வானத்தைக் கட்டுவது எப்படி? “மண்ணிலும் வானந்தானே நிரம்பி யிருக்கின்றது? மண்ணைக் கட்டினால் அதிலுள்ள வானத்தைக் கட்டியதாகாதா?” என்கிறார் மகாகவி பாரதி.
அபியின் கவிதை வானம் என்றால் வாசகனின் மனமே அந்த வானம் வந்து வதியும் மண். வாசகன் உறும் அனுபவத்தைக் கட்டுவதே மண்ணைக் கட்டுவது.
கவிதைக்கு மூன்று தோற்றங்கள் உண்டு என்கிறார் அபி. படைப்பாளியின் தனி அனுபவம் (அக அனுபவம்) அதன் முதல் தோற்றம்; புறவுலகின் உணர்வு அறிவு அனுபவப் பரப்பிற்கு அவன் தரும் பிரதியே அதன் இரண்டாம் தோற்றம்; வாசகன் அடையும் தனி அனுபவம் (அக அனுபவம்) அதன் மூன்றாம் தோற்றம். அபியின் கவியுலகை அவதானித்தால் இம்மூன்றும், சைவ சித்தாந்தம் பதிக்குக் கூறும் முந்நிலைகள் போல், முறையே அரு, அருவுரு மற்றும் உரு என்றிருப்பதைக் காணலாம்.
மூன்றாம் தோற்றத்தை வைத்து அபியின் கவிதைகளின் முதல் தோற்றத்தை அனுமானிக்கலாகுமா? முதல் தோற்றம் என்னும் மூலப் பிரதி கவிஞரிடமேகூட இருக்குமோ என்னவோ? “முன்பொரு பாடல் எழுதினேன் / அதன் மூலப் பிரதி என் வசம் இல்லை / எரவாணத்தில் செருகி இருந்தேன் / எடுத்தவர் யாரோ பதுக்கிக் கொண்டார்” என்கிறார் திருலோக சீதாராம்.
சரி, முதல் தோற்றத்தை விட்டுவிடுவோம். அது முற்றும் அரு. அவர் நமக்கு வழங்கியிருக்கும் இரண்டாம் தோற்றத்தை எடுத்துக் கொள்வோம். அதை வைத்து என்ன செய்யலாம்?
இருபது ஆண்டுகளுக்கு முன் பேராசிரியர் பீ. மு. மன்சூர், “இவர் கவிஞர்களின் கவிஞர். இவரைப் படி” என்று சொல்லி “மௌனத்தின் நாவுகள்” நூலை என்னிடம் கொடுத்தார். அவ்வழிதான் அபி அறிமுகம். தியானம் போல் அந்நூலை வாசித்திருந்தபோது உடன் பயின்ற ஒருவன் கையில் வாங்கிச் சில பக்கங்களை வாசித்தான். “உருப்படாத கவிதைகள், இதையெல்லாம் படித்தால் நீயும் உருப்பட மாட்டாய்” என்று விமர்சனம் உதிர்த்தான். அவன் உரைத்த ‘தொனி’ வேறுதான். என்றாலும், அவன் வாய்க்குச் சர்க்கரை போடலாம். அபியின் கவிதையுலகம் ‘உருப்படாத’ ஒன்றுதான்! ஜெயமோகன் சொல்வது போல் அது “அருவக் கவியுலகு.” (“இதையெல்லாம் படித்தால் நீயும் உருப்பட மாட்டாய்” – அடடா! மகத்தான வாழ்த்து!)
மனப்பாடம் செய்தல் அல்லது மனனம் செய்தல் என்பதை ‘உருப்போடுதல்’ என்று குறிப்பிடுவார்கள் அல்லவா? அது ஓரு தத்துவச் சொலவம். மனம் என்ன செய்கிறது? அருவாகிய அனுபவத்திற்கு உருவேற்றுகிறது. ‘புதுக்கவிதை நிற்காது, அதை நெட்டுருப் போட முடியாது’ என்று சொல்வார்கள் (கண்ணதாசனும் அப்படிச் சொல்லியிருக்கிறார். ) ஆனால், அபியின் கவிதைகள் வாசகனின் கையில் அருவுருவாகக் கிடைப்பன. அவற்றை அவன் தன் மனத்துள் உருப்போடலாம். அல்லது அருவுருவை மீண்டும் அருவ நிலையை நோக்கிச் செலுத்தி அனுபவம் அடையலாம். அது வாசகனைப் பொருத்தது.
