளியிடும் நீராவியே நமது பெருமூச்சுக்கள். அதுவே அடிவானில் கருத்துத் திரளும் மேகம். கடாகாசம் கவிதையில் சுற்றி உள்ள புறம் முழுமையும் அவனைப் பூட்டி, புறம் முழுமையுமே அவனது ஈமத்தாழி என்றாகும் சித்திரம். அனைத்துக்கும் மேல் ஒலியறிதல் கவிதையின் தொடர்ச்சியாக இந்த கவிதையைக் கொண்டால் இப்போது இக்கவிதையில் வரும் நட்சத்திரம் அளிக்கும் உணர்வு நிலை பல மடங்கு அழுத்தம் கூடுகிறது.
( தமிழினி வெளியீடாக மோகனரங்கனின் கல்லாப்பிழை கவிதைத் தொகுப்பிலிருந்து).
0 comments:
Post a Comment