கவிதைக்குள் இயற்கையைப் பாடுதல் தத்துவம் என்றும், அதுவே சூழலியலைப் பேசினால் அரசியல் என்றும் புரிந்துவைத்திருக்கும் போக்கு ஒருபோதும் அகத்தையும் புறத்தையும் ஒன்றுபோல பாவிக்காது. அதுபோன்ற நிலைதனில், முழுமுற்றான தனிமை சாத்தியமில்லை என்பதுபோல், முழுமுற்றான பொது மனமும் சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது. ஏனெனில் கவிதையின் பணி எப்போதும் ரசனைகளின் வழியே உலகைக் காண்பதோ அல்லது நடப்புச் சூழலுக்கு பொறுப்பேற்பதோ மட்டுமல்ல. இயல்பில் அது ஒருவகை சமநிலை நோக்கு கொண்டதாகவே காணமுடிகிறது. சூழ்நிலைகளுக்குத் தக்கவாறு எதிரொளிக்கும் கண்ணாடியான மனித மனம் எப்போதும் அந்தந்த தருணங்களின் கூட்டுத்தொகையே. அவற்றை அகம்/புறம் என பிரித்துக்காண்பதெல்லாம் அப்படைப்பை அணுகுவதற்கான விமர்சன வழிமுறைகளேயாகும். கவிஞர் எஸ். சண்முகம் தமது கட்டுரையொன்றில் அகம்/புறம் என்பது ஒரு கால்பந்தாட்ட மைதானத்தின் இரு எதிரெதிர் தூண்களைப்போன்றது என்றும், அத்தூண்களுக்கிடையிலான வெளியே கவிதையில் உருவகங்களுக்கான வெளி என எடுத்துரைக்கிறார். அந்தவகையில் உருவகங்களின் அல்லது படிமங்களின் வலிமை சமயத்தில் அந்த இரண்டு எதிரெதிர் நிலைகளையும் சரிசமமாக்கி ஒரு தராசைப்போல நிலைநிறுத்துமெனில் அதையே சமநிலைமனம் என எடுத்துக்கொள்ளலாம். இதன் அர்த்தம் நடைமுறையில் ஒரு குறிப்பிட்ட கருத்தியலை பின்பற்றும் ஆளுமையின் நடுநிலைமையைக் குறிப்பதல்ல. மாறாக பல்வேறு வாதங்களை தமக்குள் எழ அனுமதிக்கிற அகத்தின் தருணங்கள் சார்ந்தது. அதாவது ஒரு சமூகத்தின் அனைத்து புறப்புள்ளிகளையும் தன் அகத்தால் ஒன்றிணைத்துவிடும் கவிஞர். யவனிகா ஸ்ரீராம் தொடர்ந்து தமது ”தனிப்பட்ட அனுபவங்களிலுள்ள பொது அனுபவத்தை” எவ்வாறு கவிதையாக்குகிறார் என்கிற நோக்கு அவரை சற்று மாற்றுக்கண்ணோட்டத்தில் காண வழிவகுக்கலாம்.
1.
மார்க்சியம் முதலாக சிக்கலான பல புரட்சிகர சித்தாந்தங்களின் எளிய உதாரணங்களை தொடர்ந்து தம் கவிதைக்குள் தேடி அவற்றை மொழிப்படுத்தும் யவனிகாவுக்கு “நான் மனிதன், எனவே மனிதனைச் சார்ந்த எதுவும் எனக்கு புறமன்று” என்கிற தெறன்ஸின் கூற்று பொருத்தமாக இருக்கும். இவரின் பெரும்பாலான எள்ளல்கள், முரண்பாடுகள் அனைத்தும் தேய்வழக்காகிப்போன நியதிகளையும் மற்றும் பொறுப்பற்ற தினசரிகளையும், நிதர்சனத்தில் ஓரெல்லைகளைத் தாண்டி செயல்பட முடியாமல் விதிகளால் சூழப்பட்ட மனித இயலாமைகளையும் குறித்தே நிகழ்வதால் இவரின் மொழி எப்போதும் ஒரு விழிப்புநிலையிலேயே (consciousness) செயல்படுகிறது. அந்த விழிப்புணர்வு தம்மையும் அந்த குற்றச்சாட்டுக்குள் உட்படுத்திக்கொள்ளத் தவறுவதில்லை. "ஒரு நகரத்திற்கான பனித்துளிகளை குளிர்பதனப் பெட்டிகளே வழங்கிவிடுகின்றன" என்று கூறும் யவனிகா, கற்பனைகளால் வாழ்வியலையும், அபிப்பிராயங்களால் விமர்சனங்களையும் தம் மொழிக்குள் சரிநிகராய் முன்னிறுத்துகிறார்.