ஆய்வுலகு என்று ஒன்று இருக்கிறதே, அதில் கவிதைகள் எப்படியெல்லாம் உருவேற்றப் படுகின்றன! ஓர் ஆய்வாளன் என்னும் முறையில் யானும் அப்படி உருவேற்றும் கலை அறிந்தவன். “அபி கவிதைகள்” தொகுப்பை வாசிக்கும்போதே குறிப்புகள் எழுதிக் கரிக்கோல் கரைத்திருக்கிறேன். அவற்றை எல்லாம் ஒன்று திரட்டி கட்டுரைக்கலாம் என்று யோசிக்கும்போதே உள்மனம் கேட்கிறது: “எதற்கு?” வேறெவரிடமும் இப்படித் தோன்றியதில்லை. அபியிடம் இப்படித் தோன்றுகிறது, பண்டிதம் காட்டுவது அபத்தம் என்று.
அவரே ஓர் எச்சரிக்கை உரைக்கிறார்: “வாசகன், உறைபடங்களின் (stills) தொடர்ச்சியாக இருக்கிற கவிதைகளில் சூசக இடைவெளிகளைக் காண்பதோடு நிறுத்திக் கொள்வதே நல்லது; அவற்றுக்கு அர்த்தம் தேடும் முயற்சி இடைவெளிகளைப் பழுதாக்கிவிடும்.”
அரூப நிலைகளையும் மௌனத்தையும் நோக்கிச் செல்லும், செலுத்தும் அபியின் கவிதைகளைக் கரம் பற்றிக் கொண்டு யாமும் கவியனுபவம் உறலாம், நம் பெயரில் கவிதைகள் ஆக்கித் தரலாம். அதுதான் அவரின் கவிதைகளை வாசிக்க வேண்டிய வழி என்றாலும் இக்களம் அதற்கன்று. இங்கே அனுபவம் நோக்கி நகரும் ஆசையைச் சற்றே அணைத்து வைத்துவிட்டு, ‘கருத்து’ நோக்கி நகர்ந்து சில சொல்லியாக வேண்டும்.
அபியின் கவிதைகள் குறித்துப் பேசும் பலரும் சூஃபி மரபைக் குறிப்பிடுகிறார்கள். அதனால், ‘அபி ஒரு சூஃபிக் கவிஞரா?’ என்னும் கேள்வி எழுகிறது. ஏன் சூஃபித்துவம் பற்றிக் குறிப்பிட வேண்டும்? அவரின் இயற்பெயர் ‘ஹபிபுல்லாஹ்’ என்றிருப்பதால் மட்டுமே அப்படி யோசிக்கிறோமா? அவரை வேதாந்தக் கவி என்றோ ஜென் கவி என்றோ குறிப்பிட முடியாதா? என்றெல்லாம் சிந்தனைகள் எழுகின்றன.
“அபி ஒரு சூஃபியா?” என்னும் வினா எனக்கு இதே போன்ற வேறொரு கேள்வியை நினைவூட்டுகிறது. “திருமூலர் ஒரு சித்தரா?” என்னும் கேள்வியை எழுப்பிக்கொண்டுதான் கரு. ஆறுமுகத் தமிழன் “திருமூலர் – காலத்தின் குரல்” என்னும் ஆய்வு நூல் எழுதினார். சித்தர்கள் கட்டுடைப்பாளர்கள்; திருமூலரோ சைவ சித்தாந்தம் என்னும் கட்டமைப்பை அழுத்தமான கோடுகளால் வரைந்து கொடுத்தவர். அப்படியிருக்க, அவரை என்னனம் சித்தர் என்று கூற முடியும்? என்பது கரு. ஆறுமுகத்தமிழனின் வாதம். “அபி ஒரு சூஃபியா?” என்னும் வினாவில் உள்ள வாதம் அதற்கு நேரெதிர்: “சூஃபி மரபுக் கட்டமைப்பின் தோற்றச் சாயல் எதையுமே காட்டாத அபியை ஒரு சூஃபி என்று எப்படிச் சொல்ல முடியும்?” வெளிப்படையில் இக்கேள்வி அர்த்தமுள்ளதுதான். ஏனெனில், சூஃபி மரபின் பெருங்கவிகள் என்று நாம் காணும் எந்தவொரு சூஃபியும் தன் கவிதைகளில் அதன் கட்டமைப்பைக் காட்டும் சொல்லாடல்களை மீண்டும் மீண்டும் கையாள்கின்றனர் – மவ்லானா ரூமி உட்பட.
ஆனால் அபி அன்னனம் செய்தவர் அல்லர். “இதோ என் கண்முன் என் கவிதைகள், என் வார்த்தைகளை வெளியேற்றிவிட்டன...” என்று மொத்தத்துக்கும் மொழியை விட்டே ஆவியாகி மேலெழுகின்றன அவரின் கவிதைகள். ஆனால், மௌனம் குறித்துப் பேசும் மவ்லானா ரூமியின் கவிதைகள் (மரபுச் செய்யுள் வடிவம் கொண்டவை என்பதாலும்) அழுத்தமாக வாசகனின் நினைவில் நிற்கக் கூடிய வசீகரமான உருவ அழகு கொண்ட சொற்றொடர்கள். அவரின் சில ஆயிரம் கண்ணிகளாவது மனனம் ஆன சூஃபித்துவச் சாதகர்கள் பலர் எக்காலத்திலும் இருந்து வந்துள்ளனர். எஞ்ஞான்றும் மவ்லானா ரூமி ஒரு சொற்கொல்லர் (Wordsmith; சொற்களைக் கொல்பவர் அல்லர்). “வார்த்தைகளிடம் இருந்து என்னை விலைக்கு வாங்கிச் செல்ல எவரேனும் வாராரோ?...” என்று ஏங்கிப் பாடியவர்.
மீண்டும் கேள்வி: “அபி ஒரு சூஃபியா?” இதற்கு விடை, ஆம்-இல்லை என்பதுதான், அவரது பாணியிலேயே. ஆம் என்றாலும் இல்லை என்றாலும் என்ன ஆகிவிடப் போகிறது?
சொல்லாடல்கள் (இஸ்திலாஹாத்) என்பது சூஃபித்துவ மரபின் மேற்கட்டுமானம் மட்டுமே. பொருண்மைகளே அதன் அடித்தளம். அவற்றை நாம் அபியிடம் காண்கிறோம். அவற்றை அவர் தமிழ்ச் சொற்களால் குறிக்கிறார் (தமிழுலகில் கிரகிக்கப்பட்டுள்ள வடமொழிப் பதங்களையும் சேர்த்துக் கொள்க. ) சூஃபி மரபில் புழங்கப்படும் அரபு அல்லது ஃபார்ஸி மொழிகளின் சொல்லாடல் அறவே அவரின் கவியுலகில் இல்லை. அச்சொற்களை இடம் பெறச் செய்தால் ‘அபி ஒரு சூஃபி’ என்று சொல்லிவிடுவார்கள். (வேறு எந்த ஆன்மிக மரபிற்குரிய கலைச்சொற்களை இடம் பெறச் செய்தாலும் அபி அம்மரபின் கவியாகவே தெரிவார். கலத்தின் உருவே உருவொன்றிலாத நீருக்கு உரு.)
அபியின் கவிச் சொற்களுள் ஒன்று ‘மௌனம்’ மார்க்க அறிஞராக இருந்த குணங்குடி மஸ்தான் சாகிபை சூஃபி நெறிக்குள் உந்தியது மௌனம் குறித்த நபி மொழியே என்பது இங்கே நினைவுக்கு வருகிறது: “மன் சமி(த்)த நஜா” – ‘மௌனித்தவன் ஈடேறினான். ‘ஆனால், தமிழின் முக்கியமான சூஃபிக் கவிஞராகக் கருதப்படும் மஸ்தான் சாகிபின் பாடல்களில் மௌனம் முகங்காட்டும் (‘சாயல் காட்டும்’ என்றால் இன்னும் பொருத்தமோ?) வரிகள் மிகவும் குறைவே. அபியின் கவிதைப் பரப்பில் மௌனத்தின் ருசி தட்டாத சொல்லே கிடையாது. “என்னைத் / தன்மேலொரு / படலமாக்கிப் / படர்த்திற்று / மௌனம்.” என்று முடிகிறதொரு கவிதை. ஒவ்வொரு அபி கவிதையின் முடிவிலும் சித்தத்தில் இதன் ‘பாவனை’யை வாசகன் அடையலாம்.
“மௌனத்தின் நாவுகள்” என்னும் தலைப்பு அபியின் அனைத்துக் கவிதைகளுக்கும் பொருத்தம். அவை சொற்களை உரத்துப் பேசுவன அல்ல. “மௌனத்தின் பின்னணியில், த்வனிகளால் இவை பேசின என்று நினைக்கிறேன்,” என்கிறார் அபி. (“கண்ணாடியில் பிம்பம் விழும் த்வனி கூட எனக்குக் கேட்கிறது” – லா. ச. ரா-வின் சீர்த்தி பெற்ற வரி. அவர் கதையுலகின் அபி; இவர் கவியுலகின் லா. ச. ரா அல்லரோ?)