"அவன் ஒரு பூவைக் கிள்ளும் வேளையில்
பூக்களுக்கு நரகம் உண்டாவெனக் கேட்டான்
கிள்ளிய நகங்களை கேட்கத் தோன்றாமல்"
நிஜவாழ்வில் குற்றங்களும் பின்விளைவும் அடுத்தடுத்த நிகழ்வுதான். ஊழ்வினையைப்போல் பாவ புண்ணியம் மனிதனிடமிருந்து வெகுதொலைவில் இருப்பதில்லை. மனிதர்கள் தங்களுக்குள் சுமத்திக்கொள்ளும் ஒவ்வொரு பிராதுகளிலும் குறிப்பிட்ட சந்தர்ப்ப சூழ்நிலையை ஆராயும் பணிகளை அரசமைப்புகளைக் காட்டிலும் இலக்கியங்கள் பாரபட்சமின்றி புரிந்தன. அதிலும் கவிஞர்.யவனிகா தமது அரசியலை கூட்டுக்குரலாக மட்டும் அணுகாமல் ஒரு தனிப்பட்ட மனிதனின் ஆழமான கேள்விகளாகவும், அதன் தாக்கத்தையும் பதிவுசெய்த அவரின் கோணமானது வழக்கமான அரசியல் நோக்குகொண்ட கவிதைகளுக்கு கிடைத்திட்ட மாற்றுப்பார்வை எனலாம். எல்லா தண்டனைகளும் குற்றவுணர்வைத்தான் போற்றி வளர்கின்றன என்றால் அந்த குற்றவுணர்வுகளை ஆய்வுக்குட்படுத்துவதும், அவற்றை யார் யார்மீது சுமத்துகிறார் என்பதை கேள்விக்குட்படுத்தும் செயலை அரசியல் கவிதைகளின் தன்னியல்புகளுள் ஒன்றாக முன்வைக்கிறது இக்கவிதை. அதுவே தேவதேவன் காணும் பூவிற்கும், யவனிகா பயன்படுத்தும் பூ என்கிற கருப்பொருளுக்குமான வேறுபாடாகும்.
2.
அரிஸ்டாட்டில் பரிணாமத்தை அறிவியலாகக் கண்டதுபோல், 19ஆம் நூற்றாண்டின் அறிவியலாளர்கள் வரலாற்றையும் ஒரு சமூக பரிணாமம்போல் முன்வைத்தனர். அதன்பிறகே அணுக்கொள்கை உட்பட உலகின் எல்லா பருப்பொருட்களின் பரிணாமமும் அறிவியலில் ஒரு வரலாறுபோல நினைவூட்டப்பட்டன. அந்தவகையில் தெரிந்தோ தெரியாமலோ கவிதைகளும் வரலாற்றின் நிழலுக்குள் வந்துசெல்லவேண்டிய தற்செயல் அவ்வப்போது வாய்க்கத்தான் செய்கிறது. இன்னமும் கூறப்போனால் அந்த வரலாறு என்னும் அந்தஸ்தை, அந்த வடிவத்தை (Form) ஒரு தனிமனிதனின் நாட்குறிப்புகளில் துவங்கி, சின்னச் சின்ன பருப்பொருட்களுக்கும் வழங்கி கலைகள் தான் சொல்லவந்த நோக்கத்திற்கான உருவகமாகப் பயன்படுத்தின. பிற்பாடு குறியியலில் அடிப்படையில் அந்த உருவக நோக்கில் கண்காணிக்கப்பட்ட ஒவ்வொரு வார்த்தைகளும் தமக்குரிய வழக்கத்திலிருந்து கூடுதலான அர்த்தங்களைச் சுமக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட, வார்த்தைகள் ஒவ்வொன்றும் அகராதிகள் தரும் அர்த்தங்களோடு மரபுசார்ந்த மற்றும் கலாச்சார நினைவுகளும் சேர்ந்து வெளிப்படத்துவங்கின.