“த்வனி” என்பது இந்தியக் கலையியலில் முதன்மைக் கோட்பாடுகளுள் ஒன்று. குறிப்பாக, இசைத் துறை சார்ந்தது அது. அபியின் கவியுலகில் அது ஒரு முக்கியமான குறிச்சொல். உண்மையில் இசையைச் சாதிக்கவே கவிதை முனைகிறது என்று மகாகவிகள் யாவரும் உணர்ந்து உரைத்துளர். “ஓவியமும் இசையும் மௌனத்தில் வேர் பாய்ச்சி நிற்பவை; சொல்லையும் பொருளையும் விட்டு வெளியேறியவை. கவிதையையும் இந்த மௌன நிலைக்குக் கொண்டு வரக் கவிஞன் தீவிரப்படுகிறான்” என்கிறார் அபி.
மௌன நிலை என்பது அருவ நிலை. “அனைத்துக் கலைகளிலும் விஞ்ஞானங்களிலும் நிச்சயமாக இறைவனைக் காணலாம். ஆனால், இசையில் மட்டுமே அவனை நாம் எல்லா வடிவங்களும் எண்ணங்களும் நீங்கிய நிலையில் காண்கிறோம். பிற கலை ஒவ்வொன்றிலும் உருவணக்கம் (idolatory) உள்ளது,” என்றும், “அக மரபின் வழி செல்வார்க்கு அவர்தம் ஆன்மிக வளர்ச்சிக்கு இசை மிகவும் இன்றியமையாதது. காரணம் யாதெனில், உண்மையைத் தேடும் ஆன்மா உருவற்ற இறைவனையே தேடுகிறது” என்றும் ஹஜ்ரத் இனாயத் கான் கூறுவது இங்கே நினைவுக்கு வருகிறது.
கவிதையின் மூலமும் இலக்கும் மௌனம் என்றே அபியின் கவிதைகள் உணர்த்துகின்றன. இசையின் மூலமும் இலக்கும் மௌனமே என்று இசை ஞானியர் கண்டுள்ளனர்.
பொதுப் புழக்கத்தில் மௌனம் என்னும் சொல் சப்தமின்மை / நிசப்தம் என்னும் நிலையைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் அபி சொல்லும் மௌனம் என்பது வேறு. அது வெறும் சப்தமின்மை அன்று. “மௌனம் என்பது நிசப்தமன்று; அல்லவா! நிசப்தம் சப்தத்தின் தற்காலிக ஒதுக்கம்; சப்தத்துடன் மட்டுமே தொடர்புடையது. மௌனமோ சப்தம், நிசப்தம் உள்ளிட்ட பிரபஞ்ச சலனங்கள் எல்லாவற்றையும் தன்னுள் கொண்டு அசைவற்றது போல் ஒன்றுமற்றது போல் சமைந்திருப்பது,” என்கிறார் அபி. இங்கே மௌனம் என்று இவர் குறிப்பிடுவது சூஃபித்துவ நோக்கில் இறைவனையே சுட்டுகிறது. இறைவனின் திருக்கல்யாண குணங்களுள் “கலாம்” (பேச்சு) என்பதுமொன்று. ஆனால் அது மொழி அன்று. மொழிக்கு இரண்டு வடிவங்கள் உள்ளன. வரிவடிவம் (எழுத்து) மற்றும் ஒலி வடிவம் (சப்தம்). இறைவனின் பேச்சோ ஓசையும் எழுத்தும் அற்றது – பிலா சவ்த்தின் பிலா ஹர்ஃபின் – என்று சூஃபிகள் கூறுகின்றனர். அதைத்தான் மௌனம் என்னும் சொல்லால் அபி சுட்டுகிறார். எனில், மௌனம் என்பது இறைவனின் திருப்பெயர். அது இறைவனின் குணப்பெயர் என்பதற்கும் அப்பால் அவனின் சுயத்தையே குறிப்பதாகிறது. “இஷ்க்” (காதல்) என்னும் சொல்லை அத்தகைய அர்த்தத்தில் சூஃபி ஞானக் கவி ஃபக்ருத்தீன் இராக்கீ கையாண்டுள்ளார். அபி, “மௌனம்” என்னும் சொல்லினை அன்னனம் கையாள்கிறார் எனலாம்.
“இன்றைய படிமங்கள் அரூப நிலைகளை நோக்கியவை; மௌனத்தைத் தொட முயல்பவை,” என்கிறார் அபி. மவ்லானா ரூமியின் கஜல்கள் பலவும் “ஃகாமூஷ்” (மௌனம்) என்னும் சொற்கொண்டு முடிகின்றன. அது பற்றி, “தன் கவிதைகள் எந்த மூலத்தினின்றும் வெளிப்பட்டனவோ அந்த மூலத்திற்கே அவற்றை அர்ப்பணிக்கின்றார்” என்று விளக்கம் தருகிறார் கோல்மன் பார்க்ஸ்.
உள்ளமை அல்லது இருத்தல் (‘உஜூது’; Existence) என்பது பற்றிய அபியின் கவிதை வரிகள் நாம் ஆழ்ந்து பார்க்க வேண்டியவை. சூஃபித்துவத்தின் நோக்கு “வஹ்தத்துல் உஜூது” (ஏக உள்ளமை) என்பதாகும். (இருப்பது ஒன்றே மற்றது அன்று.) எனில், படைப்புக்களின் – வஸ்துக்களின் (ஷை / அஷ்யாஉ) இருத்தல் பற்றி சூஃபித்துவம் என்ன சொல்கிறது? அவற்றின் சுயத்தை அது ஜாத்தே அதம் (சூன்ய சுயம் – இன்மை சுயம்) என்கிறது. அவை வெறும் நாம ரூபம் மட்டுமே. அவற்றிற்குச் சொந்தமாக உள்ளமை இல்லை. எனவே அவற்றின் இருத்தல் என்பது ‘இல்லாது இருத்தல்’ என்பதே. இது அபியின் கவியுலகில் மீண்டும் மீண்டும் சுட்டப்படுகிறது. “இல்லாதிருக்கும் இருப்பு / புலப்பட்டது / மங்கலாக” (‘நிசப்தமும் மௌனமும்’) என்கிறார். “என்ற ஒன்று” என்னும் தொகுப்பின் தலைப்புக் கவிதை சூன்ய நிலை (அதமிய்யத்) பற்றிப் பேசுகிறது: “சூன்யம் என்ற ஒன்று / இருந்தவரை / எல்லாம் சரியாயிருந்தது. “இவ்வரி, படைத்தல் நிகழுவதற்கு முந்திய நிலை என்று சூஃபி மரபு பேசுவதுடன் இயைகிறது. “தூய காலத்தினின்றும் மனிதனின் மீதொரு நிலை இருக்கவில்லையா? அவன் நினைக்கப்படாததொரு பொருளாய் இருந்தான்” (“ஹல் அதா அலல் இன்சானி ஹீனும் மினத் தஹ்ரி லம் யகுன் ஷைஅம் மத்கூரா” – 76:1) என்கிறது குர்ஆன். (இவ்வசனத்தில் சூஃபி நெறியில் ஆளப்படும் முக்கியமான கலைச் சொற்கள் சில இருக்கின்றன. இன்சான்: மனிதன், ஹீன்: நிலை; தஹ்ரு: தூய காலம் (Absolute Time), ஷை: பொருள் / வஸ்து, திக்ரு – நினைவு. )
இந்நிலையை நோக்கி நகர்வதைத் தன் கவிதையின் இயல்பாகவும் தன்னின் இயல்பாகவும் அபி குறிப்பிடுவதைக் கவனிக்க வேண்டும். “எப்பொருளாயினும் விதிப்புகளும் தன்மைகளும் விலகி முற்றவும் எதேச்சையாய் ஒன்று கிட்டினால் அது அரூபம். எந்த உணர்வும் மூலத்தில் அரூபம். அந்த அரூபத்தைத் தொட முயல்கிறது கவிதை,” என்றும், “மூல அருவுலகு இவன் இயல்புக்குப் பொருந்தி வருகிறது,” என்றும் அவர் கூறுவதை ஓர்க.
இந்த நிலை இப்போதும் நிகழக் கூடும். சூஃபியாக்கள் அதனை ‘ஃபனா’ என்றுரைப்பர். அபி இதனை ‘அனுபவத்தைத் தாண்டிய நிலை’ என்றும், ‘அனுபவம் abrupt ஆகத் தொடர்ச்சி அற்று நின்றுவிடும் ஒரு கணம்’ என்றும் குறிப்பிடுகிறார்.
“இல்லாது இருத்தல்” என்னும் சொற்றொடர் அபியின் கவியுலகில் முக்கியமான ஒன்று (காண்க: ‘என்ற ஒன்று’, ‘நிசப்தமும் மௌனமும்,’ ‘இருத்தல்’, ‘நானும் இந்தக் கவிதையும்’ ஆகிய கவிதைகள்.) ‘ஏக உள்ளமையில் அனைத்தும் இல்லாது இருக்கின்றன’ என்பது சூஃபி தரிசனங்களுள் ஒன்று. இன்மை ஆகிய தான் இறைவனில் இருப்பதை உணர்வது சூஃபியின் நிலை. அந்நிலைக்கு ‘பகா’ (baqa) என்று பெயர்.