சட்டை
வேறு வேறு வர்ணங்களில்
ஒழுங்கிழந்து ஊசிக் குத்துக்கள் வாங்கி
உடல் தழுவி உப்பில் கசிந்து
முதல்நாள் பெருமிதமாய்
சலவையில் சுயம் இழந்து
மூடிக்காத்து மூடிக்காத்து பின்
மூட மறந்து மூலையில் கிடந்து
பாத்திரக்காரனுடன் பயணித்து
வேறு உடல் கண்டோ விலகி வீழ்ந்தோ
லாரித் துடைப்பில் கந்தையாய்
பைத்தியக்காரனின்
பக்கவாட்டுத் தொங்கலாய்
சிலநேரம் தொழுநோயாளியின் துடைப்பில்
சாக்கடையில், குளத்தில் அடியில்
சாலையோர மரங்களில் முள் செடியில்
வெயில் காய்ந்து பொடியாய் உதிர்ந்து
மண்ணோடு மண்ணாய் மாறும்
என் ஒரு நாள் விருப்பச் சட்டை
இக்கவிதையில் தத்தம் தினசரியில் பயன்படும் ஒரு சட்டையின் பல்வேறு நிலைமைகளை எடுத்துரைக்கும் அதேவேளையில், “என் ஒருநாள் விருப்பச்சட்டை” என்ற வரிகளால் இத்தனைபேரோடும் பயணித்தது ஒரே சட்டைதானோ என்ற ஐயத்தையும் தருவதாக உள்ளது. ஒரு சமூகத்தின் ஒட்டுமொத்த சித்திரத்தையும், எல்லாநிலை மனிதர்களோடும் பயணிக்கவல்லதொரு வஸ்துவின் வாழ்வை சுயவரலாறுபோல் எழுதுவதன் மூலம் பேதமற்ற மனோபாவத்தையும் இக்கவிதை மறைமுகமாய் வலியுறுத்துகிறது. மேலும் மனித உடலை சட்டையாக உருவகம் செய்கிறது பகவத்கீதை. எனில் இக்கவிதையின் இறுதியில் 'மண்ணோடு மண்ணாய் மாறும்' என்கிற வரியைக் கண்டோமேயானால் இங்கு சட்டை என்பதற்கு பதிலாக உடல் என்ற வார்த்தையும் பொருத்திப்பார்க்கலாம். இக்கவிதையில் ஒரே கருப்பொருளை ஒரே கவிதையில் பொதுமையிலும், தனிப்பட்ட முறையிலும் காண்பதுபோலான அர்த்தங்கள் உருவாக்கப்படுகின்றன.
3.
இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு இருத்தலியல் குறித்தும், விழுமியங்கள் குறித்தும், ஆன்மீக மற்றும் மத ஈதியிலான பற்றுதல்கள் குறித்தும் பெரிய வினாக்களை மனித சமூகம் தம் அகத்தே எதிர்கொள்ளவேண்டிய நிலையுண்டானது. ஒரு அரசதிகாரத்தின் உட்சபட்ச ஆற்றல் என்பது படைபலங்களைத் தாண்டி அது கொண்டிருக்கும் ஆயுதங்களின் அடிப்படையில் அளவிடப்பட்டது. முக்கியமாக மனித உழைப்பின் விளைவாக உண்டான எல்லா பொருட்களுக்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட தேவை இருப்பதையும், அப்பொருட்களின் இடம், நேரம் பொறுத்தும் அதன் பயன்பாடுகளைப் பொறுத்தும் அவையளிக்கும் அர்த்த மாற்றங்களையும் கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டியிருந்தது. ஒரு சமயலறை கத்திக்கும், போர்வாளுக்குமான தொழில் என்பது பெரிதளவிலான வேறுபாடுகள் கொண்டதல்ல எனக்கூறும் யவனிகாவின் முக்கியமானதொரு கவிதை இது,
சிறுநெருப்பு
என் வீட்டில் ஆயிரம் தோட்டாக்கள்
செய்யக்கூடிய பித்தளை உலோகம்
ஒரு பெரிய நீர் பானையாய் இருக்கிறது.