“நான்” என்னும் தன்னுணர்வு இறைவனுக்கு – “ஹக்” என்னும் சத்தியப் பரம்பொருளுக்கு – மட்டுமே சுயமாக உரியது என்கிறது சூஃபித்துவம். அந்த சுயாதீனம் ‘கண்ணாடியில் பிம்பம் பிரதிபலிப்பதைப் போன்று’ படைப்புக்களின் சுயத்தில் பிரதிபலிக்கின்றன. இறைவனின் சுயப்பண்புகளும் படைப்புக்களில் பிரதிபலிப்பாகின்றன. ஆனால், அவற்றுக்கெல்லாம் முந்தியதும் முதலானதும் ‘நான்’ (அனா) என்னும் தன்னுணர்வு அருளப்படுவதே. தன்னுணர்வுடன் இருத்தலை அபி இப்படிச் சொல்கிறார்: “பாவனைகளில் / மிக மூத்த / நான் என்ற பாவனையை / மெல்ல முகர்ந்து / விரல் நுனியால் / தொட்டுப் பார்த்துக் கொண்டு / நான்.” (‘ஏற்பாடு’). இங்கே ‘பாவனை’ என்னும் சொல்லினை எப்பொருளில் கையாள்கிறார் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். அவரே விளக்கம் தருகிறார்: “பாவனை கற்பனை அல்ல; பாவித்துக் கொள்ளுதல் அல்ல; தான் இன்னொன்றாக உணர்தல் அல்ல. மாறாக, தான் தானேயாக அழுத்தம் காட்டி நிற்றல். தன்னுள் வரம்பின்றிப் பொதிந்து கிடக்கும் சாத்தியம் ஒவ்வொன்றும் கூர்மையாகத் தோற்றம் காட்டச் செய்வது பாவனை. அதன் மூலம் அனுபவப் பரப்பின் வெவ்வேறு எல்லைகளைத் தொட்டுத் தன்னைத் தனக்கு உணர்த்துவது.”
இங்கே, மகாகவி இக்பால் முன்வைத்த “ஃகுதி” (சுயம்) என்னும் தத்துவத்தை அபி அடைந்திருக்கிறார் என்று உணர்கிறேன். ‘திருக்கலிமா’ என்னும் இஸ்லாமிய மூல மந்திரத்தை (“லா இலாஹ இல்லல்லாஹ்” என்னும் வாசகத்தின் உட்பொருளை) “சுயத்தின் மறை ரகசியம்” (‘ஃகுதி கா சிர்ரே நிஹான்’ – the hidden secret of the self) என்று இக்பால் குறிப்பிடுகிறார். “சுயாதீனத்தின் எழுச்சியில் கடுகு மலையாகும்; சுயத்தின் சோர்வில் மலை கடுகாகும்” (‘ராயீ ஸோரே ஃகுதீ சே பர்பத் / பர்பத் ளு’ஃபே ஃகுதீ சே ராயீ) என்கிறார் அவர் உரைப்பதை, “மனிதனின் அனுபவம் கடலுக்கு மேல் உள்ள பனிப்பாறை என்றால் அவனது அனுபவ சாத்தியம் கடலுக்கடியில் உள்ள பனிமலை” என்று அபி கூறுவதுடன் ஒப்பு நோக்கத் தகும்.
அனைத்துப் பொருட்களையும் அவற்றின் அருவ நிலைக்கு மீட்டுவதால் அபியின் கவிதைகள் சூஃபித் தன்மையில் இருக்கின்றன எனலாம். ஏனெனில், ‘உருவங்களை அழிப்பதே சூஃபிகளின் பணி’ (நுகூஷ் கோ மிட்னா) என்பர். அதனால், அவரின் கவிதையில் பொருட்களின் இயற்பெயர்கள் அழுத்தம் பெருவதில்லை. பொருட்கள் பெயரிழந்து ‘அது’ என்று சுட்டப்படுகின்றன. அபியே கூட அவன் என்றும் இவன் என்றும் சுட்டப்படுகிறார்.
அபியைப் பொருத்த மட்டில் வாழ்வும் கவிதையும் ஒன்றே. “நான் இல்லாமலே / என் வாழ்க்கை / எதேச்சையில் / அருத்திரண்டது” என்று அவர் சொல்வது அவரது கவியுலகுக்கும் பொருந்தும். “நான்” என்பது உருத்திரளும்போது ஆணவம் ஆகிறது. அத்தகைய ‘நான்’ என்பதையே சூஃபித்துவம் “திரை” என்கிறது (சைவத்தில் அது மும்மலங்களுள் முதல். ) அருத்திரளும் நான் என்பது இன்மையாய் இருப்பது. அது உள்ளமையை மறைக்காது. மாறாக, சத்திய தரிசனத்துக்கான ஊடகமாகிறது.
ஆன்மிகத்தில் ‘ஒளி’ என்பது இறைவனைக் குறிக்கும் சொல். ஒளி (நூர்) என்பது இறைவனின் திருப்பண்புகளுள் ஒன்று என்றுரைக்கிறது குர்ஆன். சூஃபி பரிபாஷையில் இறைவனின் சுயத்தை அல்லது உள்ளமையைக் குறிக்கும் வகையில் ‘இருள்’ என்னும் சொல் கையாளப்படுவதுண்டு. இருத்தல் பற்றிய ரகசியங்களை சூசகமாகச் சொல்லும் கவிதைகளை இருள் ஒளிரும் கவிதைகள் எனலாம். அபியின் கவிதைகள் அத்தகைய. அவர் சொல்கிறார்: “பார்வைக்குப் பிடிபடும் ஒளியின் அடியில் தேங்கி மறைந்துள்ள இருள் சமுத்திரம் கவிதைகளில் கொந்தளிக்கிறது.” மேலும் சொல்கிறார்: “நவீன ஓவியங்களில், இசையில் இடைவெளி இருள்கள், வெற்றிடங்கள் மௌனத்தை நோக்கி நம்மைச் செலுத்துவது போலவே கவிதையிலும் மொழியிடைப்படும் இருள் செயல்படுகிறது.” ஆம், அபியின் கவிதைகளை நாம் ‘இருள் ஒளிரும் அருத்திரள் கவிதை’ என்று வருணிக்கலாம்.
அபியின் கவியுலகில் இன்னொரு முக்கியமான குறிச்சொல் “புள்ளி.” அரபியில் அதனை ‘நுக்தா’ என்றுரைப்பர். அச்சொல் சூஃபி நெறியில் ஒரு கலைச்சொல். படைத்தல் என்னும் செயல்பாட்டின் தொடக்க நிலையை அது குறிக்கும். இன்னும் ஆழமாகச் சொல்வதெனில், சித்தில் எழுந்த முதற்குறிப்பை (தஅய்யுனே அவ்வல்) அது சுட்டுகிறது. அந்த முதற்குறிப்பின் உட்பொருள் இறைவனின் உள்ளமையேதான். “புள்ளியைத் தொட்டுத் தடவி/ அதன் முடி திறந்து/ உள் நுழைந்து/ விடு” என்கிறார் அபி. இவ்வரியில் புள்ளி என்பதை சூஃபித்துவக் கலைச்சொல்லாகக் கொண்டு விளக்கம் எழுதினால் சில பக்கங்களுக்கு நீண்டு விடும்.
சூஃபித்துவக் கோணத்தில் அபியை அணுகினால் இப்படியெல்லாம் விளக்கங்கள் தோன்றுகின்றன. பிற ஆன்மிக நெறிகளின் கோணத்திலும் அவரை அணுகி வேறு விளக்கங்களைச் சொல்லலாம். (எளிமை பற்றிய அவரின் கவிதைகளிலும் சிந்தனையிலும் ஜென் ருசி (zen flavour) இருப்பதாக உணர்கிறேன். ) மொத்தத்தில் ஆன்மிகம் (mysticism) என்பது என்ன? “மண் துகளுள் ஒரு பேருலகு காணல்/ விண்ணுலகை ஒரு கான் மலருக்குள்;/ அங்கையில் முடிவிலி பற்றியெடுத்தல் / காலாதீதம் ஒரு நாழிகை தன்னுள்” (To see a World in a grain of sand / and a heaven in a wild flower / Hold infinity in the palm of your hand / And Eternity in an hour.)” என்கிறார் வில்லியம் பிளேக். இப்போது அபி சொல்வதைக் கேளுங்கள்: “உள் பக்குவ வேளையில் ஒருவன் புலனில் அவனைச் சுற்றியிருக்கும் எந்தப் பொருளிலும் அவனுக்குத் தரிசனம் கிட்டலாம். எந்தச் சாதாரணச் சிறு பொருளையும் பற்றித் தொற்றிக்கொண்டு சத்தியம் பளீரெனத் தோன்றிவிடலாம்.”