சில கருந்துப்பாக்கிகளுக்கான இரும்பு
குழந்தைகள் சிலநேரம் நானும்
ஆடும் ஊஞ்சலாய் கூடத்தில் சிணுங்குகிறது.
சின்னஞ்சிறு நெருப்புப் பெட்டிகளில் இருந்து
பல வெடிகுண்டிற்கான மூலப்பொருளை
அனேக காலமாய் என் தாய் செலவழிக்கிறாள்.
சேய்மை நிலமொன்றில் பல நாட்களின் தொடர்ச்சியாய்
குருதிவெள்ளம் பாயும் தெருக்கள் பற்றியும்
ஈ மொய்க்கும் பிணங்கள் பற்றிய விவரணையும்
ஒலிபரப்பப்படும்போதெல்லாம்
எந்தையின் ஈமச்சடங்கிற்கு இளநீர்காய் வெட்டிய
தென்னங்கொல்லைக்கிடையில் திடுக்கிட்டுப் போகிறேன்
இன்னமும் அங்கிருக்கிறதா நீர் பானையும் ஊஞ்சலும்
சிறு நெருப்போடு தென்னங்கொல்லையும் '
ஒரு போரில் பயன்படுத்தப்படும் ஆயுதங்களும் சாதாரண வீட்டு உபயோகப் பொருட்களுக்குமான தொடர்பு என்பது மனித சமூகம் தனிப்பட்ட முறையில் போர்கால சூழலை எப்படி எதிர்கொண்டிருக்கும் என்கிற சித்திரைத்தை எளிக்கிறது. யுத்தத்தின் நினைவுகளை ஒரு தனிப்பட்ட மனிதன் எவ்வாறு தொடர்புறுத்திக்கொள்வான் என்கிற பாவனையில் அமைந்துள்ள இக்கவிதை பெரும் சாகசங்களுக்கு ஈடாக எங்கோ ஓரத்தில் நடக்கின்ற சின்னச் சின்ன பிரம்மாண்டங்களை அருகருகே நிறுத்திப் பார்க்கின்றது. இதுபோல எளிய எடுத்துக்காட்டுகளை முன்னிறுத்துவதன் மூலம் அதன் உள்ளர்த்தங்களால் ஒருவித கூட்டு மனநிலைக்கு இட்டுச்செல்லும் கவிதைகளை யவனிகா ஏராளம் எழுதியுள்ளார். அவரின் பார்வையில் சமூகத்தின் ஒட்டுமொத்த போக்கிற்கும் தனிமனித அனுபவத்திற்கும் நேரடி தொடர்புண்டு. கிட்டத்தட்ட யவனிகாவின் இயங்குமுறை ஒரு தேர்ந்த தன்னிலையை மையமாகக் கொண்டது. அந்த தன்னிலை கவிதையைச் சொல்லும் ஆளுமையோடு தொடர்புடையது. அது மானுடத்தின் பிரச்சினைகளைப் பேசும் அதேவேளையில், ஓடங்களின் பாடல்களை அதன் கரையில் கட்டிப்போட முடியாது” என்ற வரிகளைப்போன்று சிறு சிறு சுவாரசியங்களின் மீதான பிடியையும் விட்டுவிடுவதில்லை. அத்துடன் அக்கவிதைகளை எழுதும் ஆளுமைக்கு என்று சில கருத்தியல் நம்பிக்கைகள் உள்ளதென்பதால், அவரின் கவிதைககளுக்கான மையம் சமயங்களில் அவரின் ஆளுமையின் தொடர்ச்சியாகவும் மாறிவிடுகிறது. இது அவரின் பலம்/பலவீனம் இரண்டையும் உள்ளடக்கியது என்பேன். ஆனால் மற்றபடி ஒரு கவிஞரின் மொத்த கவிதைகளையும் ஒரு அறிவெல்லைக்குள் தொகுத்துக்கொள்ள அந்த மையமானது அவசியமானதுதான். எல்லாவற்றையும் மறுவரையறை செய்யும் தீர்க்கமும், உள்ளடக்கத்தில் புதிய உத்திகளை சாத்தியப்படுத்திய முனைப்புகளும் யவனிகாவின் உலகத்தை குறிப்பிட்ட எல்லைக்குள் நிறுத்திடாமல் தொடர்ந்து விரியச் செய்யும் தூண்டுகோலாக இருக்கின்றன.
***
0 comments:
Post a Comment