இப்படித் தத்துவங்களைப் பேசிக்கொண்டே போகலாம். ஆனால், அனுபவமும் தரிசனமுமே கவிதையின் நோக்கம் என்று அபி நமக்கு அழுத்தமாக உணர்த்துகிறார். அதுதான் ஆன்மிகம். தத்துவப் பேச்சு ஆன்மிகம் அன்று. இதுவரை பேசியதிலும்கூட, அபியின் கவிதைகளை விட “கவிதை இயல்” என்னும் பிரிவில் அவர் தந்திருக்கும் ஆழமான கட்டுரைகளைத் தொட்டே இங்கே அதிகம் பேசியிருக்கிறேன். அதுதான் என்னால் முடிந்தது.
ஊன் வாழ்க்கை மற்றும் கவி வாழ்க்கை என்று தான் இரட்டை வாழ்க்கை வாழ்ந்ததாக ஃபிரான்சிஸ் தாம்ஸன் கூறுகிறார்: “A double life the Poet lived, / And with a double burthen grieved;/ The life of flesh and life of song, / The pangs to both lives that belong.” பருவுலகச் சமூக வாழ்வையும் தன் அக வாழ்வையும் சமனப்படுத்தும் (சமாதானப்படுத்தும்?) தேவை கவிஞர்கள் அனைவருக்கும் இருப்பதுதான். “நடைமுறை வாழ்வைச் சந்தித்து உழல்பவன் இவனுடைய ஒரு ‘அவன்.’ இவன் எழுத்து மனிதன். எதை எப்படி எழுதுவது என்பதைத் தன் சுதந்திரமாகக் கொள்கிறான்,” என்று அபி எழுதியிருப்பதை வாசித்தபோது உள்ளத்தில் ஒரு வலியை உணர்ந்தேன்.
தனது நெடிய கவிதை வாழ்வில் அவர் எளிமை என்னும் நிலைக்கு வந்தடைந்திருப்பதாகச் சொல்கிறார். ‘சாதாரணமாய் இருப்பதே அசாதாரணமானது’ என்கிறது ஜென். எளிமை என்பதுதான் என்ன? தன்னை இல்லாமல் ஆக்குவதே. அந்நிலையில் பருப்பொருள் – நுண்பொருள், நான் – பிறர் என்னும் பேதங்கள் மறைந்துவிடுகின்றன. அப்போது அபி கேட்கிறார்: “இப்போது தெரிகிறது, இவைகள் – என் கவிதைகள் – என்னுடையவை அல்ல; என் மூலமாக வந்தவை. வாழ்க்கை எந்தத் தனி ஒருவருக்குச் சொந்தம்? நம் உள்ளுணர்வுகள்கூட நம்முடையவை மட்டுமா?” இந்நிலையில் அபி, “மனித குலத்தின் தொகை நனவிலி (Collective unconscious) கவிஞன் வழியே படைப்பாக வெளிவருகிறது” என்னும் யுங்கின் கோட்பாட்டை நினைவு கூர்கிறார். அது சரி என்றே அவருக்குப்படுவதாகத் தெரிகிறது. அதனால்தான் இந்த முடிவுக்கு வருகிறார்: “எழுத்து மனிதன் எவற்றை எல்லாம் எழுதுகிறானோ, ஒன்று விடாமல் அவை எல்லாம் எல்லாருக்கும் சாத்தியமே என்ற நிச்சயம் இவனுக்கு உண்டு. தான் தனித்தவன், வேறுபட்டவன் என்ற உணர்வே இவனுக்கு இல்லை. அதனால் தனக்குச் சிறுமையோ பெருமையோ இல்லை என்பதும் இவன் உணர்ந்தது.”
இதனைப் படித்தபோது, அபி இந்த தரிசனத்தில் கணியன் பூங்குன்றனாரின் தோள் மீது ஏறி நிற்கிறார் என்று தோன்றிற்று. பிறரை வியத்தலும் இகழ்தலும் இல்லை என்னும் தரிசனத்தைக் கணியன் அடைந்தார். தன்னையே வியத்தலும் இகழ்தலும் இல்லை என்னும் தரிசனத்தை அடைந்திருக்கிறார் அபி.பேசாப் பொருளைப் பேசத் துணிந்தோரே பெருங்கவிகள். தமிழ் பெற்ற பெருங்கவிகளுள் அபியும் ஒருவர் என்றுரைத்துத் தலைக்கட்டுகிறேன்.
***
0 comments:
Post a Comment